கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 3,411 
 
 

1 – 7 | 8 – 13

1

இருட்டில் வீடு வேறுமாதிரியாக இருந்தது. பொன்வண்ண துகள்களை வீடுமுழுவதும் தூவியது போல இரவு விளக்கில் வீடு விழித்திருந்தது. அன்றிரவு முழுவதும் தூக்கமில்லை. அழுத்தமான கண்களின் எரிச்சல் தீ கங்கு போல எரிந்தது. தூங்கியது போன்ற நினைவு மட்டும் மனம் முழுவதும். நிகழாது என்று பூரணமாக நம்பியிருந்தது நிகழ்ந்துவிட்டது. நிகழ்வை மனக்கண்முன் கொண்டுவர முடியவில்லை. உடலை தூக்கி தூக்கி போட்டது அந்நினைவு. நினைவுகள் கடலலைகள் போல நெஞ்சில் அறையும் ஓசைகளை கேட்டுக் கொண்டிருந்தான். நீர் தீர்ந்த சுனையின் கரும்பாறை போல அம்மாவின் உடல் கிடந்தது. திறந்தவாய் அகோரம் மனதை ஒருவாரமாக முழுவதும் வதைத்துக் கொண்டிருந்தது.

வெறித்த கண்கள், நடுங்கும் கால்கள், தூக்கமின்மை வளர்வதை கண்டு சுவாதி அழைத்து வந்திருந்த டாக்டர் சோதித்துவிட்டு, “பிபி 180க்கு அதிகமா இருக்கு, நரம்புத் தளர்ச்சி அதிகமாயிடுச்சு பாப்போம்” என்பது மட்டும் காதில் விழுந்தது. கண்களைத் திறக்க முடியாத வலி. ஆனால் கண்கள் நிலைத்த ஒரு சொல்போல ஆகிவிட்டிருந்தன. பயந்த முகத்தின் அப்பட்டமான அதிர்வு நிலைத்திருக்கும் கண்கள். கண்ணாடியைப் பார்க்கும் போதெல்லாம் அது யாரோ என்று நினைத்திருந்தான். கொஞ்ச “நேரம் தூங்குடா வைத்தி” என்று கூறிக் கொண்டிருந்தான் சுந்தரம். தன் ஒன்று விட்ட சகோதரன் அவன் என்பதை அவன் உள்ளம் அறிந்திருக்கவில்லை. லேசான தடுமாற்றத்துடன் நின்றிருந்த அவன் கதவைப் பிடித்துக் கொண்டு மெல்ல வெளியேறினான்.

இருள் தன்னை ஆட்கொள்வதாகத் தோன்றியது. இருளில் மூழ்கியிருக்கும் உலகை வைத்தியநாதன் இதுவரை கண்டதேயில்லை. தெருவிளக்குகள் மட்டும் வரிசையாக எரிய இடையே இருள் போர்த்தியிருந்தது. மீண்டும் உள்ளே சென்று அவன் மேஜை டிராயரில் துழாவியபின் எதை எடுக்க வந்தேன் என மறந்திருந்ததை யோசித்தான். பிடிபடவில்லை. அறையில் சுவாதியும் சாஸ்திராவும் படுத்திருக்கும் சித்திரம் மனதில் எழுந்து உடலை உலுக்கியது. சுவாதி உடலை குறுக்கி மெல்லிய குறட்டை ஒலியுடன் படுத்திருந்தாள். கூடத்தில் உறவுக்கார மனிதர்கள் வரிசையாகப் படுத்திருந்தார்கள். அவர்களில் யாரும் யாரையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை. ஒவ்வொருவராகத் தாண்டி மீண்டும் வெளியே வந்தான்.

மீண்டும் வாசலைவிட்டு வெளியேறி தெருவிற்கு வந்தான், தெரு வளைந்திருப்பது போன்றிருந்தது. தெருமுனையைத் தொட்டதும் முழுவதும் இருட்டாக இருந்தது உலகம். யாரோ ஒருவர் வந்து தன்னை இடிக்க கூடும் என்கிற எண்ணம் மனதில் மோத இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினான். இருளில் நடப்பது அதிக உடலசைவுகளை தனக்குத் தந்திருப்பதை உணர்ந்தான். பத்துநாளாகப் படுத்தே கிடந்து விட்டு எழுந்து நடப்பது புதிய மனிதனாக மாற்றிவிட்டதைப் போலிருந்தது. இருள் எத்தனை எளிதாக்குகிறது மனத்தை. மனத்தை மட்டுமல்ல உடலையும்தான்.

அம்மாவின் முகத்தில் இருந்த வடுக்கள் இறந்தபின் மிகக் கிட்டத்தில் தெரிந்தன. அம்மாவின் கண்கள் ஏன் லேசாக உப்பியிருந்தன. கண்களின் வழியே உயிர் போயிருக்கும் என யாரோ தூரத்தில் பேசியது இப்போது துல்லியமாகக் கேட்டது. பதறி நின்றுவிட்டான். நாய்கள் குலைக்கும் ஓசைகள், சில தெறித்து ஓடும் ஒலிகள் துல்லியமாக கேட்டன. அவன் இதயம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. இதயத்தின் வால்வுகள் தெறித்து அதன் துடிப்பை வெளியே உணரமுடியும் என நினைத்தான்.

தூரத்தில் தெரிந்த வெளிச்சப் புள்ளிதான் அவனுக்கு இலக்காக தோன்றியது. அதை நோக்கி நடந்து கொண்டிருந்தான். இனி அம்மா இல்லாத உலகு, அதை எப்படிப் புரிந்துக் கொள்வது எனத் தெரியவில்லை. விண்வெளியில் தூக்கிவீசப்பட்டவன் போல் உணர்ந்தான். மிதந்து இருண்ட வெளியில் தன் உடலால் பயணிப்பது நெஞ்சுக்கூட்டை அழுத்திக் கொண்டிருந்தது. அவன் மரணம் அவனுக்கே தெரிந்துவிட்டது. தன் உடலிலிருந்து தன்னை பிரிப்பது போன்ற உணர்வு. உணர்ந்த அடுத்த நொடி பயந்து நெஞ்சுக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக் கொண்டான்.

புதிய மின்கம்பம் வந்ததும் நின்று அழத் தொடங்கினான். அழுகை அவனுக்குக் கேட்பது தன் உயிரை உணர்வதற்குதான். தூக்கமின்மையின் பதபதைப்பு உடலை உலுக்கிக் கொண்டிருந்தது. கீழே விழும்போது அடையும் நினைவற்ற நிலை இப்போது வரை தொடர்கிறது. இனி நிற்பதில் பொருளுமில்லை, நடந்தால் மட்டுமே நிற்க முடியும் இல்லையேல் வீழ்ந்துவிடுவேன். வேகமாக நடப்பதால் காற்று தன்னுடன் வருகிறது, காற்றில் மோதும் போது தன் உயிரை மீட்டுத்தருகிறது.

வெளிச்சத்தை உடல் முழுவதும் வெளிப்படுத்திக் கொண்டு ஒரு வாகனம் கடந்து சென்றது. அதில் மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் தன்னை நோக்கி ஏதோ சொல்லிக் கொண்டு சென்றார்கள் என்று தோன்றியது. கொஞ்ச நேரத்தில் வெளிச்சம் சுவற்றில் பெயிண்ட் ஒழுகல்போல வெளியாகியது. உயர்ந்த சில இடங்கள் வெளிச்சத்தில் உயிர்பெற்றன.

அது ஒரு பேருந்து நிலையம், பல பேருந்துகளின் ஊடே அவன் நிற்பது தன் மனத்தின் இடையுறாத ஊசல் போல இருந்தது. சில நொடிகள் ஆழ்மனதோடு உரையாடியது போன்ற மயக்கம். திகைத்து வெளிவந்தான். காலை பேப்பர்களை மடித்துக் கொண்டு அமர்ந்திருந்த பெரிய கும்பலோடு அமர்ந்துக் கொண்டான். நினைவில் எழுந்த முதல் கேள்வி நான் எங்கே இருக்கிறேன் என்பது, அதற்கு விடை தேடிச் செல்ல மனம் இல்லை. சுவரோரமாகத் தலைசாய்த்ததும் தூங்கத் தொடங்கினான். தூக்கம் கண்களை அழுத்தி மண்டையோட்டின் உள்வரை சென்றது. கனவுகள் மயில் அகவல் போல மண்டையில் ஒலித்தன. கும்பலில் யாரிடத்தில் பேச்சு எழுகிறது என்று புரியாமல் கரைசலாகக் கேள்விகள் பறக்க பதறி எழுந்தமர்ந்தான். வியாபாரிகளின் கூவல்கள் செவிகளில் மத்தளம்போல உரச மீண்டும் தூக்கம். அவன் மயங்கி விழுந்த இடம் அம்மாவின் உடல் என்று அறிய பயத்துடன் எழுந்தமர்ந்தான். சதைகளின் கூட்டம் உடல் ஆனால் அதில் அன்பெனும் உணர்வு நீர்போல சுரக்கிறது. சேயைத் தன் உடலின் மற்றொரு பாகமென்றேதான் தாயும் நினைப்பாள் என்று படித்திருக்கிறான். தாயுடன் தன் உடலை இணைத்துவிட்டால் என்ன? எழுகின்ற உயிரில் தன் உயிரும் இருக்கும். தனக்கென்று தனி உயிர் அதனை உள்வாங்கிக் கொள்ளும்.

அம்மாவின் கடைசிக் கணங்கள் அவனுடன் தான் நிகழ்ந்தன. கண்கள் வெறிக்க நான் விட்டுச் செல்கிறேனே என்கிற ஆதங்கத்துடன், ஆனால் அது பரவாயில்லை என்ற மனத்தோடுதான் போகிறாள். ஏதோ சொல்லவந்த உதட்டசைவோடு உயிர்விட்டிருந்தாள். அச்சொல் தன்னை வாழ்த்தும் ஒரு சொல்லாக இருக்கலாம். அவளை தூக்கிக் கிடத்திவிட்டு காரியங்களைப் பார்க்கப் போனார்கள் மனிதர்கள். மனிதர்களுக்கு இம்மாதிரியான சமயங்களில் அவசரம் வந்துவிடுகிறது. உடனே அடுத்த காரியம், அதற்கடுத்த காரியம் என்று சுழல ஆரம்பிக்கிறார்கள். “ரொம்ப நேரம் வெச்சிருக்க முடியாது, சீக்கிரம் முடிக்கிற வழியப்பாப்போம்”, என்று குரல் வந்ததும் ஆமோதிக்கும் தலையசைவுகள். இப்போது அத்தலைகளை வெட்டியெறியவேண்டும் என வெறியேறியது.

நாக்கில் எச்சில் ஊறிக் கொண்டிருந்தது. உடலால் எதையும் செய்யமுடியாதபோது வாய் குழறுகிறது. நாக்கு உணவை புரட்டிப் போடுவது போல துடித்துக் கொண்டிருந்தது. வலது பேண்ட் பாக்கெட்டில் உறுத்தல்கள் எழ என்ன என்று நோக்கினான். ஏதோ ஒன்று அசைகிறது. வெளியே எடுத்ததுமே நினைவிற்கு வந்தது அது ஃபோன். யாரோ அவசரமாக அழைக்கும் துடிப்பு அதில் தெரிந்தது. பார்த்ததும் சுவாதி செல்லம் என்ற வார்த்தைகள் மின்ன, எடுத்து பேசினான்.

“ஏங்க, எங்க இருக்கீங்க, எவ்வளவு நேரமாக ஃபோன் அடிக்கிறது எடுக்கவே மாட்டேங்கிறீங்க, ஏதாவது சொல்லுங்க,” பதட்டமான குரலில் அவள் இன்னும் விடபடவில்லை. மேலும் பேச நினைத்தவள் அவன் குரலுக்காக காத்திருக்கிறாள். தெளிவு பெற்றான்.

“சுவாதி, நான் இங்க ஒரு, அது என்ன இங்க ஒரு பஸ்ஸ்டாண்டுன்னு நினைக்கிறேன், இங்க தான் இருக்கேன்.”

“எந்த பஸ்ஸ்டாண்டுன்னு தெரியலையே, சரி அங்க எதாவது ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வாங்க”

“போடி… எப்ப பாரு ஏ…”

நாக்கு குழறல் அவனுக்கே தெரிந்தது, அப்படி பேசியிருக்க வேண்டாம் என நினைத்தான். அடிவயிற்றுக் குழாவல் பசி என்று யோசிக்க வைத்தது. நினைவிற்கு வந்தவனாக பாக்கெட்டைத் துலாவினான். ஏதோ ஒன்றை வாங்கிய மிச்சப் பணம் இருந்தது. சாப்பிட இது போதும் எழுந்து ஒரு சாப்பாட்டுக் கடைக்குச் சென்றான்.

2

சாப்பிட ஆரம்பித்ததும் முழுமையாக நினைவுகள் உடலில் தங்கி தெளிவான பார்வையால் உலகைக் கண்டான். உலகம் எப்போதும் இயந்திரம் போன்றதொரு தொடர் இயக்கத்தில் இருந்தது. யாருக்கும் யாரையும் தெரியாத மோனநிலை. எந்த ஊரில் இருக்கிறேன் என்கிற எண்ணம் வரவேயில்லை. ஆனால் நாம் பார்த்த இடம் என்று நினைத்தான். கும்பகோணம் பேருந்து நிலையம் என்கிற எழுத்துகள் மனத்தில் வந்தபோது சோர்வடையவில்லை. களிப்பான மனநிலையை அடைந்துவிட்டேன் என்று நினைத்தான். இங்கிருந்து மீண்டும் ஊருக்கு திரும்பிச் செல்ல நாற்பது கிலோமீட்டர் ஒரு அல்லது ஒன்னரை மணிநேரப் பயணம், இனிய காற்றுவீசும் ஜன்னலோரமாக அமர்ந்து தூங்கியபடி செல்லவேண்டும் என நினைத்து உள்ளே சென்றான். பேருந்துகளின் டீசல் வாசனையும் ஓரமாக சாக்கடை முழுவதும் சிறுநீராக செல்லும் வாடையுடன் தெளிக்கப்பட்ட குளோரினும் சேர்ந்து தொண்டையை அறுத்தன. குமட்டிக் கொண்டு வந்த வாந்தியை கஷ்டப்பட்டு நிறுத்தி அந்த இடத்தைத் தாண்டி ஓடினான். அம்மாவும் பலசமயம் பேருந்து நிலையம் வரும்போது ஏற்படும் அதே குமட்டல். பேருந்தில் செல்லும்போது எலுமிச்சைப் பழத்தை வைத்திருப்பாள் அம்மா. வாந்தி குமட்டல் வராமல் இருக்க. அவனும் சின்னதாக ஒன்று கையில் வைத்துக் கொண்டு ஜன்னலோரம் அமர்ந்திருப்பான்.

அம்மா என்ற பெயர் தன் மனத்தில் வந்ததும், ஊர் செல்லும் எண்ணம் பற்றிய சிந்தனை மறந்துவிட்டிருந்தது. தனக்கும் தன் மனத்திற்கும் இடைவெளி அதிகரித்து ஏதோ ஒரு பெயரை தன் மனம் உச்சரிப்பதை அறிந்தான். ஆம் அது பயணம் என்று சொல்கிறது. எங்கே பயணம், எத்திசைப் பயணம் என்ற நினைத்தபோது மனம் சலிப்புற்று ஒரு பயணிகள் மேடையில் அமர்ந்துக் கொண்டான்.

ஒரு பெண்மணி அவன் அருகே வந்து “தம்பி இந்த வண்டி எந்த ஊருக்கு போவுதுப்பா” என்றாள். அவன் தலைதூக்கிப் பார்த்தான். எழுத்துக்கள் தெரியவில்லை. பக்கத்தில் இருந்த வெள்ளை வேட்டி சட்டை அணிந்த மனிதர் “திருவாரூர் பாட்டி” என்றார். “நீங்க எந்த ஊருக்கு போவனும் அத சொல்லுங்க பாட்டி” என்றார் “குடவாசல் போவணும் பா” என்றாள். “இது போவும் போங்க” என்றார்.

அவன் மூக்குக்கண்ணாடி அணிந்திருக்கவில்லை என்று அப்போது நினைவிற்கு வந்தது. அதனால்தான் பஸ் பெயர்களை கண்ணாடி இல்லாமல் படிக்க முடியவில்லை. கண்ணாடி இல்லாததால் முகத்தில் மோதும் காற்றின் தீவிரம் அதிகமாக இருப்பதுபோல் உணர்ந்தான். ஆம் நான் செல்ல வேண்டிய ஊர் திருவாரூர் தான். கிளம்ப எத்தனித்த அந்த வண்டியில் ஓடிச்சென்று ஏறிக் கொண்டான். இருக்கை எதுவும் இல்லை. மனிதர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள். வியர்வையும், தலையில் எண்ணெய் வாசனையும் கொண்ட அவர்களோடு அவனும் நின்று கொண்டான். பஸ் குலுங்கல்களோடு பயணித்தபோது அந்தப் பேருந்து ஓட்டுநர் எப்படிச் சிரமப்படுகிறார் என்பது தெரிந்தது. சாலை நேராகவேயில்லை. பரந்த வயல்களைக் கொண்ட பெரிய நிலத்தில் சாலை வளைத்து வளைத்துப் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் பத்து வளைவுகள் இருக்கும். “ஏன் ரோடு இப்படி வளஞ்சு வளஞ்சு இருக்கு” என்றான்.

பக்கத்தில் நின்ற மனிதர், சற்று அதிர்ந்து “ஆ, அது ஊஞ்சல் அப்படிதான் நம்மல ஆட்டும், அதுக்குதான்” என்றார். பஸ் பயணிகள் முழுவதும் சிரித்தது ஓட்டுநரை திரும்பி பார்க்க வைத்தது. பயணிகள் எல்லோரும் இப்போது அவனை நோக்கி கொண்டிருந்தார்கள். அடுத்து அவன் கேட்க இருக்கும் அப்பாவியாக மற்றொரு கேள்விக்காக.

வானம் தெளிவற்று இருந்தது. சுற்றி நின்ற மனிதர்களின் மனநிலை மெல்லிய இளங்குளிரால் தான் வருகிறது என நினைத்தான். அம்மா இங்கு இருந்திருந்தால் பொதுஇடத்தில் கேலிக்கு ஆளாகி அனைவரையும் சிரிக்கவிட்டிருக்கமாட்டாள். சரியான பதிலடியாக எதையும் சொல்லியிருப்பாள். அவள் முலைகளும் வயிறும் அதிர தன்னை இறுக அணைத்திருப்பாள். தன் மகன் முன்னே எதுவும் நிகழவிடக்கூடாது என்கிற வேகம் இருக்கும். தன்னை அவர்கள் கேலி செய்து சிரித்து மகிழ்வதில் உளம் மகிழ்ந்தான்.

ஒவ்வொரு சொல்லாக அவளைத் தன் மனத்தில் உருவகிக்க முயற்சித்தான். ஒருமணிநேரம் போனதே தெரியவில்லை. அவன் இறங்கியது குடமுருட்டி ஆற்று பாலத்தின் மேல், அதன் கீழ் ஆழத்தில் ஆர்ப்பரிக்கும் நீர் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் என நினைத்தான். எட்டிப் பார்ப்பதனால், தலை சுற்றி ஆற்றில் விழக்கூடும் என அம்மா கூறியிருந்தாள். பாறைகள் நிறைந்த அந்த இடத்தில் விழுவதனால் மரணம் நிச்சயம் என்பாள். ஆற்றின் கரையில் மணல் பதிய ஆடுகள் நின்று செடிகளை தின்று கொண்டிருப்பது தெரிந்தது. கீழே குனிந்து பார்த்தான். பாறைகள் நிறைந்து கருமை இருண்டு கிடந்தது, நீர் இல்லை.

அங்கு இறங்கியதும் தன் உள்மன விளையாட்டை அவனால் அனுமானிக்க முடிந்தது. திரும்பிப் பார்த்தான். ஆற்றை ஒட்டிய பாதை நீண்டு மலையேற்ற பாதைபோல தெரிந்தது. மண் சாலை இப்போதும் அதே அழகுடன் இருந்தது. கிடுகிடுவென அதில் நடந்தான். அவனறிந்த சாலைகளின் ஒன்று. பலகோடி மனிதர்கள் கோடியாண்டுகளாக அங்கு குடியிருக்கிறார்கள். தன் போக்கிற்கு அவர்கள் இருந்தாலும் அவன் அவர்களை அறிந்திருந்தான். அன்று சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுசுகள் இன்று பெரிய பிள்ளைகளாயிருக்கும். இந்த ஊரில் தான் அப்பா முதலும் கடைசியுமான வேலைக்கு சேர்ந்தது.

கொஞ்ச நாளில் திருமணம் செய்து அம்மாவை இங்கு அழைத்து வந்தார். அம்மாவின் கால் தடங்கள் பதிந்த ஊர். விரும்பி வாழ்ந்த ஊரில் தன் கனவுகளை இங்கு தொடங்கியிருப்பாள். இளம்பெண்ணுக்குரிய துடுக்குத்தனத்துடன் இருந்திருப்பாள். ஓடியாடும் கால்களால் குளத்தில் குதித்திருப்பாள். அப்பா அழைத்துச் சென்ற முதல் சினிமாவை அணுஅணுவாக அவள் சொன்னவிதம் கதாகாலட்சேபத்தின் இனிய சாயலைக் கொண்டிருந்தது. அதன் பின் அம்மா சினிமா பார்த்ததேயில்லை. சினிமாவின் பேச்சுகளை, பாடல்களை ஒரு பொருட்டாக நினைத்தேயில்லை. கே.ஆர்.விஜயா மட்டும் பிடித்த நடிகை, தொலைக்காட்சியில் அவள் வரும்போது மட்டும் அம்மா கூர்ந்து கவனிப்பாள். அம்மா சிரித்து வெளிப்படுத்தும் உதட்டசைவு கே.ஆர்.விஜயாவின் சிரிப்பு போல இருப்பதை கவனித்திருக்கிறான்.

சினிமா ஒன்றே பிரதானமான பொழுதுபோக்காக இருந்த அந்தச் சமயத்தில் அப்பா இறந்திருக்கிறார். அப்பாவின் நினைவுகளோடு இருக்க எல்லா பொழுதுப்போக்குகளையும் துறக்கிறாள் அம்மா. மிக இளம்வயதில் மகன் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்வது எத்தனை கடினம் என்று இன்று நினைக்குபோது உடல் பதறுகிறது.

தெருக்கள் நீண்டு நீண்டு பாம்பின் வாலைக் காணும் ஆவலாக மாறியபடி சென்றது. மண் சாலை என்பதால் ஒரு வித அமைதியை அளித்தது. தார் சாலைக்குரிய பரபரப்பு இதில் இல்லை என்பதால் இருக்கலாம். வளைந்து நெளிந்து சாலை சென்று சேர்ந்த இடம் அவன் படித்த பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் கடைசி பகுதி. அந்த சாலையின் முடிவு அவன் ஆழ்மனதில் இருந்திருக்க வேண்டும். பக்கத்தில் ஒரு அரசாங்க மருத்துவமனை இருந்தது. அதைச் சிறியதாகப் பார்த்த நினைவு இப்போது பரபரப்பாக இயங்கும் இடமாக இருந்தது. மற்றொரு சிறிய சாலையில் நுழைந்து மதில் சுவரில் அப்போதையச் சிறுவர்கள் நுழைந்த சிறிய பக்கவாட்டு சுவர் ஓட்டை வழியாக உள்ளே சென்றான்.

பள்ளி அமைதியாக கிடந்தது ஆனால் வகுப்பறைகளிலிருந்து சிறுவர்களின் கூச்சல்கள் தூரத்து அழைப்பு போல கேட்டபடி இருந்தன. கடந்து உள்ளே சென்று ஆசிரியர்கள் இருக்கும் அறைக்கு வந்தடைந்தான். அவன் மனதில் இருந்த பாதைதான். அடர்நீலவண்ணத்தில் சட்டை அணிந்திருந்த ஒரு தடித்த மனிதர் “சார் நீங்க இங்கெல்லாம் வரக்கூடாது அதோ பெஞ்சு இருக்கு பாருங்க அங்கதான் உட்காரனும்” என்றார். அவர் ப்யூனாக இருக்க வேண்டும். “எந்த பக்கத்திலிருந்து வரீங்க” என்ற கேள்வி தனக்கு தானே கேட்டுக் கொண்டதாக இருந்தது.

பக்கத்தில் நின்றிருந்த ஆசிரியர் போன்றிருந்தவரிடம் “சார், இங்க இரா. கனகசபாபதி சார் வீடு எங்கயிருக்கு தெரியுமா” என்றான். அவர் யாரிடமோ கேட்கப்பட்ட கேள்வியாக அமைதியாக இருந்தவர், மெல்ல “எந்த கனகசபாபதி” என்றார். உடனே பதிலளிப்பதில் தன் நிலை சற்று இறங்கிவிடும் என்கிற நினைப்பில் இருப்பவராக யோசிக்கும் முகபாவனையுடன் திரும்பிப் பார்த்துக் கேட்டார். “தமிழாசிரியர் சார்”, என்றான். “அவரா, அவர் ரிட்டயர்ட் ஆயி பத்துவருஷம் இருக்குமே, நீங்க அவர ஏன் தேடறீங்க” என்றார்.

“சார் நான் அவரோட ஸ்டூடண்ட், அவரப் பார்க்கனும்னு பிரியப்படறேன்”

“அவரு புலிவலம்ன்னு நினைக்கிறேன். அப்படிதானே தங்கராசு”

அடர்நீல சட்டை அணிந்தவர், “ஆமா அவரு அங்கதான் இருப்பாரு, அவரு பொன்னு ஊடு அங்கதான் இருக்கு” என்றார். அவர் முடிக்கும் முன்னே திரும்பி நடக்க தொடங்கினான்.

3

தன் முன் வளர்ந்து நின்ற பரந்த செழிப்பான வயல்களை கண்டபோது வெயிலின் அதீத வெப்பத்தையும் தாண்டி அதை ரசித்தபடி நின்றிருந்தான். பக்கத்தில் நின்றிருந்த வேப்பமரத்தின் வேப்பங்காய்களின் வாசனை வந்து கொண்டிருந்தது. இளம் சூடான காற்றுவீச்சில் அவன் தலைஆடியது போன்ற பிரமை. கீழே கிடந்த வேப்பம்பழங்களை ஒரு சிறுமி பொறுக்கிக் கொண்டிருந்தான். நீண்ட பூப்போட்ட பாவாடையும், வேறு டிசைன் கொண்ட சிறிய இறுக்கமான மேல் சட்டையும் அணிந்திருந்தாள். “எதுக்கு பாப்பா இது உனக்கு” என்றான். அவள் தலைதூக்கி சிரித்தபடி, “வேப்பெண்ண எடுக்கிறதுக்குண்ணே” என்றாள். “பழம் நல்லாயிருக்கும்ணே” என்று ப்ளாஸ்டிக் கவரில் சேகரித்திருந்த பழங்களிலிலிருந்து மஞ்சளாக இருந்த ஒன்றை எடுத்து வாயில் போட்டு காட்டினாள். “நீங்க ஒன்னு சாப்பிடுங்க” என்றாள். “இல்ல வேண்டாம்” என்று முன்னிருந்த ஓடையில் இறங்கி நின்றான்.

தலையிலிருந்து இடைவரை மறைத்திருந்த பெரிய புல்லுக்கட்டுடன் உடலெங்கும் செம்மண் குளியலாக ஒரு சிறிய உருவம் நடந்து வருவதைக் கண்டு விலகி நின்று, “இங்க தமிழ் வாத்தியார் வீடு எங்க இருக்கு தெரியுங்களா,” என்றான். “எந்த தமிழ் வாத்தியாரா, கனகசபாபதி வாத்தியாரா,” “ஆமா அவருதான்,” “அவரு இங்க இருக்காரா இல்ல திருவையாத்துக்கு போய்ட்டாரா தெரியல.”

பெரிய புல்லுக்கட்டை தொப்பென்று கீழே ஓடையிலேயே போட்டுவிட்டு, “டேய், நீ வைத்திய நாதன் தானே” என்றான்.

“ஆ.அ. ஆமாம், உங்களுக்கு எப்படி தெரியும்”

“என்ன தெரியலையா, நாதான் குமரேசன்”

“குமரேசன், யாரு…”

“அக்காவு”

நினைவுகள் பின்னோக்கி நகர்ந்து அழகிய பச்சைவண்ண குளத்தில் பின்னோக்கி ஊர்ந்து செல்லும் முகம் மட்டும் நினைவிற்கு வந்தது.

“அக்காவுவா”

“ஆமா, நா தான், எப்படி இருக்க வைத்தி, பெரிய ஆபிசர் மாதிரி பேண்ட் சட்டையெல்லாம் போட்டிருக்க”

அக்காவுவின் முகம் முழுவதும் செம்மண்ணாக இருந்தது, “எப்படி என்னைய அடையாளம் தெரிஞ்சுது”

“ஏன் உன்ன தெரியாதா, உன் பெரிய காது அப்புறம் உன் பீச்சாங்கை கண்ணுல முழிக்கு பக்கத்துல ஒரு கருப்பு மச்சம் இருக்கே அதவெச்சுதான்”

கண்ணில் ஒரு சிறு மச்சம் இருக்கும், அந்த அடையாளம் தான் எல்லா ரிக்கார்டுகளிலும் இருக்கிறது. சட்டென உடல் குளிர்ந்து வெப்பமடைந்தது. காயம்பட்ட புண்ணின் மையத்தை தொட்டது போன்ற உணர்வு.

“ஆமா எதுக்கு வாத்தியாரத் தேடுற”

“இல்ல, சும்மா, அவரச் சந்திச்சு பேசலாமேன்னு”

“அவரு இங்க இருக்க மாட்டாருன்னுதான் நினைக்கிறேன், பார்க்கலாம் வா”

“வா ஆத்துக்கு போவோம், குளிச்சுட்டு அவர போய் தேடுவோம்”

“நீ வழி சொல்லு நா போயிடுவேன்”

நின்று அவனை உற்று கவனித்தான். “நீ இன்னும் மாறவே இல்லடா, நா வழி சொன்னாலும் உனக்கு தெரிஞ்சு போவ முடியாது, வா, நா குளிக்கனும், அப்புறம் வழி சொல்றேன்,”

திரும்பிப் பார்த்து, “அந்தப் புல்லுக் கட்டு” என்றான், “அதை எடுத்துகலாம் வா” என்று நடக்க ஆரம்பித்தான்.

உச்சி வெய்யிலில் நீர் பளபளத்து கண்ணாடி பளிங்குகள் உருள்வது போல ஓடியது ஆறு. பக்கத்தில் வந்ததும் அழுக்கடைந்த செம்மண் கலந்த தண்ணீராக தெரிந்தது. முன்பிருந்த தயக்கங்கள் விலக சற்று நேரம் எடுக்கும் என நினைத்தான். இறங்கியதும் அந்நியம் விலகி உடலுடன் ஒட்டி கலந்து விட்டிருந்தது ஆறு. சுற்றி வெப்பமிருந்தாலும் நீரில் உடல்நடுங்கும் குளிர்ச்சியிருந்தது.

ஆற்றின் மீதான ஈர்ப்பு அதன் வேகத்தில் இருக்கிறது. வேகமான ஆறு பயத்தைக் கூட்டுகிறது போலும். அக்காவு எந்த பயமுன்றி தண்ணீரில் குதித்திருந்தான். பாதிதூரம் வரை லாவகமாக சென்று திரும்பினான்.

செம்மண் விலகி அவன் முகம் துலங்கி வந்தது. கட்டையான உயரம். கால்கள் வெளிப்பக்கமாக சற்று வளைந்திருந்தன. கீழே விழுந்துவிடுவதுபோல நடந்தாலும் திடமான உடல், எந்த பொருளையும் தூக்கிவிடுபவை போலிருந்தன கனமாக கைகள். வரைந்ததுபோல் வாயின் இருப்பக்கமும் பலமான கோடுகள். அவன் சிரிக்கும்போது இன்னும் பெரிதாகின. லேசாக பூனைக்கண்கள் போன்றிருந்த கண்கள் எதைநோக்கியும் கூர்ந்து கவனிப்பதில்லை என்று தோற்றம் கொண்டிருந்தன. ஆனால் முக்கியமானவற்றைக் கவனிக்கத் தவறவில்லை.

தலைதுவட்ட ஒரு துண்டை அளித்தான் பின் அதே துண்டில் அவன் தலையையும் துவட்டியபின், அவன் வேட்டியை காய வைத்ததுபோல வைத்தியின் பேண்ட் சட்டை, பனியனை காயப்போட உதவினான். புல் முளைத்த கரையில் எல்லா துணிகளும் காய்ந்தன.

அவனுக்கு நினைவில் எல்லாம் இருந்தன. “அம்மா எப்படி இருக்காங்க,” அந்த கேள்வியை அவன் கேட்டுவிடக்கூடும் என்று நினைத்ததை அவன் கேட்டதும் ஆழ்மனம் அதை அறிந்திருந்த அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்தான் வைத்தி. இருவரும் ஈரமான உள்ளாடையில் அமர்ந்திருந்தார்கள்.

எழுந்தமர்ந்த விதத்தை ஊகித்தவனாக “என்ன அம்மா இல்லையா, இருக்காங்கல்ல” என்றான். தன் முட்டிகளில் தலை கவிந்து அமர்ந்துக் கொண்டான் வைத்தி.

வைத்தி முதுகை தடவி, “சரி விடு, அம்மா ரொம்ப நல்லவங்க இல்ல, அவங்க போனது வருத்தமாதான் இருக்கும்”

“எவ்வளவு அழகா கோலம் போடுவாங்க, டுஷன் நல்லா எடுப்பாங்க, ரொம்ப பொறுப்பான அம்மா, இல்ல”

லேசாக குலுங்கி அழுதுக் கொண்டிருந்தான் வைத்தி. அவன் அழுகை அக்காவுவிற்கு எதிர்பாராத செயல், ஆண்கள் அழுது அவன் பார்த்ததில்லை.

“நா வரும்போது தெனம் எனக்கு பிஸ்கட் கொடுப்பாங்க”

நிமிர்ந்து அமர்ந்து கண்களை துடைத்துக் கொண்டான். “எப்ப கொடுத்தாங்க”

“மறந்துட்டியா, நா டுஷன் படிப்பேன்ல அப்ப”

“அப்படியா, ஆமா நீ வந்துருக்கதான்.

“அப்புறம், அரிசி தட்டை செய்சியிருப்பாங்கல, மொறுமொறுன்னு சாப்பிட நல்லா இருக்கும்”

“ம், ஆமா”

“படிக்கலேன்னா அம்மாவுக்கு கோவம் வரும். அதுவும் நீ படிக்கலன்னா கோவமாக இருப்பாங்க. நா உன்ன அடிச்சிடுவேனோன்னு பயம். குளத்துமேட்டுல ஒரு பய இருந்தான். மணிகண்டன்னு பேரு. அவன் பட்டத்த நீ தூக்கிட்டு வந்துட்டேன்னு உன்னய அடிக்கிறதுக்கு வீடு தேடி வந்தான். அம்மா உன்னய சமாதானப்படுத்தி அந்த பட்டத்த வாங்கி அவன்ட கொடுத்தாங்க. அப்ப அம்மா ரொம்ப பயந்துட்டாங்க, என்னயக் கூப்பிட்டு கண்ணுல தண்ணியோட வைத்திய அடிச்சிடப் போறான்டா பாத்துக்கடான்னு சொன்னாங்க. அதெல்லாம் பயப்படாதீங்க அக்கா, அவன் சும்மா புள்ளபூச்சின்னு சொன்னேன்”.

4

சண்முகவள்ளியின் திருமணம் ஒரு மழை நாளில் நிகழ்ந்தது. கல்யாண மண்டபத்தின் முற்றத்தில் அடித்த மழையின் சாரலுக்கு பயந்து உள்ளே இடுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள் வந்திருந்த உறவுக்காரர்கள். தாலி கட்டும்போது இடிஇடிக்க இந்திரனின் வாழ்த்துகளுடன் திருமணம் நிகழ்வதை பெருமை பேசப்பட்டது. சண்முகவள்ளியின் முகம் குங்குமத்தால் சிவந்து இருந்தது அப்போது. தலை தூக்கி கணவன் சுந்தரத்தை பார்க்க பயந்து தலைகுனிந்தபடி இருந்தாள். தொங்கும் நீண்ட மீசை, அடர்த்தியான கிருதாவுடன் அடர்ந்த தலைமுடியுடன் சட்டென பார்க்க அய்யனார் போன்று ஆண்மை கொண்ட இளம் மனிதனாக தெரிந்தான்.

முரட்டுமனிதன் என்று பெயரெடுத்தது அவனது அடர்முடிகளை வைத்துதான் என அவளுக்கு கொஞ்ச நாளில் புரிந்தது. தன் உள்ளுணர்வால் அறிந்த அறிவின் பயன்களைப் பிறருக்கு அளிக்கும் திடமான மனம் கொண்ட இயல்பான மனிதன் என்கிற எண்ணத்தை அவள் பின்னாட்களில் அடைந்தாள். எல்லா உயிர்களிடத்தும் அன்பிருக்கும் தியானத்தை அவன் அவளுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான் என அவளுக்கு தோன்றியது. அறிவு, நடைமுறை வாழ்க்கை என்று எல்லாமும் கொடுக்கல் வாங்கலாகத்தான் கணவன் மனைவி உறவு இருக்கிறது என்று அவள் அறிய முற்பட்டபோது அவன் காலமாகியிருந்தான். மஞ்சள் காமாலை நோய் அவனை தாக்கியபோது திடமான அவன் உடல் கொஞ்ச நாளில் உடல்நலமற்று சட்டென இறந்துப் போனான். இறப்பு அவனுக்கு நடக்கும் தும்மல் போல, இருமல் போல சாதாரணமாக நிகழ்ந்தது. அது அப்படித்தான் அவனற்ற வெறுமை இனி வாழ்நாள் முழுவதும் என நினைத்தபோது பெரிய இருள் பிரதேசம் தன் முன் இருப்பதைபோன்று உணர்ந்தாள்.

வைத்தி கருவில் இருந்த நாட்களை நினைத்துக் கொண்டாள். எத்தனை கொடிய நாட்கள், எங்கே கலைந்துவிடுமோ அல்லது இறந்து பிறந்துவிடுமோ என்று எத்தனை பதபதைப்பு நிறைந்த நாட்கள். சிறு அதிர்வுகளையும் ஓசைகளையும் அவள் வெறுத்தாள். கோழியின் கால்வைப்பு போல அந்நாட்களில் நடந்தாள். அம்மா சொன்னதுபோல் சுந்தரகாண்டம், தேவிபாகவதம் மட்டுமே படித்துக் கொண்டிருந்தாள்.

வைத்தீஸ்வர வைத்தியநாத சுவாமியை வணங்கி எந்த குறையுமின்றி மகன் பிறக்க வேண்டிக் கொண்டாள். அவன் பிறந்ததும் அவனுக்கு வைத்தியநாதன் என்றே பெயரிட்டாள். பிறந்தபோது அவன் கால்கள் நீண்டிருந்தது, உயரமாக அவன் தந்தை போலவே வளர்வான் பாட்டி ஆருடம் கூறினாள்.

இறுக்கமான அவள் மனநிலை வைத்தியநாதன் பிறந்தபின்னே மாறியது என எண்ணிக் கொண்டாள். இளகிய பனிபோல் அவன் முன் உருகி நின்றாள். இனி உலகம் அவன் தான் ஒவ்வொரு கணமும் அவனுக்கானதுதான் என எண்ணிக்கொண்டாள். அவன் சிந்திய ஒவ்வொரு சொல்லும் கணவன் சொல்லின் தொடர்ச்சி என்று கண்டறிந்தாள்.

ஆழாக்குபடிகளில் நிறையும் தானியங்கள் போல ஒவ்வொரு நாளும் நிறைந்துவந்தான். கண்களை கண்டு அவன் சிரித்தது, தலைநின்றது, புரண்டு விழுந்தது, தேய்ந்து தவந்தது, ஊன்றி அமர்ந்தது, எழுந்து நின்றது, தத்தி நடந்தது, ஸ்திரமற்ற கால்வைப்பில் ஓடியது என்று ஒவ்வொன்றாக அவள் அவனை அளவெடுத்து வைத்துக்கொண்டாள். ஒருவார்த்தைகூட எதிர்மறையாக சொல்லாமல் அவனிடன் அவள் பேச பழகியிருந்தாள். பேச்சும் செய்கையும் அவள் அவனுள் கடத்தினாலும் அப்பா இல்லாத குறை அவனுக்கு தெரிந்தது.

அப்பா இல்லாத பிள்ளையின் செய்கைகள் மாறுபடுவதை அவள் கவனமாக குறித்துக் கொண்டாள். பயந்த அம்மா பிள்ளையாக அவன் இருந்தான். ஆண் ஒருவரின் நிமிர்ந்த பார்வையையும், அதிர்ந்த வார்த்தைகளையும் அவன் எதிர்கொண்டதில்லை. கண்களில் குழைவும், கைகளில் அதிர்வற்ற மென்மையும் கொண்டிருந்தான்.

அம்மா இல்லாமல் அப்பாவிடம் வளரும் பிள்ளைகள் மிகுந்த முரட்டு குணத்துடன் வளர்கிறார்கள். அப்பா இல்லாது அம்மாவிடம் மட்டும் வளரும் பிள்ளைகள் பயந்த சுபாவத்துடனும் இருக்கிறார்கள் அதே வேளையில் அதிக உணர்ச்சி வசப்படுவர்களாக இருக்கிறார்கள். சிறு விஷயங்களுக்கு அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள். சிறு தோல்விகள் அவர்களை பாதித்தன, சின்ன சீண்டல்களுக்கும் கூட்டத்திலிருந்து விலகுபவர்களாக இருக்கிறார்கள்.

அவள் பயந்ததாலேயோ என்னவோ அவன் எப்போதும் மனிதர்களைக் கண்டு பயந்தான். அதுவும் ஆண்களைக் கண்டு, வாசலில் வந்து நின்ற சாமியாரைக் கண்டு கொல்லைக்கு ஓடி அவன் ஒளிந்துக் கொண்டதுதான் நினைவிற்கு வரும்.

ஒருநாள் பள்ளியிலிருந்து வரும்போது, உடலில் சேறும், ரத்தமுமாக இருந்த சட்டையை கண்டது பதறி கத்திவிட்டாள். “என்னப்பா என்ன ஆச்சு,” அம்மாவின் செய்கையால் சற்று அதிர்ந்த வைத்தி, “அம்மா ஒன்னுமில்லமா நா வரும்போது கல்லுதட்டி சின்னகுட்டைக்கு பக்கத்துல இருந்த தண்ணியில விழுந்துட்டேன்மா” என்றான்.

“சின்னகுட்ட எங்க இருக்கு, ஒன் ஸ்கூல் எங்க இருக்க, என்னடா சொல்ற”

“ஆ அந்த பக்கமா விளையாண்டுட்டு வர்றம்மா”

“நீ விளையாடிட்டி வர்ற மாதிரி தெரியலையே, இரு உங்க ஸ்கூலுக்கு போறேன். என்னான்னு கேட்க்குறேன்”

“அம்மா இல்லம்மா வந்து தண்ணியில தாம்மா விழுந்தேன்”

“என்னமோ சொல்லவந்தே என்ன அது, சொல்லு”

“அம்மா இல்லம்மா, ஆ நானும் பரணியும் விளையாட்டா சண்ட போட்டோம்”

பரணி மீது அவளுக்கு அளவுகடந்த கோபம் எழுந்தது. “எங்கடா அவன் இப்பவே போறேன்” என்றாள். அவன் கன்னதுல இருக்கும் கீறல்கள் பரணியின் நகக்கீறல்கள் அவன் சட்டை பின்பக்கம் கிழிந்திருக்கிறது.

அவன் வீட்டில் அவன் அப்பாவும் அம்மாவும் கூடவே பாட்டி ஒருத்தியும் இருந்தாள். பெரிய செங்கல்லை எடுத்துச் சென்று அந்த வீட்டு ஜன்னல் கண்ணாடியை அடித்து தூளாக்கிவிட்டாள். உள்ளிருந்து எல்லோரும் வெளியே வந்து பதறி நிற்க, “எம் புள்ளைய ஏண்டா அடிச்சே” என்று அவன் அப்பாவை அடிக்கப் பாய்ந்தாள். அவர் பயந்து ஓட துரத்திச் சென்று கல்லை மண்டையில் போட்டாள். கதறி அழுது அவர் ஓடும்போது வேட்டி அவிழ்ந்தது. மண்ணை வாரி வீட்டின்முன் வீசியெறிந்தாள், சாபங்களாக அவள் வாய் உதிர்த்துக் கொண்டிருக்க பரணியின் அம்மா பதறி அம்மாவின் காலில் விழுந்தாள். காளியின் உருவம் கொண்டுவிட்ட அவளை தெருவாசிகள் சமாதனப்படுத்தப் பெரும்பாடுபட்டார்கள்.

வீடு வந்தபோதும் சண்முகவள்ளியின் இன்னும் முகம் சிவந்திருந்தது. சிவப்பு அவளது உடலோடு கலந்துவிட்டதுபோல சினம் அவளை ஆட்கொண்டிருந்தது. வைத்தி பயந்து சுவரோரமாக பதுங்கியிருந்தான். அவள் அவனைத் தாக்கினால் அவன் தப்பிக்க முன்பே திட்டமிட்டதுபோல வாசல் பக்கமாக நின்றுக் கொண்டான். சற்று நேரத்திற்கெல்லாம் அவள் எந்தநிலையிலும் அவனை தாக்கப்போவதில்லை, ஆனால் மற்றவர்களிடமிருந்து தன்னைக் காக்க எதையும் செய்வாள் என தோன்றியது.

புழுதி அவள் உடல்முழுவதும், அவள் கண் இமைகளில்கூட, காலைப்பனி போல ஒட்டியிருந்தது. பார்த்த பார்வையில் அவன் நிற்பது தெரியாமல் அமர்ந்திருந்த அம்மாவிடம் மெல்லிய குரலில், “அம்மா” என்று அழைத்தான். திரும்பிப் பார்த்த வேகத்தில் அவனை கட்டியணைத்துக் கொண்டாள். அவன் கால்கள் தளர்வதை அறியாதவளாக இறுக்கி அணைத்திருந்த அவளது கைகளின் வழியே அவள் அன்பு அவன் உடல் முழுவதும் பாய்ந்ததாக எண்ணிக் கொண்டான்.

அம்மாவின் உடல் கொதித்துக் கொண்டிருந்தது. அவள் உடலைத் தழுவியிருந்த வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருந்தது. அதன்பின் அவன் அம்மாவை மிக நெருக்கமாக அறிந்தபடி இருந்தான். அந்த சம்பவம் அவனின் மிக இளம்வயதில் நிகழ்ந்தது. நினைவில் அது மட்டுமே எப்போதும் இருந்தது. அதற்கு பிறகு நிகழ்ந்தவைகளை அவன் ஒரு சரடில் கோர்த்து வைத்து கொண்டான். எல்லாமே அம்மா என்னும் ஒற்றைப் புள்ளியில் தான் இருந்தது. அம்மாவின் வாசனை, கண்ணீரும் அவன் உடலோடு ஒட்டியிருந்ததாக நினைத்தான். என்றாவது ஒரு நாள் அம்மாவை இழப்பேன் அப்போது நான் உயிருடன் இருக்கப்போவதில்லை என்று அவன் ஆழ்மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. அம்மா இல்லாமல் இந்த உலகம் இருக்க முடியது. அந்த உலகில் நான் இருக்க முடியாது.

அம்மா என்ற உறவைத் தவிர மற்ற உறவுகளில் ஒட்டுதல் ஏற்படவில்லை. தனித்தலையும் மனநிலையை அவன் மனம் அடைய அம்மாதான் காரணம் என அறிந்திருந்தான். அவன் விளையாட்டுகளில் அம்மா என்கிற பாத்திரத்திற்கு எந்த தீங்கு வருவதையும் விடுவதில்லை. அப்படி ஒரு விளையாட்டை அவன் விளையாடவேயில்லை என்று மனம் முழுவதும் நினைத்திருந்தான்.

தலை சற்று பெருத்த, வற்றிய முலைகளும், மெல்லிய உடலுமான அம்மாவை, அவன் யானையாக நினைத்துக் கொண்டான். சில நேரங்களில் மதம் கொண்ட யானையாக. ஆனால் எல்லா காலங்களிலிலும் அப்படி நினைக்க முடியவில்லை. ஆனால் அவள் ஒரு காட்டு விலங்கு, குறிப்பாக காட்டு பன்றி. தன் பிள்ளைகளுக்காக எதையும் செய்யும் காட்டுப் பன்றி. இருக்கும் ஒரே பிள்ளையை காப்பாற்ற எதையும் செய்யும் காட்டு பன்றி.

அம்மா தன்னை இன்னும் சிறுப்பிள்ளையாகத்தான் பார்க்கிறாள். அவள் பார்வையில் அதை உணர்ந்தும் ஒரு சிறு சொட்டு தெரிகிறது. எப்போது அவன் உடலில் ஏற்படும் காயங்களை பார்க்கும் அவள் கண்கள், அவன் வளரும் வேகத்தை அறிவதில்லை. அவன் அறியும் உலகப்பார்வையை அவள் தவிர்க்கிறாள். அவன் புத்திசாலித்தனமாக எதையாவது கூறினால், அதைக் கண்டு அஞ்சுகிறாள். புறவயமான அறிதல்களை அவன் சொற்களில் தெரிவதைக் கண்டு அஞ்சுகிறாள். அதனாலேயே பள்ளியில் நடக்கும் பலவிஷயங்களை அம்மா அறியக் கூடாது என நினைத்தான். அம்மா அவள் விரும்பிய உலகோடு தானும் வளர்ந்தான். அவள் விரும்பியபடியே ஒழுங்கும் நேர்மையுமான மனிதனாக மட்டுமே இருந்தான்.

5

அம்மா ஓடிவருவது தெரிந்தது. அவள் பழுப்பு நிறச்சேலை முந்தானை காற்றில் உதறி எதையோ எழுதிக் கொண்டிருந்தது. அவசரமாக இழுத்து அதை இடுப்பில் சொறுக்கிக் கொண்டே வந்தாள். ஓடத் தொடங்கிய பேருந்து ஜன்னலோரம் அமர்ந்து பார்த்த வைத்திக்கு எரிச்சலும் கோபமும் ஒருசேர எழுந்தது. ஏன் அனைவரும் பார்க்க ஓடிவருகிறாள். கையில் சிறு எவர்சில்வர் டப்பா, சோப்பு டப்பா அவள் சின்ன வயதில் வைத்திக்கு வாங்கியது அதைதான் அவன் எடுத்துச் செல்லவேண்டும் என்பது அவளது விருப்பம். கல்லூரிக்கு ஹாஸ்டல் வாழ்க்கைக்கு இப்போதுதான் பழகுகிறான்.

“வேண்டாம்மா அடுத்தவாட்டி எடுத்துகிட்டு போறேன் நீ வரவேண்டாம்.”

அவள் முகம் சுழித்து தலை திருப்பி காதுகள் அவன் வார்த்தையை வாங்கிக் கொண்டு தலையசைத்து பரவாயில்லை என்று மீண்டும் ஓடிவந்தாள். எரிச்சலுடன் உடலை வெளியே எடுத்து வாங்கிக் கொண்டு, “பத்திரமா வீட்டுக்கு போம்மா” என்றான்.

பஸ்ஸின் கடைசி திருப்பம் வரை அங்கேயே நிற்கிறாள். அவளது சித்திரம் கோபுரத்தில் தனித்து நிற்கும் பெண்சிற்பம் போல இருந்தது. கண்களில் நீர் துளிபரவ காற்றின் அலைவில் வரும் கண்ணீர்போல பாவித்து துடைத்தான். உதடுகள் துடித்தன. அம்மாவை பிரிந்து இருக்கும் மூன்றாம் மாதம்.

ஒவ்வொரு மாதம் ஊருக்கு வரும்போது அம்மா இளைத்திருந்தாள். உணவுத் தயாரிப்பை இருநாட்களுக்கு ஒருமுறை என வைத்துக் கொண்டிருக்கிறாள். சில நேரங்களில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை. இருக்கும் உணவுகளைச் சூடுபண்ணி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். “ஏம்மா இப்படி சாப்பிடற,” “நா யாருக்குடா சமைக்கப் போறேன். இருக்கிறத சாப்பிட வேண்டியதுதானே.”

நீண்ட உயரமான உடல் அவளுக்கு, சாப்பிடாமல் தற்போது கழுத்து நீண்டு இன்னும் உயர்ந்திருந்தாள். வயிறு ஒட்டிப் போயிருந்தது. “நீ இப்படி இருந்தா, அப்புறம் நா எப்படி ஹாஸ்டல்ல நல்லா சாப்பிடுவேன்.” திரும்பிப் பார்த்த அம்மாவின் கண்களில் சிதறும் நீர்த்துளிகள் தெரிந்தன. வருத்தமும், அழுகையுமாக “சரி சாப்பிடறேன்டா செல்லம்” என்றாள்.

“நீ அங்க நல்லா படிக்கிறியாடா, ஏன்டா கண்ணு, அங்கயிருக்கிற வார்டன்லாம் பொறுப்பா பாத்துப்பாங்களா, உடம்பு சரியில்லன்னா டாக்டர்ட கூட்டிக்கிட்டு போவாங்களா?”

“அங்கேயே மருந்து வெச்சிருக்கிற மெடிக்கல் இருக்கு, தேவைன்னா கொடுப்பாங்க, உடம்பு முடியல்லன்னா, கூட்டிக்கிட்டு போவாங்க”

“சரிடா கண்ணு”

யாரும் கவனிக்குமுன் சோப்புடப்பியை அவசரமாக பையில் சொருகினான். அம்மாவின் அசைவில் இன்னும் ஏதோ மறந்துவிட்டது என்று வெளிப்பட்டது. நல்லவேளையாக பேருந்தின் வேகம் கொண்டுவிட்டது. திருப்பத்தில் அம்மா தெரிந்து மறைந்தாள்.

அவள் காட்சியிலிருந்து மறைந்ததும் கண்களில் நீர் முட்டியது. நீர் விழும் தன் மடியில் பனித் துளிகள்போல விழுந்து உருண்டன. தன்நிலை மறந்து அழதபடி இருந்தான். அம்மா என்ற ஒற்றைச் சொல்லின் அழுத்தம் எழும்போதெல்லாம் மனதில் பாரம் ஏறிக் கொண்டிருக்கும். மனம் முழுவதும் அம்மாவை தவிர பிரிதொன்றுமில்லை என்ற நினைக்கும்போது அம்மாவை இழந்துவிடுவேன் என்கிற பதற்றம் எழுந்தபடி இருந்தது.

தூக்கம் கண்களை தழுவியது. காலையிலிருந்து கல்லூரி ஹாஸ்டலுக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்த களைப்பு. அவள் கொடுத்த பணத்தை பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டான். வேறுவேறு இடத்தில் கொஞ்சம் பணம் வைத்துக் கொண்டான். பிறர் ஜோப்படி அடித்துவிடக் கூடாது என்கிற எண்ணத்திற்காகதான். பணம் கரைந்துவிடக்கூடாது என்கிற பயம் மனதின் ஓரத்தில் ஒரு நெருப்பைப்போல தகித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சின்ன செலவினமும் அவன் மனதை அரித்தது. அம்மாவிற்கு எப்படி பதில் சொல்லப்போகிறேன் என்கிற பயம். பணத்தைப் பற்றி அம்மா எதையும் கேட்கப்போவதில்லை என்றாலும் அவளது உடல் உழைப்பிற்கு எவ்வகை மரியாதையை அளிப்பது என்று தவித்தான்.

அப்பா சேர்த்து வைத்துப் போன பணம் போக, ஒரு வீட்டின் வாடகை வந்தது, கூடவே வற்றல், அப்பளம், காய்ந்த கத்திரி, போன்றவைகளை தயாரித்து வீட்டில் வைத்து விற்றுக் கொண்டிருந்தாள். சின்னதாக எந்த வேலையையும் வீட்டிலேயே செய்து பழகிக் கொண்டாள். தையல் இலை செய்வது, தேங்காய் வாங்கி விற்பது.

தாமதமாக எழும் நாட்களில் அவள் தன்னையே வைதுகொள்வாள். “எப்படி மனுஷியால் தூங்கமுடிகிறது, வெட்ககெட்ட உடம்பு” என்று புலம்புவாள். அப்படி அவள் சொல்வது தன் குற்றஉணர்ச்சியை கொல்லத்தான் என நினைத்தான்.

“அம்மா, கொஞ்ச நேரம் தூங்கும்மா, நான் தான் பரிச்சைக்கு படிக்கிறேன், காலைல எந்திரிக்கிறேன், நீ எதுக்குமா எழுனும்” என்பான்.

“படிக்கிற புள்ளைக்கு துணையா இருக்காட்டி அப்புறம் என்ன அம்மா நா, இரு காபி போட்டு எடுத்தாறேன்”

ஒரு நாளில் சிறு நேரத்தையும் அவள் வீணாக்கி அவன் பார்த்ததில்லை. வெறுமனே அமர்ந்திருந்த நாட்கள் அவன் நினைவில் எழுவதில்லை. அம்மாவை ஒரு இயந்திரமாக நினைத்துக் கொள்வான். காலை எழுந்து ஸ்விட்ச் இட்டதும் இயங்க தொடங்கிவிடும் இயந்திரம் அவள். மனிதமுள்ள இயந்திரம்.

6

அக்காவு தன் கால்களை வாய்க்காலின் வைத்திருந்தான். நனைந்த கால்களை நீரின் மேலே தூக்கிவைத்து நடக்கும் அழகு பெரிய விலங்கின் நடையை போன்றிருந்தது. ஏதோ ஒன்றை பிடிக்கும் ஆர்வத்தில் இருந்தான் என தெரிந்தது. அந்த நடையில் அவன் ஓசைகள் எதிரியை குழப்பும் என தோன்றியது. பிடிக்கப் போகும் உயிரினம் பற்றி வைத்திக்கு எதுவும் புலப்படவில்லை. ஒரு வேளை மீனை அவன் பிடிக்கலாம் என நினைத்தான். சட்டென கரையில் இருந்த ஒரு துளையில் கையை விட்டு மண்ணை பறபறவென்று இழுத்துப் போட்டான். நீர் சற்று கலங்கலாகி தெளிவு பெறும்போது அவன் தலையில் கட்டியிருந்த சிவப்பில் கருப்பு கோடு போட்டிருந்த துண்டில் அனைத்தையும் சேகரித்துக் கொண்டான். கூட்டாக புரளும் பல்லிகள் என பயந்து அவற்றை நினைத்தான். “நண்டு, வயநண்டு ருசியாக இருக்கும்” என்றான்.

இறுக்கி கட்டிவிட்டு அவன் வைத்திருந்த அலுமினிய அன்னக் கூடையில் போட்டுவைத்தான். “சரி உட்காரு பேசுவோம்,” என்று அமர்ந்தான். ஆனால் வைத்தி எண்ணங்கள் நண்டைப் பற்றிய இருந்தன. வைத்தி அமர்ந்ததும் “உனக்கு என்ன பிரச்சனை,” யோசித்து சிரித்தான் வைத்தி, “இல்ல ஒன்னும் பிரச்சனையில்ல,” “உன் பொண்டாட்டி ஓடிப் போச்சா”, “இல்லஇல்ல,” “பொண்ணு ஓடிப் போச்சா,” “எனக்கு பொண்ணு இல்ல.”

“சொத்துப் பிரச்சனையா”

“இல்ல, அதெல்லாம் இல்ல”

“பின்ன, கடன் வாங்கிட்டியா பின்ன, என்ன பிரச்சனை”

“இல்ல ஒன்னும் இல்ல, எனக்குதான் மனசு சரியில்ல”

“அதான் ஏன்னு கேட்கிறேன், அம்மா செத்து எத்தனை நாளிருக்கும்”

“ஒரு இருவது நாள்”

அவன் கண்களை சந்திக்கப் பயந்தான் வைத்தி.

“அதுனால என்ன பிரச்சன”

“தூக்கம் இல்ல அக்காவு, நா தூங்கி ஒரு மாசம் இருக்கும், அம்மா உடம்பு சரியில்லாப்பைலேந்து, தஞ்சாவூர்ல வெங்கட்ராமன் டாக்டர்ட கூட்டிக்கிட்டு போனாங்க, அவரு மருந்தெல்லாம் எழுதிக் கொடுத்தாரு, தூக்கம் வந்தமாதிரிதான் இருந்துச்சு, நாளெல்லா வேர்த்து கொட்டுச்சு, உதறி உதறி பாதியிலேயே எழுந்துடுவேன். கையெல்லாம் நடுக்கம் வந்து போச்சு, பெரிய அதிர்ச்சி ஏற்படும்போது இது எல்லாருக்கும் ஏற்படுறதுதானாம். ஆனா கொஞ்ச நேரம் தூங்குனா கனவுதான் வருது, அதுவும் நா செத்துபோற கனவு. எனக்கென்னவோ கூடியவிரைவில செத்துடுவேன்னு தோணுது”

“அதெல்லாம் சாவ மாட்டே, இவ்வளவுதானா உன் பிரச்சன, நாகூட ஏதோன்னு நினைச்சேன். சரி பண்ணிக்கலாம் வா”

“இல்ல, நீ ரொம்ப சாதாரணமா சொல்ற, இது நரம்பியல் சம்பந்தமான பிரச்சனை, ஒன்னு நா இப்படி பைத்தியம் போல ஆகலாம், இல்ல செத்துபோவேன் அவ்வளவுதான் நடக்கும்”

“உனக்கு இந்த பிரச்சனைய கொடுத்தது யாரு, கடவுள்தானே, அவரே இத சரியும் பண்ணிடுவாரு, கவலப்படாதே, மாரியாத்தா உனக்கு துணைக்கு இருப்பா”

அக்காவு சொல்வதை எப்படி மறுதலிப்பது என்று தெரியவில்லை. மெளனமே இதற்கு சரியான வழி என நினைத்து அமைதியாக இருந்தான்.

பன்னிரெண்டு மணி வெய்யில் தலையில் ஒரு சூடான அருவி போல அடித்துக் கொண்டிருந்தது. நிற்கமுடியாத நிலை வரும்போது அவர்களே கிழே விழுந்து விடுவார்கள் என எண்ணிக் கொண்டான்.

அழுத்தமான நடையில் அவன் இரண்டடி சென்று திரும்பி அவனிடம் “சாப்பிடப் போலாமா” என்றான். “என்ன சாப்பாடு இருக்கு” என்றான் வைத்தி. நாக்கு குழல்வதை அவனே அறிந்தான். இருக்கு இழுக்கு என்று சொன்னது அவனுக்கும் கேட்டது. அக்காவு அறிந்துவிடக்கூடாது என்று கண்களை இறுக்கி எதாவது “ஓட்டல் இருக்கா” என்றான். “வா” என்று நடந்தான் அக்காவு.

நீண்டு வளைந்து செல்லும் அந்த பாதையை இட்டேரி என்று குறிப்பிட்டான் அக்காவு. வரிசையாக மரங்கள் வந்தன. மரங்களின் இடையே வெய்யில் வரும்போது அவன் கால்கள் சூட்டில் வைக்கமுடியாமல் தடுமாறினான். பாதையின் நடுவே புற்களற்ற செம்மண் பாதை அதிகம் வெய்யிலில் கிடந்தது. மாட்டுவண்டியாலும், டிராக்டர் சக்கரத்தாலும் ஓரங்களில் பள்ளம் உருவாகியிருந்தன. பள்ளத்தின் ஓரமாக புற்கள் நிறைந்த நிழல் பகுதியில் நடந்துச் சென்றான். செருப்பு அணிந்திராத அவன் கால்கள் தடுமாற்றத்தில் இருந்தன. ஆனால் அக்காவு வேகமாக நடந்தான்.

அக்காவுவின் உடல்மொழி மாறிவிட்டிருந்தது. தன்னைப் பற்றித் தெரிந்துகொண்டதும் அவன் தனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல நடந்து கொள்வது வைத்திக்கு சற்று விசித்திரமாகத் தோன்றியது. எதையாவது சொல்லி அவனிடமிருந்து தப்பிச் செல்ல மனம் வரவில்லை. அவன் இழுத்த இழுப்பிற்கு ஆட்டுக் குட்டி போல தன்னை உருவகித்துக் கொண்டே பின் சென்றான்.

இடப்பக்கம் இருந்த பரம்பை முள் வேலியை கடந்து உள்ளே சென்றான். பெரிய புல்பிரதேசமாக இருந்த வயலை கடந்து கடைசியில் மரங்கள் அடர்ந்த இடத்திற்கு சென்றான். நல்ல நிழலும் குளுமையும் இருந்தது. நல்ல தூக்கம் வரக்கூடிய இடம் என தோன்றியபோது, தன் கனவு தூக்கத்தை எண்ணிக் கொண்டான்.

அக்காவு தாழ்ந்திருந்த மரத்தின் மேல் தன் நண்டு மூட்டையை கட்டிவிட்டு, அங்கே இருந்த சாப்பாட்டு டப்பாக்களை எடுத்தான். வெள்ளைநிறமாக இருந்த ஒரு பெரிய தார்ப்பாய் அல்லது வினைல் போஸ்டரை விரித்தான். தார்ப்பாயின் ஒரு முனை காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. “அதுவும் திங்க கேட்குது பாரு ஒரு கல்ல தூக்கி வையி” என்றான். ஒரு பெரிய கல்லை எடுத்து வைத்துவிட்டு வரும்போது அதன் மேல் அமர்ந்து அவன் சாப்பாட்டுப் பொருட்களை விரித்திருந்தான்.

அக்காவு ஒரு விவசாயி என்பது மனதில் நிழலாடியது. மண்வெட்டியைப் பிடித்து மண்ணை வெட்டும் மனிதன் என்கிற சித்திரம் மட்டுமே கொண்டிருந்தாலும் அவனிடம் பலவகை பொருட்கள் இருந்தன. மண்வெட்டியுடன் மண்ணைக் கிளரும் ஒரு கருவியும் இருந்தது. பலவித டப்பாக்கள் அக்காவுவிடம் இருக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை.

ஒரு பெரிய டப்பாவில் வடிக்கப்பட்ட சோறும் அதன் மேல் புடலங்காங்காய் கூட்டும் பரப்பப்பட்டு இறுக்க மூடப்பட்டிருந்தது. மற்றொரு பாத்திரத்தில் குழம்பு அதை திறந்ததும் கருவாடு என்று தோன்றும் வாசம் எழுந்தது. அது கருவாட்டுக் குழம்பு அப்படி தான் வாசம் அடிக்கும் என்றான். மற்றொரு பாத்திர டப்பாவில் சேனைக்கிழங்கு கறி இருந்தது. அதன் வாசம் முற்றிலும் அவன் அறிந்திராதது. அதைத்தவிர ஊறுகாய் ஒரு டப்பாவிலும் வாழையிலையில் பொதிந்த கறி ஒன்றும் பிரித்து வைத்தான்.

மடிக்கப்பட்ட காய்ந்த வாழையிலைகள் இருந்தன. “இந்தா இத வெச்சுக்கோ,” “இல்ல எனக்கு வேண்டாம் நா சாப்பிடும் மூடுல இருக்கேன்னே தெரியல,” “நா சாப்பிடறத பார்த்துக்கிட்டே இருப்பீயா எனக்கு வயத்த வலிக்கும்ல, கைல வெச்சுக்கிட்டு சாப்பிடறமாதிரி உட்காந்திரு போதும், இந்தா” என்றான்.

கைகளில் குழந்தையை ஏந்துவது போல வைத்துக் கொண்டான். அதில் புடலங்காய் கூட்டு வைத்து சோற்றை தள்ளினான், அதன் மேல் குழம்பை ஊற்றினான். கீழே வெச்சுக்கோ என்றான். “நீ தான் கவுச்சி தின்ன மாட்டியே, அதான் உனக்கு வெக்கல, இப்ப சாப்பிட்டு பாரு,” என்றான்.

கீழே வைத்துவிட்டு தூரமரங்களை பார்த்துக் கொண்டிருந்தான். தென்னையும் பனையும் வெவ்வேறு திசைகளில் பச்சை வண்ணம் படிந்ததுபோல நின்றிருந்தன. தென்னையின் கீற்றுகள் லேசாக அசைவில் அது நான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டது. பனைகளில் எந்த அசைவும் இல்லை. ஆனால் தூரத்திலிருந்த பொருட்கள் துல்லியம் பெறுவது தன்னை வருத்தும் ஏதோ ஒன்று பின் தொடர்வதால்தான் என நினைத்தான். அங்கே யாருமற்ற வெளி தனக்கு அன்னியதன்மையை அளிக்காமல் இருந்தது, அங்கே சென்று சிறிது நடக்கவேண்டும் என தோன்றியது. வியர்வை உடலில் வெவ்வேறு பாகங்களில் தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருந்தது. நெற்றியில் அதிகம் வியர்வை வியர்த்து கண்ணை மறைத்தது. “சாப்பிட்டு முடிச்சு அங்க போறோம், இப்ப சாப்பிடு.” என்றான் அக்காவு. தான் நினைப்பது அவனுக்கு புரிகிறது என்று நினைத்ததும் சாப்பிட ஆர்வம் கொண்டான்.

அக்காவு பரபரப்பாக தின்பது அவன் ஏதோ அவசரத்தில் இருப்பதாக பட்டது. கீழே இலையில் இருந்த உணவை எடுத்து வைத்தியும் வேகமாக உண்ணத் தொடங்கினான். பள்ளத்தை சென்றடையும் நீர்போல அவன் உணவு வயிற்றில் இறங்கியது. அதிகம் மெல்லமுடியாமல் விழுங்கிக் கொண்டிருந்தான். வாழையிலையில் இருந்த கறியை அவன் இலையில் வைத்துக் கொண்டான். இப்போது இன்னும் வேகமாக உண்டான்.

வேகமாக உண்ண உண்ண, அமைதியடையும் கொடிய மிருகம் போலானான். உடலின் வெப்பம் அதிகரித்து தன்னிலை மறந்த பம்பரம் போல் சுழன்றபடியிருந்தது மனது. தன்னையுமறியாமல் பேச்சு வெளிப்பட்டு உணவு அவன் வாயிலிருந்து சிதறிவிழுந்துக் கொண்டிருந்தது. ஆனாலும் உண்டுக் கொண்டிருந்தான். வாழையிலைக் கறியை அள்ளி அள்ளி உண்டான். அதன் சிவப்பு உதடுகளில் ஒட்டி காரம் புரையேறியது. கண்களில் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. தொடர்ந்து எந்த எதிர்ப்புமில்லாமல் உண்டுக் கொண்டிருந்தான்.

அக்காவு உண்பதை நிறுத்திவிட்டு அவனுக்கு உணவைக் கொடுத்துக் கொண்டிருந்தான். போதும் என்று ஒரு கட்டதில் எழுந்து வெளியேறி கைகளைக் கழுவிக் கொண்டு நீண்ட ஏப்பம் விட்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். பாட்டில் தண்ணீரை எல்லாவற்றையும் குடித்து காலி செய்தான். சட்டை பேண்ட் எல்லாம் நனைந்திருக்க எதிரே தெரிந்த மரங்கள் அடர்ந்த நிலத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

“வைத்தி, இரு நா வாரேன்”

அவன் காதுகளில் அது விழவில்லை. நடந்துசெல்லும் சித்திரத்தை ஒரு ஓவியத்தின் தொடக்கக் கோடுகளாக எண்ணிக் கொண்டான் அக்காவு.

அவன் போகட்டும் என்று எல்லா பொருட்களையும் எடுத்துத் தனியே வைத்துவிட்டு கையில் இருந்து துணியைச் சுற்றி வட்டமாக்கிவிட்டு தார்பாயின் மேல் படுத்துக் கொண்டான். சற்று நேரத்திற்கெல்லாம் தூங்கிப் போனான் அக்காவு.

7

அம்மா இறந்த நான்கு நாட்களுக்குப் பின் இரவில் நடப்பது வைத்திக்கு வழக்கமாகிவிட்டது. கூடத்தில் இருந்த ஷோபாவை சுற்றிச் சுற்றி வந்தான். அது நடுவாக எல்லாபக்கமும் சமமான இடம் இருப்பது போன்று அமைந்திருந்தது. அனைவரும் இதை அவன் ஒரு உடற்பயிற்சி போல் செய்கிறான் என நினைத்துக் கொண்டார்கள். இரவெல்லாம் நிற்காமல் நடக்கத் தொடங்கியதும் பதறி, டாக்டரை அழைத்து வந்தார்கள். சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்துவிட்டு அப்போதும் தூங்கவில்லை என்றால் பெரிய டாக்டரின் பெயரை நேரில் சென்று பார்க்க பரிந்துரைத்திருந்தார்.

தான் நடக்கவில்லை என்று அவன் கூறிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு காலடியையும் அவன் தன் மனம் சூழ்ந்த வனமாக நினைத்திருந்தான். காடு என்பது மனவெளியில் உவகையான கொண்டாட்டமாக இருந்தது. எதிரே இருந்த தோப்புகளைக் கண்டதும் அவன் தன் மனவெளி மேலும் விரிவடைவதைக் கண்டான். சொற்களில் சொல்லமுடியாத உவகைபோல நினைவுகளில் நிறுத்தமுடியாமை மேலும் மனதை லேசாக்கியது. தோப்பினுள் நடக்கும்போது காற்று வேறுபக்கத்திலிருந்து வந்தது. உறுத்தும் கண்களைக் காற்று துடைத்து வெளியேறியது.

மரங்கள் நேர் வரிசையில் இருந்தன. நடக்கும்போது தோன்றும் பயம் தனக்கு ஏற்படவில்லை என்று நினைத்துக் கொண்டான். குறுக்கிட்ட வாய்க்காலை தாண்டிச் சென்றதும் வேறுவகை வயல்கள் வந்தன. கரும்பு வயலில் இறங்கி நடக்க முடியவில்லை. சிறு வரப்பில் நடக்க தவளைகள், நண்டுகள், பூச்சிகள் அவன் காலடியிலிருந்து வெளியேறி பக்கவாட்டில் ஓடின. மற்றொரு தென்னந் தோப்பில் ஒருஇடத்தில் நட்டுவாக்கிளி இரண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் பெருத்த விசித்திர கைகள் பின்னி புதிய வடிவத்தை கொண்டிருந்தன.

வெய்யில் உச்சியை தாண்டிவிட்டிருந்தது. அதன் வெம்மை குறைந்து நீர் சூடு தணியும் முந்தைய நிலைக்கு வந்துவிட்டிருந்தது. தூசுகளாலும் இலைகளாலும் மேனி அரிக்கத் தொடங்கியிருந்தது. ஜில்லென்ற காற்று எந்த வயல்களிலிருந்து வருகிறது என யோசித்தான். அருகில் ஏதோ நீர்நிலை இருக்க வேண்டும் அதன் குளிர்ந்த காற்றில் பச்சை மணத்துடன் பாசிகளின் வாசமும் இருந்தது. மண்சாலையின் ஒரு திருப்பத்தில் குளம் ஒரு பெரிய மைதானத்தைப் போலிருந்தது. அதன் ஓரங்களில் தாமரை மலர்கள் பச்சை இலைகள் சூழ நின்றிருந்தன.

ஆடைகளைக் களைந்தான். நிர்வாணமாக நின்றது பெரிய விடுதலையாக இருந்தது. தன்னை இழக்கும் எந்த செயலும் அவனுக்கு ஆழ்ந்த அமைதியை அளித்தது. தன் முன் விரிந்து செல்லும் நீர்நிலையை கண்களால் அளக்கமுடியவில்லை. அதன் ஆழமும் நீளமும் அவனால் சரியாக கணிக்க முடியவில்லை. சட்டென அதில் குதித்தான். தண்ணீரின் புதிய குளிர்ச்சி நெஞ்சுக் கூட்டில் பரவி புதிய வலியாக கிளர்ந்தெழுந்தது. வெளியே தலையை எடுத்ததும், குளிரால் கீழ்தாடை ஆடத்தொடங்கியது. சற்று நேரத்திற்கெல்லாம் குளிர் மறைந்து வெம்மை கொண்டது உடல். உள்ளேயும் வெளியேயும் ஒரே வெப்பம் பரவ களிப்படைந்தான். வேகமாக நீந்திச் சென்றான். எதிர் கரையை அடைய வேண்டும் என்கிற வெறியுடன் செல்ல கால்களில் தாமரைக் கொடி பரவித் தடுத்தது. மீண்டும் திரும்பி வந்தான். மீண்டும் அதே வேகத்தில் முன்னே சென்றான் இப்போது உள்ளே ஆமைகளும், மீன்களும் அவனைக் கண்டுதும் நான்கு திசைகளில் பரவுவதை கண்டான்.

திரும்ப வந்து அதே கரையில் அமர்ந்து கொண்டான். அமர்ந்த மண்திட்டின் மண் அவன் பிட்டத்தில் ஒட்டிக் கொண்டது. அணிலின் கீரீரீரீஇ என்கிற ஒலி அருகிலும், பறவைகளின் அழைப்பு ஒலி சற்று தொலைவிலும் கேட்டது. அருகில் எங்கும் மனித வாசனையில்லை. தூரத்தில் வயலில் ஒரு ஆண் ஏதோ செய்து கொண்டிருக்கிறார். ப்ரக்ஞை வந்து உடைகளை எடுத்து அணிய தொடங்கும்போது பாக்கெட்டில் ஒளிர்ந்துக் கொண்டிருந்த செல்போனை எடுத்தான்.

வெறும் எண்கள் மட்டும் இருந்தன. அதை ஆன் செய்து ஹலோ என்றான். எதிர்முனையில் பதட்டத்துடன் சுவாதியின் குரல். “ஏங்க எங்க இருக்கீங்க, நீங்க ரெண்டு நாளா போன் எடுக்காம இருக்கீங்க, நா என்ன பேசுறேன்னு முதல்ல கேளுங்க”

“நா பேசுறேன் வை”

“ஏங்க இருங்க, நா என்ன பேசுறேன்னு கேட்டுட்டுப் பேசுங்க, நீங்க எங்க இருக்கீங்க முதல்ல”

“நா எங்கையோ இருக்கேன், எனக்கே தெரியல, ஏதோ ஒரு ஊரு ஏதோ ஒரு இடம்”

“சாப்பிட்டீங்களா, என்ன சாப்டீங்க”

“சாப்டேன்”

“இருங்க சாஸ்த்ரா உங்ககிட்ட பேசனுமா“

சட்டென அவன் இறுக்கமான நூல்பிடிப்புகள் அறத்தொடங்கின. தன் பிடிமானத்தின் மேலிருந்த கயிற்றின் பிரி பிரிவதுபோன்றிருந்தது. யார் சாஸ்த்ராவா அவன் யார் என்ன செய்யப் போகிறான், எதையாவது கேட்கப் போகிறான் அவனுடனான பந்தம் தன் உயிர் காக்கும் கவசம், அவன் என்ன கேட்பானா இருக்கும்.

“அப்பா, அப்பா எங்கப்பா இருக்கீங்க”

வைத்தியின் உயிர் அவனை விட்டுப் பிரிவது போன்று அக்குரல் எங்கோ ஒரு மலை முகட்டில் ஒலித்தது. வழுக்கும் ஈரமண்ணில் வழியாக நடப்பது போன்ற பதற்றம். பேச நா எழவில்லை. “மகனே” என்று ஒற்றை வார்த்தை மட்டும் வெளியாகியது. குரல் அடைத்து பேசமுடியாமலாக அவசரமாக கனைத்து “என்னப்பா” என்றான்.

“ஏதோ ஒரு ஊர்”

“அப்பா எப்பப்பா வருவீங்க”

“கூடிய விரைவில் வரேன்பா”

“அப்பா சீக்கிரம் வாங்கப்பா” அவன் குரல் உடைந்து அழுவது போலிருந்தது. சாஸ்த்ரா அழுது அவன் பார்த்ததில்லை, அவன் அழுகுரல் தேய்ந்த இசையின் சொல்வடிவம் போலிருந்தது.

“பயப்படாத நா வந்துடறேன். அம்மாட்ட குடு”

“ஏங்க சொல்லுங்க எப்ப வர்றீங்க”

“சீக்கிரம் வார்றேன்”

“புள்ள என்னங்க பாவம் பண்ணான்”

“எனக்கு வேற நினைப்பே வரலையே நா என்ன பண்ணட்டும்”

“அம்மா தானே வேணும் நா பெத்து தாரேன், ஒரு பெண் பிள்ளைய பெத்து தாரேன், அவளுக்கு உங்க அம்மா பேரையே வைக்கலாம், வாங்க”

குவிந்த உதடுகளால் அவள் அவனை கொஞ்சுவாள். “என் ராசா…” அவள் நெற்றி வகிடி கிட்டத்தில் தெரியும்போது அவள் உடலில் சோப்புவாசனையும் மலர்களின் வாசமும் சேர்ந்தடிக்கும். அப்போது அவள் பஞ்சு உடலை அணைத்துக் கொள்வான்.

“யோவ் என்னையா பண்ற” என்ற குரல் அவன் திடுக்கிடலுடன் திரும்பினான். “இது பொம்பளைங்க குளிக்கிற இடம் இங்க அம்மணமா குளிக்கிற எந்தூரு நீ” என்றான்.

நடுவயதோடு சற்று அதிகமான வயது இருந்தது அவருக்கு. கருத்த தலைமுடி மீசையில் இளமையாக தெரிந்தான். வரவழைக்கப்பட்ட முனைப்பு கொண்ட மனிதன் சுபாவத்துடன் “இங்கெல்லாம் இப்படி இருக்ககூடாது, சட்டைய போட்றா” என்றான். நிர்வாணத்தை அப்போது கவனித்த வைத்தி அவசரமாக தன் உடைகளை அணிந்துக் கொண்டான்.

“யார் வீட்டுக்கு வந்துருக்க”

“அக்காவு இருக்காருல்ல அவரு வீட்டுக்கு”

“அவனா அவன் எங்க இருக்கான் இங்க, அவன் புலிவலத்து வளைவுலல்ல இருக்கான் இங்க எங்க வந்தான்”

“இல்ல நா வந்து”

“உனக்கு மண்ட கோளாறா என்ன, ஒரு மாதிரியா இருக்க”

“இல்ல”

“வா அவன்ட கூட்டிக்கிட்டு போறேன்”

அணைந்த செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

அழுக்கடைந்த வெள்ளை பேண்ட் உருண்டைவடிவத்தை அடைந்திருந்தது. மெருன் வண்ண சட்டையில் கசங்கிய சுருக்கங்களுடன் வெள்ளைக் கோடுகள் படிய உப்பலாக இருந்தது. கலைந்த தலையும் தாடியும் நிலையற்ற கண்களும் அவனை சமீபத்தில் நிலைபிறழ்ந்த மனிதனாக காட்டின.

சற்று பாதுகாப்பு உணர்வோடு அந்தப் புதிய மனிதன் அவனை விட்டுச் சற்று தள்ளியே நடத்திவந்தான். திரும்பி வரும்போது வெய்யில் முற்றிலும் குறைந்து வேறு சூழல் நிலவியது. மரங்கள் அசைய தொடங்கியிருந்தன. மரங்கள் வரிசை இடைவெளிகள் மாறாமல் தனித்து நின்று ஒன்றுடன் ஒன்று பேசிக் கொண்டிருந்தன. அதன் இலைகளின் பச்சைவண்ணம் செம்பழுப்பாக மாறியிருந்தது. சூரியன் மேற்கில் சுடரும் தீப்பந்தம்போல அணைந்தணைந்து எரிந்தது. தன் மனதின் தெளிவு துணுக்குற வைத்தது வைத்திக்கு. மாலையானதும் மனம் தெளிவுறுவது நினைத்து எப்போதும் ஆச்சரியம், இரவில் அதைவிட தெளிவு பெற்று தன் மனத்தை முழுமையாக இழந்து நடக்க தொடங்கிவிடுவான். அடுத்த நாள் காலைவரை தொடரும். காலையில் சில மணிநேர தூக்கம் பின் அன்றைய பொழுதை மீண்டும் தொடங்கியிருப்பான்.

சிறுசிறு குடில்கள் போன்று வீடுகள் வேறு வேறு கோணத்தில் நின்றிருந்தன. ஒரு வீட்டின் வாசல் ஒரு வீட்டின் பக்கவாட்டு சுவரோடு இருந்தது. குடிசையின் முன்னே காலி இடங்கள் இருந்தன. அதில் குழந்தைகள் ஓடியாடின. ஆட்டுக் குட்டிகள், கோழிகள் குறுக்காக நடைபயின்றன. ஒரு வீட்டின் முன்னே நின்று “டேய் அக்காவு, இந்தாளு ஒன்வீட்டுக்கு வந்திருக்காராடா” என்றான்.

உள்ளிருந்து வந்த அக்காவு “ஆமாமா, சாப்பிட்டு போனவருதான் ஆளக்காணாம்னு நா வந்துட்டேன்.”

“பாத்துக்க, ஆளு ஒரு மாதிரியா அங்கங்க சுத்திக்கிட்டுருக்காரு”

“சரி நா பாத்துக்கிறேன்”

ஏற்றிய வேட்டியோடு பனியன் அணிந்த அவர் நடந்து செல்வதை பார்த்துக் கொண்டிருந்தான் வைத்தி. “வைத்தி வா இங்க ஒக்காரு,” என்று கயிற்று கட்டிலை காட்டினான்.

கட்டிலில் அமர்ந்ததும் அவனை உள்ளிளுத்துக் கொண்டது. “என்ன வைத்தி எங்க போயிட்ட, உன்னைய தேடித் தேடி வீட்டுக்கே வந்துட்டேன்”

“குளம் ஒன்னு இருக்குல்ல அங்க இருந்தன்”

“குளமா அடப்பாவி அவ்வளவு தூரம் போயிட்டியா, அதாம் உன்னய பாக்க முடியல, என்ன சாப்பிடற”

சாப்பாடு என்றதும் அவன் மனம் எந்த ருசியையும் அறியாததை நினைத்து அதிர்ச்சியுற்றான்.

மென்மையான புளிச்ச பழத்தின் வாசம் வீசும் சூழலைக் கொண்டிருந்த இடத்தில் அவனுக்கு பசியைப் பற்றிய நினைவு வராதது புதிதாக இருந்தது. சொர்க்கத்தின் வாசலில் அமர்ந்து அதன் கனவுலகில் மிதப்பது போன்றிருந்தது. மெல்ல தன்னை ஒருமைப்படுத்திக் கொண்டு “மணி என்னாவுது” என்றான். “ம் ஆறாவுது, இருட்டிடுச்சு தெரியல” என்றான் சற்று நகைப்புடன். “சரி இன்னும் கொஞ்ச நேரத்துல நல்லா சாப்பிட்டுடுவோம், கொஞ்ச நேரம் ஆவட்டும்”

பேசியே பழக்கப்பட்ட அக்காவு நிலைகொள்ளாமல் எதையாவது கேட்டுக் கொண்டிருந்தான். அமைதியாக தன் தலையசைவை மட்டுமே செய்து கொண்டிருந்த வைத்தி தனக்கும் இந்த உரையாடலுக்கு சம்பந்தமில்லை என்பது போல ஆகிவிட்டிருந்தான். உள்ளிருந்து உணவின் மணம் வெளியே வந்து கொண்டிருந்தது, காற்றின் அலையின் சிறு அதிர்வுகளை தாங்கும் திரைச்சீலைபோல அவன் நாசி விடைத்துக் கொண்டிருந்தது. உணவு என்றதுமே அவன் மனம் வாந்தியைத்தான் நினைத்தது.

இருட்டின் பரிமாணத்தில் குழந்தைகள் ஓடிவருவது தெரிந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதன் அடையாளம் உடலில் வெள்ளை கோடுகளாக தெரிந்தன. ஒரு பெண் பிள்ளை மட்டும் மேல் சட்டை அணிந்திருந்தாள் மற்றவர் மூவரும் டிராயர் மட்டும் அணிந்திருந்தார்கள். அவர்களின் மூக்கில் இருந்த சளியின் அடர்த்தி பாதரசத்தின் நழுவல் போலிருந்தது. உதட்டை அடையும்போது உள்ளிழுத்துக் கொண்டார்கள். அவன் குழந்தைகள் மேல் எந்த கவனமும் கொள்ளவில்லை என்பதை ஆச்சரியத்துடன் நினைத்துக் கொண்டான்.

(அடுத்த இதழில் முடிவுறும்)

– சொல்வனம், இதழ்-284, டிசம்பர் 11, 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *