(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2
1 – தை பிறந்தது
உதய சூரிய ரின் பொன் கிரணங்கள் பொன்மணிக் கிராமத்தின் வயல் வரப்புகள் மீது தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. அதி காலையில் புகை மாதிரி எங்கும் படர்ந்திருந்த பனித் திரையை விலக்கிக்கொண்டு சூர்யோதயம் ஆயிற்று. மார்கழி மாசமாதலால் பஜனை கோஷ்டி ஒன்று பெருமாள் கோவிலிலிருந்து கிளம்பி, கிராமத்தின் வீதிகளில் பாடிக்கொண்டு போயிற்று. சூர்ய உதயத்துக்குள் கிராம வாசிகளில் பெரும்பாலோருக்கு ஸ்நானபானாதிகள் முடிந்துவிடும் என்பதற்கு அத்தாட்சி யாக பெண்கள் குளத்தில் குளித்துவிட்டு, இடுப்பில் குடத்துடன் ஆலயத்தைப் பிரதட்சிணம் செய்து கொண்டு தத்தம் வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்தனர். வயல்களில் நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்தன. இன்னும் பதினைந்து தினங்களில் பொங்கல் திருநாள் வருகிறது. உற்றார் உறவினருடன் உழைப்பின் பலனை அனுபவிக்க விவசாயிகள் அந்தத் திருநாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். தான் பெற்ற சேயை அன்புடன் தழுவிக் கொள்வதுபோல் அந்தக் காலை நேரத்தில் வயலில் பழுத்துச் சாய்ந்திருக்கும் நெற்கதிர்களை விவசாயிகள் ஆசையுடனும் பெருமையுடனும் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
பஜனை கோஷ்டியில் முக்கியமாகச் சிரத்தையுடன் பங்கெடுத்துக் கொண்டவர்களில் உபாத்தியாயர் ராமபத்திர அய்யரும் ஒருவர். வறுமையிலும் கஷ்டத்திலும் உழலும் அவர், மனச் சாந்தியை வேண்டியே பகவத் பஜனையில் ஈடுபட்டார் என்று சொன்னாலும் பொருந்தும். பஜனை கோஷ்டி பெருமாள் கோவிலை மறுபடி அடைந்ததும் அங்கு அர்ச்சகர் தயாராக வெண்பொங்கலும், மிளகுப் பொங்கலும் கமகமவென்று மணக்க வைத்துக்கொண்டு காத்திருந்தார். பனிக் காற்றில் ஊரைச் சுற்றி வந்தவர்களுக்குச் சுடச் சுடப் பிரசாதத்தைப் பார்த்ததும் நாக்கில் தண்ணீர் ஊறியது.
ஓய்! சாமாவய்யரே! கொஞ்சம் பின்னாடி நகருங் காணும்!” என்று சொல்லிக் கொண்டே தேசிகர் முன்னாடி வந்து தம் இரு கைகளை நீட்டி, ஆவலுடன் பொங்கலை வாங்கிச் சுவைத்தார்.
“இந்தாரும், ஸ்வாமி! உமக்கு இன்னும் கொஞ்சம் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளும்” என்று ராம பத்திரய்யர் மிளகுப் பொங்கலை தேசிகரிடம் நீட்டினார்.
“அடாடா! பெருமாள் கோவில் பிரசாதம்னா தேவாமிர்தம், சார்! எப்படி பாகம் செய்திருந்தாலும் அதற்கென்றே தனி மணமும், ருசியும் ஏற்பட்டு விடுகிறது பாருங்கள்” என்று சொல்லிக் கொண்டே சுப்பாமணி அந்த அமிர்தத்தை மேலும் ரசித்துச் சாப்பிட்டார்.
“ஆமாம், ராமபத்திரா! இந்த வருஷமாவது உன் பெண்ணுக்கு எங்கேயாவது ஒரு இடம் குதிருமா? வயசு ஏகப்பட்டது ஆகிறதே?” என்று சுப்பாமணி பொங்கலைக் குதப்பிக் கொண்டே கேட்டார்.
ராமபத்திரய்யர் கலக்கத்துடன் மூல ஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும் தாயாரையும், பெருமாளையும் பார்த்து விட்டு, “என்னைக் கேட்கிறாயே, சுப்பாமணி! அதோ பேசாமல என்னைச் சஞ்சலத்தில் ஆழ்த்தி வேடிக்கை பார்க்கும் பெருமாளைக் கேளேன் இந்த விஷயம் நமக்குப் புரியாத விஷயமாக அல்லவா இருக்கிறது?” என்றார்.
“தெய்வம் வந்து உன்னோடு நேரில் பேச வேண்டும் என்கிறாயா? போடா பைத்தியக்காரா!” என்று கூறிவிட்டு, தமக்கு முக்கியமான வேலை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார், சுப்பாமணி என்கிற சுப்பிரமணிய அய்யர்.
ராமபத்திரய்யர் யோசனையில் மூழ்கியவாறு வீட்டை அடைந்தார்.
அவர் வீட்டை அடையும்போது அவர் பெண் காமாட்சி கூடத்தில் இருக்கும் படங்களுக்குப் புஷ்பமாலை போட்டு, குத்துவிளக்கேற்றி நமஸ்கரித்துக் கொண் டிருந்தாள். அவள் மனத்திலும் அன்று காலையிலிருந்து ஏக்கமும் கவலையும் நிரம்பி இருந்தன.
ராமபத்திரய்யர் பெண்ணைச் சிறிது நேரம் கவனித்து விட்டுப் பெருமூச்சுடன் அங்கு இருக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டார். “இன்னும் பதினைந்து தினங்களில் தை பிறக்கப் போகிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள். ஆனால் கடந்த ஐந்து வருஷங்களாகத் தை மாதம் பிறந்து, கல்யாண மாசங்களெல்லாம் வெறும் மாதங் களாக மறைந்து விடுகின்றன. நம்பிக்கைக்கு இடம் இல்லாமல் அல்லவா தை மாதம் பிறக்கிறது?” என்று யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் அவர்.
”அப்பா! ‘பென்ஷன்’ வாங்க ராஜம்பேட்டைக்குப் போக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே? சாப்பிட்டு விட்டுத்தானே போகப் போகிறீர்கள்? வெயில் பொசுக்கி விடுமே!” என்று கேட்டாள் காமு.
“வெயிலைப் பார்த்தால் முடியுமா, அம்மா? முக்கியமான வேலை என்றால் போய்த் தானே ஆக வேண்டும்?” என்று கூறினார் அவர்.
சாப்பாட்டுக்கு அப்புறம் ஏதோ ஒரு தீர்மானத்துடன் காமுவின் ஜாதகத்தையும் கையுடன் எடுத்துக்கொண்டு பென்ஷன் வாங்க ராஜம்பேட்டைக்குக் கிளம்பினார், ராமபத்திரய்யர். புறப்படும்போது, “உன் அம்மா எங்கே, காணோம்? வழக்கம்போல் அப்பளக் கச்சேரிக்குக் கிளம்பி விட்டாளோ இன்றைக்கும்? அப்படியானாம் கதவைச் சாத்திக்கொண்டு ஜாக்கிரதையாக இரு, அம்மா!” என்று கூறிவிட்டுத் தம் பழைய குடையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
அப்பாவை வாசல் வரையில் வழி அனுப்பி விட்டுக் கூடத்து ஊஞ்சலில் வந்து உட்கார்ந்து கொண்டாள் காமு. பகல் வேளையானதால் தெரு நிசப்தமாக இருந்தது. வீட்டில் வேலையெல்லாம் முடிந்து விட்டது. காமுவுக்குப் என்று பொழுது போகவில்லை. என்ன செய்வது தெரியாமல் ஊஞ்சல் சங்கிலியில் சாய்ந்து கொண்டு, ‘யாரோ! இவர் யாரோ!” என்று அவளுக்குத் தெரிந்த அரைகுறைப் பாட்டைச் சற்று இரைந்து பாடிக்கொண் டிருந்தாள். அப்பொழுது வாசல் கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. காமு எழுந்து பார்ப்பதற்குள், வாயிற்படி அருகில் அவளுக்குப் புதிதாகத் தோன்றிய இளைஞன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவனை அவள் அதுவரையில் பொன்மணியில் பார்த்ததில்லை.
“ராமபத்திரய்யர் வீடு இதுதானா? அவர் வீட்டில் இருக்கிறாரா?” என்று இளைஞன் விசாரித்தான்.
காமு சிறிது தயங்கினாள். பிறகு தன்னைச் சமாளித்துக் கொண்டு, “அப்பா டவுனுக்குப் ‘பென்ஷன்’ வாங்கப் போயிருக்கிறார். இன்னும் ஒரு மணயில் திரும்பி விடுவார்” என்று கூறினாள்
“அப்படியானால் நடேச சர்மாவின் பிள்ளை சங்கரன் வந்திருந்ததாகச் சொல்லுங்கள். முடிந்தால் சாயங்காலம் வருவதாகவும் சொல்லுங்கள்” என்றான் வாலிபன்.
“அப்பா வந்து விடுவார். இருந்து பார்த்து விட்டுப் போகலாமே!” என்று சொன்னாள் காமு.
“இல்லை. முக்கியமான அலுவலாக ராஜம்பேட்டைக்குப் போக வேண்டும். சாயங்காலம் வருகிறேன்.”
“ராஜம்பேட்டைக்குத்தான் அப்பாவும் போய் இருக்கிறார். அநேகமாக நீங்கள் அவரை அங்கேயே சந்தித்தாலும் சந்திக்கலாம்” என்றாள்.
அவள் இவ்விதம் கூறினதும் சங்கரன் போய் விட்டான். நடேச சர்மாவைப் பற்றி ராமபத்திரய்யர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது காமுவின் நினைவுக்கு வந்தது.
பால்யத்தில் இருவரும் ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள். இருவரும் ஒரே மாதிரிதான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து, அப்புறம் ஹைஸ்கூலுக்குப் போய்ப் படித்தார்கள். ஆனால், நடேச சர்மா கலாசாலைப் படிப்புகள் படித்து உயர்ந்த பட்டம் பெற்றார். ராமபத்திரய்யர் கலாசாலைப் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்க முடியாமல் அவருடைய குடும்ப நிலை குறுக்கிட்டது. பள்ளிக்கூட வாத்தியார் வேலை ஏற்றதுமே வறுமையும் தானாவே அவரைத் தேடி வந்தது. அவருடைய மூத்த பெண்கள் இரண்டு பேர் கல்யாணமாகிக் குடியும் குடித்தனமுமாக வெளியூரில் இருந்தார்கள். அவர்கள் அப்பாவிடம் தங்களுக்கு இது வேண்டும், அது வேண்டும்’ என்று கேட்பதில்லை. அவர்களைப் பற்றி ராமபத்திரய்யரும் கவலைப்படுவதில்லை. காமுவின் விவாகத்தை பற்றிதான் ராமபத்திரய்யரும், அவர் மனைவி விசாலாட்சியும் கவலைப்பட்டனர்.
காமுவின் ஜாதகம் நல்ல கயோ ஜாதகம் என்று ஜோஸ்யர் மணி அடிக்கடி கூறி வந்தார். அது எவ்வளவு தூரம் உண்மை என்பது பகவானுக்குத்தான் தெரியும். அவ்வளவு யோகமுள்ள ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் நிறைந்திருந்தது. நல்ல மரத்தில் ஏற்படும் புல்லுருவியைப் போல, மனிதருடைய வாழ்ச்கைக்கும், செவ்வாய் என்கிற கிரகத்துக்கும் எவ்வளவு தூரம் சம்பந்தம் இருக்கிறது என்பது புரியாத விஷயந்தான். ஆனால், ஜனங்கள் அதை நம்பினார்கள். ராமபத்திரய்யரும் நம்பினார்.
அன்றும், ‘காமுவின் ஜாதகத்தில் குருபலன் ஏற்பட்டிருக் கிறதா? இந்த வருஷமாவது அவளுக்குக் கல்யாணம் நடக்குமா?’ என்று ஜோஸ்யர் மணியைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலினால் தாலுக்கா ஆபீஸில் ‘பென்ஷனை’ வாங்கியதும், சிறிது உட்கார்ந்து சிரம பரிகாரம் கூட செய்து கொள்ளாமல் நேராக ஜோஸ்யரின் வீட்டை அடைந்தார் ராமபத்திரய்யர்.
அவர் உள்ளே நுழைந்தபோது மணி பகல் சாப்பாட்டிற்கு அப்புறம் விச்ராந்தியாகக் கூடத்தில் உட்கார்ந்து பத்திரிகைகளுக்கு ஜோஸ்யப் பகுதிகளுக்கு ‘வேண்டிய விஷயங்களைச் சேகரித்து வைத்துக் கொண் டிருந்தார்.கூடத்தில் பெரிய அளவில் ஆஞ்சநேய ஸ்வாமியின் படமும், அம்பாளின் படமும் மாட்டி இருந்தன. கூடத்தை அணுகும்போதே தூபத்தின் சுகந்தமும், மலர்களின் நறுமணமும் அவரை ஒரு பக்தர் என்று பறைசாற்றின். ராமபத்திரய்யர் உள்ளே வந்ததும், “என்ன அய்யர்வாள், எங்கே இவ்வளவு தூரம் வெயிலில்?” என்று அவரை இன்முகத்துடன் வரவேற்றார் ஜோஸ்யர் மணி.
“சாப்பாடு எல்லாம் ஆயிற்றா?” என்று கேட்டுக் கொண்டே நெற்றியில் வழிந்தோடிய வியர்வையைத் துண்டினால் துடைத்துக் கொண்டே அவர் எதிரில் உட்கார்ந்தார் ராமபத்திரய்யர்.
“அதெல்லாம் அப்பொழுதே முடிந்து விட்டது. எங்கே இவ்வளவு தூரம்?” என்று கேட்டார் ஜோஸ்யர் மணி.
“தை பிறக்கப் போகிறதே, குழந்தைக்கு இந்த வருஷமாவது ஏதாவது வரன் குதிர்ந்து ஆக வேண்டும், அப்பா! வயதாகி விட்டது பார்” என்று சொல்லிவிட்டு, ஜாதகத்தை எடுத்து அவர் முன்பு வைத்தார் ராம பத்திரய்யர்.
ஜோஸ்யர் மணி ‘சூள்’ கொட்டினார். பிறகு தலையைச் சொறிந்து கொண்டு, இரண்டு வருஷமாகப் பார்த்துக் கொண்டிருக்கிற ஜாதகம்தானே? திரும்பத் திரும்ப என்ன இருக்கிறது பார்க்கிறதற்கு? பேசாமல் ஜாதகத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு சகுனத்தைப் பார்த்து ஏதாவது வரன் வந்தால் முடித்துவிடும்” என்று சொல்லிக் கொண்டு ஜாதகத்தை ராமபத்திரய்யரிடமே திருப்பி நீட்டினார்.
“கொஞ்சம் பார்த்துத்தான் சொல்லேன்?” என்று ராமபத்திரய்யர் கேட்கவும், “குரு பலன், யோக ஜாதகம் முதலிய எல்லா விஷயங்களையும் மீறி பகவத் சங்கல்பத்தால் விவாகம் நடைபெறுகிறது பகவானுடைய அருளினால் இந்த வருஷம் கட்டாயம் கல்யாணம் நடந்து விடும்” என்று தைரியம் கூறினார் மணி.
ராமபத்திரய்யர் கண்களில் உணர்ச்சிப் பெருக்கினால் நீர் நிறைந்தது. ‘ஆமாம். ஜாதகமும், ஜோஸ்யமும் மனிதனா கவே மனத்தைக் குழப்பிக் கொள்ளும் விஷயங்கள் தாமே? இவைகளை மீறக் கூடிய சக்தி-அக்ஞை ஒன்று பகவத் அனுக்ரகம் என்று இருக்கிறதல்லவா? அது ஏற்பட வேண்டும். காமுவுக்கு என்று புருஷன் இனிமேலா பிறக்கப் போகிறான்?’ என்று மனத்துக்குள் எண்ணமிட்டவர், “அப்படியானால் தோஷ ஜாதகம்தான் பொருந்தும் என்று சொல்லு” என்று ஹீனஸ்வரத்தில் திரும்பவும் நப்பாசை விடாமல் மணியைப் பார்த்துக் கேட்டார்.
“ஆமாம். ஜாதகத்தைப் பொறுத்த வரையில் அங்காரக தோஷம் பரிபூரணமாக இருக்கிறது, சுத்த ஜாதகம் எதுவும் இதோடு பொருந்தாது” என்றார் மணி.
அப்படி அங்காரக தோஷமுள்ள ஜாதகம் ஏதாவது கிடைத்தாலும் வரதட்சிணை தோஷம் அதற்குக் குறுக்கே நின்றது. தவிர கலாசாலைப் படிப்போ, சங்கீதமோ, நடனமோ ஒன்றும் தெரியாத காமுவை ஏற்பதே ஒரு தோஷம் என்று சிலர் கருதினார்கள். காமு இப்படி இருபது வயசு வரையில் கல்யாணம் ஆகாமல் பெற்றவர்களுக்குக் கவலையை ஏற்படுத்தி வந்தாள்.
சோர்ந்த முகத்துடனும், கவலை நிரம்பிய உள்ளத் துடனும் ராமபத்திரய்யர் ஜோஸ்யர் மணியிடம் விடை பெற்றுக் கொண்டு பொன்மணிக்குக் கிளம்பினார்.
களைத்துப் போய் அவர் வீட்டினுள் நுழைந்ததும், “அப்பா” என்று காமு ஏதோ சொல்ல வந்தாள்.
“இருக்கட்டும், அம்மா. முதலில் கொஞ்சம் மோர் தீர்த்தம் கொண்டுவா. ரொம்பவும் களைப்பாக இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே ஊஞ்சலில் ஆயாசத்துடன் சாய்ந்து கொண்டார் ராமபத்திரய்யர்.
மோரைக் கொண்டு வந்து வைத்து விட்டு, தகப்பனார் தன்னால் படும் கவலையையும், கஷ்டத்தையும் நினைத்து வருந்திக் சொண்டே நின்றாள் காமு. படுத்திருந்தவர் கண்ணை மூடிக் கொண்டே இருப்பதைப் பார்த்து, “அப்பா! மோர் கேட்டீர்களே, கொண்டு வந்து வைத்திருக்கிறேன். சாப்பிடுங்களேன்!” என்று கூப்பிட்டாள் காமு.
ராமபத்திரய்யர் மோர் தீர்த்தத்தைப் பருகி விட்டு, களைப்பு நீங்கப் பட்டவராய், “என்னவோ சொல்ல வந்தாயே, அம்மா! என்ன விஷயம்? தபால் ஏதாவது வந்ததா?” என்று கேட்டார்.
“யாரோ நடேச சர்மாவின் பிள்ளையாம்; சங்கரன் என்று சொன்னார். உங்களைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். திரும்பவும் வருவதாகச் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்.’
”ஓஹோ! இருந்துவிட்டுப் போகச் சொல்லுகிறது தானே? அவன் அப்பாவும் நானும் பால்யத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்று அடிக்கடி சொல்லி இருக்கிறேனே?”
“அவரை இருந்து விட்டுத்தான் போகச் சொன்னேன். ஏதோ அவசர வேலை இருப்பதாகவும், மறுபடியும் கட்டாயம் வருவதாகவும் சொல்லி விட்டுப் போனார்” என்றாள் காமு.
“இந்தப் பையனை நான் பத்து வருஷங்களுக்கு முன்பு பார்த்தது. பையன் ரொம்பவும் கெட்டிக்காரன். இப்போது அவனுக்குக் கல்யாணம் பண்ணுகிற வயசு. ஒருவேளை கல்யாணம் ஆகிவிட்டதோ என்னவோ!” என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார் அவர். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவர் போல், “அம்மா எங்கே போய் இருக்கிறாள்?” என்று கேட்டார்.
“கோபு அகத்திற்கு அப்பளம் இடுவதற்குப் போய் இருக்கிறாள், அப்பா. ஏன் கேட்கிறீர்கள்?”
“அந்தப் பிள்ளை வந்தால் ஏதாவது ‘டிபன்’ தயாரிக்க வேண்டாமா? தினம் தினம் அப்பளம் இடுவதற்கு இவள் கிளம்பி விடுகிறாளே?” என்று கோபித்துக் கொண்டார் அவர்.
“நான் செய்து விடுகிறேன் அப்பா. அம்மா வந்துதான் அதைச் செய்ய வேண்டுமா என்ன? இது ஒரு கஷ்டமும் இல்லை” என்று கூறிவிட்டுக் காமு சமையலறைக்குச் சென்றாள்.
ராமபத்திரய்யர் வெயிலில் நடந்து வந்த களைப்பால் ஊஞ்சலில் படுத்துக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தார். சமையலறையில் இருந்த காமு அவசர அவசரமாக இட்டிலியும், சட்டினியும் செய்வதில் முனைந் திருந்தாள். ஆமை நகருவதுபோல் அவள் தாயார் விசாலாட்சி செய்யும் வேலைக்கும், காமு பரபரவென்று செய்யும் வேலைக்கும் மிகவும் வித்தியாசம் இருந்தது. அடுப்பில் இட்டிலிப் பாத்திரத்தை வைத்துவிட்டு காமு கொல்லையிலிருந்து பறித்து வந்திருந்த கனகாம்பர மலர்களைச் செண்டாகக் கட்டிக் கொண்டிருந்தாள். நொடிப் பொழுதில் பூமாலையும் தொடுத்தாயிற்று. காலையில் வந்து போனவர் திரும்பவும் வதவதற்குள் தலை பின்னிப் பூவைச் சூட்டிக் கொள்ள. வேண்டும் என்கிற ஆசையும் அவளுக்கு ஏற்பட்டது. கும்மட்டி அடுப்பில் காபிக்காக தண்ணீர் வைத்து விட்டுக் காமரா அரைக்குள் சென்று தலை பின்னிக் கொள்ள ஆரம்பித்தாள்.
காமு தலை பின்னிக் கொண்டு வெளியே வருவதும் அவளுடைய தாயார் விசாலாட்சி அப்பளக் கச்சேரியிலிருந்து திரும்பி வருவதும் சரியாக இருந்தது. கூடத்தில் ஊஞ்சலில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் தன் கணவரைப் பார்த்ததும் அவளுக்கு ஆத்திரமும், கோபமும் ஏற்பட்டன. விடு விடு என்று சமையலறைக்குச் சென்று குடத்திலிருந்து ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் சாப்பிட்டு விட்டு, ஆயாசத்துடன் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்தாள்.
“ஏண்டி இதற்குள் அடுப்பு மூட்டி விட்டாய்? இப்போ என்ன அவசரம்?” என்று இரைந்து கேட்டாள் விசாலாட்சி. “யாரோ அப்பாவுக்குத் தெரிந்தவர்கள் வருகிறார் கலாம் அம்மா!” என்று கூறிவிட்டு காமு அடுப்பு வேலையைக் கவனிக்க முனைந்தாள்.
“ஆமாம். வேறே வேலை என்ன உன் அப்பாவுக்கு? தை பிறக்கப் போகிறது. வழி பிறந்தால் தான் தேவலையே! கன்யாகுமரி மாதிரி இன்னும் எத்தனை நாளைக்கு நிற்கப் போறியோ?”
காமுவுக்குத் தாயாரின் கடுமையான வார்த்தைகள் புதியவையல்ல. தினம் பொழுது விடிந்து பொழுது போகும் வரையில் ஓயாமல் விசாலாட்சி ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பாள். மாறி மாறிக் கணவனையும் பெண்ணையும் ஏதாவது சொல்லாமல் அவளால் இருக்க முடியாது.
ஊஞ்சலில் தூங்கிக் கொண்டிருந்த ராமபத்திரய்யர். விழித்துக் கொண்டார். சமையலறையில் தாய்க்கும் மகளுக்கும் நடந்த பேச்சைக் கவனித்தார். வயசு வந்த பெண்ணிடம். வர வர விசாலாட்சி மனம் நோகும்படி நடந்து கொள்வது அவருக்கு மிக வருத்தத்தை அளித்தது. காமுவுக்குச் சிறு வயதிலிருந்த கலகலப்பான சுபாவமும், குறும்புத்தனமும் மறைந்து போய் எங்கிருந்தோ அடக்கமும் பதவிசும் அவளைத் தேடி வந்து விட்டிருப்பதை அவர் உணர்ந்திருந்தார். அவள் யாருடனும் அதிகம் பேசாமலும்’, கலகலப்பாகப் பழகாமலும், வீட்டை விட்டு அதிகமாக வெளியில் செல்லாமலும் ஒருவிதக் கவலையுடன் இருந்து வருவது அவருக்குத் தெரியும்.
ஊஞ்சலை விட்டு எழுந்தவர் கோபத்துடன் சமையலறைப் பக்கம் சென்று, “ஆமாம், வர வர உன் தொந்தரவு பெரிசாக இருக்கிறதே! பேசாமல் இருக்க மாட்டாயா நீ? குழந்தையை சதா ஏதாவது துணப்பிக் கொண்டே இருக்கிறாயே?” என்று மனைவியைப் பார்த்து இரைந்து விட்டுக் கொல்லைப் பக்கம் சென்றார். கிணற்றி லிருந்து இரண்டு வாளி தண்ணீர் இறைத்து முகம், கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு, மாட்டுக் கொட்டிலில் அவரையே பார்த்துக்கொண்டு நிற்கும் செவிலிப் பசுவுக்குப் புல்லை எடுத்துப் போட்டார்.
அப்போது காமு கூடத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்து வரவிருக்கும் விருந்தாளியை வரவேற்கத் தயார் செய்து கொண்டு இருந்தாள். அவள் பெருக்கி முடித்த சமயம் வாசற் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஓடிப்போய் கதவைத் திறந்தாள் காமு. சங்கரன் அவளைப் பார்த்து, “அப்பா வந்து விட்டாரா?” என்று கேட்டுக் கொண்டே நுழைந்தான்.
“வந்து விட்டார். உட்காருங்கள்!’ என்று கூறிவிட்டு, அப்பாவைக் கூப்பிட காமு கொல்லைப் பக்கம் சென்றாள்.
சிறிது நேரத்துக் கெல்லாம் ராமபத்திரய்யரும், சங்கரனும் நெடு நாள் பழகியவர்கள் போல் பேச ஆரம்பித் தார்கள். “இந்த ஊருக்கு வந்தும் நீ நேரே நம் வீட்டிற்கு வராமல் எங்கேயோ போய் இருக்கிறாயே! உன் அப்பாவாக இருந்தால் அப்படிச் செய்ய மாட்டான்” என்று வெகு உரிமையுடன் கடிந்து கொண்டார் ராமபத்திரய்யர்.
“வந்திருப்பேன் மாமா. பல வேலைகளை வைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். நினைத்தபோது சாப்பிடுகிறேன். இதற்கெல்லாம் சௌக்கியமான இடம் ஹோட்டல் தான் என்று தீர்மானித்து ராஜம்பேட்டையில் ஹோட்டலில் தங்கியிருக்கிறேன்” என்று மன்னிப்புக் கேட்கும் தோரணையில் வினயமாகப் பேசினான் சங்கரன்.
இதற்குள் காமு இரண்டு தட்டுகளில் இட்டிலியும், டம்ளர்களில் காபியும் கொண்டு வந்து வைத்தாள். அவளைப் பார்த்து ராமபத்திரய்யர், “காமு! இங்கே வந்திருப்பது யார் என்று உன் அம்மாவுக்குத் தெரியாது. யாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள், போய் அவளை அனுப்பு” என்று சொன்னதும் காமு தலையை அசைத்து விட்டு உள்ளே சென்றாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் விசாலாட்சி புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்டு வந்து தூண் ஓரமாக நின்றாள். கொஞ்சம் யோசனை செய்து விட்டு, “யார் இது, தெரியலியே?” என்று ராமபத்திரய்யரைப் பார்த்துக் கேட்டாள்.
“நடேசன் பிள்ளை. ஜாடையைப் பார்த்தால் தெரியலையோ?”
“ஊரிலே எல்லாரும் சௌக்கியமா அப்பா? உன் தமக்கை இப்போது எங்கே இருக்கிறாள்? உன் அத்திம்பேர் சரிவர நடந்து கொள்கிறாரா? உன்னோடு பிறந்தவா எத்தனை பேர்?” என்று கேள்விமாரியாகக் கேட்க ஆரம்பித்தாள் விசாலாட்சி.
“மாமிக்குக் குடும்ப விஷயம் பூராவும் தெரியும்போல் இருக்கே மாமா!……அத்திம்பேர் இனிமேலாவது சரியாக இருக்கவாவது? அவர் ரங்கூனிலேயே அந்தப் பர்மாக் காரியோடு தங்கி விட்டார். மாசா மாசம் அக்காவுக்கும், குழந்தைகளுக்கும் இருநூறு ரூபாய் அனுப்புகிறார். என் தமையன் ஒருவன் மேல் படிப்புக்காக அமெரிக்கா போய் இருக்கிறான். அவனுக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. அங்கே வெள்ளைக்காரியுடன் நிரந்தரமாகத் தங்கிவிட்டான். மன்னியையும், குழந்தையையும் நாங்கள் தான் வைத்துக் காப்பாற்றுகிறோம். என்னவோ அப்பா நிறைய சம்பாதிக்கிறாரே தவிர, குடும்பத்தில் சுகத்தைக் காணோம்!” என்று சங்கரன் அலுத்துக் கொண்டான்.
“சம்சாரம் என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும். சுகமும், துக்கமும் சம்சாரத்தின் இரு சக்கரங்கள். இரண்டையும் மாறி மாறி அனுபவித்துத் தான் ஆக வேண்டும் அப்பா! தெரியாமலா பெரியவர்கள் சம்சாரத்தைச் சாகரத்துக்கு ஒப்பிட்டார்கள்? சமுத்திரத்தில் முத்தும் பவழங்களும் விளைவது போலவே பயங்கரமான ஜந்துக்களும் இருக்கின்றன அல்லவா?”
ராமபத்திரய்யரின் ஆழ்ந்த கருத்தமைந்த சொற்களைப் பணிவுடன் கேட்டுக் கொண்டிருந்தான் சங்கரன். “உனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே?” என்று சங்கரனைப் பார்த்து விசாலாட்சி கேட்டதும், “இல்லை மாமி!” என்று பதில் அளித்தான் சங்கரன்.
“வயசாகிறது போல் இருக்கே. பெண்ணுக்குக் கல்யாணம் ஆகிறதென்றால் தான் படாத பாடும் பட வேண்டி இருக்கிறது, இந்தக் காலத்தில்!” என்று அலுத்துக் கொண்டாள் அவள்.
அவளுக்கு ஏற்பட்டிருந்த சலிப்பின் காரணத்தை ஒருவாறு புரிந்து கொண்டான் சங்கரன். சற்று முன்பு சிற்றுண்டி அளித்த காமுவுக்கு இன்னும் கல்யாணம் ஆக வில்லை என்பதும் தெரிந்தது. தள தளவென்று வாழைக் குருத்து போல் மூக்கும் விழியுமாக இருக்கும் அவளுக்கு என்ன குறை என்பதுதான் சங்கரனுக்குப் புரியவில்லை.
– தொடரும்…
– ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது.
– பனித்துளி (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1996, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.