(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10
9 – சர்மா வீட்டில் சம்பகம்
வருஷப் பிறப்புப் பண்டிகை நெருங்கி வந்து கொண் டிருந்தது. சொல்லி வைத்தாற் போல் புடவைக்காரன் ஒரு மூட்டைப் புடவையோடு சர்மாவின் வீட்டிற்கே வந்திருந் தான். அடுக்கடுக்காகப் பீரோவிலும், பெட்டியிலும் பட்டுப் புடவைகள் மக்கிப் போய்க் கொண்டிருக்கும் போதே மேலும் மேலும் வாங்கிப் பெட்டியில் அடைத்து வைப்பதில் பெண்களுக்கு ஒரு திருப்தி. கோவிலிலோ, பெண்கள் சங்கத்திலோ, கடைத்தெருவிலேர் தெரிந்தவர்கள் பார்த்து “பண்டிகைக்கு என்ன புடவை வாங்கினாய்?” என்று கேட்டால், “மாம்பழக்கலர், தாமரைக்கலர், ‘பட்டன் சாட்டர்’ மாங்காய்க் கரை, விலை நூறு ரூபாய், நூற்றைம்பது ரூபாய்” என்றெல்லாம் பெருமையாகச் சொல்ல வேண்டாமா? அதற்காகவே மேலும் மேலும் வாங்கிக் கொண்டிருந்தார்கள். புடவைக்காரனிடம் புடவைகளை வாங்கிக் கொண்டு சர்மாவிடம் சொல்லி விட்டால், பணத்தை அவர் கொடுத்து விடுவார்.
மீனாட்சி அம்மாள் புது நாட்டுப் பெண்ணுக்கு உயர்ந்த விலையில் புடவை வாங்கினாள். நாலு பேருக்கு நடுவில் பெருமையாக இருக்க வேண்டாமா? சம்பந்திகளுக்கு அவள் எந்த விதத்திலும் அந்தஸ்தில் குறைந்தவள் இல்லை என்பதைக் காட்டவே சாண் அகல ஜரிகைக் கரைப் போட்ட புடவையை வாங்கி இருந்தாள். இல்லாவிடில் பைஜாமாவும், ஜிப்பாவும் சதா அணிந்து ஊர் சுற்றும் பெண்ணுக்கு இவ்வளவு விலை உயர்ந்த புடவை எதற்கு?
ருக்மிணி அவளுக்கு வேண்டியதைப் பொறுக்கி எடுத்துக் கொண்டாள். மதிப்பாக நாலு பேர் எதிரில், “அடுத்த மாசம் அவர் பணம் அனுப்பியதும் கொடுத்து விடுகிறேன் என்று புடவைக்காரனிடம் சொல்லிக் கொண்டாள். அவள் வாங்கும் புடவைகளுக்கும் சர்மாதான் பணம் கொடுத்து வந்தார். ஆனால் ஒவ்வொரு தடவையும் அவள் அப்படித் தான் சொல்லுவது வழக்கமாக இருந்தது.
புடவை அமர்க்களத்தில் சம்பகம் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.பகட்டான சேலைகளையும், வித விதமான அலங்காரங்களையும் அவள் விட்டு வெகு காலம் ஆயிற்று. சாதாரண நூல் புடவையையும், பசேல் என்று மஞ்சள் பூசி நெற்றிக்கு இட்டுக் கொள் வதையுமே பாக்கிய மாகக் கருதுபவள் அவள்.
புடவை பேரம் நடந்து கொண்டிருந்த போது சங்கரன் வராந்தாவில் உட்கார்ந்து கொண்டிருந்தான். கணவன் வீட்டில் இருப்பதையும் லட்சியம் பண்ணாமல் நீலா பிறந்த வீட்டிற்குப் போய் இருந்தாள். பகல் சாப்பாடு மாமியார் வீட்டில் இருந்தால், இடைவேளை சிற்றுண்டி பிறந்த வீட்டில் என்று வைத்துக் கொள்வது அவள் வழக்கம். பிறகு இஷ்டமிருந்தால் மாலையில் வந்து கணவனைத் தன்னுடன் வெளியே உலாவ அழைத்துப் போவாள்; இல்லாவிடில் இரவு சாப்பாட்டையும் பிறந்த வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வந்துவிடுவாள். ஊதா வர்ணத்தில் நீலாவுக்காக வாங்கியிருந்த புடவையைக் கொண்டு போய்ச் சங்கரனிடம் காண்பித்தாள் மீனாட்சி அம்மாள்.
“ஐந்து கஜம்! நூற்றைம்பது ரூபாய்!” என்று பெருமையுடன் சொல்லிவிட்டு, “உனக்குக் கலர் பிடிக் கிறதாடா?” என்று கேட்டாள்.
“எனக்குப் பிடித்து என்ன ஆகவேண்டும்? நானா கட்டிக்கொள்ளப் போகிறேன்? அதுவும் உன் நாட்டுப் பெண் சதா ‘பைஜாமா’ போட்டுக் கொண்டே திரிகிறாளே? அவளுக்கு எதற்குப் புடவை?” என்று கேட்டான் சங்கரன்.
“அது எப்படியாவது இருக்கட்டுமடா! நாம் செய்வதை நாம் செய்தால்தான் நன்றாக இருக்கும். எத்தனையோ புடவைகள் அவள் பிறந்தகத்தில் வாங்கியிருக்கிறார்கள். நாம் ஒன்றுகூட வாங்காமல் இருந்தால் நன்றாக இருக்குமா?” என்று கேட்டாள் மீனாட்சி.
“ஊருக்காகப் பால் குடிப்பதா? உடம்புக்காகப் பால் குடிப்பதா?” என்று சொல்வார்கள். இருதயப் பூர்வமான அன்புடன் புடவையை நீலாவுக்கு வாங்கி அளிக்கவில்லை மீனாட்சி. நாலுபேர் மெச்சிப் பேசுவதற்குத்தான் அந்தப் புடவையை வாங்கி இருக்கிறாள்.
வியாபாரம் முடிந்ததும் புடவைக்காரன் மூட்டையைக் கட்டிக் கொண்டு போய் விட்டான். அவன் போன பிறகு தான் இவர்கள் சம்பகத்துக்கு ஒன்றுமே வாங்கவில்லை என்று சர்மாவுக்கு நினைவு வந்தது. அடுப்பங்கரையில் வேலையாக இருந்த சம்பகத்தைத் தேடிப் போனார் சர்மா. “ஏனம்மா! புடவைக்காரன் வந்திருந்தானே, நீ ஒன்றும் வாங்கிக் கொள்ளவில்லையா? அந்தப் பக்கம் வரவே இல்லையே நீ?” என்று கேட்டார் சம்பகத்தை இரக்கமாகப் பார்த்து.
“எனக்கு இப்போது எதற்குப் புடவை? வேண்டியது இருக்கிறதே” என்று பதில் கூறிய நாட்டுப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும், “எனக்குப் பொன்னும், புடவையும் வேண்டியதுதானா? யாருக்காக நான் அவைகளை அணிந்து உலாவ வேண்டும்? கணவனால் ஒதுக்கப்பட்டவளுக்கு ஆடையும், அலங்காரமும் வேண்டுமா?” என்று கேட்பது போல் இருந்தது அந்த முக பாவம்.
சர்மா நிலைப்படியைக் கையால் தாங்கிக் கொண்டு நின்றார். பிறகு மனத்தை அ.ழுத்தும் கஷ்டத்துடன் அங்கிருந்து ஹாலுக்குச் சென்று விட்டார்.
தகப்பனாருக்கும், மன்னிக்கும் நடந்த பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான் சங்கரன். வீட்டில் பண்டிகை அன்று எல்லோரும் புத்தாடை உடுத்திக் குதூகலமாக வளைய வரும்போது, அவள் மட்டும் பழைய ஆடையுடன் நிற்கலாமா என்று தோன்றியது அவனுக்கு. அன்று மாலையில் வெளியே சென்று திரும்பிய சங்கரன் கையில் ஒரு காகிதப் பொட்டலத்துடன் வந்தான்.
நேராக சமையற்கட்டுக்குப் போய் சம்பகத்தினிடம் பொட்டலத்தைக் கொடுத்தான். சம்பகம் ஒன்றும் தெரியாமல் விழித்தாள்! “என்ன இது?” என்று தடுமாறிக் கொண்டே கேட்டாள். பொட்டலத்துக்குள் கறுத்த பச்சையில் மஞ்சள் கோடு போட்ட நூல் புடவை ஒன்று இருந்தது. “உங்களுக்காகத்தான் வாங்கி வந்தேன். நீங்கள் பண்டிகைக்காக ஒன்றுமே வாங்கிக் கொள்ளவில்லையே!” என்றான் சங்கரன்,
‘விசுக் விசுக்’கென்று பட்டுப் புடவை உராய ருக்மிணி அந்தப் பக்கம் வந்தாள். இரண்டு படி தவலை போல் முகத்தை ‘உப்’பென்று வைத்துக் கொண்டு, “என்னடா! மன்னியோடு ரகசியம் பேசுகிறாய்? யாருக்குப் புடவை வாங்கி இருக்கிறாய், நீலாவுக்கா? அம்மாதான் நூற்றைம்பது ரூபாய் கொட்டி வாங்கி இருக்கிறாளே? நீ வேறு வாங்கினாயா என்ன?” என்று சட்டசபையில் அடுக்கடுக்காக உதிரும் கேள்விகளைப் போல் கேட்டு அவனைத் திணற வைத்தாள்.
“நீலாவுக்கு இல்லை, மன்னிக்குத்தான் வாங்கினேன்! அவள்தான் பட்டுப் புடவையே உடுத்துவது இல்லையே!”
உப்பி இருந்த ருக்மிணியின் முகம் சப்பென்று வாடியது. “சம்பகத்துக்குச் சங்கரன் புடவை வாங்கிக் கொடுக்கவாவது வயசு வந்த மைத்துனன் மன்னிக்குப் புடவை வாங்கிக் கொடுக்க என்ன கரிசனம் அவனுக்கு? பூனை மாதிரி இருந்து கொண்டு இந்தச் சம்பகம் என்ன ஆட்டம் ஆட்டி வைக்கிறாள் மாமனாரையும், சங்கரனையும்! அவனானால் வீட்டை, வாசலை விட்டு விட்டு எங்கோ கண் காணாத சீமையில் போய்க் கிடக்கிறான்! இந்தப் பீடை. அவன் பங்கையும் சேர்த்துச் சாப்பிட்டு விட்டு நீலி வேஷம் போடுகிறாளே?”
பஞ்சுப் பொதியில் நெருப்பு பிடித்தது போல் புடவை விஷயம் வீடு பூராவும் ஒரு நொடியில் பரவியது. “தலைக்குத் தலை நாட்டாண்மையா?” என்று கறுவிக் கொண்டு மீனாட்சி அம்மாள் ஆத்திரத்தோடு வந்தாள் புடவையைப் பார்க்க! ‘த்சூ’ என்று சூள் கொட்டிவிட்டு, வழக்கத்தை விடச் சீக்கிரமாகவே நீலா தன் மாடி அறைக்குச் சென்று விட்டாள்.
“சங்கரா! நீ புத்திசாலி அப்பா. வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை மனம் நோக வைக்காமல் சுமாரான விலையிலாவது புடவை வாங்கி வந்தாயே?” என்று சர்மா பிள்ளையிடம் கூறிச் சந்தோஷப்பட்டுக் கொண்டார். ஆனால், மாடி அறையில் புயல் அடிக்கப் போகிறது என்று அவருக்குத் தெரியுமா என்ன?
இரவு சாப்பாட்டுக்கு அப்புறம் அம்மா வாங்கி இருந்த புடவையுடன் மாடி அறைக்குச் சென்றான் சங்கரன். நீல விளக்கொளியில் பிரித்த ஆங்கிலப் புஸ்தகம் ஒன்றை மார்பின் மீது வைத்துக் கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் நீலா. விவாகமான ஒன்றரை வருஷங்களுக்கு அப்புறம், என்றுமில்லாத ஆசையுடன், காதலுடன் தன் மனைவியை நெருங்கி அவள் நெற்றியில் அன்பாகக் கை வைத்து அவளையே உற்றுப் பார்த்தான் சங்கரன். அவன் கரஸ்பரிசம் பட்டதும் நீலா விழித்துக் கொண்டாள். எரியும் நெருப்பிலிருந்து சிதறி விழுந்த ரண்டு நெருப்புத் துண்டுகளைப் போல் அவள் கண்கள் கதகத வென்று கோபத்தில் பிரகாசித்தன. அவன் கையை உதறிவிட்டுச் சடக்கென் று. படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். “என்னை நீங்கள் ஒன்றும் தொட வேண்டாம்!” என வெடுக்கென்று கூறிவிட்டு, ஜன்னல் ஓரம் போய் நின்றாள் நீலா.
“ஏன் இந்த மாதிரி மகாராணி உத்தரவு போடு கிறாளோ?” என்று நாடக பாணியில் கேட்டுச் சிரித்தான் சங்கரன்.
“நான் ராணியுமில்லை. நீங்கள் ராஜாவும் இல்லை நான் ஒரு ஏமாந்தவள். நீங்கள் ஏமாற்றியவர்!” என்று அழுத்தமாகக் கூறிவிட்டு; மறுபடியும் தகிக்கும் பார்வையில் அவனைச் சுட்டெரித்துவிடுவது போல் பார்த்தாள்.
“என்ன சொல்கிறாய், நீலா? கொஞ்சம் புரியும்படி தான் பேசேன்! அம்மா உனக்குப் புடவை வாங்கி இருக்கிறாளே? அதைப் பார்க்கவே இல்லையே நீ?” என்று சொல்லிப் புடவையை எடுத்து நீலா மேல் மடித்து வைத்து அழகு பார்த்தான் சங்கரன். தகதகவென்று பிரகாசிக்கும் ஜரிகைக் கரையுடன் ‘அந்தப் புடவை நீலாவுக்கு எடுப்பாக இருந்தது.
“அம்மாதான் எனக்குப் புடவை வாங்கவேண்டும்! நீங்கள் உங்கள் மன்னிக்குப் புடவை வாங்குங்கள்! அப்படித் தான் போல் இருக்கிறது உங்கள் வீட்டு நியாயம்!”
பாவம்! சம்பகம் துர் அதிர்ஷ்டம் பிடித்தவள். பிறந்த சில வருஷங்களில் தாயை இழந்தாள். அதன் பிறகு அன்புடன் வளர்த்த தந்தையை இழந்தாள். அதன் பிறகு கணவனால் கைவிடப்பட்டாள். அவளிடம் நியாயமாக அன்பு செலுத்த வேண்டியவர்கள் அவளை மறந்து விட்டார்கள். சங்கரன் அவளிடம் காட்டும் அன்பு நியாய மானது இல்லையா? ‘அன்பே சிவம்’ என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அன்பு அழியாதது, நிலையானது, பவித்திரமானது என்று பேசுகிறார்கள்.
சங்கரன் சம்பகத்திடம் காட்டும் அன்புக்கு அவன் குடும்பத்தார் களங்கம் ஏற்படுத்த முயலுகிறார்கள். படித்தவள் என்று பெயர் வாங்கிய மனைவி அவன் அன்புக்கு மாசு ஏற்படுத்துகிறாள். நாளைக்கு ஊரார் ஏதாவது சொல்லப் பார்ப்பார்கள்.
சங்கரன் சிறிதுநேரம் செய்வது இன்னதென்று அறியாமல் நின்றான். காமுவைப் போய் அடிக்கடி பார்த்து வந்தாலும் இதே பேச்சுத்தான் ஏற்படப்போகிறது. கூடப் பிறந்த சகோ தரியிடம் செலுத்தும் அன்பைப் போல் சம்பகத்திடம் காட்டும் அன்புக்கே களங்கம் ஏற்படுத்தும் உலகம், காமுவிடம் தான் காட்டும் அன்பை என்னவென்று மதிப்பிடும்? கல்யாணமாகாத ஒரு இளம் பெண்ணுடன் ஒரு இளைஞன், அவன் விவாகம் ஆனவனாக இருந்தாலும், பழகுவதை உலகம் எப்படி எடைபோடும்?
வானத்தில் நட்சத்திரங்கள் மின்னின, நீலவானில் பதித்த வைரங்கள் போல் சுடர் விட்டன அவை. இயற்கை அன்னை ஏற்றிய ஆயிரமாயிரம் தீபங்கள் போல் இருந்தன. சங்கரன் வானத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். அருகில் காளி ஸ்வரூபமாக நிற்கும்மனைவியைப் பார்த்தான். சதா கணவனை நினைத்து உருகும் மன்னி சம்பகத்தையும் நினைத்தான். தன்னால் ஏமாற்றப்பட்ட காமுவின் களை நிறைந்த மோகன உருவத்தை நினைத்துக் கொண்டான். அவன் கையிலிருந்து உதறிக் தள்ளிய பட்டுப் புடவை மடிப்புக் கலைந்து கீழே விழுந்து கிடந்தது.
கீழே சம்பகத்துக்காக அவன் வாங்கி வந்த புடவை மடிப்புக் கலையாமல் சுவாமி. அலமாரியின்கீழ் வைக்கப் பட்டிருந்தது. கொதிக்கும் உள்ளத்திலிருந்து பொங்கி வரும் துக்கத்தை அடக்க முடியாமல் சம்பகத்தின் கண்கள் இரண்டு துளி கண்ணீரைச் சிந்தின. புதுப் புடவையின் மீது, அதுவும் கரும்பச்சைப் புடவை மீது அவை முத்துப் போல் உருண்டு நின்றன.
இவ்வளவு பேச்சுக்களையும் சகித்துக் கொண்டு அவளுக்கு அந்த வீட்டில் வாழ்வதற்கு என்ன காத்துக் கிடக்கிறது? என்றாவது அவள் கணவன் தாய் நாடு திரும்பி வருவான். சம்பகத்தின் வரண்டு போன வாழ்க்கை பசுமை பெறும் என்னும் நம்பிக்கை தான் காரணம். கணவன் வரவை எதிர்பார்த்து வாடும் மங்கையும், கணவன் தயவின் றித் தன்னால் வாழ முடியும் என்கிற பெண்ணும் ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள். காதலும், அன்பும் கொண்டு கணவ னுடன் வாழ வேண்டியவள் அவனை உதறித் தள்ளுகிறாள். காதலும், அன்பும் கிட்டாதா என்று ஏங்கி மடிகிறாள் சம்பகம். அதற்காகவே இவ்வளவு பேர்களுடைய கொடுமை களையும் அவள் சகித்து வந்தாள். கொடுமைகளைச் சகிக்க லாம், நிஷ்டூரங்களைப் பொறுக்கலாம். அலட்சியங்களைச் சமாளித்து விடலாம். ஆனால், பெண்மைக்கே மாசு கற்பிப் பதைக் சகிக்க முடியுமா? அதுவும் படித்த ஒரு பெண்ணாலேயே அவ்விதம் சந்தேகிக்கப்படுமபோது சம்பகத்தின் மனம், நொந்த புண்ணாக மாறியது. ஒவ்வொரு சொல்லும் ஊசி போல் அவள் உடலெங்கும் குத்தியது.
நீலா அவனைச் சந்தேகிக்கிறாள். சங்கரனின் தூய அன்பையும் குரோதக் கண்கொண்டு பார்க்கலாம். நாளடைவில் இந்த அற்ப சந்தேகங்கள் விசுவரூபம் எடுத்துவிடும். பிறகு வெறும் வாயை மெல்லும் மாமியாருக்கு ஒரு பிடி அவல் அகப்பட்ட மாதிரிதான். நாத்தனார் வேறு அதற்குக் கண், காது, மூக்கு வைத்து விடுவாள். இன்னொரு தடவை சங்கரன் அவளிடம் பேசவரும் போதோ, அல்லது அவளாகவோ அவனிடம் நிலைமையைக் கூறிவிட வேண்டியது. இல்லாவிடில் எவ்வளவு கஷ்டங்கள் இருந் தாலும் பிறந்த வீட்டுக்காவது சென்று இருந்து விடுவது. அதுவும் சௌகரியப்படாவிடில் நர்ஸ் உத்தியோகத்துக்கோ, உபாத்தியாயினி தொழிலுக்கோ படித்து, வேலைக்குப் போய் விடவேண்டும்.
சம்பகம் துயரத்துடன் சுவாமி அலமாரிக்கு அருகிலேயே படுத்திருந்தாள். புடவை வேண்டுமென்று அவள் யாரிட மாவது சொன்ன ளா, என்ன? நேரம் போவது தெரியாமல் அவள் தீவிரமாக யோசித்தாள். பெண்ணின் வாழ்வு சமூகத் தில் இன்றும் அவலமாகத்தான் இருக்கிறது. சகலமும் பொருந்தி இருந்தால் தான் அவள் மதிப்புடன் இருக்க முடியும். சம்பகமும் மதிப்புடன் வாழவேண்டும். சந்தேகம் தோன்ற ஆரம்பித்த பின்பு மதிப்பும், மரியாதையும் எதிர்பார்க்க முடியுமா? சாதாரணமாக ஏதோ பேசிக் கொண்டி ருந்ததற்கே அன்று நீலா ஏதேதோ பேசினாள் இன்று ஆசை யு டனும், அனுதாபத்துடனும் சங்கரன் யாரும் கூறாம லேயே புடவை வாங்கி வந்திருக்கிறான். நீலா இதற்குப் பேசாமல் இருந்து விடுவாளா? ஏற்கெனவே, அவள் பிறந்த வீட்டில் பெண்ணைச் சரியாகக் கவனிக்கவில்லை. சங்கரன் மனைவியிடம் பிரியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று புகார் செய்கிறார்களாம். “கடவுளே! இவ்வளவு பெரிய உலகத்தைச் சிருஷ்டித்து அதில் எனக்குப் புகலிடம் இல்லா மல் செய்து விட்டாயே! என்னை அன்புடன் ‘வா!’ என்று அழைப்பவர்கள் இல்லாமல் செய்து விட்டாயே!” என்று சம்பகம் மனப் வெடிக்கப் புலம்பினாள்.
கண்களில் அருவி போல் கண்ணீர் பெருகியது. தாயின் அன்பணைப்பில் சுகமாகத் தூங்கும் பானுவின் மெல்லிய மூச்சு வே தனை தரும் அவள் நெஞ்சில் பரவியது. இவ்வளவு துக்கத்துக்கும் நடுவில் கடவுள் ஒரு குழந்தையைக்கொடுத்து இருக்கிறார். அதை தன்னுடையது என்று உரிமை பாராட்டிக் கொள்ளலாம். பால் வடியும் அதன் முகத்தைப் பார்த்து மனச் சாந்தி பெறலாம். அதன் பேச்சில் ஈடுபட்டுக் கவலைகளை மறக்கலாம். கள்ளங் கபடமற்ற அதன் வார்த்தைகளைக் கேட்டுச் சந்தோஷிக்கலாம். குழந்தை மனம் குழந்தை உள்ளம் என்று சொல்லுகிறார்களே, அந்தக் குழந்தை மனத்தைப் புரிந்துகொள்ளும் சக்தி பலருக்கு இருப்பதில்லை.
நீலாவும் கலாசாலைப் படிப்பு படித்தவள்தான் நான்கு தினங்களுக்கு முன்பு குழந்தை பானு ஏதோ விளையாட்டாக மாடியில் நீலாவின் அறைக்குள் சென்று விட்டாள். அங்கு இருந்த பொருள்கள் யாவும் அவளுக்கு வினோதமாக இருந்திருக்க வேண்டும். நீல வர்ணத்தில் இருந்த சோப்புப் பெட்டியை அவள் எடுத்து அழகு. பார்த்துக் கொண்டிருக்கும்போது நீலா வந்து விட்டாள்.
நீலா சித்தி என்றால் பானுவுக்கு மிகவும் பயம். கைகள் பதற பெட்டியைப் கீழே போட்டு விட்டாள் குழந்தை ‘பிளாஸ்டிக்’ பெட்டி தானே? சுக்கு சுக்காக உடைந்து போயிற்று. நீலாவுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. குழந்தையின் கன்னத்தைத் திருகிக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கீழே வந்தாள்.
“பாருங்கள் மன்னி! உங்கள் பெண் செய்திருக்கிற வேலையை! குழந்தைகளுக்குச் சிறு வயசிலிருந்தே நல்ல ‘டிரெய்னிங்’ கொடுக்க வேண்டும்!” என்று படபடப்பாகப் பேசி விட்டுப் போனாள் நீலா.
“மாமா வீட்டிற்குப் போய்விட்டு வந்த பிறகு விஷமக் கொடுக்காக ஆகி இருக்கிறது!” என்று பாட்டியும், அத்தை யும் வேறு ‘ஸர்ட்டிபிகேட்’ கொடுத்தார்கள்.
“கிடக்கிறது விடு, நாலணா பெட்டிதானே? வீட்டில் எத்தனையோ இரைபடுகிறது” என்று தாத்தா சிபாரிசுக்கு வராமல் இருந்தால் அவர்கள் இன்னும் ஏதாவது சொல்லி இருப்பார்கள்.
கண்களில் கண்ணீர் தளும்ப ஒரு பக்கமாக நின்று கொண் டிருந்த குழந்தையை மறைவில் போய்ச் சம்பகம் அணைத்து கொண்டாள். “இனிமேல் மாடிப் பக்கம் போகாதே, அம்மா!” என்று கண்ணீர் வடித்தாள்.
முன்பு ஒரு நாள் வாசனைத் தைல புட்டியைக் கீழே போட்டு உடைத்து விட்டாள், நீலா. அதைப் பற்றி வீட்டில் எல்லோருக்கும் கோபமாக இருந்தாலும், “போகிறது போ. கை தவறிப் போய்விட்டது. பூமிதேவி ஆசைப்பட்டாள்!” என்றெல்லாம் மீனாட்சி அம்மாள் பேசினாள். ‘குழந்தை யைக் கண்டாலும் தான் இவர்களுக்கு ஆகவில்லை. என்னைக் கண்டாலும் பிடிக்கவில்லை’ என்று அதைக் கேட்டதும் சம்பகம் உருகினாள்.
தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கைகளை அன்புடன் வருடினாள் சம்பகம். தூக்கத்தில், தாயை ஆவலுடன் கட்டிக் கொண்ட பானுவின் ஸ்பரிசம், நொந்து போன சம்பகத்தின் மனத்துக்கு ஆறுதலாக இருந்தது. கண்களை அழுத்தி மூடிக் கொண்டாலும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருந்தாள்.
கூடத்தில் மாட்டி இருந்த கடிகாரம் ‘டாண், டாண் என்று இரண்டு அடித்தது. கோடை காலமாதலால் இறுக்கமாக இருக்கவே, பானுவுக்குப் போர்த்திவிட்டு விட்டு, சம்பகம் முற்றத்தில் வந்து உட்கார்ந்தாள். பகலெல்லாம் வேலை செய்து அலுத்துப் போய் இரவு தூக்கம் வராததால் தலையை வலித்தது அவளுக்கு. தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்த அவள் எதிரில் சங்கரன் நின்றிருந்தான்.
“தூங்காமல் இந்த ந்த நேரத்தில் இங்கே என்ன பண்ணுகிறீர்கள் மன்னி?” என்று கேட்டான் அவன்.
“நள்ளிரவில் சங்கரன் கேட்பதற்கு அவனுடன் உட்கார்ந்து கொண்டு பதில் சொல்லலாமா? அவன் ஏன் கீழே இறங்கி வந்தான்? இரவு நேரத்தில் மாடியிலிருந்து ஏன் கீழே இறங்கி வர வேண்டும்?” என்றெல்லாம் சம்பகம் எண்ணித் தவித்தபோது, சங்கரன் தொடர்ந்து பேசினான்.
“நீலா குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து வைப்பதற்கு மறந்து விட்டாள். என் பேரில் ஏதோ கோபித்துக் கொண்டு தூங்குகிறாள். குடித்து விட்டுப் போவதற்கு வந்தேன் நீங்கள் தூங்காமல் இப்படி உடம்பைக் கெடுத்துக் கொள்ளலாமா மன்னி? என்றாவது நீங்கள் அண்ணாவுடன் சேர்ந்து சந்தோஷமாக இருக்கப் போகிறீர்கள்” என்று இன்னும் ஏதோ பேச வாயெடுத்தான் சங்கரன்.
மாடி அறையில் பளிச்சென்று நீல விளக்கு எரிய ஆரம்பித்தது. மாடிப் படிகளின் கைப்பிடிச் சுவரைத் தாங்கிப் பிடித்தபடி நீலா நின்றிருந்தாள்.
“போய்ப் படுத்துக் கொள்ளுங்கள். நீலா எழுந்து விட்டாள்!” என்று கூறிவிட்டுச் சம்பகம் அவசரமாக எழுந்து குடத்திலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் கொண்டு வந்து சங்கரன் எதிரில் வைத்துவிட்டு உள்ளே போய் விட்டாள். மறுபடியும் மாடிக்குச் சங்கரன் போன போது உள்ளே விளக்கு அணைக்கப்பட்டு இருந்தது. தாழ்ப்பாளும் உட்புற மாகப் போட்டுக் கொண்டு நீலா படுத்துக் கொண்டு விட்டாள்.
சங்கரன் லேசாக இரண்டு முறை கதவைத் தட்டி, “நீலா” என்று அழைத்தான். பிறகு பலமாக இரண்டு முறை கதவைத் தட்டினான். ‘படக்’கென்று தாழ்ப்பாளை விலக்கிய நீலா, சரசரவென்று மாடிப் படிகளில் இறங்கி கூடத்தில் விரித்திருந்த ரத்தினக் கம்பளத்தின் மீது பொத் தென்று விழுந்து படுத்துக் கொண்டாள்.
சம்பகத்தின் நெஞ்சம் காய்ந்து வரண்டது. நீலாவின் கால்களைப் பிடித்துக் கொண்டாகிலும், சற்று முன் நடந்த வைகளை மறந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ளலாமா என்று அவள் மனம் ஆத்திரப்பட்டது.
– தொடரும்…
– ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது.
– பனித்துளி (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1996, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.