(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9
8 – காமு கலங்கவில்லை!
தோட்டத்தில் நிலா வெளிச்சத்தில் மைத்துனனும், மன்னியும் என்ன ரகசியம் பேசுகிறார்கள்? பால்போல் நிலா காய்கிறது. செடி கொடிகள் புஷ்பித்து வாசனையை வீசுகின்றன. கணவன் இல்லாமல் பாலைவனத்து நிலவு போல் குன்றிப் போகும் இளமையுடன், சங்கரன் எதிரே மன்னி சம்பகம் உட்கார்ந்திருக்கிறாள். நீலா படித்த பெண் தான்! சமத்துவம் பேசுபவள்தான். இருந்தாலும் அவள் கணவனுடன் இன்னொரு பெண் தாராளமாகத் தனிமையில், நிலவு வீசும் இரவில் உட்கார்ந்து பேசுவதைச் சகிக்கும் தியாக உளத்தைப் படைத்தவள் இல்லை. ‘சரக் சரக்’ கென்று செருப்பு பூமியில் வேகமாய் உராய மாடிப் படிகளில் ஏறிச் சென்றாள் நீலா.
உடை மாற்றிக்கொண்டு கீழே அவள் இறங்கி வந்த போது கூடத்தில் வழக்கமாக எரிந்து கொண்டிருக்கும் குழல் விளக்கும் அணைக்கப்பட்டிருந்தது. தனது அறை வாசல் திரையை நீக்கி நீலாவைப் பார்த்து விட்டு, ருக்மிணி ‘விசுக்’ யென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.
சாப்பிடும் இடத்தை நீலா அடைந்தபோது, சமையற்கார மாமி சுகமாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். சமையலறையைச் சுத்தமாக அலம்பி, கோலம் போட்டு வைத்திருந்தது. அந்த அறையின் மூலையில் பாத்திரங்கள் மூடி வைத்திருப்பதிலிருந்து, அவளுக்காக சாப்பாட்டை மூடி வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டாள் நீலா. குடத்திலிருந்து ஒரு டம்ளர் நீர் எடுத்துக் குடித்துவிட்டுக் கோபத்துடன் மாடிக்குத் திரும்பும்போது அவள் எதிரில் சம்பகம் வந்தாள்.
“சாப்பிட வா அம்மா. நான் கையில் பிசைந்து. போடுகிறேன்” என்று உரிமையுடனும், அன்படனும் அவள். ஓரகத்தியை அழைத்தாள்.
நீலாவின் உள்ளத்தில் வெநதழல் போல் கோபம் ஜ்வாலைவிட்டு எரியத் தொடங்கியது. “அது ஒன்றுதான் குறைச்சல் எனக்கு” என்று கூறிவிட்டு சம்பகத்தின் பதிலை எதிர்பாராமல் மாடிக்குப் போய் விட்டாள் நீலா.
“இப்படியும் ஒரு சுபாவமா!” என்று அதிசயித்தாள் சம்பகம். மைத்துனன் மனத்தில் மனைவியைப் பற்றி மாமியாரும் நாத்தனாரும் ஏதோ உருவேற்றி இருக்கிறார்கள் என்பது சங்கரன் சற்றுமுன் தோட்டத்தில் அவளைப் பார்த்து நீலாவைப் பற்றிக் கேட்டதும் தெரிந்து விட்டது. சம்பகம் கவலையோடு மறுபடியம் தோட்டத்துக்குப்போய் உட்கார்ந்து கொண்டாள். மாடியிலே மைத்துனன் அறையில் கணவனும் மனைவயும் தர்க்க மிடுவது பட்டதும் படாததுமாக அவள் செவியில் விழுந்தது. அறையின் ஜன்னல் திரையை விலக்கிவிட்டு அதன் அருகில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் சங்கரன்.
“சாப்பிட்டாயா?”
“…”
“உன்னைத்தான் கேட்கிறேன்!”
“ரொம்பவும் கரிசனம் உங்களுக்கு!” நீலாவின் வார்த்தைகள் மெதுவாக, ஆனால் அழுத்த வெளிவந்தன.
“உனக்குத்தான் என்னிடம் கரிசனம் அதிகம்” எனறு சங்கரன் பாதி கேலியாகவும், பாதி கோபமாகவும் கூறினான்
“நம் இரண்டு பேருக்கும்தான் ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு அக்கறை இல்லையே; உங்களுக்காவது உங்கள் மதனி பேரில் அன்பு பொங்கி வழிகிறது!”
“ஆமாம், பாவம்! அவளைப் பார்த்தால் எனக்கு இரக்கமாகத்தான் இருக்கிறது. பாவம்!” என்று சங்கரன் தொண்டை கரகரக்கக் கூறினான்.
“அதான் தோட்டத்தில் இரண்டு பேரும் தனியாகப் பேசிக் கொண்டிருந்தீர்கள் போல் இருக்கிறது!”
நீலா இந்த வார்த்தைகளைக் கூறும்போது வழக்கத்தை விட உரக்கப் பேசினாள். சம்பகத்தின் உள்ளமும், உடலும் பலமுறை நடுங்கின.
“அதிகப்பிரசங்கி! வாயை மூடு! பெரியவர்கள் என்று மரியாதை இல்லாமல் என்னவெல்லாமோ உளறுகிறாய்!” சங்கரன் ஆத்திரத்துடன் எழுந்தான்.
நீலாவும் விசுக்கென்று எழுந்தாள். ஆத்திரத்துடன் படுக்கையைக் கட்டிலிலிருந்து எடுத்துத் தரைமீது வீசி எறிந்தாள். தொடர்ந்து விளக்கும் அணைக்கப்பட்டது. புதிதாக மணமான தம்பதியின் அறையில் நிலவ வேண்டிய அழகும், ஆனந்தமும் அந்த இருளில் மூழ்கி, மறைந்து போயின.
மறு தினம் பகல் கமலாவின் வீட்டிலிருந்து சிறிய கடிதம் ஒன்றை வேலைக்காரி காமுவிடம் கொண்டு வந்து கொடுத்தாள். அதில் ‘அன்று மாலை தேநீர் விருந்துக்கு நீலாவும் சங்கரனும் அவர்கள் வீட்டிற்கு வரப் போவதாகவும், நெடு நாளாக நீலாவை அவள் பார்க்க வேண்டும் என்று விரும்புவதால் தவறாமல் மாலை வர வேண்டும்’ என்றும் காமுவுக்கு கமலா எழுதி இருந்தாள், காமுவுக்கு நீலாவைப் பார்க்க வேண்டும் என்று ஆசைதான். ஏன், எதற்காக ஆசை எழுந்தது என்பதை அவளால் ஊகிக்க முடியவில்லை: கட்டாயம் போக வேண்டும் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டாள். அங்கே சங்கரனும் வருவார். அவரைப் பார்த்து, அவர் எவ்விதம் நடந்து கொள்வார் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டாள் காமு. “ஏறக்குறைய ஒரு வருஷத்துக்கு முன்பு பொன் மணியில் அன்பும், கருணையும் உருவாகப் பேசிய சங்கரனாக இருக்கிறாரோ? இல்லை, பணக்கார மனைவியைப் படைத்த பெருமையால் மாறிப் போய் இருக்கிறாரோ? அதையும் பார்த்துவிட வேண்டும்” என்ற உறுதியுடன், அன்று போகத்தான் வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டாள்.
மாலை நாலு மணி முதற்கொண்டே தலை வாரிப் பின்னி, பூச்சூட்டிக் கொண்டு அழகிய வாயில் புடவையை உடுத்திக் கொண்டாள் காமு. அவள் கண்களே அழகானவை. மேலும் அவைகளுக்கு அழகு செய்தது போல் மை தீட்டி பொட்டிட்டுத் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தாள். மெல்லிய கோடுகள் போட்ட வாயில் ரவிக்கை அவளுக்கு மிகவும் எடுப்பாக இருந்தது. அந்த ரவிக்கையைப் பார்த்ததும் இரண்டு, மூன்று மா தங்களுக்கு முன்பு நீலாவுக்காக அவள் தைத்துக் கொடுத்த பட்டுரவிக்கையின் நினைவு வந்தது அவளுக்கு.
அலங்கரித்துக் கொண்டு முடிந்ததும் தாபிடம் சென்று, “அம்மா! இன்றைக்கு நான் எங்கே போகிறேன் சொல் பார்க்கலாம்?” என்று கேட்டாள் காமு.
விசாலாட்சி குழி விழுந்த கண்களால் மகளைப் பார்த் தாள். எழிலோடு யௌவனத்தின் வாயிலில் பரிப்புடன் நிற்கும் அவளைப் பார்த்ததும் அவள் கண்களில் ஒளி வீசியது.
“அலங்காரமெல்லாம் பலமாக இருக்கிறதே, எங்கே போகிறாயோ? யாராவது சிநேகிதிக்குக் கல்யாணமாக இருக்கும்” என்றாள் விசாலாட்சி.
“இல்லை அம்மா! கமலாவின் வீட்டிற்குப் போகிறேன். அங்கே நமக்குத் தெரிந்தவர்கள் வருகிறார்கள். உனக்கும் அப்பாவுக்கும் கூடத் தெரிந்தவர்கள். நம் சங்கரனும், அவர் மனைவியும் கமலாவின் வீட்டிற்குச் சாயந்தரம் வருகிறார்களாம்” என்று கூறி முடித்தாள் காமு.
விசாலாட்சி, பெண் கூறியதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்பதை அவள் முகபாவம் காட்டியது. “சீக்கிரம் வந்து விடு காமு. அப்பா கடையை மூடிக் கொண்டு வந்து விடுவார். சாதம் போட வேண்டும்” என்று கூறினாள்.
“எல்லா வேலைகளையும் செய்து விட்டேன் அம்மா! நீ எழுந்திருக்கவே வேண்டாம்” என்று சொல்லி விட்டு காமு கமலாவின் வீட்டிற்குப் புறப்பட்டாள்.
விசாலாட்சியின் உடல் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகிக்கொண்டு வந்தது. ஆயிரக்கணக்கில் அப்பளம் இட்டு, சலிக்காமல் வீட்டு வேலைகள் செய்து பழக்கப் பட்டவள். இன்று இரண்டு பேருக்குச் சமைப்பதற்குக் கூடக் கஷ்டப்பட்டாள். உடலில் சதைப் பிடிப்பு வற்றிப் போய் எலும்புக் கூடாக இருந்தாள். எடுத்ததற்கெல்லாம் ‘பிலு பிலு’ வென்று கணவனுடன் சண்டை பிடித்து வாதாடுபவள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று அடங்கிக் கிடந்தாள்.
அவளுக்கு நேர்மாறாக ராமபத்திரய்யர் பட்டினம் வந்த பிறகு திடமாக நோய் நொடி இல்லாமல் இருக்க ஆரம்பித்தார். வாழ்க்கை பூராவும் ஏழை உபாத்தியாயரை மணந்து கொண்டு, அவருடன் வறுமையில் வாடிய விசாலாட்சியைப் பார்க்கும் போதெல்லாம் அவர் மனம் கஷ்டப்படும். பணத்தைப் பணம் என்று பாராமல் பெரிய வைத்தியர்களிடம் அவளை அழைத்துச் சென்று காண்பித் தார். அவர்கள் அவளுக்கு வியாதி ஒன்றும் இல்லை யென்றும், குடும்பக் கவலையால் அவள் மனம் இடிந்து மெலிந்து வருகிறாள் என்றும் கூறி விட்டார்கள்.
காமு கமலாவின் வீட்டை அடைந்த போது தெருவில் ஒரு அழகிய நீலவர்ணக் கார் நின்று கொண்டிருந்தது. மனம் படபடவென்று அடித்துக் கொள்ள காமு தயங்கிக் கொண்டே படி ஏறி உள்ளே சென்றாள். கூடத்தில் மேல் நாட்டுப் பாணியில் இல்லாமல் அழகிய ரத்தினக் கம்பளம் விரித்து, அதன் மீது சிற்றுண்டிகளும், டீயும் வைக்கப்பட் டிருந்தன. கமலாவின் நெருங்கிய நண்பர்களில் இரண்டு மூன்று பேர் வந்திருந்தார்கள்.
காமு உள்ளே நுழைந்ததும் கமலா அவசரமாக எழுந்து வந்து அவள் கைகளைப் பிடித்து உட்காரும் இடத்துக்கு அழைத்துப் போனாள். சங்கரனுக்கு எதிரில் காலியாக இருந்த இடத்தில் அவளை உட்கார வைத்தாள்.
சங்கரன் திகைத்துப் போனான்! கண் இமைக்காமல் காமுவைப் பார்த்தான். ஆனால், காமுவோ சங்கரனைத் தெரிந்த மாதிரியாகவே காட்டிக் கொள்ளவில்லை. “இவள் தான் நீலா! காமு, நீ தைத்துக் கொடுத்த ரவிக்கை ரொம்ப ஜோராக இருக்கிறதாம். உன்னிடம் சொல்லும்படி என்னிடம் சொல்லி இருந்தாள்” என்று நீலாவை அறிமுகம் செய்வித்தாள் கம்லா.
“ரவிக்கை சரியாக இருக்கிறதோ இல்லையோ என்று பல தடவை நினைத்துக் கொண்டேன்!” என்று கூறிவிட்டு காமு, நீலாவைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். எந்த மோகனச் சிரிப்பையும், மருளும் கண்களையும் பார்த்து மயங்கித் தன் அந்தஸ்தையும் மறந்து பல உறுதிமொழி களைச் சொல்லிவிட்டு வந்து, பிறகு மறந்தானோ, அ த சிரிப்பையும், மயக்கும் கண்களையும் பார்த்துத் தலையைக் குனிந்து கொண்டான் சங்கரன்.
காமு அவனை நேருக்கு நேர் சகஜமாகப் பார்த்தாள். பொன்மணியில் பார்த்த காமுவா அவள்? நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாமல் பரம சாதுவாக யாருடனும் எதுவும் பேசாமல் அடுப்பங்கரையில் பதுங்கிக் கொண்ட காமு இல்லை அவள். அவள் எல்லோருடனும் சகஜமாகப் பேசுவதிலிருந்தும் பழகுவதிலிருந்தும் அவள் பட்டினவாசத்து நாகரிகத்தை அறிந்துக் கொண்டிருக்கிறாள் என்பது சங்கரனுக்குத் தெரிந்து போயிற்று. சிற்றுண்டி சாப்பிட்டு முடிகிறவரைக்கும் சங்கரன் அவளைத் தெரிந்து கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.
எல்லோரும் கை அலம்பிவிட்டுக் கூடத்தில் வந்து உட்கார்ந்தபோது, காமு கொல்லைப் பக்கம் கமலாவுக்கு உதவியாகப் பாத்திரங்களையும், கோப்பைகளையும் அலம்பி ஒழுங்கு படுத்தும் வேலையில் முனைந்தாள். சரசரவென்று பீங்கான் கோப்பைகளை அலம்பி அவள் ஒழுங்கு படுத்துவதே ஒரு அழகாக இருந்தது.
கூடத்தில் நீலா தன் அழகுப் பையைத் திறந்து அதிலிருந்து சிறிது ‘மாவு’ எடுத்து முகத்துக்கு ஒற்றிக் கொண்டாள். தடுகளுக்குச் சிவப்புச் சாயத்தை லேசாகத் தடவிக் கொண்டாள். இப்படி வந்த இடம் போன இடம் இல்லாமல் நாகரிகம் முதிர்ந்த பெண்கள் அலங்காரம் பண்ணிக் கொள்வது சிறிது அருவருப்பைத் தரக்கூடிய விஷயம்தான்.
சங்கரன் கூடத்துக்கும், கொல்லைப் பக்கத்துக்கும் இடையில் இருந்த தாழ்வாரத்தில் நின்று காமுவையும், நீலாவையும் மாறி மாறிப் பார்த்தான். “காமு பட்டின வாசத்து நாகரிகத்தைத் தெரிந்து கொண்டாலும் அதற்கு ஓர் அளவு கொடுத்து வைத்திருக்கிறாள். பண்டையப் பண்பாட்டுடன் நவீனத்தின் அழகும் கலந்து அவளிடம் பிரகாசிக்கிறது” என்று எண்ணினான் சங்கரன். களைத்துப் போன தன்மனப் தோழி கமலாவுக்காக உதவும் அவள் பான்மை அவளுடைய பழைய கிராமிய வாழ்வைக் காட்டியது. நாலு பேருடன் சரளமாகப் பழகும் அவள் சுபாவம், புது நாகரிகத்தின் பழக்கத்தைக் காட்டியது.
காமு பாத்திரங்களை அலம்பி முடித்ததும் முகத்தில் அரும்பிய வியர்வையைக் கைகுடடையால் துடைத்துக் கொண்டு கூடத்துக்கு வந்தாள். வரும் போது, வராந்தாவில் தனியாக நிற்கும் சங்கரனை அவளால் கவனிக்காமல் செல்ல முடியவில்லை.
“காமு! என்னை நினைவிருக்கிறதா உனக்கு? பட்டினத் துக்கு எப்போது வந்தாய்?” என்று சங்கரன் மெதுவாகக் கேட்டான். காமு அவள் பெற்றோருடன் பட்டினம் வந்திருக்கிறாளா அல்லது அவளுக்குக் கல்யாணமாகிக் கணவனுடன் வந்திருக்கிறாளா என்று அறிந்து கொள்ள வேண்டுமென்கிற காரணத்தாலேயே சங்கரன் அவளை அவ்விதம் கேட்டான்.
“நாங்கள் பட்டினம் வந்து கிட்டத் தட்ட ஒரு வருஷத்துக்கு மேல் ஆகிறதே. கிராமத்தில் வீட்டை விற்று விட்டோம். அந்தப் பணத்தை வைத்து அப்பா ஒரு கடை வைத்திருக்கிறார். நான் ‘டிரெயினிங்’ படிக்கிறேன்”- காமு பழைய சம்பவங்களை மறந்துவிட்டு அவனுடன் பேசினாள். பிறகு, “அம்மாவுக்குத்தான் உடம்பு சரியாக இல்லை. அவளுக்கு ஒரே கவலை என்னைப்பற்றி, எனக்குக் கல்யாணம் ஆக வில்லையாம். உருகிப் போகிறாள்!” என்றாள்.
அதற்குள் கமலா நீலாவுடன் பேசிக் கொண்டு அந்தப் பக்கம் வருவது கேட்கவே அவசரமாக; “எங்கள் வீட்டிற்கு வாருங்கள். அப்பாவுக்கு உங்களைப் பார்த்தால் சந்தோஷ மாக இருக்கும்” என்று கூறிவிட்டு காமு அங்கிருந்து போய் கமலாவுடன் சேர்ந்து கொண்டாள்.
பொன்மணியில் பார்த்த காமுவா அவள்? ஒரு வார்த்தை பேசுவதற்கு எவ்வளவு திணறிப் போய்விட்டாள் அப்போது? அவளை ஏமாற்றியவனை எவ்வளவு அன்பாக தன் வீட்டிற்கு வரும்படி அழைக்கிறாள்? என்ன கள்ளமற்ற உள்ளம்? போதாததற்கு அவனைப் பார்த்தால் அவள் தாப்பனாரும் சந்தோஷப்படுவார் என்று வேறு பெருமை அடித்துக் கொள்கிறாள்!
சங்கரன் சிறிது நேரம் தன்னைப் பற்றியே நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். படித்துப் பட்டம் வாங்கிய வ்னாக இருந்தாலும் ராமபத்திரய்யருக்கு இருக்கும் கபட மற்ற குணமும், பெருந்தன்மையும் தனக்கு இருக்கின்றனவா என்று சிந்தித்தான். குண விசேஷம் அலாதியாக வாய்ப்பது. கல்லூரிகளிலும், கலாசாலைகளிலும் அதை விலைகொடுத்து வாங்க முடியாது என்று தோன்றியது அவனுக்கு.
“மிஸ்டர் சங்கரன்! உங்களை உங்கள் மனைவி நெடு நெரமாகத் தேடறாளே, இருட்டில் இங்கே என்ன பண்ணு கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டு கமலா வந்தாள். ‘பார்டி’க்கு வந்தபோது இருந்த உற்சாகம் குறைந்து சங்கரனின் முகம் வாடிப் போயிருந்தது.
“கொஞ்சம் தலைவலியாக இருந்தது! காற்றாட வந்து நின்றிருந்தேன்” என்று கூறிவிட்டு, “புறப்படலாமா நீலா?” என்று மனைவியின் பக்கம் திரும்பிக் கேட்டான். அங்கே அவளுக்குப் பக்கத்தில் காமு நின்றிருந்தாள்.
“துணிகளை மிகவும் அழகாகத் தைக்கிறாள், இந்தப் பெண். ஓ! ‘ஸாரி!’ மிஸ் காமு என்று சொல்ல வேண்டும். ஒரு நாளைக்கு நம் வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறேன். என்னிடம் நிறையத் துணிகள் இருக்கின்றன. தைக்க வேண்டும்” என்று நீலா, காமுவை அவர்கள் வீட்டிற்கு அழைத்ததைச் சங்கரனிடம் கூறினாள்.
காமுவைச் சங்கரன் அவர்கள் வீட்டிற்கு விரும்பி அழைக்கவில்லை. ஆனால், நீலா, அழைக்கிறாள், சா தாரண மாக நட்பு முறையில் அல்ல. ‘தையற்காரி’ என்கிற முறை யில்! காமு துணி தைத்துக் கொடுத்து நீலாவிடம் கூலி வாங்கப் போகிறாள்!
சங்கரனால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. “நான் வருகிறேன் அம்மா” என்று கமலாவுக்கும், காமு வுக்கும் சேர்த்து ஒரு கும்பிடு போட்டு விட்டுக் காரில் மனைவியுடன் போய் ஏறிக் கொண்டான்.
காமு தன் தோழியின் தோள்மீது ஆசையோடு கையைப் போட்டு அணைத்தபடி நீண்ட சாலையில் வேகமாகச் செல்லும் மோட்டாரைக் கவனித்தபடி நின்றாள்.
“கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலின்றி
நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே!”
என்று பாடிக் கொண்டே, தையல் இயந்திரம் கடகட வென்று ஒலிக்க ஏதோ தைத்துக்கொண்டிருந்தாள் காமு. கடைக்கு அன்று விடுமுறை ஆதலால் ராமபத்திர அய்யர் தினசரி ஒன்றைப் படித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். விசாலாட்சி மணைக்கட்டையைத் தலைக்கு உயரமாக வைத்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.
சங்கரனை அன்று கமலாவின் வீட்டில் பார்த்த பிறகு காமுவின் மனம் ஒரு நிலையில் இல்லை. இவ்வளவு நாகரிகமும் டம்பமும் நிறைந்த மனைவியுடன் சங்கரனால் எவ்விதம் வாழ்க்கை நடத்த முடிகிறது? என்று திருப்பித் திருப்பி தன்னையே கேட்டுக் கொண்டாள் காமு.
தமிழ் நாட்டுப் பெண்களுக்குத் திடீரென்று பஞ்சாபி உடை மீது காதல் ஏற்படுவானேன்? தமிழ் நாட்டு உடை முறை நன்றாக இல்லையா? அழகிய கரை போட்ட பாவாடையும் தாவணியும் வயிற்றைக் குமட்டுகின்றனவா? கிள்ளு கிள்ளாகக் கொசுவம் வைத்துக் கட்டிக்கொள்ளும் பட்டு, நூல் சேலைகளைப் பார்த்தால வயிற்றைப் புரட்டு கிறதா? யாரைப் பார்த்தாலும், ஐந்து வயதுக் குழந்தையி லிருந்து இருபது. வயதுக் குமரி வரையில் பஞ்சாபி உடை அணிந்து உலாவுகிறார்களே! பஞ்சாப் சகோதரிகள் மீது நமக்கு ஒன்றும் கோபமில்லை. நீலாவின் அந்த ‘பஞ்சாப்’ நாகரிகம் காமுவுக்கு அருவருப்பாக இருந்தது. கர்னாடக மனுஷியான மீனாட்சி அம்மாளின் நாட்டுப் பெண் இவ்வளவு நாகரிகமாகவும், அதுவும் வடக்கத்திப் ‘பாணி’யில் உடை அணிவதும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
நீலா அவளைத் தன் வீட்டிற்கு அழைத்திருந்தாள். அவள் அவர்கள் வீட்டிற்குப் போவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். தன் உத்தேசத்தைத் தகப்பனாரிடம் கூறியபோது, ‘அதெல்லாம் வேண்டாம். அம்மா! நமக்கு அங்கே என்ன ஜோலி இருக்கிறது. வேண்டு மானால் அவர்களே வரட்டும்” என்று அவர் கூறிவிட்டார்.
”காமு! என்னை நினைவிருக்கிறதா உனக்கு?” என்று சங்கரன் கேட்ட வார்த்தைகள் திரும்பத் திரும்பக் அணீரென்று அவள் செவிகளில் ஒலித்தன.
சங்கரனை மறந்து விடுவாளா காமு? அப்படி மறக்கிற வளாக இருந்தால் பத்திரிகையில் பிரசுரமான அவன் கல்யாணப் படத்தை எதற்குப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைக்கிறாள்? அவனையும், அவன் மனைவியையும் நேரில் பார்க்கவேண்டும் என்று கமலாவின் வீட்டிற்கு எதற்காகப் போகிறாள்? சங்கரன் அவள் மனத்தில் நிலையாக இடம் பெற்று விட்டான். அந்த இடத்தை வேறு யாருக்கும் அவளால் அளிக்க முடியாது. மெலிந்து வாடி வரும் தாயின் அபிலாஷையைக் கூடப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற எண்ணமில்லாமல் காமு ‘டிரெயினிங்’ படித்து உபாத்தி யாயினி வேலையை ஏற்கப் போவதும் சங்கரனை மறக்க முடியாத காரணத்தால் தான்!
தெருவில் பழம் விற்பவரும், சாமான்கள் விற்பவர் களும் அசந்து உட்கார்ந்து ஓய்வு எடுத்துக்கொள்ளும் பகல் நேரம் வெய்யில் கடுமையாகத்தான் இருந்தது. மண் கூஜாவில் இருந்து தீர்த்தம் எடுத்துச் சாப்பிட்டு விட்டு மறுபடியம் தையல் இயந்திரத்தின் முன்பு வந்து உட்கார்ந் தாள் காமு. அப்போது தெருவில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் வாயிற் கதவைத் திறந்து கொண்டு சங்கரன் உள்ளே வந்தான். காமு ஒரு கணம் திகைத்துப்போனாள். உடனே சமாளித்துக்கொண்டு அரைத் தூக்கத்தில் இருந்த தகப்பனாரிடம். ‘ அப்பா யார் வந்திருக்கிறார் பாருங்கள்” என்று கூறினாள்.
ஆவல் ததும்பும் கண்களுடன் காமுவைப் பார்த்துவிட்டு சங்கரன், அங்கு இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.
“சௌக்கியமா அப்பா? உன் மனைவியையும் அழைத்து வந்திருக்கிறாயா?” என்று அவனை விசாரித்தார் ராமபத்திர அய்யர்.
“சௌக்யந்தான் மாமா. நீங்கள் இங்கு வந்து ரொம்ப நாள். ஆகிறதாமே? வீட்டுப் பக்கம் வராமல் இருந்து விட்டீர்களே?”
காமு மிஷினை மூடி வைத்துவிட்டு எழுந்தாள், காபி போடுவதற்காக. “அப்பாவுடன் பேசிக் கொண்டிருங்கள். இதோ வந்து விட்டேன்” என்று சொல்லி விட்டுச் சமையல் அறைக்குள் சென்றாள்.
அடையாளம் தெரியாமல் உருமாறி, கூடத்து மூலையில் சுருட்டிப் படுத்துக் கொண்டிருக்கும விசாலாட்சியைப் பார்த்ததும் சங்கரனுக்கு த் தூக்கிவாரிப் போட்டது. அவளையே உற்றுப் பார்த்து விட்டு, “மாமி என்ன இப்படி இளைத்துப் போயிருக்கிறாள் மாமா? என்ன உடம்பு?’ என்று விசாரித்தான்.
“ஏதாவது உடம்பு என்று தெரிந்தால் தானே, வைத்தியம் பண்ணுவதற்கு? கிராமத்தை விட்டு வந்த பிறகு இப்படி இளைத்துப் போய் இருக்கிறாள்” என்று கூறிவிட்டு, அப்பாவை வந்து பார்க்க வேண்டும் என்று, நினைத்துக் கொண்டிருந்தேன். சர்மா என்னை நினைவு வைத்துக் கொண்டிருக்கிறானோ இல்லையோ என்று பேசாமல் இருந்து விட்டேன்” என்று சொல்லி விட்டு, ராமபத்திர அய்யர் சங்கரனைப் பார்த்தார்.
சங்கரனுக்கு அவர் தன்னைக் குத்திக் காட்டுவதாகவே தோன்றியது. இதற்குள் காமு இரண்டு டம்ளர்களில் காபியைக் கொண்டு வந்து வைத்தாள். காபி சாப்பிட்டு முடிந்ததும் மேலும் அவருடன் என்ன பேசுவது, எதைப் பற்றிப் பேசுவது என்பது புரியாமல் திகைத்தான் சங்கரன். ராமபத்திர அய்யர் சிறிது யோசித்தபடி உட்கார்ந்திருந் தார். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவர்போல், “சங்கரா! உன் மன்னி குழந்தையோடு பிறந்த வீட்டில் இருந்தாளே, அங்கே தான் இருக்கிறாளா, வந்து விட்டாளா?” என்று கேட்டார்.
“அவள் வந்து ரொம்ப நாளாச்சே! இங்கே தான் இருக்கிறாள். அவள் இராவிட்டால் அப்பாவுக்குச் சரிப்படு கிறதில்லை. அவருடைய வேலை யெல்லாம் மன்னிதான் கவனித்துக் கொள்கிறாள்” என்றான் சங்கரன்.
‘பாவம்! ரொம்பவும் செல்லமாக வளர்ந்த பெண். நல்ல இடத்தில் தான் வாழ்க்கைப் பட்டாள்; இருந்தாலும் அதிர்ஷ்டம் என்பது அலாதியாக இருக்கிறது அப்பா” என்றார் அவர்.
“வீட்டிலே எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்கிறாள் மாமா, ரொம்பவும் பொறுமைசாலி.”
“பொறுமைசாலியாக ஒருத்தி இராவிட்டால் அடங்காப் பிடாரிகளின் ராஜ்யம் குடும்பத்தில் நடக்குமா!” என்று காமு மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள். சங்கரன் எதற்காக அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறான் என்பதே தகப்பனார் பெண் இருவருக்கும் புரியவில்லை.
மத்தியானத் தூக்கம் கலைந்து விசாலாட்சி விழித்துக் கொண்டபோது கூடத்தில் சங்கரன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். “இதென்ன விசித்திரம்! யாரால் காமுவின் வாழ்வு பாதிக்கப்பட்டதோ, யாரைக் காமு மறக்க முடியாமல் திண்டாடுகிறாளோ அவன் இங்கு உட்கார்ந் கிருக்கிறான். திரும்பவும் சங்கரன் இங்கு எதற்காக வர வேண்டும்? பட்டினம் வருவதற்குப் பொன்மணியில் வண்டி ஏறிப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் போது, ‘அவர்களால் நமக்கு என்ன ஆகவேண்டும் அப்பா, அவர்கள் வீட்டுக்கு நாம் ஏன் போசு வேண்டும்?’ என்று கூறிய காமு, இன்று அதே சங்கரனுக்குக் காபி கொடுத்து உபசரிக்கிறாளே?”
விசாலாட்சிக்கு இது விசித்திரமாகத் தான் இருந்தது. புடவைத் தலைப்பை உதறிக் கட்டிக்கொண்டு எழுந்திருந்த வளைப் பார்த்துக் கைகூப்பி, “மாபி! என்னைத்தெரிகிறதா உங்களுக்கு? ரொம்பவும் இளைத்துப் போயிருக்கிறீர்களே?” என்று கேட்டான் சங்கரன்.
‘இவன் ஏன் இங்கு வந்தான்? நாமு இன்று வைராக்கியத் துடன் விவாகத்தை மறுக்கும் அளவு அவள் மனத்தைப் புண்ணாக்கியவன் எதற்காக இங்கே வந்திருக்கிறான்?’ இவ்வித ஆத்திரத்தோடு விசாலாட்சி “தெரியாமல் என்ன அப்பா? மனுஷாளை மறந்து போகும் அளவு நினைவு தப்பி விடவில்லை எனக்கு!” என்று கூறிவிட்டு சமையலறைக்குள் சென்று விட்டாள்.
சங்கரனின் மனம் மறுபடியும் வெட்கியது. உணர்ச்சி வசத்தில் ஏதேதோ கூறிச் சென்று பிறகு, அவைகளை மறந்தவன் சங்கரன் தானே?
“நேரமாகி விட்டது மாமா! நீங்கள் அவசியம் எங்கள் வீட்டிற்கு வாருங்கள். அப்பாவிடமும் சொல்லுகிறேன். காமுவையும் அழைத்து வாருங்கள். என் மனைவி அழைத்து வரச் சொன்னாள்” என்று கூறி விட்டு காமுவிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான் சங்கரன்.
“ஆகட்டும், பார்க்கலாம். மாமி சொன்னதை மனத்தில் வைத்துக் கொள்ளாதே சங்கரா! காமுவுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்று கண்டவர்கள் பேரில் எரிந்து விழுந்து கொண்டிருக்கிறாள்” என்று இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டு வாசல் வரையில் வழி அனுப்ப வந்தார் ராமபத்திர அய்யர்.
காரில் சென்று கொண்டிருக்கும் போது சங்கரன் பல விதமாக எண்ணமிட்டான். காமு அவனை மறக்கவில்லை. அவன் கூறிய வார்த்தைகளை மறக்கவில்லை. சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பு வைத்திருக்கிறாள். காமு அவனை மறக்காததைப் பற்றி அவன் மனம் சந்தோஷப் பட்டது. அந்தச் சந்தோஷம் அற்பமானது. தகாதது என்று அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. இருந்தாலும் அவன் அதனால் திருப்தி அடைந்தான். காமு கன்னிகை யாகவே காலங் கழிக்கப் போகிறாளா? ஏன்? யாருக்காக அவள் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்கிறாள்? சங்கரனுக்காகவா? சங்கரனை விட அவள் படித்தவள் அல்ல. அவனை விட விஷயம் தெரிந்தவள் இல்லை. இருந்த போதிலும் காமுவின் மனம் உண்மைக்கும், அன்புக்கும் கட்டுப்பட்டிருக்கிறது.
சங்கரனின் மண்டை கனத்தது. காரின் “ஸ்டீயரிங் வீல்” கைப்பிடியிலிருந்து நழுவி விடுவது விடுவது போன்ற பிரமை ஏற்பட்டது. அவன் இவ்விதம் எண்ணமிட்டுக் கொண்டு செல்லும் போது, கடற்கரை சமீபத்தில் வந்து கொண் டிருந்தான். மனத்தைச் சுதாரித்துக் கொண்டு மேலும் செல்லலாம் என்று வண்டியைக் கரையோரம் நிறுத்திவிட்டு, மரங்கள் அடர்ந்த இடத்தில் சென்று அமர்ந்தான் சங்கரன். மாலை சுமார் நான்கு மணி இருக்குமாதலால் கடற்கரையில் கூட்டம் அதிகமில்லை.
– தொடரும்…
– ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது.
– பனித்துளி (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1996, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.