கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 15, 2024
பார்வையிட்டோர்: 2,504 
 
 

(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8

7 – பாவம், சங்கரன்!

கமலாவின் வீட்டுக்குக் காமு சென்றிருந்தபோது அவள் கவனம் கூடத்துச் சுவரில் மாட்டப்பட்ருந்த ஒரு படத்தின் மீது விழுந்தது. நீலாவும், சங்கரனும் மாலையும் கழுத்துமாக எடுத்துக் கொண்ட புகைப்படம்-பல பத்திரிகைகளில் முன்பு பிரகரமாகிக் காமுவைப் பார்த்து எள்ளி நகையாடிய அதே பகைப்படம் அங்கே காட்சி அளித்தது. காமு தன் உள்ளத்தில் எழும்பிய பல உணர்ச்சிகளை எவ்வளவோ கட்டுப்படுத்தினாள். கட்டுப் படுத்தவும் முயற்சித்தாள். ஆனால் ஆசைதான் வெற்றி கொண்டது. 

“நீலா உங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவது உண்டா?” என்று புகைப்படத்தைக் காண்பித்துக் கொண்டே கமலாவிடம் கேட்டாள் காமு. 

“அந்தப் பெண் அவ்வளவாக யாரையுமே மதிப்ப தில்லை, காமு!” என்று கமலா தன் அபிப்பிராயத்தை அறிவித்ததும், காமுவின் கொந்தளிக்கும் உள்ளம் சற்று ஆறுதல் அடைந்தது. காமுவைவிட நீலா எந்த விதத்தில் உயர்ந்தவள்? கலாசாலைப் படிப்புப் படித்திருக்கிறாள். வசதி இருந்தால் காமுவும் படித்து இருக்க மாட்டாளா என்ன? ஏழை உபாத்தியாயரின் பெண்ணாக மட்டும் காமு பிறக்காமல் இருந்தால், கலாசாலை என்ன, உயர்தரக் கல்விக்காகக் கடல் கடந்து கூடப் போயிருப்பாளே? காமுவின் தாழம்பூ மேனியைவிட நீலாவின் வெள்ளை நிறம் ஒன்றும் பிரமாத அழகு வாய்ந்ததில்லை. காமுவின் கருமணிக் கண்களைவிட நீலாவின் பூனைக்கண் அவ்வளவு பிரமா தமில்லை. கண்களுக்கு எவ்வளவு தான் மையைத் தீட்டிக் கொண்டாலும், இயற்கையாக நீண்டு விளங்கும் கண்களைப் போல் ஆகிவிடுமா என்ன? நீலாவுக்குச் சற்றுப் பூனைக்கண் தான்! நாழிக்கொரு உடையும், வேளைக்கொரு அலங்காரமுமாக, பகட்டால் அவள் அதிக அழகிபோல் தோற்றமளிக்கிறாள், அவ்வளவு தான்! 

அப்பப்பா! சிந்தனையின் வேகம்தான் எவ்வளவு? நொடிப்பொழுதில் நீலாவையும், தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டுவிட்டாள் காமு. 

“என்ன காமு, ஒரே யோசனையில் ஆழ்ந்துவிட்டாய்?” என்று அவள் சிந்தனை வேகத்துக்குக் கமலா கடிவாளம் போட்டு இழுத்த பிறகுதான் காமு இந்த உலகத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்தாள். 

“நீலாவுடன் உனக்குச் சிநேகம் செய்து கொள்ள வேண்டுமா என்ன? என்றைக்காவது ஒருநாள் சங்கரன் எங்கள் வீட்டிற்கு வரும்போது சொல்லி அனுப்புகிறேன், வருகிறாயா?” என்று அன்புடன் கேட்டாள் கமலா. 

“நீலாவுடன் சிநேகம் செய்துகொள்ள வேண்டுமா? அது அவசியம் தானா?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் காமு. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் நீலாவுக்கும் தனக்கும் ஏற்பட்டிருக்கும்போது, அவளுடன் நட்புக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பது காமுவுக்கே புரியவில்லை. 

“ஆகட்டும் பார்க்கலாம். அவ்வளவு பெரிய இடத்துச் சிநேகிதம் கிடைத்துவிடுமா?” என்று கமலாவுக்குக் கூறி விட்டு, அவளுக்குத் தேவையான தையல் புஸ்தகங்களில் சிலவற்றை வாங்கிக் கொண்டு புறப்பட்டாள் காமு. 

அவள் மனத்தில் நீலாவைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலைவிடச் சங்கரனைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம்தான் ஓங்கி நின்றது. 


வீட்டிற்கு வந்ததும் காமு தன் தகப்பனாரிடம் சங்கரனைப் பற்றியும் அவன் மனைவியைப் பற்றியும் கூற வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள். அவளைத் திரஸ்கரித்த சங்கரனுக்கு அவளைவிட அதிக அழகான மனைவியோ, அவளைவிடக் குணத்தில் சிறந்தவளோ வாய்க்கவில்லை. இந்த எண்ணம் ஏனோ அவள் மனத்தில் ஒருவித திருப்தியை ஏற்படுத்தியது. பகல் சாப்பாட்டிற்காக ராமபத்திர அய்யர் கடையை மூடிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். இலை போட்டுப் பரிமாறிய பின்பு, காமு அவர் “காலையில் யார் எதிரில் உட்கார்ந்து கொண்டாள். வீட்டிற்கோ போக வேண்டுமென்று சொன்னாயே அம்மா, போயிருந்தாயா?” என்று பெண்ணை விசாரித்தார் ராமபத்திர அய்யர். 

எதைப் பற்றித் தானாகவே வலுவில் கூறவேண்டும் என்று நினைத்திருந்தாளோ அதே விஷயத்தைப் பற்றி தகப்பனாரே கேட்டதும், காமுவுக்கு உற்சாகம் பொங்கி வந்தது. 

“போயிருந்தேன் அப்பா. என் சிநேகிதியின் கணவருக்கு நம் சங்கரனை நன்றாகத் தெரியுமாம்!” என்றாள் காமு. 

‘நம் சங்கரன்’ என்கிற வார்த்தையில் பொதிந்திருந்த அர்த்தத்தில் ராமபத்திர அய்யர் காமுவின் மனோநிலையை ஒருவாறு ஊகித்துக் கொண்டிருந்தார். சங்கரனைப் பற்றிய நம்பிக்கை எங்கோ ஒரு மூலையில் காமுவின் இருதயத்தில் நிலைபெற்று விட்டது. அது அசங்காமல் ஆடாமல் இருந்து வருகிறது. சங்கரன் வேறொருத்திக்குச் சொந்தம் என்று தெரிந்ததும் அந்த நம்பிக்கை மாறவில்லை. இதன் காரணம் என்ன என்பது அவருக்குப் புரியவில்லை. மனித எண்ணங் களுக்கும், மனத்துக்கும் புரியாத சக்தி ஒன்று இருக்கிற தல்லவா? 

“அப்படியா?” என்று கேட்டு விட்டுச் சிறிது நேரம் பேசாமல் இருந்தார் அவர். மறுபடியும் காமுவே பேச ஆரம்பித்தாள். 

“அவர் மனைவி நீலா ரொம்பவும் நாகரிகமாம் அப்பா. யாரையுமே லட்சியம் பண்ண மாட்டாளாம்.” 

”பணக்காரர் வீட்டுப் பெண் இல்லையா அம்மா? அவர் களில் பெரும்பாலோர் அப்படித்தான் இருக்கிறார்கள் இந்தக் காலத்தில்!’- அவர் பதில் பட்டதும் படாததுமாக இருந்தது காமுவுக்கு! 

அதற்குப் பிறகு ராமபத்திர அய்யர் ஒன்றும் பேச வில்லை. எந்த விஷயத்தையும் அவர் பிரமாதப்படுத்த மாட்டார். அவர் சுபாவம் அப்படி. அநேகமாக ஆண்களின் சுபாவமே அப்படித்தான்! பெண்கள்தான் எதையும் கண், காது, மூக்கு வைத்துப் பேசும் பழக்கம் உள்ளவர்கள். காமு இதே விஷயத்தை அவள் அம்மாவிடம் கூறியிருந்தால் அது இதற்குள் தெருக்கோடி வரைக்கும் பரவியிருக்கும். எந்த ரகசியத்தையும் மனத்துள் வைத்துக் காக்கும் சக்தியைப் பெண்கள் அதிகமாகப் பெறவில்லை. 


காமு தையல் இயந்திரத்தின் முன்பு உட்கார்ந்தாள். இயந்திரத்தில் தைப்பதற்கு-அவள் முயன்றாலும், அவள் மனம் நீலா – சங்கரன் பற்றியே எண்ணமிட்டது. பொன் மணியில் இருந்தபோது சங்கரனின் கல்யாணப் பத்திரிகை யைப் படித்தவுடன் ஏற்படாத தாபம், கல்யாணமானவர் களின் புகைப்படத்தைப் பத்திரிகைகளில் பார்த்தபோது ஏற்படாத ஆவல், பட்டணம் வந்த பிறகு அவளுக்கு ஏற்படக் காரணம் என்ன என்பது அவளுக்கே புரியவில்லை.

‘பணத்தால் மனிதன் உயருவதுமில்லை, தாழ்வதும் இல்லை’ என்று அறிஞர்கள் கூறும் வார்த்தையைக் கமலா அடிக்கடி. அவளிடம் சொல்லிச் சொல்லிக் காமுவின் மனத்தில் ஏற்பட்டிருந்த தாழ்வு மனப்பான்மை அகன்று விட்டது. சமூகத்தில் அவள் தன்னையே உயர்வாக நினைக்க ஆரம்பித்தாள். கல்யாணம் ஆகவில்லை என்று நாலு பேருக்கு நடுங்கி அடுப்பங்கரையில் அடைக்கலம் புகுந்த காமு இல்லை அவள் இப்போது. நல்ல குணங்கள் மனத் தில் எழும்போது, கூடவே அகங்காரம், கர்வம் என்ற தீய குணங்களும் ஏற்படும் அல்லவா? நன்மையும், தீமையும் ஒன்றை யொன்று அடுத்து உறவு கொண்டாடுவது தானே உலக இயல்பு? 

யார் வீட்டிலோ கல்யாணப் பெண்ணுக்கு ரவிக்கைகள் தைப்பதற்குக் காமுவிடம் கொண்டு வந்து நாலைந்து துணிகள் கொடுத்திருந்தார்கள். ஆழ்ந்த நீலப் பட்டில் ஜரிகைப் பொட்டுகள் வைத்த துணி ஒன்று. ரோஜா வர்ணத்தில் நட்சத்திரங்கள் போல் மின்னும் ஜரிகை ரவக்கை ஒன்று. பால் வர்ணத்தில் ஜரிகைக் கீற்றுகள் போட்ட துணி ஒன்று. “உடம்போடு ஒட்டினாற் போல் தைத்துவிடு அயமா. தஸ் புஸ் என்று தைத்து விடாதே. ஒரு ரவிக்கைக்கு இரண்டு ரூபாய் வேண்டுமானா லும் கூலி தந்து விடுகிறேன்!” என்று அந்தக் கல்யாணப் பெண்ணே காமுவிடம் நேரில் வந்து கூறியிருந்தாள். 

“அவள் வீட்டுக்காரர் உத்தரவு அப்படி!’ என்று கல்யாணப் பெண்ணுடன் வந்திருந்த இன்னொரு பெண் கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள். 

வாழ்க்கையில் தாம்பத்ய ஒற்றுமையைப் போல் இன்பம் தரக்கூடியது வேறொன்றும் இல்லை. வண்டியில் பூட்டிய மாடுகள் இரண்டும் சமநோக்குடன் வண்டியை இழுக்க வேண்டும். முன்னுக்குப் பின் முரணாக ஒரு மாடு மிரண்டா லும் வண்டி குடை சாய்ந்து விடும். 

மறுபடியும் நீலாவையும், சங்கரனையும் காமுவின் மனம் ஒப்பிட்டுப் பார்த்தது. திடும் திடும் என்று அவள் சிந்தனை யைக் குழப்பும் அந்த நீலாவை அவசியம் நேரில் பார்த்து விட வேண்டும் என்று உறுதி கொண்டாள் காமு. கல்யாணப் பெண்ணின் ரவிக்கைகளை ஒழுங்காகத் தைத்து மடித்து டிராயரில் வைத்துப் பூட்டிவிட்டு, மாலை வகுப்புக்காகப் புஸ்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டாள் காமு. 


அவள் வாயிற்படி இறங்குவதற்கு முன்பு, அங்கு வந்து நின்ற ரிக்ஷா வண்டியிலிருந்து கமலா அவசரமாகக் கீழே இறங்கினாள். பெருமூச்சு வாங்க, “இதோ பார் காமு! அன்றே உன்னிடம் கூறவேண்டும் என்றிருந்தேன். நீலாவும், சங்கரனும் நாளன்றைக்கு எங்கள் வீட்டிற்கு டீ சாப்பிட வருகிறார்கள். அதுவும் கல்யாணம் ஆன பிறகு முதல் முறை இப்போதுதான் எங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். விருந்து சாப்பிடுகிறார்கள். வெறுங்கையுடன் அனுப்பினால் நன்றாக இராது. இந்தப்பட்டுத் துணியை வாங்கி வந்தேன். நீலாவிடம் டோய் ரவிக்கைக்காக அளவும் வாங்கி வ ந்திருக் கிறேன். அழகாகத் தைத்துவிடு. என்ன தெரிந்ததா?” என்று மருதாணிச் சிவப்பில் கண்ணைப் பறிக்கு! பட்டு ஒன்றைக் காமுவிடம் கொடுத்தாள் கமலா. 

காமுவின் மனத்தில் க்ஷண காலத்தில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் தோன்றின. வாழ்க்கையில் முதன் முதலாகக் காலடி வைக்கும்போதே அவளுக்குப் போட்டியாக வந்த நீலாவுக்கா அள் ரவிக்கை தைத்துக் கொடுக்க வேண்டும்? அந்த அழகிய சிவப்பு வர்ணப் பட்டு ரவிக்கையை அணிந்து கொண்டு சங்கரனின் மனத்தை அவள் மகிழ்விக்கப் போகிறாள். அவர்கள் மகிழ்ந்தால் என்ன? மகிழாமல் இருந்தால் காமுவுக்கு என்ன? பணமில்லாத ஏழைப் பெண் என்று ஒதுக்கி வைத்த பணக்கார வீட்டுப் பெண்ணுக்கு, பணக்கார வீட்டு மருமகளுக்கு அவள் ரவிக்கை தைத்துக் கொடுக்க வேண்டுமா? கையில் வைத்திருந்த பட்டை லேசாகத் தடவியபடியே காமு யோசிப்பதைப் பார்த்து, “என்ன காமு! ஒரே யோசனையில் ஆழ்ந்து விட்டாய்? முடியுமா இல்லையா? உனக்கு முக்கியமான வேலை இருந்தால் நானே தைத்து விடுகிறேன்!” என்றாள் கமலா. 

வருவாய் போதாமல் கஷ்டப்பட்ட காமுவுக்குத் தையல் இயந்திரமும், அதற்குத் தேவையான துணிகளும், புஸ்தகங் களும் கொடுத்து உதவிய கமலாவின் வார்த்தையைத் தட்ட முடியவில்லை. “இதென்ன பிரமாதம்! தைத்து விடுகிறேன்” என்று கூறி. துணியை உள்ளே எடுத்துப்போய் வைத்தாள். 

ஊரில் எத்தனையோ பேர்களுக்குத் துணி தைக்கும் காமுவுக்கு அந்தப் பட்டை மட்டும் பிரத்தியேகமான முறை யில் அழகாக வெட்டித் தைக்க வேண்டும் என்கிற ஆவல் தோன்றியது. மிக உயர்ந்த மாதிரியான். மோஸ்தரில் அதை வெட்டி அழகான ரவிக்கையாக ஒரு மணி நேரத்துக்குள் தைத்து முடித்து விட்டாள். ரவிக்கையை மடித்துக் கையில் எடுத்துக் கொண்டு சமையல் அறையில் ஏதோ வேலையாக இருந்த தாயிடம் சென்றாள் காமு. பட்டினம் வந்த பிறகு அம்மாவின் குணமும் அநேகமாக மாறி இருந்தது காமுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. முன்னைப் போல் எடுத்ததற் நெல்லாம் முணுமுணுக்காமல் விசாலாட்சி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள். கிராமத்தைப்போல் வெளியில் நாள் தவறாமல் அப்பளக் கச்சேரிக்கு அவள் போவதற்கு இங்கே இடம் எதுவும் இல்லை. 

”அம்மா! இந்த ரவிக்கை நன்றாக இருக்கிற தா சொல்லுங்கள்?” என்று காமு தன் கையிலிருந்த ரவிக்கை யைத் தாயிடம் காண்பித்தாள். 

“நன்றாக இருக்கிறது. ‘உன் சிவப்பு உடம்புக்கு எடுப்பாக நன்றாக இருக்கும்” என்று கூறி, மகளின் சிவந்த மேனியை ஆசையுடன் பார்த்தாள் விசாலாட்சி. 

“இதன் விலை என்ன தெரியுமா? கஜம் ஏழு ரூபாயாக் கும்! நமக்கு ஒரு ரூபாய் கொடுத்துத் துணி வாங்கவே. கஷ்டமாக இருக்கிறதே” என்று மனம் விட்டுப் பேசிய காமு, “இது யாருக்காகத் தைத்திருக்கிறேன் சொல், பார்க் கலாம்” என்று கேட்டாள், 

“யாருக்காகத் தைத்தால் எனக்கு என்ன? நீ போட்டுக் கொண்டு நான் பார்த்து மகிழப் போகிறேனா என்ன? சாதாரண சீட்டியும்,வாயிலும் தான் நீ கொடுத்து வைத்தது. நீ படித்து உத்தியோகம் பண்ணி சம்பாதித்து இந்த மா திரி விலை உசந்த துணிகளை உடுத்திக் கொள்ளும்போது நான் இருக்கமாட்டேன் காமு! எனக்கு என்னவோ வர வர உடம்பு தள்ளவில்லை. உன் அப்பாவின் உடம்பு பட்டினம் வந்த பிறகு தேறி விட்டது. என் உடம்புதான் பலவீனமாகி விட்டது!” என்று கூறினாள் விசாலாட்சி. 


உண்மையும் அதுவே தான். விசாலாட்சியின் உடம்பு மெலிந்து தான் போயிருந்தது. திரண்டு உருண்டிருந்த தோள்கள் மெலிந்து, முழங்கை வரையில் ரவிக்கை தொள தொளவென்று தொங்கியது. முகம் களையிழந்து வெளுத் திருந்தது. பட்டினம் வந்து இரண்டு மாதங்களுக்கெல்லாம் விசாலாட்சி பத்து வயது அதிகமாகத்தோற்றம் அளித்தாள். ‘காமுவுக்குக் கல்யாணமாகவில்லையே’ என்கிற கவலை அவளையும் அறியாமல் அவள். உடலையும், மனத்தையும் அரிக்கத் தொடங்கி இருந்தது. “பெண்கள் படிக்கிறார் களாம். சுயமாகச் சம்பாதிப்பதாம். ஒருவர் தயவு இன்றி வாழ்வதாம்!” என்பவை போன்ற பேச்சுக்களைக் கேட்டு விசாலாட்சி மனதுக்குள் சிரித்திருக்கிறாள். ‘வீடும் விளக்கும், அன்பும் அறமும், இன்பமும்,காதலும் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படும் இல்லறத்தை விட இவர்கள் படித்துச் சம்பாதித்து நடத்தப் போகும் தனி வாழ்வு சிறப் புடையதா என்ன?’ என்று நினைத்துப் பார்த்திருக்கிறாள். இந்தக் காலத்துப் பெண்களின் போக்கு அவள் மனத்துக்கு ஒன்றும் புரியவில்லை. 

காமுவைப் போன்ற பெண்கள் இரண்டு குழந்தைகளுடன் தெருவில் போகும்போது அவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விடுவாள் விசாலாட்சி. அடுத்த வீட்டுப் பெண் நொடிக் கொருதரம் “என் ஆத்துக்காரருக்கு இது பிடிக்கும், அது பிடிக்கும்’ என்று அன்புடன் சமைப்பதைப் பார்த்து அவள் ஏங்கி இருக்கிறாள். கொடிய க்ஷயரோகக் கிருமிகளை விட மனோ வியாகூலம் மனத்தை இன்னும் துரிதமாகத் துளைத்து விடக் கூடியது. விசாலாட்சியும் அதற்குத்தான் இலக்காகிக் கொண்டிருந்தாள். 

மெலிந்து சோகமே உருவாக உட்கார்ந்திருக்கும் தாயைப் பார்த்ததும் காமுவின் கண்களில் பலபலவென்று நீர் வழிந்தது. 

“அம்மா! நீ இப்படியெல்லாம் மனசை அலட்டிக் கொள்ளக்கூடாது. என்னை உன் பிள்ளை என்று நினைத்து கொள்ளேன்” என்று காமு வாத்ஸல்யத்துடன் கூறிவிட்டுத் தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். தாயின் மனம் மேலும் துயரத்தில் ஆழ்ந்தது. 


விடியற்கால வேளை. கிழக்கே அருணோதயம் ஆகிக் கொண்டிருந்தது. வசந்த காலமாதலால் மரங்களெல்லாம் புஷ்பித்து ‘கம்’மென்று வாசனையை எழுப்பிக் கொண் டிருந்தன. சம்பகம் துளசி மாடத்தை மெழுகிக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். முதல் நாள் இரவைப் பற்றி நினைத்தாலே அவளுக்கு உடம்பு ஒரு தரம் நடுங்கியது. 

முதல் நாள் மாலை, சங்கரன் காரியாலயத்திலிருந்து வருவதற்கு முன்பே நீலா ‘எக்ஸிபிஷன்’ பார்க்கத் தன் சிநேகிதிகளுடன் புறப்பட்டு விட்டாள். அவள் உடுத்திக் கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்ததுமே மீனாட்சி அம்மாள் அவளைப் பார்த்து ஒரு மாதிரியாக விழித்தாள். பிறகு, “இந்தாடி அம்மா! எங்காவது போகிறதானால் முன்னாடியே அவனிடம் ஒரு வார்த்தை சொல்லி விடு. இல்லா விட்டால் ஒரு கடுதாசியானாலும் எழுதி வைத்து விட்டுப் போ. இந்த மாதிரியெல்லாம் சட்டை பண்ணாமல் இருந்தால் அவனுக்கும் பிடிக்காது எனக்கும் பிடிக்காது!” என்றாள். 

“வெளியில் போகக் கூட சுதந்திரமில்லையா என்ன எனக்கு? நீங்கள் தான் கர்னாடகம். அவர் கூடவா படிக்க வில்லை?” என்று கேட்டு விட்டு நீலா, பிறந்தகத்தில் அவளுக்கு ஸ்ரீதனமாகக் கொடுத்திருந்த காரில் போய் ஏறிக் கொண்டு புறப்பட்டாள். 

‘நீங்கள் தான் கர்னாடகம், அவர் கூடவா படிக்க வில்லை’ என்று அவள் கேட்ட வார்த்தைகள் மீனாட்சியின் மனத்தில் சுருக்கென்று குத்தின. ‘கர்னாடகமா? வீட்டை வாசலைக் கவனித்து, கணவ்னுக்குப் பணிவிடை செய்வது கர்னாடகமா? தான் பெற்ற குழந்தைகளைச் சீராட்டி வளர்ப்பது கர்னாடகமா? தன்னைவிட நீலா எந்த விதத்தில் உயர்ந்தவள்? சர்மாவுக்கும், தனக்கும் பல விஷயங்களில் அபிப்பிராய பேதம் இருந்தாலும் சர்மாவைக் கேட்காமல் தான் ஒன்றும் செய்வதில்லையே! குடும்ப விஷயங்களில் எவ்வளவு தான் சச்சரவு ஏற்பட்டாலும் பிறத்தியார் பார்த்துச் சிரிக்கும்படி தான் ஒரு போதும் கணவனைத் தாழ்வு படுத்தியதில்லை. இவ்வாறெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே, கோபம் நிறைந்த கண்களுடன் மீனாட்சி திரும்பிப் பார்த்ததும் அவள் எதிரில், சம்பகம் தான் காணப் பட்டாள். 

“நான் கர்னாடகமாம். இவள் நாகரிகமாம். கேட்டயாடி சம்பகம்? நீயும் இந்த வீட்டுக்கு வந்து பன்னிரண்டு வருஷங்கள் ஆயிற்றே? உன்னை எத்தனை சொல்லி இருப்பேன்? உன் வாயில்  அந்த மாதிரி வார்த்தை இது வரையில் வந்தது உண்டா?” என்று தன் மனத்திலிருந்த ஆத்திரம் பூராவையும் கொட்டித் தீர்த்தாள் மீனாட்சி. 

“சிறிசு அம்மா. கொஞ்ச நாளைக்கு அப்புறம் எல்லாம் சரியாகிவிடும்” என்று சம்பகம் கூறியதும், “சிறிசா? இந்த நாளில் கல்யாணமாகிற போதே இருபது வயசு ஆகிவிடு கிறதே! சிறிசாம் சிறிசு! பத்தா பன்னிரண்டா வயசு?” என்று அவள் பேரில் சீறி விழுந்து விட்டு கூடத்துக்குப்போய் விட்டாள் மீனாட்சி. 


அதற்குப் பிறகு அந்த வீட்டில் பயங்கர அமைதி நிலவ ஆரம்பித்தது. ‘ராத்திரி என்ன சமையல் செய்வது?’ என்று கேட்ட சமையற்கார மாமிக்கு மீனாட்சியிடமிருந்து பதில் ஒன்றும் கிடைக்கவில்லை. “கடைத்தெருவுக்குப் போய்ஏதாவது புடவை பார்த்து வரலாம்” என்று கூப்பிட்ட ருக்மிணியிடம் கூடப் பேசவில்லை மீனாட்சி. சரியாக மணி ஐந்தே முக்காலுக்கு வாசல் ஹாலில் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து, சங்கரனின் வரவை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். 

“எனக்கு நிச்சயதாம்பூலம் மாற்றின அன்றைக்கே தெரியும்” என்று சமையற்கார அம்மாமி தலையைப் பலமாக ஆட்டினாள், சம்பகத்தைப் பார்த்து. 

”பாரேன்,உன் மாமியார் அதிகம் பேசினால் அவள் தனிக் குடித்தனம் போகாவிட்டால் என் பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுகிறேன்” என்று பேலும் தன் அபிப்பிராயத்தை ஊர்ஜிதப்படுத்தினாள் அவன் . 

“இந்த மாதிரி சுபாவக்கர்ராளோடு அதிகம் வைத்துக் கொள்ளக்கூடாது மாமி” என்றாள் சம்பகம். 

மாலை ஆறு மணிக்கு சங்கரன் காரியாலயத்திலிருந்து வீடு வந்தான். வரும்போதே முகமெல்லாம் வாடிப் போயிருந் தது. என்றுமில்லாமல் தெருப் பக்கம் நாற்காலியில் உட்கார்ந்திருந்த தாயைக் கண்டதும், அவன் மனம் திடுக்கிட்டது. எள்ளும், கொள்ளும் படபடவென்று பொரிந்து தள்ளி விடும் கடுங்கோபத்துடன் முகம் சிவக்க மீனாட்சி ‘உஸ்ஸென்று ஒரு பெருமூச்சு விட்டாள். 

“என்ன அம்மா?” என்று கேட்டுக் கொண்டே தலையை கைகளாலும் தாங்கிக் கொண்டு தாயின் அருகில் ட்கார்ந்தான் சங்கரன். 

“சாயங்கால வேளையில் தலையில் கையை வைத்துக் கொண்டு இதென்னடா அவலட்சணம்!” என்று கேட்டுக் கொண்டே. தாயாருடன் சேர்ந்து ஒந்துப் பாட ருக்மிணியும் அங்கு வந்து சேர்ந்தாள். 

“பெண்டாட்டி அமைந்திருக்கிற லட்சணம் மாதிரி இதுவும் ஒன்று” என்று மீனாட்சி மேலும் ‘புஸ்’ ஸென்று பெருமூச்சு விட்டாள். 

 “ஏண்டா! நானும் தான் பார்க்கிறேன்; வீட்டில் யாரையும் மதிக்கிறதில்லையே அவள்? இந்த மாதிரி இருந்தால் நன்றாக இருக்கிறதா? நாலு பேர் பார்த்தால் என்ன சொல்ல மாட்டார்கள்?” என்று அடுக்கிக் கொண்டே போனாள் ருக்மிணி. 

தாயு,மகளும் மாறி மாறி யாரைப் பற்றிப் பேசு கிறார்கள் என்பது புரியாமல் சங்கரன் திகைத்துப் போனான். 

“வாயைத் திறக்கிறானா பாரடி! இவன் கொடுக்கிற இடம் தானே இத்தனைக்கும் காரணம்!” என்று மீனாட்சி ஆத்திரத்துடன் கூறினாள். 

அதற்குள் பானு அங்கு வந்து சேர்ந்தாள். “சித்தப்பா! சித்தி பாட்டியை ‘எக்ஸிபிஷ’னுக்குக் கூட்டிக் கொண்டு போகவில்லை என்று பாட்டிக்கும் அத்தைக்கும் ஒரே கோபம்” என்று சங்கரனின் சங்கடமான நிலையை ஒருவாறு தீர்த்து வைத்தாள் அவள். 

“எனக்கு ‘எக்ஸிபிஷ’னும் வேண்டாம். ஒண்ணும் வேண்டாம். நீயே கேளடா நியாத்தை! பொழுது விடிந்து பொழுது போனால் ‘அங்கே போகிறேன், இங்கே போகிறேன்’ என்று கிளம்பி விடுகிறாள் உன் பெண்டாட்டி! கிளம்புகிற வரைக்கும் யாரிடமும் சொல்லுகிறதில்லை. இன்றைக்கும் புறப்படும்போது சொன்னேன், ‘அவனிட மாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போகக்கூடாதா. என்று. அதற்கு நான் கர்னாடகமாம். நீ படித்தவனாம். அவள் எங்கு போனாலும் ஒன்றும் சொல்ல மாட்டாயாம்”. 

நெஞ்சழுத்தமும் அகம்பாவமும் நிறைந்த மீனாட்சியின் கண்கள் கலங்கின. சங்கரன் ஒருமுறை நீலாவை மனதார வாழ்த்தினான்! பரமசாதுவாக இருக்கும் சம்பகத்தைத் தன் தாய் படுத்தும் பாட்டிற்கு இப்படி வாயாடியாக ஒரு மருமகள் இருக்க வேண்டியது தான்! இருந்தாலும், மாமியார் என்று ஒரு மதிப்பு வேண்டாமா? ஆயிரம் பெற்றாலும் அடக்கம் வேண்டாமா? 

“நாளையிலிருந்து அவள் ஜோலிக்கு நான் போக மாட்டேன். தெரிந்ததா? அடக்கிக் டுடித்தனப் பாங்குக்கு நீ கொண்டு வருவாயோ, இல்லை, நீயே அவளுக்கு அடங்கி நடப்பாயோ?” என்று கூறிவிட்டு மீனாட்சி உள்ளே எழுந்து போய் விட்டாள். 

சங்கரனுக்கு ஏற்கெனவே தலையை வலித்துக் கொண் டிருந்தது. பணக்கார வீட்டுப் பெண் என்கிற அகம்பாவத் தைச் சில காலமாகவே  நீலா கணவனிடம் காட்டத் தொடங்கி இருந்தாள். இன்று தன் தாயையும் அவள் உதாசீனமாகப் பேசிவிட்டுப் போயிருந்தது வேறு அவன் கோபத்தை அதிகமாக்கி விட்டது. 


மணி ஏழு, எட்டு என்று கடிகாரத்தில் ஆகிக் கொண் டிருந்தது. வழக்கத்துக்கு மாறாக அன்று எல்லோரும் சீக்கிரமே சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டு விட்டார்கள். சமையற்கார மாமியிடம் மீனாட்சி, நீலாவின் சாப்பாட்டை சாப்பிடும் கூடத்தில் ஒரு மூலையில் வைத்து விட்டுப் படுத்துக் கொள்ளச் சொல்லி விட்டாள், அந்த வீட்டில் தினம் யாராவது சினிமாவுக்கோ, நாடகத்துக்கோ கண்காட்சிக்கோ போய் விட்டு இரவு பத்து மணிக்கு வந்து சாப்பிடுவார்கள். சமையற்கார மாமி காத்திருந்து உணவு பரிமாறுவாள். இன்று நீலாவை அவமதிக்க வேண்டும் என்று மீனாட்சி அம்மாள் இந்த உத்தரவை சமையற்காரிக்கு இட்டாள். 

கோடை காலமாதலால் வெப்பம் அதிகமாக இருக்கவே சம்பகம் பானுவை வைத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்திருந்தாள். மல்லிகைப் பந்தலிலிருந்து ‘கம்’மென்று வாசனை வீசியது. வெள்ளை வெளேர் என்று மலர்ந்திருந்த மல்லி மலர்கள் நிலவொளியில் வெள்ளி மலர்களைப் போல் பிரகாசித்தன. வானவெளியில் சந்திரன் ஊர்ந்து செல்வதைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சம்பகம். தொலைவில், ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் வசிக்கும் கணவனை நினைத்து ஏங்கியது. அவள் மனம்!’உலகத்துக்குப் பொதுவாக ஒளிவீசும் சந்திரன், தன் துயரை தன் மனக்கசப்பை அங்கு களிப்புடன் வாழும் கணவனிடம் கூறுவானோ?’ என்று நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள். கவலையால் முகம் வாடி இருந்தாலும், களை நிறைந்த அந்த முகம் பார்ப்பதற்கு இனிமையாகத் தான் இருந்தது. 

தாயின் சிந்தனையைக் கவனித்த பானு, “அம்மா! நான் உன்னைப் போல் இருக்கிறேனா?” அப்பாவைப் போல் இருக்கிறேனா?” என்று கேட்டாள். குழந்தை வளர்ந்து பெரியவள் ஆக ஆகக் கேள்விகளும் பிரமாதமாக இருந்தன. பானு னு அநேகமாசத் தாயைப் போலத்தான் இருந்தாள். ஆனால் நீண்டு தடித்த இமைகளுடன் இருக்கும் கண்கள் அவள் தகப்பனாரைப் போல் இருந்தன. சதா துயிலில் ஆழ்ந்த தோற்றமளிப்பவை. ‘கண்களும், புருவங்களும் அவரைப் போல் தான் இருக்கின்றன” என்று சம்பகம் வாய் விட்டுக் கூறினாள். 

ஒரு தடவை அவள் கணவன் சம்பகத்தைப் பார்த்து “இப்படி, தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கறுப்பாக இருக்கிறேனே? பலாச்சுளை மீது ஈ உட்கார்ந்த மாதிரி இருக்கிறதே உன்னையும் என்னையும் பக்கத்தில் பக்கத்தில் நிறுத்தினால்! எதைக் கண்டு என்னிடம் மயங்கி விட்டாய் சம்பகா?” என்று கேட்டான். 

சம்பகம் வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள். ஆழ்ந்து தன்னையே நோக்கும் புருஷனின் கண்களின் குளுமையான பார்வையைச் சந்திக்கும் சக்தியை இழந்துதான் அவள் தலையைக் குனிந்து கொண்டாள். மீண்டும் அவன் அவளை வற்புறுத்திக் கேட்டதும், “உங்கள் கண்களின் அழகில் மயங்கித்தான்!” என்று உதடு அசங்காமல் சம்பகம் கூறினாள். அவை யெல்லாம் இன்று கனவு போல் ஆகிவிட்டன. மேல் படிப்புக்காக அயல் நாடு போனவன், மனைவி குழந்தையை மறந்து விட்டான்! 

பானு தூங்கி விட்டாள். அவள் தூங்கியதையும் கவனியாமல் சம்பகம் இறந்த காலத்தைப் பற்றியே எண்ண மிட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். மனைவியின் வரவை எதிர்பார்த்துக் கண் பூத்துப் போய், தோட்டத்துப் பக்கம் வந்தான் சங்கரன். மல்லிகைப் பந்தலின் கீழே உட்கார்ந்திருந்த சம்பகத்தைப் பார்த்ததும், “மன்னி! நீலா உங்களிடமும் சொல்லிவிட்டு வெளியே போகவில்லையா?” என்று கேட்டான். 

நீலாவைப் பற்றி அவனிடம் என்ன கூறுவது? “உன் மனைவி யாரைத்தான் மதிக்கிறாள்? அவள் மகா கர்வக்காரி, அகம்பாவம் பிடித்தவள்” என்று அவனிடம் சொல்வது சரியாகுமா? சம்பகத்தின் பெருந்தன்மையான குணம், பொறுமை, நிதானம் முதலியவை அவளை அவ்விதம் கூறவொட்டாமல் தடுத்தன. 

”கிளம்புகிற போது நான் சமையலறையில் வேலையாக இருந்தேன். உலக அனுபவமும் குடும்பப் பொறுப்பும் ஏற்பட இன்னும் கொஞ்ச காலம் ஆகவேண்டும். பிறகு தன்னால் திருந்திவிடுவாள், பாருங்கள்” என்று இருவருக்கும் பொதுவாகப் பேசினாள் சம்பகம், 

தெருவில் பளபளவென்று மின்னிக் கொண்டு நீலாவின் கார் வேகமாக உள்ளே வந்தது. அதிலிருந்து இறங்கி கையிலிருந்த அழகுப் பையைச் சுழற்றிக் கொண்டே ஒய்யார நடை போட்டுக் கொண்டு வந்தாள் நீலா.

– தொடரும்…

– ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது.

– பனித்துளி (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1996, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email
சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *