கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 2,171 
 
 

(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7

6 – இடமாற்றம்

சங்கரன் பொன்மணி கிராமத்தை விட்டு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அவனுடைய வாழ்க்கை யில் இந்த ஆறு மாதங்கள் பல மாறுதல்களைச் சிருஷ்டித்து விட்டன. மாமனாரால் பரிசாக அளிக்கப்பட்ட நீல வர்ணக் காரில் அவன் மனைவியும், அவனும் உல்லாசமாக பவனி வருவது சகஜமாகி விட்டது. அவள் கொண்டு வந்த சீர் சிறப்புகளை ஊராரிடம் காட்டி மகிழ்வது மீனாட்சி அம்மாளுடைய வேலை. ஆனால், பொன்மணி கிராமத்தில் ராமபத்திர அய்யரின் மனத்துக்கு ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் சித்த சுவாதீனத்தை இழந்தார். 

காமுவின் வாழ்வில் மட்டும் எந்தவிதமான மாறுதலை யும் இந்த ஆறு மாதங்கள் சிருஷ்டிக்கவில்லை. வசந்த காலம், கல்யாண மாதங்கள் எல்லாம் உருண்டு ஓடிக்கொண் டிருந்தன. கல்யாணமாகாமல் தனக்குப் பளுவாக இருக்கும் மகள் மீது தாய்க்கு வெறுப்பு ஏற்பட்டது. “கிழவனுக்கா கொடுப்பேன் காமுவை? உன் தம்பிக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது!” என்று ஏசிய ராமபத்திர அய்யர் மனம் உடைந்து இருந்தார். ‘முத்தையா மாமாவையே கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தால் ஊராரின் கேலிப் பேச்சுகளைக் கேட்காமல் இருந்திருக்கலாம். கட்டிக் கொள்ளக் கூடச் சரியான புடவை இல்லாமல் இப்படிச் சீரழிய வேண்டாம்’ என்றெல்லாம் நினைத்து வருந்தினாள் காமு. 

சித்தசுவாதீனம் இல்லாத தகப்பனாருடனும், சதா சிடுசிடுக்கும் தாயாருடனும் காமுவின் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. சங்கரனின் நினைவு மாத்திரம் அவள் மனத்தில் பசுமையுடன் இருந்தது. ‘சங்கரன் உன்னுடை யவன்’ என்று யாரோ அவள் காதில் கூறுவது போன்ற பிரமை சதா அவளுக்கு ஏற்பட்டு வந்தது. இந்த ஆசை அநியாயமானது என்பதை உணர்ந்தே காமுவின் மனம் ஆசைப் புயலில் சிக்குண்டு தவித்தது. 

கிராமத்தில் வேத அத்யயனம் செய்யும் பிராம்மணப் பிள்ளை ஒருவன் அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முன் வந்தான். தன் புத்தி நிதானத்துக்கு வந்தபோது ராமபத்திர அய்யர் காமுவைக் கூப்பிட்டுக் கேட்டார். மெளனமாகக் கண்ணீர் வழிய நிற்கும் காமுவைப் பார்த்ததும் அவள் மனநிலை அவருக்கு விளங்கியது. தானே அவளிடம் ஆசைப் பயிரை நட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்து, அதை வேருடன் பிடுங்கி எறிய முற்பட்டது எவ்வளவு மகத்தான பாவம் என்பதை விவேக்சாலியான அவர் மனது அறிந்து கொண்டது. “காமு! காமு!” என்று மனம் உருகிக் கண்ணீர் விட்டார். 

இதுவரையில் பேசா திருந்த காமுவும் தகப்பனார் அருகில் வாஞ்சையுடன் உட்கார்ந்து, “அப்பா! என்னைவிட வயசான எவ்வளவோ பெண்கள் கல்யாணமில்லாமல் இருக்கிறார்கள். படித்துவிட்டு உத்தியோகம்செய்கிறார்கள். போன வாரம் கூட கிராம ஆஸ்பத்திரிக்கு டாக்டர் ஒருவர் வந்திருந்தார். அந்த அம்மாளுக்கு இருபத்தைந்து வயசு இருக்கும். கல்யாணம் ஆகவில்லையாம். நானும் ஏதாவது படித்து வேலை பார்க்கிறேனே அப்பா? இந்த ஊரிலே நமக்கு என்ன வைத்திருக்கிறது? பட்டினத்துக்குத் தான் போய் இருக்கலாமே!” என்று கேட்டாள் தகப்பனாரிடம். பிறந்தது முதல் வளர்ந்து வந்த கிராமத்தை விட்டுப் போவதற்கு வருத்தமாகத்தான் இருந்தது அவளுக்கு. 

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு வந்த சுப்பரமணி, “என்னம்மா காமு! இந்த ஊரில் இருக்கிற வரைக்கும் தான் உனக்குக் கல்யாணமாகவில்லை. பட்டினம் போன பிறகாவது சீக்கிரமாக நடக்கட்டும்” என்று தன் வெள்ளை மனத்துடன் காமுவை ஆசீர்வதித்தார். 

அதற்குள் காமுவின் யோசனையை ஏற்பதென முடிவு செய்த ராமபத்திர அய்யர், “நீதான்’ பார்த்துக்கொள் அப்பா பசுமாட்டை!” என்று கறவைப் பசுவைச் சுப்பரமணி யிடம் விட்டுவைத்தார். வாயில்லாத பிராணியான அதுகூட கண்களில் கண்ணீர் வழியத் தன் எஜமானரைப் பிரிய மனமில்லாமல் பிரிந்தது. மணம் வீசும் மல்லிகைக் கொடியும், ருசி மிகுந்த வாழை, கொய்யா மரங்களும், குளிர்ச்சியான கிணற்றங்கரையும், தொலைவில் சமுத்திரம் போல் தளும்பி வழியும் ஏரியும், பொன்மணி கிரர்மத்தின் ஜனங்களும் சேர்ந்து காமுவையும், அவள் குடும்பத்தாரையும் பிரிய மனமில்லாமல் விடை கொடுத்தார்கள். “ஆயிரம் உருண்டைகள் இருந்தாலும் விசாலம் மாமி வந்தால் நொடியில் தீர்ந்துவிடும்” என்று அப்பளக் கச்சேரிப் பெண்கள் கண்களில் கண்ணீர் வழியக் கூறினார்கள். 

ஓட்டு வீடானாலும் சகலவிதமான சுதந்திரத்துடனும் அந்த வீட்டில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். தெற்குப் பக்கமாக இருந்த திண்ணையில் கடுங்கோடை காலத்தில் கூட ‘சில்’லென்று காற்று வீசும். ராமபத்திர அய்யர் அடிக்கடி “வடக்குப் பார்த்த அரண்மனையைவிடத் தெற்குப் பார்த்த தெருத் திண்ணை உயர்வு” என்று சொல்லி மகிழ்வார். நாள் தவறாமல் குடலை நிறையப் பூத்துக் குலுங்கும் நித்திய மல்லிகைக் கொடி தெரு பூராவும் பந்தல் போட்டது போல் படர்ந்து மணம் வீசிக் கொண் டிருக்கும். வீட்டிற்குத் தேவையான கீரை, காய்கறிகள் காய்க்கும் கொல்லைப்புறம், கரும்பைப் போல் இனிக்கும் கிணற்று நீர், அதைச் சுற்றிலும் அடர்த்தியாக வாழை மரங்கள், மத்தியான வேளைகளில் ‘கீச் கீச்’ சென்று சதங்கை ஒலி எழுப்பும் சிட்டுக் குருவிகளும், அணிற்பிள்ளை களுமாக அந்தக் கிணற்றங்கரை இன்ப வனமாக இருந்து வந்தது. 


இனிமேல் பட்டண வாசத்தில் ஒரு அறைக்கு மாதம் பதினைந்து ரூபாய் வாடகை கொடுக்க வேண்டும். வீட்டுச் சொந்தக்காரருக்குப் பயந்து நடக்க வேண்டும். வாடலும், சொத்தையும், உலர்ந்ததும் தான் சாப்பிட வேண்டும். பச்சைப் பசேல் என்று காய்கறிகள் எங்கே கிடைக்கிறது?” விசாலாட்சி யோசனையில் ஆழ்ந்தவளாகக் கன்னத்தில் கை ஊன்றி வண்டியில் உட்கார்ந்திருந்தாள். ராமபத்திர அய்யரின் மனம் பலவிதமான யோசனைகளில் ஆழ்ந்து கிடந்தது. காமு ஒருத்திதான் உற்சாகமாக இருந்தாள். பணம் இல்லாத குறைவால் தன் வாழ்வு தாழ்வடையக் கூடாது. எப்படியாகிலும் முன்னுக்கு வரவேண்டும் என்கிற ஆசையால் தானே அவள் பட்டினம் போகிறாள்? 

“வீடு விற்ற பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டாள் விசாலாட்சி, கணவனைப் பார்த்து. 

“என்னத்தைச் செய்கிறது? எனக்கு என்ன தெரியும்? நடேசனைப் போய்ப் பார்க்கிறேன்” என்றார் ராமபத்திர அய்யர். 

“த்சூ” என்று சூள் கொட்டினாள் விசாலாட்சி. 

“பணக்காரர் உறவே நமக்கு வேண்டாம் அப்பா!” என்றாள் காமு கண்டிப்பாக. 

“முன் பின் தெரியாத ஊருக்குப் போகிறோம். யார் உதவியால் முன்னுக்கு வருவது?” என்று கேட்டார் தகப்பனார். 

“அவரைப் போல் ஆயிரம் பேர்கள் இருக்கும் பட்டினத்தில் அவர்கள் வீட்டைத் தேடிக் கொண்டுதான் போக வேண்டுமாக்கும்! சத்திரம் சாவடி ஒன்றும் கிடையாதா என்ன, அங்கே?” என்று கோபத்துடன் கேட்டாள் காமு தகப்பனாரைப் பார்த்து. பெண்ணின் மனம் எவ்வளவு தூரம் புண்பட்டிருக்கிறது என்பதை ராமபத்திர அய்யர் உணர்ந்து கொண்டார் அதன் பிறகு காமுவாவது அவள் பெற்றோராவது ஒன்றும் பேசவில்லை. 


ரயில் வண்டியில் காமுவுக்குப் பேச்சுத் துணைக்காகப் படித்த பெண் ஒருத்தி அகப்பட்டாள். 

ஆடம்பரம் இல்லாத ஆடைகளை உடுத்தியிருந்த அவள் தேகத்தில் அதிகமாகத் தங்கம் வைரம் எதுவும் மின்ன வில்லை. கையில் மெல்லிய தங்க வளையல்கள் இரண்டும், கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலியும் பூண்டிருந்தாள். கல்வியின் மேதையால் ஆழ்ந்து ஜ்வலிக்கும் கருவிழிகள். மஞ்சள் பூசிக் குளித்த மாதிரி தாழம்பூ நிறம். மரியாதையும் விநயமும் உருவாக உட்கார்ந்திருந்தாள், அந்தப் பெண்மணி.

முதலில் இரண்டு மூன்று ஸ்டேஷன்களை வண்டி தாண்டுகிற வரையில் அந்தப் பெண்மணி பேசவில்லை. கொட்டுக் கொட்டென்று உட்கார்ந்திருக்கும் காமுவைப் பார்த்து அந்த வாரத்திய தமிழ்ப் பத்திரிகை ஒன்றை எடுத்துக் கொடுத்தாள் அவள். காமு அதை வாங்கிக் கொண்டு, “பரவாயில்லை, நீங்கள் படித்துவிட்டுத் தாருங்கள்” என்றாள். 

“நான் படித்து விட்டேன்” என்று பதில் கூறினாள் அந்தப் பெண்மணி. பிறகு மெதுவாகப் பேச ஆரம்பித்த வர்கள் பல விஷயங்களைப் பற்றியும் பேசினார்கள். உயர்தரக் கல்வி பயின்றுவிட்டு அந்தப்பெண், கலாசாலை ஒன்றில் ஆசிரியை வேலை பார்ப்பதாகக் கூறினாள். மாதம் இருநூறு ரூபாய்களுக்கு மேல் சம்பாதிப்பதாகவும், அவளுடைய கணவன் சர்க்கார் வேலையில் இருப்பதாகவும், கல்யாணமாகி ஒரு வருஷம் ஆயிற்று என்றும் கூறினாள். காலேஜ் படிப்பு இல்லாவிட்டாலும் காமு சுமாராகப் படித்து வேலை பார்க்கலாம் என்றும் தைரியம் கூறினாள். 

என்னைப் பார்க்க வந்தபோது என் கணவர் வீட்டார். ஆயிரம் ரூபாய் வரதட்சிணை கேட்டார்கள். எனக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. ‘நானும்தான் படித்திருக் கிறேன். எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்களேன்’ என்று அவர்களை நான் திருப்பிக் கேட்டேன்!” என்று கூறிவிட்டு அவள் கலகல வென்று சிரித்தாள். இப்படி ரயிலில் பொழுது போவது தெரியாமல் காமுவும், அந்தப் பெண்ணும் நெருங்கிப் பழகினார்கள். 

பட்டினம் வந்ததும் அவள் காமுவிடம் தன் விலாச த் தைக்கூறி, ஏதாவது உதவி தேவையானால் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டுப் போனாள். 


மத்தியானம் சாப்பிடுவதற்காக நீலா மாடி அறையி லிருந்து கீழே இறங்கி வந்தாள். முழங்கை வரை நீண்டிருக்கும் ‘லினன் சோலி’ மீது வெண்மையான மஸ்லின் புடவை காற்றில் பறந்து கொண்டிருந்தது. உதடுகளில் வெற்றிலைக்குப் பதிலாகச் சிவப்பு சாயத்தைத் தீட்டி இருந்தாள். இரட்டைப் பின்னல்களை எடுத்து முன்புறம் போட்டிருந்தாள் அவள். சமையற்கட்டின் போஜன கூடத்தில் அவள் வருவதற்கு முன்பே வெள்ளித் தட்டை வைத்து மணை போட்டிருந்தாள் சமையற்கார மாமி. தூங்கி வழிந்த கண்களோடு நீலா மணையில் வந்து உட்கார்ந்து கொண்டாள். குடும்பப் பெண்ணுக்கு இருக்க வேண்டிய அன்போ, அடக்கமோ எதுவுமில்லாமல், யாரையும் லட்சியம் பண்ணாமல் அவள் இருப்பதைப் பார்த்ததும் சம்பகத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘கணவன் எழுந்திருப்பதற்கு முன்பு தான் எழுந்து, கணவன் உறங்கிய பின்பு உறங்கும்’ பாரத நாட்டுப் பெண்களின் பண்பாடு எங்கே? பகல் பதினோரு மணிவரை அரைத் தூக்கத்தில் கழிக்கும் இந்த நீலா எங்கே? 

“ஏனம்மா? உன் ஓரகத்தி ஊரிலிருந்து வந்திருக் கிறாளே, பார்த்தாயா?” என்று கேட்டுக் கொண்டே சாப்பிடும் கூடத்தை அடைந்தார் சர்மா. சமையலறை வாசற்படியில் உட்கார்ந்திருந்த சம்பகம் மரியாதையாக எழுந்து நின்றாள். நீலா அதற்கு அவரிடம் நேரிடையாகப் பதில் ஒன்றும் கூறாமல், ”ஓஹோ!” என்று தன் வில் போன்ற புருவங்…ளை நெரித்துச் சம்பகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். “பலரால் அலட்சியம் செய்யப்பட்டும் லட்சியம் நிறைவேறும் வரையில் அலட்சியத்தைச் சகித்துக் கொள்ளுவேன்” என்று கூறுவது போல் சம்பகமும் நீலாவைப் பார்த்தாள். பிறகு, “இன்று காலையில் தான் வந்தேன்” என்றாள். 

சில நிமிஷங்களில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு நிலா வெள்ளித் தட்டிலேயே கை அலம்பி விட்டு எழுந்தாள். உடனே சமையற்கார மாமியைப் பார்த்து, ‘மூன்று மணிக்கு சினிமாவுக்குப் போகிறேன் மாமி. அதற்குள் காபி போட்டு விடுங்கள்” என்று கூறி விட்டு, ‘அவள் ஏதாவது தன்னுடன் பேசுவாளா’ என்று நிற்கும் சம்பகத்தைக் சுவனியாமல் மாடிக்குச் சென்று விட்டாள் நீலா. சமையற் கார மாமி ‘ஹூம்’ என்று ஒரு பெருமூச்சு விட்டாள். 

“பார்த்தாயாடி அம்மா? தட்டை எடுத்து அலம்பி வைக்கக் கூட உன் ஓரகத்திக்கு ஒழிவில்லை. ஒரு நாளைக்கு ஆறு தடவைகள் முகம் அலம்பிப் பவுடர் பூச ஒழிவிருக்கிறது! இவள் தட்டை அலம்புவுதற்காக உன் மாமியாரை ஐந்து ரூபாய் சம்பளம் கூடப் போட்டுத் தரச் சொல்லி கேட்கப் போகிறேன். ஆமாம்!” என்று கோபமாகக் கூறினாள், மாமி. 

“இப்படியும் குடித்தனப் பாங்கு தெரியாமல் பெண்களை வளர்க்கிற பெற்றோர்கள் இருக்கிறார்களா? படித்துப் பட்டம் பெற்று சமூக சேவை செய்கிறேன் என்று ஜம்பமாக நாலு பேர் எதிரில் வந்து விடுகிறார்கள் இந்தப் பெண்கள்! அவர்கள் வீட்டைப் போய்ப் பார்த்தால் நாய் கூட அங்கு தலை வைத்துப் படுக்கும் ஸ்திதியில் இருக்காது. மாலையில் களைத்து வீட்டுக்கு வரும் கணவனுக்கு ஒரு கோப்பை தண்ணீர் கொடுப்பதற்கு மனைவி வீட்டில் இருக்க மாட்டாள். அவர்கள் வழியைப் பின் பற்றுபவள் தான் நீலாவும்” என்று ஏதேதோ எண்ணமிட்டாள் சம்பகம். 

இதற்குள் இடை வேளை சாப்பாட்டிற்காகப் பள்ளிக் கூடத்திலிருந்து வந்த பானு தன் தாயாரிடம் வந்து, “அம்மா! சித்தியைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தாயே? அதோ பார் அம்மா, மாடிக்குப் போகிறாள் சித்தி!” என்று கூறிவிட்டு ஆவல் ததும்பும் குரலில், “சித்தி, சித்தி! ங்கே வாயேன்” என்று கூப்பிட்டாள் குழந்தை. 

நீலா ஒரு வித மிடுக்குடன் திரும்பிப் பார்த்தாள். “ஆகட்டும் வருகிறேன். இப்போது ஒன்றும் முழுகிப் போய் விடவில்லை பார்” என்று கூறி விட்டு, விடுவிடு என்று மாடிப் படிகளைக் கடந்து சென்று விட்டாள். அவள் பேச்சைக் கேட்ட சமையற்கார மாமி முகத்தை ஒரு குலுக்குக் குலுக்கினாள். அவள் முகபாவம். “பார்த்தாயா அவள் கர்வத்தை?” என்று சேட்பது போல் இருந்தது. 

“ஏன் அம்மா சித்தி ஒருத்தருடனும் சரியாகப் பேச மாட்டேன் என்கிறாள்?” என்று பானு சம்பகத்தைக் கேட்டாள். 

“எனக்கும் தெரிய வில்லையே, பானு. புதுசு பாரு. பழக வேண்டாமா?” என்று பதில் கூறினாள் சம்பகம். அவள் மனம் மட்டும் நீலாவின் போக்கை வியந்து கொண்டே இருந்தது. 

“குழந்தையோடு பேசுகிறதுக்குக் கூட வருஷக் கணக்கில் பழக வேண்டுமா சம்பகம்? கபடமில்லாதவர் களைக் குழந்தை மனம் படைத்தவர்கள் என்று நாம் சொல்லுவதில்லையா?” 

சமையற்கார மாமி நீலாவின் பேரில் ஏதோ சொல்ல ஆசைப்படுகிறாள் என்பது சம்பகத்துக்குத் தெரிந்து விடவே பேச்சை வளர்த்த விரும்பாதவள் போல் அவள் அப்பால் போய்விட்டாள். 

பகல் மூன்று மணிக்கு நீலா காபி சாப்பிட கீழே வந்தாள். அப்பொழுது அவள் உடை அலங்காரம் வேறு தினுசாக மாறி இருந்தது. பதினெட்டு முழப் புடவையை மடிசார் வைத்துக் கட்டிக் கொள்ளும் மீனாட்சி அம்மாள். படு கர்னாடகமான மீனாட்சி அம்மாள்- தன் நாட்டுப் பெண் பைஜாமாவும், ஜிப்பாவும் ஆட்சேபிக்க முடியவில்லை! காபி அருந்திவிட்டு, நீலா சினிமாவுக்குக் கிளம்பினாள் அவள் சமையற்கட்டைத் தாண்டுவதற்குள் மீனாட்சி அம்மாள் தயங்கிக் கொண்டே அவள் எதிரில் வந்து நின்றாள். பிறகு மென்று விழுங்கிக் கொண்டே, “ஏனம்மா சங்கரனும் வருகிறானோ உன்னோடு சினிமாவிற்கு?” என்று கேட்டாள். 

“‘நான் ஒன்றும் அவரை வரச் சொல்ல வில்லையே? இந்த வீட்டிலே பொழுது போகவில்லை எனக்கு! திடீரென்று நினைத்துக் கொண்டேன். புறப்பட்டு விட்டேன்” என்றாள் நீலா. 

தமிழ் நாட்டில் மாமியார் ஸ்தானம் வகிக்கும் எந்தப் பெண்மணியும் நாட்டுப் பெண் தன் கணவனிடம் கூடக் கூறாமல் வெளியில் போவதை ஆட்சேபிக்காமல் இருக்க மாட்டாள். மீனாட்சி அம்மாளின் முகம் ஜிவுஜிவு என்று வெந்தது. யோசித்தக் கொண்டே நிற்பவளை மதிக்காமல் நீலா விடுவிடு என்று நடந்து, தெருக் கதவைத் திறந்து கொண்டு போய் விட்டாள். நிமிர்ந்து பார்க்கும் மீனாட்சி அம்மாளின் எதிரில் ருக்மிணிதான் நின்றுகொண்டிருந்தாள்! 

“பார்த்தாயாடி!” என்று அதிசயத்தோடு பெண்ணைக் கேட்டுவிட்டு மீனாட்சி அம்மாள் மோவாயில் கையை வைத்துக் கொண்டு நின்றாள். 

“பார்க்கிறேனே அந்த வேடிக்கையை தினமும்தான்! சங்கரனை அவள் ஒரு சொல்லாக் காசுக்குக் கூட மதிக்க மாட்டாள். ஆமாம், சொல்லி விட்டேன். இப்பொழுதே அவனிடம் சொல்லி. கொஞ்சம் கண்டித்து வைக்க வேண்டும் ஆமாம்” என்றாள் ருக்மிணி. 

தாய்க்கும். மகளுக்கும் இடையில் மறுபடியும் சர்மா வந்தார். வீட்டிலே இன்னும் கொஞ்ச நாளைக்குள் ஏற்படப் போகும் புயலின் அறிகுறிகள் ஏற்கெனவே தோன்ற ஆரம்பித் திருப்ப தாகத்தான் அவர் நினைத்தார். கையில் சதா பகவத் கீதையை வைத்துக் கொண்டு வேதாந்த விசாரணையில் அவர் மூழ்கி இருப்பதால் புயலையும், அமைதியையும், இன்பத்தையும், துன்பத்தையும், ஆசையையும், நிராசையையும், சகலத்தையும் சிருஷ்டிப்பவன் அவனே என்று மனத்தைத் தேற்றிக் கொண்டு விடுவார் சர்மா. 

மீனாட்சி அம்மாள் தன் கணவனை வெட்டும் பார்வையில் ஒரு தடவை பார்த்து விட்டு முகத்தை வேறுபுறம் திருப்பி ஒரு பெருமூச்சு விட்டாள். 

“பார்த்தீர்களா?” என்று ருக்மிணி உதடு அசங்காமல் தந்தையைப் பார்த்து சமிக்ஞை மூலம் கேட்டாள். புது நாட்டுப் பெண்ணின்மீது தங்கள் இருவரின் அபிப்பிராயமும் சரியாக இல்லை என்பதை சம்பகம் தெரிந்து கொள்ளக் கூடாதென்பது அவர்கள் தீர்மானம். “நான் தான் முன்பே சொல்லி விட்டேனே; விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும். நம் அந்தஸ்திற்குத் தகுந்த இடத்தில் சம்பந்தம் செய்ய வேண்டும் என்று? ஸ்ரீதன சொத்து லட்ச ரூபாய்க்கு இருக்கும் என்று நீதானே வாயைப் பிளந்தாய்? இந்தப் பெண்ணை “பாற்கடலிலிருந்து மகாலட்சுமியே உன் வீட்டிற்கு வந்து விட்டாள்’ என்றும், அந்தப் பெண் சம்பகத்தை மூதேவி என்றும் பழிக்கிறது நீதானே?”- சர்மா நிதானமுள்ளவரானாலும் சமயம் அறிந்து பேசுபவர். ஒரு வார்த்தை சொன்னாலும், ஆணித்தரமாகவே பேசுவார். 

சர்மா கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் அடிபட்ட நாகத்தின் பெருமூச்சைப் போல் ‘புஸ்’ என்று பெரு மூச்சு விட்டுக்கொண்டு மீனாட்சி அம்மாள் அடுப்பங்கரைப் பக்கம் போய் விட்டாள். ருக்மிணிக்குத் தகப்பனாரின் வார்த்தை அவ்வளவாக மனத்தைப் பாதிக்கவில்லை. அவளுக்கு வேண்டியது பிறந்த வீட்டின் உபசாரங்கள் தானே? அது இன்றளவும் குறையாமல் இருக்கும் போது அவளுக்கு வேறு விஷயங்களைப் பற்றி என்ன அக்கறை? 


மீனாட்சி அம்மாளின் மனோபாவம் புது நாட்டுப் பெண்ணிடமும் சரியாக இல்லை என்பதைச் சம்பகம் புரிந்து கொண்டாள். நீலாவின் போக்கு அவ்வளவு நல்லதாக அவள் மனத்திற்குத் தோன்றாவிட்டாலும், மாமியாரிடம் அவள் நடந்து கொள்ளும் முறை சம்பகத்தின் மனப் புண்ணைச் சிறிது ஆற்றியது. ஒன்றும் அறியாத தன்னை அவர்கள் கண்ணில் விரலைக் கொடுத்து ஆட்டும்போது, அவர்களை ஆட்டிப்படைக்க ஒருத்தி வந்திருப்பது அவளுக்கு ஒரு விதத்தில் திருப்தியாகத்தான் இருந்தது. 

எவ்வளவு தான் பொறுமையை வகிப்பவளானாலும் அவளும் கோப தாபம், அன்பு, ஹிம்சை முதலிய உணர்ச்சி களுக்குக் கட்டுப்பட்டு நடப்பவள்தானே? அவள் இருதயம் மனிதப் பண்பை உடையதுதான். தன் விடிவு காலத்தை எதிர்பார்த்து அந்த வீட்டில் அவள் இருந்து வருகிறாளே தவிர. மாமியாருக்கு அடிமையாக இருப்பதற்கு அல்ல. 

சமையற்கட்டிலிருந்தபடி பெரியவர்கள் மூவருக்கு மிடையே நடந்த பேச்சைக் கவனித்தாள் சம்பகம். அவள் மனம் மீனாட்சி அம்மாளுக்காக இரங்கவில்லை. தன் சுகத்திலேயே நாட்டமுடைய ருக்மிணிக்காகவும் இரங்க வில்லை. நீலாவுக்காகவும் அவள் மனம் பச்சாதாபப்பட வில்லை. பிறர் துன்பம் கண்டு மனம் இரங்கும் தன் கொழுந்தன் சங்கரனுக்காகவே அவள் மனம் இரங்கினாள் “மதனி” என்று அன்புடன் மரியாதை செலுத்தும் சங்கரனின் சரளமான சுபாவம் அவள் மனத்தைக் கலக்கி அவள் கண் களில் கண்ணீரை வரவழைத்தது. 


காமுவின தகபபனாரும், யாருடைய உதவியுமின்றி அந்தப் பெரிய நகரத்தில் ஊரில் விற்ற வீட்டின் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு சிறிய மளிகைக்கடை ஆரம்பித்தார். சங்கரன் அவரை ஏமாற்றிய பிறகு வாழ்க்கையில் எவரை யுமே நம்பக்கூடாது என்கிற தீர்மானத்துடன் கடனுக்காகச் சாமான்கள் கொடுக்காமல் நாணயமுள்ளவர்களை வாடிக்கைக்காரர்களாக வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தார். செல்வம் அபரிமிதமாகப் பெருகாவிட்டாலும் வறுமை அவர்களை விட்டுப் போய் விட்டது. 

காமுவும் கிராமத்தில் கல்யாணத்தை எதிர்பார்த்து எட்டாவது வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டவள். மறுபடியும் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள். ஒழிந்த வேளைகளில் தையல் வகுப்பில் சேர்ந்து துணிகள் தைப்பதற்குப் பழகிக் கொண்டாள். கல்யாணம் வாழ்க்கைக்கு அவசியம் தான் என்றாலும் கல்யாணம் செய்து கொண்டால்தான் வாழ முடியும் என்கிற எண்ணம் அவள் மனத்தை விட்டு அகன்று விட்டது. 

ரயிலில் சந்தித்த பெண்மணியின் விலாசத்தைத் தேடிக் கொண்டு அவள் வீட்டிற்குப் போனாள் காமு. அழகிய சிறு தோட்டத்தின் நடுவில் சிறிய வீட்டில் அந்தப் பெண்மணி யும் அவள் கணவனும் வசித்து வந்தார்கள். வீடு சிறியதே தவிர அங்கு அன்பும் ஒற்றுமையும் நிலவி இருந்தன. பணத் தின் ஆடம்பரம் இல்லாமல் பணத்துக்கு அடிமை ஆகாமல் பணத்தைக் கொண்டு வாழ்வை வளமுள்ள நாக்கிக்கொள்ள முடியும் என்பதை அத்தம்பதி உணர்த்தினர். 

அவர்கள் வீட்டுக் கூடத்தில் அன்பே உருவான புத்தரும், அஹிம்சை அண்ணல் காந்தி அடிகளும் மேஜைமீது வீற்றிருந்தனர். அறிவை வளர்க்கும் புஸ்தகங்கள் நிரம்பிய அலமாரி ஒரு புறம் வைக்கப்பட்டிருந்தது. உலகத்தைத் தன் ஆட்டத்தால் ஆட்டி ஊக்குவிக்கும் இறைவன் நடராஜனின் திரு உருவப்படம் மாட்டப்பட்டு, அதன் அருகில் நந்தா விளக்கும், அதில் புகையும் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. கூடத்துக்கே ஒரு தேஜஸை அளித்தது. 

உ ள்ளே நுழைந்தபோது காமு கூடத்தின் அலங்காரத் தைப்பார்த்து வியந்து சிறிது நேரம் நின்றாள். சமையல் அறையில் கணவனுக்கு உபசரித்து உணவு பறிமாறும் தன் சிநேகிதியின் இனிமையான குரல் காதில் ஒலித்தது. 

“கமலா! என்ன, ரஸத்தில் கொஞ்சம் தாராளமாய் உப்பை அள்ளிப் போட்டிருக்கிறாய்?” என்று மனைவியைக் கணவன் கேலி செய்து கொண்டே ரஸத்தை வாங்கி உறிஞ்சிக் குடிப்பது காமுவுக்குக் கேட்டது. 

“இந்தக் காலத்தில் உப்பு ஒன்றுதான் மலிவாக விற்கிறது! அது சரி, உப்பு அதிகமாகவா போட்டிருக் கிறேன்?’ என்று கேட்டுக் கலகலவென்று சிரித்தாள் கமலா. 

ரயிலில் காமுவுடன் பழகிச் சிரித்த அதே சரளமான சிரிப்பு. சாப்பாட்டில் ருசி குறைந்து விட்டது என்று கணவ னும் கோபிக்கவில்லை. அதை எடுத்துக் காட்டிக் கேலி செய்தாரே கணவர் என்று மனைவியும் கோபிக்கவில்லை. சரிக்கட்டிக் கொண்டு போகும் இந்த சுபாவம் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். நம் வீட்டில் அப்பா ஒன்று சொன்னால் அம்மா ஒன்று சொல்கிறாளே என்று காமு ஆச்சரியப்பட்டாள். 

சாப்பாடு முடிந்து கூடத்துக்கு வந்ததும் அங்கே நின்ற காமுவைப் பார்த்து கமலா சிறிது யோசித்தாள். அன்று ரயிலை விட்டு இறங்கிய பின்பு பிரிந்தவர்கள் ஏறக்குறைய ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அல்லவா சந்திக்கிறார்கள்? சிறிது யோசித்தவள் சட்டென்று, “ஓ! நீங்களா? அன்று ரயிலில் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தோமே! மறந்தே போய் விட்டேன். உட்காருங்கள்” என்று உபசரித்தாள். கமலா, காமுவைப் பார்த்து. காமுவும் பதிலுக்கு வணக்கம் செலுத்தி விட்டு உட்கார்ந்தாள். 

காமு தன் தகப்பனாரின் கடை வியாபாரத்தைப் பற்றி கமலாவிடம் கூறினாள். அதில் கிடைக்கும் வருமானம் குடும்பச் செலவுக்கே போதாமல் இருப்பதையும், மேலும் தான் பள்ளிக்கூடத்தில் படிப்பதற்காக ஆகும் செலவைப் பற்றியும் சொன்னாள். 

இதையெல்லாம் காமுவிடமிருந்து கேட்டதும், கமலா தனக்கு தெரிந்த சில யோசனைகளைக் கூறி, “தையல், சிறு குழந்தைகளுக்குப் பாடம், பாட்டு சொல்லிக் கொடுப்பது போன்ற காரியங்களைச் செய்வதால் ஏதாவது கொஞ்சம் மேல்வரும்படி கிடைக்கும்; செய்து பாரேன்!” என்றாள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, மறுபடியும் வருவதாகக் கூறி விடை பெற்றுக்கொண்டு சென்றாள் காமு. 

அதற்குப் பிறகு காமு சுமலாவின் வீட்டிற்கு ஒழிந்த சமயங்களில் போய் வந்தாள். நாளடைவில் கமலாவின் கணவனும், சங்கரனும் நண்பர்கள் என்பது அவளுக்குத் தெரிய வந்தது. அடிக்கடி நண்பர்கள் ஒருவரையொருவர் சந்திப்பது உண்டு என்பதும் தெரிந்து போயிற்று. 

நாளடைவில் காமுவின் மனம் நீலாவைப் பற்றி கமலா விடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று துடி துடித்தது. நீலா அவளை விட அழகியா? நீலாவின் குணம் காமுவின் குணத்தை விடச் சிறந்ததா? நீலா கணவனிடம் அன்பு பூண்டு வாழ்கிறாளா? இருவரும் சந்தோஷமாக, ஒற்றுமையாக இருக்கிறார்களா? இப்படிப் பலவிதமான கேள்விகள் அவள் மனத்துள் எழுந்து அவளை வேதனைப் படுத்தின.

– தொடரும்…

– ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது.

– பனித்துளி (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1996, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email
சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *