(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6
5 – சம்பகம் திரும்பினாள்!
பொன்மணி கிராமத்தின் தெருக்கோடியில் தபால் காரனின் தலையைக் கண்டதும் காமு உள்ளம் பதைக்கக் கொல்லைக் கிணற்றங் கரையில் நின்று அவன் அவர்கள் வீட்டிற்கு ஏதாவது தபால் கொண்டு வருகிறானர் என்று பார்த்துக் கொண்டிருப்பாள். அடுத்த வினாடி அவள் மனக்கண் முன்பு முத்துப் போன்ற எழுத்துக்களில் சங்கரன், “அப்பாவும், அம்மாவும் நான் காமுவைக் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றி ஆட்சேபணை கூறவில்லை. கூடிய சீக்கிரம் உங்கள் சௌகரியம் போல் முகூர்த்தம் வைத்துக் கொள்ளலாம்” என்று எழுதிய கடிதம் ஒன்று திரைப் படம்போல் தோன்றும். ஒன்றுமில்லாத ஏழைப் பெண்ணை மனம் உவந்து ஏற்றுக்கொள்ளும் அந்தப் பெரியோர்களுக்குத் தன் சரீரத்தைச் செருப்பாகத் தைத்துப் போட்டாலும் ஈடாகாது என்று நினைத்துக் கொள்வாள் காமு.
ராமபத்திரய்யரும் தினம் சங்கரனிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தார். சங்கரனின் மௌனத்துக்குக் காரணம் விளங்காமல் அவர் திகைத்துக் கொண்டிருந்தபோது, தபால்காரன் சாவகாசமாக இரண்டு கல்யாணக் கடிதங்களை அவரிடம் கொடுத்து விட்டுப் போனான்.
ஒன்று முத்தையாவின் மூன்றாந்தாரக் கல்யாணக் கடிதம். மற்றொன்று சங்கரனின் கல்யாணக் கடிதம்!
“டாக்டர் மகாதேவன் அவர்களின் குமாரத்தி சௌ.நீலாவை” கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆழ்ந்த யோசனையில் உட்கார்ந்து விட்டார் ராமபத்திர அய்யர்.
பணம் பணத்துடன் சேர்ந்து விட்டது. அவருடைய ஆசையை நினைத்து அவருக்குச் சிரிப்பு வந்தது. யாராவது சாதாரணவரனாக ஒன்று பார்த்துச் சொல்லும்படித் தானே அவர் சங்கரனைக் கேட்டார்? ஆசையையும், நம்பிக்கையை யும் ஏற்படுத்தியவன் அவன் தான்.
கொல்லையிலிருந்து திரும்பிய காமு தகப்பனாரின் வேதனை படர்ந்த முகத்தைக் கவனித்தாள். ஊஞ்சல் பலகையில் இரண்டு மஞ்சள் கடுதாசிகள் கிடந்தன.
”குழந்தை! ஆசையும், பாசமும்தான் மனுஷனுக்கு விரோதிகள். எதிலும் பற்றில்லாமல் இருப்பவன் தான் ஞானி” என்று ராமபத்திரய்யர் வேதாந்தம் பேச ஆரம்பித்தார்.
காமு கடிதங்களை எடுத்துப்பார்த்தாள் மூன்றாந்தார மாக எந்த இளம் பெண்ணின் வாழ்க்கையையோ பாழாக்க முயலும் சுயநலக்காரனின் கல்யாணக் கடிதத்தைப் படித்ததும் அவளுக்குச் சிரிப்பு வந்தது. வாய் வேதாந்தம் பேசிவிட்டுப் பெரிய லட்சியவாதி போல் நடித்த சங்கரனின் சுயநலத்தைக் கண்டும்அந்த ஏழை சிரிக்கத்தான் செய்தாள்.
ஆனால், சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் மனம் அளவு கடந்த துயரத்தில் ஆழ்ந்தது. ஹிருதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போன்ற வேதனையை அனுபவித்தாள் காமு. “நீலா, நீலா” என்று பலமுறை தனக்குள் பேசிக் கொண்டாள். தனக்கு எதிரியாகத் தன்மீது வஞ்சம் தீர்க்கவே நீலா என்று ஒரு பெண்ணை பிரும்மதேவன் சிருஷ்டி செய்து அனுப்பி இருக்க வேண்டும் என்று நினைத்தாள். இல்லாவிடில் அவ்வளவு உறுதியாகத் தன்னை மணப்பதாகக் கூறிச் சென்ற சங்கரனின் மனம் இவ்வளவு சடுதியில் மாறி விடுமா? வெறும் மேடைப் பிரசங்கம் செய்யும் லட்சியவாதியா அவன்? ஆமாம், வாய் கிழியப் பேசி விட்டு, எவ்வளவு பேர் ரகசியமாக வர தட்சணை வாங்கவில்லை? பேசுவது என்னவோ வரதட்சணைக் கொடுமையை எதிர்த்து!
காமுவின் கண்களிலிருந்து பல பலவென்று கண்ணீர் உதிர்ந்தது. அவள் ஏன் அழுகிறாள்? எதற்காக அழுகிறாள்? இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒன்றும் அறியாதிருந்தவளின் மனத்தில், ஆசை வித்தை ஊன்றி அது முளைத்துத் தழைப்பதற்கு முன்பு அதைக் கிள்ளியும் எறிந்தாயிற்று.
காமுவும் ஆழ்ந்த யோசனையில் ஊஞ்சலில் உட்கார்ந்து விட்டாள்.
இது வரையில் வெளியில் யார் வீட்டுக்கோ போய் இருந்த விசாலாட்சியும் வந்து சேர்ந்தாள். அவள் முகம் எப்போதும் போலவே கடுகடுவென்று இருந்தது.
முத்தையா வேறு கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறானாம். கல்யாணமும் ஏற்பாடாகி விட்டதாம். அந்தப் பிள்ளை சொன்னதை நம்பிக் கொண்டு நீங்கள் பாட்டுக்குப் பேசாமல் இருக்கிறீர்களே?” என்று கணவனிடம் கேட்டாள் விசாலாட்சி.
‘இனிமேல் எனக்கு யார் வார்த்தையிலும் நம்பிக்கை இல்லை” என்று ‘சூள்’ கொட்டிவிட்டு எழுந்தார் ராமபத்திரய்யர். திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் இன்னும் பத்து வயது அதிகமானவர் போன்று தோற்றம் அளித்தார். சாந்தம் ததும்பும் அவர் கண்களிலும் கண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது.
“என்ன?” என்று பதட்டத்துடன் கேட்டாள் விசாலாட்சி.
“நடேசனின் பிள்ளைக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. கடுதாசி வந்திருக்கிறது” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார் அவர்.
“பின்னே என்னவாம்? உங்கள் பெண்ணை ஓடி வந்து பண்ணிக் கொள்ளுவான் என்று பார்த்தீர்களா? எனக்கு அப்பவே தெரியுமே?” என்று நீட்டி முழக்கினாள் விசாலாட்சி.
தாயின் கடுஞ் சொற்கள் ஊசி கொண்டு குத்துவது போல் இருந்தது காமுவுக்கு. வேதனையும் துயரமும் மனத்தை அழுத்த, அவள் பூஜை அறைக்குள் சென்று தரையில் படுத்து மாலை மாலையாகக் கண்ணீர் உகுத்தாள். அவள் வேதனைக்கு அந்த ஆண்டவனாவது முடிவு ஏற்படுத்துவானோ என்பது அவளுக்கே புரியாத புதிராக இருந்தது!
நாட்கள் ஓடின. சங்கரன்-நீலா கல்யாணப் புகைப் படம் ஒரு தினசரி, வாரப் பதிப்பு, மாத சஞ்சிகை பாக்கி இல்லாமல் பிரசுரமாயிற்று. அப்பிரதிகளில் சில காமுவின் கைகளிலும் அகப்பட்டன. பெண்ணும், பிள்ளையும் அருகில் ஒட்டி நின்று எடுத்திருந்த அந்தப் படத்தைப் பல தடவைகள் காமு திருப்பித் திருப்பிப் பார்த்தாள். யாருக்கும் தெரியாமல் படத்தைக் கத்தரித்துத் தன் பெட்டியில் புடவைகளுக்கு அடியில் வைத்துக் கொண்டாள். புஸ்தகம் படிக்கக் கொடுத்தவர்களுக்குப் புஸ்தகத்தை எலி கடித்திருக்க வேண்டும் என்று பொய்யும் கூறினாள். இது பைத்தியக்காரத்தனமான செய்கை என்பது அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. இருந்தபோதிலும் அதில் அவள் மனத்துக்குக் கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கவே, அந்தப் பைத்தியக்காரச் செய்கையைச் செய்தாள் காமு.
ஒரு தினம் ராஜம்பேட்டைக்குப் போய் வந்த ராமபத்திரய்யர் சங்கரனுக்கு அவன் மாமனார் செய்த சீர் வரிசைகளைப் பற்றி யாரோ கூறியதை வீட்டில் வந்து சொன்னார். ‘தங்கத்தில் பஞ்ச பாத்திரமும், உத்தரணியும் செய்தார்களாம். பாத்திரமும், பண்டமும் கடை மாதிரியே இருந்ததாம்” என்று கூறிப் பெருமூச்சு விட்டார். அவர்.
“கல்யாணமும் அமர்க்களமாகத்தான் நடந்திருக்கும்” என்று விசாலாட்சி அபிப்பிராயப் பட்டாள்.
‘ஆமாம், இரண்டு பக்கத்திலும் பணம் குவிந்து கிடக்கிறது. அமர்க்களத்துக்குக் கேட்பானேன்?” என்று தன்னையே தேற்றிக் கொண்டார் ராமபத்திரய்யர். என்னதான் அவர் தன் மனசுக்கே ஆறுதல் அளித்துக் கொண்டாலும் ஏமாற்றம் அவர் கண்களிலும் பேச்சுக் களிலும் தோன்றிக் கொண்டு தான் இருந்தன.
“பெண் ரொம்ப நாகரிகமாம். ‘ரிஸப்ஷன்’ போது ‘பஞ்சாபி உடையில் தான் உட்காருவேன்’ என்று அப்படியே உடை அணிந்து உட்கார்ந்தும் விட்டாளாம்! நடேசன் மனைவியைப் பற்றித்தான் உனக்குத் தெரியுமே! ராத்திரி சாப்பிட வர மாட்டேன் என்று ரகளை பண்ணி விட்டாளாம்!” என்றார் அய்யர்.
“பணக்கார வீட்டுக் கல்யாணங்களிலும் சம்பந்திச் சண்டை இருக்கிறது. பணமில்லை, சீர் இல்லை, பாத்திர மில்லை, காபி நன்றாக இல்லை என்கிற காரணம் அங்கே இல்லாவிட்டாலும் சண்டைக்கென்று வேறு காரணம் ஏதாவது அவர்களுக்கு அகப்படும்” என்று காமு நினைத்துக் கொண்டாள், தகப்பனார் கூறுவதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு.
“மூத்த நாட்டுப் பெண்ணை அவள் ஆட்டி வைக்கிற ஆட்டத்துக்கு இந்த மாதிரிப் பெண்தான் சரி. நான் முத்தையா கல்யாணத்துக்குப் போய் இருந்தேனே, அங்கே பார்த்தேன் அந்தப் பெண் சம்பகத்தை! ‘ஏண்டி! நீ மீனாட்சி நாட்டுப் பெண் சம்பகம் தானே? உன் கொழுந்தனுக்குக் கல்யாணமாமே? நீ எங்கேடி வந்தாய், அல்யாணத்துக்கு இல்லாமல்?’ என்று கேட்டேன் அவளை. என்ன தான் பொறுமைசாலியாக இருந்தாலும் கஷ்டத்தை எத்தனை நாளைக்கு மனசிலேயே வைத்துப் பூட்டிவைக்க முடியும்? பாவம், அவள் குழந்தை செத்துப் பிழைத்ததாம். அதற்கு வியாதி வந்திருந்த போது யாருமே கவனிக்க வில்லையாம். நாளைக்கு இரண்டு தடவைகளாவது ‘பிறந்த வீட்டுக்குப் போவது தானே’ என்று மீனாட்சி எரிந்து விழுந்து கொண்டிருந்தாளாம். நடேசன் சமாசாரம் தான் உங்களுக்குத் தெரியுமே. எருமை மாட்டின் முதுகில் மழை பெய்கிற மாதிரி எதையும் லட்சியம் பண்ணமாட்டார்அவர் கொளுந்தனின் கல்யாணத்துக்குக் கூட இராமல் குழந்தையை அழைத்துக் கொண்டு தமையன் வீட்டிற்கு வந்திருக்கிறது அந்தப் பெண்” என்றாள் விசாலாட்சி.
காமு, சுவாமி விளக்கைத் துடைத்துத் திரியிட்டு எண்ணெய் ஊற்றிக் கொண்டே இதைக் கேட்டுக் கொண் டிருந்தாள். “சங்கரன் படித்தவராக இருந்தாலும். படித்தவர் என்று பெருமையாகக் காட்டிக் கொள்ள மாட்டார். நம் தென்னிந்தியக் கலாசாரங்களில்- பற்றுடையவர். நீலா அவள் எப்படி இருப்பாளோ? பஞ்சாபி உடையாமே? கிள்ளுக் கிள்ளாய்க் கொசுவம் வைத்துக் கண்ணைப் பறிக்கும் ரகங்களில் புடவைகள் வாங்கிக் கட்டிக் கொண்டால் அழகாக இராதா?” என்று காமு நினைத்துக் கொண்டாள்.
ராமபத்திரய்யரின் காதில் விசாலாட்சி சொன்னவை விழுந்ததாகத் தெரியவில்லை. சரிக்குச் சரியான சம்பந்தம் வேண்டும் என்றுதானே, அதில் உள்ள குறைகளைக் கூடப் பாராட்டாமல் கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறார் கள்? தங்கப் பதுமை மாதிரி நிற்கும் காமுவைத் திரஸ்கரித்த தற்கும் இந்த அந்தஸ்தின் ஏற்றத் தாழ்வு மனப்பான்மை தானே காரணம்? ராமபத்திரய்யர் ஏற்கெனவே ஏழைதான். இன்றும் ஏழையாகத்தான் இருக்கிறார். ஆனால், குருடனை “நீ குருடன், நீ குருடன்” என்று கத்தினால் அவன் மனம் எவ்வளவு புண்படும்? அது போலவே சங்கரன் காமுவைத் திரஸ்கரித்து நீலாவை மணந்து கொண்டது ராமபத்திரய்யரை, “நீ தரித்திரன், நீ ஏழை” என்று யாரோ ஏசுவதுபோல் அவருக்குத் தோன்றியது. மனத்தில் எழும் உணர்ச்சிகளை வாய் விட்டுக் கூறாமல்சுவாமி படத்து அருகில் தீபம் ஏற்றி விட்டு உட்கார்ந்து, “சியாமளா தண்டகம்” படிக்கும் பெண்ணை ”காமு!” என்று கூப்பிட்டார் உருக்கமாக.
“ஏன் அப்பா?” என்று ஆதுரத்துடன் கேட்டாள் காமு தகப்பனாரைப் பார்த்து.
“காமு! சங்கரன் உன்னை ஏமாற்றியதற்கு நீ வருத்தப் படவில்லையா அம்மா? உனக்கு அது வருத்தமாக இல்லையா?” என்று கேட்டார் அவர். விசாலாட்சி அப்பொழுது அங்கு இல்லை. உள்ளே சமையலறையில் வேலையாக இருந்தாள்.
“நான் எதற்காக அப்பா வருத்தப்பட வேண்டும்? என்னவோ வாய்ப்பேச்சாகச் சொல்லி விட்டுப் போனார். நாம்தான் அதை நிஜம் என்று நம்பிவிட்டோம்” என்றாள் மலர்ந்த முகத்துடன் காமு.
ஆனால், ராமபத்திரய்யரின் மனதுக்குச் சாந்தி கிடைக்கவில்லை இந்த ஏமாற்றமும் அவருக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அன்றிலிருந்து அவர் சித்தப் பிரமை பிடித்தவர் மாதிரி தமக்குத் தாமே பேசிக் கொள்வதும், சிரிப்பதும் வழக்கமாகி விட்டது.
கல்யாணம் முடிந்த பிறகு மூன்று மாதங்கள் வரையில் நீலா புக்ககம் வரவில்லை. காலேஜில் சேர வேண்டும் என்று தகப்பனாரிடம் கேட்டுப் பார்த்தாள். “இனிமேல் உன் புருஷன் வீட்டு மனுஷர்கள் சொல்லுகிற மாதிரிதான் கேட்க வேண்டும்” என்று கூறி விட்டார் அவர். மாலை சரியாக ஐந்து மணிக்குத் தன் வீட்டுக் காரை சங்கரனுக்காக அனுப்பி வைப்பாள். அதில் இருவரும் உட்கார்ந்து வெளியே உலாவப் போய் விட்டு வருவார்கள். அவள் மட்டும் மாமியார் வீட்டிற்கு என்று வந்து சாதாரணமாக ஒருவருட னும் பேசுவதில்லை. சங்கரன் தினம் அவள் வீட்டிற்குப் போய் வரவேண்டும்!
“மகாராணி மாதிரி அவள் அங்கே இருந்து உத்தரவு போடுவது. இவன் அதைக் கேட்டுகொண்டு ஆடுவது!” என்று ஏதாவது மீனாட்சி முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள்.
“வீட்டில் நாலு பேர் கல்யாணம் விசாரிக்க வருகிறார் கள். பத்து நாளைக்கு நீலாவை இங்கே விட்டு வையுங்கள்” என்று மீனாட்சி அம்மாள் சம்பந்தி அம்மாளிடம் கேட்டுக் கொண்டாள்.
“அவள் யார் சொன்னாலும் கேட்க மாட்டாள். நீங்களே கேட்டுப் பாருங்கள்” என்று கூறிவிட்டாள் அந்த அம்மாள்.
“கல்யாணம் விசாரிக்க வருகிறவர்கள் எதிரில் நான் என்ன கொலு பொம்மை மாதிரி நிற்க வேண்டுமா?’ என்று ஒருவித அலட்சியத்துடன் கூறிவிட்டுத் தாயுடன் காரில் போய் ஏறிக் கொண்டாள் நீலா.
மீனாட்சி அம்மாள் தன் பெரிய உடம்பைக் குறுக்கிக் கொண்டு, சுண்டைக்காய்போல் முகம் வற்ற உள்ளே போய் விட்டாள். “பார்த்தாயா அவள் பேசுகிறதை?” என்று அழ முடியாத குறையாக ருக்மிணியிடம் சொல்லிக்கொண்டாள்.
“பார்க்கிறது என்ன? பெரிய இடத்து சம்பந்தம் எல்லாம் அப்படித்தான் இருக்கும்!” என்று சர்மா ஒரு போடு போட்டார் மனைவியைப் பார்த்து.
“இருக்கும், இருக்கும்! என்னை யார் என்று அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. நன்றாக இருக்கிறதே. மட்டு மரியாதை இல்லாமல்! ஆகட்டும்! சாயங்காலம் சங்கர அவாள் வீட்டுக்குப் போகிறதைப் பார்க்கிறேன். இவனுக்கு என்ன சுரணை இல்லையா? பெண்டாட்டி வா என்று காரை அனுப்புகிறது, இவன் பறந்து கொண்டு ஓடுகிறது?” என்று பெரிதாகக் கத்தினாள் மீனாட்சி அம்மாள்.
“பத்துவருஷம் குடும்பத்தின் கஷ்டசுகங்களைப் பகிர்ந்து சகித்து வாழ்ந்து வந்த சம்பகத்துடனும் சண்டை, நேற்று கல்யாணம் ஆகி, இன்றோ நாளையோ புக்ககம் வரவிருக்கும் புது நாட்டுப் பெண்ணிடமும் சண்டை” என்று சமையல் அறையில் வேலையாக இருக்கும் சமையற்கார மாமி நினைத்துக் கொண்டாள்.
தன் கட்சியை யாரும் ஆமோதிக்கவில்லை என்பது தெரிந்ததும் மீனாட்சி அம்மாள் சமையலறைப் பக்கம் வந்தாள். சம்பகம் இருந்தபோது இருந்த சமையலறையாக இல்லை அது. சாமான்கள் வைத்திருக்கும் டப்பாக்களின் மேல் தூசி படிந்து மங்கிப் போய் இருந்தது. கண்ணாடி ஜாடிகளில் ஊறுகாய் சுண்டி உலர்ந்துகிடந்தது. குழாய் அடியில் சற்றே தவறினால் வழுக்கி விழுந்து விடும்படி பாசி படிந்து கிடந்தது. இரண்டு வேளை ச.மைத்து, இடைவேளை சிற்றுண்டி காபி போட்டு விட்டு, சலையற்கார மாமி கதை, புராணம் கேட்க எங்காவது போய் விடுவாள். சமையலறை யைத் துப்புரவாக ஒழித்து வைக்க வேண்டும் என்று அவளுக்கு என்ன அக்கறை?
வீட்டில் இருக்கும் மற்றப் பெண்கள் புடவைகளைப் பற்றியும் நகைகளைப் பற்றியுமே பேசிப் பொழுதைக் கழித் தார்கள். சாமான் அறையில் மூலைக்கு மூலை தேங்காய் உரித்த நாரும்,குப்பையும் இறைந்து கிடந்தன. மாதத்துக்கு இரண்டு தடவைகள் அந்த அறையைச் சுத்தம் செய்வது சம்பகத்தின் வேலையாக இருந்தது. குடும்பத்தைப் பாதுகாப்பவர்கள் பெண்கள். வீட்டை சுவர்க்கமாக மாற்றுவதோ நரகமாக்குவதோ அவர்கள் வேலை.
காமரா அறையில் மூலைக்கு மூலை கொடியில் புடவை களும், ரவிக்கைகளும் தொங்கிக்கொண்டிருந்தன. வெளியில் போகும்போது மட்டும் பகட்டாக உடுத்திக்கொண்டு போய் விட்டு, வீட்டுக்கு வந்து அவைகளைக் கொடியில் தொங்க விட்டிருந்தார்கள் ருக்மிணியும்,அவள் தாயாரும். சர்மாவின் வேதாந்த புஸ்தக அலமாரி மீது தூசு படிந்து ஒட்டடை கூடப் படிய ஆரம்பித்து விட்டது. புஸ்தகம் எடுக்கும் போதெல்லாம் சர்மா நாட்டுப் பெண் சம்பகத்தை நினைத்துக் கொண்டார். சோம்பல் இல்லாமல் சுற்றிச் சுற்றி வேலை செய்த அந்தப் பெண்ணை மாமியாரும், நாத்தனாரும் விரட்டி விரட்டி வேலை வாங்கினார்கள். அவளுக்கு வேலையைத் தவிர வேறு எந்த விஷயமும் தெரிய வேண்டியதில்லை என்று நினைத்திருந்தார்கள். சம்பகம் வீட்டை ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரிந்து கொண் டிருந்தாள். ருசியாகச் சமைக்கத் தெரிந்து கொண்டிருந் தாள். பெரியவர்களிடம் அன்பும், மரியாதையையும் காட்டத் தெரிந்து கொண்டிருந்தாள். ஒழிந்த பொழுதில் வீட்டிற்குத் தேவையான துணிமணிகளைத் தைக்கவும் தெரிந்து கொண்டிருந்தாள்.
மீனாட்சி அம்மாள் சமையலறைக்குள் நுழைந்தபோது, இடைவேளைச் சிற்றுண்டி வேலையை முடித்துவிட்டுச் சமையற்கார மாமி எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் மீனாட்சிக்குக் கோபம் வந்தது. “என்ன அம்மா இது? வாரத்தில் பத்து நாட்கள் மத்தியானம் எங்கேயாவது புறப்பட்டு விடுகிறீர்கள்?” என்று கோபமாகக் கேட்டாள் மீனாட்சி.
“புறப்படாமல் இருக்க முடியுமா, நீங்களே சொல்லுங்கள்!” என்று நிதானமாகக் கேட்டாள் அந்த அம்மாள்.
“புறப்பட வேண்டுமா என்ன? அதிசயமாகத்தான் இருக்கு!” என்று அகங்காரப்பட்டாள் மீனாட்சி.
“நான் சொல்லுகிறேனே என்று கோபித்துக் கொள்ளா தீர்கள் மாமி. சம்பகம் இருக்கும் போது எனக்கு அவள் கூடமாட ஏதாவது ஒத்தாசை செய்வாள். இப்பொழுது ஒரு துரும்பைக்கூட ஒருத்தரும் அசைக்கிறதில்லை. வீட்டிலே சம்பந்திகள் வரதும் போகிறதுமாய் இருக்கிறது. உங்கள் சின்ன நாட்டுப் பெண், காபி குடித்த பாத்திரத்தைக் கூட மேஜை மீதே வைத்துவிட்டுப் போய் விடுகிறாள். கொஞ்சங் கூட அந்தப் பெண்ணுக்குக் குடுத்தனப் பாங்கே தெரிய வில்லை!”
மீனாட்சி அம்மாளுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. “சும்மா பேசாதீர்கள் அம்மா. நம் வீட்டில் வேலை செய்யவா நீலு வந்திருக்கிறாள்,இத்தனைப் பணத்தோடும், பாக்கியத்தோடும்! பணக்கார இடத்துப்பெண். செல்லமாய் வளர்ந்தவள்” என்று நீலாவுக்காகப் பரிந்து பேசினாள் மாமியார்.
சமையற்கார மாமி மீனாட்சியின் மனத்தையும், குணத்தையும் நினைத்துத் தனக்குள் சிரித்திருக்க வேண்டும். இல்லாவிடில் அடுப்பங்கரையில் மீனாட்சி பேசிக்கொண் டிருக்கும் போதே, சர்மாவிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு தன் வேலையைக் கவனிக்க வெளியே போவாளா?
“நீங்கள்தான் வேலைக்காரிக்கும் சமையல்காரிக்கும், நாட்டுப் பெண்ணுக்கும் இடம் கொடுத்து எனக்கு மரியாதை இல்லாமல் செய்கிறீர்கள்?” என்று கணவன் மீது கோபத்தைக் காட்டினாள் மீனாட்சி..
“சமையற்காரிதான். நாம் தான் மாதம் இருபது ரூபாய் அவளுக்குச் சம்பளம் கொடுக்கிறோம். எதற்காகத் தெரியுமா? வீட்டை உன்னாலும், உன் பெண்ணாலும், வரப் போகும் நாட்டுப் பெண்ணாலும் கவனித்துக் கொள்ள முடியாது என்றுதான்! இருந்தாலும் அவளும் மனுஷிதானே? சற்று காற்றாடப் போய்விட்டு, இரவு சமையலுக்கு வந்து விடுகிறாள்!” என்றார் சர்மா. முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்க மீனாட்சி எழுந்து போய் விட்டாள்.
பெண்ணால் இரண்டு இடங்களும் விளங்குவதாகப் பெரியவர்கள் கூறுகிறார்கள். உலகத்தை இயக்கும் மகா சக்தியைப் பெண் வடிவில் போற்றுகிறோம். பூமியைப் பெண்ணாக மதிக்கிறோம். பிறந்த நாட்டைத் தாய் நாடு என்று கௌரவிக்கிறோம். ‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று அன்னையை முதலில் தொழுகிறோம். இன்றும் நம் சமூகத்தில் பெண்ணின் வாழ்வு அவலமாகத் தான் இருக்கிறது. தினசரியைப் பிரித்தால் தினம் மனைவி மக்களை ஏதோ ஒரு காரணம் கொண்டு கொலை செய்து, பிறகு தாங்களும் மடியும் ஆண்களைப் பற்றி வாசிக்கிறோம். பெண்களைத் தாய்மார்களாகவும், சகோதரிகளாகவும் பாவிக்கும் குணம் அநேகரிடம் இல்லை. கணவன் வீட்டில் சுகதுக்கங்களை அனுபவிக்க வரும் மருமகள் பல குடும்பங் களில் கேவலமாக நடத்தப்படுகிறாள். சில குடும்பங்களில் மாமியின் நிலையும் இவ்வாறாக இருக்கின்றது. ஒருவரோடு ஒருவர் சரிக்கட்டிப் போகும் சுபாவம் இல்லாமையே இதற்குக் காரணம்.
சம்பகம் மனச் சாந்திக்காக வந்து தங்கினாள். மண வாழ்க்கையில் பல வருஷங்கள் மாமியாரின் ஏச்சுப் பேச்சுக் களைக் கேட்டுப் புண்பட்டுப் போன மனத்துக்கு ஆறுதலைத் தேடி அங்கே வந்தாள். அங்கே அவள் மதனி—அவளைப் போன்ற ஒரு பெண்-அவளுக்கு கௌரவம் தர மறுத்தாள். வாழா வெட்டி என்கிற அலட்சிய மனப்பான்மையுடன் அவளை ஏசினாள். குழந்தை பானுவுக்குக் கூட அங்கே சுதந்தரம் இல்லாமல் போய்விட்டது.
ஒரு நாள் மாமா குழந்தையின் மோட்டாரை அவள் தான் உடைத்ததாக மாமி கூறினாள். விளையாட்டுச் சாமான் களைத் தொடக்கூடாது என்று குழந்தைக்குத் தெரியுமா என்ன? குழந்தை மனத்துக்கு பேதம் தெரியக் காரணம் இல்லையே! சம்பகத்தின் தமையனும் தங்கையிடம் ஒரு மாதிரியாகப் பேச ஆரம்பித்தான்,
“எத்தனை நாளைக்குத்தான் ஒருத்தரிடம் ஏச்சும் பேச்சும் கேட்டுக் கொண்டிருப்பாய்? பேசாமல் ‘நர்ஸ்கள் பள்ளிக்கூடத்தில்’ சேர்ந்து விடு. நீ மாத்திரம் ஒண்டிக் கட்டை இல்லை, பார்! குழந்தை வேறு இருக்கிறது” என்று தமையன் ஆலோசனை கூறினான்.
கணவன் வீட்டில் செல்வம் இருக்கிறது. ஒவ்வொரு வேளையும் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டு வெளியார் நான்கு பேர்கள் வேறு சாப்பிடுகிறார்கள். சம்பகமும், அவள் பெண்ணும் தண்டச்சோறு தின்பதாகவே மீனாட்சி அம்மாள் கூறி வந்தாள்! இங்கே தமையன் வீட்டிலும் செல்வம் கொழிக்கிறது. மாதம் நாலு பங்களூர் ‘கிரேப்’ புடவைகள் மதனி வாங்குகிறாள். வானத்து நட்சத்திரங்களும், மரத்தில் காய்க்கும் காய்களும், இலைகளும், பூவும் அவள் கழுத்தில் தங்க ஆபரணங்களாகத் துவண்டு கொண் டிருந்தன. ஆனால், கணவனால் நிராதரவாக விடப்பட்ட நாத்தனார் தன் வீட்டில் தண்டச்சோறு தின்பதாகவே மதனி நினைத்தாள்.
தமையனும் வீட்டில் தங்கை என்ற ஒருத்தி இருப்ப தாகவே நினைக்கவில்லை. அவளாகவே பேச வந்தாலும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை.
சம்பகம் தன் துர்ப்பாக்கியத்தை நினைத்து மனம் கலங்கினாள். தனிமையில் கண்ணீர் வடித்தாள். ராமனைப் பிரிந்த சீதா தேவியைப் போல் சோகமே உருவாக இருந்தாள். குழந்தை பானுவுக்காகவே தான் ஜீவித்திருக்க வேண்டும் என்று அவள் அடிக்கடி மனத்தைத் திடப்படுத்திக் கொள்வாள்.
சம்பகம் பிறந்த வீடு வந்து நான்கு மாதங்கள் ஆயின. அங்கிருந்து யாரும் அவளை மறுபடியும் வரும்படியோ, அவள் க்ஷேமத்தை விசாரித்தோ ஒரு வரி கூட எழுதவில்லை. மாமனார் மனம் நோகக் கூடாதென்று அவள் எவ்வளவு பணிவிடை செய்திருப்பாள்? மாமியாரின் கடும் சொற்களை எவ்வளவு தாங்கியிருப்பாள்? நாத்தனாரின் முகம் கோணாமல் அவளுக்கும், அவள் குழந்தைகளுக்கும் எவ்வளவு செய்திருப்பாள்? எல்லாவற்றிற்கும் மேலாக சங்கரனிடம் வைத்திருந்த பிரியமும் அன்பும் கூட அல்லவா மறைந்து போய்விட்டன! மைத்துனன் என்று எண்ணாமல் உடன்பிறந்த சகோதரனைப் போல அல்லவா அவனிடம் அன்பு பூண்டிருந்தாள்! இன்று அவளைப் பற்றி யாரும் அந்த வீட்டில் நினைப்பவர் இல்லை. அக்கினி சாட்சியாக மணந்து ‘வாழ்வின் சுகதுக்கங்களில் உன்னைக் கைவிடேன்’ என்று சத்தியம் செய்தவனே அவளை மறந்தபோது, மற்ற உறவினர் மறந்து போனது ஆச்சர்யப்படக்கூடிய விஷயமில்லை அல்லவா?
சம்பகம் தமையன் கூறிய ஆலோசனைப்படி நடக்கச் சித்தமாகத்தான் இருந்தாள். இருந்தாலும், ஒரு நாள் இல்லாவிடில் ஒருநாள் தனக்கு விடிவு காலம் கிட்டுமென்று நம்பியிருந்ததால், மறுபடியும் கணவன் வீட்டிற்கே போய் அங்கு இருப்பவர்களிடையே வசிக்க வேண்டும் என்கிறஆசை ஏற்பட்டது அவளுக்கு. தன் கருத்தைத் தமையனிடமும், மதனியிடமும் வெளியிட்டபோது, அவர்கள் வெறும் உபசாரத்துக்காக முதலில் அவளை அனுப்ப மறுத்தார்கள்.
“அங்கே.போய் என்ன செய்யப் போகிறாய் சம்பகம்?” என்று தமையன் நிஷ்டூரமாகவே கேட்டான்.
‘இல்லை அண்ணா! நான் இருக்க வேண்டிய இடம் அதுதானே? உன்னையும், பார்க்க குழந்தைகளையும் வேண்டும் என்கிற ஆவலினால் வந்தேன். பார்த்தாகி விட்டது. கொழுந்தன் கல்யாணத்துக்குக்கூட இராமல் வந்து விட்டேன. அந்தக் கோபம்தான் போல் இருக்கிறது, அவர்கள் கடிதம்கூடப் போடவில்லை” என்று கணவன் வீட்டாரை விட்டுக் கொடாமல் பேசினாள் சம்பகம்.
“ஆமாம், ஆமாம். இல்லாவிட்டால் ரொம்ப கவனித்து விடுபவர்கள் தான்!” என்று கோபமாகப் பேசினான் தமையன். ஆனால், தடுத்துச் சொல்லாமல் அன்று ரயிலிலேயே அவளையும் பானுவையும் அனுப்பி விட்டான்.
சம்பகம் மறுபடியும் புக்ககம் வந்து சேர்ந்தாள். அழையாத வீட்டுக்கு வரும் விருந்தாளியை வரவேற்பது போல் அவளை அவர்கள் கண்ணெடுத்துக் கூடப் பாராமல் இருந்தனர். மாமனார் மட்டும், “வந்தாயா அம்மா! ஊரிலே உன் தமையன் எல்லோரும் சௌக்கியம் தானே?” என்று விசாரித்தார். மாமியார் மீனாட்சியும், நாத்தனார் ருக்மிணியும் அவளை ஏன் என்று கூடக் கேட்கவில்லை. ‘பாட்டி!’ என்று கூப்பிடும் குழந்தை பானுவைக்கூட அந்த அம்மாள் கவனிக்கவில்லை.
“சம்பகம்! நீ இல்லாமல் திண்டாடி விட்டேண்டி அம்மா. வரவாளும், போறவாளுமாய் என் பாடு ஓய்ந்து விட்டது போ!” என்று சமையற்கார மாமிதான் தன் மட்டற்ற மகிழ்ச்சியை வெளியிட்டாள் அவளிடம்.
சம்பகத்தின் மனம் தன் புது ஓரகத்தியைக் காண ஆசைப்பட்டது. “மிகவும் படித்தவள். பெற்றவர்களுக்கு ஒரே பெண். பணக்கார வீட்டுப் பெண். சாதுவும், வெகுளியுமான சங்கரனின் மனைவி” என்று பலவாறாக நினைத்துக் கொண்டாள் சம்பகம்.
“மாமி! என் ஓரகத்தி வீட்டிற்கு வந்து விட்டாளோ இல்லையோ? காலையிலிருந்து கண்ணிலேயே பட வில்லையே?” என்று மெதுவாக விசாரித்தாள் சமையற்கார மாமியை சம்பகம். “வந்திருக்கிறாள்! வராமல் என்ன? அடியே சம்பகம்! உன்னை இவாள் படுத்தி வைக்கிற பாட்டுக்கு அவள் தான் சரி, இந்த வீட்டுக்கு!” என்று விரலை ஆட்டி உற்சாகமாகப் பேசினாள் சமையற்கார மாமி.
– தொடரும்…
– ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது.
– பனித்துளி (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1996, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.