(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5
4 – சங்கரனின் சங்கடம்
அன்று ராமபத்திர அய்யர் ராஜம்பேட்டைக்கு ஏதோ அலுவலாகப் போய் இருந்தார். விசாலாட்சி தன் வழக்கம் போல் மத்தியானப் பொழுதைக் கழிக்கப் போய்விட்டாள். கீரைப் பாத்திகளுக்கு தண்ணீர் தெளித்துவிட்டுக் காமு உள்ளே வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடத் தொடங்கினாள். “இன்பம் வருகுதென்று சொல் சொல் கிளியே!” என்று பாடிக் கொண்டே ஆடினாள். வெறுமனே சாத்தியிருந்த கதவைத் திறந்துகொண்டு சங்கரன் உள்ளே வந்தான். அவன் கையில் சிறிய பெட்டி ஒன்றும், படுக்கை ஒன்றும் இருந்தன.
“அப்பா இல்லைபோல் இருக்கிறது?” என்று காமுவைப் பார்த்துக் கேட்டவன், உரிமையோடு அங்கு இருந்த பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டான்.
காமுவின் உடல் ஒரு முறை நடுங்கியது. சட்டென்று எழுந்து ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு நின்றாள். யாருடைய வரவை எதிர்பார்த்து ஏங்கி யிருந்தாளோ, அவனே நேரில் வந்து பேசுகிறான். வெட்கத்தால் முகம் குப்பென்று சிவக்க, தலையைக் குனிந்து கொண்டாள் காமு.
“ஆ…மா…ம்” பாழும் வார்த்தைகள் தொண்டை யிலேயே சிக்கிக் கொண்டன.
“நாளைக்கு ஊருக்குப் போகிறேன். இங்கே வந்து இரண்டு நாட்கள் கூட தங்கவில்லை என்று உன் அப்பா கோபித்துக் கொள்ளப் போகிறாரே என்று வந்து விட்டேன்” என்றான் சங்கரன். அவன் மட்டும் நெடு நாள் பழகியவன் போல் அவளுடன் பேசினான்.
“இதோ வந்து விட்டேன். அப்பா இன்னும் அரை மணியில் வந்து விடுவார்”-சமையலறைப் பக்கம் போவ தற்குத் திரும்பினாள் காமு.
“காபி’ போடுவதற்கு அவசரம் ஒன்றும் இல்லை. உன்னை ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்றே ஓடி வந்திருக்கிறேன்.”
சங்கரன் ஆவலுடன் காமுவைப் பார்த்தான். தந்தப் பதுமை போல் நிற்கும் அவளுக்குத் தன் கண்ணே பட்டு விடப் போகிறது என்று அஞ்சினான்.
“அன்றைக்கு அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்த தைக் கேட்டாயோ? உன் சம்மதம் தெரிந்தால் ஊருக்குப் போய் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து விடுவேன்’ என்றான் சங்கரன்.
காமு பூமியைப் பார்த்துக் கொண்டு நின்றாள். ”சம்மதம் வேண்டுமாம் இவருக்கு!” காமுவின் மனம் பல தடவைகள் இவ்வார்த்தைகளைச் சொல்லியது. கரும்பு நின்பதற்குக் கூலியா கேட்பார்கள்? வருடந்தோறும் மார்கழி திங்களில் விடியற்காலம், தான் வணங்கும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அருளினால் அல்லவா வலியவே வந்து தன்னை மணக்க வேண்டுகிறார்?- கண்ணனின் கருணை தான் என்ன? கருணைக்கடல் என்று பெரியவர்கள் தெரியாமலா குறிப்பிட்டார்கள் அவனை?
“காமு…!” என்று உள்ளம் குழைய அழைத்தான் சங்கரன்.
காமு தலை நிமிர்ந்து, நீர் நிறைந்த கண்களால் அவனைப் பார்த்தாள்.
“அசடே! ஏன் அழுகிறாய்? லட்சுமி தேவியைப் போல் இருக்கும் உன்னை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி அல்லவா? சம்மதம் தானே காமு?” என்று இரண்டாம் முறையாகக் கேட்டான் சங்கரன்.
காமுவின் கொவ்வை அதரங்கள் உணர்ச்சியால் துடித்தன. அதில் நெளிந்தோடும் புன்னகையால் அவள் சம்மதத்தை அறிந்து கொண்டான் சங்கரன்.
அதே சமயம் ராமபத்திர அய்யர் ராஜம்பேட்டை யிலிருந்து திரும்பி வந்து சேர்ந்தார். ரேழியைத் தாண்டி தகப்பனார் உள்ளே வருவதற்குள் காமு சமையலறையில் பதுங்கிக் கொண்டாள்.
“வா, அப்பா சங்கரா! என்ன, படுக்கை பெட்டி எல்லாம் தடபுடலாக இருக்கிறது?” என்று கேட்டு விட்டு, ஊஞ்சலில் உட்கார்ந்தார் அவர்.
“நாளைக்கு ஊருக்குப் புறப்படுகிறேன் மாமா. இங்கு வந்து இரண்டு நாட்கள் கூடத் தங்காமல் போய் விட்டால் கோபித்துக்கொள்ளப் போகிறீர்களே என்று பெட்டி, படுக்கையுடன் வந்து விட்டேன்” என்றான் சங்கரன் புன்சிரிப்புடன்.
அவனுடைய சரளமான சுபாவம் ராமபத்திரய்யருக்கு மேலும் அவனிடம் உள்ள மதிப்பை அதிகரிக்கச் செய்தது.
“விற்றது எல்லாம் போக ஏதோ கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதையும் விற்று விட்டால் காமுவின் கல்யாணத்தை நடத்தி விடலாம் என்று உத்தேசித்துத் தான் ராஜம்பேட்டை வரைக்கும் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன்” என்றார் ராமபத்திரய்யர்.
“இந்தக் காலத்தில் இருக்கிறதையும் விற்று விட்டால் பிறகு குடும்பம் நடத்துவதே கஷ்டமாகப் போய்விடுமே மாமா? அப்பாவைக் கலந்து யோசனை செய்து நான் விவரமாகத் தெரிவிக்கிறேன். அவசரப்பட்டு விடாதீர்கள்!” என்று எச்சரிக்கை செய்யும் தொனியில் கூறினான்சங்கரன்.
காமு சமையலறையிலிருந்து இரண்டு டம்ளர்களில் காபியைக் கொண்டு வந்து வைத்தாள். இருவர் மனத்திலும் எழும் ஆயிரமாயிரம் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, ஒன்றும் தெரியாத பச்சிளங் குழந்தைகள் போல் இருந்தனர் சங்கரனும், காமுவும்.
சங்கரன் கூறிய வார்த்தைகள் நிஜமாக நடக்கக் கூடியவையா? உயர்ந்த பதவியில் இருப்பவரும், செல்வத் தில் திளைத்திருப்பவருமான நடேச சர்மா, “பரம ஏழையான தன் மகளைச் சங்கரனுக்கு விவாகம் செய்து கொள்ளத் துணிவாரா?”
நடக்க முடியாத விஷயங்கள் சில சமயங்களில் நடந்தே. விடுகின்றன. ‘ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்’ என்கிற பாடல் ராமபத் திரய்ய ருக்கு. நினைவு வந்தது ‘எனையாளும் ஈசன் செயல்!” இருந்தால் எதுதான் உலகில் சாத்தியமில்லை என்று நினைத்தார் அவர்.
சங்கரன் ஊருக்குப் புறப்படு முன்பு காமுவிடம் விடை பெற்றுக் கொண்டான். வாசல் ரேழியில் கதவோரமாக நிற்கும் அவளை அன்பு கனியப் பார்த்துக் கொண்டே, “போய் விட்டு வரட்டுமா?” என்று கேட்டு, புன்சிரிப்பு சிரித்தான். இன்பமும், துன்பமும் கலந்த உணர்ச்சியால் காமுவின் கண்களில் நீர் நிறைந்திருந்தது. பணிவுடன் தலையை அசைத்தாள்.
“உன் வீட்டில் எல்லோரையும் விசாரித்ததாகச் சொல் அப்பா’ என்று விசாலாட்சி விடை கொடுத்தாள்.
“சங்கரா! முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போலவும், எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடுவது போலவும் இருக்கிறது என் ஆசை, ஆசை வித்தை நீ ஊன்றி விட்டாய், சற்றும் நாங்கள் எதிர்பாராத விஷயத்தை நீ கூறி யிருக்கிறாய். பெற்றோர்கள் மனத்தைக் கெடுக்கும் படியாக எந்தக் காரியத்தையும் நீ செய்ய வேண்டாம். யோசித்துத் தகவல் எழுது” என்று ராமபத்திரய்யர் கூறி வழி அனுப்பினார் சங்கரனை.
சங்கரனின் புன்முறுவல் தவழும் முகம் எதையும் ஒரு சிரிப்புடன் ஏற்றுக் கொண்டது.
வண்டி மாடுகளின் சதங்கை ஒலி ‘ஜல் ஜல்’ என்று சப்திக்க, வண்டி தெருக்கோடி திரும்பி ரயிலடியை நோக்கி விரைந்தது. காமுவின் எழில் வதனம் அழியாத சித்திரமாக சங்கரன் மனத்துள் பதிந்து இருந்தது. “எல்லோரும் எவ்வளவோ நகைகளை அணிந்து கொள்ளுகிறார்களே, காமுவுக்கு அந்தக் கருகமணி மாலை ஒன்றே எவ்வளவு சோபையைக் கொடுக்கிறது?” என்று எண்ணிப் பூரித்துப் போனான் அவன்.
“எல்லோரும் விலை உயர்ந்த உடுப்புகளாக உடுத்திக் கொள்கிறார்களே, சாதாரண கதர் வேஷ்டியும், சட்டை யுமே அவருக்கு என்னளவு பொருத்தமாக இருக்கிறது?” என்று வீட்டில் சுமமர அறையில் உட்கார்ந்திருந்த காமு நினைத்துக் கொண்டாள். ரயிலில் பிரயாணம் செய்யும் சங்கரனின் மனமும், பொன்மணி கிராமத்தில் வீட்டில் காமரா அறையில் நூல் சவுக்கம் பின்னும் காமுவின் மனமும் ஒரே சிந்தனையில் மூழ்கி இருந்தன.
சங்கரன் ஊருக்குப் போன பிறகு அங்கே நிலவி இருந்த நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு, “முத்தையாவுக்கு என்ன பதில் எழுதப் போகிறீர்கள்?” என்று கேட்டாள் விசாலாட்சி.
“என்னத்தை எழுதுகிறது அவனுக்கு!” என்று பதில் கூறினார் ராமபத்திர அய்யர் அலட்சியமாக.
“என்ன எழுதுகிறதாவது? பச்சைக் குழந்தையா என்ன நீங்கள், நான் எழுதச் சொல்லித் தர? அவன் எழுதியிருக்கிற விஷயத்துக்கு உங்கள் சம்மதத்தை எழுதுங்கள். அவ்வளவு தான்!” என்றாள் விசாலாட்சி.
ராமபத்திர அய்யர் ஒரு வரட்டுச் சிரிப்புச் சிரித்தார். மனைவியின் அறியாமையைக் கண்டு அவர் அப்படித்தான் சிரிப்பது வழக்கம்.
“அவன் தான் என்னவோ தெரியாமல் உளறுகிறான் என்றால் நீயுமா அதையே சொல்லிக் கொண்டிருப்பாய்?” என்றார் கோபத்துடன்.
“அவன் உளறுகிறான்! நீங்கள் ‘பெப்பே’ என்கிறீர்கள்! அவ்வளவுதான் வித்தியாசம். அந்தப் பிள்ளை என்னவோ சொல்லிவிட்டுப் போய் இருக்கிறான் என்றுமலைக்கிறீர்கள். என்னையும் பைத்தியக்காரியாக நினைத்துக் கொண்டிருக் கிறீர்கள். நமக்கும் அவர்களுக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள சம்பந்தம்தான் உண்டு!”-விசாலாட்சி வருத்தம் தொனிக்கக் கூறினாள்.
சங்கரன் வார்த்தை தவறுபவனா? தன்னிடமும், காமு விடமும் பரிதாபம் கொண்டு கூறிய வார்த்தைகளா அவைகள்? ராமபத்திர அய்யர் கொஞ்சநேர சிந்தனையில் மூழ்கி இருந்தார்.
கடவுளின் செயல் இருந்தால் எதுவும் நடக்கக் கூடும் என்று சிறிது நேரத்துக்கு முன்பு உறுதியான தீர்மானத்துடன் இருந்தவரின் உள்ளமும் கலங்கியது. மாதம் நாலாயிரம் சம்பாதிக்கும் சர்மாவின் அந்தஸ்து எங்கே. நாற்பது ரூபாய் சம்பாதிக்கும் ராமபத்திர அய்யருடைய நிலைமை எங்கே? அதற்காகப் பெற்றுவளர்த்த பெண்ணைக் கிணற்றில் தள்ளுவது போல் மூன்றாந்தாரமாகவா விவாகம் செய்து தருவது? இது எவ்வளவு பாதகமான செயல்?
பலதரப்பட்ட கேள்விகள் ராமபத்திரய்யரின் மனத்தைக் குழப்பி, அவர் தலையைக் கிறுக்க வைத்தன.
“அம்மா காமு! நான் கொஞ்சம் கழனி வரைக்கும் போய்விட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு, மனைவி கேட்ட கேள்விக்குப் பதில் ஒன்றும் கூறாமல் கொல்லைப் பக்கமாகக் கழனி வெளியை நோக்கிப் போனார், ராமபத்திர அய்யர்.
“நான் எதற்கு வரட்டுத் தவளை மாதிரி கத்த வேண்டும்? அததன் தலையெழுத்துப்படி நடக்கிறது! கோபு அகத்தில் அப்பளம் இடக் கூப்பிட்டார்கள் என்னை, போய்விட்டு வருகிறேன் காமு” என்று கூறிவிட்டு, விசாலாட்சியும் கிளம்பி விட்டாள்.
தனியாக விடப்பட்ட காமுவின் மனம் தாமரை இலைத் தண்ணீர் மாதிரி தத்தளித்தது.
“என்னுடைய சம்மதம் ஒன்றுதானே கேட்டார் அவர்? வேறு சீர் சிறப்புகளைப் பற்றி லட்சியம் செய்பவராகவே காணோமே?” என்று பல விதமாக நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் காமு. மணி ஜோஸ்யர் அடிக்கடி தன் தந்தையிடம் ‘அவள் ஒரு அதிர்ஷ்டக்காரி’ என்று கூறி வருவதை நினைத்துப் பார்த்தது அவள் மனம். அந்த அதிர்ஷ்டம் இதுதானோ என்றும் நினைத்தாள் காமு.
எந்த நிமிஷத்தில் யாரைத்தேடி ஸ்ரீ மகாலட்சுமியின் 9 டாட்சம் ஏற்படுகிறது என்பது யாராலும் அறிய முடியாத விஷயம் அல்லவா? காமுவின் அதிர்ஷ்டத்தால் அவளும், அவள் குடும்பமும் உயர வேண்டும் என்று இருந்தால் அப்படி நடந்தே தீரும். கடவுளின் கருணை இருந்தால் எது வேண்டு மானாலும் நடக்க முடியும் என்று அவள் தந்தை தீர்மானித்து இருந்தபடியே காமுவும் தீர்மானித்துக் கொண்டாள்.
மீனாட்சி அம்மாளும், ருக்மிணியும் பெண் பார்த்து விட்டு வந்த பத்து தினங்களுக்கு அப்புறம் ஒரு தினம்
திடீரென்று பள்ளிக்கூடத்திலிருந்து வந்த பானுவுக்கு லேசாக ஜுரமும், இருமலும் ஆரம்பித்தன. சம்பகம் முதலில் அதை அவ்வளவாகப் பாராட்டாமல் க்ஷஷாயம் வைத்துக் குழந்தைக்குக் கொடுத்தாள்.
அந்த வீட்டில் எடுத்ததற்கெல்லாம் ஓயாமல் ருக்மிணியும், அவள் குழந்தைகளும் மருந்து சாப்பிடுவார்கள். பொழுது விடிந்தால் அரை ‘பாக்கெட்’ பிஸ்கோத்துகளைக் கொடுத்துவிட்டுக் குழந்தை சரிவரச் சாப்பிடுவதில்லை என்று சொல்லிக் கொண்டு டாக்டரிடம் இழுத்துக்கொண்டு ஓடுவாள் ருக்மிணி அவர் தன் மனத்துக்குள் சிரித்துக் கொண்டே ஏதாவது மருந்தைக் கொடுத்து அனுப்புவார். ஓயாமல் பசியால் வாடும் ஏழை மக்களின் குழந்தைகளுக்கு ஒரு பிடி அன்னம் கொடுக்க மறுக்கும் உள்ளம், வெள்ளித் தட்டில் தயிர் விட்டுப் பிசைந்த சாதத்தைக் கூசாமல் நாய்க்குப் போடத் தயங்குவதில்லை.
பானுவுக்கு உடம்புக்கு வந்தால் முதலில் அதைப்பற்றி அவள் தாத்தா சர்மாவிடம் யாரும் சொல்லிவிடக் கூடாது என்பது மீனாட்சி அம்மாளின் தடை உத்தரவு! ‘தண்டத்திற்குப் பணம் செலவழித்துப் பிள்ளையின் குழந்தைக்கு வைத்தியம் பார்க்கக் குழந்தையின் தகப்பன் ஒன்றும் சம்பாதித்துப் புரட்டவில்லை’ என்பது அவள் தீர்மானம். சுக்கும், மிளகும்தான் பானுவின் ஔஷதங்கள்.
அந்த வீட்டிலேயே பானுவிடம் அன்புடன் இருப்பவர் சர்மா ஒருவர்தான். ஆகவே, அவருடைய அன்பையும் அந்தக் குழந்தை அடைவதில் மீனாட்சி அம்மாளுக்கு விருப்ப மில்லை.
குழந்தைக்குக் கஷாயம் கொடுத்துப் போர்த்திப் படுக்க வைத்து விட்டுத் தன் அலுவலைக் கவனிக்க ஆரம்பித்தாள் சம்பகம். சங்கரன் காரியாலயத்திலிருந்து வந்ததும் பானுவிடம் சிறிது நேரம் பேசுவான். அவன் அவ்விதம் குழந்தையிடம் சலுகை காட்டுவதும் மீனாட்சிக்குப் பிடிக்க வில்லை.
“ஆமாம், அது ஒண்ணுதான் குறைச்சல்!” என்று முகத்தைத் தோள் பட்டையில் இடித்துக் கொண்டு போவாள் அவள்.
அன்று டாக்டர் மகாதேவன் சங்கரனின் விருப்பத்தை அறிந்து கொண்டு போக வந்திருந்தார். சங்கரன் ஊரி லிருந்து வந்தது முதற்கொண்டு அவன் மனம் குழம்பிக் கிடந்தது. காமுவின் அழகிய வதனம் அடிக்கடி தோன்றி அவனைச் சஞ்சலத்தில் ஆழ்த்தியது குழம்பிய மனத்துடன் சங்கரன் தோட்டத்தில் உலாவிச்கொண்டே யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
தகப்பனாரிடம் தான் ஊரிலிருந்து வந்ததும் காமுவைப் பற்றிப் பிரஸ்தாபித்தது அவன் நினைவுக்கு வந்தது.
“எனக்கு நீ யாரைக் கல்யாணம் பண்ணிக் கொண் டாலும் ஒன்றுதான் அப்பா. பணம் பணம் என்று பறக்கிறவள் உன் அம்மாதான். அவளுடைய அபிப்பிராயத் தில் பணம் ஒன்றுக்குத்தான் மதிப்பு இருக்கிறதே ஒழிய வேறு விஷயங்களுக்கு மதிப்பே இல்லை! பதினைந்தாயிரம் சீருடன் வந்த உன் மதனி சம்பகம் இந்த வீட்டில் படும் அவஸ்தையைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய் சங்கரா? நீயும் ஒரு ஏழைப் பெண்ணைக் கொண்டு வந்து இந்த வீட்டில் அவஸ்தைப்பட விட்டு வைக்கப் போகிறாயா?” என்று கேட்டார் சர்மா.
சங்கரன் காமுவைப் பற்றிக் கூறியபோது, “ஆமாம். ஒன்றும் இல்லாமல் போனால் இரண்டாந்தாரமாக யாருக்காவது கொடுக்கிறதுதானே?” என்று வெகு அலட்சிய மாகச் சொன்னாள் மீனாட்சி அம்மாள். தகப்பனார் சர்மாவோ எதிலும் பட்டுக் கொள்ளாதவர். தாய் ஒரு அகங்காரம் பிடித்தவள். சங்கரன் காமுவைப் பற்றி அந்த வீட்டில் யாருடன் பேசுவது? யோசனையில் மூழ்கி இருந்த சங்கரனைச் சம்பகம் வந்து கூப்பிட்டாள்.
“அம்மா உங்களைத் தேடுகிறாரே?’ என்றாள் சம்பகம்.
பரிதாபமான அந்த முகத்தைப் பார்த்ததும் சங்கரனுக்குக் காமுவின் வருங்கால வாழ்வு இந்த வீட்டில் இன்னும் பரிதாபமாக ஆகிவிடக் கூடும் என்று தோன்றியது.
”மன்னி, எனக்கு ஏனோ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணமே இல்லை?” என்று கூறினான் சங்கரன்.
“பெண் நன்றாக இருக்கிறாளாமே? எல்லோரும் பார்த்து விட்டு வந்தார்கள். நீங்களும் பார்த்திருக்கிறீர் களாம்.
“பெண் பார்ப்பதற்கு நீங்கள் போக வில்லையா மன்னி?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் சங்கரன்.
‘இல்லை. நான் எதற்கு?” அவள் கூறிய பதிலில் அந்தக் குடும்பத்தின் மனோபா வம் பளிங்கு போல் தெரிந்தது.
“சம்பகம் எதற்கு? வாழாவெட்டி! கணவனால் கைவிடப்பட்டவள் எதற்கு?’-இவ்வாறு எண்ணியபோது, சங்கரனுக்கு மூளையே குழம்பி விடும் போல் ஆகிவிட்டது.
‘மன்னி! பானு எங்கே?” என்று கேட்டான்.
“ஜுரம் நெருப்புப் பறக்கிறது. நான் வருகிறேன்” என்று கூறிவிட்டு, சம்பகம் அங்கிருந்து போய்விட்டாள்.
அடுப்பங்கரையில் தன்னுடைய மேற்பார்வையில் தயாரான ரவாஸொஜ்ஜியையும், வெள்ளி டம்ளரில் காபியையும் எடுத்துப் போய் மீனாட்சி அம்மாள் டாக்டர் மகாதேவனுக்கு உபசாரம் பண்ணினாள்.
“சீர் விஷயங்கள் எல்லாம் நீங்கள் ஒன்றுமே சொல்ல வேண்டியதில்லை. எனக்கு இருப்பதெல்லாம் நீலாவுக்குத் தான். அவளைத் தவிர வேறு யாருக்குக் கொடுக்கப் போகிறேன் நான்?” என்று பெருமையுடன் கூறி முடித்தார் ம காதேவன்.
“சங்கரனை ஒரு நிமிஷம் பார்த்துவிட்டுப் போய் விட்டால் தேவலை” என்று மகாதேவன் அவசரப்படுத்தவே, மறுபடியம் மீனாட்சி அம்மாள் அவனைத் தேடிக் கொண்டு கொல்லைப் பக்கம் வந்தாள். ஆனால், சங்கரன் அங்கு இல்லாமல் குழந்தை பானுவின் பக்கத்தில் உட்கார்ந்திருந் தான். நெருப்புப் பறக்கும் ஜுர வேகத்தில் குழந்தை மூச்சு விடுவதற்கே திணறினாள். பக்கத்தில் சம்பகம் துயரமே வடிவாக உட்கார்ந்திருந்தாள்.
“ஏண்டா, ஒரு நாழியாக உன்னைத் தேடுகிறேன். அவர் உன்னைப் பார்க்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருக் கிறார். நீ பாட்டுக்கு இங்கே உட்கார்ந்திருக்கிறாயே? இதுக்கு என்ன முழுகி விட்டதாம் இப்போ?” என்று அதிசயத்துடனும், ஆத்திரத்துடனும் கேட்டாள் மீனாட்சி அம்மாள்.
சங்கரனுக்குத் தாயின் குணம் தெரியும். தமையனால் நிராதரவாக விடப்பட்ட குழந்தை பானுவும், சம்பகமும் அந்த வீட்டில் படும் அவஸ்தையும் தெரியும்.
“வருகிறேன் அம்மா. பானுவுக்கு ஜுரம் அதிகமா இருக்கிறதே? சாயங்காலம் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் டாக்டர் வீட்டுக்குக் கூட்டிப் போய் இருப்பேனே?”
பிரசன்னமாக இருந்த மீனாட்சி அம்மாளின் முகம் கடு கடுவென்று மாறியது. கோபத்தால் முகம் சிவக்க சம்பகத்தை உருட்டி விழித்துப் பார்த்தாள்.
“அதுக்குத் தான் குளிர் காலமானால் காய்ச்சலும், இருமலும் வருகிறதே? இவள் செல்லம் கொடுத்துக் கொடுத்து குட்டிச் சுவராக்குகிறாள் அதை. தண்டும் காணாமலும் வெறுமனே எதையாவது தின்று கொண்டே. இருந்தால் உடம்புக்கு வராதா?”
சம்பகமோ, சங்கரனோடு பதில் கூறுவதற்கு முன்பு ருக்மிணி அங்கு வந்து சேர்ந்தாள்.
“நன்றாக இருக்கிறதே மரியாதை!அவர் எத்தனை நாழி உனக்காகக் காத்திருப்பார்? போய் ஒரு நிமிஷம் பேசி விட்டுத்தான் வாயேண்டா!” என்று உரிமையுடன் தம்பியை அதட்டி, சங்கரனை அங்கிருந்து ஹாலுக்கு அனுப்பி வைத்தாள்.
தொலைவில் பொன்மணி கிராமத்தில் சிறிய வீட்டில் பொறுமையே உருவான காடுவின் அழகியமுகம் மறுபடியும் சங்கரனின் மனக் கண் முன்பு தோன்றி மறைந்தது. அங்கு அவன் அவளுடன் பேசிய பேச்சுக்கள்,ராமபத்திரஅய்யரிடம் நம்பிக்கையுடன் கூறிவிட்டு வந்த வார்த்தைகள் யாவும் கடலில் கரைத்த சர்க்கரை போல் மறைந்துவிட்டன. திரண்ட செல்வமும், அழகிய பெண்ணும், போக வாழ்க்கை யுமே அவன் முன்பு பிரும்மாண்ட உருவில் தோன்றின.
“ஹல்லோ!” என்று டாக்டர் மகாதேவன் சங்கரனின் கையைப் பிடித்துப் பலமாகக் குலுக்கினார். பதிலுக்குப் புன்சிரிப்புடன் அவர் கையைப் பிடித்துக் குலுக்கி விட்டு மரியாதையாக நின்றான் சங்கரன்.
“அப்படியானால் முகூர்த்தம் வைத்து விடுகிறேன், மிஸ்டர் சர்மா! என்ன சங்கரா?” என்று கம்பீரமாகக் கேட்டார் அவர்.
சங்கரனும், அங்கு இருந்த பெரியோர்களும் தலை அசைத்து ஆமோதித்தனர்.
உள்ளே. குழந்தை பானு மூச்சு விட் முடியாமல் திணறு வதைக் கண்டு சம்பகம் கைகால் பதற ஹாலுக்கு வந்தாள்.
தாயின் கடுகடுப்பையும், தமக்கையின் நிஷ்டூரத்தை யும் பொருட்படுத்தாமல் சங்கரன் ஓடிப் போய் டாக்டரை அழைத்து வந்தான். பானுவுக்கு ‘டிப்தீரியா’ வியாதி என்றும், உடனே சிகிச்சை செய்ய வேண்டும். என்றும் டாக்டர் கூறிவிட்டு, இஞ்செக்ஷன் கொடுத்துச் சென்றார்.
“நாளை சாயங்காலம்’ சம்பந்தி வீட்டார் கல்யாணம் சொல்ல வரப் போகிறார்கள், இங்கே இவ்வளவு அமர்க்களப் படுகிறதே?” என்று அலுத்துக் கொண்டாள் ருக்மிணி.
‘என்றைக்குத்தான் நேரே இருந்தது எல்லாம். வயிற்றிலே இருக்கும் போதே அப்பனைக் கண் காணாத இடத்துக்கு ஓட்டி விட்டது. சித்தப்பன் கல்யாணத்துக்கும் தடங்கலாக இருக்கிறது இப்போ” என்று மீனாட்சி அம்மாள் பட படவென்று ஆத்திரத்துடன் பொரிந்து தள்ளினாள். “வருகிற வியாதியாவது சாதாரணமாக வருகிறதா? நூறு நூறாய்ச் செலவழிக்கும்படியல்லவா இருக்கிறது?” என்று ருக்மிணி அலுத்துக் கொண்டாள். அவளைவிட சம்பகத் துக்கும், பானுவுக்கும் அந்த வீட்டில் உரிமை அதிகம்’ உண்டு என்பதை அவள் மறந்தே விட்டாள்.
உணர்ச்சி மேலீட்டால் சர்மா பேசும் சக்தியை இழந்து, தம் அறையில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார். பிள்ளையால் அனாதையாக விடப்பட்ட குழந்தையைத் தான் கூட மனைவிக்குப் பயந்து அதிகமாகக் கவனிக்காமல் இருந்து விட்டோமே என்று அவர் மனச்சாட்சி அவரைக் குத்திக்கொண்டேயிருந்தது.
சம்பகம் துக்கம் ஒரு எல்லையை மீறிப் போகும்போது ஏற்படும் ஒரு வித தைரியத்தை அடைந்திருந்தாள். குழந்தைக்கு டாக்டர் கூறியபடி ஆகாரம் கொடுத்தும், கண் இமைக்காமல் அவள் அருகில் உட்கார்ந்தும் சிகிச்சை செய்தாள். கொடிய தொத்து வியாதி ஆதலால், அதைச் சாக்காக வைத்துக் கொண்டு பானு இருந்த அறைப் பக்கம் யாருமே வருவதில்லை.
“குழந்தையிலே நானும், அவனும் ஒன்றாக விளையாடு வோம். எடுத்ததற்கெல்லாம் அவன் என்னுடன் சண்டை பிடிப்பான்” என்று நாலு பேர் முன்னிலையில் பானுவின் தகப்பானரைப் பற்றி ருக்மிணி பெருமையாகப் பேசுவாள். அவள் அன்று உடன் பிறந்தானின் குழந்தை சாகக் கிடக் கிறதே என்றும் பார்க்கவில்லை. பானு இருக்கும் அறைப் பக்கம் பார்த்தால் கூட வியாதி ஒட்டிக் கொள்ளும் என்கிற நோக்கத்துடன் நடந்து கொண்டாள் அவள்.
இவ்வளவு அலட்சியங்களையும், வேதனைகளையும் சம்பகம் எதற்காகச் சகித்துக் கொள்ள வேண்டும்? என்றாவது ஒரு நாள் தன் துன்ப வாழ்வுக்கு விடிவுகாலம் ஏற்படும் என்கிற நம்பிக்கைதான் காரணம். பிறந்த இடத்தைவிடப் புகுந்த இடத்தை உயர்வாகக் கருதும் பாரத நாட்டுப் பெண்களின் பெருமை தான் அவளை அவ்விதம் எண்ணிஅளவு கடந்த துன்பத்தையும் பொறுத்துக் கொள்ளும் படி செய்தது.
ஆனால், எதற்கும் ஒரு அளவு இருக்கிறதல்லவா? நாட்டுப் பெண்ணின் துரதிர்ஷ்டத்தால் பிள்ளையை உயிருடன் இழக்கும்படி நேரிட்டிருந்தாலும், ஒன்றும் தெரியாத குழந்தை இவர்களை என்ன செய்தது? பிள்ளை யின் குழந்தை, உடன் பிறந்தானின் குழந்தை என்கிற பாசம் கூட இல்லாமல் போய் விட்டதல்லவா?
வீட்டில் ஒரே அமர்க்களம்! விருந்துச் சாப்பாடும்’ கல்யாணப் பேச்சும், சீர் சிறப்புக்களின் பெருமையும் காதைத் துளைத்தன. சம்பகம் என்று ஒரு மனுஷி இருப்பதாகவோ அவள் குழந்தை சாகக் கிடப்பதாகவோ ஒருவரும் நினைக்க வில்லை. சம்பகத்தின் மனம் குமுறியது. இப்படி உதாசீனம் செய்பவர்கள் மத்தியில் இருப்பதைக் காட்டிலும் தன் கூடப் பிறந்தவன் தன்னை எப்படி நடத்தினாலும் அவனுடன் போய் இருந்து விடலாம் என்று தோன்றியது அவளுக்கு.
கூடத்தில் எல்லோரும் சாப்பிட்டு விட்டு, அமர்ந்து தாம்பூலம் தரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். சம்பகமும், சமையல்கார மாமியும் வீட்டைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்!” என்றாள் மீனாட்சி அம்மாள்.
“கல்யாணத்துக்கு மதனி வர வேண்டாமா அம்மா?” என்று சங்கரன் கேட்டான்.
“குழந்தையை மாத்திரம் அழைத்துப் போனால் போறும்!” என்றாள் ருக்மிணி.
“குழந்தை இருக்கிற இருப்பிலே கல்யாணத்துக்கு அழைத்துப் போகிறார்களாம்!” என்று மனத்துக்குள் வேதனைப்பட்டாள், அவர்கள் பேச்சை அரையும் குறையு மாகக் கேட்ட சம்பகம்.
அதற்குப் பிறகு நாலைந்து தினங்கள் கழித்து சம்பகம் மாமனாரிடம், தான் ஊருக்குப் போய் வருவதாக உத்தரவு கேட்டாள்.
“உனக்கு இந்த வீட்டில் என்ன கஷ்டமிருந்தாலும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாதா அம்மா?” என்று சர்மா கேட்டார் நாட்டுப் பெண்ணிடம்.
“இல்லை மாமா! குழந்தைக்கும் இடம் மாறுதல் ஏற்பட்டால் நல்லது. கொஞ்ச நாளைக்கு என் தமையன் வீட்டில் இருந்து விட்டுத்தான் வருகிறேனே?” என்று அவள் வற்புறுத்தவும் சர்மா அவளை ஊருக்கு அனுப்பி வைக்க இசைந்தார்.
பானுவையும், சம்பகத்தையும் ரயிலேற்றி விடச் சென்றிருந்த சகரன் அவளிடம், “மதனி! என்னவோ அம்மாவின் திருப்திக்காக இந்தக் கல்யாணம் நடக்கிறது. நீங்களும் இல்லாமல் போகிறீர்களே?” என்று கேட்டான் மனத்தாங்கலுடன்.
சம்பகம் பெருமூச்சு விட்டாள்.
“ஒருவருக்காக உங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள். நான் இருந்து என்ன ஆகவேண்டும்? ஆசையுடன் என்னை யாராவது இருக்கும் படி கூறினார் களா? கொஞ்ச காலம் கண் மறைவாகத் தான் இருந்து விட்டு, வருகிறேனே” என்று கூறிவிட்டு கண்ணில் ததும்பும் நீரை முந்தானையால் துடை த்துக் கொண்டாள்.
சங்கரனுக்கு வேதனை தாங்கவில்லை. அக்னி சாட்சி யாகக் கைப்பிடித்த மனைவியை மறந்து வாழத் தன் தமையனால் முடிந்த போது.அவனை மறந்து வாழ சர்பகத் தால் முடியவிலை. காமுவை மறந்து இன்னெருத்தியைத் தான் மணந்து கொண்டாலும், காமு தன்னை மறந்து விட மாட்டாள். தான் மறக்கலாம், அவள் மறக்கக் கூடாது. இது என்ன சுயநலம்?
சங்கரன் கேவலம் பணத்தின் முன்பு கோழையாக மாறி விட்டான். ஆயிரம் மனக் கோட்டைகள் கட்டிக் கொண் டிருக்கும் காமுவை ஒரு நொடியில் அவனால் உதற் முடிந்தது.
ரயில் வண்டி ‘கூ’ என்று கத்திக் கொண்டு புறப் பட்டது.பானு, வியாதியால்மெலிந்து போன தன் பிஞ்சுக்கை சுளை ஜன்னலுக்கு வெளியே நீட்டி சித்தப்பாவுக்குக்‘டாடா’ காட்டினாள்.
– தொடரும்…
– ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது.
– பனித்துளி (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1996, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.