கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2024
பார்வையிட்டோர்: 2,775 
 
 

(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

3 – நீலா போட்டியிட்டாள்

மீனாட்சியின் மத்தியானத் தூக்கம், கலைந்ததும் முதன் முதலில் அவசரமாக சங்கரனின் ஜாதகத்தைப் பெட்டியிலிருந்து எடுத்து வைத்துக்கொண்டாள். அன்று சாயங்காலம் டாக்டர் மகாதேவன் வந்தால் சாக்குப்போக்கு ஒன்றும் சொல்லாமல் ஜாதகத்தைக் கொடுத்து விட வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டாள். ஜாதகத்தை எடுத்துச் சமையலறையில் இருக்கும் சுவாமி படத்தின் அருகில் வைத்து விட்டுச் சமையலறையை ஒரு கண்ணோட்டம் பார்த்தாள் மீனாட்சி. 

இரண்டாந்தரம் சிற்றுண்டிக்காக அங்கே யாதொரு ஏற்பாடும் நடக்கவில்லை. மணி இரண்டுக்கு மேல் ஆகியும் வீட்டில் எல்லோரும் பேசாமல் இருப்பதைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பரபர வென்று ஆட்டுக் கல்லை அலம்பி உளுத்தம் பருப்பை உரலில் இட்டு அரைக்க ஆரம்பித்தாள். 

சமையல் கட்டுக்கு அடுத்தாற் போல் தையல் மிஷினில் ஏதோ தைத்துக் கொண்டிருந்த சம்பகம் திடுக்கிட்டு எழுந்தாள். காலைச் சமையலுக்கு அப்புறம் சமையல்கார அம்மாமி யாரோ உறவினர் வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போய்விட்டது அவள் நினைவுக்கு வந்தது. பயத்துடன் சமையலறை நிலைப்படி அருகில் வந்து நின்று, “அம்மா! நான் அரைக்கிறேன். நீங்கள் எழுந்திருங்கள்” என்றாள் சம்பகம். மீனாட்சி கோபத்தால் குழவியை வேகமாகச் சுற்றத் தொடங்கினாள். சம்பகம் மேடை அருகில் சென்று கும்மட்டியைப் பற்ற வைத்து தண்ணீர் வைத்து விட்டு மறுபடியும், “அம்மா! எழுந்திருக்கிறீர்களா?” என்று விநயமாகக் கேட்டாள். 

“எழுந்திருக்க வேண்டுமா? இவ்வளவு நாழி வேலை இருக்கிறது என்று உனக்குத் தெரியவில்லையே? இப்போ தான் தெரிஞ்சுதாக்கும்!” என்று படபடவென்று கூறிக் கொண்டே உரலை விட்டு எழுந்தாள் மீனாட்சி. 

சம்பகம் பதில் பேசாமல் உரல் அடியில் உட்கார்ந்து அரைக்க ஆரம்பித்தாள். 

“ஒரு நாளைக்குச் செய்ய இப்படி மூக்கால் அழுகிறாயே, உன் புருஷன் சட்பாத்தியம் பாழாகவா போகிறது இங்கே? அவன் சம்பாதிக்க ஆரம்பித்துக் காலணா காசு கூட நாங்கள் கண்ணால் பார்க்க வில்லை. உன்னுடைய அதிர்ஷ்டம் சரி யாக இருந்தால் அவன் ஏன் இப்படிக் கண் காணாத இடத்தில் இருக்கிறான்?” என்றாள் மீனாட்சி. 

காரணமில்லாமல் மாமியாரின் கோபத்துக்கு ஆளாகும் போதெல்லாம் சம்பகம் மௌனமாக இருந்து விடுவது வழக்கம். துக்கம் தாளாது அவள் எதிரில் அழ ஆரம்பித்து விட்டால் இன்னும் பல கொடுஞ் சொற்களைக் கேட்க நேரிடும் என்று, அவள் துக்கத்தை மனத்துடன் அழுத்திக் கொண்டு விடுவாள். தன்னந் தனியாகப் பேச்சுத் துணை யின்றி இருக்கும் இரவு நேரங்களில் தான் அவள் தன்னுடைய நிலையை நினைத்து அழுவாள். வானத்தில் பவனி வரும் சந்திரனும், சுடர் விடும் தாரகைகளும் அவளுடைய மனத் துயரத்தைக் கண்டிருக்கின்றன. பக்கத்தில் தூங்கும் ஆறு வயசுப் பெண் பானு திடீரென்று விழித்துக் கொண்டு, தாயின் கண்களில் குளமாகத் தேங்கிக் கிடக்கும் கண்ணீ ரைப் பார்த்து ஒன்றும் புரியாமல் திகைப்பாள். மனத் துயரைத் மறைக்கும் சகதி-சகிப்புத் தன்மை சம்பகத்துக்கு எப்படியோ ஏற்பட்டு விட்டது. 


கட கடவென்று உருளும் குழவியின் சத்தத்தை மீறிக் கொண்டு மறுபடியும் மீனாட்சி அம்மாள் ஆரம்பித்தாள். “ஆமாம், சங்கரன் ஊருக்குப் போனானே, அவனுடன் நீயும் கொஞ்ச நாள் உன் பிறந்த வீட்டுக்குப் போய் விட்டு வருவது தானே? வருஷக் கணக்காக உனக்கும் உன் குழந்தைக்கும் செய்ய இங்கே கொட்டிக் கிடக்கிறதா?” 

என்னதான் பொறுமையுடன் சகித்துக் கொண்டாலும் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா? பொழுது விடிந்து பொழுது போவதற்குள் நாலைந்து முறைகளாவது தினம், “உனக்குத் தண்டச் சோறு போடுகிறேன்” என்று மீனாட்சி குத்திக் காட்டாமல் இருப்பதில்லை. சர்மா சம்பாதித் திருக்கும் சொத்தில் சம்பகத்தின் கணவனுக்கும் பங்கு உண்டு என்பதை மறந்து மீனாட்சி பேசிக் கொண்டிருந் தாள். சம்பகத்தின் கல்யாணத்துக்காக அவள் பிறந்த வீட்டார் அவர்கள். சக்திக்கு மீறியே செலவழித்தார்கள். பாத்திரங்களும், பண்டங்களும், விலை உயர்ந்த தகை களுமாகச் செய்து போட்டார்கள். ஒட்டியாணம் இல்லாமல் நாட்டுப் பெண் தன் வீட்டுப் படி ஏறக்கூடாது என்று மீனாட்சி தடை விதித்தாள். சம்பகத்தின் தகப்பனார் கையில் இருந்த ரூபாயுடன் கடன் வாங்கி இருபது பவுனுக்கு ஒட்டியாணம் செய்து போட்டுப் பெண்ணை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மருமகன் அயல் நாட்டில் வேறு பெண்ணுடன் தங்கி விட்டான் என்கிற செய்தியைக் கேட்டு மனம் இடிந்து போனவர், அப்புறம் எழுந்திருக்கவே இல்லை. அவருக்குப் பிறகு, தங்கையின் மாமியார் வீட்டார் மீது ஏற்பட்டிருந்த அளவுக்கு மீறிய வெறுப்பால் சம்பகத்தின் தமையன் அவளைப் பற்றி அக்கறையுடன் ஒன்றும் விசாரிப்பதில்லை. வாழா வெட்டி யாக இருந்தாலும், பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணத் துடன் போயிருக்கும் அவளைக் கவனிக்க வேண்டிய கடமை தன்னுடையது இல்லைபோல் நடந்து கொண்டான் அவன். 

“மைத்துனர் போகும்போது என்னையும் அனுப்பச் சொல்லி மாமாவைக் கேட்டேன். அவருக்கு என்னை அங்கே அனுப்ப இஷ்டமில்லை என்று சொல்லி விட்டார் அம்மா!” என்றாள் சம்பகம். அவள் கண்களில் நீர் தேங்கி இருந்தது. இருபத்தி ஐந்து வயது கூட நிரம்பாத தான் வாழ்க்கையின் கசப்பு அவ்வளவையும் ருசித்து விட்ட வெறுப்பும் அக்கண்களில் காணப்படடது. 

“மாமா சொல்லுவார்! ஹும்…அவர் ஏன் சொல்ல மாட்டார்? வளவன்குடி மிராசுதார் வீட்டுப் பெண் வந்ததே உன் அகமுடையானுக்கு! அதை வேண்டாமென்று விட்டு “மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் பெண்’ என்று உன்னைத் தேடிப் பிடித்து வந்தாரோல்லியோ? லட்சுமீகரம் தாண்ட வம் ஆடுகிறது, உன்னாலே!” என்று கையை ஆட்டி முகத்தைச் சுளுக்கி அழகு காண்பித்தாள் மீனாட்சி. 


சமையல்கட்டில் மனைவியின் குரல் உரத்துக் கேட்கவே சர்மாவின் மத்தியானத் தூக்கம் கலைந்தது. உடனே எழுந்து சமையலறைக்கு வந்தார் சர்மா. “ஏண்டி, வர வர உன் அட்டகாசம் இந்த வீட்டில் சகிக்கமுடியவில்லை? மத்தி யான வேளையில் உன் தொண்டைதான் இந்தத் தெருவில் கேட்கிறது?” என்று கூறிவிட்டு, குளியல் அறைக்குச் சென்றார் அவர். 

அதற்குள் உளுத்தம் பருப்பை அரைத்து எடுத்துக் கொண்டு, வாணலியில் எண்ணெயை வார்த்து அடுப்பில் வைத்து விட்டுக் காபியைக் கலப்பதில் ஈடுபட்டாள் சம்பகம். நாத்தனார் ருக்மிணி எழுந்து வந்து அதிகாரம் செய்வதற்கு முன்பே காபியைத் தயாராக வைத்து விட வேண்டும் என்கிற பயம் அவளுக்கு. 

மீனாட்சி அம்மாள் என்ன தான் அதிகாரம் செலுத்து வதில் கை தேர்ந்தவளாக இருந்தாலும், சர்மாவின் வார்த்தையை மீறி அவளால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. சள சளவென்று ஓயாமல் சம்பகத்தை அவள் தமையனுடன் அனுப்பி விடச் சொல்லி எவ்வளவோ முறைகள் சர்மாவிடம் கூறியிருக்கிறாள் மீனாட்சி. ஆனால், அவர் அவள் துணைப்பு வதை லட்சியம் பண்ணுவதேயில்லை. அவராலும் பொறுக்க முடியாமல் போனால், “அடி சீ அந்தப் பெண் இங்கே இருப்பதால் உன் மஞ்சக் காணி சொத்தா குறைந்து போகிறது? பாவம்! புருஷனைப் பிரிந்து இருக்கும் துக்கம் போதாதென்று நீ ஏன் அதை வாட்டி எடுக்கிறாய்?” என்று ஒரு அதட்டல் போடுவார், பதிலுக்கு முணு முணுத்துக் கொண்டே போய் விடுவாள் மீனாட்சி. அன்றையப் பொழுதுக்கெல்லாம் சம்பகத்துக்குத் திட்டுகளும் இடிச் சொற்களும் பலமாகக் கிடைக்கும். 


மாமனாருக்காக அவர் மேஜை மீது காபியையும், சிற்றுண்டியையும் வைத்து விட்டு சம்பகம் உள்ளே திரும்பும் போது, வாயிற் கதவைத் திறந்து கொண்டு டாக்டர் மகாதேவன் வந்து சேர்ந்தார். வந்தவரை வரவேற்று உட்காரச் சொல்லி விட்டு சர்மா, “அம்மா சம்பகம்! டாக்டர் வந்திருப்பதாக உன் மாமியாரிடம் சொல்” என்று கூறினார். 

சம்பகம் சமையலறைக்குச் சென்று விஷயத்தை அறிவித்தவுடன் சுவாமி படத்து அருகில் சுருட்டி வைக்கப் பட்டிருந்த ஜாதகத்தை அவசரமாக எடுத்தாள் மீனாட்சி. பெரிய அளவில் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்பாளி $ படம் அது. மீனாட்சி ஜா தகத்தைச் சரேலென்று எடுத்த வேகத்தில், சுவரிலிருந்து கயிறு அறுபட்டு படம் கீழே விழுந்து, கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து பூஜை அறை முழுவதும் சிதறியது 

‘ஏண்டி! படத்தின் கயிறு சரியாக இருக்கிறதா என்று பாக்கமாட்டாயா” என்று கூறிக் கொண்டே கீழே சிதறி இருந்த கண்ணாடித் துண்டுகளையும், ஜாதகம் எடுக்கும் போது நேர்ந்த சகுனத் தடையையும் பொருட்படுத்தாமல் மீனாட்சி முன் கட்டுக்கு விரைந்தாள். 

உடைந்த படத்துள், கருணையே வடிவான அம்பிகை யின் வண்ணப் படம் சிறிதும் சேதமடையாமல் இருந்தது. 

‘தாயே! இந்த குடும்பத்துக்கு யாதொரு கஷ்டமும் வராமல் காப்பது உன்னுடைய கருணை அம்மா!” என்று வாய் விட்டு வேண்டிக் கொண்டே சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகளைப் பெருக்கிச் சுத்தம் செய்வதில் முனைந்தாள் சம்பகம். “மைத்துனர் சங்கரனின் குணத்துக்கு அவர் நன்றாக இருக்க வேண்டும்” என்று அவள் மன அந்தரங்கத்தில் ஒரு வேண்டுகோள் எழுந்தது. 

“அவருக்குக் கல்யாண விஷயம் பேச ஆரம்பிப்பதற்கு முன்பு படம் உடைந்ததே! எதன் ஆரம்பமோ இது” என்று வேறு அவள் மனம் குழம்பிக் கொண்டிருந்தது. 


டாக்டர் மகாதேவன் சங்கரனின் ஜாத்கத்தை வாங்கிக் கொண்டு அவருடைய பெண் நீலா வின் ஜாதகத்தை மீனாட்சி அம்மாளிடம் கொடுத்தார். ‘சங்கரனைத்தான் நேரில் பல இடங்களில் பார்த்திருப்பதால் பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்கிற அபிப்பிராயம் தனக்கு இல்லை என்பதாகவும், நீலாவும் சங்கரனை அநேக இடங்களில் பார்த்து தன் சம்மதத்தை அறிவித்ததன் பேரில்தான் இந்த விவாகத்துக்குத் தான் முயற்சி எடுத்துக்கொண்டிருப்பதாக வும் தெரிவித்தார். பெண்ணைப் பார்ப்பதற்கு மீனாட்சி அம்மாளையும், சங்கரனின் தமக்கை ருக்மிணியையும் வ்ரச் சொல்லி அழைத்தார். மரியாதைக்காக மேஜைமீது வைக்கப் பட்ட சிற்றுண்டியைச் சிறிது ருசிபார்த்து விட்டு, ஒரு பெரிய கும்பிடோடு விடை பெற்றுக் கொண்டார் அவர். அந்த ஹாலை விட்டு அவர் வெளியேறி ஐந்து நிமிஷங்கள் வரை யில் புகை போல் சூழ்ந்திருந்தது அவர் குடித்த சுருட்டின் புகை! 

“வருகிற இடத்திலுமா ஊத வேண்டும் சுருட்டை!” என்று தன் அருவருப்பை முகத்தைச் சுளித்து அறிவித்துக் கொண்டாள் மீனாட்சி.

“நாற்றம் சகிக்கவில்லை!” என்று உதட்டை மடக்கித் தன் அபிப்பிராயத்தைக் கூறிவிட்டு ருக்மிணி, அன்று மாலை பெண் பார்ப்பதற்காகத் தன்னை அலங்காரம் செய்து கொள்வதில் முனைந்தாள். 

“ஏன்னா! நீங்களும் வருகிறீர்களா எங்களோடு?” என்று சர்மாவைக் கொஞ்சியவாறு கேட்டாள் மீனாட்சி. நாணிக் குழைந்து அவள் கேட்ட மாதிரியிலிருந்து அவளே ஒரு கல்யாணப் பெண்ணைப் போல் இருந்தாள் என்று சொல்லலாம். 

சர்மா சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். பிறகு தொண்டையைக் கனைத்துக் கொண்டு, ‘மீனு! எந்தக் காரியத்தையும் செய்வதற்கு முன்பு நன்றாக யோசனை செய்ய வேண்டும். டாக்டரின் பெண்ணை நான் இரண்டு மூன்று தடவைகள் பார்த்திருக்கிறேன். பெண் ரொம்பவும் நாகரிகமாக இருப்பாள். மாமியார், மாமனார் எதிரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது. காபி அவள் இருக்கும் இடத்துக்குத்தான் அனுப்ப வேண்டும் சம் கம் மாதிரி நீ சொல்வதை யெல்லாம் கேட்டுச் சகித்துக் கொண்டிருக்க மாட்டாள். நாளைக்குக் கல்யாணம் நடந்த பிறகு எந்தவித மனஸ்தாபங்களுக்கும் இடமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும். பெண் என்னவோ நன்றாகப் படித்திருக்கிறாள். லட்சணமாகவும் இருக்கிறாள்” என்றார். 

சர்மா தன் அபிப்பிர யத்தைக் கூறிவிட்டு மறுபடியும் நாற்காலியில் சாய்ந்து கொண்டு தினசரி படிப்பதில் முனைந்தார். 

“அவளை நான் என்ன சொல்லக் கிட க்கிறது? அவ்வளவு விவேகம் இல்லையா எனக்கு?’ என்று மனத் தாங்கலுடன் கேட்டாள் மீனாட்சி தன் கணவனைப் பார்த்து. 

மணி ஐந்துக்கு டாக்டர் மகாதேவன் வீட்டிற்கு வருவதாகத் தெரிவித்திருந்ததால் மீனாட்சி பேச்சை அதிகம் வளர்த்தாமல் இருந்து விட்டாள். பெண்ணும், தாயாரும் உடுத்திக் கொண்டு புறப்பட்டார்கள். ருக்மணி பள பள வென்று ஜ்வலிக்கும் வைர நெக்லெஸை அணிந்து கொண்டாள். ‘உப்’பென்று பருத்திருந்த கழுத்தில் புதையப் புதைய இருந்தது அட்டிகை. மீனாட்சி அம்மாள் கெம்பு அட்டிகையையும், கெம்பு வளையல்களையும் அணிந்து அரக்குப் புடவை உடுத்திக் கொண்டு புறப்பட்ட போது சர்மா லேசாகச் சிரித்து, “இன்றைக்கு அம்பாளுக்கு ரத்தினச் சேவை போலிருக்கிறது!” என்று அவளைப் பரிகசித்தார். 


இருவரும் காரில் புறப்பட்டுச் சென்ற பிறகு, சர்மா பின் கட்டு கூடத்துக் கதவு அருகில் நின்று கொண்டிருந்த சம்பகத்தைப் பார்த்தார். சாதாரண நூல் சேலை உடுத்திக் கழுத்தில் பளிச்சென்று ஒளிரும் மாங்கல்யச் சரடுடன், ஒரு மெல்லிய தங்கச் சங்கிலியும் கைகளில் மெல்லிய இரண்டு தங்க வளையல்களும் அணிந்து, நெற்றியில் பளிச்சிடும் குங்குமப் பொட்டுடன் நிற்கும் சம்பகம் எளிமைக்கு எடுத்துக்காட்டாக இருந்தாள். 

“நீயும் போய்விட்டு வருவது தானே அம்மா?” என்று கேட்டார் சர்மா, நாட்டுப் பெண்ணைப் பார்த்து. 

“வீட்டிலே சமையல்கார மாமி இல்லை. இரவுதான் வருவாள். எல்லோரும் போய் விட்டால் எப்படி?” என்று விநயமாகக் கூறினாள் சம்பகம். 

சமையல்காரி இருக்கும் நாட்களில்கூட சம்பகம் சிறையில் அடைபட்ட சீதா தேவியைப் போல் வெளியில் எங்கும் ‘போகாமல் இருப்பது சர்மாவுக்குத் தெரியும். கணவன் செய்த குற்றத்துக்காக அவள் மனம் வருந்தி துன்ப வாழ்க்கை நடத்துவதும் அவருக்குத் தெரிந்த விஷயம்தான். சமையல்காரிக்கு உதவியாக வேலைகள் செய்தது போக எஞ்சி இருக்கும் நேரத்தைக் குடும்பத்துக்கு வேண்டிய துணிமணிகள் தைப்பதில் கழிப்பாள் சம்பகம். 

“குழந்தை பானு பள்ளிக்கூடத்திலிருந்து வந்து விட்டாளா?” என்று சர்மா கேட்டார். 

“இன்றைக்கு மத்தியானம் அவளுக்குப் பள்ளிக்கூடம் விடுமுறையாம். அந்தப் பக்கத்தில் இருக்கிறாள் போல் இருக்கிறது” என்று கூறிவிட்டு, பானுவை அழைத்து வர கொல்லைப் பக்கம் சென்றாள் சம்பகம். 

கொல்லையில் ஒரு மாமரத்தடியில் பானு கண்கள் சிவக்க அழுது கொண்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்த சம்பகத்துக்கு வேதனை நெஞ்சைப் பிழிந்தது. 

“அம்மா! பாட்டியும், அத்தையும் என்னை அவர்களுடன் வரக் கூடாதென்று சொல்லி விட்டார்கள்” என்று கூறி, பானு பெரிதாக அழ ஆரம்பித்தாள். 

“குழந்தையிடமா இவர்கள் மனக் கசப்பைக் காட்ட வேண்டும். தன் பிள்ளையின் குழந்தை என்கிற பாசம் கூடப் போய்விட்டதோ” என்று சம்பகம் வேதனைப் பட்டாள். 

“பானு! தாத்தா உன்னைக் கூப்பிடுகிறார் அம்மா. அழாமல் சமத்தாக உள்ளே போய் என்ன என்று கேள் பார்க்கலாம்” என்று அவளைத் தேற்றி சம்பகம் உள்ளே அனுப்பினாள். 

உலகத்திலே ‘தாய் இல்லாத பிறந்தகமும், கணவன் இல்லாத புக்ககமும் போல்’ என்று சொல்லுவது சம்பகத்தின் வரையில் பொருத்தமாக இருந்தது. 


முத்தையாவின் கடிதம் வந்த பிறகு காமுவின் வீட்டில் தினம் ராமபத்திர அய்யருக்கும் அவர் மனைவிக்கும் ஏதாவது சில்லறை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன. தம்பிக்குப் பெண்ணைக் கொடுப்பதற்கு சம்மதமாக இருந்தாள் விசாலாட்சி. தம்பியின் வயதோ, மூன்றாந்தாரம் என்கிற காரணமோ, ஒன்றும் அவளுக்குப் பெரிதாகத் தோன்ற வில்லை. இந்த வருஷமும் கல்யாணமாகாமல் காமுவை விட்டு வைக்க அவள் மனம் ஒப்பவில்லை. 

ராமபத்திர அய்யரின் மனம் மட்டும் ஒரே பிடிவாதமாக இருந்தது. ஏழையானாலும் இளைஞனாகவும் மனைவி யிடம் அன்புடையவனாகவும் பார்த்துத்தான் காமுவை ஒப்புவிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டிருந்தார். 

அன்று சங்கரன் ராஜம்பேட்டையிலிருந்து வந்திருந் தான். ஏழ்மையின் துன்பத்தை வெளிக்குக் காட்டாமல் சதா சிரித்த முகத்துடன் பேசும் ராமபத்திர அய்யர் அன்று என்னவோபோல் இருந்தார். கலகலப்பாகப் பேசாமல் முகத்தில் துயரம் தேங்கஅவர் இருந்த நிலைமை சங்கரனைச் சஞ்சலத்தில் ஆழ்த்தியது. சங்கரன் ராஜம்பேட்டையி லிருந்து வந்துவிட்டால் காமு நொடிக்கொரு தடவை ஏதாவது காரணத்தை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும். போவதும் வருவதுமாக இருப்பாள். அன்று சாப்பாட்டிற்கு அப்புறம் காமு சமையலறையிலேயே ஐக்யமாகி விட்டாள். 

ராமபத்திரய்யர் ஊஞ்சலில் சாய்ந்து கொண்டு யோசனையில், ஆழ்ந்திருந்தார். சங்கரன் ஏதோ ஒரு புஸ்தகம் படிப்பதில் ஈடுபட்டிருந்தான். ஊஞ்சல் சிறிதே ஆடுவதால் ‘ஞொய் ஞொய்’ என்கிற சத்தத்தைத் தவிர வேறு ஒரு சத்தமும் இல்லாமல் நிசப்தமாக இருந்தது அந்த வீடு. முற்றத்தில் துளசி மாடத்துக்குக் காலையில் பூஜை செய்தபோது அணிவித்திருந்த நித்திய மல்லிகை மாலையி லிருந்து ‘கம்’ மென்று வாசனை வீசிக் கொண்டிருந்தது. துளசி மாடத்தைச் சுற்றி அழகாகக் கோலம் இட்டு செம்மண் பூசி இருந்தாள் காமு. அவள் போட்டிருந்த கோலத்தின் மூலமே அவள் கைத்திறனை ஒருவாறு உணர்ந்து கொண்டான் சங்கரன். நொடிக்கொரு தரம் அவன் சமையலறைப் பக்கம் பார்த்து அங்கே காமு இல்லாமல் இருப்பதைக் கண்டு சோர்ந்து போனான். 

“என்ன மாமா இன்றைக்கு ஒரு மாதிரியாக இருக்கிறீர்களே? உடம்பு சரியில்லையா என்ன?” என்று இதுவரையில் பொறுமையாக இருந்தவன் கேட்டே விட்டான். 

“உடம்புக்கு என்ன அப்பா? மனசுதான் சரியாக இல்லை” என்று சூள் கொட்டிவிட்டு, நிமிர்ந்து உட்கார்ந் தார் ராமபத்திரய்யர். 

அதற்குள் கொல்லைப் பக்கத்தில் கட்டியிருந்த கறவைப் பசு மத்தியானத் தீனிக்காக ‘அம்மா’ என்று கத்த ஆரம்பித்தது. காமு சரேலென்று எழுந்து கொல்லைப் பக்கம் போவதற்காக வெளியே வந்தாள். சங்கரனின் கண்களும் அவள் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தன. 

அகன்ற அக் கருவிழிகள் சிவந்தும் வீங்கியும் இருந்தன. தள தளவென்று சிரிப்புடன் விளங்கும் அவள் அழகிய வதனம் வாடிப் போயிருந்தது. தவிர அவள் கொஞ்ச்ம் இளைத்துப் போய் இருப்பதாகவும் சங்கரன் நினைத்தான். ஒரு வினாடிக்குள் காமு சட்டென்று கொல்லைப் பக்கம் போய் விட்டாள். 

“என்ன மாமா புதிர் போட்டுப் பேசுகிறீர்கள்? என்னிடம் சொல்லக் கூடுமானால் விஷயத்தைச் சொல்லுங் களேன்!” என்று சங்கரன் அவரை வற்புறுத்தினான். 

குறுகிய சில நாட்களுக்குள் சங்கரனுக்கும், ராமபத்திர அய்யருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டிருந்தது. சங்கரனின் வெள்ளை மனமும், பணக்கார வீட்டுப் பிள்ளை என்கிற அகம்பாவம் இல்லாமல் அவன் சரளமாக எல்லோரிடமும் பழகும் சுபாவமும் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டன. சங்கரன் கேட்டதும் ராமபத்திர அய்யர் கூடத்தில் கடியாரத்துக்குப் பின்புறமிருந்து கடிதம் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார். 

கடிதத்தை வாசித்து முடித்ததும் சங்கரன் ஒரு நிமிஷம் யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் மனக் கண் முன்பு காமுவின் உருவம் பல தடவைகள் நிழல் படம் போல் சுழன்று சுழன்று தோன்றியது. பதினெட்டு வயசு நிரம்பி, அன்று மலர்ந்த மலரைப் போல் இருக்கும் காமு, நாற்பத்து மூன்று வயசுக்காரனை மணந்து கொள்வதா? பதினாறு வயசில் தனக்கு ஒரு பெண் இருக்கும் போது பதினெட்டு வயசு மங்கை ஒருத்தியை மனைவியாக ஏற்றுக் கொள்ள முத்தையாவின் மனம் ஒப்புகிறது. கடிதம் எழுதவும் தூண்டுகிறது! 


அங்கு நிலவி இருக்கும் மெளனத்தை மீறிக் கொண்டு, “பொழுது விடிந்து அஸ்தமிப்பதற்குள் நூறு தடவை அம்மாமி என்னைத் துணப்பி எடுக்கிறாள் அப்பா! பண்ணுக்கு வயசாகி வருகிறதே என்கிற விசாரம் அவளுக்கு. ஆனால், காமுவை மூன்றாந்தாரமாகக் கொடுப்பதற்கு எனக்கு இஷ்டமில்லை” என்றார் ராமபத்திர அய்யர். 

“இந்தக் கடிதத்துக்குப் பதில் எழுதி விட்டீர்களா?” என்று சிறிது பதட்டத்துடன் கேட்டான் சங்கரன். 

“ஆமாம். அவன் ஒரு மனுஷன் என்று மதித்து பதில் வேறு எழுத வேண்டுமா என்ன?” என்றார் அவர். 

“எனக்கும் இன்று தபாலில் ஊரிலிருந்து அம்மா கடிதம் எழுதி இருக்கிறாள். எனக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணுவதற்கு ஒரே அவசரம் அவளுக்கு. பெண் ஏற்கெனவே தெரிந்த இடம். காலேஜிலே படிக்கிறாள். நான் கூட இரண்டொரு தடவைகள் பார்த்திருக்கிறேன்* காமுவைப் போல் இருக்கமாட்டாள். சுமாரான அழகி தான்” என்றான் சங்கரன். 

“இஷ்டமிருந்தால் உன் சம்மதத்தை எழுதி விடேன் அப்பா! ‘சுபஸ்ய சீக்கிரம்’ என்பார்கள். சங்கரா நான் என்னவோ காமுவைப் பாழுங் கிணற்றில் தள்ளுகிற மாதிரி முத்தையாவுக்குக் கொடுக்கப் போவதில்லை. இன்னும் இரண்டொரு வருஷங்கள் ஆனாலும் பாதகமில்லை. பட்டினத்தில் உனக்குத்தெரிந்தவர்கள் எவ்வளவோ பேர்கள் இருப்பார்கள். ஐம்பது ரூபாய் சம்பாதித்தாலும் பாதக மில்லை, பையன் யோக்கியனாகவும், குணவானாகவும் இருக்க வேண்டும். ஏதாவது பார்த்து ஏற்பாடு செய்வாய் என்கிற நம்பிக்கையுடன் தான் உன்னிடம் சொல்லுகிறேன்.”

சங்கரனின் மனம் துடித்தது, “நான். இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் உத்தேசமே இல்லை. அப்படிச் செய்து கொண்டால் காமுவையே பண்ணிக் கொண்டு விடுகிறேன்!” என்று கூறிவிட்டு நகைத்தான். 

பிச்சைக்காரன் ஒருவனுக்கு முழு வெள்ளி ரூபாய் கிடைத்த மாதிரியும், பஞ்சத்தில் வாடுபவனுக்குப் பால் அன்னம் கிடைத்த மாதிரியும் இருந்தது சங்கரன் கூறிய வார்த்தைகள் ராமபத்திர அய்யருக்கு. 

“சங்கரா! இதெல்லாம் என்ன பேச்சப்பா? உன் அந்தஸ்து என்ன? உன் தகப்பனாரும் நானும் நண்பர்களாக இருந்தாலும் ஸ்ரீகிருஷ்ணனும், சுதாமனும் போல் அல்லவா எங்களுக்குள் வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறது?” என்றார் அவர், உணர்ச்சியுடன். அவர் தொண்டை கரகரத்தது. 

“அதனால் என்ன, மாமா? ஸ்ரீபரமாத்மா மனது வைத்ததும் சுதாமனை குபேரனுக்குச் சமமாகச் செய்துவிட வில்லையா? எங்களிடம் தான் பணம் இருக்கிறதே! இன்னொருவர் கொடுத்து எங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லையே?” என்றான் சங்கரன். 

”உனக்கு உலகம் தெரியவில்லை அப்பா. பணம் பணத்துடன் தான் சேரும். காமுவுக்கு ஏதாவது சுமாரான இடமாகப் பார்த்துச் சொன்னாயானால் போதும் அப்பா!” என்றார் அவர். 

“காமுவைக் கல்யாணம் செய்து கொள்ள எனக்கு இஷ்டமிருக்கிறது. அவள் சம்மதத்தைக் கேட்டுச் சொல்லி விடுங்கள், மாமா! மற்ற ஏற்பாடுகளை நான் அப்பா மூலமாய்ச் செய்து கொள்ளுகிறேன்” என்றான் சங்கரன். 

கொல்லையில் மாட்டுக்குத் தீனி வைத்து முடித்து விட்டுக் காமு உள்ளே வந்தாள். சங்கரன் கூறிய வார்த்தைகள் கணீரென்று அவள் காதுகளில் விழுந்தன. 

“இது உண்மையா? கனவா?” என்று பலதடவைகள் தன்னையே கேட்டுக் கொண்டு, சமையலறைக்குள் சென்றாள் காமு. அவள் முகம் நாலைந்து தினங்களாக இழந்திருந்த பழைய சாந்தியை மீண்டும் பெற்றது போல் புன்னகையுடன் காணப்பட்டது. 


மீனாட்சியும், ருக்மிணியும் டாக்டர் மகாதேவனின் வீட்டினுள் நுழைந்தவுடனேயே சோபாவில் ஒய்யாரமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து இருவரும் திடுக்கிட்டனர். ஊதா நிற ‘ஸாடின்’ பைஜாமாவும், தங்கநிற ‘ஸில்க் ஜிப்பாவும்’ அணிந்து, அதன் மேல் மெல்லிய மஸ்லின் மேலாக்கைப் பறக்க விட்டிருந்தாள் நீலா. காதளவு தீட்டி விடப்பட்ட மையும், இரட்டைப் பின்னலும், காதுகளில் ஒளிரும் முத்து லோலாக்கும், உதடுகளில் பூசப்பட்டிருந்த சிவப்புச் சாயமும் அவளை நாகரிகப் பெண்களில் முதன்மையானவள் என்பதைச் சொல்லாமல் விளங்க வைத்தன. 

மீனாட்சியையும், ருக்மிணியையும் கண்டதும் அவள் தன் புருவங்களை நெரித்து ஒரு ஆச்சர்யத்தை வரவழைத்துக் கொண்டாள் தன்னுடைய முகத்தில். கூடத்தில் யாரோ வந்திருப்பதைத் தன் தாயாரிடம் தெரிவிப்பதற்காக அவள் பின் கட்டுக்கு விரைந்தாள். சிறிது நேரத்துக் கெல்லாம் டாக்டர் மகாதேவனின் மனைவி சீதாலட்சுமி அவசரமாக ஹாலுக்கு வந்து இருவரையும் உபசாரம் செய்து வரவேற்றாள். 

“நீங்கள் வரப்போவதாக பத்து நிமிஷங்களுக்கு முன்பு தான் ‘போனி’ல் கூப்பிட்டுச் சொன்னார். எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்” என்றாள் சீதாலட்சுமி. சம்பந்தி வீட்டாரிடமிருந்து பலமான உபசாரங்களை எதிர்பார்க்கும் மீனாட்சி அம்மாளுக்கு முதலில் பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. தங்கள் வரவை எதிர் பார்ப்பதாகச் சொல்லும் சம்பந்தி அம்மாள் தாங்கள் வந்து பத்து நிமிஷங்களுக்கு அப்புறமே கவனிப்பதைக் கண்டவுடன் கொஞ்சம் அவமான மாகவும் இருந்தது. இருந்தாலும் வெளிக்குத் தன் உணர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் அங்கிருக்கும் சோபாவில் அமர்ந்தாள் மீனாட்சி அம்மாள். 

ஆயிரக் கணக்கான ஏழை மக்கள் கட்டத் துணியின்றித் தவிக்கும் நாட்டில் டாக்டர் மகாதேவன் வீட்டுக் கதவு களும், ஜன்னல்களும் உயர்தர மஸ்லின் திரை அணிந்து காணப்பட்டன. ஹாலின் ஒவ்வொரு. மூலையிலும் கருங்காலி மேஜை மீது தந்தச் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அழகிய சீனா பூ தொட்டியில் அன்று மலர்ந்த ரோஜா மலர்களைச் செருகி வைத்திருந்தார்கள். பளிச்சென்று எங்கு பார்த்தாலும் துப்புரவாக இருந்தது. கீழே பளிங்குத் தரையில் அழகான காஷ்மீரக் கம்பளம் விரித்திருந்தார்கள். 


சற்று முன்பு பஞ்சாபி உடை அணிந்திருந்த நீலா இப்பொழுது மைசூர் கிரேப் பாவாடையும், ஜார்ஜெட் தாவணியும் அணிந்து கொண்டு வந்தாள். பரிசாரகன் இரண்டு தட்டுகளில் சிற்றுண்டியையும், காபியையும் வைத்து விட்டுப் போனதும் நீலா வெற்றிலைத் தட்டைக் கொண்டு வந்து மேஜை மீது வைத்துவிட்டு, மீனாட்சி அம்மாளையும் ருக்மிணியையும் வணங்கினாள். எதிரில் சோபாவில் அமர்ந்திருந்த சீதாலட்சுமியைப் பார்த்து மீனாட்சி சிரித்துக் கொண்டே, “குழந்தைக்குப் பாடத் தெரியுமா?” என்று சம்பிர தாயத்தை விடாமல் கேட்டாள். “பாட்டிலே அவள் அதிக அக்கறை காட்டவில்லை. நாங்களும் வற்புறுத்த வில்லை” என்று சுருக்கமாகக் கூறினாள் சீதாலட்சுமி. 

“எத்தனை செல்வமிருந்தாலும் இந்தக் காலத்துக் குழந்தைகள் உடம்பில் எதுவும் போட்டுக் கொள்ளாமல் நிற்கிறதுகள்!” என்று நீலாவைக் குறிப்பாகப் பார்த்துக் கொண்டே கூறினாள், மீனாட்சி, 

“வேண்டியது செய்து வைத்திருக்கிறேன். நேற்றுக் கூட அவள் அப்பா ஒரு ஜதை முத்து வளையல்களை வாங்கி வந்தார்” என்று கூறிவிட்டு, அருகிலிருந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனாள் சீதாலட்சுமி. 

சிறிது நேரத்துக் கெல்லாம் அழகிய தந்தப் பெட்டி ஒன்றை எடுத்து வந்து மேஜை மீது வைத்தாள். பெட்டியைத் திறந்ததும் கண்ணைப் பறிக்கும் ரகங்களில் புது மாதிரியான பல அணிகள் இருந்தன. இவ்வளவு நகை களையும் உள்ளே வைத்துப் பூட்டி விட்டுக் கழுத்தில் நெருக்கமாகக் கோத்திருந்த முத்து மாலை ஒன்றையும், கைகளில் சிவப்புக் கற்கள் பதித்த வளை ஒன்றும், இடது கையில் ‘ரிஸ்ட் வாட்சு’ம், காதுகளில் மாங்காய் வடிவத்தில் செய்த பச்சைக்கல் தோடும் அணிந்து நிற்கும் பெண்ணின் மனத்தைப் பற்றிக் கர்னாடக மனுஷியான மீனாட்சி அம்மாளுக்குப் புரியவில்லை! சுமைதாங்கியைப் போல் வடம் வடமாக ஐந்து சரம் தங்கச்சங்கிலியும், கைகளில் ஆறு ஏழு வளையல்களும், காதுகளில் நட்சத்திரம் போல் சுடர் விடும் வைரக் கம்மல்களும், அகலமாகச் சரிகை போட்ட புடவையும் தன்னை ஒரு பத்தாம் பசலி என்பதைச் சொல்லாமலேயே விளங்க வைத்து விடும் என்று மீனாட்சியும் ருக்மிணியும் நினைத்து வெட்கப்பட்டனர். 

“குழந்தை ஊரில் இல்லை. கிராமத்துக்குப் போய் இருக்கிறான். அவனுடைய சம்மதம் தெரிந்தால் முகூர்த்தம் வைத்துக் கொண்டு விடலாம். பெண்ணின் இஷ்டத்தையும் தெரிந்து தான் அவனுக்கு எழுத வேண்டும்” என்றாள் மீனாட்சி. 

“மிஸ்டர் சங்கரனை எனக்குத் தெரியுமே! எவ்வளவோ முறைகள் காலேஜில் நடக்கும் விழாக்களில் நாங்கள் சந்தித்திருக்கிறோம்” என்றாள் நீலா பளிச்சென்று. 

“மிஸ்டர் சங்கரன், மிஸ்டர் சங்கரன்” என்று மீனாட்சி அம்மாள் தனக்குள் இரண்டு தடவைகள் சொல்லிக் கொண்டாள். 

நாளைக்குக் கணவனாக வரிக்கப் போகிறவனை ‘மிஸ்டர் சங்கரன்’ என்று மாமியாராகப் போகிறவளின் எதிரிலேயே கூறும் நீலாவின் நாகரிகம் அவளுக்குப் பிடிக்கவில்லை. பக்கத்தில் தந்தப் பேழையில் மின்னும் நகைகள். அரண்மனை போன்ற வீடு. டாக்டர் மகாதேவனுக்கு நீலா ஒரே பெண். திரண்ட இவ்வளவு ஐச்வர்யத்தையும் ஸ்ரீதனமாகக் கொண்டு வரும் நீலா சாக்ஷாத் ஸ்ரீமகாலட்சுமியைப் போலவே அவள் கண்களுக்குத் தோன்றினாள். அவளிடம் காணப்படும் குற்றங் குறைகளை மீனாட்சி அம்மாள் பெரிதாக மதிக்கவில்லை. 

தாயும், மகளும் தாம்பூலம் பெற்றுக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினர். அன்றே மீனாட்சி தன் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதித் தபாலில் சேர்த்தாள்: நிலம் வாங்கு வதற்காக அதிக நாட்கள் தாமதிக்க வேண்டா மென்றும் உட்னே புறப்பட்டு வரும்படியும் அதில் குறிப்பிட்டிருந்தாள். 

அந்தக் கடிதத்தில் எழுதி இருந்த தகவலைத்தான் சங்கரன் ராமபத்திர அய்யரிடம் முன்பு கூறினான். 


“எந்தன் இடது தோளும், கண்ணும் துடிப்பதென்ன? இன்பம் வருகுதென்று சொல், சொல் சொல் கிளியே!” என்று காமு, இசைத்தட்டில் கேட்டுப் பழகியிருந்த பாட்டைப் பாடிக் கொண்டே கீரைப் பாத்தியைக் கொத்தி விட்டு விதை தெளிப்பதில் ஈடுபட்டிருந்தாள். 

இரண்டு மூன்று தினங்களாகவே காமுவின் மனம் நிறைந்திருந்தது. உள்ளம் இன்ப வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. நொடிக் கொருதரம் யாரும் பார்க்காத வேளைகளில் நிலைக் கண்ணாடி முன்பு நின்று தன் அழகைக் கண்டு பிரமித்து நின்றாள். நெற்றியில் அலை அலையாகச் சுருண்டு விழும் கூந்தலைக் கண்டு சங்கரன் மோகித்து விட்டானா வேலைப் போன்ற கருமணிக் கண்களின் காந்த சக்தியில் மனத்தைப் பறி கொடுத்து விட்டானா? வீட்டு வேலைகளில் தான் காட்டும் கைத்திறமையைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து விட்டானா? எல்லாவற்றிற்கும் மேலாகத் தன் தந்தையின் ஏழ்மை நிலையைக் கண்டு பரிதாபம் கொண்டா தன்னை அவன் மணக்க விரும்பு கிறான்? கையில் பிடித்திருந்த மண் வெட்டியைக் கீழே வைத்துவிட்டு, யோசனையில் ஆழ்ந்திருந்தாள் காமு. 

அவனிடமிருந்து இரக்கமும், பச்சாத்தாபமும் பெற காமு விரும்பவில்லை. பெண்மை வேண்டும் இதயபூர்வமான அன்பையும், காதலையுமே அவள் பெற விரும்பினாள். ‘பாவம், ஏழை!’ என்று சங்கரன் தன்னை ஒன்றும் மணக்க வேண்டாம்! அந்த மாதிரியான இரக்கம் அவளுக்குத் தேவையில்லை. 

சங்கரன் வந்து போய் மூன்று தினங்கள் ஆகிவிட்டன். அவன் வரவை எதிர்பார்த்து ஏங்கும் மனம் காரணமற்ற ஒரு ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தது.

– தொடரும்…

– ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது.

– பனித்துளி (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1996, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email
சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *