கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2024
பார்வையிட்டோர்: 2,814 
 
 

(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

2 – காமுவின் கண்ணீர்

சங்கரனின் தகப்பனார் நடேச சர்மாவின் குணமும், போக்கும் அலாதியானவை. அவர், எதையும் தன்னுடைய உரிமையேர்டு செய்யக் கூடிய மனம் படைத்தவர் அல்ல. சம்பா திக்க வேண்டியது ஒன்றுதான் தன்னுடைய கடமை களில் ஒன்று என்று நினைத்திருந்தவர். அவர் வீட்டில் அவர் மனைவி மீனாட்சி அம்மாள் இட்டதுதான் சட்டமாக இருந்தது. வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர் களிலிருந்து பெரிய விவகாரங்கள் வரையில் மீனாட்சி அம்மாளின் இஷ்டப்படி தான் நடந்து வந்தன. வேலைக் காரர்களுக்கு முன் பணம் கொடுக்க வேண்டுமா, பெண்ணை சீர் வகையறாக்களுடன் புத்தகம் அனுப்ப வேண்டுமா, காலேஜுக்குப் பிள்ளைக்குச் சம்பளம் கட்டவேண்டுமா, எல்லா விவகாரங்களும் அம்மாளின் இஷ்டப்படிதான் நடக்கும். 

அன்று சாப்பாட்டுக்கு அப்புறம் கையில் வெற்றிலைத் தட்டுடன் கூடத்தில் வந்து உட்கார்ந்தாள் மீனாட்சி அம்மாள். பச்சையும், அரக்கும் கலந்து கட்டம் போட்ட ஆரணிப் பட்டுப் புடவை உடுத்தி, இரண்டு மூக்குகளிலும் வைர பேசரிகள் ஜிலுஜிலுவென்று ஜ்வலிக்க ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே உட்கார்ந்தாள்.அவள் காதில் தொங்கிய வைரக் கம்மல்கள் நட்சத்திரங்களைப்போல் சுடர் விட்டன. கையில் புதையப் புதைய கொலுசும், பம்பாய் வளையல் களும், சழுத்தில் வைர முகப்பு வைத்த மூன்று வடம் சங்கிலி யும், முகத்தில் அலாதியாக வீசிக் கொண்டிருந்த லட்சுமி கடாட்சமும் அந்த அம்மாளைப் பார்ப்பவர்களுக்குப் பரவசம் ஊட்டின. நெற்றியில் வட்ட வடிவமான குங்குமத் தின் மேல் சிறியதாக விபூதியும் இட்டிருந்தாள், வயசு ஐம்பதுக்கு மேல் இருந்தாலும் தாழை மடலைப் போன்ற நிறமும், மூக்கும் விழியும்; அவளால் தான் நடேச சர்மா அதிர்ஷ்டத்தில் கொழிக்கிறார் என்று சொல்லும்படி இருந்தன. 

வெற்றிலைக்குச் சுண்ணாம்பைத் தடவிக்கொண்டே ஒரு கொட்டைப் பாக்கை எடுத்து பாக்கு வெட்டியால் ‘கடக் கடக்’கென்று வெட்டித் துருவலாகச் செய்து வாயில் போட்டுக்கொண்டாள் மீனாட்சி. பிறகு ஒவ்வொன்றாக வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவி வாயில் போட்டு மென்று கொண்டே, “GT 501 GOT IT! இன்னிக்கி தபாலில் சங்கரனிடமிருந்து ஏதாவது கடிதாசி வந்திருக்கா?” என்று சர்மாவைப் பார்த்துக் கேட்டாள் அவள். 

இது வரையில் மனைவி வந்து அமர்ந்து வெற்றிலை போடுவதையோ, வேறொன்றையோ கவனிக்காமல் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார் சர்மா. மனைவி கேட்டதும் தினசரியை மேஜை மீது வைத்து விட்டு, “நேற்றே கடிதம் வந்ததே உன்னிடம் சொல்ல மறந்து விட்டேன்.ராஜம்பேட்டையில் நான் படித்துக்கொண்டிருந்த போது.என்னுடைய சிநேகிதன் ஒருவனைப்பற்றி உன்னிடம், அடிக்கடி சொல்லி இருக்கிறேனே நினைவிருக்கிறதா உனக்கு?” என்று கேட்டார் சர்மா

“எல்லாம் தெரியும். ராமபத்திரனைத் தானே சொல் கிறீர்கள்? ஆயிரம் தடவை ‘ஸ்ரீ கிருஷ்ணனும், சுதாமா’வும் போல் நீங்கள் ‘குருகுலவாசம்’ செய்ததைச் சொல்லி இருக் கிறீர்களே! மறந்தா போய் விடுவேன் நான்?” என்று அவளுக்கே உரித்தான ஒருவித அலட்சியத்துடன் கூறினாள் மீனாட்சி. 

“பணமும். பாக்கியமும் நாமே தேடிக் கொள்பவை அல்ல, சிலர் பிறக்கும்போதே போக பாக்கியங்களை அனுபவிக்கவே பிறக்கிறார்கள். சிலர் அவைகளை அடைய வேண்டும் என்று எவ்வளவு முயற்சி செய்தாலும் கிட்டுவ தில்லை. ராமபத்திரன் என்னைவிடப் படிப்பில் மிகவும் கெட்டிக்காரள் எனக்குச் சந்தேகம் ஏற்படும் போதெல் லாம் அவனிடமிருந்து நான் பாடங்களைக் கற்றுத் தெரிந்திருக்கிறேன். ஆனால், அவன் இன்றும் மாசம் நாற்பது ரூபாய்க்கு மேல் கண்ணால் பார்க்க வில்லை” என்றார் சர்மா

மீனாட்சி அலுப்புடன் தூணில் சாய்ந்து கொண்டாள். பிறகு நிதானமாக, “ஆமாம், சங்கரனிடமிருந்து ஏதாவது கடிதாசி வந்திருக்கா என்று கேட்டால் நீங்கள் பாட்டுக்கு எதையோ சொல்லிக் கொண்டு போகிறீர்களே?” என்றாள். 

“சம்பந்தம் இல்லாமல் பேசவில்லை மீனு. ராமபத்திரன் ராஜம்பேட்டைக்கு அருகே பொன்மணியில் இருக்கிறானாம். சங்கரன் அவனைப் போய்ப் பார்த்து நிலங்களைப் பற்றி விசாரித்ததாகவும், அப்போது ராமபத்திரன் அவனுக்கு ஆசார உபசாரங்கள் செய்து தன்னுடன் வந்து இருக்க வேண்டும் என்று உரிமையுடன் கோபித்துக் கொண்ட தாகவும் எழுதி இருக்கிறான். ‘பணம் காசு குறைவாக இருக்கிறதே ஒழிய தாராள மனசும், கருணையும் நிறைய இருக்கிறது’ என்று சங்கரன் லயித்து எழுதி இருக்கிறான்.” 

சர்மா நண்பனைப் பற்றிய பெருமையில் மேலும் பேசுவதற்குள் மீனாட்சி, ‘த்சூ” என்று ஒரு பெரு மூச்சு விட்டாள். பிறகு கூடத்தின் மூலையில் வைக்கப் பட்டிருந்த ரத்தினக் கம்பளத்தை எடுத்து விரித்துக் கொண்டு படுத்தாள். சட்டென்று ஏதோ நினைவு வந்தவள் போல், “ஏன்னா! இவன் பாட்டுக்கு ஒரு மாசமா அங்கே போய் உட்கார்ந்திருக்கானே? அந்த டாக்டர் பிராம்மணன் தினமும் வந்து ஜாதகத்துக்கு அலைகிறாரே! எனக்குத் தினமும் ஏதாவது சால்ஜாப்பு சொல்ல முடியவில்லை. இன்றைக்கு வந்தால் சங்கரனின் ஜாதகத்தைக் கொடுத்து விடுகிறேனே?” என்று சர்மாவின் அபிப்பிராயத்தைக் கேட்டாள். 

“ஜாதகத்தைக் கொடுத்தாயானால் அப்புறம் பெண்ணைப் பார்க்கக் கூப்பிடுவார்கள். எதற்கும் அவன் ஊரிலிருந்து வரட்டுமே என்று பார்க்கிறேன்” என்று. சர்மா தன் அபிப்பிராயத்தைக் கூறினார். 

”சீக்கிரம் வரச் சொல்லி எழுதுங்கோ அவனுக்கு!” என்று கூறிவிட்டு மீனாட்சி படுத்துத் தூங்க ஆரம்பித்தாள். 


சர்மாவுக்குப் பிள்ளையின் கல்யாணம் அவ்வளவு முக்கியமாகப் படவில்லை. ஏற்கெனவே ஒரு பிள்ளை, பேருக்குக் கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையையும் மனைவி யையும் விட்டு விட்டு மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றவள், அங்கேயே ஒரு ஆங்கிலப் பெண்ணுடன் தங்கி விட்டான். அவனைப் பார்த்துப் பத்துப் பதினைந்து வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டன. பெண் ஒருத்தி மூன்று குழந்தைகளுடன் கணவனுடன் வாழச் சரிப்படாமல் பிறந்த வீட்டில் ஆறு மாசங்களும், கணவனுடன் ஆறு மாசங்களும் இருந்து வந்தாள். 

வாழாவெட்டியாக இருக்கும் நாட்டுப் பெண்ணையும், அவள் குழந்தையையும் சர்மா தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தார். என்றாவது ஒரு நாள் கணவன் வந்து தன்னுடன் இல்லறம் நடத்துவான் என்கிற நம்பிக்கை யுடனேயே சம்பகம் என்கிற அந்தப் பெண் சிரித்த முகத்துடன், பணத்தாசை பிடித்த மாமியாரிடம் வாழ்ந்து வந்தாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் சர்மாவின் மனம் அனலிடை காட்டிய மெழுகு போல் உருகியது. எவ்வளவு தான் சிரித்த முகத்துடன் அவள் துயரத்தை மறைக்க -முயன்றாலும் அவளுடைய கரு நீல விழிகளில் துயாம் தேங்கிக் கிடத்தது. பளபளக்கும் அந்தக் கண்களில் கண்ணீர் தேங்குவதாகவே சர்மாவுக்கு ஒருவித பிரமை ஏற்படுவது உண்டு. 

அவருடைய பெண் ருக்மிணியின் குணம் விசித்திர மானது. பிறந்தகத்தில் தகப்பனாரின் சம்பாத்தியமும், உடன் பிறந்தார்களின் வரும்படியும் தன்னைத்தான் சேர வேண்டும் என்று விரும்புகிறவள் அவள். “ஒவ்வொருத்தர் பெண்ணுக்குச் செய்வதில் கால்பங்குக் கூட காணாது இதெல்லாம்” என்று ஒரே வார்த்தையில் கூறி விடுவாள் ருக்மிணி. அவள் கணவன் தன் வேட்டகத்தை ஒரு சுரங்க மாகவே கருதி வந்தான். அவன் தீய நடவடிக்கைகளுக்குப் பணம் தேவையான போதெல்லாம் மனைவியின் மூலம் வேட்கத்திலிருந்து பணத்தை எதிர் பார்ப்பது ஒன்றுதான் அவனுக்குத் தெரிந்த விஷயம். 

இதை யெல்லாம் எண்ணியபடி சிந்தனையில் மூழ்கி இருந்த சர்மா அப்படியே அரைத் தூக்கத்தில் ஆழ்ந்தார். கூடத்தில் மாட்டியிருந்த பெரிய கடியாரத்தின் ‘டக் டிக்’ என்ற சத்தத்தைத் தவிர வேறு சத்தம் எதுவுமில்லாமல் அங்கே அமைதி நிலவியது. 


டாக்டர் மகாதேவன் அந்த வட்டாரத்தில் பெரிய நிபுணர் என்று பெயர் வாங்கியவர். ரண சிகிச்சையில் அவர், பார்த்த கேசுகளில் யாருக்கும் கெடுதி நேரிட்டது கிடையாது. திறமைக்கு ஏற்றாற்போல் செல்வமும் குவிந்து கிடந்தது. அருமையாக ஒரே ஒரு பெண் மட்டும் திரண்ட இவ்வளவு ஆஸ்தியையும் அனுபவிப்பதற்கு இருந்தாள். ஒரே குழந்தையாக இருந்ததால் மகாதேவன் தம்பதி அவர்கள் பெண் நீலாவை அளவுக்கு மீறிய சலுகை காண்பித்து வளர்த்தார்கள். 

போதாக் குறைக்கு கலாசாலைப் படிப்பும், சங்கீதமும் வேறு நீலாவைச் சற்று நிலை தடுமாறச் செய்தன எனலாம். காலேஜிலே படித்த பெண்கள் எல்லாம் நீலாவைப் போல் இல்லை. சங்கீத மேதைகளான அநேகம் பெண்கள் அன்பும், அடக்கமும் பூண்டு வாழவில்லையா என்ன? நீலா தனக்கு இருக்கும் திரண்ட செல்வத்தையும் அதனால் தன்னுடைய செல்வாக்கான நிலையையும் கண்டு இறுமாந்திருந்தாள். 

டாக்டர் மகாதேவனும், சர்மாவும் ‘மாலைச் சங்கத்’ தில் (Evening Club) அங்கத்தினர்கள். இருவரும் நண்பர் களாயினர். மகாதேவனுக்குச் சங்கரனின் சரளமான குணம் பிடித்திருந்தது. ஏறக்குறைய ஒரே அந்தஸ்தில் இருக்கும் அவனுக்குத் தன் பெண் நீலாவை மணமுடிக்க ஆசைப்பட்டார் மகாதேவன். இரண்டொரு தடவை சர்மாவிடம் சங்கரனின் ஜாதகத்தைக் கொடுக்கும்படியும் கேட்டார். தன்னுடைய அந்தஸ்தை விட ஒரு படி மேலாக இருக்கும் மகாதேவனுடன் சம்பந்தம் செய்வதற்கு யோசித் தார் சர்மா. மூன்று வேளையும் சோபாவில் சாய்ந்து நாவல் களைப் படித்துக் குவிக்கும் நீலா, கர்னாடகப் பழக்க வழக்க முள்ள தன் மனைவியிடம் மாட்டுப் பெண்ணாக நடந்து கொண்டு நல்ல பெயர் எடுப்பாளா என்பது அவருக்குச் சந்தேகமாக இருந்தது. 

ஒரு தினம் மகாதேவனுடன், நீலாவைப் பார்ப்பதற் காகச் சென்றிருந்தார் சர்மா. ஹாலில் கிடந்த சோபா ஒன்றில் அமர்ந்து புஸ்தகம் எதையோ படித்துக் கொண் டிருந்த நீலா, இவர்களைப் பார்த்ததும் ஒரு சிறு புன்னகை யுடன் மறுபடியும் புஸ்தகம் படிப்பதில் ஈடுபட்டாள். சர்மா தன் நண்பருடன் அங்கு இருந்த நாற்காலியில் உட்கார்ந்த பிறகு கூட நீலா அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க வில்லை. 

“நீலு! அம்மாவிடம் போய் இரண்டு டம்ளர்களில் காபி கொண்டு வரச் சொல்” என்று தகப்பனார் கூறிய பிறகுதான் ஒருவித அலட்சியத்துடன் அவள் எழுந்து உள்ளே சென்றாள். 

நீலா அணிந்திருந்த பஞ்சாபி உடையும், இரட்டைப் பின்னலும் அவள் கொடி போன்ற உடலுக்கு அழகாகத் தான் இருந்தன. இருந்தாலும், தழையத் தழைய கொசுவம் வைத்துக் கட்டிக் கொண்டு, நெற்றியில் பளிச் சென்று குங்குமம் ஒளிர, இழுத்துப் போர்த்திய தலைப்புடன் கணவனைப் பிரிந்திருக்கும் கவலையைச் சிறிதும் முகத்தில் காட்டாமல் பதவிசாக இருக்கும் தன்னுடைய மூத்த நாட்டுப் பெண் சம்பதத்துடன் நீலாவை ஒப்பிட முடியவில்லை சர்மாவினால். 

இரண்டு வெள்ளி டம்ளர்களில் காபியைக் கொண்டு வந்து மேஜை மேல் வைத்துவிட்டு, நீலா ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள். 

“குழந்தை படித்துக் கொண்டிருக்கிறாளா?” என்று கேட்டார் சர்மா. 

“பி. ஏ. முடித்தாகி விட்டது. மேலே படிப்பதற்கு அப்பாவுக்கு இஷ்டமில்லை. அம்மாவும் குடும்ப வேலைகளில் பழக்கம் ஏற்பட வேண்டும் என்று சொல்லுகிறாள்” என்றாள் நீலா, ‘களுக்’ கென்று சிரித்துக் கொண்டே. 

“பள்ளிக்கூடங்களில் தான் சமையல் கலையை ஒரு பாடமாக வைத்திருக்கிறார்களே இந்தக் காலத்தில்!” என்றார் சர்மா

“என்ன வைத்திருக்கிறார்களோ? நாலு பேருக்கு உப்புமா கிளறி காபி போட வேண்டுமானால் தெரிகிற தில்லை இவர்களுக்கு! ஒருத்தருக்கு அரை ஆழாக்கு ரவை வேண்டுமானால் நாலு பேருக்கு கால்படி என்று அளந்து, உப்பை நிறுத்து, தாளிதம் செய்ய வேண்டிய சாமான்களை நிறுத்து எதற்கு எடுத்தாலும் தராசையும் படியையும் தேட வேண்டியிருக்கு. வாணலியைப் போட்டுக் கண் திட்டத் திற்கு நெய்யோ. எண்ணெயோ ஊற்றி உத்தேசமாக ரவை யைக் கொட்டிக் கிளறி விடுவாள் என் சம்சாரம். நாலு பேருக்கு மேல் இரண்டொருத்தர்கூட சாப்பிடலாம்.” 

மகாதேவன் இவ்விதம் கூறிவிட்டு, நீலாவைப் பார்த்துச் சிரித்தார். நீலாவின் சிவந்த முகம் மேலும் கோபத்தால் சிவந்தது. ஜிவ்வென்று பறந்து போகும் புறாவைப்போல் மெல்லிய வெண் மஸ்லின் மேலாக்குப் பறக்க மாடிப்படி களில் ஏறி உள்ளே போய் விட்டாள். 

“அடடா! நீங்கள் தமாஷுக்குச் சொன்னதை நிஜம் என்று கோபித்துக் கொண்டு விட்டாளே குழதை?” என்று அனுதாபப்பட்டார் சர்மா. 

“அவளுக்குத் தொட்டதற்கெல்லாம் கோபம் வரும், சார்! கொஞ்சம் செல்லமாக வளர்ந்த பெண்” என்று பெருமையுடன் கூறினார் டாக்டர். 

சர்மா வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன்பு மகாதேவன், “நாளைக்கு வெள்ளிக்கிழமை. ஜாதகம் கேட்பதற்கு உங்கள் வீட்டிற்கு ராகு காலத்துக்கு மேல் வருகிறேன். பிறகு உங்கள் வீட்டிலிருந்து பெண்களும் வந்து நீலாவைப் பார்க்கட்டும்” என்றார். 

“ஆகட்டும். யோசித்துச் சொல்லுகிறேன். சங்கரன் ஊரில் இல்லை” என்று கூறிவிட்டு வந்து விட்டார் சர்மா. 

அதன் பிறகு டாக்டர் மகாதேவன் இரண்டு மூன்று தடவைகள் சர்மாவின் வீட்டிற்கு ஜாதக விஷயமாகப் போயிருந்தார். அப்பொழுது சர்மா வீட்டில் இல்லை. அவர் மனைவி மீனாட்சி அம்மாளே மகாதேவனுடன் பேசும்படி நேரிட்டது. இன்னொருவருடைய குடும்ப விவகாரங்களை விசாரிப்பதில் ஆண்களை விடப் பெண்களுக்கு சாமர்த்தியம் அதிகம். நொடிப் பொழுதில் மகாதேவனைப் பற்றியும், அவர் அந்தஸ்தைப் பற்றியும், அவர் பெண் நீலாவைப் பற்றி யும் மீனாட்சி அறிந்து கொண்டாள். மூத்த நாட்டுப் பெண் சம்பகத்தைப் போல் இல்லாமல் நீலா. பணக்காரியாக இருப்பது அவள் மனத்துக்கு ஆறுதலாக இருந்தது. அண்டாவிலிருந்து குடம் வரைக்கும் வெள்ளிப் பாத்திரங்கள் வாங்கவும், தங்க முலாம் பூசிய டீ செட்டுகள் வாங்கவும் சந்தர்ப்பம் இருக்கிறது என்று நினைத்துச் சந்தோஷப் பட்டாள் மீனாட்சி. சீரும். சிறப்புறமாகத் தடபுடலாக சங்கரனின் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்கிற ஆசை யால் ஒவ்வொரு நாளும் மகாதேவனிடம் சங்கரனின் ஜாதகத்தைக் கொடுத்துவிடத் துடித்துக் கொண்டிருந் தாள் அவள். 

சர்மா தீர்மானமாகத் தன் அபிப்பிராயத்தை அவளிடம் ஒன்றும் கூறாததால் மீனாட்சி சிறிது தயங்கிக் கொண் டிருந்தாள். வலிய வரும் ஸ்ரீதேவியை உதைத்துத் தள்ளுவது போல் இருந்தது சர்மாவின் மௌனம். அவர் சம்மதம் தெரிவிக்கா விட்டாலும் அடுத்த முறை மகாதேவன் வரும் போது கட்டாயமாக சங்கரனின் ஜாதகத்தைக் கொடுத்து விடுவது என்று தீர்மானித்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி. 


பொன்மணி கிராமத்தில் சங்கரன் காமுவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தான். அவன் வரும் போதெல்லாம் ராமபத்திரய்யர் அவனுக்கு ஆசார உபசாரங்கள் செய்தார். பெரிய அந்தஸ்தில் இருக்கும் தன் நண்பனின் பிள்ளை தன் வீட்டைத் தேடி வந்து இவ்வளவு சரளமாகப் பழகுவது அவருக்கு ஆனந்தத்தை அளித்தது. நகரவாசத்தில் கிடைக்காத ருசியுள்ள அநேக பதார்த்தங்களைச் சமைத்துப் போடும்படி விசாலாட்சியிடம் கூறினார். கொல்லையில் விளைந்த முளைக்கீரையை மோர்க் கூட்டு செய்யும்படி கூறினார். பிஞ்சுக் கத்திரிக்காயை எண்ணெய்க் கறி செய்து போட்டாள் விசாலாட்சி. 

எல்லாவற்றிற்கும் மேலாக ராமபத்திரய்யரின் அன்பு சங்கரனின் மனத்தை நெகிழச் செய்தது. பட்டினத்தில் தன் வீட்டில் இருக்கும் பெண்களிடம் இல்லாத ஒரு பெருந் தன்மையைக் காமுவின் குணத்தில் கண்டான். அன்பும் அறிவும் அவள் கண்களில் சுடர் விட்டன. 

மதனி சம்பகம் சதா துக்கத்தில் மூழ்கி இருப்பவள். என்னதான் அவள் சிரிக்க முயன்றாலும் துயரம் ததும்பும் அவள் பார்வை மனசைக் காட்டிக் கொடுத்து விடும். தமக்கை ருக்மிணியின் அகம்பாவமும், யாரையும் மதியாத குணமும் அவனுக்கு அவளிடம் உள்ளூர ஒருவித வெறுப்பை ஏற்படுத்தி விட்டிருந்தன. தாயாருக்கு, பணத்தைத் தவிர வேறு ஒன்றையும் உலகத்தில் முக்கியமாக நினைக்கும் சுபாவம் கிடையாது. தானும், தன் குழந்தைகளும் அமோகமாக வாழ வேண்டும். இதற்காகப் பிறத்தியார் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பார்த்துச் சகிக்கும் மனசைப் படைத்தவள் அந்த அம்மாள். நிராதரவாக மனைவியையும், குழந்தையையும் விட்டு விட்டு, அயல் நாட்டில் வேறு மணம் செய்து கொண்டு வாழும் பிள்ளையிடம் காண்பிக்க வேண்டிய வெறுப்பை நாட்டுப் பெண் சம்பகத்திடமும், அவள் ஒரே குழந்தையிடமும் காண்பித்து வந்தாள் மீனாட்சி பிள்ளை அவளுடைய அதிர்ஷ்டக் குறைவால் தான் தன் பிள்ளை வீடு வாசலை விட்டுக் கண்காணாத இடத்துக்குப் போய் விட்டான் என்று தூற்றினாள் அவள். 

இவ்விதம் செல்வத்தினால் சகல பாக்கியங்களையும் அனுபவிக்க முடிந்திருந்தும் குண வேறுபாட்டால் அவன் குடும்பத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக இருந்தனர். 


அன்று சாப்பாட்டுக்கு அப்புறம் சங்கரனும், ராமபத்திர அய்யரும் ஊஞ்சலில் அமர்ந்து உலக விஷயங் களைப் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். சமையலறையைப் பெருக்கி சுத்தம் செய்யும் காமுவின் மேல் சங்கரனின் பார்வை அடிக்கொரு தரம் சென்று மீண்டது. கறுப்பு நிறத்தில் அரக்குக் கரைபோட்ட புடவையும், சாதாரண பச்சை சீட்டி ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள் காமு.கழுத்தில் இரட்டை சரம் கருகமணி மாலையில் சிறிய பதக்கம் ஒன்றைப் பொருத்தி அணிந்திருந்தாள். அதன் நடுவில் பதிந்திருந்த ரத்தினத்தின் சிவப்பைப் போல் அவள் குவிந்த அதரங்களும் தாம்பூலத்தால் சிவந்திருந்தன. கையில் சிவப்பும் பச்சையும் கலந்த கண்ணாடி வளையல் களை அணிந்திருந்தாள். சாட்டை போல் துவளும் பின்னலை அன்று மலர்ந்த குண்டு மல்லிகைச் செண்டு அலங்கரித்தது. ‘டானி’க்குகளாலும், மாத்திரைகளாலும் பெற முடியாத உடல் வனப்பை வீட்டு வேலைகள் செய்வ தாலும், அன்பையும் பொறுமையையும் கடைப் பிடிப்ப தாலும் பெண்கள் அடைந்து விடலாம் என்பதற்கு அத்தாட்சியாகவே காமு விளங்கினாள். 

சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு, சவுக்கம் பின்னும் நூலையும் ஊசியையும் எடுத்துக் கொண்டு ஊஞ்சலைத் தாண்டிக் காமரா அறைக்குள் சென்றாள் காமு. அந்தக் கொஞ்ச நாழிகைக்குள் காமுவின் முகம் குங்குமம்போல் சிவந்துவிட்டது. சங்கரனும் ஏதோ உணர்ச்சியால் தாக்கப்பட்டவன் போல் ராமபத்திரய்யர் பேசுவதையும் கவனியாமல் உட்கார்ந்திருந்தான். 

“பெரிய பண்ணை இருக்கிறாரே, அவருக்கு ஒரு பெண் இருக்கிறது. வயசு பதினாறுக்குமேல் இருக்காது. சுமாராக லட்சணமாகத்தான் இருப்பாள். உனக்கு வேண்டுமானால் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. உன் அப்பாவுக்கு எழு தட்டுமா, சங்கரா?” என்று ஆரம்பித்தார் ராமபத்திரய்யர். சங்கரனோ, சாட்சாத் சங்கரன் கைலையில் உமாதேவியைப் பார்த்துப் பரவசமடைந்திருந்த நிலையில் சட்டென்று சுய இருந்தான் காமுவைப் பார்த்தபடி. 

உணர்ச்சி அடைந்தவனாக, “சே, சே, எனக்கு என்ன மாமா கல்யாணத்துக்கு அவசரம்?” என்று அசடு வழியக் கூறிவிட்டு ராஜம்பேட்டைக்குப் புறப்படுவதற்காக ஊஞ்சலை விட்டு எழுந்தான். 

பாதி திறந்திருந்த கதவின் வழியாகக் காமு சங்கரனைப் பார்த்தாள். நேருக்கு நேர் பார்க்கக் கூசிய கண்கள் இப்பொழுது திருட்டுத்தனமாகப் பார்ப்பதால் கூசவில்லை போலும்! கையில் பின்னும் தாமரைச் சவுக்கத்தில் எவ்வளவோ தவறுகள் நேர்ந்திருப்பதை அவள் கவனிக்க வில்லை. சங்கரன் சிளம்பியதும் காமரா அறையின் கதவை லேசாகத் திறந்து கொண்டு வாயிற்படி அருகில் நின்றாள் சாமு. 

“அப்பா! இன்னும் அரை மணியில் காபி ஆகிவிடும். அவரைச் சாப்பிட்டுவிட்டுப் போகச் சொல்லுங்கள் என்றாள் பதவிசாக. 

“சாப்பாடே ரேயடியாகத் திணறுகிறது! அதற்குள்ளாகவா காபி சாப்பிட முடியும். நாளைக்கு வருறேன் மாமா, காபி சாப்பிட!என்று ராமபத்திர அய்யரைப் பார்த்துக் கூறிவிட்டுப் புறப்பட்டான் சங்கரன், 

சங்கரனை வழி அனுப்ப வாசல் வரையில் போய் விட்டு வந்த ராமபத்திரய்யர் கையில் ஒரு தபால் கவருடன் ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தார். 


கடிதம் விசாலாட்சியின் ஒன்றுவிட்ட தம்பி முத்தையாவிட மிருந்து வந்திருந்தது. நாலைந்து வருஷங்களாக அவனிடமிருந்து தகவல் ஒன்றும் அதிகமாகத் தெரியாமல் இருந்தது. திடீரென்று ஏழெட்டு மா தங்களுக்கு முன்பு அவன் இரண்டாவது மனைவி தவறிப்போன செய்தியைத் தாங்கிய கடிதம் ஒன்று வந்தது. முதல் மனைவி தவறிய இரண்டு மாசங்களுக் கெல்லாம் இரண்டாவது சல்யாணம் பண்ணிக் கொண்டான். முதல் மனைவிக்கு மூன்று குழந்தைகள் இருந்தார்கள். முத்தையாவுக்கும் வயசு முப்பத்தி ஒன்றுக்கு மேல் ஆகாமல் இருந்ததால் அவனுடைய இரண்டாவது கயாணத்தைப் பற்றி யாரும் அவ்வளவாகக் குறை கூறவில்லை. இரண்டாவது மனைவியும் நான்கு குழந்தைகளை விட்டு விட்டுப் போய் விட்டாள் 

“ஐயோ பாவம்! ஏழு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவன் என்ன பண்ணுவான்’ என்று விசனித்தாள் விசாலாட்சி, துக்கச் செய்தி வந்தபோது. 

“என்ன பண்ணுகிறது? யாரையாவது சமையலுக்கு வைத்துக் கொண்டு குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் வரை காலத்தைக் கடத்த வேண்டியது தான்” என்றார் ராமபத்திரய்யர். 

பணங் காசுக்குக் குறைவில்லாமல் இருந்தாலும், வீட்டிலே ஒருத்தி இருக்கிற மாதிரி ஆகுமா இதெல்லாம்?” என்று விசாரப்பட்ட விசாலாட்சி அன்றே துக்கம் விசாரிக்கத் தம்பியின் வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள். 

ஊரிலிருந்து திரும்பி வந்த பிறகு பத்து தினங்கள் வரையில் முத்தையாவின் செல்வத்தைப் பற்றியும், அவன் தன் இளைய மனைவிக்குக்கல்லுக் கல்லாக நகைகள் செய்து பூட்டி இருந்ததையும் சொல்லிக் கொண்டிருந்தாள் விசாலாட்சி. “அரைப் பவுன் மாலையும், தங்க ஒட்டியாணமும் கண்ணைப் பறிக்கிறது. பாழும் பெண் இருந்து அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை” என்று அங்கலாய்த்துக் கொண்டாள். கெட்டிக் கரைப் புடவைகள் பீரோ நிறைய அடுக்கி வைத்திருக்கும் பிர தாபங்களை ஓயாமல் அளந்து கொண்டிருந்தாள். ராமபத்திரய்யருக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. 

“ஏண்டி, நீ துக்கம் விசாரிக்கப் போனாயா அல்லது வீட்டைச் சோதனை போடப் போனாயா? உன்னுடைய உளறல் பத்து நாட்களாக என்னால் சகிக்க முடிய வில்லையே!” என்று அவர் அதட்டிய பிறகுதான் விசாலாட்சி ஓய்ந்தாள்


நாற்பத்தி மூன்று வயதானாலும் முத்தையாவுக்கு இன்னொரு விவாகம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. முதல் தாரத்துக்குப் பெண் இருந்தாள். அவளுக்குக் கல்யாணம் நடந்தால் அதை விமரிசையாக நடத்துவதற்கு என்னதான் பணம் இருந்தாலும் வீட்டில் ஒரு பெண் இருக்கிற மாதிரி ஆகாது என்று நினைத்து முதலில் மூன்றாந் தாரமாகத் தான் கால்யாணம் பண்ணிக் கொண்டு பிறகு மகளின் கல்யாணத்தை நடத்தத் தீர்மானித்தான். 

“பாருவுக்குக் கல்யாணம் ஆகவேண்டும். அதற்காகத் தான் இந்தக் கல்யாணம் பண்ணிக் கொள்ள நினைத்திருக் கிறேன். காமுவைப் பற்றி எனக்குத் தெரியும். பதவிசும், அடக்கமும், பொறுமையுமே உருவானவள் அவள். இவ்வளவு பெரிய பாரத்தை அவளால் வகிக்க முடியும் என்கிற தீர்மானத்தால் தான் நான் தங்களைத் துணிவுடன் கேட்கிறேன்” என்று அவனிடமிருந்து வந்த கடிதத்தை ராமபத்திரய்யர் கண் கலங்க வாசித்தார். 

வளர்பிறை மதியம் போல் விளங்கும் காமுவின் அழகு, கேவலம் மூன்றாந்தாரமாகத்தானா வாழ்க்கைப்பட்டு மாய்ந்துபோக வேண்டும்? பதினெட்டு வயதுப் பெண்ணின் மனத் துடிப்புகளையும், இருதய தாபங்களையும் ஏழு குழந்தைகளுக்குத் தகப்பனாகி இருப்பவனால் உணர முடியுமா? 

“ஏழை என்கிற ஒரே காரணத்தினால் அல்லவா முத்தையா துணிந்து என்னைப் பெண் கேட்கிறான்?” என்று பொருமினார் ராமபத்திரய்யர். 

வழக்கம் போல் எங்கோ போய்விட்டுத் திரும்பிய விசாலாட்சி, கணவன் கையில் கடிதம் இருப்பதைப் பார்த்து ஊஞ்சலுக்கு எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டு, “எங்கேயிருந்து கடிதம் வந்திருக்கிறது?” என்று கேட்டாள். 

“உன் தம்பி எழுதி இருக்கிறான்!” என்று சுருக்க மாகவே கூறி, கடிதத்தை அவளிடம் கொடுத்து விட்டுக் கொல்லைப் பக்கம் போனார் ராமபத்திரய்யர். 

விசாலாட்சி கடிதத்தைக் காமுவிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்டாள். “முத்தையா மாமாவுக்குக் கல்யாணம்” என்றதும் காமுவுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால், மணப் பெண்ணாகத் தன்னைக் கேட்கிறார் என்பதைப் படித்ததும் அவள் முகம் வாட்டமடைந்தது. கடிதத்தை உறையில் போட்டு கூடத்தில் மாட்டியிருந்த கடிகாரத்தின் பின்னால் செருகி வைத்து விட்டுக் காமு சவுக்கம் பின்ன ஆரம்பித்தாள். விசாலாட்சி சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாள். 

“கடுதாசியைப் பற்றி அப்பா ஏதாவது சொன்னாரா?என்று பெண்ணைப் பார்த்துக் கேட்டாள் அவள். 

“கடிதம் வந்தது. படித்துக் கொண்டிருந்தார். அதற்குள் நீங்கள் வந்துவிட்டீர்கள்” என்றாள் காமு. 

“நான் வந்து என்ன புரட்டப் போகிறேன். என் வார்த்தை என்றால் தான் உன் அப்பாவுக்கு ரொம்பவும் அலட்சியமாச்சே!” என்று சலித்துக் கொண்டாள் விசாலாட்சி. 


கொல்லையில் கிணற்றங்கரையில் வாழை மரங் களுக்கு இடையில் போடப்பட்டிருந்த கல்லில் உட்கார்ந்து என்னவோ யோசித்துக் கொண்டிருந்தார், ராமபத்திர அய்யர். அந்த வருஷம் நல்ல மழை பெய்திருந்ததால் அவர் வீட்டுக் கொல்லையிலிருந்து பார்த்தபோது பொன்மணி கிராமத்து ஏரியில் சமுத்திரம் போல் தண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது தெரிந்தது. 

ஏரியில் படகு ஒன்றில் செம்படவ தம்பதி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். காற்றுடன் கலந்து வந்தது அவர்கள் களிப்புடன் பாடும் இசை. இளமையும் ஆனந்தமும் தளும்பி நின்றது, அவர்கள் வாழ்க்கையில். 

சமூகத்தில் ஏற்றத் தாழ்வையும், வாழ்க்கையில் ஆனந்தத்தையும் அளிப்பது பணம் ஒன்றுதான் என்று தோன்றியது ராமபத்திரய்யருக்கு, இல்லாவிடில் பணக்கார வீட்டுப் பெண்களைவிட எந்த விதத்திலும் காமு தாழ்ந்தவள் அல்ல. அழகும் அறிவும் அவளிடம் இருக்கிறது. இருந்தாலும் ஏழ்மை அவளைச் சமூகத்தில் ஆனந்தமாக வாழவிடாமல் தடை விதிக்கிறது. பணம் இல்லாமல் அவளை ஏற்க யாரும் துணிவுடன் வரத் தயங்குகிறார்கள்.முத்தையா கூட தன்னிடம் பணம் இருக்கும் காரணத்தால் தன் வயதையும் யோசியாமல் மூன்றாந்தாரமாக அவளைக் கொடுக்கும்படி கேட்கிறான். ஆனால், செம்படவ தம்பதிக்கு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் கிடைக்கிறது. அதோடு அவர்கள் திருப்தி அடைகிறார்கள். களிப்புடன் வாழ்கிறார்கள். 

ராமபத்திரய்யர் பெருமூச்சுடன் உட்கார்ந்திந்த கல்லை விட்டு எழுந்தார். மத்தியான வெயில் சுரீர் என்று அவர் வழுக்கை மண்டையைச் சுட்டது. நெஞ்சிலே சுட்ட முத்தையாவின் கடிதம் போல் அது அவ்வளவு தீட்சண்ய மாக இல்லை அவருக்கு. 


“இங்கே என்ன வேலை பாழாய்ப் போகிறது?” என்று சற்று உரக்கக் கூறியவாறு விசாலாட்சி கொல்லை வாசற் படியில் வந்து நின்றாள். ராமபத்திர அய்யர் திடுக்கிட்டுத் திரும்பிய போது அவள், “சங்கராந்தி போய் காரடை நோன்பும் வரப் போகிறது! பார்த்துக் கொண்டே இருந் தால் ஆடி பிறந்து மறுபடியும் தை பிறக்கக் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். கன்யாகுமரி மாதிரி வளர்ந்து நிற்கிறது பெண். வெளியிலே தலை காட்ட முடிய வில்லை…” என்றாள் படபடப்போடு. 

விசாலாட்சி கோபத்துடன் பேசுவதன் காரணத்தை. அவர் ஒருவாறு ஊகித்துக் கொண்டவராக, “இப்போ என்னை என்ன செய்யச் சொல்றே?” என்று கேட்டார். 

“முத்தையாவின் கடுதாசிக்கு என்ன பதில் எழுதப் போகிறீர்கள்?” என்று பளிச்சென்று கேட்டாள் விசாலாட்சி. 

“அவனுக்கு வயசாகிறதே ஒழிய புத்தி இல்லையே? நாற்பது வயதுக்கு மேலே என்ன கல்யாணம் வேண்டி இருக் கிறது? பெண்ணுக்குக் கல்யாணம் பண்ண வேண்டுமானால் இவன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமா என்ன? நாலு காசை விட்டெரிந்தால் நான் நீ என்று யாராவது செய்து விட்டுப் போகிறார்கள்? பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆனதும் தெரிவித்தால் நீதான் போய் எல்லா வற்றையும் கவனித்துச் செய்து விட்டு வாயேன்.” 

“உங்களிடம அவன் என்ன யோசனையா கேட்டிருக் கிறான்?” என்றாள் விசாலாட்சி கொஞ்சம் பரிகாசமாக 

“வயசாகியும் புத்தி இல்லையே என்று தான் சொல்லு கிறேன். சங்கரன் இருக்கிறோனே, என்ன அறிவுடன் பேசு கிறான்?” என்றார் ராமபத்திரய்யர். 

“என் தம்பி ஒன்றும் அறிவு கெட்டுப் போகவில்லை. சங்கரன் என்னவோ பிரமாதமாகச் சாதிக்கப் போகிறான் என்று நினைத்துக் கொண்டிருங்கள். பணம் பணத்தோடு தான் சேரும். நாலாயிரம் சம்பாதிக்கிறவன் பிள்ளை நாற்பது ரூபாய் சம்பாதிக்கிறவர் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளத்தான் வந்திருக்கிறான், பொன்மணியை தேடிக் கொண்டு.” 

விசாலாட்சி விடுவிடு என்று எழுந்து உள்ளே போனாள். இதுவரையில் சமையலறை ஜன்னல் வழியாகப் பெற்றோரின் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த காமுவின் கண்களிலிருந்து முத்துப் போல் இரண்டு துளிகள் நீர் கன்னத்தில் வழிந்தது.

– தொடரும்…

– ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது.

– பனித்துளி (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1996, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email
சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *