(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-14 | அத்தியாயம்-15
15 – காமுவின் கல்யாணம்
நீலாவா சங்கரனை வேண்டாம் என்கிறாள்? இந்திர பதவியை வேண்டாம் என்றானாம் ஒருவன்! அதைப்போல அல்லவா இருக்கிறது இந்த விஷயம்? அழகும், படிப்பும். குணமும் நிரம்பிய சங்கரனை மணந்த பாக்கியசாலி அவள் என்று அல்லவா நீலாவைக் காமு நினைத்திருந்தாள்? அந்த பாக்கியம் தனக்குக் கிட்டவில்லையே என்று அவள் ஏங்குவது கொஞ்சமா? காமுவின் மனம் இவ்விதம் எண்ண மிட்டது.
சங்கரன், தான் அங்கு வந்திருக்கும் காரணத்தைக் கூறி ராமபத்திர அய்யரை எப்படிக் கேட்பது என்று புரியாமல் விழித்தான். தன்னுடைய மறு விவாகத்தைப் பற்றி அவராகவே கேட்பாரா என்றும் எதிர்பார்த்தான். ஆனால் பரந்த மனமுடைய ராமபத்திர அய்யர் ஒன்றும் பேசவில்லை.
“பிறகு என்ன செய்யப் போகிறாய்? வயசான காலத் தில் உன் அப்பாவுக்குத் தான் இதெல்லாம் கஷ்டம். மீனாட்சி எப்பொழுதுமே பணத்துக்குத் தான் மதிப்பு கொடுத்து வருகிறாள் அப்பா. சம்பகம் பணக்கார இடத்துப் பெண்தான். இருந்தாலும் பதவிசாக இல்லையா? பாவம்!” என்று சம்பகத்துக்காக அனுதாபப்பட்டார். அவர். அவர் சம்பகத்தைப் பற்றி பேசியதும் சங்கரனுக்குக் காலையில் வந்த தந்தியின் நினைவு வந்தது. “மாமா! என் மதனிக்கு விடிவு காலம் வந்து விட்டது. அண்ணா இன்னும் சில தினங் களில் இங்கே வரப் போவதாக இன்று காலையில் தந்தி வந்தது” என்றான்.
“அப்படியா? ரொம்ப சந்தோஷம் சங்கரா! அந்தப் பெண்ணின் பொறுமைக்குப் பலன் இல்லாமல் போகுமா? அதிர்ந்து ஒரு வார்த்தை பேசமாட்டாள் சம்பகம்” என்று அவள் குணத்தைப் புகழ்ந்து பேசினார் ராமபத்திர அய்யர்.
மறுபடியும் சங்கரனுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. “காமுவை எனக்குக் கல்யாணம் பண்ணித் தருகிறீர்களா?” என்று அவன் எப்படிக் கேட்க முடியும்? ஏற்கெனவேயே அவன் வார்த்தைக்குத்தான் மதிப்புக் குறைந்து விட்டதே? “வருகிறேன் மாமா. இன்றோ நாளையோ அப்பா வந்து உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டான் சங்கரன்.
மூத்த பிள்ளை ஊரிலிருந்து வரப் போகிறான் என்று கடிதம் வந்தவுடன் சர்மா அவனை வரவேற்பதற்கு ஆயத்தம் செய்ய ஆரம்பித்தார். அவர் அடிக்கடி வெளியில் போவதும், தம் அறையில் உட்கார்ந்து யாருடனோ பேசுவதும் மீனாட்சி அம்மாளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
என்றும் போலவே சம்பகம் நடந்து கொண்டாள். அவளுடைய மனத்தில் பொங்கித் ததும்பும் மகிழ்ச்சியை அவள் ஒவ்வொரு பேச்சும் செய்கையும் காட்டிக் கொண் டிருந்தன. ஆனால் சிறிதாவது கர்வமோ, அகம்பாவமோ அவளிடத்தில் காணப்படவில்லை. அளவுக்கு மீறிய கஷ்டங் களினாலும், சோதனைகளினாலும் அவள் மனம் பக்குவம் அடைந்திருந்தது. –
வழக்கம் போல் அவள் சர்மாவின் அறைக்குள் சென்று அவருடைய புஸ்தக அலமாரியை ஒழித்துச் சுத்தம் செய்து, அவைகளை ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தாள். வெளியே போயிருந்த சர்மா வீடு திரும்பியதும் நேராகச் சமையலறைக்குள் சென்று சம்பகத்தைத் தேடினார். பிறகு வாசலில் தன் அறைக்குள் அவள் இருப்பது தெரியவே அங்கு வந்தார்.
‘கருமமே கண்ணாயினார்’ என்கிறபடி சம்பகத்தின் உள்ளம் தன்னுடைய கடமைகளிலிருந்து நழுவாமல் இருப்ப தைப் பார்த்து சர்மா உளம் கனிந்தார். இன்றோ, நாளையோ புருஷன் ஊரிலிருந்து வரப்போகிறான். மேல் நாட்டில் படித்துப் பட்டம் பெற்றவன், இங்கே வந்த பிறகும் ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கும் திறமை உள்ளவன். ஒருதரம் பிழை செய்து அதிலிருந்து மீண்டு புதுவாழ்வை நாடி வருகிறான். ‘கணவன் வரப்போகிறான். தன்னுடைய கஷ்ட காலத்துக்கு விடிவு ஏற்பட்டு விட்டது. இனிமேல் இந்த மனிதர்களின் தயவு நமக்கு எதற்கு’ என்று அவள் இறுமாந்து விடவில்லை. காலையில் சர்மா குளிக்கும் வெந்நீரிலிருந்து இரவு அவர் சாப்பிடும் பால் வரையில் ஆக வேண்டியதைக் கவனித்துச் செய்துதான் வருகிறாள். பெரியவர்களுக்குத் தொண்டு செய்யும் பண்பு அவள் உள்ளத்தில் புதைந்து விட்டது. நாளை கணவன் வந்த பிறகும் சம்பகம் மாற மாட்டாள்.
உள்ளம் நெகிழ்ந்ததால் கண்களில் துளித்த நீடைத் துடைத்துக் கொண்டே சர்மா, “அம்மா, சம்பகம்! உனக்கென்று மாம்பலத்தில் ஒரு வீடு வாங்கி விட்டேன். அவன் வந்தால் நீ அங்கே உன் குடும்பத்தை நடத்த ஆரம்பிக்கலாம்” என்றார். பெரியவர் சொல்வதைக் கேட்டு சம்பகம் பேசாமல் நின்றாள்.
“நீயும், அவனும் இனிமேல் தனியாகத்தான் இரு வேண்டும். உனக்கு அவன், அவனுக்கு நீ. இடையில் நாங்கள் எல்லாம் அவசியமில்லை. விருந்தாளிகளைப் போ ல் வருவோம், போவோம். நீயும், அவனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தத்தான் இந்த ஏற்பாடு. அதோடு, உனக்குச் சோதனைகள் ஆரம்பமான இந்த வீட்டில் இருந்து உன் மன நிம்மதியை மேலும் குறைத்துக் கொள்ள வேண்டாம்” என்றார்.
சம்பகம் தன்னுடைய அபிப்பிராயத்தைக் கூறுமுன், மீனாட்சி அம்மாள் அங்கு வந்தாள். சம்பகத்தைக் கவனித்து விட்டுச் சர்மாவைப் பார்த்து, “மாம்பலத்தில் வீடு வாங்கி யிருக்கிறீர்களாமே?” என்று கேட்டாள்.
‘ஆமாம், விலை படிந்து வாங்கிய பிறகு உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன். நாளை மத்தியானம் அவன் வருகிறான். அதற்கு அடுத்த நாள் சம்பகமும், அவனும் அங்கே தனிக் குடித்தனம் ஆரம்பிக்கட்டும்” என்றார் சர்மா.
மீனாட்சி அம்மாளின் சுபாவமான கோபம் தலையெடுத்தது. “வீடுதான் வாங்கியாகி விட்டது. வந்ததும் வராததுமாக இருக்கும் போதே தனிக் குடித்தனத் துக்கும் ஏற்பாடு பண்ணி விட்டீர்களா? நான் அவனைப் பார்த்து எத்தனை வருஷங்கள் ஆயின? அவனோடு எவ்வளவோ பேச வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்காதா?” என்றாள்.
“ஆசையாக இருந்தால் அவன் வீட்டிலே போய்ப் பேசுகிறது. உன்னை அங்கே போகக்கூடாது என்று நான் சொல்லவில்லையே. அதுவும் உன் வீடு தானே?” என்று சாந்தமாகவே பேசினார் சர்மா.
“ஆமாம்… எல்லாம் என்னுடையதுதான்! பேசுவீர்கள்! அப்படி என்றால், ஒன்றாக எல்லோரும் இருந்து விட்டுப் போகிறோம், எதற்காகப் பிரித்து வைக்கிறீர்களாம்?”
சர்மா சிரித்தார். பிறகு அலட்சியம் நிறைந்த குரலில், சம்பகம் “ஒன்றாக இருப்பதா? இத்தனை வருஷங்கள் நம்முடன் ஒன்றாக இருந்தது போதுமே! இனிமேல் அவள் அவளுடைய வீட்டிலேயே இருக்கட்டும். உனக்குப் பெரிய பிள்ளையிடம் போய் இருக்க ஆசையாக இருந்தால் அங்கே போய் இரு. சங்கரனிடம் இருப்பதானாலும் இங்கேயே இருக்கலாம். ஒற்றுமையும் ஐக்யமும் இருக்கும் வரையில் தான் கூட்டுக் குடும்பம் நடத்த முடியும். அது இல்லை என்று ஏற்பட்ட பிறகு மனஸ்தாபங்களை வளர்த்துக் கொண் டாவது ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல” என்றார் சர்மா.
தாய்க்குப் பின்னால் வந்து இதுவரையில் இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ருக்மிணி, “அப்பாவுக்கு எப்பொழுதுமே அண்ணா பேரிலே ஆசை அதிகம். அதுவும், அவன் சீமைக்கெல்லாம் போய்ப் படித்துவிட்டு வருகிறான் என்றால் அவரைப் பிடிக்க முடியுமா இனிமேல்?” என்றாள்.
சர்மா மகளைக் கேலியாகப் பார்த்தார். “என்னை நீங்கள் எல்லோரும் புரிந்து கொண்டது இவ்வளவுதான்! எனக்கு எல்லோருமே ஒன்றுதான். நாளைக்கு உன் புருஷன் ரங்கூனை விட்டு இங்கே வருகிறான் என்றால் உனக்கும் ஒரு வீடு வாங்கி வைத்து விடுவேன். அப்பொழுது உன் அம்மா பாடுதான் திண்டாட்டமாக முடியும். பெரிய பிள்ளையிடம் இருப்பதா, சங்கரனிடம் இருப்பதா அல்லது உன் வீட்டுக்கு வருவதா என்று புரியாமல் திணறிப் போவாள்” என்றார்.
‘திணறவும் வேண்டாம், திண்டாடவும் வேண்டாம். யார் வேண்டுமானாலும் எங்கேயாவது போகட்டும். நான் சிவனே என்று உங்களோடு இருந்து விட்டுப் போகிறேன், வயசான காலத்தில் நாம் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் தனியாக இருப்பானேன்?” என்று கூறி மீனாட்சி அம்மாள் அங்கே நடந்து வந்தவாக்குவாதத்தை முடித்துவைத்தாள்.
அடுத்த நாள் சம்பகத்தின் கணவன் ஊரிலிருந்து வந்தான். அவனும், அவன் மனைவியும், குழந்தையும் தனிக் குடித்தனம் போகும் முன் மீனாட்சி அம்மாள் வீட்டுக்கு வேண்டிய பண்டங்களை எடுத்து வைத்தாள்.
“போனதும், போகாததுமாக நீ ஒன்றுக்கும் கடைக்கு அலைய வேண்டாம். ஒரு மாசத்துக்கு மேல் காணும்படி சமையல் பண்டங்கள் அந்தக் கூடையில் வைத்திருக்கிறேன்’ என்றாள்.
“சங்கரா! அண்ணா வீட்டிற்கு இரண்டு மூட்டை அரிசி அனுப்ப வேண்டும். வண்டி பார்த்துக் கொண்டு வந்தாயானால் தேவலை. இன்றைக்குத் தேவையான சாப்பாட்டை ‘காரிய’ரில் கொண்டு போங்கள். நாளைக்கு வெள்ளிக்கிழமை. காலையில் அடுப்பு மூட்டலாம். ஒரு பாயசம் வைத்து விடு சம்பகம்” என்றாள்.
தாயாரையும், தகப்பனாரையும் நமஸ்கரித்து நின்ற சம்பகத்தையும், பிள்ளையையும் பார்த்துக் கண் கலங் கினாள் மீனாட்சி அம்மாள்.
“என்னவோ அப்பா! இனிமேலாவது நீ குடியும் குடித்தனமுமாக இருக்க வேண்டும். போய் விட்டு வா சம்பகம். அவனைப் பார்த்துக் கொள்” என்றாள்.
பேயாக இருந்தாலும் தாய் என்பார்கள். தாயின் அன்புக்கு முன் அவளுடைய கொடுமைகள், துர்க்குணங்கள் யாவும் மறைந்து போயின. நாட்டுப் பெண்ணின் அதிர்ஷ்டத் தினால் தான் பிள்ளை தங்களை விட்டுப் போய் விட்டான் என்று தன் வெறுப்பைச் சம்பகத்தின் பேரில் காட்டி வந்தாள் மீனாட்சி அம்மாள். இது ஒருவிதமான அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும். இப்பொழுது அவளுக்கு நாட்டுப் பெண்ணின் அதிர்ஷ்டத்தில் அபாரமான நம்பிக்கை விழுந்து விட்டது.
மறுபடியும் பொன்மணி கிராமத்துப் பெருமாள் கோவிலுக்கு முன்பு நாம் சந்திக்கிறோம். சங்கரனும் காமுவும் அங்கு சந்தித்து மணம் செய்து கொள்ளும் போது நாமும் சந்திக்க வேண்டியது அவசியமல்லவா? சங்கராந்தி கழித்து ஆறேழு தினங்களே ஆகி இருந்தபடியால் கிராமத்தின் சுற்றுப் புறங்களையும், வயல் வெளிகளையும், வீடுகளையும் பனிப்படலம் லேசாக மறைத்துக் கொண் டிருந்தது. மூலஸ்தானத்தில் திருத்துழாய் மார்பும், அதில் பிரியாமல் வாசம் செய்யும் ஸ்ரீ மகாலட்சுமியுடனும் எம்பெருமான் வீற்றிருந்து சேவை தந்தார். ‘சத்தியத்தை நிலைநிறுத்தவும், அன்பை வளர்க்கவும்’ பகவான் யாருக்கும் எந்த சமயத்திலும் துணை புரிகிறான். ராமபத்திர அய்யர் எளிய வாழ்க்கை நடத்தினாலும் உண்மை தவறாதவர். அன்பில் சிறிதும் குறைவில்லாதவர். அவர் பங்கில் பகவான் இராமல் போவானா? கல்யாண மண்டபத்தில் பொன்மணி கிராமத்து ஜனங்களில் சில பேர் கூடி தம்பதியை ஆசீர்வதிக்க வந்திருந்தார்கள்.
இரண்டு தினங்களுக்கு முன்பு சர்மா தம் நண்பரைக் கண்டு, பிள்ளையின் கருத்தை வெளியிட்டார். காதும் காதும் வைத்தமாதிரிக் கோவிலில் கல்யாணத்தை முடித்துக் கொண்டு வந்தால் போதும் என்று ராமபத்திர அய்யரிடம் தெரிவித்தார். இந்த விஷயத்தை ராமபத்திர அய்யர் காமுவிடம் தெரிவித்தபோது, காமுவுக்கு ஒன்றும் புரிய வில்லை. . கனவு காண்கிறோமா என்று நினைத்தாள். அன்று விடியற்காலம் கண்டதுதான் கனவு. இது நிஜம் என்று தீர்மானித்துக் கொண்டாள் காமு.
விடியற்காலம் சுமார் நான்கு மணிக்குக் காமு ஒரு சுப சொப்பனம் கண்டாள். சுடர் விடும் குத்துவிளக்கின் ஜோதியிலிருந்து அழகிய பெண் ஒருத்தி எழுந்து காமுவை நோக்கி வந்தாள். அவள் கையில் அழகிய செந்தாமரை பலர் இருந்தது. “இந்தா! இதை வாங்கிக் கொள்” என்று கை நீட்டி அவளிடம் கொடுத்தாள். மலர் மங்கை. ஆஹா! அந்த மலரின் சௌந்தர்யம் தான் எப்படிப்பட்டது! அதையே உற்றுப் பார்த்து ஆனந்தம் அடைந்தாள் காமு. இதை இப்போதே கொண்டு போய்ச் சங்கரனிடம் கொடுத்து விட்டு வரவேண்டும்” என்று சொப்பனத்தில் கூட அவள் மனம் எண்ணியது. மலரைக் கையில் வைத்து அதன் அழகில் ஈடுபட்டிருக்கும்போது, மலர்மங்கை மறைந்து போனாள்.
கண்களைக் கசக்கிக் கொண்டு காமு எழுந்தவுடன் தகப்பனாரிடம் இந்தச் சொப்பனத்தைப் பற்றிக் கூறினாள். அவரும் இது ஏதோ நல்விளைவுக்காக ஏற்பட்டது என்று நினைத்து இருந்து விட்டார்.
அன்று பகல் தான் சர்மா, ராமபத்திர அய்யரின் வீட்டைத் தேடி வந்தார். அவரைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கவும் வைத்தார். அடுத்த நாள் காலை பொன்மணி கிராமத்தின் பெருமாள் கோவிலில் காமுவும், சங்கரனும் சந்தித்தனர். தெய்வ சன்னிதானத்தில் ஆடம்பரமில்லாமல் காமுவின் கரம் பிடித்தான் சங்கரன்.
நிறைந்த உள்ளத்தோடும், ஆசையோடும் ராமபத்திர அய்யர் அட்சதை தூவித் தம்மை நமஸ்கரித்த தம்பதியை ஆசீர்வதித்தார். “விசாலாட்சி இருந்தால் அவள் எவ்வளவு பூரித்துப் போவாள்?” என்று சிறிது நேரம் மனைவியையும் நினைத்து வருந்தினார் அவர்.
“ராமபத்தி ! குழந்தைக்குக் கல்யாணம் ஆவதற்கு நாட்களானாலும் நல்ல இடமாக வாய்த்து விட்டது” என்று குடும்ப நண்பர் சுப்பரமணி தம் சந்தோஷத்தை அறிவித்தார்.
“எல்லாம் அவன் கிருபை அப்பா” என்று மூலஸ்தானத் தில் இருக்கும் பகவானைச் சுட்டிக் கைகளைக் கூப்பிக் கொண்டார் ராமபத்திர அய்யர்.
கல்யாணம் முடிந்தவுடன் ராமபத்திர அய்யரையும் தன்னுடன் பட்டணத்துக்கே வந்து விட வேண்டும் என்று அழைத்தான் சங்கரன். எளிய வாழ்க்கையில் பற்றுடைய அவர் கெட்டகாலம் பொன்மணியிலேயே இருப்பதாகக் கூறி விட்டார். தகப்பனாரைப் பிரிந்து செல்லும் காமு அன்று சகுந்தலை கணவர் ஆசிரமத்தில் அடைந்த துயரை அடைந்தாள். சீதை ஜனகரைப் பிரிந்தபோது ஏற்பட்ட துயரம் காமுவுக்கும் ஏற்பட்டது. “அப்பா!” என்று கண்ணீர் பெருக அவர் தோளில் முகத்தைப் புதைத்துத் தேம்பினாள் காமு. “நீங்கள் எங்களோடு வந்து விடுங்கள் அப்பா. உங்களை யார் கவனிப்பார்கள்!” என்று குழந்தை போல் அவர் கைகளைப் பற்றி அழைத்தாள்.
“அம்மா! புக்ககம் உன்னுடைய வீடு. என்னுடையது அல்ல. சரீரத்தில் தெம்பு இருக்கிற வரையில் இங்கே இருக் கிறேன். முடியாமல் போனால் பிறகு வருகிறேன். நீ புத்திசாலியாக நடந்து கொண்டு பிறந்த இடத்துக்கும், வீட்டுக்கும் பெருமையைக் கொண்டு வா காமு” என்றார்.
காரில் தன் பக்கத்தில் உட்கார்த்து யோசனையில் ஆழ்த்திருந்த காமுவின் அழகிய வாடிய முகத்தை ஒரு கையால் பிடித்துத் தன் முகத்துக்கு நேராகத் திருப்பினான் சங்கரன். அகன்ற அவள் கண்களில் நீர் திரண்டு நிற்பதைப் பார்த்ததும் அவன் மனத்தைக் கசக்கிப் பிழிவது போல் இருந்தது.நீலா அழும்போது அவ்வித உணர்ச்சி அவனுக்கு ஏற்படவில்லை. இது அதிசயம் தானே?
‘காமு! அப்பாவை விட்டு விட்டு வந்திருக்கிறோமே என்று வருந்துகிறாயா? ஒவ்வொரு விடுமுறை நாளிலும் உன்னைப் பொன்மணிக்கு அழைத்து வருகிறேன். எங்கே என்னைப் பார்த்துச் சிரிக்க வேண்டும்?” என்று கொஞ்சினான் சங்கரன்.
முத்துப் போன்ற தன் பற்கள் தெரிய இளநகை புரிந்த காமுவை சங்கரன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே வந்தான். தூரத்தில் பொன்மணி கிராமம் மறைந்து கொண்டே வந்தது. சாலையில் இரு பக்கங்களி லும் இருந்த வயல்களில் பயிர்கள் மீது பனித்துளிகள் சிதறி ஜ்வலித்துக் கொண்டிருந்தன. கிழக்கே சூரியன் உதயமாகி மேலே எழும்பி வந்ததும் அத்துளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களும் பகவானின் அருளின் முன்பு பனித்துளிக்குச் சமானம்தான் என்று காமு சங்கரன் இருவரும் புரிந்து கொண்டார்கள்.
(முற்றும்)
– ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது.
– பனித்துளி (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1996, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.
மிக நல்ல குடும்பக் கதை. விறுவிறுப்பாகவும் அளவான பாத்திரங்களுடன் அழகாகப் பின்னப்பட்ட கதை. ஆழ்கடலின் முத்துக்களில் ஒன்றைப் பகிர்ந்ததற்கு நன்றி.