கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2024
பார்வையிட்டோர்: 1,846 
 
 

(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 | அத்தியாயம்-15

14 – எதிர்பாராத சம்பவங்கள் 

அன்று மாசி நோன்பு. ‘ஒருக்காலும் கணவனை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும்’ என்பதற்காகப் பெண்கள் அன்னை கௌரியை வணங்கிப் பூசிக்கும் தினம். அதிகாலையில் எழுந்து சம்பகம் நோன்புக்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தாள். பலபலவென்று பொழுது விடியும் வேளையில் வீட்டில் இருப்பவர்கள் பூஜை செய்து, மங்களகரமான மஞ்சள் சரட்டைக் கழுத்தில் கட்டிக் கொண்டார்கள். சம்பகத்தின் மனத்திலே தேவியை வணங்கும்போது, ஒரு விதத் தாபம் ஏற்பட்டது. 

“கணவனைப் பிரிந்து வாடுவது எத்தனை துயரமான விஷயம்! அந்தப் பிரிவு சகிக்க முடியா ததாக இருந்தால் நோன்புகள், விரதங்கள் செய்து தேவியின் அருளை யாசித்துப் பெற முயற்சி செய்கிறோம். அவள் கணவன் உயிருடன் அவளைப் பிரிந்து போய் எத்தனை வருஷங்கள் ஆயின? இனிமேல் வாழ்க்கையில் அவனுடன் அவள் சேர்ந்து வாழப்போகிறாளா” என்றெல்லாம் கேள்விகள் எழுந்து, சுடு சரமாக அவள் இதயத்தைப் பொசுக்கின. 

இலையிலே வைத்திருந்த பலகாரங்களைக் கூடச் சாப்பிடாமல் உட்கார்ந்திருந்த சம்பகத்தைத் தேடி சர்மா சமையலறைக்கு வந்தார். பணிவும், அடக்கமும் உருவான சம்பகம் அவரைக் கண்டதும் மரியாதையுடன் எழுந்து நின்றாள். 

”அம்மா சம்பகம்! உன் பெயருக்கு ஒரு கடிதம் வந்திருக் கிறது. உன் புருஷன் தான் எழுதி இருப்பான். எழுத்தைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. எனக்கும் ஒரு கடிதம் போட்டிருக்கிறான்” என்று கூறி, அவளிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போனார். சம்பகம் அவசரமாக எழுந்து தன் அறைக்குள் சென்று கடிதத்தைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தாள். 

”அன்புள்ள சம்பகத்துக்கு ஆசீர்வாதம். அன்புக்கும் ஆசைக்கும் அர்த்தம் தெரியாத எனக்கு உன்னை ‘அன்புள்ள சம்பகம்’ என்று அழைக்கவே தயக்கமாக இருக்கிறது. உன்னுடைய நலனையோ, நம்முடைய குழந்தையின் நலனையோ இத்தனை வருஷங்களாக அறிந்து கொள்ளாமல் இருந்த என்னை மன்னித்து விடு…!” 

இதுவரையில் படித்தவுடன் கண்களில் நீர் வழியத் தன் மனதுக்குள், “மன்னிப்பா? அதெல்லாம் எதற்கு? கணவன் என்று கைப்பிடித்த நாளாய் யாருடைய அன்பை சதம் என்று நம்பி இருக்கிறேனோ அந்த அன்பர் என்னை நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது ஒன்றே போதாதா?” என்று எண்ணினாள் சம்பகம். பிறகு மேலும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள். 

“நான் சீக்கிரமே தாய்நாடு திரும்புகிறேன். மனிதன், மனத்தை அடக்கத் தெரியாததனாலும், சந்தர்ப்பக் கோளாறுகளாலும் வாழ்க்கையில் நெறி தவறி விடுவது சகஜம்தான். பகவானே தன்னுடைய அவதாரங்களுக்குத் தகுந்தபடி தர்மங்களை அனுசரித்ததாக நாம் கதைகளில் படிக்கிறோம். இங்கே என்னுடன் வாழ்ந்த பெண் என்னை ளிவாகரத்துச் செய்து விட்டாள். இந்த நாட்டில் அதற்கெல்லாம் அவசியமான காரணங்கள் தேவையில்லை. ஒரே கால்சாரங்களை அனுஷ்டிக்கும் தம்பதிகளில் சிலர், நம் நாட்டில் ஒத்து வாழ முடியாமல் சண்டையும், பூசலுமாக வாழ்க்கை நடத்துவது உனக்குத் தெரியும். ஆகவே, வெவ்வேறு பழக்க வழக்கங்களில் ஊறிப் போன எங்களுக்குள் நாளுக்கு நாள் அபிப்பிராய பேதம் தான் அதிகமாயின. முடிவில் அவளும் நானும் விலகி விட்டோம்! இது இங்கே சர்வ சகஜமான நிகழ்ச்சி. இதனால் எங்கள் இருவர் மனத்திலும் வருத்தமோ, அனுதாபமோ எதுவும் எழவில்லை. 

“சம்பகா! நான் பிறந்து வளர்ந்து பெரியவனாகி உன்னைக் கைப்பிடித்த பொன்னாட்டைத் தேடி வருகிறேன். பூப் போன்ற உன் மனத்தை எவ்வளவோ நோக வைத்து விட்டேன். அழகே உருவான உன் கண்கள் கண்ணீரை ஆறாகப் பெருக்க நான் காரணமாகி விட்டேன். என்னை நீ எப்படி ஏற்றுக் கொள்வாயோ, எனக்குத் தெரியவில்லை. 

சம்பகம் அப்படியே பிரமை பிடித்தவள் போல் அந்தக் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந் திருந்தாள். பிறகு அதை ஆவலுடன் மார்பில் அணைத்துக் கொண்டாள். கண்களில் ஒற்றிக் கொண்டாள். குழந்தை பானு அப்பொழுது வீட்டில் இல்லை! பள்ளிக்கூடம் போயிருந்தாள். 

கண்ணே! உன் அப்பா வருகிறாராமடி, உன்னைப் பார்க்க! உனக்கு ‘வெள்ளைக்கார’ பொம்மை யெல்லாம் வாங்கி வருவார். வைத்துக் கொண்டு விளையாடலாம்?’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். 

உவகை நிறைந்த மனத்துடன் சமையலறைக்குள் சென்று சமையற்கார அம்மாளிடம், “மாமி! என் கஷ்டம் எல்லாம் விடிந்து விட்டது. அவர் வருகிறாராம்” என்று கூறினாள். சமையற்கார மாமி கையில் பிடித்த கரண்டியுடன் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். “அப்படியா சம்பகம்! அந்தக் கற்பகாம்பிகை கண் திறந்து விட்டாளடி!” என்றாள். 

அந்தச் சந்தோஷச் செய்தியைச் சம்பகம் வேறு யாரிடத்திலும் தெரிவிக்கவில்லை. கணவன் வருகிறான் என்கிற பூரிப்பில் எழுந்த அந்த இன்பத்தை அவளே அனுபவித்தாள். அதை வேறு ஒருவருடனும் பகிர்ந்து கொள்ள அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. கணவனை வருஷக் கணக்கில் பிரிந்து இருந்த பிறகு ஒன்று சேரும் தம்பதிகளுக்குத் தான் அந்த இன்பத்தைப் பற்றிப் புரியும். 


சர்மாவின் வீட்டில் சில மாதங்களாகவே எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எவ்வளவோ ஆசையுடன் சீரும் சிறப்புமாகப் பணக்கார இடத்தில் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணி வைத்தாள் மீனாட்சி அம்மாள். அவர்களின் வாழ்க்கை பிளவு பட்டுப் போனதையும் பார்த்தாள் அவள். அன்பும், ஆசையும் பணத்தால் விலை கொடுத்து வாங்க முடியாது என்பதையும் அவள் தெரிந்து கொண்டுதான் இருக்க வேண்டும். தகப்பனாரிடம் சங்கரன், நீலாவுக்கும், தனக்கும் நடந்த பேச்சைப் பற்றிக் கூறியபோது, அவ்வளவு வயதானவராக இருந்தாலும் அவருக்கே திகைப்பு உண்டாகியது. “அப்பொழுதே சொன்னேன். உன் அம்மாதான் கேட்க வில்லை. நமக்கு மிஞ்சிய சம்பந்தம் செய்யக் கூடாது என்றும் சொன்னேன். அவள் தான் கேட்கவில்லை” என்று தம் மனைவி எதிரிலேயே அவளைப் பழித்தார் சர்மா. 

“நான் என்னத்தைக் கண்டேன்? நீங்கள் தான் வேண்டாம் என்று உறுதியாகத் தடுத்து விடுவதுதானே?” என்று பதிலுக்கு அவரைப் பழித்தாள் மீனாட்சி. 

”நன்றாய் இருக்கிறதோ இல்லையோ அதிசயம்? புருஷனுடன் வாழ முடியாது என்று விட்டாளாமே? அதுவும், அதன் கர்வமும் ..!” என்று சமையற்கார மாமி வெறுமனே நொடிக்கு நூறு தரம் சொல்லிக் கொண்டிருந்தாள் சம்பகத்தினிடம். தற்கால அணுகுண்டு உலகத்தில் நடக்கும் அதிசயங்களை எல்லாம் அந்த அம்மாள் அறிந்திருந்தால் இதைப்போய் ஒரு பிரமாதமான அதிசயம் என்று சொல்லி இருக்க மாட்டாள். 

“அவள் வேண்டாமென்று சொன்னால் நீ சரியென்று சொல்லி விட்டாயாடா? பெரிய மனுஷாள் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா?” என்று ருக்மிணி ஆத்திரத்துடன் கேட்டாள் சங்கரனைப் பார்த்து. 

“என்னைத்தான் வேறு கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லி விட்டாளே?” என்று கூறி, சங்கரன் கேலியாக நகைத்தான், 

“போகிறது! அவ்வளவாவது பெரிய மனசு பண்ணினாளே?” என்று மீனாட்சி முகத்தைக் கோணி அழகு காட்டுவது போல் வைத்துக் கொண்டாள். 


சங்கரனுக்கு நீலா அவனிடம் கூறிய வார்த்தைகள் சில காலம் வரையில் மனத்தை மிகவும் வரூத்திக்கொண் டிருந்தன. பொன்மணியிலிருந்து திரும்பியதும் உறுதியுடன் தாயின் எதிர்ப்பைச் சமாளித்து காமுவையே கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தால் தன் வாழ்க்கை வேறு விதமாக அமைந்திருக்குமே? அன்பு நிறைந்த மனைவியோடு ஆனந்தமாக இருந்திருக்கலாமே? இப்போது ஊரில் எல்லோரும் பேசிச் சிரிக்கும்படி ஆகிவிட்டதல்லவா? கஷ்டமோ சுகமோ ஒரு எல்லையை மீறிப் போகும்போது மனம் ஒருவித வைராக்கிய நிலையை அடைந்து விடுகிற தல்லவா? சங்கரனின் மனத்திலும் வைராக்கியம் நிறைந் திருந்தது. நாலுபேர் பேசிச் சிரிக்கும்படியாக அவன் வாழ்க்கை மாறிவிட்ட பிறகு அவன் நெஞ்சில் ஒரு விதத் துணிவும், உறுதியும் ஏற்பட்டன. இவ்வளவுக்கும் காரணம் அந்த நீலா தானே? புருஷனின் மான அவமானத்தில் பங்குபெற இஷ்டமில்லாத சுயநலம் பிடித்த-ஒரு பெண்ணுடன் தன் வாழ்க்கை அமைவதை விட, அவளை விட்டுப் பிரிந்ததே மேல் என்று சங்கரன் தீர்மானித்தான். நாளடைவில் சங்கரனின் மனம் நீலாவின் வார்த்தைகளை மறக்க ஆரம்பித்தது. 


இவ்விதமே ஒரு வருஷம் ஆயிற்று. காமு தன்னுடைய ‘டிரெயினிங்’ முடிந்து ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தாள். சங்கரன் காரியாலயத்துக்குப் போகும்போது அவளைப் பல முறைகள் வழியில் சந்தித் திருக்கிறான். பட்டிக்காட்டுப் பெண்ணாக இருந்த காமு சில வருஷங்களில் அடியோடு மாறிப்போய் படித்த பண்பாடுள்ள யுவதியாக இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. வழியில் எங்காவது பார்த்தால், “சௌக்யந் தானே? வேலையெல்லாம் எப்படி இருக்கிறது?” என்று கேட்பான் சங்கரன். 

“ஹூம்…சௌக்யந்தான். வேலையா? கஷ்டமாக ஒன்றுமில்லை. குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அவர்களுடன் பழகுவதில் ஒருவித இன்பம் ஏற்படுகிறது” என்று பதில் கூறிவிட்டு காமு சென்று விடுவாள்.. புன்சிரிப்புடன் அவள் பேசுவதும், அவனைக் கண்டதும் கைகளைக் கூப்பி ‘நமஸ்காரம்’ என்று சொல்வதுமே ஒரு தனி அழகாக இருந்தது. 


இப்படியிருக்கையில், சர்மாவின் வீட்டில் அவரும் அவர் மனைவி மீனாட்சி அம்மாளும் நீலா கூறியதை அப்படியே நம்பவில்லை. ‘என்னவோ கோபத்தினாலும், அவசரத்தினாலும் அந்தப் பெண் அப்படிப் பேசி இருக்கிறது. தானாக இங்கே வந்து சேரும்’ என்று மீனாட்சி அம்மாள் சொல்லிக் கொண்டிருந்தாள். 

“அவள் வேண்டாம் என்று சொன்னால் நாம் விட்டுவிட முடியுமா? அவள் அப்பாவும், அம்மாவும் பேசாமல் இருந்து விடுவார்களா?” என்று  சர்மாவைக் கேட்டாள் அந்த அம்மாள். 

“அதெல்லாம் உன் காலம். நான் உன்னை வேண்டாம் என்று சொல்லி இருந்தால், உங்கள் பிறந்தகத்து ஊர் பூராவும் திரண்டு எனக்குப் புத்திமதி கூற வந்திருப்பார்கள்• நீயும் கதவு மூலையில் கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றிருப்பாய். இப்பொழுது நடப்பது ஜனநாயக யுகம். திரேதாயுகம், துவாபரயுகம் மாதிரி ஜனநாயக யுகத்தில் நம் காலத்துப் பேச்சுகள் எல்லாம் செல்லாது. புருஷனுக்கு மனைவியை வேண்டாம் என்று தகுந்த காரணங்களுடன் சொல்லவும், மனைவி புருஷனை வேண்டாம் என்று ஒதுக்கவும் சட்டமே வந்துவிட்டது” என்றார் சர்மா. 

“அந்தச் சட்டம் நம் வீட்டிலேதான் முதலில் வந்து நுழைய வேண்டுமா? எனக்கு ஒன்றுமே தெரிய வில்லையே! வெளியில் போகக் கூட தயக்கமாக இருக்கிறது. ஆனால் நம் சம்பந்திகள் மட்டும் காரில் ஊரை ஒரு நாளைக்கு மூன்று சுற்றுகள் சுற்றுகிறார்கள். “புருஷனுடன் ஒத்துக் கொள்ளவில்லை. படிக்கிறாள். இதில் என்ன தவறு?” என்று அந்த டாக்டர் வேறு நாலு பேரிடம் சொல்லு கிறாராம். ஐயோ பெருமையே!” என்றாள் மீனாட்சி, 

“இப்பொழுது நீ என்னைப் படிக்க விடாமல் தொண தாணவென்று பேச வந்து விட்டாயே? இந்தத் தொந்தரவு அளவுக்கு மீறிப் போனால், நானும் உன்னை விலக்கித்தான் வைக்க வேண்டும்! விஷயம் என்னவென்று சொல்!” என்று அலுத்துக் கொண்டே கேட்டார் சர்மா. 

“எதற்கும் நீங்கள் சம்பந்திக்கு ஒரு கடிதம் எழுதிக் கேட்டு விடுங்கள். பிறகு என்ன செய்வது என்று யோசிக்கலாம்” என்று கூறினாள் மீனாட்சி அம்மாள். 

சர்மாவுக்கு மனைவி கூறுவதில் நியாயம் இருப்பதாகத் தோன்றவே, அன்றே டாக்டர் மகாதேவனுக்கு ஒரு கடிதம் எழுதினார். சங்கரன் கூறியவைகளை எழுதி, நாட்டுப் பெண்ணின் படிப்புக்குத் தாம் ஒன்றும் ஆட்சேபணை செய்யவில்லை என்றும் எழுதினார், பரஸ்பரம் இ குடும்பங்களின் நலனையும் இது பாதிக்கிறது என்றும் தெரிவித்தார். 

ஆனால், சம்பந்தியிடமிருந்து அதற்கு ஒன்றும் பதில் வரவில்லை. 

சங்கரனுக்கோ, ‘நீங்கள் வேறு கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷ வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன்’ என்று நீலா கூறிய சொற்கள் மணி அடிப்பது போல் அடிக்கடி செவிகளில் ஒலித்தன. ‘தான் வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டால் என்ன? அதுவும் காமுவையே கல்யாணம் பண்ணிக் கொண்டால் என்ன?’ என்று நினைத்தான் சங்கரன். 

இவ்வாறு நினைக்கும்போதெல்லாம் அவன் மனம் என்று மில்லாத சந்தோஷத்தால் நிரம்பியது. ஆனால், காமு அவனை மணப்பதற்குச் சம்மதிப்பாளா? ராமபத்திர அய்யர் நியாயத்துக்குக் கட்டுப்பட்டவர் ஆயிற்றே? அவர் இந்த விவாகத்துக்குச் சம்மதிப்பாரா? சங்கரனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. காமுவின் அபிப்பிராயத்தை யார் தெரிந்து கொண்டு வந்து சொல்லுவார்கள்? அவன் நியாயத்தை மீறி நடப்ப தாக அவனுக்குத் தோன்றவில்லை. நீலாவே அவனை வேண்டாம் என்று கூறி ஒதுங்கிப் போகிறாள், ஆகவே குற்றம் அவனுடையது அல்லவே? 

இந்த எண்ணம் தோன்றிய பிறகு, சில தினங்கள் வரை யில் சங்கரன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தான். பிறகு துணிந்து தகப்பனாரிடம் தன் கருத்தை வெளியிட்டான் அவன். 

சர்மா சந்தோஷத்துடன் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். “உனக்குச் சம்மதமானால் எனக்கும் திருப்தி தான் அப்பா. பணத்துக்காக ஆசைப் பட்டுச் செய்து கொண்ட கல்யாணம் தான் இவ்வளவு லட்சணமாக இருக்கிறது. ராமபத்திரனைப் போய் நீயே கேட்டுப்பார். காமுவையும் நேரில் கேட்டு விடு. அவர்கள் சம்மதித்தால் ஒருவருக்கும் தெரியாமல் ஏதோ கோவிலில் போய்க் கல்யாணத்தைப் பண்ணிக் கொண்டு மனைவியை அழைத்து வந்து சேர்” என்றார் சர்மா பிள்ளையிடம். 

காமுவும், அவள் தகப்பனாரும் சரி என்று கூற வேண்டுமே என்று தெய்வங்களை எல்லாம் பிரார்த்தித்துக் கொண்டான் சங்கரன். 


அடுத்த நாள் அதிகாலையில் காரியாலயத்துக்கு விடுமுறை எழுதி விட்டு ராமபத்திர அய்யரைப் பார்ப்பதற் குக் கிளம்பினான் சங்கரன். அவன் தெருவுக்கு வரும்போது தந்திச் சேவகன் ஒருவன் சங்கரனிடம் தந்தி ஒன்றைக் கொடுத்து விட்டுச் சென்றான். சர்மாவின் பெயருக்குத் தந்தி வந்திருந்தது. ‘யாரிடமிருந்து வந்திருக்கும்’ என்கிற கலக்கத்துடன் தந்தியைப் பிரித்து வாசித்த சங்கரன சந்தோஷ மிகுதியால் பேச முடியாமல் தவித்தான். சற்று நிதானித்து, பிரித்த கடுதாசியை எடுத்துக் கொண்டு பின் கட்டில் வேலையாக இருந்த சம்பகத்தைத் தேடிச் சென்று “மன்னி! உங்களுக்கு அதிர்ஷ்டகாலம் ஆரம்பமாகி விட்டது, சூரியனைக் கண்ட பனித்துளி போல் உங்களுக்கும் விடிவு காலம் ஆரம்பமாகி இருக்கிறது. பம்பாயிலிருந்து அண்ணா தாய் நாடு திரும்பி விட்டதைத் தெரிவித்திருக்கிறார். கூடிய சீக்கிரம் இங்கே வருகிறாராம்” என்று சங்கரன் நாக் குழறக் கூறி முடித்தான். 

சம்பகம் சிலை போல் வாயடைத்து நின்றாள். அசோக வனத்தில் துயருடன் வாடிய லோகமாதாவிடம் அனுமன் ராமனைப் பற்றிய செய்தியை அறிவித்த போது, அந்த ராமதூதனை மனதார வாழ்த்தினாளாம் சீதாதேவி. அது போல சங்கரனை எப்படி எந்த விதமாக வாழ்த்துவது என்பது புரியாமல் திகைத்தாள் சம்பகம். பல முறை சுவாமி படத்தருகில் விழுந்து வணங்கினாள். ஆனந்த மிகுதியால் அவள் கண்களில் நீர் பெருகி வழிவதைப் பார்த்து சங்கரன், தான் ஒன்றும் இந்தச் சமயத்தில் பேசக் கூடாது என்று தீர்மானித்து சந்தோஷம் பூராவையும் சம்பகமே அனுபவிக் கட்டும் என்று நினைத்து அங்கிருந்து போய் விட்டான். 

சர்மா திருப்பித் திருப்பி தந்தியை வாசித்தார். 

“அடியே! உன் பெரிய பிள்ளை வருகிறானாம். தெரியுமா சேதி?” என்று மனைவியை இரைந்து கூப்பிட்டுப் பிறகு இருவருமாக அந்தச் சந்தோஷச் செய்தியை அனுபவித்தார்கள். 


சங்கரன் காமுவின் வீட்டிற்குக் காரில் போய்க் கொண் டிருந்தாலும் அவன் மனம் அதை விட வேகமாக அவ்விடத்தை நோக்கிச் சென்றது. எதிர்பாராத விதமாக அதுவும் காலை வேளையில் சங்கரன் திடும் என்று வந்தது காமுவுக்கும், அவள் தகப்பனாருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

“உட்கார் சங்கரா! ரொம்ப நாட்களாக உன்னைக் காணவே இல்லையே?” என்று விசாரித்தார் ராமபத்திர அய்யர். 

“வீட்டிலே ஏகப்பட்ட மாறுதல்கள் நடந்து விட்டன மாமா!” என்றான் சங்கரன். ராமபத்திர அய்யருக்குத் தூக்கிவாரிப் போட்டது! 

“எல்லோரும் சௌக்யம்தானே அப்பா? நீலா உங்கள் வீட்டுக்கு வந்து விட்டாளா? குழந்தை போய் விட்டதாமே? என்னவோ எதற்கும் கொடுத்து வைக்க வேண்டாமா அப்பா?” என்று குடும்ப விஷயங்களையெல்லாம் விசாரித்தார். 

சங்கரன் ஆவலுடன் சமையலறைப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவர் பேசும் பேச்சுக்கள் ஒன்றும் சுவாரஸ்யப் படவில்லை. இதற்குள் காமு ஏதோ வேலையாகக் கூடத்துக்கு வந்தவள் சங்கரனை பார்த்து, “ஏதேது! அத்தி பூத்தது.போல் வந்து விட்டீர்கள்? ரொம்ப நாட்கள் ஆயிற்றே?” என்று கேட்டாள் குறும்பாகச் சிரித்துக் கொண்டு. 

பொன்மணி கிராமத்தில் எந்தச் சிரிப்பை தன்னுடைய தாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந் தானோ அதே கபடமற்ற குறும்புச் சிரிப்பை இன்று பார்த்து ஆனந்தமடைந்தான் சங்கரன். காமு சரேலென்று சமையல் றைக்குள் சென்று விட்டாள். மறுபடியும் ராமபத்திரய்யர் ஏதோ தொணதொணவென்று பேச ஆரம்பித்தார். 

“மாசக் கணக்கில் பிறந்த வீட்டில் நீலாவை விட்டு வைத்திருக்கிறாயே சங்கரா. அழைத்து வந்து விடுவது தானே?’ என்று கேட்டார் ராமபத்திர் அய்யர், 

”அழைத்து வருவதா? இனிமேல் அதெல்லாம் இல்லை மாமா. அவளுக்கும் எனக்கும் ஏற்பட்டிருந்த பந்தம் நீங்கி விட்டது. அவளுக்கு என்னுடன் வாழ்க்கை நடத்துவதற்கு இஷ்டம் இல்லையாம். திரும்பத் திரும்ப சண்டையும் பூசலும் தான் ஏற்படுமாம். நான் போய் அவளை அழைத்த தற்கு அவள் கூறிய பதில் இது” என்றான் சங்கரன். 

ராமபத்திர அய்யருக்கு இதெல்லாம் வினோதமாக இருந்தது.காலம் எப்படித் தலைகீழாக மாறி இருக்கிறது என்பதை நினைத்து ஆச்சர்யப்பட்டார் அவர். 

அடுப்பங்கரையில் அவசர வேலையில் ஈடுபட்டிருந்த காமு கூட அதை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து கேட்டாள். ஆச்சர்யத்தில் அழகிய விழிகள் மலர சங்கரனை விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

– தொடரும்…

– ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது.

– பனித்துளி (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1996, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email
சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *