கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 27, 2024
பார்வையிட்டோர்: 2,453 
 
 

(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 | அத்தியாயம்-14

13 – வேற்றுமையின் எல்லை…

நீலாவின் பிறந்த வீட்டாருடன் மனஸ் தாபம் ஏற்பட்ட பிறகு மீனாட்சி அம்மாளுக்குப் பாதிக் கொட்டம் அடங்கி விட்டது. யார் எங்கே அவளைப் பார்த்தாலும், ‘உங்கள் பிள்ளை நாட்டுப் பெண்ணின் வளையல்களை நொறுக்கி விட்டாராமே?” என்று கேட்டார்கள். “ஆயிரம் இருந்தாலும் சமயத்தில் விட்டுக் கொடுத்தது போல் நீங்களும், உங்கள் பெண்ணும் வரவே இல்லையே!” என்று வேறு கேட்டார்கள். 

சம்பகம் சங்கரனின் நிலையைக் கண்டு வருந்தினாள். அவனும், அவன் மனைவியும் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து அவள் ஆறுதல் அடையலாம் என்று நினைத் திருந்தது போக எக்கச்சக்கமாக அல்லவா நேரிட்டிருக் கிறது? கொழுந்தன் கொஞ்ச காலம் போய் மாமியார் வீட்டில் இருக்கட்டுமே என்று கூட நினைத்தாள் அவள். மனைவியிடம் அன்போ, ஆசையோ உடையவனாக இருந் தால் மாதக் கணக்கில் அவளைப் பாராமல் இருப்பானா? அதுவும் உள்ளூரிலேயே அவள் இருக்கும்துே, அவளைப் பாராமல் எப்படி இருக்க முடிகிறது அவனால்? ‘இவர்கள் கூட்டத்துக்கே மனைவியிடம் அபிமானம் இருக்காதுபோல் இருக்கிறது. வெளிநாட்டுக்குச் சென்றவ அடியோடு மனைவி, குழந்தை, பெற்றோர் என்பதை மறந்து போய் விட்டார். கொழுந்தன் என்னடாவென்றால் உள்ளூரிலேயே மனைவி இருப்பதை மறந்து உற்சாகமாக இருக்கிறாரே’ என்று வியந்தாள் சம்பகம். 

தினம் மாலையில் பானுவை வெளியே அழைத்துப் போவான் சங்கரன். அவளுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் சொடுத்து அழைத்து வருவான். கவலை இல்லாமல் திரியும் அந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் குழந்தைப் பருவம் எவ்வளவு நிஷ்களங்க மானது என்று நினைத்து சந்தோஷிப்பான் சங்கரன். ‘அவனுக்கும் குழந்தை பிறக்கப் போகிறது. ‘அப்பா’ என்று ஆசையுடன் அது அழைக்கும். உரிமையுடன் அவனிடம் முரண்டு பிடிக்கும். வீடு முழுவதும் தவழ்ந்து விளையாடும். தத்தித்தத்தி நடக்கும், அதற்கு நடை பழக்கிக் கொடுக்கும் போது அவனும் குழந்தையைப் போல் நடக்கலாம். நீலா என்ன குற்றம் செய்திருந்தாலும் குழந்தைக்காக அவளை மன்னித்து விடலாம் என்று கூட அவன் நினைத்தான். துன்பத்தை, கவலையை மறக்க இளங்குழந்தை வீட்டில் ஆடி ஓடிவிளையாடப் போகிறது’ என்றெல்லாம் சங்கரன் பானு விடம் பேசும்போதும் விளையாடும் போதும் எண்ணிக் கொண்டான். 

“குழந்தை பிறந்து விட்டது என்று தெரிந்தால் எல்லாம் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவான். ஏன், நான் கூடத்தான் போய்ப் பார்ப்பேன், குழந்தை நம்முடையது தானே? அதன் மேல் எனக்கு என்ன கோபம் இருக்கப் போகிறது?” என்று மீனாட்சி அம்மாளும் சொல்லிக் கொண்டிருந்தாள். 

“நாட்டுப் பெண்ணைக் கண்டால் ஆகிறதில்லை சில பேருக்கு! பேரன் பேத்திகளை மாத்திரம் எடுத்துக் கொஞ்சு வார்கள். நல்ல அதிசயம் இது?” என்று சமையற்கார மாமி சம்பத்திடம் கூறிச் சிரித்தாள். 

எல்லோரும் நீலாவுக்குக் குழந்தை பிறந்தால் குடும்ப நிலை சீர் திருந்தி விடும் என்று எதிர்பார்த்தார்கள். ராமபத்திர அய்யரும் அப்படித்தான் நினைத்தார். அவர் சர்மாவைப் பார்க்கும் போதெல்லாம், “எத்தனை கோபம் இருந்தாலும் புதிதாகப் பிறந்த குழந்தையை உதாசீனம் செய்யக் கூடாது அப்பா. மீனாட்சியையாவது அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவை. பிறகு எல்லாம் தன்னால் சரியாகி விடும்” என்று சொல்லி வந்தார். 


நீலா பிரசவித்த செய்தி கடைசியாக அவர்களுக்கு எட்டியது. அதுவும் அரை குறையாக வந்து யாரோ சொன் னார்கள். அவர்களும் விவரமாகக் கூறவில்லை. சங்கரன் மனம் சந்தோஷத்தால் தவித்தது. “பிறந்திருப்பது ஆணா, பெண்ணா? அது யாரைப் போல் இருக்கிறதோ? நீலாவைப் போல அழகாக இருக்கட்டும் ஆனால், குணத்துக்கு மட்டும் அவளைக் கொள்ள வேண்டாம்” என்று எண்ணினான். மாமனார் மாப்பிள்ளைக்கு நேரடியாக ஒன்றும் சொல்லி அனுப்பவில்லை. பெரியவராக இருக்கும் சர்மாவுக்கும் அவர் ஒன்றும் தெரிவிக்கவில்லை. யாராவது வருவார்கள் என்று வீட்டில் எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். கெளரவத்தை விட்டுக்கொடுத்துக் கொண்டு முதலில் போகக்கூடாது என்று ருக்மிணி தாயாருக்குச் சொன்னாள் 

காரியாலயத்துக்குச் சென்ற சங்கரனுக்கு இருப்பே கொள்ளவில்லை ஆபீஸ் காகிதங்களைக் கட்டி ஒரு பக்கம் வைத்து விட்டு, மேஜை அருகில் பேசாமல் உட்கார்ந்திருந் தான். நண்பர் ஒருவர், “என்ன அப்பா! மனைவி பிரசவித்து விட்டாளா?” என்று வேறு கேட்டு வைத்து விட்டார். விஷயம் தெரிந்துதான் ஒரு வேளை தன்னைக்கேட்கிறாரோ என்று சங்கரன் நினைத்தான். ‘பிரசவித்து விட்டாள்’ என்று கூறினால், “பெண்ணா, பிள்ளையா? எனக்குக் கல்கண்டு எங்கே! பூந்தி எங்கே” என்று நாலு பேரிடம் சொல்லி மானத்தை வாங்கி விடுவார். அவருக்கும் சண்டை மனஸ் தாபத்தைப் பற்றி ஏதோ கொஞ்சம் தெரியும். “மாசம் ஆகவில்லைபோல் இருக்கிறது ஸார்” என்று ஏதோ சொல்லி வைத்தான். “என்ன ஓய்! ஒரேயடியாய் மறைக்கிறீர். வளைகாப்பு நடந்து மூன்று மாசம் ஆகப் போகிறதே, கஜ கர்ப்பமா என்ன சார்?” என்றார் நண்பர். 

மத்தியான வேளைகளில் நாலு பெண்கள் சேர்ந்து ஏதாவது பேசினால் “வம்பு பேசுகிறீர்கள்” என்கிறார்கள் இந்தப் புருஷர்கள்! இவர்கள் ஆபீசில் பேசிப் கொள்வது எந்த ரகத்தைச் சேர்ந்த பேச்சோ புரியவில்லை! 

வீட்டிற்கு வரக்கூடாதென்று தடை உத்தாவு போட்ட மாமனார் வீட்டைத் தேடி சங்கரன் போவதற்குத் தயங்கி னான். குழந்தையைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் அவனுடைய சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்கச் செய்து விட்டது. மாலை நான்கு மணிக்கு முன்பே காரியாலயத்தில், தான் அவசரமாக எங்கோ போக வேண்டும் என்று கூறி விட்டு நேராக ‘நர்ஸிங் ஹோமு’க்குக் கிளம்பினான் சங்கரன். போகும் வழியில், நீலா தன்னிடம் எவ்வளவு அசட்டையாகவும் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொண்டாலும் அவைகளைப் பாராட்டாமல், கூடுமானவரையில் அவளுடன் சந்தோஷமாகப் பேசிவிட்டுக் குழந்தையைப் பார்த்து வருவது என்று தீர்மானித்துக் கொண்டான். 


‘நர்ஸிங் ஹோமு’க்குள் அவன் நுழையும் போதே அவனைப் பார்த்துக் கசமசவென்று நர்ஸ்கள் பேசிக் கொண்டு அவனுக்கு வழி விட்டனர். நேராக நீலா படுத்து இருந்த அறைக்குள் சென்றான். கட்டிலுக்கு அருகில் இருந்த தொட்டில் காலியாக இருந்தது. நீலா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஒரு வேளை பால் புகட்டு வதற்காகத் தாதி குழந்தையை வெளியே எடுத்துப் போயிருப்பாளோ? கட்டிலுக்கு அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து நீலாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந் தான் சங்கரன். வெளுத்துப்போய் களை இழந்து மிகவும் இளைத்துப் போய்இருந்தாள் அவள். தலைச்சன் பிரசவத்துக்கே இவ்வளவு பலவீனம் ஏற்படுமா என்ன என்று தோன்றியது அவனுக்கு. சிறிது நேரம் கழித்து நீலா விழித்துக் கொண்டாள். எதிரில் கணவன் உட்கார்ந் திருப்பதைப் பார்த்து ஆவலோ, பதட்டமோ அடையாமல் மௌனமாக இருந்தாள். இன்று சங்கரனே முதலில் பேசினான். “உடம்புக்கு ஒன்றுமில்லையே நீலா? எனக்கு ஏன் சொல்லி அனுப்ப வில்லை?” என்று சுவாதீனமாகக் கேட்டான். 

“நீங்கள் வருவீர்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் சொல்லி அனுப்பவில்லை” என்றாள் நீலா. 

சங்கரனுக்கு அவள் கூறும் வார்த்தைகளின் அர்த்தம் சரியாக விளங்கவில்லை. சங்கரனின் கோபம் தணிந்து அவர்கள் வீட்டிற்கு வருவான் என்று அவர்கள் யாரும் எதிர் பார்க்கவில்லையா? அல்லது சங்கரனின் வரவை அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லையா? சங்கரன் அதைப் பற்றிக் கவனியாமல், “சொல்லி அனுப்பாவிடாமல் போகிறது. குழந்தை எங்கே? நான் பார்க்க வேண்டும் என்று தான் ஓடி வந்திருக்கிறேன் நீலா!” என்று கேட்டான். 

நீலாவின் கண்கள் ஆஸ்பத்திரிக் கட்டடத்தின் மேல் கூரையைப் பார்த்தன. வருத்தம் கலந்த பார்வையுடன் அவனைப் பார்த்து, ‘குழந்தை இறந்தே பிறந்தது. நான் கூடப் பார்க்கவில்லை” என்றாள் அவள். 

சங்கரனின் மனம் ஒரு வினாடி ‘திக்’கென்று அடித்துக் கொண்டது. கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு மன அமைதியும், சந்தோஷமும் எவ்வளவு முக்கியமானது, நீலா சதா அவனுடனும் சண்டையிட்டுத் தனக்கும், அவனுக்கும் சுகம் இல்லாமல் செய்துகொண்டாள் அல்லவா? 

“குழந்தை திடமாக இருந்ததாமா? அதுவும் இல்லையா?” என்று கொஞ்சம் வெறுப்புடன் கேட்டான் அவளை. 

“குழந்தை நன்றாகத்தான் இருந்ததாம்! எனக்கு மாசம் ஆன பிறகு ‘ரத்த அழுத்த’ வியாதி வந்து விட்டது, அதனால்தான் அது ஜீவித்திருக்கவில்லை என்று அப்பா சொன்னார்.” 

டாக்டர் ஆனதால் அவர் அவ்விதம் அபிப்பிராயப் பட்டார், அம்மாவுக்குத் தெரிந்தால் அவள் நீலா பேரில் குற்றம் சொல்லுவாள். மொத்தத்தில் குழந்தை போய் விட்டது. தாம்பத்ய வாழ்க்கை இனியாவது நன்றாக இருக்கும் என்று சங்கரன் நினைத்திருந்தது வியர்த்தமாகப் போயிற்று. சங்கரன் யோசித்தபடி உட்கார்ந்திருந்தான் காலையில் ஆபீசில் நண்பர் கல்கண்டும், பூந்தியும் அவனுக்குக் குழந்தை பிறந்திருப்பதற்காகக் கேட்டார். குழந்தையைப் பார்த்து விட்டு வீட்டுக்குப் போகும்போது கடைத்தெருவில் அவைகளை வாங்கிப் போகவேண்டும் என்று சங்கரன் நினைத்துக் கொண்டு ‘நர்ஸிங்ஹோமு’க்கு வந்தான். ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக வேறு செய்தியுடன் நீலா அவனை வரவேற்றாள். சலித்த மனத் துடன்,”நான் போய் வருகிறேன் நீலா உடம்பைக் கவனித்துக் கொள். பழைய விஷயங்களை மறந்து விட்டு உடம்பைத் தேற்றிக்கொண்டு சீக்கிரம் நம் வீட்டுக்கே வந்து விடு’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டான் சங்கரன். 


அவன் வீட்டை அடைந்தபோது நன்றாக இருட்டி விட்டது. வீட்டில் எல்லோரும் வெளியே போயிருந்தார்கள். சம்பகம் ரேடியோவைத் திருப்பி வைத்து விட்டுக் கூடத்தில் உட்கார்ந்திருந்தாள். ரேடியோவிலிருந்து யாரோ தீங்குரலில், 

“ஆடி நடந்திடவே-யசோதை
ஆனந்தங் கொண்டர்ளாம்
ஆழியும் சங்கமுமாய்-யசோதை
அடித்தடங் கண்டாளாம்” 

என்று பாடிக் கொண்டிருந்தார்கள். அங்கே பாட்டிற்கேற்ப பானு நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். தான் பெற்ற குழந்தையைக் கண்டு ஆனந்தப்படுவதே மகா பாக்கியமாக எவ்வள்வோ பேர் நினைக்கின்றனர். நம் பெரியோர்கள் பகவானையே குழந்தையாக நினைத்து ஆடியும், பாடியும் மகிழ்ந்தார்கள். பக்திக்கும் அவர்கள் குழந்தைக் காதல் தூண்டுகோலாக அமைந்திருந்தது. சம்பகமும் ஆயிரம் கவலைகளை மறந்து பானு ஆடுவதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். 

கொழுந்தன் வீட்டிற்குள் வந்ததும் சம்பகம் ஆவலுடன் அவனைப் பார்த்து, “நீலா பிரசவித்து விட்டாளாமே? நீங்களாவது போய்ப் பார்த்து வருகிறதுதானே?” என்று கேட்டாள். 

“பார்த்து விட்டுத்தான் வருகிறேன். குழந்தை இறந்தே பிறந்ததாம். நம்முடைய அதிர்ஷ்டம் அவ்வளவுதான்!” என்று கூறிவிட்டு, அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான் சங்கரன். 

சம்பகத்துக்கு சங்கரனின் ஜாதகத்தை நீலாவின் தகப்பனாரிடம் கொடுத்த அன்று சுவாமி அறையில் படம் விழுந்து உடைந்ததும், பிறகு வளைகாப்பு தினம் நீலாவின் கை வளையல்கள் நொறுங்கி உடைந்ததும் படலம் படலமாக நினைவுக்கு வந்தன. 


இதெல்லாம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகும் நீலா புக்ககம் வரவில்லை. அவளாகவே வரட்டும் என்று சங்கரன் பேசாமல் இருந்து விட்டான். “அவர்கள் சொல்லி அனுப்புவதற்கு முன்பே விழுந்தடித்துக் கொண்டு ஓடினானே? அவனே போய் அவளை அழைத்தும் வருவான்’ என்று மீனாட்சி நிஷ்டூரமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். “எது எப்படியோ போகட்டும். இனி மேலாவது ஒற்றுமை யாக இருங்கள் அப்பா. நீதான் போய் அவளை அழைத்து வாயேன்” என்று சர்மா பிள்ளையிடம் சொன்னார். ‘நீங்கள் வருவீர்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை’ என்று நீலா கூறிய வார்த்தைகள் அவன் மனத்தை அறுத்துக் கொண்டிருந்தன. அவர்கள் சொல்லி அனுப்பா மலேயே அவன் அன்று குழந்தையைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையால் போயிருந்தான். மறுபடியும் அவன் அந்த வீட்டிற்குச் சென்றால் அங்கு எந்தவிதமான வரவேற்புக் கிடைக்குமோ என்று பயந்தான். 

“எப்பொழுதடா நீலாவை அழைத்து வரப் போகிறாய்? நீ வருவாய் என்றுதான் அவள் காத்துக் கொண்டிருக் கிறாளாம்!” என்று ருக்மிணி கேலி செய்தாள் சங்கரனை. 

“இதிலே என்ன தவறு?” என்று நினைத்துச் சம்பகம், ”அவர் தான் போய் அழைத்து வரட்டுமே!” என்று சொன்னாள். 

“தவறு ஒன்றுமில்லைதான். அவள் பிற்பாடு தலைமேல் ஏறுவாளே? அவ்வளவு கர்வம் பிடித்தவள் ஆயிற்றே அவள்?” என்று மீனாட்சி கோபித்துக் கொண்டாள். 

ஊரிலும் நண்பர்கள் அவனைப் பற்றியும் அவன் மனைவியைப் பற்றியும் பலவிதமாகப் பேசிக் கொண்டனர். “வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு பிறந்த வீட்டுக்கே போகக் என்று கூடாது என்று கண்டித்து வையுங்கள் சார்!” நெருங்கிய நண்பர் ஒருவர் கூறினார். சங்கரன் வீட்டு மனஸ்தாபத்தைப் பற்றி நண்பர்கள் அவன் எதிரிலேயே தைரியமாகப் பேசும் அளவுக்கு மனஸ் தாபம் முற்றிப் போயிருந்தது! நாலு பேருக்காகவாவது மனைவியை அழைத்து வந்தாக வேண்டும். இல்லாவிட்டால் ஊர் சிரிக்கும். 

இதற்கிடையில் அவன் தாயார் ஒரு தினம் அவன் காரியாலயத்துக்குக் கிளம்பும்போது, “ஏண்டா சங்கரா! உன் மனைவி டாக்டருக்குப் படிக்கிறாளா மேடா? காலேஜிலே சேர்ந்து விட்டாளாம். சமையற்கார மாமி பார்த்ததாகச் சொன்னாள்” என்றாள். 

“படிக்கட்டுமே! அதனால் தவறு ஒன்றுமில்லையே. அங்கே இருந்து படிப்பதை இங்கே வந்து படிக்கட்டும்” என்று தாயாருக்குப் பதில் கூறினான் சங்கரன். 

அன்றே நீலாவின் வீட்டுக்கு அழையா விருந்தாளியாகப் போனான் சங்கரன். வீட்டில் அவள் தகப்பனார் இல்லை. தாயார் மட்டும் இருந்தாள். ஒரு மாதிரியாகத் தலையை அசைத்துவிட்டு அந்த அம்மாள் மாடிக்குப் போனாள். சிறிது நேரத்துக்கெல்லாம் நீலா மாடிப் படிகளில் நிதானமாக இறங்கி வந்து அவன் எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். இருவரும் சிறிது நேரம் தலையைக் குனிந்த வண்ணம் பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து நீலா அவனைப் பார்த்து, “உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும். வெளியே போய்விட்டு வரலாமா?” என்று கேட்டாள். 

சங்கரன், ‘சரி’ என்று தலை அசைத்துவிட்டு, எழுந்திருந்து வெளியே போய் அவளுடன் காரில் ஏறிக் கொண்டான்.


கார் நகரத்தின் சந்தடியான இடங்களைக் கடந்து அழகிய நீண்ட ரஸ்தாவில் வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது. நீலா வெகு நேரம் வரையில் ‘ஸ்டீயரிங் வீலை’ விட்டுத் தன் பார்வையைப் பக்கத்தில் அமர்ந்திருந்த சங்கரன் பக்கம் திருப்ப வில்லை. அவன் அவள் அருகாமையில் நெருங்கி உட்கார்ந்ததால் அவள் உடம்பைக் கூசிக் கொண்டாள். கடைசியாக அடர்ந்து பசுமையாக வளர்ந்திருந்த மாந்தோப்பு ஒன்றின் அருகில் நீலா காரை நிறுத்திவிட்டு, இறங்கி நடக்க ஆரம்பித்தாள். 

சங்கரனுக்கு இதெல்லாம் புதுமையாகவும், ஆச்சரிய மாகவும் இருந்தன. அவளுடைய நீண்ட மௌனம் அவன் மனத்தில் அச்சத்தை எழுப்பியது. ஒரு விதமாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “இதெல்லாம் என்ன நீலா? அவ்வளவு பெரிய உன் வீட்டில் நாம் தனித்துப் பேசு வதற்கு இடமில்லையா என்ன? இவ்வளவு தூரம் என்னைக் கூட்டி வருவானேன்?” என்று கேட்டான். 

நீலா விழிகளை உயர்த்தி அவனை வரண்ட ஒரு பார்வை பார்த்தாள். பிறகு, “என்னை உங்கள் வீட்டுக்கு அழைப்பதற் காகத் தானே நீங்கள் இன்று வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டாள் அமைதியாக. 

“ஆமாம், நீயாகவே வருவாய் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. நாம்தான் வந்து அழைத்துப் போவோமே என்று கூப்பிட வந்தேன்” என்றான் சங்கரன். 

“நான் உங்களுடன் வர முடியாது” என்று அழுத்தமாகக் கூறிவிட்டு அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள் நீலா, 

“நான் உன் வீட்டில் வந்து இருக்க வேண்டும் என்பது உன் அபிப்பிராயமா?” என்று திருப்பிக் கேட்டான் சங்கரன். 

“அப்படிச் சொல்லவில்லையே? மணவாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. நான் சுதந்தரமாக இருக்க ஆசைப்படுகிறேன். கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை ஏற்படும் முன்பே நம் கல்யாணம் நடந்தது. இருவருடைய மனமும் ஒத்துப் போகவில்லை. ஒரு வேளை, பிறந்த குழந்தை உயிரோடு இருந்திருந்தால் நம்முடைய பிணைப்பு பலப்பட்டிருக்கலாம். இன்னொரு தடவை நான் அதைப் பரீட்சை பார்க்க விரும்பவில்லை. நான் டாக்டருக்குப் படிக்க காலேஜில் சேர்ந்திருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். கல்யாணத்துக்கு முன்பே என் அபிப்பிராயம் அவ்விதம் தான் இருந்தது. நீங்கள் உங்கள் மனத்துக்குப் பிடித்த பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷ மான வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன்” என்றாள் நீலா. 

நீலா கூறியதைக் கேட்டதும் சங்கரனின் மனம் வியப்பாலும், ஆச்சரியத்தாலும் தடுமாறியது. நீலா என்ன சொல்லுகிறாள் என்பதே அவனுக்குப் புரியவில்லை. அவன் கேட்பது உண்மையா அல்லது பிரமையா என்பதும் விளங்க வில்லை. ‘மனைவி அழகாக இல்லை. படித்தவளாக இல்லை’ என்றெல்லாம் காரணங்கள் கூறி, கணவன்மார்கள் மனைவிகளை ஒதுக்கி வைத்தார்கள். ஆனால், நீலா அவனை ஒதுக்கி வைக்கிறாள், ‘எனக்கும், உங்களுக்கும் ஒத்துவராது’ என்கிறாள். ‘நான் டாக்டருக்குப் படித்துப் பல ஆராய்ச்சிகளைச் செய்ய ஆசைப்படுகிறேன்’ என்கிறாள். 


சங்கரன் குழம்பிய மனத்துடன் நீலாவைப் பார்த்தான். பிறகு தடுமாறும் குரலில், “நீலா! கல்யாணத்தை ஆயிரங் காலத்துப் பயிருக்கு நம் முன்னோர்கள் ஒப்பிட்டிருக் கிறார்கள். அதன்படி யோசித்தே எதையும் செய்து வந்தார்கள். பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்த நம் கல்யாண பந்தத்தை நீ இவ்வளவு சீக்கிரம் தகர்த்துவிட முயலுவது சரியென்று எனக்குப் புலப்படவில்லை. உன் பெற்றோரைக்கேட்டாயா?அவர்கள் என்ன சொன்னார்கள்! அவர்கள் அபிப்பிராயம் என்ன என்று எனக்குத் தெரிய வேண்டாமா?” என்று கேட்டான் சங்கரன். 


நீலாவின் முகத்தில் சலனம் ஏதும் ஏற்படவில்லை. வைராக்கியத்தின் எல்லைக் கோட்டிலே நிற்கும் ஞானியின் முகத்தைப் போல் அது அவ்வளவு தெளிவாக இல்லா விட்டாலும், உணர்ச்சியற்ற முகமாகக் காட்சி அளித்தது. கணவன் என்றோ, காதலன் என்றோ எந்த விதமான உணர்ச்சிகளையும் அந்த முகம் காட்டவில்லை. ஆசைக் கணவனைக் கண்டதும் அகமும், முகமும் மலர வரவேற்கும் அன்பு மனைவியின் முகபாவம் எதுவும் அந்த முகத்தில் காணப்படவில்லை. காதலனின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் மனத்தில் எழும் இன்ப நினைவுகளால் பொங்கிப் பூரிக்கும் காதலியின் எழில் ததும்பும் முகபாவத் தையும் நீலாவின் முகம் காட்டவில்லை. ‘உனக்கும் எனக்கும் உறவு உண்டு என்பதே உண்மைதான்T? அந்த உறவின் பிடிப்புக்குள் நாம் சிக்கித்தான் தவிக்க வேண்டுமா?’ என்று கேட்பது போல் நீலா நின்றிருந்தாள். 

கணவன், மனைவி என்கிற உறவில் ஏற்படும் அன்பில் சிக்கித் தவிப்பது ஒருவிதமான பந்தம். அந்த அன்பு இருவருக்கும் பூரணமாக அமைந்து விட்டால், பிறகு எத்தனையோ சண்டைகள், சச்சரவுகள், பிளவுகள் எல்லாம் சரிப்பட்டுப் போய்விடும். பூரணமான அந்த மன ஒற்றுமை நீலா-சங்கரன் வாழ்க்கையில் ஏற்படவில்லை. அந்தக் காலத்தில் கூட இம்மாதிரி தவிப்புகளும், சிக்கல்களும் நிறைய ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், மனத்தைத் திறந்து மனைவி வெளியே சொல்ல அஞ்சினாள். அவளை வெளியே தைரியமாகப் பேசவிட அன்றைய சமூக நிலையும் இடங் கொடுக்கவில்லை. 

மௌனமாக நின்றிருந்த நீலா. “நான் இந்த முடிவுக்கு. இன்று, நேற்று வரவில்லை. வளைகாப்பு அன்று என் கையிலிருந்த வளையல்கள் உடைந்தவுடன் என் மனமும் உடைந்து போயிற்று. அதன் பிறகு பல நாட்கள் என் மனசிலே போராட்டங்கள் நடந்தன. பிறகுதான் என் தீர்மானத்தை அம்மாவிடமும், அப்பாவிடமும் கூறினேன். படித்துப் பட்டம் பெற்று, மேல் நாடுகளுக்குச் சென்று பல ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்று நான் எவ்வளவோ ஆசையுடன் இருந்தேன். குடும்ப வாழ்க்கையில் பற்றுக் குறைவான எனக்கு அவர்கள் கல்யாணம் செய்து வைத்ததே தவறு. அதை அப்பா ஒப்புக்கொண்டார்?” என்றாள் நீலா. 


சூரியாஸ்தடனம் ஆவதற்கு முன்பே தோப்புக்குள் இருட்டி விட்டது. ‘கிரீச் கிரீச்’ என்று கத்திக் கொண்டு நானாவித பட்சிகள் சிறகை அடித்துப் பறந்து வந்து மரங்களில் அடைந்தன. அடி வானத்தில் பூர்ண சந்திரன் மெல்ல மெல்ல மேலே எழும்பிக் கொண்டிருந்தான். இருட்டி இருந்த தோப்புக்குள் சிறிது நேரத்துக் கெல்லாம் சந்திர வெளிச்சம் பரவியது. அப்பொழுதும் இருவரும் பேசவில்லை. நீலா கை விரல்களால் நிலத்தில் கோடுகள் கிழித்துக் கொண்டிருந்தாள். சங்கரன் கீழே உதிர்ந்து கிடந்த மாவிலையைக் கிள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான். சந்திரனும் இவ்வதிசய தம்பதியைப் பார்த்துக் கொண்டே வானத்தின் மேலே மேலே எழும்பி வந்து கொண்டிருந்தான். 

“நேரமாகிறது” என்று கைகளை உதறிக் கொண்டு எழுந்தாள் நீலா. 

“நானும் வருகிறேன்” என்று கூறிவிட்டு எழுந்தான் சங்கரன். இப்பொழுது அவன் அவளுடைய காரில் சுவாதீனமாக உட்கார்ந்து செல்லவில்லை. அந்த வழியாக நகரத்துக்குப் போகும் பஸ்ஸில் ஏறி, வீட்டை அடைந்தான் சங்கரன். 


அவன் வீட்டை அடைந்தபோது இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகி விட்டது. எதிர்பாராத மன அதிர்ச்சியால் சங்கரன் யாருடனும் பேசப் பிடிக்காமல் ‘சித்தப்பா’ என்று அழைக்கும் பானுவையும் லட்சியம் செய்யாமல் மாடி அறைக்குள் சென்று கட்டிலில் ‘பொத்’ தென்று சாய்ந்து வானத்தையும், சந்திரனையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனையும் அறியாமல் நித்திரையில் ஆழ்ந்த போது அவன் கண் முன்பு இன்பலோகம் ஒன்று உதயமாயிற்று. அதில் அன்பே உருவான காமு புன்னகை முகத்துடன் அவனை எதிர் கொண்டழைத்தாள். “அடியோடு என்னை மறக்கப் பார்க்கிறீர்களே?” என்று கேலிப் புன்னகையுடன் அவள் அவன் எதிரில் அசைந்தாடும் பொற்கொடி என நின்று கேட்பது போல் இருந்தது அவனுக்கு. 

நீலா சங்கரனிடம் கூறியதெல்லாம் உண்மை. 


பத்து தினங்களுக்கு முன்பு ஒரு நாள் பகவ், வைத்தியக் கல்லூரியிலிருந்து நீலா வீட்டுக்கு வந்ததும் நேராக மாடிக்குச் சென்று உடை மாற்றிக் கொண்டாள். சமையற்காரன் கொண்டு வந்து வைத்த சிற்றுண்டியையும், குளிர்ந்த பானத்தையும் அருந்தி விட்டு, அங்கிருந்த சோபாவில் சாய்ந்து, அன்று கல்லூரியில் நடந்த பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தாள். சில காலமாகவே அவள் மனம் கடந்த இரண்டு வருஷங்களில் இழந்திருந்த நிம்மதியை அடைந்திருந்தது. காலையில் எழுந்ததும் சிறிது நேரம் படிப்பு. பிறகு குளித்து ஆடை அணிந்து சாப்பிட்டு விட்டுக் கல்லூரிக்குப் போவது. அதன் பிறகு அங்கு நண்பர்களுடன் உற்சாகமாகப் பொழுதைக் கழிப்பது, மாலை வீட்டுக்கு வந்ததும் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு மறுபடியும் பாடங்களைப் படிப்பது என்று அவள் வாழ்ககை ஒரு ஒழுங்கான முறையில் நடை பெற்று வந்தது. இந்த ‘சுதந்தரமான’ வாழ்க்கையே அவள் மனத்தைப் பெரிதும் கவர்ந்திருந்தது. 

கையிலிருந்த புஸ்தகத்தை மேஜைமீது வைத்துவிட்டு, அவள் கீழே இறங்கி வந்தபோது கூடத்தில் அவள் பெற்றோர் உட்கார்ந்திருந்தனர். ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றி அவர்கள் பேசிக் களைத்துப் போயிருக் கிறார்கள் என்பதை அவர்களுடைய முகபாவமே காட்டியது. அம்மாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் நீலா பிறகு அவளுடைய மடியில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அந்தஅம்மாளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது. நீலா தன் தாய் துக்கத்தை அடக்க முடியாமல் விசும்புவதைக் கேட்டு நிமிர்ந்து, “ஏனம்மா அழுகிறாய்?” என்றுகேட்டாள். 

அந்த அம்மாளின் மனத்தில் அவளுடைய பால்ய காலத்து நினைவுகள் எழுந்தன. நீலாவுக்கு முன்பு நான்கு ஆண் குழந்தைகள் அவளுக்குப் பிறந்து இறந்து போயின. ஒவ்வொன்றும் தங்க விக்ரகம் மாதிரி இருந்தது. பெட்டி பெட்டியாக வித விதமான உடுப்புக்களாக வாங்கி வைத்திருந்தாள். ஒவ்வொரு மகனும் படித்துப் பட்டம் பெற்று ஒவ்வொரு துறையில் பிரகாசிப்பான் என்று கனவு கண்டாள். முதல் குழந்தை தவறிப்போனதும், சில காலமே அந்த வருத்தம் இருந்தது. இரண்டாவது குழந்தை மூன்று வயசுவரை வளர்ந்து போய்விட்டது. மூன்றாவது குழந்தை கார் விபத்தில் சிக்கி மாண்டு விட்டது. நான்காவது பிள்ளையும் ஏதோ நோயினால் போய்விடவே அந்தத் தாய் உள்ளம் பூர்ண ஆயுளைப் படைத்த ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்தது. பிறகுதான் நீலா பிறந்தாள். 

நீலா வளர்க்கப்பட்ட சூழ்நிலையே வேறு. பிறந்த ஐந்தாறு வயசு வரையில் அவளை ஆணா பெண்ணா என்று யாருமே கண்டுபிடிக்க முடியாது, தலையை ‘கிராப்’ வெட்டி, நிஜாரும், சட்டையும் போட்டுப் பார்த்து மகிழ்ந்தாள் தாய். அவள் பெரியவளாகி படிப்பில் தீவிரமான ஆசையை வெளியிட்டபோது, அவளுடைய மனம் ஆனந்தத்தில் ஆழ்ந்து விட்டது. 

”குழந்தையை அழைத்துக் கொண்டு நாம் இருவருமே அயல் நாடுகளுக்குப் போய் வரலாம்” என்று அவள் தன் கணவனிடம் கூறினாள். வைத்திய சாஸ்திரத்தில் பிரத்யேகமான முறையில் அவள் பயிற்சி பெற அவளை அமெரிக்காவுக்கு அனுப்புவதாகப் பெற்றோர் தீர்மானித்து வைத்திருந்தார்கள். 

வீட்டில் அவளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவளு டைய கல்வியைப்பற்றியே பேசினார்கள். சமையல் அறையை வைத்துக் கொள்ள வேண்டிய முறை எப்படி? கல்யாண மானால் கணவனுடன்சுக துக்கங்களில் வாழ்க்கையை எப்படிப் பகிர்ந்து கொள்வது? தாயாகி மக்களைப் பெற்று வளர்க்கும் போது ஏற்படும் கடமைகள் ஒன்றையும் நீலா கவனித்தவள் இல்லை. அவளுக்குப் பிறகு அந்த வீட்டில் குழந்தையே இல்லையே! பதினெட்டு வயசு ஆன பிறகு கூட அவளே ஒரு குழந்தை போலத் தானே இருந்து வந்தாள்? 

திடீரென்று டாக்டர் மகாதேவன் தன் பெண்ணுக்குக் கல்யாணத்தை நிச்சயம் செய்து, முடித்தும் வைத்தார். இம்மாதிரி சூழ்நிலையில் வளர்ந்த பெண்ணைக் குடும்ப வாழ்க்கைக்கு எப்படித் திருப்புவது என்பதே அந்த அம்மாளின் துக்கத்துக்குக் காரணமாக இருந்தது. 

கண்களைப் புடைவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டே, “ஒன்றுமில்லை அம்மா! நீ மறுபடியும் புக்ககம் போக வேண்டாமா? உன் புருஷன் வந்து கூப்பிட்டால் என்ன சொல்லப் போகிறாய்? அப்பாவும், பெண்ணுமாக ஏதோ தீர்மானம் பண்ணிக் கொண்டு பேசாமல் இருக்கிறீர் களே! நீ வேறு காலேஜில் சேர்ந்து விட்டாய்” என்று கேட்டாள் தாய். 

நீலா தன் அகன்ற கண்களால் தாயை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு நிதானமும் உறுதியும் தொனிக்கும் குரலில், “அம்மா! எனக்கு விவரம் தெரிந்த நாளாக ஒரு ஆண் குழந்தையைப் போல என்னை வளர்த்தது நீ தானே? நீலா! வாடா கண்ணா! என்று என்னை அன்புடன் அழைத்ததும் நீதானே? நான் பெரிய டாக்டர் ஆகி, பெரிய மேதையாகவும் ஆக வேண்டும் என்று நீயும், அப்பாவும் ஓயாமல் பேசி வந்தீர்களே? என் மனத்துக்குள் நீங்கள் இட்ட வித்து நன்றாக ஊன்றி முளைக்கும்போது என்னைப் பல கட்டுப்பாடுகளுக்கிடையில் வாழச் சொன்னால் அந்த வாழ்க்கை எனக்கு ஒத்து வரவில்லையே அம்மா? அன்பில்லாத கணவன் அல்லது என்னைப் புரிந்து கொள்ளாத கணவன், பழைய வழக்கங்களில் ஊறிப் போன மாமியார், குடும்ப வாழ்க்கையில் இருக்கும் அநேகக் கட்டுப் பாடுகள் இவை யெல்லாம் என்னுடைய மனசுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. காதல் என்றளவில் கதைகளிலும், காவியங்களிலும் தான் இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அம்மா! நான் உன் மகனாகவே இருக் கிறேன். டீரென்று என்னை மாற்றி விட முயலாதே!” என்றாள் நீலா. 

நீலாவின் தாய் பல குழப்பங்களிடையே சிக்கித் தவித்தாள். பெண்ணை இப்படி வளர்த்தது தன் தவறு என்பதை ஓயாமல் மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள். குடும்பச் சூழ்நிலையிலே ஒவ்வொரு பெண்ணும் தாயிட மிருந்து அறிய வேண்டிய பாடங்கள் ஒன்றையும் தான் நீலாவுக்குப் போதிக்காமல் விட்ட தவறை உணர்ந்தாள். சுட்ட மண்ணைப் போல் ஒட்டாமல் போன அவளுடைய மணவாழ்க்கையைப் பார்த்துக் குழந்தை வளர்ப்பில் தாயினுடைய பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நினைத்து வியந்தாள் அவள். 

டாக்டர் மகாதேவனுடைய மனம் அவருடைய மனைவி யின் மனத்தை விட இன்னும் முதிர்ச்சியை அடைந்திருந்தது. ‘மனைவியை ஒதுக்கி, வேறு கல்யாணமே செய்து கொண்டு நம் நாட்டில் வாழ ஆண்களுக்கு மட்டும் உரிமை உண்டு. பெண், ஏதோ அவசியமான சில காரணங்களால் கணவனிட மிருந்து விலகி வாழக்கூடாதா என்ன’ என்று நினைத்தார். நீலா சங்கரனிடமிருந்து விலகி வாழ விரும்புகிறாள் என்பதை அறிந்து கொண்டு அதை அனுசரித்தே அவளைக் காலேஜில் சேர்த்து விட்டார். 

– தொடரும்…

– ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது. 

– பனித்துளி (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1996, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email
சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *