கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2024
பார்வையிட்டோர்: 2,364 
 
 

(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13

12 – விசாலாட்சியின் மறைவு

காமு வாயிற்படி தாண்டுதற்கு முன்பு விசாலாட்சி இரண்டு தடவை பலமாக இருமினாள். பலமாக இருமினாள். அப்புறம் சிறிது சுதாரித்துக் கொண்டு, “காமு!” என்று கூப்பிட்டாள். காமு வந்து அவள் அருகில் உட்கார்ந்ததும் அவள் தலையை அன்புடன் வருடிக்கொண்டே, “சாயங்கால வேளையில் என்னைத் தனியாக விட்டுவிட்டு எங்கே போகிறாய் காமு” என்று கேட்டாள் விசாலாட்சி.

அவள் கண்கள் முன்னைக் காட்டிலும் பிரகாசமாக இருந்தன. எப்பொழுதும் பெருமூச்சு விட்டுக் கொண் டிருத்தவள் நிதானமாகமூச்சுவிட ஆசம்பித்தாள்.காலையில் டாக்டர் கொடுத்து விட்டுப் போன ‘பெனிஸிலின்’ ஊசியின் விளைவால் அம்மாவுக்குக் குணம் ஏற்பட்டிருக்கிறது என்று காமு சந்தோஷப்பட்டாள். கட்டாயம் கமலாவிடம் சென்று பணம் பெற்று வந்து இன்னொரு மருந்தையும் வந்துவிட வேண்டும் என்கிற உறுதியுடன் காமு, தகப்பனாரை அழைத்து அம்மாவின் பக்கத்தில் உட்கார வைத்து விட்டுக் கிளம்பினாள். ஆனால் மறுபடியும் விசாலாட்சி காமுவைக் கூப்பிட்டுத் தன்னை விட்டு விட்டுப் போக வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்தாள். 

“போய் விட்டு வரட்டும் விசாலம். டாக்டர் உனக்காக இரண்டு மருந்துகள் வாங்கி வைக்கச் சொல்லியிருக்கிறார்! அவள் போய் வாங்கி வரட்டும்! வெறுமனே நாள் பூராவும் உன் பக்கத்திலேயே இருந்தால் அவளுக்கும் அலுப்பு ஏற்படாதா? என்று ராமபத்திர அய்யர் கூறிய பிறகு விசாலாட்சி தன் கண்களில் நீர் பெருக முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு படுத்து விட்டாள். 

“விசாலம், ஏன் அழுகிறாள்? குழந்தை காமு கஷ்டப். படுகிறாளே என்று அழுகிறாளா, வியாதி இப்படிப் பலமாக வந்துவிட்டதே என்று அழுகிறாளா?” என்று ராமபத்திர அய்யர் இவ்விதம் எண்ணமிட்டுக் கொண்டே விசாலத்தின் படுக்கையில் அவளுக்கு வெகு அருகாமையில் போய் உட்கார்ந்தார். அன்புடன் அவள் முகத்தைத் திருப்பி அவள் தலையை வருடினார் அவர். விசாலாட்சி அவர் மடியில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு வெகுநேரம் அழுதாள். ராமபத்திர அய்யரின் கண்களிலும் நீர் பெருகி வழிந்தது. பிறகு சிறிது மனத்தைத் தேற்றிக் கொண்டு, “என்ன இது விசாலம்,உடம்பை இப்படி அலட்டிக் கொள்கிறாயே! ஏன் இப்படி அழுகிறாய்?” என்று வாத்சல்யத்துடன் கேட்டார் அவர். 

விசாலாட்சி அவரையே உற்றுப் பார்த்தாள். ‘இன்றைக்கு என்னவோ எனக்குப் பயமாக இருக்கிறது. காமுவை ஏன் என்னை விட்டுப் பிரித்து வெளியே அனுப்பி விட்டீர்கள்? இன்றைக்கு ஒரு நாள்தானே நானும், அவளும் சேர்ந்து இருக்கப் போகிறோம்?” என்று சம்பந்த மில்லாமல் பேசினாள். 

ராமபத்திர அய்யர் அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தார். ஜுரம் ரொம்பவும் குறைந்து இருந்தது. நெற்றி யில் முத்து முத்தாக வியர்வை அரும்பி இருந்தது. பக்கத்தில் கிடந்த துண்டினால் அவள் முகத்தைத் துடைத்து விட்டார் அவர். 

“உனக்கு மருந்து வாங்கத்தான் அவள் வெளியே போய் இருக்கிறாள் விசாலம். இன்னும் அரை மணியில் வந்து விடுவாள். கண்டமாதிரி பேசாதே!” என்று கூறி விட்டுப் பாலைச் சுட வைத்து எடுத்து வரச் சமையலறைக்குள் சென்றார் ராமபத்திர அய்யர். அவர் பாலை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது விசாலாட்சி கண்களைப் பரக்க விழித்துப் பெருமூச்சு விட்டாள். அடிக்கடி ‘காமு காமு’ என்று பிதற்றவும் ஆரம்பித்தாள். 

காமுவை ஏன் அனுப்பினோம் என்று ஆகிவிட்டது ராமபத்திர அய்யருக்கு. பரபரப்புடன் வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்து விசாலத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். 

காமு கமலாவின் வீட்டிற்குச் சென்று அவளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடைத்தெருவுக்குப் போய் மருந்து வாங்கிக் கொண்டு கையுடன் டாக்டரையும் அழைத்து வந்தபோது, விசாலாட்சியின் நிலைமை கவலைக் இடமாகி விட்டது. உள்ளே வந்ததும், “வந்துவிட்டாயா அம்மா? உன் அம்மாவைப் பாரேன், என்னமோ போல் இருக்கிறாளே!” என்று கூறி முகத்தை மூடிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார் ராமபத்திர அய்யர். 

டாக்டர், விசாலாட்சியின் கை நாடியைப் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போது, காமு அவளை ஆதரவுடன் அணைத்துக் கொண்டு, “அம்மா! நான் வந்து விட்டேனே, என்னைப் பார் அம்மா!” என்று முடிக்கும் முன்பு விசாலாட்சி போய் விட்டாள். ‘காமுவுக்குக் கல்யாணமாகவில்லையே; காமு அழகான புடவைகளையும் நகைகளையும் அணிந்து கொள்ள வில்லையே’ என்கிற தீராக் குறையுடன் விசாலாட்சி போய் விட்டாள். காமுவின் கண்கள் கண்ணீரைப் பெருக்கவில்லை. கல்லாகச் சமைந்து, தாயின் உடலுக்கு அருகில் வருவார் போவோரையும் லட்சியம் பண்ணாமல் உட்கார்ந்திருந்தாள் காமு. 

‘காமுவுக்குக் கல்யாணம் பண்ணியிருந்தேனானால் விசாலம் இவ்வளவு சீக்கிரம் போய் இருக்க மாட்டாள்’ என்று வருபவர்களிடம் கூறி அங்கலாய்த்துக் கொண்டார் ராமபத்திர அய்யர். 


உலகத்திலே மனிதனால் தடுக்க முடியாத நிகழ்ச்சிகள் அநேகம் நடைபெறுகின்றன. காமுவுக்கு மூன்று வருஷங் களுக்கு முன்பே ராமபத்திர அய்யர் வரன்கள் பார்த்து வந்தார். மாதம் ஐம்பது ரூபாய் சம்பாதிக்கும் பிள்ளையாக இருந்தாலும் போதும் என்று தேடினார். பிள்ளை சம்பாதிப்பது ஐம்பது ரூபாயாக இருந்தாலும் அவனைச் சார்ந்தவர்கள் ஆயிரம் ரூபாய்க்குமேல் வர தட்சிணை கேட்டார்கள் பிறகு முத்தையா காமுவை மூன்றாந்தார மாக மணக்க முன் வந்தார். அதிலும் மலனவிக்கும் அவருக்கும் அபிப்பிராய பேதம் எழுந்தது. எதிர்பாராத விதமாக சங்கரன் இவர்கள் குடும்பத்தில் தலையிட்டான். ஏழைப் பெண்களைப் பணக்காரப் பிள்ளைகள் தான் கல்யாணம் செய்து கொண்டு, சமூகத்துக்கு வழி காட்ட வேண்டும் என்று பேசி, அதைச் சடுதியில் மறந்தும் போனான். 

காமுவால் அவனை மறக்க முடியவில்லை. கிராமத்தில் ஏச்சையும் பேச்சையும் பொறுக்க முடியாமல் உரிமையுடன் வாழ்ந்து வந்த வீட்டையும், மாடு கன்றையும் விற்று விட்டுப் பட்டினத்துக்கு வந்து சேர்ந்தார் ராமபத்திர அய்யர். காமு கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்கிற நினைவையே ஒழித்து விட்டு, வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்துத் தாயின் மனக் கஷ்டத்தைக் கூடப் பாராட்டாமல் இருந்து விட்டாள். விசாலாட்சி இதை நினைத்தே ஏங்கினாள், உருகினாள். அவள் மனக்கஷ்டத்துக்கும் ஒரு முடிவு ஏற்பட்டு விட்டது. கவலையும், கஷ்டமும் தெரியாத உலகத்தை நாடிச் சென்று விட்டாள் அவள். இவ்வளவு காலம் கவலை தேங்கியிருந்த அவள் முகம் அன்று நிஷ்களங்கமாக இருந்தது. 

எந்தக் குடும்பத்தை விசாலாட்சி மனதார வெறுத்து வந்தாளோ, எவனால் அவள் பெண்ணின் வாழ்வு தடைப் பட்டுக் கிடக்கிறது என்று நினைத்தாளோ அந்தக் குடும்பத் தினர், அவள் இறந்து போனதற்காக காமுவின் வீட்டிற்கு வந்தனர், சங்கரன் பத்து ரூபாய் நோட்டுகளாக இருபது நோட்டுகளை எடுத்து வந்து, ராமபத்திர அய்யர் தனியாக இருக்கும் சமயம் பார்த்து, “மாமா! செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாத இடத்தில் என்ன செய்வீர்கள்?” என்று வருத்தத்துடன் கூறி, கொடுத்துப் போனான். 

“அம்மா, குழந்தை! வெறுமனே அம்மாவை நினைத்து வருத்தப்படாதே! அப்பாவை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று சர்மா காமுவைத் தேற்றினார். 

”அவள் போனதற்காக நான் வருத்தப்பட வில்லை அப்பா, காமுவுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்கிற குறையோடு போய் விட்டாளே என்று தான் கஷ்டமாக ருக்கிறது” என்று கூறி ராமபத்திர அய்யர் மளமள வென்று கண்ணீர் பெருக்கினார். 

எல்லோரும் அவரவர் வீட்டிற்குப் போய் விட்டார்கள். வெறிச்சென்று கிடந்தது. கூடத்து மூலை பாழாகி விட்டது. நொடிக்கொரு தரம் ‘காமு’ ‘காமு’ என்று அழைத்த குரல் மறைந்து விட்டது. ‘உன் சிவப்பு உடம்புக்கு இந்த ரவிக்கை நன்றாக இருக்காது. நீ பட்டுப்பட்டாக உடுத்தும் போது நான் பார்க்கப் போகிறேனா?” என்று விசாலாட்சி நேற்றுத்தான் கூறியது போல் இருந்தது. அந்த வார்த்தை எவ்வளவு சீக்கிரம் பலித்து விட்டது? 

பகலில் அலைந்த அலைச்சலினால் ராமபத்திரய்யர் ஒரு பக்கம் முடங்கிப் படுத்துத் தூங்கி விட்டார். தகப்பனாருக்கு அருகில் காமு தன்னுடைய படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டாள். வெகு நேரம் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. நேற்று இந்த நேரத்தில் பளிச் பளிச்சென்று பேசிக் கொண் டிருந்தவள் இன்று பிடிசாம்பலாகப் போய் விட்டாள். ‘காமு காமு’ என்று ஆசையுடன் அழைத்தவளின் மூச்சு இன்று காற்றோடு கலந்து விட்டது. ‘சீ!என்ன வாழ்வு இது?’ என்று காமு மனத்துக்குள் எண்ணி வேதனை அடைந்தாள். 

கூடத்து மூலையில் அவள் தாயின் உயிர் பிரிந்த இடத் தில் குத்து விளக்கு ஒன்று ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. ஆடாமல், அசங்காமல் சுடர் விட்டு அது அந்த இடம் பூராவும் ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தது. 

விளக்கின் சுடரையே உற்றுப் பார்த்தாள் காமு. அவளுக்குப் புத்தி தெரிந்த நாட்களாக வெள்ளிக்கிழமை தோறும் விசாலாட்சி அதைப் பள்பளவென்று துலக்கி, குங்குமப் பொட்டிட்டு கொல்லையில் புஷ்பிக்கும் பாரிஜா த மலர்களை மாலை கோத்து அதற்குப்போட்டு நெய் ஊற்றித் திரியிட்டு விளக்கேற்றி பூஜிப்பாள். அழகிய பெண் ஒருத்தி மாலை அணிந்து உட்கார்ந்திருப்பது போ ன்ற பிரமையை அந்த விளக்கு ஏற்படுத்தி வந்தது ‘அந்தி விளக்கே, அலங்காரப் பெண்மணியே’ என்று மெல்லிய குரலில் ஸ்தோத்திரம் பாடி, தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்தி நமஸ்கரிப்பாள் விசாலாட்சி. நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும் இரவும், பகலும் அணையாமல் கொலுப் படிகளின் அருகில் எரிந்து கொண்டிருக்கும் அந்த விளக்கு. தீபாவளிப் பண்டிகையின் பேது காமுவுக்கு எண்ணெய் தேய்ப்பதற்கு முன்பு மணை போட்டு, கோலம் இட்டு, குத்து விளக்கேற்றி வைத்து விட்டு, மகளை எழுப்புவாள் தாய். கார்த்திகை தீபத்தின்போது நடுக்கூடத் தில் மற்ற தீபங்களுக்கெல்லாம் அரசியாக நடுவில் கொலு விருக்கும் குத்துவிளக்குதான் அது. இன்று தாயின் மரணப் படுக்கை அருகிலும் அவளுக்கு ஒளியைத் தந்து நின்றது. 

“ஒளியே! உன்னைப் பூஜித்து வந்த என் தாய் உன் ஒளியுடன் கலந்து விட்டாளா? அந்த ரகசியத்தை என்னிடம் சொல்ல மாட்டாயா நீ?” என்று காமுவின் மனம் விளக்கைப் பார்த்துக் கேட்டது. விளக்கு, சுடரை உதறிவிட்டு மறுபடியும் ஆடாமல் நின்றது. அது அவ்விதம் நின்றது மணப்பெண் ஒருத்தி முதன்முதல் கணவனுடன் பேசும் போது புரியும் புன்னகையைப் போல் இருந்தது.-வெண்கல விளக்கின் கீழ் அழகான பெண்மணி ஒருத்தி வந்து உட்கார்ந்து கொண்டாள். “என்ன கேட்கிறாய் காமு?’ என்று வினாவினாள் ‘உன் ஒளியோடு என் அன்னையின் உயிரும் கலந்து விட்டதா என்றுதான் கேட்கிறேன். ஏனென்றால், வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமைகளிலும், தினம் மாலையிலும் உன்னைப் பார்த்து பயபக்தியோடு வணங்கி உன் அழகில் லபித்து இருந்த என் தாய் உன்னை விட்டு எப்படிப் போய்விட முடியும்?” காமுவின் மனம் பளிச் சென்று இப்படிக் கேட்டது. 

“என்னை விட்டுப் போய் விட்டாள் என்று யார் கூறியது? கடைசி மூச்சின்போது கூட அருகில் நிற்கும் உன்னைக் கவனியாமல் என்னையே வெறித்துப்பார்த்தாளே உன் தாய். அவள் என்னிடம்தான் இருக்கிறாள்.” 

“உலகத்தைப் படைத்துக் காத்து அழிப்பது இந்த ஒளிதானா? அவனுக்கு ‘ஒளி மயமானவன்` என்றுதானே வேதங்களும், உபநிஷத்துக்களும் பெயர் கொடுத்திருக் கின்றன? அந்த ஒளி நீதானே? உலகைப் பிரகாசமூட்டும் சூரியனிலிருந்து இருளை விரட்டும் விளக்கிலும் வியாபித்து இருப்பது நீதானே? உண்மையைச் சொல்லி விடு” என்று கேட்டாள் காமு. 

“ஏதேது பெரிய கேள்வி யெல்லாம் கேட்கிறாய் இப்போது? தாய் இறந்து போனதும் “ஸ்மசான வைராக்கியம்’ என்று கூறுவார்களே அது ஏற்பட்டுவிட்டதா உனக்கு? நாளைக்குக் கல்யாணமானால் அம்மாவை எங்கே நீ நினைக்கப் போகிறாய்?’-ஒளிப் பெண் இவ்விதம் சொல்லி விட்டு மெல்லச் சிரித்தாள். 

“கல்யாணமா? அம்மா இருந்தபோது செய்து கொண் டிருந்தால் அவள் மனசுக்காவது ஆறுதலாக இருந்திருக்கும். இப்படி ஏங்கிச் செத்திருக்க மாட்டாள். இனிமேல் யாருக்காக நான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்?” காமுவின் மனம் பதட்டத்தோடு கேட்டது இப்படி. 

“உனக்காகவே நீ கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டியதுதான். இப்படி இருந்த எத்தனை பேர்களை நான் பார்த்திருக்கிறேன்.” 

“தர்க்கம் பண்ணுவதற்கு வந்திருக்கிறாயா என்ன்?”

“உண்மையைத் தான் சொல்லுகிறேன். பாரேன் நீ வேண்டுமானால்” என்று கூறிவிட்டுத் தண்டை ஒலிக்க எழுந்தாள் ஒளிப் பெண். 

“போகாதே அம்மா. நீ வந்து பேசிக் கொண்டிருந்தது எனக்கு எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. போகாதே!” 

ராமபத்திர அய்யர் தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டார். காமு தூக்கத்தில் பிதற்றுவதைப் பார்த்து அன்புடன், “காமு, பயந்து விட்டாயா அம்மா? விழித்துக் கொள். பொழுது விடிந்து விட்டதே! உனக்கு இந்த வீட்டில் இருப்பதற்குப்பயமாக இருந்தால் சர்மாவின் வீட்டில் போய் இருக்கிறாயா அம்மா?” என்று கேட்டார் அவர். 


இங்கே காமு தாயை நினைத்து வருந்திக் கொண் டிருக்கும்போது நீலாவின் வீட்டில் வளைகாப்புக் கல்யாணம் அமர்க்களப்பட்டது. நீலாவுக்கு உடம்பு கொஞ்சம் தேறி பிறந்த வீட்டில் இருந்தாள். நல்ல நாள் பார்த்து வளைகாப்புக்கு முகூர்த்தம் வைத்திருந்தார்கள் அவள் பெற்றோர். எதற்கெடுத்தாலும் பிரத்தியேகமான மரியாதையை விரும்பும் மீனாட்சிஅம்மாள் வளைகாப்புக்குச் சம்பந்திகளே நேரில் வந்து அழைக்க வேண்டும் என்று விரும்பினாள். இரண்டு பக்கத்திலும் சம்பந்திகளின் உறவு முன்னைப்போல் இல்லை 

நீலாவுக்கு உடம்புக்கு வந்ததே மாமியார் வீட்டில் கவனிக்கா ததனால்தான் என்று அவள் தாயார் நிஷ்டூரப் படுதினாள். சங்கரன் மனைவியிடம் போதிய அக்கறை காட்டவில்லை என்று டாக்டர் மகாதேவன் மாப்பிள்ளை மீது குறைப்பட்டார். ‘திடீரென்று மயக்கம் போடுவானேன்? எதிர்பாராத அதிர்ச்சிதான் அதற்குக் காரணம்’ என்று வாதித்தார் அவர். பெண்ணை அதைப்பற்றித் தனிமையில் எத்தனையோ தடவைகள் கேட்டும் பார்த்தார், ‘அன்று காலையிலிருந்தே உடம்பு சரியாக இல்லை அப்பா’ என்று அவள் ஏதோ கூறி மழுப்பி விட்டாள். 

சங்கரன் கன்னத்தில் அறைந்த அறை அவள் கன்னத்தை மட்டும் வலிக்கவில்லை. இருதயத்தையும் வலித்தது. கணவன், மனைவியின் பிணைப்பு இன்னும் பலமாக அமைய வேண்டிய சமயத்தில் -நீலா ஒரு குழந்தைக்குத் தா யாக வேண்டிய சமயத்தில் – அந்தப் பிணைப்பு அறுந்து விட்டது. அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த சா தாரணப் பிளவு இப்போது அதலபாதாளமாகி விட்டது. நாட்டுப் பெண்ணை ஒரு தினம் மீனாட்சி அம்மாள் பார்க்கப் போயிருந்தபோது டாக்டர் மகாதேவன் மிகவும் கோபித்துக் கொண்டார். 

“உங்கள் வீட்டில் இருந்தபோது அவளை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை. இங்கே ஓய்வு எடுத்துக் கொள்ள அனுப்பி விட்டுத் தினம், நீங்களும் உங்கள் பிள்ளையும் வந்து தொந்தரவு செய்கிறீர்களே?” என்றார் அவர். 

மாமியாரை வேண்டுமானால் வரவேண்டாம் என்று சொல்லி விடலாம் கணவன் வருவதைக்கூட அவர் ஆட்சேபிக்கிறாரே. கொதித்துப் பொங்கிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள் மீனாட்சி அம்மாள், சங்கரன் வந்ததும் ஆத்திரம் தீர இரைந்தாள். 

“என்னை வேணுமானால் வர வேண்டாம் என்று சொல்லட்டும். உன்னையே வரக் கூடாது என்கிறாரே, உன் மாமனார்! உன் மனைவிக்கு ‘ரெஸ்ட்’ வேண்டுமாம். நீயும் நானும் போய் தொந்தரவு கொடுக்கிறோமாம். நீதான் பார்த்துக் கொண்டிருந்தாயே உன் கண்களால் அவள் இந்த வீட்டில் ஒரு வேலை செய்திருக்கிறாளா? குடும்பத்துக்கு என்ன வேண்டும் வேண்டாம் என்று கவனித்திருக்கிறாளா? பிள்ளைத்தாச்சி நாள் தவறாமல், வேளை சமயமில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் உடம்புக்கு ஆகுமாடா? நீயே சொல்லேன்.” 

“அண்டை அசலில் நம் வீட்டைப் பார்த்துச் சிரிக்கப் போகிறார்கள் அம்மா. இப்படிக் கத்துகிறாயே, நானும் அவர்கள் வீட்டுக்குப் போகவில்லை, நீயும் போக வேண்டாம்!” என்று கூறினான் சங்கரன். 

நீலா ‘நர்ஸிங் ஹோமி’லிருந்து வீடு வருவதற்கு முன்பே சங்கரன் அங்கு போவதை நிறுத்திக் கொண்டு விட்டான். “இருக்கிறது ஒரு குழந்தை. அவள் ஏன் அங்கு போக வேண்டும்? மாப்பிள்ளை தான் நம் வீட்டோடு வந்து இருக்கட்டுமே?” என்று நீலாவின் தாயார் ‘ஷரத்’துப் பேசினாள். இதைப் போய் யாரோ ஒன்றுக்குப் பத்தாக மீனாட்சி அம்மாளிடம் முடிந்து விட்டார்கள். “மாப்பிள்ளை அவர்கள் வீட்டோடு வந்து இருக்க வேண்டுமாம். ஒரு பிள்ளையைத் தான் உயிரோடு பறிகொடுத்து வருஷக் கணக்கில் ஆகிறது. இவனையும் அவர்கள் வீட்டுடன் அனுப்பிவிட வேண்டுமாம். நன்றாக இருக்கிறதோ இல்லையோ நியாயம்?” என்று பொருமினாள் மீனாட்சி. 

சில நாட்களில் நீலா உடம்பு தேறி ஊரெல்லாம் காரில் சுற்றி வந்தாள். ‘உங்கள் நாட்டுப் பெண் கச்சேரிக்கு வந்திருந்தாள் பார்த்தேன்’ என்றும், ‘சினிமாவில் பார்த்தேன்’ என்றும், தெரிந்தவர்கள் மீனாட்சி அம்மாளிடம் வந்து சொன்னார்கள். “ஊரைச் சுற்றத்தெரிகிறதே, இங்கே வருவதற்குத் தெரியவில்லையா அவளுக்கு? பணத்திமிர் அப்படியெல்லாம் ஆடச் சொல்லுகிறது” என்று பிள்ளை யிடம் புகார் செய்தாள் தாயார். 

சங்கரன் எதையுமே காதில் போட்டுக் கொள்கிற தில்லை. நீலா இருந்த வீடும், இல்லாத வீடும் ஒன்றாகத் தான் இருந்தது அவனுக்கு. மனைவி வீட்டில் இருக்கிறாளே, கொஞ்சம் முன்னாடிப் போகலாம் வீட்டுக்கு என்று நினைத்து முன்பு சீக்கிரம் வருவான். இப்பொழுது அவன் நினைத்த போது வீட்டுக்கு வருவது, சாப்பிடுவது என்று ஆகிவிட்டது. கல்யாணம் நடந்து நீலாவுடன் வாழ்க்கை நடத்தியதே சொற்ப காலம். அதுவும் சண்டையும் பூசலுமாகக் கழிந்து விட்டது. கல்யாணம் நடந்ததே ஒரு கனவு போல் தோன்றியது அவனுக்கு. 


இந்தச் சமயத்தில் தான் நீலாவுக்கு வளைகாப்புக்கு முகூர்த்தம் வைத்துக் கொண்டார்கள். ஊரெல்லாம் அழைத்து வெகு அமர்க்களமாகச் செய்தார்கள் அவர்கள். எல்லோருக்கும் அனுப்பிய அழைப்பிதழைச் சம்பந்தி களுக்கும் அனுப்பிவிட்டுப் பேசாமல் இருந்து விட்டார்கள் நீலாவின் பெற்றோர். 

வளைகாப்பு முகூர்த்தத்தன்று காலை வரையில் ருக்மிணியும், மீனாட்சி அம்மாளும் யாராவது அழைக்க வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் வரவில்லை. பதினோரு மணிக்குமேல் நீலா மட்டும் வளை அடுக்கிக் கொண்டு காரில் புக்ககம் வந்தாள். வாசலில் உட்கார்ந்திருந்த மாமனாருக்கு நமஸ்காரம் செய்தாள். உள்ளே வந்ததும் நாத்தனாரும், மாமியாரும் உட்கார்ந் திருந்தார்கள் மாட்டுப் பெண் வந்ததும் விசுக்கென்று மீனாட்சி அம்மாள் எழுந்து நின்றாள். ருக்மிணி முகத்தைத் தோள் பட்டையில் இடித்துக் காட்டி விட்டுப் போய் விட்டாள். ‘எனக்கு ஒன்றும் நமஸ்காரம் பண்ண வேண்டாம்’ என்று கூறி முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மீனாட்சி அம்மாள், நீலா நாத்தனாரை என்றுமே மதிப்பவள் இல்லை. ஆகவே அவளைத் தேடாமல் மாடி அறைக்குச் சென்றாள். 

அன்று சங்கரன், மாமனார் வீட்டிலிருந்து தன்னை அழைக்க யாராவது வருவார்கள் என்று எதிர்பார்த்துக் காரியாலயத்துக்கு விடுமுறை எழுதியிருந்தான். நீலாவிடம் ஏற்பட்ட அன்பினால் அல்ல அது. அவள் வயிற்றில் வளரும் குழந்தை அவனுடையது. அது பிறப்பதற்கு முன்பே தகப்பனால் திரஸ்கரிக்கப்படக் கூடாது என்கிற வாஞ்சை தான் காரணம். 

தயங்கிக் கொண்டே அறையில் நுழைந்த நீலாவை ஏறிட்டுப் பார்த்தான் சங்கரன். புதுப்புடவை உடுத்தி இரண்டு கைகளிலும் கண்ணாடி வளையல்கள் விதவிதமாக அடுக்கிக் கொண்டு வந்திருந்தாள் நீலா. இரண்டு மாதங் களுக்கு அப்புறம் இருவரும் சந்திப்பதால் யார் முதலில் பேசுவது என்று விளங்கவில்லை அவர்களுக்கு நீலாவே தன் பிடிவாதத்தை விட்டு விட்டு, முதலில் பேச. ஆரம்பித்தாள். 

“என்னுடைய முத்து மாலையை இங்கேயே வைத்து விட்டேன், எடுத்துப் போகலாமென்று வந்தேன்” என்றாள் நீலா. 

“ஆஹா! தாராளமாய் எடுத்துப் போயேன். இத்தனை நாட்கள் இந்தப் பக்கம் வரத் தோன்றவில்லை உனக்கு. இன்றைக்காவது வந்தாயே!” என்றான் சங்கரன். 

“நீங்கள்தான் எங்கள் வீட்டிற்கு வருகிறதுதானே?” என்று நிஷ்டூரமாகக் கேட்டாள் நீலா. 

சங்கரனுக்கு மனத்துக்குள் குமுறிக் கொண்டிருந்த கோபம் குபீரென்று கிளம்பியது. நாற்காலியை வேகமாகப் பின்னால் தள்ளி விட்டு எழுந்தான். 

“உன் வீட்டுக்கு நான் வருகிறதா? என்னை வர வேண்டாமென்று உன் அப்பாதான் தடை உத்தரவு போட்டு விட்டாரே? தேவியின் உடம்பு கெட்டுப் போகும் என்று சொன்னாராமே! என் பேரில் அன்பிருந்தால் நீ அப்பாவிடம் மறுத்துப் பேசி இருக்க மாட்டாயா?” 

நீலா விழிகளில் நீர்த்திரையிட அவனை ஏறிட்டுப் பார்த்தாள். “உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று இருந்தால் கட்டாயம் வந்திருப்பீர்கள்.” 

சங்கரனின் கோபம் உச்ச நிலையை அடைந்தது. “இதோ பார் நீலா! நான் கைப்பிடித்து மணந்த மனைவி நீ கடமை உணர்ச்சி என்பதை நான் மறந்து விடவில்லை. என்னை விட்டுப் போய்விடவில்லை. ஆனால், அகம்பாவம் பிடித்த உன் பெற்றோருக்கு நான் ‘சலாம்’ போட வேண்டுமா? என்னுடன் வாழவேண்டும் என்கிற ஆசை என்ன? இருந்தால் இனிமேல் நீ அங்கே போகக் கூடாது நான் சொல்லுவது புரிகிறதா?” என்று உரக்கக் கேட்டான் சங்கரன். 

அன்று அவள் வீட்டில் ஊரில் தெரிந்தவர்கள் அவ்வளவு பேரும் கூடி இருந்தார்கள். வளைகாப்பு செய்து கொண்ட பெண் “மாமியார் வீடு சென்றவள் திரும்பி பிறந்த வீட்டுக்கு வரவில்லை” என்று நாலு பேர் பேசிச் சிரிப்பார்கள். ஏற்கெனவே ஊரில் இதைப் பற்றிக் கசமசவென்று பேச்சு நடந்து கொண்டிருந்தது. 

“என்னைத் தடுப்பதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? ஒரு நாட்டுப் பெண்ணை வேலைக்காரி மாதிரி நடத்தும் வீட்டில் இன்னொருத்தி அதைவிடக் கேவலமாகத் தான் நடத்தப்படுவாள். உங்கள் அக்காவுக்கு மட்டும்
ன்றும் இந்த வீடு ஏகபோக உரிமை. உரிமையுடன் வாழ வந்தவர்கள் மட்டும் அடிமை போல இருக்க வேண்டும்!” நீலா படபடப்புடன் பேசி முடித்ததும் சங்கரனுக்குக் கோபம் அதிகமாயிற்று. 

“என்னடி சட்டம் பேசுகிறாயே? உன் அப்பா டாக்டர் என்றுதான் நினைத்திருந்தேன். உனக்குச் சட்டமெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறாரா அவர்?” என்று கூறி அவள் கைகளைப் பலமாகப் பிடித்துக் கையை ஓங்கினான் சங்கரன், சுபமாக. அழகின் அறிகுறியாகக் கை நிறைய அடுக்கி இருந்த பல ரக வளைகள் ‘சிக்’கென்று உடைந்து கீழே சிதறின. 

வயிறும் குழந்தையுமாக வந்த பெண்ணை வெறும் வயிற்றுடன் அனுப்பக் கூடாதென்று சமையற்கார மாமி கூறவே, சம்பகம் நீலாவின் அலட்சியத்தைப் பொருட் படுத்தாமல் அவளை அழைத்து வர மாடிக்குப் போனாள். அங்கே உடைந்து சிதறிய வளைகளின் நடுவில் மாலை மாலையாகக் கண்ணீர் உகுத்துக் கொண்டு நிற்கும் நீலாவைப் பார்த்ததும் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. 

அழுகையை நிறுத்தி விட்டு நீலா அசட்டையாகக் கணவனைப் பார்த்தாள். பிறகு வேறொன்றும் பேசாமல் மாடிப்படிகளில் விடுவிடு என்று இறங்கித் தெருவில் காத்துக்கொண்டிருந்த காரில் போய் ஏறிக் கொண்டாள். வாசல் வராந்தாவில் உட்கார்ந்திருந்த சர்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை புழுதியைக் கிளப்பிக் கொண்டு செல்லும். காரைப் பார்த்தார். வெறிச்சென்று கிடந்த மாடியைப் பார்த்துவிட்டுப் பெருமூச்செறிந்தார் அவர். 


சாதாரணமாக இருந்த மனஸ்தபாம் முற்றிப் போய் விட்டது. ‘வயிற்றில் வளரும் குழந்தைக்கு க்ஷேமமாக வளைகாப்பு செய்தால் வளையல்களை நொறுக்கியா அனுப்புவார்கள்?’ என்று ஊரார் பேசிக் கொண்டார்கள் ‘மீனாட்சியிடத்தில் பெண் வாழ்ந்த மாதிரிதான் என்று எனக்கு அப்பவே தெரியுமே’என்று டாக்டரின் உறவினர்கள். அவரை ஏசிக் காட்டினர். ‘என்ன உயர்வான இடம் என்று கொண்டு போய்க் கொடுத்தீர்களோ? உங்களுக்கு இருக்கும் சொத்தில் மூன்றில் ஒரு பாகம் காணாது’ என்றெல்லாம் பேசினார். 

“இனிமேல் என் பெண் அவர்கள் வீட்டு வாசற்படியை மிதிக்க மாட்டாள். குழந்தையும், மனைவியும் வேண்டு மானால் என் வீட்டுக்கு அவன்தான் வரவேண்டும்” என்று டாக்டர் மகாதேவன் சொன்னார். ஒரு தினம் காரை அனுப்பி சர்மாவுக்குக் கோபமாக ஒரு கடிதமும் எழுதி அனுப்பினார். ஆயிரக்கணக்கில் மதிப்புப் பெறும் வெள்ளி, பித்தளை பாத்திரங்களையும், நகை, புடவைகளையும் உடனே அனுப்பிவிட வேண்டும் என்று அதில் கண்டிருந்தது. 

“அகமுடையானுடைய உறவே வேண்டாமா அவளுக்கு? குழந்தையைப் பற்றி பாத்யதை நமக்கும் உண்டு, தெரியுமா” என்று மீனாட்சி பேசினாள். 

“பிறப்பதற்கு முன்பு அதைப்பற்றிப் பேசுவானேன்? அவர்கள் வீட்டு சாமான்களை அனுப்பிவிடலாம். திரும்பவும் அவளே இங்கு வந்தால் கொண்டு வரட்டும். இல்லை. உன் பிள்ளை அங்கு போனால் இருவரும் வைத்துக் கொள் கிறார்கள். நமக்கு 

நமக்கு இதெல்லாம் எதற்கடி பைத்தியமே நாட்டுப் பெண் சீர் கொண்டு வந்தால் அவள் வைத்துக் கொண்டு ஆளப் போகிறாள். இல்லாவிட்டால் இல்லை. உனக்கும் எனக்கும் என்ன வந்தது, சொல் பார்க்கலாம்?” என்றார் சர்மா. 

கல்யாணச் சீர் வரிசைகளை ஒரு அறை முழுவதும் பரத்தி ஊராருக்குக் காட்டித் தம்பட்டம் அடித்தவள் ஆயிற்றே, மீனாட்சி அம்மாள்! அதனால் புருஷன் யோசனையை ஏற்காமல் எதோ பேசினாள். உடனே சர்மா, ”சீ, சீ, புத்திகெட்டவளே′. கோர்ட்டுக்குப் போய் நிற்பது நீயா, நானா? அவர்கள் வீட்டுத் தூசி கூட இங்கே இருக்கக் கூடாது தெரியுமா?” என்று பெரிதாக இரைந்தார். பண மில்லை என்று காமுவை ஒதுக்கினோமே, ராமபத்திரன் இப்படி கௌரவக் குறைவாக நடந்து கொள்வானா? காமுதான் இப்படி இருப்பாளா?’ என்று அவர் நினைத்தார். 

இரண்டு, மூன்று தடவைகளாக கார் வந்து சாமான் களை எடுத்துப் போயிற்று. “இதெல்லாம் என்,னங்க எஜமான். பெண்டாட்டி புருசனுக்கு விட்டுப் போவுங் களா? நீலா அம்மா எப்பவுமே இப்படித்தாங்க. புருசப் பிள்ளை மாதிரி வளர்ந்திடுச்சு. இப்ப புருசனுக்கே அடங்க மாட்டேங்குது” என்று டிரைவர் அழமாட்டாத குறையாகச் சர்மாவிடம் கூறி வருந்தினான். 


இந்த விஷயங்கள் அறைகுறையாக ராமபத்திர அய்யர் காதுகளில் விழுந்தன. ‘காட்டு மிராண்டிகள்’ என்று ஒரு ஜாதியாரை ஒதுக்கி வைத்திருக்கிறார்களே, அவர்கள் கூட இப்படிக் கேவலமாக சண்டை பிடித்துக்கொள்வதாகக் கேட்டதில்லை. ஊரறிய நாடறிய தடபுடலாகக் கல்யாணம் செய்து, வரவேற்பும், டின்னரும், சங்கீதக் கச்சேரியும் அமர்க்களப் படுத்துவது? பிறகு ‘நான் நீ’ என்று சண்டை போட்டுக் கொண்டு கோர்ட்டுக்குப் போவது? இது ஒரு நாகரிகமாக இருக்கிறது இந்தக் காலத்தில்! ஒன்றிரண்டு தடவைகள் சர்மா ராமபத்திர அய்யரைப் பார்க்க வந்த போது அவர் தம் குடும்பத்தின் அவலமான நிலைமையைக் கூறி வருந்தினார். 

“முதலிலேயே சொன்னேன் அப்பா. நமக்கு அவ்வளவு பெரிய இடத்துச் சம்பந்தம் வேண்டாம் என்று. மீனாட்சி கேட்கவில்லை” என்று வருந்தினார் சர்மா. 

“நடந்ததை இனிமேல் மாற்ற முடியாது அப்பா, சங்கரனையாவது அங்கு போய் இருக்கச் சொல்லேன்” என்றார் ராமபத்திர அய்யர். 

“எப்படியாவது போகிறார்கள் போ. நான் பாட்டுக்கு சம்பகத்தை அழைத்துக்கொண்டு யாத்திரை போய் விட்டு வரலாமென்று இருக்கிறேன். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வழி. யாருக்கு என்று நான் புத்தி சொல்வது?” என்று அலுத்துக் கொண்டார் சர்மா. 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பள்ளிக்கூடத் திலிருந்து காமு வந்தாள். சர்மா அப்பாவிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்புகிறதைப் பார்த்து உள்ளே சென்று, நீலாவின் ரவிக்கை துணிகளை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள். 

“இதெல்லாம் என்ன அம்மா?” என்று கேட்டார் சர்மா. 

“உங்கள் நாட்டுப் பெண்ணிடம் கொடுத்து விடுங்கள் மாமா! பரீட்சை சமயமாக இருக்கிறது, தைக்க முடிய வில்லை. என்னை மன்னித்துக் கொள்ளச் சொல்லுங்கள்” என்று வினயமாகக் கேட்டுக் கொண்டாள் காமு. 

“இந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது. நீயே அவைகளைக் கொண்டு வந்து சங்கரனிடம் கொடுத்து விடு. நீலா பிறந்த வீட்டுக்குப் போய் நாலைந்து மாசங்கள் ஆகின்றன. அவள் நம் வீட்டுக்கே வருகிறதில்லை” என்று பதில் கூறிவிட்டு சர்மா புறப்பட்டார். அவர் சென்ற பிறகு தகப்பனாருக்குக் காபி கொடுத்துக்கொண்டே, “நீலா வீட்டாருக்கும், சர்மா வீட்டினருக்கும் ஏதோ சண்டையாமே? மாமா ஒன்றும் சொல்லவில்லையா உங்களிடம்?” என்று கேட்டாள் காமு. 

“சர்மா சொல்லித்தான் எனக்குத் தெரிய வேண்டுமா அம்மா? அதுதான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறதே? பைத்தியக்காரப் பையன்? இந்த வைராக்கியத்தோடு அப்போதே உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொண் டிருந்தால் மற்ற சச்சரவுகள் எப்படி இருந்தாலும் அவன் வரைக்கும் சந்தோஷமாக இருந்திருப்பானோ இல்லையோ? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நடுங்கிக் கொண்டு தலையை ஆட்டி விட்டுப் பேசாமல் இருந்தான். இப்பொழுது அவஸ்தைப்படுகிறான். படித்து விட்டால் மட்டும் போதுமா அம்மா? எது நல்லது எது கெட்டது என்று பகுத்தறியும் சக்தி வேண்டாமா?” என்று சங்கரன் மீது இவ்வளவு காலம் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை யெல்லாம் கொட்டித் தீர்த்தார் ராமபத்திர அய்யர். 

“நீலா பிறந்த வீட்டிலேயே இந்தால் சங்கரன் என்ன பண்ணுவார் அப்பா?” என்று குழந்தையைப் போல் கேட்டாள் காமு. 

”குழந்தையைப் பற்றி எனக்கும் பாத்யதை உண்டு. அதனால் மனைவி என்னுடன் குழந்தையோடு வந்து வாழ்க்கை நடத்த வேண்டும்’ என்று கோர்ட்டில் கேஸ் போடுவான். அவள் படித்தவளாயிற்றே, அதற்கு சும்மா இருப்பாளா? பணம் தான் இறக்கை முளைத்துக்கிடக்கிறது. செலவு வேண்டுமே அதற்கு? அனாவசியமாக மனைவியை அடித்துத் துன்புறுத்துகிறார் என்று அவள் கோர்ட்டில் வாதிப்பாள். நீதிபதி எவ்விதம் தீர்ப்புக் கூறுகிறாரோ அப்படி நடந்து கொள்வார்கள். ஆனால், அப்புறம் மாத்திரம் ஒற்றுமையாக இருந்து விடுவார்களா என்ன? நீதி ஸ்தலமும், நீதிபதிகளும் மனிதர்களை ஒரு கட்டுப் பாட்டுக்குள் அடங்கி இருப்பதற்கு ஏற்படுத்தப்பட்டிருக் கிறார்களே தவிர, மனிதர்களின் மனத்தைத் திருத்தி விடுவார்கள் என்று சொல்ல முடியுமா, காமு? கணவன், குடும்பம் என்று அன்புடன் இல்லறத்தை நடத்த மனைவிக்கு ஆசையும், பக்தியும் வேண்டும். மனைவி என்று காதல் செலுத்தக் கணவனுக்கு உயர்ந்த மனம் வேண்டும். இரண்டும் பொருந்தியிருந்தால் மூன்றாவது மனிதர்களுக்கு அங்கு என்ன வேலை இருக்கிறது சொல், பார்க்கலாம்!” 

“நானும், உன் அம்மாவும் எத்தனையோ தடவைகள் சண்டை பிடித்திருக்கிறோம். உன் அம்மா என் பேரில் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்திருக்கிறாள். நான் அவள் பேரில் கோபித்துக் கொண்டு சாதத்தை வீசி எறிந்து விட்டுப் பட்டினியாக வயலுக்குப் போய் இருக்கிறேன். அவள் கோபம் தணிந்து தயிர் சாதத்தைப் பிசைந்து எடுத்துக் கொண்டு வெயிலையும் லட்சியம் பண்ணாமல் என்னைத் தேடிக் கொண்டு வருவாளே! இன்னொருத்தருக்கு எங்கள் சண்டையைப் பற்றித் தெரியுமா?” 

ராமபத்திர அய்யர் தம் பால்ய வாழ்க்கையையும், விசாலாட்சியையும் நினைத்து வருந்தினார். வயதாகி ஒளி குறைந்த அவர் கண்களிலிருந்து நீர் வடிந்தது. பெற்ற பெண் எவ்வளவு தான் ஆசையுடனும், அருமையுடனும் தகப்பனாரைக் கவனித்துக் கொண்டாலும் மனைவி இல்லாத குறையை அவரால் மறக்க முடியவில்லை. 

காமு மிகவும் கவனமாகத் தகப்பனார் சொல்லி வந்தவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர் அம்மாவைப் பற்றி நினைத்து வருந்தும் போது அவளுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. ராமபத்திர அய்யரும் சிறிது நேரம் காமுவையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் ஏதோ நினைத்துக் கொண்டவர்போல், “காமு! அம்மா உனக்குக் கல்யாணம் ஆகவில்லையே என்று நினைத்து ஏங்கி இறந்து போனாள். உன் அம்மா சாகிற வரைக்கும் எனக்குக் கொஞ்சங்கூட உன்னைப் பற்றிக் கவலை ஏற்படவில்லை. வீட்டு மூலையில் வியாதிக்காரியாக அவள் படுத்திருந்தாலும் பெரிய துணை ஒன்று இருக்கிறது என்று இருந்தேன். அவள் போன பிறகு உன்னைப் பற்றிய கவலை மனத்தைச் சதா அரித்துக் கொண்டே இருக்கிறது. உன் கூடப் பிறந்த சகோதரிகளுக்கு அவர்கள் குடும்பம்தான் பெரிதே ஒழிய உன்னை அவர்கள் கவனிக்கப் போகிறார்களா? சீக்கிரத்தில் உனக்குக் கல்யாணம் பண்ணிவிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். பழைய விஷயங்களையே மனசில் வைத்துக் கொண்டு நீ பிடிவாதம் பிடிக்கக் கூடாது. என்ன, தெரியுமா?” என்று சுவாதீனமாகவும், கண்டிப்பாகவும் கூறினார் அவர்.

– தொடரும்…

– ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது.

– பனித்துளி (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1996, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email
சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *