(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 | அத்தியாயம்-12
11 – நீலாவின் மனக்கசப்பு
வருஷப் பிறப்பிற்கு ‘அடுத்த நாள் மத்தியானம் சம்பகம் பகல் சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு, வாசல் அறையில் உட்கார்ந்திருக்கும் சர்மாவின் எதிரில் வைத்து விட்டுத் திரும்பினாள். உற்சாகம் இல்லாமல் களை இழந்து வாடிப்போய் இருக்கும் அவள் முகத்தைச் சிறிது நேரம் கவனித்து விட்டு சர்மா, “ஏனம்மா! நேற்று நீ மட்டும் ஏன் புதுப்புடவை உடுத்திக் கொள்ளவில்லை? உன் மனசிலே சந்தோஷம் இல்லை என்பது எனக்குத் தெரியும். உன் புருஷன் குணத்தோடு இருப்பான், உன்னை ஆசையுடன் வைத்துக் கொள்வான் என்று நம்பியே அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தேன். வெளிநாடுகளுக்குப் போகிறவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட வேண்டும் என்று எல்லோரும் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்டுதான் அதன்படி செய்தேன். அவன் இப்படி இருப்பான்; ஒரு பெண்ணின் இதயம் வேதனையால் குமுறப் போகிறது என்றெல்லாம் என் அறிவுக்கு அப்பொழுது எட்ட வில்லை” என்று அவளை நிற்க வைத்துப் பேசினார்.
சம்பகம் தலைகுனிந்து கொண்டே நின்றிருந்தாள். முத்துக்கள் போல் கண்ணீர் அவள் கண்களிலிருந்து பெருகிக் கீழே விழுந்தது. அன்பு உள்ளமும், பரந்த நோக்கமும் கொண்ட சர்மாவினால் அவள் அழுவதைப் பொறுக்க முடியவில்லை. அவர் கண்களிலும் நீர் நிறைந்து விட்டது
அவர் அன்புடன், “சமபகம்! இந்த வீட்டில் புகுந்த உனக்கு எந்தவிதமான குறையையும் நான் வைக்க மாட்டேன். நான் பணத்தாலும்காசாலும் எத்தனை செய்தும் என்ன அம்மா பிரயோசனம்? அவைகளினால் உன் மனசுக்கு ஏதாவது ஆறு தல் கிடைக்கப் போகிறதா? ஐந்தாறு வருஷங்கள் பொறுமையுடன் இருந்து விட்டாய். இன்னும் சிறிதுகாலம் பொறுத்துப் பார்ப்போம்” என்றார். பிறகு எதையோ நினைத்துக் கொண்டவராக, “சங்கரன் வாங்கி வந்த புடவையை உடுத்திக் கொள் அம்மா. எனக்காகவாவது நீ சந்தோஷத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு சிற்றுண்டியைச் சாப்பிட ஆரம்பித்தார்.
அங்கிருந்து உள்ளே வந்த சம்பகம் தன் அறைக்குள் சென்று சங்கரன் வாங்கி வந்த அந்த நூல் புடவையை எடுத்து மஞ்சள் தடவி உடுத்திக் கொண்டாள். அவள், சிவந்த மேனிக்கு அந்தப் புடவை எடுப்பாக இருந்தது. நேராக அவள் சர்மாவின் அறைக்குச் சென்று அவரை நமஸ்கரித்தாள். சர்மாவுக்கு அவளுடைய அடக்கமும் பணிவும் ஆனந்தத்தைக் கொடுத்தன.
பண்டிகை தினத்தை விட்டுத் திடீரென்று இன்று புதுப் புடவை சலசலக்க நடந்து வரும். சம்பகத்தை ருக்மிE அதிசயத்துடன் பார்த்தாள். அவள் தன் நெற்றியைச் சுளித்துக் கொண்டு முகத்தில் ஆச்சரியம் ததுப்ப இந்த அதிசயத்தைக் கண் கொட்டாமல் பார்த்தாள். அவள் வாரம் ஒரு புதுப் புடவை வாங்குவதெல்லாம் அதிசய மில்லை. நீலா ஒரு நாளைக்கு மூன்று முறைகள் உடை மாற்றுவதும் அந்த வீட்டில் அதிசயமில்லை. பழைய புடவையுடன் நிற்கும் சம்பகம் அபூர்வமாகப் புதுப் புடவை உடுத்திக் கொண்டு நிற்பது தான் அவளுக்கு அதிசயமாக இருந்தது!
சம்பகம் சமையலறைப் பக்கம் தன் மாமியாரைத் தேடிப் போனாள். மாமனாருக்கு மட்டும் நமஸ்காரம் செய்து விட்டு இருந்துவிட முடியுமா? சமையலறையில் மீனாட்சி அம்மாள் இல்லை. புதுப் புடவையுடன் வரும் சம்பகத்தைப் பார்த்துச் சமையற்கார மாமி புன்சிரிப்புடன் தலையை ஆட்டினாள்.
“என்னடி! இன்றைக்குத் திடீரென்று உனக்கு மனசில் மாறுதல் ஏற்பட்டு விட்டது? நேற்று என்னால் ஆனவரைக்கும் உன்னைப் புதுப் புடவையைக் கட்டிக் கொள்ளச் சொன்னேன். மாட்டேன் என்று விட்டாயே?” என்று அதிசயித்தாள் அந்த அம்மாள்.
“இன்றைக்கு மட்டும் என்ன மாமி? என் மாமனார்தான் நான் இப்படி இருப்பதற்கு வருத்தப்பட்டுக் கொள்கிறார். பெரியவர் சொல்லும்போது கேட்காமல் இருக்கலாமா என்றுதான் புதுப் புடவையைக் கட்டிக் கொண்டேன்.
“உன்னுடைய பொறுமைக்கும். நிதானத்துக்கும் பகவான் உன்னைக் கைவிட மாட்டார், சம்பகம்! பாரேன், சீக்கிரத்திலேயே உன் ஆத்துக்காரர் உன்னைத் தேடிக் கொண்டு ஓடோடியும் வரப் போகிறார். ‘சம்பகா! நான் தெரியாமல் அந்த மாதிரி யெல்லாம் செய்து விட்டேன்’ என்று உன்னிடம் சொல்லப் போகிறார். பார்த்துக் கொண்டே இரு” என்று (அந்தரங்கமான அன்புடன் அந்த அம்மாள் பேசிக் கொண்டே போனாள்.
சம்பகம் ஒரு கணம் யேர்சனையில் ஆழ்ந்தாள். என்றைக்காவது ஒரு நாள் அவள் கணவன் வந்து அவளை அரவணைத்து ஆதரவுடன் இல்லறம் நடத்துவான் என்பது அவளுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. “அவர் எப்படி யெல்லாம் நடந்துகொள்வாரோ? எப்படியெல்லாம் மாறிப் போய் இருப்பாரோ? அவள்?…கடல் கடந்த அந்த நாட்டில் அவருக்குப் போட்டியாக முளைத்த அந்தப் பெண்ணும் அவருடன் வருவாளோ? வரட்டுமே. வந்தால் என்னுடன் இருந்துவிட்டுப் போகிறாள்” என்றெல்லாம் நினைத்துக் கொண்டு சம்பகம் மெய்ம்மறந்த நிலையில் இருந்த போது கூடத்தில் பலமான பேச்சுக் குரல் கேட்டது.
கூடத்தில் இருந்த ஒரு விசாலமான அறையில் மீனாட்சி அம்மாள் இரும்புப் பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு நகைகளையும், புடவைகளையும் ஒழுங்குபடுத்தி வைத்துக் கொண்டிருந்தாள். சம்பகம் சமையலறைக்குள் சென் றதும் ருக்மிணி பரபரவென்று அங்கே வந்தாள். வந்தவள் உரத்த குரலில், “இந்த வீட்டிலே நடக்கிற அதிசயங்கள் ஒன்றா இரண்டா? உனக்கும், எனக்கும் இல்லாத கரிசனம் அப்பாவுக்குத் தன் மூத்த நாட்டுப் பெண்ணிடத்தில் பொங்கி வழிகிறது போ!” என்று அலட்சியத்துடன் கூறி, கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு நின்றாள்.
மீனாட்சி அம்மாளுக்கு அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதே புரியவில்லை.
“நேற்று பூராவும் புதுப் புடவையை உடுத்திக் கொள்ளாதவள் இன்று புதுசைக் கட்டிக்கொண்டு மாமனாருக்கு நமஸ்காரமும் பண்ணி விட்டு வருகிறாள்! நேற்று நாமெல்லாம் கட்டிக் கொண்டபோதே இவளும் புடவையைக் கட்டிக் கொள்வது தானே? ஆனாலும், இப்படி ஒரு வயிற்றெரிச்சலும், பொறாமையும் வேண்டாம’” என்றாள் ருக்மிணி.
பெண்ணுக்கு தாயார் பதில் கூறுவதற்குள் சர்மா அந்த அறையின் வாசற்படி அருகில் வந்து நின்றார். பிறகு சற்றுக் கண்டிப்பான குரலில், “என்ன இது, ருக்மிE! வீடே அதிர்ந்து போகிற மாதிரி இந்த விஷயத்தைப் பிரமாதப் படுத்துகிறாய்? பிரமாதப்படுத்த வேண்டிய விஷயங்களை மென்று விழுங்கி மறைத்து விடுகிறீர்கள். ஒன்றும் இல்லாததைப் பெரிதாக்கிப் பேசுவதே உங்களுக்கு வழக்க மாகிவிட்டது. நான்தான் சம்பகத்தைப் புதுப் புடவையைக் கட்டிக் கொள்ளச் சொன்னேன்!” என்று கூறிவிட்டு, அங்கிருந்து வெளியே போய்விட்டார்.
வீட்டை விட்டு சர்மா வெளியில் சென்று விட்டார் என்று தெரிந்ததும். ருக்மிணியின் ஆத்திரம் அளவு கடந்து போயிற்று. கோபத்தால் முகம் சிவக்க அவள், “உனக்கும் தான் வயசாகிறது அம்மா. எங்களுக்கெல்லாம் புடவை வாங்கும்போதே மன்னிக்கும் வாங்கி விட்டுப் போகிறது’ தானே? அவளுக்காக சங்கரன் ‘ஸபெஷ’லாக வாங்கிவர வேண்டுமா என்ன? நமக்கெல்லாம் இல்லாத அக்கறை இவனுக்கு என்னவாம்? தூ! கொஞ்சங்கூட இதெல்லாம் நன்றாகவே இல்லை நாலு பேர் காதில் விழுந்தால் நம்மைப் பார்த்துத்தான் சிரிப்பார்கள்” என்றாள்.
சமையலறையில் நின்றிருந்த சம்பகத்தின் உடம்பில் அந்தப் புடவை முட்களாகக் குத்துவதைப் போன்ற உணர்ச்சியை உண்டாக்கியது. வெறுப்புடன் அவள் தன்னையே ஒருமுறை பார்த்துக் கொண்டாள். மனத்தில் எழும் வெறுப்பையும், துக்கத்தையும் எப்படியாவது அடக்கிச் சகித்துக் கொள்ள வேண்டும் என்று அவள் முயன்று கொண்டிருந்த போது, மீனாட்சி அ மாள் கணீரென்ற குரலில் பேசினாள்.
“இதெல்லாம் உன் அப்பா கொடுக்கிற இடம். சங்கரன் தான் புடவை வாங்கி வந்தான் என்றால் அதை இவள் ஏன் எடுத்து உடுத்திக் கொள்ள வேண்டுமாம்?'”
“அதற்குத்தான் சொல்கிறேன்! நம் வீட்டை பார்த்து நாலு பேர் சிரிக்கப் போகிறார்கள், பாரேன்! இன்னும் என்னவெல்லாம் நடக்கபோகிறதோ?” என்றாள் ருக்மிணி ஏளனம் தொனிக்கும் குரலில்.
இதுவரையில் மாடியில் இருந்தபடி கீழே நடக்கும் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்த நீலா, வேகமாக மாடிப்படிகளில் இறங்கி வந்தாள். வந்தவள் தைரியமாகத் தன் நாத்தியின் எதிரில் போய் நின்று, “இதெல்லாம் ஒரு அதிசயமா என்ன இந்த வீட்டில்? நான் தனியாகச் சினிமா விற்குப் போகிறதும், கண்காட்சிக்குப் போகிறதும் தான் உங்களுக்கெல்லாம் அதிசயமாக இருந்தது! அதை விடப் பெரிய அதிசயங்களை நான் கவனித்து வருகிறேனே ! நிலாவிலே உட்கார்ந்து மைத்துனனிடம் ரகசியம் பேசுவதும், கட்டிய மனைவி இருக்கும் போது மன்னியைத் தேடிப் போய் தண்ணீர் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு வருவதும் பெரிய அதிசயங்கள் தானே? படித்தவள் நான், ‘ப்ளெயினாக இருந்தால் உங்களுக்குப் பிடிக்கவில்லை!” என்றாள்.
சமையலறையில் நின்றிருந்த சம்பகத்தின் உள்ளத்திலே இந்தச் சொல்லம்புகள் சுருக்கென்று தைத்தன. அவள் செயல் இழந்து நின்ற சமயம், அப்பொழுதுதான் பள்ளிக் கூடத்திலிருந்து வந்த பானு, கண்ணீர் வழியும் தாயின் முகத்தைப் பார்த்துப் பிரமை பிடித்தவள் போல் அருகில் வந்து நின்றாள்.
“அம்மா! அம்மா!” என்று பல முறைகள் கூப்பிட்டுத் தன் சின்னஞ்சிறு கைகளால் தாயின் கைகளைப் பிடித்து உலுக்கினாள் பானு. சம்பகம் தன் சுய நினைவை அடைந்தவள் போல் திடுக்கிட்டாள். அடுத்து சரசரவென்று காரியங்கள் நடைபெற்றன. தன் பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் அந்தப் புடவை அவள் கண்களுக்கு விஷசர்ப்பம் போல் காட்சி அளித்தது.
“தூ சனியன்!” என்று சொல்லிக் கொண்டே அதைத் தூர எறிந்து விட்டு, எப்பொழுதும்போல அவளுடைய பழைய புடவையை எடுத்து உடுத்திக்கொண்டாள் சம்பகம். அப்புறமும் அவளுக்கு அந்த வீட்டில் இருக்க மனம் ஒப்ப வில்லை. கையில் கிடைத்த இரண்டு புடவைகளை எடுத்து ஒரு பையில் திணித்துக் கொண்டு, தன்னுடைய ஒரே ஆதாரமான பானுவைக் கையைப் பிடித்து அழைத்தவாறு சம்பகம் வாசல் ‘கேட்’டை நோக்கிச் சென்றாள்.
“எங்கே போகிறோம், யாருடைய ஆதரவை நாடிப் போகிறோம்? யார் ஆதரவுடனும், அன்புடனும் தன்னைப் பராமரிக்கப் போகிறார்கள்?” என்றெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை.
சம்பகம் ‘கேட்’டைத் தாண்டுவதற்குள் சங்கரன் காரியாலயத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவன் அவள் எதிரில் வந்தான். அளவுக்கு மீறிய துக்கத்தினால் பெருகும் கண்ணீருடன் ‘கேட்’ அருகில் நிற்கும் சம்பகத்தைப் பார்த்ததும் அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“சித்தப்பா!” என்று ஆசையுடன் அழைத்தவாறு பானு ஓடிப்போய் அவனைச் சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.
“என்னம்மா, கண்ணு! மன்னி! நீங்கள் எங்கே போகிறீர்கள்? இதெல்லாம் என்ன, மன்னி?” என்று கேட்டான் அவன்.
சம்பகம் மௌனமாகவே நின்றாள். இதற்குள் சம்பகத்தைக் காணோமே என்று தேடிக்கொண்டு வந்த சமையல்கார மாமி அங்கு வந்து சேர்ந்தாள்.
“சம்பகம்! இதெல்லாம் என்ன அம்மா? உன் கஷ்டங் களுக்கு விடிவு ஏற்பட்டு விட்டது என்று சற்று முன் நான் சொல்ல வில்லையா? அளவுக்கு மீறிய சோதனைக்கு நீ ஆளாகி விட்டாய். இனிமேல் இந்த மாதிரி அபவாதத்தைக் கேட்ட பிறகு-உனக்கு வேறு கஷ்டம் ஒன்றும் வராது. உள்ளே வா. இந்த வீட்டில் உன்னிடம் அக்கறை காட்டும் உன் மாமனாரை மறந்து அவர் உத்தரவு இல்லாமல் நீ எங்கேயும் போகக்கூடாது. வா அம்மா!” என்று அவள் கைகளைப் பற்றி உள்ளே அழைத்துப் போனாள்.
சங்கரன் காரியாலயத்திலிருந்து வீட்டுக்கு வரும் முன் அன்று தன் மாமனார் வீட்டுக்குப் போயிருந்தான். அவனுக்கு அங்கு வரவேற்பும், உபசாரங்களும் பலமாக நடைபெற்றன. டாக்டர் மகாதேவன் அவன் காரியாலய சம்பந்தமான பல விஷயங்களைப்பற்றி அவனை விசாரித்தார். நீலாவுடன் அவன் தங்கள் வீட்டிலேயே வந்து இருந்து விடலாம் என்றெல்லாம் கூறினார். அவருடைய இந்தப் பேச்சுக்களும், உபசாரங்களும் அவனுடைய மனத்தில் எந்தவிதமான உணர்ச்சியையும் ஏற்படுத்த வில்லை. அவன் கிளம்புவதற்கு முன்பு அவர் கூறிய விஷயம் அவனைத் திடுக்கிட வைத்து விட்டது.
“குழந்தைக்கு வளைகாப்பு செய்ய வேண்டுமாம். அதோடு அவள் உடம்பும் கொஞ்சம் பலவீனமாக இருப்ப தாகத் தெரிகிறது. நல்ல நாள் பார்த்து அழைத்து வர வேண்டும் என்று அவள் தாயார் சொல்லிக் கொண்டிருக் கிறாள்” என்று டாக்டர் மகாதேவன் தன் மாப்பிள்ளையிடம் கூறினார்.
“இன்னும் இரண்டு நாட்களுக்கு அப்புறம் நல்ல நாள் பார்த்திருக்கிறது. வந்து அவளை அழைத்து வருகிறோம். உங்கள் தாயாரிடம் சொல்லி விடுங்கள்” என்று நீலாவின் அம்மா மாப்பிள்ளையிடம் சொன்னாள்.
“நீலாவுக்கும், தனக்கும் எவ்வளவு தான் மனக் கசப்பு இருந்தாலும், இனிமேல் அவைகளைக் குறைத்துக் கொண்டு தான் ஆகவேண்டும். தாம்பத்ய உறவு பலமாக அமையவே இம்மாதிரி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது போலும்” என்றெல்லாம் சங்கரன் நினைத்துக் கொண்டான்.
வீட்டுக்கு வந்ததும் நீலாவைத் தனிமையில் சந்தித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானத்துடன் வந்தான். ஆனால், அதற்கு நேர்மாறாக விஷயங்கள் வீட்டில் நடைபெற்றன.
எப்பொழுதும் துக்கத்தைக் கண்ணீராக வடிக்கும் மன்னி சம்பகம் அன்று வீட்டை விட்டு எங்காவது போய்த் தன் துயரத்துக்கு ஒரு முடிவு தேடிக் கொள்ளலாம் என்று கிளம்பி வாசல் வரைக்கும் வந்து விட்டாள். அவன் சிறிது தாமதித்து வந்திருந்தால் அந்த வீட்டில் அன்று என்னென்ன விபரீதங்கள் எல்லாம் நேர்ந்திருக்குமோ?
சம்பகம் ஏன் வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும்? அப்படி வீட்டில் என்ன தான் நடந்து விட்டது என்று சங்கரன் தீவிரமாக யோசித்துப் பார்த்தான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் கூடத்தில் சென்று உட்கார்ந்தவுடன் வழக்கம் போல் சமையற்கார அம்மாள் சிற்றுண்டியும், காபியும் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனாள்.
ஒரு வேலையும் இல்லாமலேயே வீட்டைச் சுற்றிவரும் ருக்மிணியைக் காணவில்லை. மீனாட்சி அம்மாளின் பேச்சுக் குரல் வழக்கத்துக்கு விரோதமாக மிகவும் சாந்தமாகச் சமையலறையிலிருந்து கேட்டது.
சம்பகம் சுவாமி விளக்கை ஏற்றிவிட்டு ஏதோ ஒரு புஸ்தகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். யாரிடமிருந்து வீட்டில் அன்று நடந்த தகவல்களை அறியலாம் என்பதே சங்கரனுக்குத் தெரியவில்லை* கூடத்தில் கவலையுடன் உட்கார்ந்திருக்கும் சித்தப்பாவைப் பார்த்து பானு அங்கு வந்தாள். ஆசையுடன் அவன் அருகில் வந்து நின்று, “சித்தப்பா! நானும், அம்மாவும் திரும்பவும் மாமா வீட்டுக்குத்தான் போக வேண்டுமாமே? அம்மா சொல்கிறாள்” என்றாள்.
“ஏனம்மா அப்படி?” என்று கேட்டான் சங்கரன் அந்தப் பிஞ்சு உள்ளத்தில் நிகழும் போராட்டங்கள் எத்தனையோ என்று சங்கரனின் மனம் வருந்தியது.
“இனிமேல் இந்த வீட்டில் எனக்கு எந்தவிதமான கௌரவமும் இருக்காது. போய் விடலாம் பானு’ என்று அம்மா தான் சொல்கிறாள் சித்தப்பா!” என்றாள் குழந்தை.
கௌரவம், அவமரியாதை, மானம், அவமானம் என்கிற வார்த்தைகளுக்கெல்லாம் அந்தக் குழந்தைக்கு அர்த்தம் தெரிந்திருக்காது. இருந்தாலும், தன் தாயை அவர்கள் கொடுமைப் படுத்துகிறார்கள், அவள் துக்கம் தாங்காமல் கண்ணீர் வடிக்கிறாள் என்பது மட்டும் பானுவுக்குப் புரிந்து தான் இருந்தது.
சங்கரன் அன்று சாப்பிடாமலேயே மாடிக்குச் சென்றான். பல பிரச்னைகள், பலதரப்பட்ட குழப்பங்கள் தோன்றி அவன் தலையைக் குடைந்தன.
நீலா மாடிக்கு வந்தபோது, என்றுமில்லாத உற்சாகத்துடன் வந்தாள். ஆனால், சங்கரன் அவளை உற்சாகத்துடன் வரவேற்கும் நிலையில் இல்லை. நீலாவின் முகமும், காமுவின் முகமும் மாறி மாறி அவன் மனக்கண் முன்பு தோன்றி மறைந்தன. படபடப்பும், கர்வமும் நிறைந்த நீலா அவனை ஏசுவது போல் பார்த்தாள். நிதானமும், அன்பும் பூண்ட காமு அவனைப் பரிதாபமாக நோக்கினாள். நீலா அறைக்குள் வந்ததைக்கூடக் கவனியாமல் கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்திருந் தான் சங்கரன்.
அறைக்குள் நுழைந்த நீலா, கணவனாகவே தன்னுடன் பேசுவான் என்று சிறிது நேரம் எதிர்பார்த்தாள். தீவிரமான யோசனையில் சங்கரன் ஆழ்ந்திருப்பதைப் பார்த்ததும் தானாகவே வலுவில் சென்று பேசக்கூடாது என்று தீர்மானித்துப் படுக்கையை விரித்து அதன்மீது சாய்ந்து கொண்டு புஸ்தகம் ஒன்றைப் படிப்பதில் முனைந்தாள்.
சங்கரனின் மனம் தனிமையை நாடியதே தவிர உள்ளத்தில் பல எண்ணங்கள் எழுந்தன. அன்பில்லா மனைவி, அவளுடைய பணக்காரப் பெற்றோர், ஆசை பிடித்த தாய், எதிலும் பற்றில்லாத தகப்பனார் நிராதரவாக விடப்பட்ட மன்னி சம்பகம், தன்னால் புறக்கணிக்கப்பட்ட காமு முதலியவர்கள் அவன் மனத்தில் தட்டாமாலை சுற்றி வந்தனர்.
நீலா புஸ்தகத்தை மூடி வைத்து விட்டு, மறுபடியும் திரும்பிப் பார்த்தாள். வெறி பிடித்தவனைப் போல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்த சங்கரனைப் பார்த்துப் பயந்து விட்டாள் அவள். முதலில் அவள்தான் பேசி ஆகவேண்டும் என்கிற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. இல்லாவிடில் சங்கரன் இன்று முதலில் வலுவில் பேசுபவனாக அவளுக்குத் தோன்ற வில்லை.
“நேற்று காமு வந்திருந்தாளே வீட்டிற்கு…?”. என்று பேச்சை ஆரம்பித்தாள் நீலா.
‘ஊஹும், அப்படியா?” என்று தலையை ஆட்டினான் சங்கரன்.
“சம்பகம் மன்னி கூட அவளை அடிக்கடி நம் வீட்டிற்கு வரும்படி சொல்லியிருக்கிறாள். ஏதோ தையல் சொல்லிக் கொடுக்கப் போகிறாளாம்.”
காமு இங்கே எதற்காக வரவேண்டும்? சங்கரனின் மனத்தைக் குழப்பவா?
“இன்றைக்கு என்ன பேசவே மாட்டேன் என்கிறீர்கள்?” என்று கூறி, நீலா அவன் அருகில் போய் நின்றாள்.
“நான் பேசும் போது நீ ரொம்பவும் கலகலப்பாகப் பேசி விட்டாய்? நான் காரியாலயத்திலிருந்து களைத்து வீடு வரும் போது வீட்டில் இருந்து ரொம்பவும் என்னைக் கவனித்து விட்டாய்? நீ பேச வரும்போது ரொட்டித் துண்டு கண்ட நாயைப் போல் வாலைக் குழைத்துக் கொண்டு எஜமானி எதிரில் நான் நிற்க வேண்டும்? அப்படித்தானே உன் நியாயம்?” என்று சற்று உரக்கவே கேட்டான் சங்கரன் அவளைப் பார்த்து.
நீலாவின் சுபாவமான முன் கோபம் சடாரென்று. அடிபட்ட நாகம் போல் கிளம்பியது.
“என்னோடு நீங்கள் பேசுவீர்களா? உங்கள் மன்னியுடன் பேசுவதற்குப் பாதி ராத்திரியில் எழுந்து ஏதாவது பொய் சாக்கு சொல்லிக் கொண்டு கிளம்புவீர்கள். கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்த காமுவுடன் பேசுவதற்கு வெயிலையும் லட்சியம் பண்ணாமல் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவீர்கள்.” இன்னும் . ஏதோ சொல்லுவதற்கு அவள் வாய் எடுப்பதற்கு முன்பு சங்கரன் அவள் கன்னத்தில் ‘பளீர்’ என்று அறைந்தான்.
நீலாவுக்கு ஒரு கணம் தலை கிறு கிறு என்று சுழலுவது போல் இருந்தது. கீழே சாய்ந்து விழவிருந்த நீலாவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டே, மாடியிலிருந்து, “அம்மா, அம்மா” என்று தாயைக் கூப்பிட்டான் சங்கரன். “அவள் உடம்பு பலஹீனமாக இருக்கிறதாம். கொஞ்சம் கவனிக்க வேண்டும்” என்று மாலை அவள் தகப்பனார் தன்னிடம் கூறியதை நினைத்துப் பார்த்தான் சங்கரன். “பாவம்! கர்ப்பிணியை அடித்து விட்டோமே” என்று மனம் தவித்தான். இதற்குள் அவன் தாய் மாடிக்கு வந்து விட்டாள். “என்னடா இது?” என்று அவள் போட்ட கூச்சல் வீட்டில் எல்லோரையும் அங்கு வரும்படி செய்து விட்டது.
“நானே அவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பலாம் என்று இருந்தேன். பிள்ளைத்தாச்சி ஆயிற்றே. நல்ல நாள் பார்த்து அழைத்துப் போகட்டும் என்று பேசாமல் இருந்து விட்டேன். உன் மாமனார் வந்து கேட்டால் என்னடா சொல்லுகிறது?” என்று கையைப் பிசைந்தாள் மீனாட்சி.
“கோபத்தில் நான் தான் அடித்து விட்டேன். அதனால் தான் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விட்டாள்” என்று தன் குற்றத்தை ஒப்புக் கொள்வதா? அல்லது “எனக்கும் அவளுக்கும் கல்யாணமான நாள் முதல் அபிப்பிராய பேதம் இருந்து வருகிறது. நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்று அம்மாவிடம் கூறிவிடுவதா?” அவனைப் பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்த அன்னைதான் மீனாட்சி அம்மாள். க்ஷ்ட, சுகங்களைத் தாயிடம் கூறி ஆறுதல் அடையும் படியான வயசு கடந்து விட்டதே.. ‘சங்கரன் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறான். கை நிறைய சம்பாதிக்கிறான் பணக்கார இடத்திலிருந்து நாட்டுப் பெண் வந்திருக்கிறாள்’ என்றெல்லாம் பெற்றவள் பூரித்து இருக்கும் போது, ‘நான் சுகமாக இல்லை. நானும், அவளும் தனிமையில் சண்டை பிடிக்கிறோம்’ என்றெல்லாம் கூறிக்கொள்ள முடியுமா? ‘தோளுக்கு மிஞ்சினால் தோழன்’ என்று சொல்லுவார்களே?
“பேசாமல் நிற்கிறாயே. உன் மாமனாருக்கு ‘போன்’ செய்து அவரை வரவழைத்து விடு அப்பா. ஏதாவது நேர்ந்தால் பிறகு பெரியவர்களைக் குறை கூறுவார்கள் பார்!” என்று மீனாட்சி அம்மாள் பிள்ளையைக் கோபித்துக் கொண்டாள்.
சங்கரன் மாமனாருக்கு ‘போன்’ செய்த பதினைந்து நிமிஷங்களில் அவரும் அவர் மனைவியும் வந்து சேர்ந்தார்கள்.
“வர வர அவள் உடம்பு இளைத்துக் கொண்டே வந்தது. நானே வந்து அவளை அழைத்துப் போக வேண்டும் என்று இருந்தேன்” என்று அலுத்துக் கொண்டாள் நீலாவின் தயார்.
காரில் நீலாவைப் படுக்க வைத்து அழைத்துப் போகும் போது, “நீயும் அவர்களுடன் கூடப்போய் விட்டு, வாடா!” என்று வற்புறுத்தி (அனுப்பினாள் மீனாட்சி அம்மாள் சங்கரனை. ‘கல்யாணமானவுடன் மனைவியின் பின்னாலேயே இந்தக் காலத்துப் பிள்ளைகள் சுற்றுகிறார் களே? இந்தப் பிள்ளை என்னவோ பட்டதும் படாததுமாக இருக்கிறானே’ என்று நினைத்து ஆச்சரியம் அடைந்தாள் மீனாட்சி அம்மாள்.
நீலாவுக்கு மயக்கம் வந்து, அவளை டாக்டர் மகாதேவன் தம்முடைய ‘நர்ஸிங் ஹோமி’லேயே வைத்து வைத்தியம் பார்ப்பது முதலிய விஷயங்கள் கமலாவினால் காமுவுக்கு எட்டின. வருஷப்பிறப்பு அன்று நீலாவின் வீட்டிற்குப் போய்த் துணிகளை எடுத்து வந்த காமு, அதன் பிறகு விசாலாட்சிக்கு உடம்பு அதிகமாக இருந்ததால் ‘டிரயினிங் பள்ளிக் கூடத்துக்குக் கூடப் போகவில்லை. நீலாவின் துணிகளையும் அவளுக்குத் தைக்க ஒழிவு ஏற்பட வில்லை. அடிக்கடி அம்மாவுக்குக் கஞ்சியும் வெந்நீரும் வைத்துக் கொடுத்து, வேளை தவறாமல் வைத்தியர் கொடுத்த மருத்தைக் கொடுப்பதற்கே பொழுது சரியாக இருந்தது.
டாக்டர் எழுதிக் கொடுத்திருந்த ‘இஞ்சக்ஷன்’ மருந்தை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்த ராமபத்திர அய்யரின் முகம் வாடிப் போய் இருந்தது. கூடத்தில் ஒரு பக்கம் சுருட்டிப் படுத்துக் கொண்டிருந்த மனைவி உயிருக்கு மன்றாடுகிறாள். டாக்டர் இருபத்தி ஐந்து ரூபாய்க்குக் குறையாமல் மருந்து எழுதிக் கொடுத்து விட்டுப் போய் விட்டார். “வயதானவர்களுக்கும், பல ஹீனமானவர் களுக்கும் ‘நிமோனியா’ ஜுரம் வந்தால் கவனித்து வைத்தியம் செய்ய வேண்டும், கட்டாயம் மருந்தை வாங்கி வையுங்கள்” என்று வேறு கண்டிப்பாகச் சொல்லி விட்டுப் போயிருந்தார். மாதக் கடைசி. காலண்டரில் தேதியைப் பார்த்துக்கொண்டே காலம் கழிக்கும் பகுதி மாதம் இருபது தேதியிலிருந்து முப்பது தேதி வரைக்கும் தான்..மத்தியதர வகுப்பினர் இந்த அவதியை நன்கு உணர்ந்திருப்பார்கள். கையில் பத்து ரூபாயை வைத்துக் கொண்டு மனைவிக்கு வைத்தியம் பார்ப்பதா? வீட்டுச் செலவைக் கவனிப்பதா? அதிலும் எட்டு ரூபாய் சில்லறைக்கு இஞ்சக்ஷன் மருந்து வாங்கியாயிற்று.
மருந்துப் புட்டியைக் கையில் வாங்கிக் கொண்ட காமு தகப்பனாரைப் பார்த்து, “இன்னொரு மருந்து தான் முக்கியமானது அப்பா! அதை வாங்கி வரவில்லையே நீங்கள்?” என்று கேட்டாள்.
“எங்கேயிருந்து வாங்குகிறது. அம்மா? பத்து ரூபாயில் மீதி ஒன்றரை ரூபாய் இருக்கிறது. இன்னும் ஏழெட்டு தினங்கள் இருக்கின்றனவே முதல் தேதிக்கு? கடையில் சாமான் வாங்குகிறவர்கள் முதல் தேதிக்குத் தானே பணம் கொடுப்பார்கள்? அதுவும் மாசக் கடைசியில் யார் அதிகமாகச் சாமான்கள் வாங்குகிறார்கள்?” என்று கேட்டார் அவர்.
எப்படியும் மருந்து வாங்கி வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் டாக்டர் கோபித்துக் கொள்வார். ஏற்கெனவே வியாதி முயற்றிய பிறகு அவரை அழைத்த தற்காகக் காமுவைக் கோபித்துக் கொண்டார் அவர். “படித்த பெண்ணாக இருந்தும் நீ கூட இப்படி அசட்டையாக இருந்து விட்டாயே காமு?” என்று காலையில் வந்த போது கடிந்து கொண்டார், டாக்டர். தகப்பனாரும், பெண்ணும் தீவிரமாக யோசித்தார்கள். திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டவர் போல் ராமபத்திர அய்யர்,
“ஏனம்மா? சங்கரனைப் போய்ப் பார்த்து வருகிறேனே. அவன் மாமனார் கூடப் பெரிய டாக்டராமே? அவன் சிபார்சு செய்தால் தற்சமயம் பணமில்லாமல் வைத்தியம் பார்க்க மாட்டாரோ?” என்று கேட்டார் காமுவைப் பார்த்து.
காமு அவசரத்துடன், “உங்களுக்குத் தெரியாதா அப்பா? அவர் மனைவி நீலாவுக்கு உடம்பு சரியில்லையாம். நினைவில்லாமல் தகப்பனாரின் ‘நர்ஸிங்ஹோமி’ல் கிடக் கிறாளாம் அந்தப் பெண். நேற்று கமலா சொன்னாள். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் வேறு தொந்தரவு செய்தால் நன்றாக இருக்குமா?” என்றாள். பிறகு தன் தோழி கமலாவைப் போய் ஏதாவது பணஉதவி கேட்கலாமா என்று நினைத்துக் கொண்டாள். அவ்விதமே செய்யலாம் என்கிற தீர்மானத்துடன் அம்மாவுக்கு ஆகாரம் கொடுத்து விட்டுக் கிளம்பினாள் காமு.
– தொடரும்…
– ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது.
– பனித்துளி (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1996, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.