கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 21, 2024
பார்வையிட்டோர்: 2,176 
 
 

(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11

10. சினிமாவில் நீலா!

வருஷப் பிறப்புக்கு முதல் நாள் கமலா காமுவின் வீட்டிற்கு வந்தாள். அடுத்த நாள் பண்டிகைக்காக, அவள் அப்பா அப்பொழுதுதான் கடையிலிருந்து அனுப்பி இருந்த மளிகைச் சாமான்களை எடுத்துப் புடைத்துத் தகர டப்பாக் களில் நிரப்பிக் கொண்டிருந்தாள் காமு. ஒன்று துணி தைப்பது, இல்லாவிடில் புஸ்தகங்களைப் படிப்படி, அதுவும் இல்லாவிடில் வீட்டு வேலைகளைச் செய்வது என்று காமுவுக்கு அந்த வாழ்க்கையே அலுத்து விட்டது. சினிமாவுக்குப் போகிறேன்’ என்றால் அவள் அம்மா உடனே, “சினிமாவுக்கா? உனக்குத்துணை வருவதற்கு யார் இருக்கிறார்கள்? இருட்டு வேளையிலே வயசுப் பெண் சினிமாவுக்கும், டிராமாவுக்கும் போய் விட்டுத் தனியாக வரவாவது? அதெல்லாம் வேண்டாம், காமு!” என்று தடுத்து விடுவாள். 

அன்று கமலா வந்ததும் காமுவுக்குச் சற்றுத் தெம்பாக இருந்தது. சரசரவென்று டப்பாக்களை அலமாரியில் ஒழுங்காக அடுக்கி வைத்து விட்டு, அவளுடன் வாசல் அறையில் போய் உட்கார்ந்தாள். இதுவரையில் காமு பரபர வென்று செய்து வந்த வேலைகளைக் கவனித்த கமலா ஆச்சரியம் நிறைந்த மனத்துடன் அவளைப் பற்றியே எண்ணமிட்டாள். “இந்தக் காமுவுக்குத்தான் எவ்வளவு இறமை இருக்கிறது? துணிகள் தைத்தே மாதம் நாற்பது ஐம்பது என்று சம்பாதித்து விடுகிறாள். ‘டிரெயினிங்’ வேறு படிக்கிறாள். வீட்டில் வியாதிக்காரியான தாயாரைக் கவனித்துக் கொள்கிறாள். திரும்பத் திரும்ப ஓயாமல் குடும்ப வேலைகளையும் செய்து வருகிறாளே. இந்தப் பெண்ணுக்கு, இப்படி ஒரே மாதிரி பம்பரம் சுற்றுவது போல் சுற்றி வரும் வாழ்க்கை அலுக்காதா?” என்று தீவிரமாக ஏதோ யோசிக்கும் கமலாவைப் பார்த்துக் காமு சிரித்துக் கொண்டே, “என்ன, ஒரேயடியாக யோசனை? நாளைக்கு ஆபீஸ் லீவாயிற்றே? ஆத்துக்காரரை அழைத்துக் கொண்டு எந்த சினிமாவுக்குப் போகலாம் என்கிற யோசனை யாக்கும்?” என்று கேட்டாள். 

“சே, சே, அதெல்லாம். ஒன்றுமில்லை, நாளைக்குப் பண்டிகை அல்லவா? என் கணவருடைய நண்பர்கள் இரண்டு பேர் எங்கள் வீட்டுக்குச் சாப்பிட வருகிறார்கள். பாவம், அவர்கள் கல்யாணமாகாதவர்கள். ‘தினம்தான் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுகிறார்கள். பண்டிகை தினத்திலாவது நம் வீட்டில் சாப்பிடட்டுமே’ என்று அழைத்திருக்கிறார். சாப்பாடு முடிந்து வெளியே கிளம்ப எனக்கு ஒழிவு இருக்காது காமு. இன்றுதான் ஏதாவது சினிமாவுக்குப் போகலாம் என்று கிளம்பினேன். தனியாகப் போய் உட்கார்ந்து எதையுமே என்னால் ரசிக்க முடியாது” என்றாள் கமலா. 

காமு குறும்பாகச் சிரித்தாள். பிறகு கண்களைச் சிமிட்டிக் கொண்டே, “தனியாகப் போவானேன்? உன்னுடைய ‘அவரி’டம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் ஆபீஸில் ஏதாவது சாக்குச் சொல்லி ‘பர்மிஷன்’ வாங்கிக் கொண்டு வந்து விடுவாரே!” என்றாள். 

வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே தன் சிநேகிதியின் கன்னங்களைத் திருகினாள் கமலா. 

“இவ்வளவு பொல்லாத குணமா உனக்கு? இந்தக் குறும்பும், பேச்சும் பட்டினம் வந்த பிறகுதான் உனக்கு வந்திருக்க வேண்டும். அன்று ரயிலில் கபடம் இல்லாமல் பேந்தப் பேந்த விழித்த காமுவா நீ?” என்று ஆசையுடன் அவள் கன்னத்தில் தட்டினாள். பிறகு அன்புடன், “காமு நீதான் என்னுடன் இன்று சினிமாவுக்கு வாயேன். இப்படி வீட்டிலேயே அடைந்து கிடக்கிறாயே?” என்று அழைத்தாள் கமலா. 

காமுவின் மனத்தில் ‘எங்கேயாவது போய்வரவேண்டும் என்று எண்ணியிருந்த ஆசை மறுபடியும் பீறிட்டுக்கொண்டு இளம்பியது. ஆகவே, அவள் உற்சாகத்துடன், “வருகிறேன் கமலா. தனியாகத்தான் என்னை ‘எங்கேயும் அம்மா போக விடுகிறதில்லை. உன்னோடு கூட என்னை அனுப்ப மாட்டாளா? கேட்டுப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டுத் தன் தாயைத் தேடிப் போனாள் அவள். 

கூடத்தில் ஒரு ஓரமாகப் படுத்திருந்த விசாலாட்சி அப்பொழுதுதான் தூங்கி விழித்துக் கொண்டிருந்தாள் காமு தயக்கத்துடன் தன் தாயின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, ‘அம்மா! நான் உன்னை ஒன்று கேட்கப் போகிறேன். சரியென்று உத்தரவு தருவாயா?” என்று பலமான பீடிகையுடன் ஆரம்பித்தாள். 

விசாலாட்சி, உலர்ந்து போயிருந்த தன் உதடுகளை நாக்கினால் தடவிக் கொண்டே ஆயாசத்துடன், “என்னடி அம்மா என்னைக் கேட்கப் போகிறாய்? பட்சணமும், பலகாரமும் பண்ணிக் கொடு என்று கேட்கப் போகிறாயா? தலை வாரிப் பின்னி விடு என்று சொல்லப் போகிறாயா? நான்தான் ஒன்றுக்குமே உபயோகமில்லாமல் போய் விட்டேனே? நடைப் பிணமாக விழுந்து கிடக்கிறேனடி, காமு. உனக்கு என்னால் என்ன ஆகவேண்டும்?” என்றாள். 

சற்று முன்பு, சினிமாவுக்குக் கிளம்ப வேண்டும் அதற்காகத் தாயிடம் உத்தரவு வாங்க வேண்டும் என்று குஷியுடன் வந்த காமுவின் மனம் வேதனையில் ஆழ்ந்தது. ‘தன் குழந்தைக்குத் தலை வாரவில்லையே’ என்று அந்தத் தாய் உள்ளம் எப்படி வேதனைப்படுகிறது? பட்சணமும், பலகாரமும் செய்து கொடுக்க முடியவில்லையே என்று எப்படி விசாலாட்சி மனம் குன்றிப் போகிறாள்? தாயின் அன்பை, அந்தப் பரந்த மனப்பான்மையை எதற்கு உவமை கூற முடியும்? அலையெறிந்து குமுறும் ஆழ்கடலுக்கு உவமையாக அவள் குமுறும் உள்ளத்தை வேண்டுமானால் கூறலாம். அவளுடைய அன்பை எதற்கு உவமையாகக் கூறமுடியும்? எல்லையற்ற நீல வானத்தைக் கூறலாமா? காமு யோசனையில் மூழ்கி அம்மாவின் தலையை வருடிக் கொண்டே உட்கார்ந்திருந்தாள். 

காமுவைத் தேடிக் கொண்டு வந்த கமலா விசாலாட்சி யின் அருகில் வந்து நின்றாள். பிறகு நிதானமான குரலில், “அம்மா! இன்று காமுவை என்னுடன் சினிமாவுக்கு அனுப்புங்கள்” என்று கேட்டாள். 

விசாலாட்சி, வியா திக்கிடையே சிரித்தாள். அவள் சிரித்தே வெகு காலம் ஆயிற்று. ‘அழைத்துப் ‘போயேன். குழந்தை எங்கே தான் போகிறாள்? எனக்கு உழைக்கவே அவளுக்குப் பொழுது சரியாக இருக்கிறதே!” என்று கூறினாள். 

காமு சரசரவென்று கும்மட்டி அடுப்பைப் பற்றவைத்துக் கஞ்சியைச் சுட வைத்துத் தாய்க்குக் சொடுத்தாள். அப்பாவுக்குக் காபி போட்டு மூடி வைத்தாள். அவளும், கமலாவும் காபி அருந்தி விட்டு ‘மாட்னி’ காட்சிக்குக் கிளம்பினர். 


கொட்டகைக்குள் சென்று அவர்கள் உட்கார்ந்த பிறகும் படம் ஆரம்பிக்க அரைமணி அவகாசம் இருந்தது. புதிதாக விவாகமான தம்பதிகள் அநேகர் அங்கே வந்திருந்தனர். அவர்களைச் சுட்டிக் காட்டி காமு கமலாவைக் கேலி செய்து கொண்டே இருந்தாள். 

படம் ஆரம்பிக்க ஐந்து நிமிஷங்கள் இருக்கும்போது, வாசல் திரையை விலக்கிக் கொண்டு, அவர்களுக்குப் பின் னால் சற்றுத் துலைவில் இருந்த மேல் வகுப்புக்குச் சென்று நீலா உட்காருவதைக் காமு கவனித்தாள். ஆகாய வர்ணச் சேலை உடுத்தி, முதுகுப்புறம் பித்தான் வைக்கப்பட்ட ‘சோலி’ அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தாள் நீலா. 

அவள் வழக்கமாகப் பின்னிக் கொள்ளும் இரட்டைப் பின்னல்களுக்குப் பதிலாகக் கூந்தலை இரு பிரிவுகளாகப் பிரித்து ‘ரிப்பன்’ கட்டி இருந்தாள். காற்றில் அலைக்கப் பட்ட அவள் கூந்தல் பறந்து கொண்டிருந்தது. அவள் பின்னால் யார் வருகிறார்கள் என்று அறியும் ஆவலினால் கழுத்து வலி எடுத்துவிடுகிற மாதிரி காமு அந்தப் பக்கமே பார்த்தாள். ஒரு வேளை சங்கரனும் அவளுடன் வந்திருக்க லாம் அல்லவா? அருகில் உட்கார்ந்திருந்த கமலாவிடம் காமு மெதுவாக . “பின்னால் பாரேன்! யார் வந்திருக்கிறார்கள் என்று” என்றாள். 

கமலா திரும்பிப் பார்த்தாள். 

“த்சூ, நீலாவா? இதென்ன அதிசயம்? வாரத்தில் ஐந்து நாட்கள் அவளை இந்தப் பட்டினத்தில் இருக்கும் எந்தத் தியேட்டரிலாவது பார்க்கலாமே?” என்றாள். 

“அப்படியா? அதுவும் தனியாகவே தான் வருவாளா?” காமு ஆச்சரியத்துடன் கேட்டாள். 

“நீயும், நானும்தான் தனியாக வர யோசிக்கிறோம். நீ விவாகம் ஆகாத இளம் பெண், எனக்கோ தனியாக எதையுமே ரசிக்க முடியாது.” 

“அவருடன் வந்தால்தான் ரசிப்பாயாக்கும்! பாரேன், நீலா ‘ஜம்’மென்று வந்து தனியாக உட்கார்ந்திருப்பதை? கணவனுடன் வந்து சினிமாப் பார்க்க வேண்டும் என்று ஒரு பெண்ணுக்கு ஆசை இருக்காதா?” என்றாள் காமு. 

கமலா கலகலவென்று சிரித்தாள். 

“ஏதேது காமு? உனக்குக் கல்யாணமாகி விட்டால் ஆத்துக்காரரை விட்டுப் பிரியவே மாட்டாய் போல் இருக் கிறதே” என்று கமலா காமுவைக் கேலி செய்தாள். 

படம் ஆரம்பித்து ஓடிக் கொண்டிருக்கும்போது இருவரும் அதிகமாக ஒன்றும் பேசவில்லை. திரையில் வேகமாக முன்னேறும் சம்பவங்களைப் போலவே காமுவின் வாழ்க்கையிலும் எத்தனை சம்பவங்கள் நடந்து விட்டன? பொன் மணி கிராமம், அவர்கள் வீடு, அதன் தோட்டம் கறவைப் பசு, சங்கரனின் பேச்சுக்கள், முத்தையாவின் கடிதம்… காமு சென்னைக்கு வந்து இப்போது ‘டிரெயினிங்’ படிப்பது எல்லாம் அவள் மனத் திரையில் படங்களாக, ஓடின. ‘ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் நேரும் சம்பவங் களையே ஒரு அழகான திரைப் படமாக எடுத்து விடலாமே’ என்று எண்ணமிட்டாள் காமு. 

இடைவேளையின் போது கமலாவே காமுவடன் பேச்சுக் கொடுத்தாள். 

“திடீர் திடீர் என்று நீ இப்படி மௌனத்தில் ஆழ்ந்து விடுகிறாயே காமு? படத்தைப் பார்க்கிறாயா, இல்லை ஏதாவது கற்பனையில் இறங்கி விடுகிறாயா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறதே” என்று கேட்டாள் கமலா. 

“கற்பனையும், காவியமும் எனக்கு உதயமாகுமா கமலா? என்னவோ நினைத்துக் கொண்டிருந்தேன்” என்று காமு சற்று சலித்த மாதிரி பதில் கூறினாள். 

“ஆமாம், அன்று நீ எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது நீலா உன்னை அவள் வீட்டுக்கு வரும்படி கூப்பிட்டாளாமே நீ போகவில்லையா? அவள் அதைப் பற்றி என்னிடம் நிஷ்டூரமாகச் சொன்னாள்” என்று கூறினாள் கமலா. 

“போக வேண்டும், கமலா. ஆனால், அவ்வளவு பெரிய மனுஷர்கள் வீட்டுக்கு எப்படிப் போவது என்கிற தயக்கம் தான் காரணம். அப்பாவும் அவர் நண்பர் சர்மாவைப் பார்த்து வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக் கிறார். நாளைக்குக் கடைக்குக் கூட விடுமுறை. போய் விட்டு வரலாம் என்று இருக்கிறோம்” என்று கூறினாள் காமு. 

படம் முடிந்து, கூட்டத்தைக் கடந்து அவர்கள் வெளியே வருவதற்குள் நீலா தன்னுடைய காரில் ஏறிக்கொண்டு போய் விட்டாள். கமலாவும் காமுவை அவள் வீட்டு வாசல் வரைக்கும் துணையாக வந்து அனுப்பி விட்டுத் தன் வீட்டுக்குச் சென்றாள்.


காமு தன் வீட்டுக்குள் நுழைந்தபோது ராமபத்திர அய்யர் வாசல் வராந்தாவில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர், “என்ன அம்மா! படம் நன்றாக ருந்ததா?” என்று கேட்டுக் கொண்டு, மகளின் பின்னால் உள்ளே சென்று சமையலறையில் உட்கார்ந்தார். 

“ஹும்… நன்றாகத்தான் இருந்தது. சினிமாவிலே நம் சங்கரன் மனைவி நீலாவைப் பார்த்தேன், அப்பா. நான் அவர்கள் வீட்டுக்கு வரவில்லை என்று அவள் கமலாவிடம் குறைப்பட்டுக் கொண்டாளாம். நாளைக்கு என்னோடு நீங்களும் வாருங்களேன். போய் விட்டு வரலாம்.” 

ராமபத்திர அய்யர் பதில் கூறுவதற்கு முன்பு கூடத்தில் படுத்திருந்த விசாலாட்சி சற்று உரக்கவே, “நீ அங்கெல் லாம் ஒன்றும் போக வேண்டாம். காமு உனக்கும் அவளுக் கும் என்ன சிநேகம் வைத்துக் கிடக்கிறது? நம்முடைய தகுதிக்குத் தக்கபடி நாம் சிநேகம் செய்ய வேண்டும். எங்கே வேண்டுமானாலும்போகிறேன் என்று கிளம்பி விடுகிறாயே, உன் அப்பாவும் உனக்குச் சரியென்று தலை ஆட்டுகிறார்” என்றாள். 

படபடப்பாகப் பேசிய தனால் அவளுக்கு பெருமூச்சு வாங்கியது. 

“அம்மா!…” என்று காமு ஏதோ சொல்ல வாயெடுத் தாள். அதற்குள் ராமபத்திர அய்யர் காமுவின் சமீபத்தில் சென்று மெதுவாக, “கர்மு! ஏற்கெனவே பலவீனமடைந் திருப்பவளிடம் நீ ஒன்றும் பேசாதே, அம்மா. நாம் அங்கே போகப் போகிறோம் என்பதே அவளுக்குப் தெரிய வேண்டாம். நாளைக்குப் போய்விட்டு வரலாம்” என்றார்.

அதைக் கேட்ட காமுவின் மனம் மகிழ்ச்சியால் பூரித்தது. 

‘சங்கரனின் வீட்டுக்குப் போகப் போகிறோம்’ என்கிற எண்ணம் அவள் மனத்துள் பலவித உணர்ச்சிகளை எழுப்பி யது. ‘சங்கரன் வீட்டுக்குப் போக வேண்டுமா? ஏன் போகக் கூடாது? போனால் என்ன?’ என்று பல கேள்விகள் தோன்றி அவளை அன்று இரவு பூராவும் தூங்க விடாமல் அடித்தன. 


வருஷப் பிறப்பு அன்று ‘சர்மாவின் வீட்டில் எல்லோரும் புத்தாடை உடுத்திக் கொண்டார்கள். சம்பகம் மட்டும் புடவையைப் பிரித்துக் கட்டிக் கொள்ளவில்லை. “நீ ஏன் புடவை உடுத்திக்கொள்ளவில்லை?” என்று அவளை யாரும் கேட்கவில்லை. எல்லோரும் பகல் சாப்பாட்டுக்கு அப்புறம் வெற்றிலை போட்டுக் கொண்டு வானொலியில் மத்தியான நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்தனர் சப்தப்படுத்தாது வாயிற் கதவைத் திறந்து கொண்டு ராமபத்திர அய்யரும், காமுவும் உள்ளேவந்தனர். சர்மா எப்பொழுதும் ‘வராந்தா’ விலேயே இருப்பவராதலால் யார் வீட்டுக்கு வந்தாலும் அவர் கண்ணில் படாமல் போக முடியாது. வந்தவர்களைக் கூர்ந்து கவனித்து விட்டுச் சிறிது யோசித்தார் சர்மா. சட்டென்று நினைவு வந்தவராக, “அட! நீயா? வா, அப்பா ராமபத்திரா! எத்தனை வருஷங்கள் ஆய்விட்டன உன்னைப் பார்த்து!” என்று ராமபத்திர அய்யரை வர வேற்றார் அவர். தயங்கிக் கொண்டே தகப்பனாரின் பின் னால் நின்று கொண்டிருந்த காமுவை, “இவள்தான் என் பெண் காமு” என்று சர்மாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ராமபத்திர அய்யர். 

ஏற்கெனவே சங்கரன் அவர்களைப் பற்றி சர்மாவிடம் கூறி இருந்ததால் பழைய விஷயங்களை ஒன்றும் அவர் அதிகமாகக் கேட்கவில்லை. கூடத்தில் காது செவிடாகும் படி அரட்டைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. வானொலியில் நடக்கும் சினிமா கீதங்களைத் தோற்கடித்து விட்டது எனலாம், அவர்கள் பேசிய பேச்சுக்கள்! 

கீழே விரித்திருந்த உயர்ந்த ரத்தின கம்பளத்தைப் பார்த்து அதிசயித்தார் ராமபத்திர அய்யர். மெத்து மெத்து என்று பஞ்சின் மேல் நடப்பது போல் இருந்தது. கால்களில் மண் முதலிய தூசி ஒட்டக் கூடாது என்றும், வீட்டுக்கு அலங்காரமாக இருக்கவும் இத்தகைய கம்பளங்களை விரிக்கிறார்கள். கல்லும், முள்ளும், பாறையும், சேறும், சகதியும் நிறைந்த வயல்வெளிகளில் முரட்டுத் தனமாக நடந்து உழைக்கும் பாட்டாளி மக்களைப் பற்றி நினைத்துக் கொண்டார் ராமபத்திர அய்யர். காலில் ஜோடுகள் இல்லாமல் அரை மணியில் பொன்மணியிலிருந்து ராஜம் பேட்டைக்கு நடந்து விடுவார் அவர். உயர்வான பானங் களை அவர் சாப்பிட்டது இல்லை. நல்ல வெய்யில் வேளை யில் குளிர்ச்சியாக ஒரு டம்ளர் மோர் இருந்தால் போதும் அவருக்கு. 

நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டே உட்கார்ந்தனர். காமு தயங்கியபடியே கூடத்தை நோக்கிச் சென்றாள். 

“பட்டினம் வந்து விட்டாயாமே. இங்கே என்ன செய்கிறாய்! பெண் ‘டிரெயினிங்’ படிக்கிறாளாமே?” என்று சர்மா என்னென்னவோ விசாரித்தார் தம் பால்ய நண்பரை. இப்படி இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந் தனர். உள்ளே இருந்த தன் மனைவியை அழைத்தார் சர்மா. 

தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு மீனாட்சி அம்மாள் வராந்தாவுக்கு வந்தாள். 

”மீனா! இவரை யார். என்று தெரிகிறதா உனக்கு?’ என்று கேட்டார் சர்மா, தமது மனைவியைப் பார்த்து. 

“தெரியாமல் என்ன? விசாலத்தின் அகத்துக்காரர். பார்த்து எத்தனையோ வருஷங்கள் ஆயிற்று. வயசாகி விட்டது தெரிகிறதே ஒழிய வேறு மாறுதல் ஒன்றும் தெரிய வில்லை. விசாலம் சௌக்யமாக இருக்கிறாளா? உள்ளே வந்திருக்கிறாளே அந்தப் பொண்ணுக்குத்தான் கல்யாணம் ஆக வேண்டுமா?” என்று விசாரித்தாள் மீனாட்சி அம்மாள். 

“ஆமாம்” என்கிற பாவனையாகத் தலையை அசைத் தார் ராமபத்திர அய்யர். மீனாட்சிதான் அடையாளம் தெரியாமல் எப்படிப் பருத்து விட்டாள்! ஒடிந்து விழுகிற மாதிரி இருந்தாளே? முகத்திலே அலாதியாகக் களை வந்து விட்டது. லட்சுமீ கடாட்சம் என்பது இதுதான் போலும்! விசாலம் எவ்வளவோ நன்றாக இருந்தாள். இப்போது பல்லும், பவிஷுமாகப் பார்க்கச் சகிக்கவில்லை. ‘கொடிது கொடிது வறுமை கொடிது’ என்று குழந்தைகள் பள்ளிக் கூடத்தில் பாடுவார்களே அது சரியாகத்தான் இருக்கிறது. 

அவர் சிந்தனையைக் கலைப்பது போல் சர்மா, “மீனாட்சி! ஒரு தடவை புயல் காற்றினால் ரயில் கவிழ்ந்து தண்டவாளம் பெயர்ந்து நாம் பொன்மணி கிராமத்து ரயில் நிலையத்தில் சாப்பாடு இல்லாமல் தவித்தோமே. தற்செயலாக அந்தப் பக்கம் வந்த ராமபத்திரன் கீரைக் குழம்பும், மாவடுவும் கலந்த சாதத்தை வீட்டிலிருந்து கொண்டு வந்து போட்டிராவிடில் அப்போது என்னமாதிரி தவித்திருப்போம்? தேவாமிர்தம் மாதிரி இருந்தது அந்தச் சாப்பாடு! ‘விசாலத்தின் கையால் கீரைக் குழம்பு வைத்துச் சாப்பிட வேண்டும்’ என்று நீ கூட அடிக்கடி கூறுவாயே?” என்று, இருபத்தி ஐந்து வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவூட்டினார் தம் மனைவிக்கு. 

சுதாமர் கையால் அவல் வாங்கிச் சாப்பிடத் துடித்த ஸ்ரீ கிருஷ்ண பகவானின் நினைவு வந்தது ராமபத்திர அய்யருக்கு. 

“பேசிக் கொண்டே நிற்கிறேளே. காபி கொண்டு வருகிறேன், இருங்கள்” என்று கூறிவிட்டு, மீனாட்சி உள்ளே சென்றாள். 

புதிதாக வந்திருக்கும் தம் நண்பருக்கு சங்கரனின் மனைவியை அறிமுகப்படுத்த வேண்டி சர்மா நீலாவை அழைத்தார். புதிதாகக் கல்யாணமானவர்களைப் பெரிய வர்கள் யாராவது பார்க்க வந்தால் அவர்களை நமஸ்காரம் பண்ணுவது வழக்கம். தயங்கியபடியே வந்த நீலா, ராமபத்திர அய்யரைக் கண்டதும் இரண்டு கைகளையும் கூப்பி, “நமஸ்தே” என்று கூறினாள். அவள் அருகில் நின்றிருந்த காமு, “அப்பா, இது யார் தெரியுமா? சங்கரனின் மனைவி நீலா” என்று வேறு சொல்லி வைத் தாள், “அப்படியா? மிகவும் சந்தோஷம். குழந்தை நன்றாக படிக்கிறாள் போல் இருக்கிறது” என்று தன் சந்தோஷத்தைத் தெரிவித்தார் ராமபத்திர அய்யர். 

எல்லோரும் காபி சாப்பிட்டு முடிந்ததும் காமு உள்ளே இருப்பவர்களிடம் விடை பெற்றுக். கொண்டாள். வெற்றிலைத் தட்டில் வெற்றிலை, புஷ்பம், பழத்துடன் சம்பகம் அவள் எதிரில் வந்து நின்று குங்குமத்தை எடுத்து அவள் அழகிய பிறைச் சந்திரன் போன்ற நெற்றியில் பொட்டு இட்டாள். 

“அடிக்கடி வந்து போய்க்கொண்டிரு அம்மா. உனக்கு எந்தெந்த மாதிரி தைக்க வேண்டுமோ, நான் சொல்லித் தருகிறேன். எனக்கும் பொழுது போக்காக இருக்கும்” என்றாள் சம்பகம். 

“இது யார் என்று சொல்ல வில்லையே நீலா? இவ்வளவு அன்புடன் பழகும் இவர்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டாமா?” என்று கேட்டாள் காமு, நீலாவைப் பார்த்து. 

“யாரா? என் ‘ஹஸ்பெண்டி’ன் தமையன் மனைவி. என் ஓரகத்தி. சம்பகம் என்று பெயர். போதுமா விவரம்?” என்று கேட்டு விட்டு நீலா, “ஆமாம், ரவிக்கைகளைச் சீக்கிரம் தைத்துக் கொடுத்து விடுவாயோ இல்லையோ? ‘பில்’ போட்டு அனுப்பி விடு. பணத்தை அனுப்பி விடுகிறேன்” என்று கூறினாள். 

“ஆகட்டும்” என்று தலை அசைத்து விட்டு, காமு தகப்பனாருடன் கிளம்பினாள். 

வீட்டிலே சம்பகம் அழகாகத் துணி தைக்கும்போது வெளியே யாரிடமோ தைப்பதற்குக் கொடுத்துக் கூலி கொடுப்பதாகச் சொல்லுகிறாளே நீலா? அவள் ஏன் சம்பகத்திடம் வித்தியாசம் பாராட்ட வேண்டும்? அவள் அயல் வீட்டிலிருந்து வந்தவள்; நீலாவும் அப்படித்தான். இருவரும் ஒத்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கொடுமையும், துன்பமும் நிறைந்த சம்பகத்தின் வாழ்க்கைக்கு எவ்வளவோ இதமாக இருக்குமே! சம்பகம் வெற்றிலைத் தட்டைக் கொண்டுபோய் சுவாமி அலமாரியின் கீழ் வைத்துவிட்டு யோசித்தபடி நின்றாள். 


அன்று இரவு, ராமபத்திர அய்யர் வந்திருந்ததைப் பற்றி சர்மா சங்கரனிடம் கூறினார். “மனுஷன் கொஞ்சம் கூட மாறவில்லை பார்த்தாயா? அதே பேச்சு. அதே வினயம். பாவம், வாழ்க்கை பூராவும் கஷ்டப்படுகிறான். பெண். படித்துவிட்டு வேலைக்குப் போகப் போகிறாளாம். நன்றாகக் கிளி மாதிரி இருக்கிறதடா, அந்தப் பெண் அதைத்தானே உனக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டதாக நீ கிராமத்திலிருந்து வந்ததும் முன்பு என்னிடம் கூறினாய்?” என்று கேட்டார் சர்மா, பிள்ளை யைப் பார்த்து. 

ராமபத்திர அய்யரா சங்கரனுக்குத் தன் பெண்ணைக் கொடுப்பதாகக் கூறினார்? ஒருகாலும் இல்லை. பணத்தின் குணத்தையும், பணக்காரர்களின் குணத்தையு ம் அறியாதவரா அவர்? சங்கரனே அவரைப் பார்த்துப் பரிதாபப்பட்டுக் கூறிய வார்த்தை அது. காமுவின் சௌந்தர்யம் அவனை அவ்விதம் பேச வைத்தது. உணர்ச்சிப் பெருக்கில் அவன், பின்னால் தன்னுடைய வார்த்தையைக் காப்பாற்றும் உறுதி தன்னிடம் இருக்கிறதா என்பதையும் யோசியாமல், பேசிய பேச்சு அது. ராமபத்திர அய்யர் தன் அந்தஸ்தை மீறி மகளுக்கு மணம் முடிக்க வேண்டும் என்று ஒருபோதும் கருதியவர் இல்லை. ராமபத்திர அய்யர் அந்தப் பேச்சை என்றோ மறந்து விட்டார். மறக்காமல் இருந்தால் சர்மாவின் வீடு தேடி வருவாரா? சங்கரனை வாய் குளிர அழைத்துப் பேசுவாரா? 

தலையைக் குனிந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சங்கரன். அவன் மனத்துள் பல எண்ணங்கள் தோன்றின. 


பொன்மணி கிராமத்தின் ஏரியும், வயல்களும், பெருமாள் கோவிலும் அவன் கண் முன்னே தோன்றின. ‘யாரோ இவர் யாரோ’ என்று பாடிக்கொண்டே அவனை முதன் முதலில் வரவேற்ற காமு ஒய்யாரமா.க ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு அவன் எதிரில் பூங்கொடி போல் வந்து நின்றாள். அப்புறம் அவள் காபி கொண்டு வந்து வைத்து விட்டு நாணத்துடன் உள்ளே போனது அவன் நினைவுக்கு வந்தது. காமரா அறையில் உட்கார்ந்து கதவு இடுக்கின் வழியாக மருண்டு அவனையே பார்த்துக்கொண்டு, தாமரைச் சவுக்கம் பின்னும் காமு அவனைப் பார்த்துச் சிரித்தாள். “காமு! என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள உனக்குச் சம்மதமா” என்று அவன் கேட்டபோது அவள் வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாளே, அந்தக் காட்சி அவன் மனத்தை என்னவோ செய்தது. 

ராமபத்திர அய்யர், அவன் பொன்மணியை விட்டுக் கிளம்பும் போது, “சங்கரா! என்னவோ எங்களுக்குத் தகுந்த இடமாக ஒரு வரன் பார்த்துச் சொல்லப்பா ; அது போதும்” என்று தானே கேட்டுக் கொண்டார்? தன்னால் ஏதோ பிரமாதமாகச் சாதித்து விட முடியும் என்கிற நோக்கத்துடன் அவன் காமுவைத் தானே கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு வந்தான். சங்கரன் இளகிய மனம் படைத்தவன்; தவிர காமுவின் அழகும் நற்குணங்களும் அவ்வீதம் அவனைப் பேச வைத்தன. அவள் ஏழ்மையில் வாடி வதங்குவதைப் பார்த்து எழுந்த பரிதாப உணர்ச்சிதான் அது. அதற்கு வேண்டிய உறுதியும், தைரியமும் தன்னிடம் இருக்கின்றனவா என்று சங்கரன் அப்பொழுது யோசிக்கவில்லை. 

பொன்மணியை விட்டு பட்டினத்தில் அவன் வீட்டுக்குள் நுழைந்தபோதே காமுவின் வீட்டுக்கும் அவன் வீட்டுக்கும் பெரிய அளவில் இருக்கும் வித்தியாசம் தெரிந்தது. அவன் திரும்பி வந்த தினத்தன்று, கையில் காபியைக் கொடுத்துக் கொண்டே மீனாட்சி அம்மாள் பேச ஆரம்பித்தாள். 

“டாக்டர் மகாதேவனின் பெண்ணைப் போய்ப். பார்த்துவிட்டு வந்தோம். பெண் நன்றாக இருக்கிறாள் நன்றாகச் செய்து கல்யாணம் பண்ணிக் கொடுப்பார்கள். நமக்கு ஏற்ற சம்பந்தம்” என்று வாய் நிறையச் சொன்னாள் அவள். 

சங்கரன் முதலில் திடுக்கிட்டான். 

“ஆமாண்டா! அவர்கள் வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும், நமக்கு ஏற்ற சம்பந்தம்தான் அது” என்று சொல்லிக்கொண்டே ருக்மிணி அங்கு வந்தாள். 

“நமக்கு ஏற்ற சம்பந்தம் என்றால் ராமபத்திர அய்யர் நமக்கு ஏற்ற சம்பந்தம் செய்யக்கூடிய நிலையிலா இருக்கிறார்? பெரிய அளவிலே திட்டம் போட்டு அதை நிறைவேற்ற இருக்கும் அம்மாவிடம் ராமபத்திர அய்யரைப் பற்றிச் சொல்வதா? அவர்கள் வீட்டு இடிந்த சுவரைப் பற்றிச் சொல்வதா? கருகமணி மாலையுடன் நிற்கும் காமுவைப் பற்றிப் பேசுவதா?”-சங்கரன் ஒன்றும் புரியாமல் விழித்தான். 

மீனாட்சி அம்மாள் மேலும் பேசிக்கொண்டே போனாள். 

“உன் அண்ணாவுக்கு வந்து வாய்த்ததே அதைப் போல இவள் இருக்க மாட்டாள்! எல்லா விதத்திலும் நமக்கு ஏற்ற சம்பந்தம்.’ 

“நமக்கு ஏற்ற சம்பந்தம்! நமக்கு ஏற்ற சம்பந் தம்!” என்று திருப்பித் திருப்பி இதையே சொல்லிக் கொண்டான் சங்கரன். 

நிதானமாகப் புன்சிரிப்புடன் பேசும் காமுவை அம்மாவுக்குப் பிடிக்குமா? அம்மாவை மீறி அவளுக்குப் பிடிக்காத எதையும் அவன் இதுவரையில் செய்ததாகவே அவனுக்குத் தெரியவில்லை. ஆகவே, அவன் உறுதிப் பேச்சுக்கள் யாவும் அவனுக்கே மறந்து போயின. ராமபத்திர அய்யரே தான் பலமுறை அவனிடம் கூறினாரே? “நீ என்னவோ சொல்கிறாய். இதெல்லாம் நடக்கக் கூடியவையா?”.என்று. ஆகையால், தான் வார்த்தை தவறி னாலும் அவர்கள் அதை அதிகமாகப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நம்பினான். 

ராமபத்திர அய்யர் அவன் வார்த்தைகளை உண்மையாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், காமுவோ அவன் வார்த்தைகளை எவ்வளவு தூரம் உண்மையென்று எடுத்துக் கொண்டு விட்டாள்? அவனால் அவள் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறாள். 


இதை நினைத்துப் பார்க்கையில் சங்கரனின் மனம் வேதனை அடைந்தது. நமக்கு ஏற்ற சம்பந்தம் என்று அம்மா பண்ணி வைத்த கல்யாணத்தின் பலனை அவன் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறான். 

மேலே சாப்பிடப் பிடிக்காமல் இலையை விட்டு எழுந்து சென்றான் சங்கரன்.

– தொடரும்…

– ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது.

– பனித்துளி (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1996, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email
சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *