பந்தல் கட்டும் செக்கு மாடுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2021
பார்வையிட்டோர்: 2,389 
 

வெள்ளாமை வெட்டி சூடு அடித்த கையில் இரண்டு காசு. புழங்கியதும் அவர்களுக்கு உசார்தான்.

ஊர் மரைக்கார், கச்சி முஹம்மது, காசிம் முதலாளி, பள்ளி மௌலவி, பள்ளிவாசல் கமிட்டி மற்றும் ஊருக்குப் பெரியவர்களான அபூபக்கர், ஓமர் விதானை இப்படிப்பலர் –

அஹ்மது லெவ்வை அவர்களது அழைப்பை ஏற்று அவரது வளவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அஹ்மது லெவ்வை, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ கூறி இன்முகத்துடன் வரவேற்கிறார்.

பென்னாம் பெரிய கல்வீட்டின் முன் கூடத்தில் பாய்கள் விரிக்கப்பட்டிருக்கின்றன. சூரியன் அஸ்தமித்த மாலைவேளை. இருந்தும் கோடையின் புழுக்கம் தாங்க முடியவில்லை.

தொடர்ந்து புதுப் பாய்களை யெல்லாம் முற்றத்தில் விரிக்கிறாள் அஹ்மது லெவ்வையின் இளைய மகள் அஷ்ரபா.

கச்சான் காற்றின் வீச்சு ஓரளவு இதமாக இருக்கிறது அவர்களுக்கு. எல்லாரும் வட்டமாக இருக்கை கொள்கிறார்கள்

சற்று நேரத்தில் அழகாகச் சோடிக்கப்பட்ட வெற்றிலைத் தட்டத்தை அஹ்மது வெவ்வை அவர்கள் மிகவும் மரியாதை யாக, ஊர் மரைக்காரின் கையில் சமர்ப்பிக்கிறார். அதன் அர்த்தத்தை சபையோர் புரிந்து கொள்கின்றனர்.

முற்றத்தின் ஒரு கோடியில் நெல்லு தூத்திக் கொண் டிருக்கும் சீனி முஹம்மதுவுக்கு இந்த வரவேற்பு அருவ ருப்பையும் ஆத்திரத்தையும் கொடுக்கிறது. அவரது மனைவி லைலத்தும்மாவும் மகள் சரீபாவும் முற்றத்தின் மறுகோடி யில் நெல்லுக் குத்திக் கொண்டிருந்தனர் உலக்கையால் ஓங்கி ஓங்கிக் குத்தும்போது அவர்களது மனத்தில் மலர்ந்த அபிலாசைகளும், திட்டங்களும் எதிர்காலமும் எல்லாமு மாய் இடிந்து போய் ……

மூவரும் ஸ்தம்பித நிலையில் சபையைக் கவனிக்கின்றனர்.

“அப்ப வெற்றிலைத் தட்டுக் கொடுத்திருக்காக. ஊர் ஜமாத் கூடியிருப்பது உங்களுக்குத் தெரியுந்தானே. அஹ்மது லெவ்வை அவர்களின் மூத்த மகள் ஜெய்லாவை, காசிம் முதலாளியின் மகன் சுல்தானுக்குப் பேசிக் கெடக்கு.. ஒங்களுக்கெல்லாம் சம்மதமா?” மரைக்கார் சம்பிரதாயக் கேள்வியை உதிர்க்கிறார்.

சட்டென்று சரீபாவின் பார்வை குசினிப்பக்கம் அலைந்து ஜெய்லாவின் மீது நிலைக்கிறது. அவளது வதனத்தில் நெளியும் அந்த மலர்ச்சியைப் பார்க்க முடியாமல் மறைகிறது கண்ணீர்த் திவலைகள்.

மரைக்காரின் பிரேரணைக்கு ஊர் பிரதிநிதிகளிடமிருந்து எவ்வித மறுப்பும் இல்லை. முப்பது நாற்பது குடும்பமாக வாழும் ஒரு சிறு கிராமத்தில் எல்லாரும் ஒன்றுக்கொன்று சொந்தம்.

அஷ்ரபா பெரிய கோப்பையில் தண்ணீர் கொண்டு வந்து வைக்கிறாள். பலகாரமும் தேநீரும் பரிமாறப்படுகி றன. சிகரட்கள் சாம்பராகின்றன. சபை கலகலப்பாக களை கட்டுகிறது.

“சீதனம் கீதனம் இருக்கா…..?” இது ஒமர் விதானை யின் முக்கிய கேள்வி.

ஐந்து ஏக்கர் நெற்காணி, பசுமாடுகள், கல் வீடு ஒன்று, பணம் இரண்டாயிரம், நகை உடுபிடவைகள்.. ஊர் வழக் கப்படி திருமணத்திற்குப் பின் தம்பதிகள் முதலாம் ஆண்டு பெண்ணின் தகப்பனின் வீட்டிலேயே வாழ்க்கை ஆரம்பம். எல்லாச் செலவுகளுக்கும் பெண்ணின் தகப்பனே பொறுப்பு. அஹ்மது லெவ்வை இவற்றையெல்லாம் பெருமையோடு ஏற்கிறார்.

“வெள்ளாமையை எதிர்பார்த்துக் காரியம் பார்க்க ஏலாது. எப்படியோ இருக்கிற மாதிரி ஒப்பேத்த வேண்டி யதுதான்…”

“ஓ அது தான் நல்லது… மாப்பிள்ளப் பகுதியாரும் சொந்தத்தில் ஊருக்குள்ள … அவகட நிலமையும் அப்படித் தான்.” என்கிறார் அபூபக்கர்.

மஹரை ப் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்தது. அஹ்மது லெவ்வை சொல்கிறார் –

“இனி பேசுறதுக்கு ஒண்டும் இல்ல, பொறக்கிற மாசத் தில நல்ல நாள் கெடக்கு தானே மௌலவி.”

பந்தல் வைக்கிறதைப் பற்றிய பிரச்சினை எழுந்தது. “மறுஹா… இவ்வளவும் செஞ்சி, கல்யாணம் பந்தல் இல்லாமலா? ஆட்டுக் கடாய் அறுத்து சாப்பாடு போடாட்டி ஊரவன் பழிப்பானே . அத்தோட ஜெயிலாட உம்மா சொல்றா பீக்கர் எடுக்கணுமாம்.”

“பீக்கர் எடுக்கிறது சரிதான் -இரு பகுதியாரும் ஒத்து, ஒரே எடத்தில் வைக்கிறது நல்லம்…. ஊருக்குள்ள இரண்டு பீக்கர் போடப்படாது…”

“இந்த ஊருல பள்ளி வரி குடுக்காதவன் முக்கால் வாசிப்பேர், எப்படி கல்யாண சபைக்கு வாரது?”

“நெருக்கினால் அறவாக்கிப் போடலாம் மரைக்கார், ஊரவன்ட கையில காசு பொழங்குது.”

மௌலவியின் கருத்துப்படி ரபீயுல் அவ்வல் மாதம் முதலாம் ஞாயிற்றுக்கிழமை பகலைக்கு கூட்டம் கூடி திங்கட் கிழமை இரவுக்கு ‘காவின்’ எழுதத் தீர்மானிக்கப்பட்டது. ஊர் வழக்கப்படி ஊரவருக்கு மட்டும் வெற்றிலை கொடுத்து சொன்னால் போதும். வெளியாருக்கு ‘காட்’ அடித்து அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.

அஸருக்குப் பின் கூடிய கூட்டம் மஃறிப் நெருங்கும் போது – மௌலவியின் பாத்திஹா துவாவுடன் கலைந்தது.

யாவற்றையும் கசப்பாக அவதானித்த சீனி முஹம்மது குடும்பத்தினரின் உள்ளப்புயல் கச்சான் காற்றின் வீச்சைப் போல் – அதிகரித்துக் கொண்டிருந்தது. சபை கலைந்தாலும் கமிட்டித் தலைவர் இன்னும் பாயில் குந்திக் கொண்டுதா னிருந்தார். அவரது வலது காலில் ஒரு கட்டு. மஃறிப் தொழுகைக்குப் போகவேண்டிய அவசரம் அவருக்கு இன்று இல்லை. அஹ்மது லெவ்வை பள்ளிவாசலுக்குப் போக ‘கேத்தல்’ நிரம்ப தண்ணீர் கொண்டுவந்து ‘வுழு’ எடுத்துக் கொண்டிருந்தார்.

“என்ன மரைக்கார் நம்மட ஊருக்கு மழை பெய்யப் படாதென்று சட்டமா? … ஹராம் ஒரு … ஒழுங்கா ஒரு மழை புழுதி அடங்கப் பெய்த மழையால வெள்ளாமை செய்ய ஏலுமா? … சே! பாரதூரமான நட்டம் பாருங்க”

“வுழு’ ‘வோடு நின்றவர் கொஞ்சமும் கூசாமல் செப்பிய வார்த்தைகள்; சீனி முஹம்மதின் செவிகளில் ‘கிழாச் செடி’ முள் குத்துவதுபோல் இருக்கட்டும் என்பது தான் அவரது உட்கிடக்கை”

“நம்மட ஊருக்கு எப்பவும் இருக்கிற கொறைபாடு தானே, எல்லாம் ‘அல்லாஹ்’ நாடினால் தான்…..”

மரைக்காரின் கருத்து அஹ்மது லெவ்வையின் உட் கிடக்கைக்கு பால் வார்க்கிறது. இருவரும் கடப்பவைத் தாண்டி ரோட்டில் நடக்கின்றனர்.

2

சீனி முஹம்மது குடும்பத்தினர் அன்று மாலை, வழக்கம் போல் நன்றாக இருள் சூழ்ந்து வரும் நேரத்தில் தம் குடிசையை நோக்கி நடக்கின்றனர்.

“கேட்டீங்களா … அவகட கதய…?” சீனி முஹம்து சில வருடங்களுக்கு முன் தமது சொந்த இடமான கல்முனை முஸ்லிம் ‘குறிச்சி’ ஒன்றில் – அதுவும் காணிப்பிரச்சினை தான் – உறவினர்களோடு மனக்கசப்பு ஏற்பட்டு, இங்கு வேலை தேடி வந்தார்.

இராத் தங்கலுக்கு ஊரிலுள்ள பாடசாலை மண்டபத் தையே தரிசித்தார்.

விடிய சுபஹோடு பள்ளிவாசலில் ஊரவர் சந்திப்பில் சீனி முஹம்மதின் அடக்கமான குணமும், அப்பாவித் தன்மையும், நடுத்தர வயதும்தான் அன்று அஹ்மது லெவ்வைக்குப் பிடித்திருந்தன.

“இந்த காலத்தில எளந்தாரிமார வேலக்கி அமர்த்தினா பிரச்சனை”

ஒரு வாரத்திற்குள் அஹ்மது லெவ்வைக்கு காடு வெட்ட வும், இரவில் அவரது வயல் குடிலில் காவல் காக்கவும் இருந்ததில் அஹ்மது லெவ்வையின் நம்பிக்கைக்கு பாத்திர மாகி விட்டார் சீனி முஹம்மது.

“சீனி முஹம்மது, உண்ட குடும்பத்த இங்க கொண்டு வந்தா என்ன? அதுகள் அங்க கஷ்டப்படத் தேவை இல்ல தானே…”

“எனக்கும் அந்த யோசின தான் முதலாளி!”

அஹமது லெவ்வைக்கு வேலை செய்வதோடு, ஓய்வு நேரங்களில் இந்த முறை இரண்டு ஏக்கர் காடு வெட்டி வெள்ளாமை செய்தால் போதும். அடுத்தடுத்த வருடங்க ளில் பார்த்துக்கொள்ளலாம் என்பது சீனி முஹம்மதின் உள்ளத்தின் அடித்தளத்தில் உறைந்துபோய் கிடக்கிற திட் டம். ஆனால் சீனி முஹம்மது இங்கு வந்துவிட்டால் அடிக்கடி ஊருக்குப்போய் காலத்தை வீணாக்க வேண்டி யிருக்காது, முழு நேர உழைப்பையும் எடுத்துவிடலாம் என்பது அஹ்மது லெவ்வையின் எதிர்பார்ப்பு

முதலாளி ஒரு புதுக் குடிசை கட்ட ஓலையும் கம்புத்தடி களும் தாராளமாகக் கொடுத்தார். ஒரு வாரத்திற்குள் சீனி முஹம்மதின் குடும்பம் குடியேறியது.

சீனி முஹம்மது உழைப்பை உழைப்பென்றே எண்ண வில்லை. அஹ்மது லெவ்வை முதலாளிக்கு காடு வெட்டுவதி லிருந்து முழு விவசாயத்திற்கும் இயந்திர மாக மாறிக் கொண்டிருந்தார்…

மனைவி லைலத்தும்மா, மூத்த மகள் சரீபா, இளைய மகள் கலீமா, சிறியதுகள் சலீம், அபூபக்கர்… சீனி முஹம்மதின் குடும்பமே அஹ்மது லெவ்வையின் வீட்டில் அந்த இயந்தி ரத்தோடு ஒட்டிய பாகங்களாயினர்.

நெல்லுக் குத்த, பானை பாத்திரங்கள் கழுவ, கிணற் றில் ஊறும் நீரையெல்லாம் குடங்களாகக் கொண்டுவர… அஹ்மது லெவ்வையின் குடும்பத்தார் கிணற்றடிக்கு முழுகப் போனால் வாளிவாளியாக நீர் அள்ளிக் கொடுக்க, அரிசி ஊறப்போட்டு விட்டால் குத்தி மாவாக்குவதிலிருந்து…எத்தனை எத்தனையோ வேலைகள் நாளாந்தம்

இதுவரைக்கும் சம்பளம் என்று ஒன்று பேசிக்கொள்ள வில்லை. குடும்பத்தில் செலவு என்று ஒன்று வந்துவிட்டால் உடனே நிவர்த்தி செய்யப்படும். ஒவ்வொரு நாளும் இரண்டு வேளைச் சாப்பாடு கிடைக்கும். வேண்டிய நேரத்திற்கு ‘கஹட்ட” தாராளமாகக் குடிக்கலாம்.

குடும்பத் தலைவனான சீனி முஹம்மதிற்கு உரிய முறைப் படி வேதனம் கிடைக்கும்.

லைலத்தும்மாவும், சரீபாவும் தத்தம் உணவுப் பங்கு களை உடனுக்குடன் வீட்டுக்கு எடுத்துச்சென்று சிறியதுகளு டன் பகிர்ந்து உண்பர். சீனி முஹம்மதுவுக்கு வேளா வேளைக்கு ஒரு மரக்கறியும் சோறும் அல்லது ரொட்டியும் சம்பலும் மாறி மாறி அவர் எங்கு வேலை செய்வாரோ அங்கு அனுப்பி வைக்கப்படும் சாப்பாடு என்ற பெயரில்.

மாலை மங்கி இருள் சூழ்ந்துவரும் வேளையில் எல்லாரும் வீட்டில் இருப்பார்கள். சரீபா வீட்டுக்கு வந்ததும் குப்பி விளக்கை ஏற்றி பற்றாக்குறைக்கு ஒரு சுண்டு அரிசியை அரிச்சி உலை ஏற்றி விடுவாள்.

சீனி முஹம்மதின் உள்ளத்தில் உறைந்து கிடந்த திட்டம் மெல்லத் தலை தூக்கியது.

அன்றொருநாள் ஊர் “மாய்மைக்கு” உட்பட்ட காடு என்று நிச்சயித்துக்கொண்ட பின் சுயேச்சையாக செயல் படத் தொடங்கினார்.

சில நாட்கள் கழித்து, சந்தேகத்தின் பேரில் யூசுப் கேட் டான் “சீனி முஹம்மது ஆருக்கு காடு வெட்டுறீங்க?”

“ஏன் எனக்குத்தான்.”

“நீங்க வெட்டப்படாது.”

“ஏன்? நீங்க ஆர் சட்டம் போடா”

“வெள்ளிக்கௌம ஜம்மாவுக்குப் பொறகு பள்ளிக் கமிட்டியால விசாரணை கெடக்கு…”

பின்பு கிராமத்தில் இது பெரும் பிரச்சனையாகப் போய் விட்டது.

“வார வாரவங்க இங்க இடம் புடிக்கப்படாது” என்று வாதாடினர் ஒரு சாரார்.

“நல்லா கெடக்கு உங்கட ஞாயம், ஊர் எல்லைக்குள்ள குணசோம புடிச்சிட்டானம். சீனி முஹம்மது மாறு ஜாதிக் காரனல்லவே, அவன் ரெண்டு ஏக்கர் வெட்டினாத்தான் ஒங்களுக்கு … மறுஹா நாம என்னத்த சொல்லக் கெடக்கு.” இப்படியும் ஒரு சாரார் கருத்துத் தெரிவித்தனர்.

அஹ்மது லெவ்வை தலையிட்டு ஒரு முடிவு சொன்னார் ‘சீனி முஹம்மது எண்ட வேலை ஆள். அவனுக்கு காடு வெட்டவேண்டிய அவசியமில்லை. அந்த விசயத்த விடுங்க நா கவனிச்சிக்கிறன்.”

அவருக்கு உள்ளூர ஆத்திரமும் கோபமும். “எங்கிருந்தோ வேலை தேடி வந்தவன், ஊருல பொழங்கி சரி சமமாக நிக்கப் பாக்கிறானே.”

அன்று சீனி முஹம்மதுக்கு அவர் அளித்த உறுதி இது தான் –

உன்னுடைய பிரச்சனையை பாத்துக்க தா இருக்கிறன். நீ ஒண்டுக்கும் யோசிக்க வேண்டியதில்லை …. வாற வரு சம் வெள்ளாமை வெட்டி சூடு அடிச்ச கையோட என்ட மகள் ஜெய்லாவுக்கு கல்யாணம் நடக்கும்; அதே பந்தலில் உண்ட மகள் கல்யாணத்தையும் நடத்திப் போடுவம். எப்படி எண்ட யோசின? அதோட உண்ட மகளுக்கு சீதனமா குடுக்க ஒரு ஏக்கர் வயல் காணிய ”உறுதி எழுதித்தாரன், ‘ ‘ அஹ்மது லெவ்வை அடுக்கிக் கொண்டே போனார்.

“மூத்தவளின் கல்யாணத்தயும் நடத்தி, ஒரு ஏக்கர் விவசாய நெலமும் தாரதாயிருந்தா…சீனி முஹம்மதின் குடும்பமே அஹ்மது லெவ்வையின் வயல்களில் செக்கு மாடுகளாயினர்.

வயலெல்லாம் பச்சைப் பசேலென காட்சியளித்தபோது சீனி முஹம்மது, லைலத்தும்மா, சரீபா ஆகியோரின் உள்ளங் களும் பசுமை பசுமையாக இருந்தன. மழை ஒழுங்காகப் பெய்யாத ஒரே ஒரு காரணத்தால் ஆங்காங்கே “கதிர்கள்” வரண்டன ஆனால் யானையின் அட்டகாசங்களுக்கு இலக் காகவில்லை. கிளி குருவிகள் கூட ஒரு மணி நெல்லைத் தீண்ட இந்தமுறை சந்தர்ப்பம் இல்லை. சீனி முஹம்மதின் வயல் “காவல்” அவ்வளவு விழிப்பாக இருந்தது.

இதற்கிடையில் கிராமத்தில் ஒரு சலசலப்பு.

படித்த வாலிபன் நூஹுதீன் சரீபாவில் கவரப்பட்டு சீனி முஹம்மதின் குடும்பத்தில் சம்மந்தம் செய்துகொள்ள விரும்புகிறானாம்.

லைலத்தும்மா இராப்பகலாக யோசித்தாள். தகுந்த தருணம் வரும்போது புருஜனுக்கு உணர்த்தினாள் –

“இனி நாம கல்முனைக்குப் போய் மாப்பிள பேசறது இருக்கட்டும். நூஹு நல்ல பொடியன். அவன பல இடங் களிலிருந்து மாப்பிள கேக்கிறாங்களாம்…”

ஊர் இரண்டுபட்டு பிரச்சனைகள் கிளம்பும். அத்தோடு நூஹுதீன் குடும்பம் அஹமது லெவ்வைக்கு சொந்தக்காரர்கள் என்ற சிக்கல்கள் தான் சீனி முஹம்மதை பின்னடையச் செய்தன.

இந்தச் சம்பந்தந்தால் சீனி முஹம்மது ஊரவருள் ஒருவ ராக மாறுவது ஒருபக்கம்…கிட்டத்து சொந்தக்காரனாக…சரிசமமாக…

அஹ்மது லெவ்வையால் இதை அனுமதிக்க முடியாது. அவர் வெள்ளாமை வெட்டி சூடு அடித்து ஓய்ந்ததும் தன் கருத்தை வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்.

“ஒரே பந்தலில் ரெண்டு கல்யாணத்த நடத்த ஏலாது, மழை தண்ணீ இல்லாததால வெள்ளாமையில பெருவாரி நட்டம் … அதோட அந்த புஹாரியின்ட மகன் நூஹ் உன்ட மகளுக்கு மாப்பிள்ளயா வாரது எனக்கு விருப்பமில்ல…”

லைலத்தும்மா தன் புருசனோடு பேச்சுக் கொடுக்கிறாள் அவருடைய செவிப்பறைகளோ செத்துவிட்டன. பொறி கலங்கிய நிலை. நடைப்பிணமாய் நடக்கிறார். உதடுகள் உலர்ந்து தலை விண் விண்ணென்று குத்த நெஞ்சு லேசாக வலி; வெப்ப மூச்சுக்கள் வெளியாகின்றன. யாழ்ப்பாணச் சுருட்டு, பிடிக்குக்கூட காணாமல் குறுகி அணைந்து விரல்க

ளுக்கிடையில் நசுங்கிக் கிடக்கிறது.

சீனி முஹம்மது, லைலத்தும்மா, சரீபா முதலியோர் தம் குடிசைக்கு வந்தபோது சின்னஞ் சிறுசுகள் பசியோடு உறங்கி விட்டிருந்தனர். முன் விறாந்தையில் நூஹுவோட வாப்பா புஹாரி அவர்களுக்காக காத்திருந்தார்.

“கன நேரமா வந்து?”

“இல்லை இப்பதான்”

“அஹ்மது லெவ்வை கழுத்தறுத்துப் போட்டாரே”

“எல்லாம் கேள்விப்பட்டன்… இனி எல்லாத்தயும் விட்டுப்போட்டு, காடு வெட்டத் தொடங்கின நீங்க அடுத்த மொறைக்கி காட்ட வெட்டுங்க .. ஒரு காலத்தில குணசோமா நம்மட ஊருல காடு வெட்டப்போய், அவன் ஊர புடிச்சிட்டான் எண்டு பகை. முஸ்லிம் ஊருதானே எண்டு நம்பி வந்த நீங்க பக்கத்தில அவனிட்ட போய் வேல செஞ்சிருந்தாலும் இந்த நேரம் உங்களுக்கு ரெண்டு ஏக்கர் நெலம் தந்திருப்பான். இப்பவும் அவன ஒருக்கா புடிச்சா நம்மட ஊருக்காரனெண்டு அதக்கூட “மாய்மயில” பிரச்சனையா கெடக்கிற, அந்த ஆத்தோர ரெண்டு ஏக்கர் அருமையான நீர்ப்பாசன காணிய, கிராமசேவகர் மூலமா ஒங்களுக்கு எடுத்துத் தருவான்…”

நீண்ட இடைவெளிக்குப் பின், தெளிவும் உற்சாகமும் பெற்ற சீனி முஹம்மது புஹாரியுடன் குணசோமாவைச் சந்தித்து விவரித்தனர். கிராமசேவகரிடம் போனார்கள். சீனி முஹம்மது ஐந்து ஏக்கர் நிலம் கேட்டு விண்ணப்பித்தார்.

வீசாரணைக்குப்பின், முடிவாக பகுதி டீ.ஆர்.ஓ. கூறினார் -“சீனி முஹம்மது எங்கு பிறந்திருந்தாலும் அவர் இந்த முஸ்லிம் கிராமத்தில் குடியேறி பல காலமாகிறது. நல்ல உழைப்பாளி, காணி இல்லாதவருக்கு காணி வழங்கி உற் பத்தியைப் பெருக்க வேண்டிய காலகட்டத்தில் அவருக்கு காணி இல்லை என்று அறியும்போது விந்தையாக இருக்கி றது. பிரச்சினை காரணமாக குணசோமாவின் மேற்பார்வை யில் இருந்த ஆத்தோரக் காணியை முஸ்லிம் கிராமத் திற்கே சேர்த்து, சீனி முஹம்மது அவர்களுக்குச் சொந்தமாக அளிக்கிறோம். விரைவில் அவர் அவற்றிற்குரிய ‘உறுதியை’ பெற்றுக் கொள்வார்.”

அத்தோடு அவருக்கு விவசாயக் கடனும் கிடைத்தது.

வெகுவிரைவில் புதிய வீட்டுக்கு குடியேறுவார். இந்த வருடம் வெள்ளாமை வெட்டியதும் அவருக்கும் ‘உசார்’ பிறக்கும். புஹாரியின் மகன் நூஹுதீனும் சீனி முஹம்மதின் மகள் சரீபாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கு. பந்தல் போடவேண்டும், ‘பீக்கர் எடுக்க வேண்டும்: ஊரவ ருக்கு ஆட்டுக் கடாய் அறுத்து சாப்பாடு போடவேண்டும்’ என்பதெல்லாம் லைலத்தும்மாவின் மனத்தை ஆட்கொண்ட விருப்பமாகும்.

– மல்லிகை – செப்டெம்பர்-ஒக்டோபர் 1977 – இரவின் ராகங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு : ஜூலை 1987, மல்லிகைப்பந்தல், யாழ்ப்பாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *