தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 9,557 
 
 

கதிரவன் பூமியைப் பார்க்க ஆவலுடன் வந்து கொண்டிருக்கும் அதிகாலை நேரம்.

நிம்மதியாக உலகை மறந்து உறங்கிக் கொண்டிருந்த துரையின் உடம்பில் அந்த அதிகாலை நேர மஞ்சள் வெயிலின் சூட்டின் தாக்கம் சற்றே அதிகமானதில், உறக்கம் கலைய, விழித்துக் கொண்டு, படுக்கை நிலையில் இருந்து கொண்டே தலை தூக்கிப் பார்த்தது.

அதன் அருகில் படுத்திருந்த சின்னம்மா இன்னும் எழுந்திருக்கவில்லை. துரை, சின்னம்மாவுக்கு முன் எழுந்து கொள்வது வழக்கம்.

பந்தம்இன்று வழக்கத்தைவிட தானும், சின்னம்மாவும் அதிக நேரம் உறங்கிவிட்டோமே என்கிற நினைப்பு துரைக்கு வந்ததும், துரை தன் சோம்பறித்தனம் அத்தனையையும் உதறித் தள்ளிவிட்டு எழுந்து நின்று கொண்டது.

தன் உடம்பின் முன் கால்களை நீட்டி ஒருமுறையும், பின் கால்களை நீட்டி ஒருமுறையும் நெட்டி முறித்து சுளுக்கு எடுத்துக் கொண்ட அது “சடசட’வென தன் காது மடல்களைத் தன் தலையோடு ஆட்டித் தன் உடம்பு மீதிருந்த அழுக்குகளை அகற்றியது.

அடுத்துத் தன் கடமையாக சின்னம்மாவை எழுப்பும் முயற்சியாக, இன்னும் படுத்துக் கொண்டிருக்கும் அவள் அருகில் சென்று, அவள் முகம் அருகே முகர்ந்து பார்த்தது.

வழக்கத்துக்கு மாறாக சின்னம்மாவின் உடம்பிலிருந்து ஏதோ ஒரு வகை வித்தியாசமான நாற்றம் வந்தது.

நேற்று அதிகம் உழைத்து இருப்பாள் போலிருக்கிறது.

“சரி… அவள் உறங்கினது போதும். இனி அவள் விழிக்க வேண்டியதுதான்’ என்று நினைத்த துரை, தன் வழக்கமான பாஷையில் கத்திக் குரைத்தது. எப்போதும் அவன் குரல் கேட்டவுடன், தன் உறக்கத்தில் இருந்து எழுந்து கொள்வாள் சின்னம்மா.

இன்று ஏனோ துரை பத்து தடவைக்கும் மேல், அதுவும் வழக்கத்துக்கு மாறாக தன் வயிற்றிலிருந்து காற்று, ஜீவன் அத்தனையும் வாய்க்கு இழுத்துக் கொண்டு வந்து குரைத்தும், சின்னம்மா இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என அசைந்து கொடுக்கவுமில்லை. கண் விழித்துக் கொள்ளவுமில்லை.

மீண்டும் ஒருமுறை சின்னம்மாவின் முகம், கை,கால்கள் என முகர்ந்து பார்த்தது.

ஏனோ வழக்கத்துக்கு மாறாக சின்னம்மாவிடம் ஏதோ ஒருவகை நாற்றம், என்னவென்று தெரியவில்லையே. “ஏன் சின்னம்மா இன்னும் கண்விழிக்காமல் இருக்கிறாள்? இது என்ன என்றும் இல்லாத அளவு இன்று இவளுடைய உடம்பில் இந்த நாற்றம் வீசுகிறது? எனக்கு வேறு பசிக்கிறது’.

சின்னம்மாவையே சுற்றிச் சுற்றி வந்த துரை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தபோது, அவன் கண்களில் பட்டது தூக்குச் சட்டி. அவன் நித்தம் சின்னம்மாவுக்காக தேநீர் வாங்க எடுத்துச் செல்லும் எவர்சில்வர் தூக்குப் பாத்திரம். துரை அந்த பாத்திரத்துக்குள் உற்று நோக்கியது. என்றும் வழக்கமாக தேநீர் வாங்கி வருவதற்காக சின்னம்மா வைக்கும் சில்லரைக் காசுகள் அதிலிருந்தன.

“அப்பாடா டீ வாங்க சில்லரைக் காசுகள் வைத்துவிட்டுத்தான் சின்னம்மாள் உறங்குகிறாள். சரி, உறங்கட்டும். நாம் போய் தேநீர் வாங்கி வருவோம்’

தூக்கு சட்டியின் வளைவு தொங்கு கம்பியை வாயில் கவ்விக் கொண்டு தேநீர் கடைக்கு ஓடியது.

தேநீர் கடைக்காரர் முனியாண்டி, துரையைப் பார்த்தவுடன் தன் கடைக்கு முன் நின்று கொண்டிருந்த பையனிடம், “”டே மாரியப்பா, துரை கிட்டே இருந்து தூக்கு சட்டிய வாங்கு” என்று உத்தரவிட்டவுடன், மாரியப்பன் துரையிடம் வந்து தூக்குச் சட்டியை வாங்கிக் கொண்டு, கடைக்காரரிடம் கொடுத்தான். கடைக்காரர் தனக்கு வர வேண்டிய சில்லரையை தூக்கு சட்டியில் இருந்து எடுத்துக் கொண்டு, தூக்குச் சட்டியின் அரை பாகத்துக்கு தேநீரை சுடச்சுட நிரப்பி, மீண்டும் மாரியப்பனிடம் கொடுத்தார். மாரியப்பன் துரையின் அருகில் சென்று, அவன் வாயில் அதை மாட்டிவிட துரை மீண்டும் சின்னம்மாவின் வீட்டை நோக்கிச் சென்றது.

மெதுவாக சின்னம்மாவிடம் வந்து சேர்ந்தது. தூக்குச் சட்டி தேநீருடன் கவிழ்ந்துவிடாமல் இருக்க, ஓர் இடம் பார்த்துப் பத்திரமாக வைத்த துரைக்கு, சின்னம்மாள் இன்னும் கண் இமைக்காமல் உறங்கிக் கொண்டு இருப்பது அதிசயத்தைக் கொடுத்தது.

மீண்டும் அது தன் பாஷையில் “டீ வாங்கி வந்திருக்கேன். எழுந்திரி சின்னம்மா’ என்று குரைத்துப் பார்த்தது. ஆனால் இம்முறையும் சின்னம்மா எழாமல் அசையாமல் படுத்துக் கிடந்தாள்.

துரைக்கு கடந்த ஏழு வருடங்களாக வராத ஆத்திரம் முதன்முறையாகச் சின்னம்மா மேல் வந்தது.

அது கண் திறக்காத சிறு குட்டியாக இருந்த காலத்திலும், கண் திறந்து பார்த்து உணவுக்காய், அனாதையாய் அல்லல்பட்டு அலைந்த காலத்திலும், அதற்கு உற்ற உறவாய், நண்பனாய், தாயாய் கிடைத்தவள்தான் இந்தச் சின்னம்மா. சின்னம்மாவின் கைகளில் தஞ்சம் அடைந்த பிறகு, துரைக்கு நேற்றுவரை உணவுக்கோ, அவளுடைய பாசத்துக்கோ பஞ்சம் வந்ததில்லை. ஆனால் இன்று அது முதல்முறையாகக் காலை தேநீருக்குப் பட்டினி கிடக்கும் சூழ்நிலை வந்துவிட்டது.

துரையின் உடம்பை ஒருவிதமான பயம் கலந்த பதற்றம் தொற்றிக் கொண்டது.

“ஏன் எழ மாட்டேங்கிறாள் இந்த சின்னம்மா? ஒரே ஒரு சத்தத்திற்கே எழுந்து கொள்வாள். எழுந்ததும் என்னை அருகில் வரச் சொல்லி என் உடம்பை வாஞ்சையுடன் தடவி தனது பாசத்தை வெளிப்படுத்துவாள். இன்று என்ன ஆனது சின்னம்மாவுக்கு?’

திடீரென தனது ஐந்து அறிவு மூளையைச் சுற்றிலும், சின்னம்மாவைப் பற்றிய பயம் என்னும் நெருப்பு பற்றிக் கொள்ள துரை, சின்னம்மாவை வேறு யாரையாவது வைத்து எழுப்ப வேண்டும் என்கிற உணர்வு மேலோங்கியவனாக அங்கிருந்து ஓடியது.

அது வாங்கி வைத்திருந்த தேநீர், தூக்குச்சட்டிக்குள் வெகுவாக வெப்பத்தை இழந்து கொண்டிருந்தது.

துரை சற்று தூரம் தள்ளி இருக்கும் மருதமலையானின் வீட்டுக்கு வந்தது. குரைத்தது.

அவனது சப்தம் கேட்டு – மருதமலையான் வீட்டுக்குள் இருந்து வெளியே வாசலுக்கு வந்தவர் துரையைப் பார்த்து வியந்தார்.

துரை தனது விநோதக் குரலால் அவரைத் தன்னுடன் வரும்படி அழைத்தது. சின்னம்மாவின் இருப்பிடத்துக்குச் சென்று துரையுடன் பழகுவது மருதமலையானின் வழக்கம். துரையின் குரலில் என்றும் இல்லாத பதற்றம் அன்று தென்பட்டதை உணர்ந்த மருதமலையான் அவன் அருகில் வந்து, துரை ஏதோ பயத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்.

“”ஏன்டா இந்தப் பயம்? பேசாம என் வீட்டுக்கு வந்துடு. உன்னை ராசாமாதிரி பாத்துக்கறேன்னு சொன்னா அந்தப் பிச்சைக்காரிகிட்டதான் இருப்பேன்னு அடம்பிடிக்கிற? இப்ப என்னடா வேணும் உனக்கு?” என்றார் மருதமலையான். துரை மருதமலையானின் வேட்டி நுனியைக் கடித்து அவரைத் தன்னுடன் வருமாறு இழுத்தது.

மருதமலையான் வேறு வழியின்றி துரையைப் பின்தொடர்ந்து சின்னம்மாவின் இருப்பிடத்துக்கு வந்தார்.

இன்னும் “ஆ’ வென்று வாய் பிளந்து கிடக்கும் சின்னம்மாவைப் பார்க்கும் மருதமலையான், “இவ ஏன்டா இன்னிக்கு இப்படிக் கிடக்கிறா?’

என்றவன் சின்னம்மாவின் அருகில் சென்று, “”கிழவி, ஏ, கிழவி, சூரியன் உச்சிக்கு வந்துட்டான். இன்னும் என்ன உறக்கம்? எழுந்திரு” என்று சின்னம்மாவின் கையைப் பிடித்துச் சொன்னார்.

சின்னம்மாவின் கை அந்த வெயில் காலத்திலும் “சில்’ என்று ஐஸ் கட்டியென உணர்வு கொடுத்தது.

திடீரென ஏதோ நினைத்தவனாய், சின்னம்மாவின் இடதுகை நாடியைப் பிடித்துப் பார்த்தார். நாடி சுத்தமாய் நின்று போயிருந்தது. அதிர்ச்சியோடு துரையைப் பார்த்தார்.

“”செத்துப் போயிட்டாடா” மருதமலையான் துரையைப் பார்த்துச் சொன்னார். அவர் சொன்னதும் ஒன்றும் துரைக்கு விளங்கவில்லை.

மருதமலையான் அங்கே ஓர் ஓரத்தில் வைத்து இருந்த தூக்குச் சட்டியைப் பார்த்தான். அதில் ஆறிப் போயிருந்த டீ இருந்தது. அங்கே இருந்த ஒரு சட்டியில் டீயை ஊற்றி, துரையைப் பார்த்து, “குடி’ என்றார்.

துரைக்குக் கோபம் வந்தது. அதற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, சின்னம்மா கொடுக்காமல் இதுவரை தேநீர் அருந்தியதில்லை. இன்று என்ன புதுப்பழக்கம்?

மருதமலையானைப் பார்த்து துரை குரைத்தது.

“”நாயே, உன் சின்னம்மா செத்துப் போயிட்டாடா. இனி அவ உனக்கு டீ தண்ணி எல்லாம் தரமாட்டா. நீயா நக்கி நக்கி குடிச்சாதான் உனக்கு இனிமேல் டீ. பேசாம என் தோட்டதுக்கு வந்துடு. மத்த நாய்க மாதிரி நீ தோட்டத்த காவல் எல்லாம் காக்க வேண்டாம். வீட்ல ராஜா மாதிரி இருந்தா போதும். வர்றியாடா”

துரைக்கு மருதமலையான் சொன்னதன் பொருள் விளங்கவில்லை. அதனுடைய கவனம் எல்லாம் சின்னம்மாவின் மேலேயே இருந்தது.

சின்னம்மாவின் இறப்புச் செய்தி கேட்டு நிறையப் பேர் அங்கே வந்துவிட்டார்கள்.

“”பாவம்பா, இந்த சின்னம்மா. பெரிய இடத்துப் புள்ளைப்பா. கட்டின புருஷன் காசு, காசுன்னு சுயநலக்காரனா இருந்ததால, அவனோட உண்மையான பாசம் கெடைக்காம, புத்தி சுவாதீனமில்லாம போயிட்டா. புள்ள குட்டிக இல்ல. தோ, இந்த நாயைத்தான் தன் புள்ளையின்னு நெனைச்சு அதுக்குத் துரைன்னு பேர் வச்சு, இவ்வளவு நாளா வளர்த்தா, எவ்வளவோ வசதியிருந்தும் தானே கூலி வேலைக்குப் போய், யாரையும் நம்பாமல் வாழ்ந்தாள். இந்த நாய்தான் அவளுக்கு ஒரே துணை. இந்த நாயும் வேற எங்கயும் போகாம சின்னம்மாவே கதின்னு கெடந்துச்சு”

ஆட்கள் நிறையப் பேர் வரவும் துரை குரைக்கக் கூடமுடியாமல் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கொண்டு சின்னம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தது.

ஆளாளுக்கு ஏதேதோ வேலைகள் செய்து சின்னம்மாவின் உடலை பாடையில் கிடத்தி, சுடுகாட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள். துரை அவர்கள் பின்னாலேயே ஓடியது. சின்னம்மாவின் உடலில் தீ மூட்டி அவர்கள் கலைந்து சென்ற பின்பும், துரை அங்கேயே கண்ணீருடன் நின்று கொண்டு இருந்தது.

மறுநாள் அந்தப் பக்கமாக வந்த மருதமலையான் துரை அங்கேயே சுருண்டு கிடந்ததைப் பார்த்தார். அதன் அருகே வந்து தலையைத் தடவிக் கொடுத்தார்.

“”வா… வீட்டுக்குப் போகலாம்” துரையைப் பிடித்து இழுத்தார்.

துரை அவர் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஓடியது. மருதமலையான் சிறிது தூரம் விரட்டிக்கொண்டு வந்தார்.

“”ஏய் ஓடாதே… நில்லு…”

ஆனால் துரை அவரைவிட்டு விலகி ரொம்ப தூரம் போய்க்கொண்டே இருந்தது. அன்று காலையில் இருந்து எதுவும் சாப்பிடாத மயக்கம். கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. இருந்தாலும் தள்ளாடி, தள்ளாடி அது ஓடிக்கொண்டே இருந்தது. சின்னம்மா போன இடம் தேடி.

ய்

– கஜா (ஜனவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *