(1951 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தாம்ஸன் மோட்டார் கம்பெனி மானேஜர் வசதராஜனுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது என்று தெரிந்ததும் அந்தக் கம்பெனியில் உத்தியோகம் வகித்த அனைவரும் கவலையில் ஆழ்ந்தனர். வேறு எதற்காகவும் இல்லை; மிகவும் குறுகிய காலத்திற்குள் அன்பினாலும் பரிவினாலும் தங்களுடைய உள்ளங்களைக் கவர்ந்த மானேஜருக்கு அவருடைய கல்யாணத்தின் போது என்ன பரிசளிப்பது என்ற யோசனையில்தான்.
அதே மாதிரிதான் திருச்சி குருநாத முதலியார் தம் பெண் பத்மாவுக்குச் சென்னையில் பெரிய மோட்டார் கம்பெனி ஒன்றில் மானேஜராக இருக்கும் ஒரு பையனை நிச்சயம் செய்து விட்டார் என்று தெரிந்ததும் திருச்சி ஜில்லா முழுவதும் இருந்த பணக்காரர்களும் உத்தியோகஸ்தர்களும் கலைப்பட ஆரம்பித்தனர்.
இப்படியாக மாப்பிள்ளைக்குத் தெரிந்தவர்களும் பெண்ணின் தகப்பனாருக்குத் தெரிந்தவர்களும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் பொது ஒரு நாள் பத்திரிகையில் “தாம்ஸன் கம்பெனி மானேஜர் வாதராஜனுக்கும் திருச்சி குருநாத முதலியாருடைய பெண் பத்மாவுக்கும் நிச்சயம் ஆகியிருந்த கல்யாணம் நின்றுவிட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்ற இருந்த விளம்பரத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார்கள். அது உண்மையோ, பொய்தானே என்று அறியக் கண்களைக் கசக்கிக் கொண்டு மறுபடியும் வாசித்தார்கள் சிலர்.
குருநாத முதலியார் வீட்டின் முன் பக்கத்தில் இருந்த ஹாலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவருக்கு எதிரில் இருந்த ஒரு ‘ஸோபா’வில் பத்மாவும் பங்கஜமும் உட்கார்ந்திருந்தார்கள். மூவரும் தீவிரமாக ஒரு விஷயத்தைப் பற்றி விவாதித்து அப்பொழுதுதான் சற்று ஓய்ந்து அவரவர்கள் தனித் தனியாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தார்கள்.
வெகு நேரம் கழித்து பத்மா சொன்னாள்; “பங்கஜம்! நான் கேட்கிறேன், இதை விட்டால் வேறு நல்ல வழிதான் என்ன சொல்லேன்? நிச்சயமாக இதற்கு நீ சம்மதித்துத்தான் ஆகவேண்டும். அப்பாவிடம் வாதாடி ஒரு வழியாக அவரைச் சம்மதிக்கச் செய்துவிட்டேன். உனக்கு நான் செய்துவிட்ட துரோகத்திற்கு இதுகூடச் செய்யக் கூடாதா? எப்படியும் நீ சம்மதித்துத்தான் ஆகவேண்டும்……” அவளுடைய குரலில் கனிவும் அநுதாபமும் ததும்பி நின்றன.
பங்கஜம் தலையைத் தூக்காமல் கீழே பார்த்தபடியே சொன்னாள்: “வரும் அதிர்ஷடத்தைப் பற்றி நான் கொஞ்சம் கூட கவலைப்பட வில்லை, பத்மா. எனக்காகப் பிறர் ஒருவர் கஷ்டப்படுவதை ஒரு நாளும் நான் விரும்பமாட்டேன்…!”
“திருப்பித் திருப்பி ‘எனக்காக பிறர் படும் கஷ்டம்’ என்று என்னைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறாயே! இதோ பாரேன்; உனக்காகச் சொல்ல வில்லை. நிச்சயமாக எனக்கு இப்பொழுது கல்யாணத்தில் பற்றுதல் இல்லை. டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை என் உள்ளத்தில் ஊறிவிட்டது. ஆனால் தாயில்லாத பெண்ணை வாஞ்சையுடன் வளர்த்த என் தகப்பனாரின் கடைசிக் காலத்தில் அவருடைய மனதைப் புண்ணாக அடிப்பானேன் என்றுதான் என் ஆவலையும் தணித்துக் கொண்டு இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதித்தேன். ஆனால் அதிருஷ்டவசமாக உன்னைச் சந்தித்தவுடன் என் எண்ணத்தை மறுபடியும் மாற்றிக் கொண்டு விட்டேன், பங்கஜம்! நீ எனக்குச் செய்த பெரிய உதவியின் மூலம் உன் வாழ்க்கையே பாழாகிவிட்டது. எனக்குச் செய்த அந்த உதவியினால்தான் டாக்டருக்குப் படிக்கலாம் என்ற என் ஆசையும் துளிர்விட்டது. அதனால் உன் சிநேகிதியிடம் உனக்கு அன்பு இருந்தால் நிச்சயம் இதற்கு நீ சம்மதித்துத் தான் ஆகவேண்டும். இதில் உனக்கு என்ன கஷ்டம், சொல்லேன்!” என்றாள் பத்மா.
அவர்களுடைய பேச்சு நமக்கு நன்றாகப் புரிய வேண்டும் என்றால் நாம் இரண்டு வருஷங்களுக்கு முன்னால் நடந்ததை அறிந்து கொள்ள வேண்டும்.
அப்பொழுது பத்மாவும் பங்கஜமும் திருச்சி பெண்கள் பள்ளிக்கூடத்தில் மாணவிகள், பத்மா திருச்சி ஜில்லாவில் பெரிய பணக்காரர்களுள் ஒருவராகிய குருநாத முதலியாரின் ஒரே பெண். பங்கஜம் திருச்சிப் பள்ளிக்கூடம் ஒன்றில் உபாத்தியாயராக இருந்த ஒருவருடைய பெண். பத்மா, ஐந்து மைல்களுக்கு அப்பால் இருந்த கிராமத்திலிருந்து தினம் திருச்சிக்குக் குதிரை வண்டியில் வந்து படித்துவிட்டுப் போனால் அவளுடைய உடல்நலம் கெட்டுவிடும் என்று நினைத்த குருநாத முதலியார் தாமும் மகளுடன் திருச்சிக்கே வந்துவிட்டார். பங்கஜமோ, தினம் காலையில் எட்டரை மணிக்குச் சாப்பிட்டுவிட்டு இரண்டு மைல்களுக்கு அப்பால் இருந்த பள்ளிக்கூடத்திற்குத் தினம் இரண்டு தடவைகள் நடந்து போய் வந்தாள்.
இப்படி இருந்த இருவரும் ஐந்தாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தான் சிநேகமானார்கள். அன்பும், அடக்கமும், அறிவும் உடைய இருவரும் பழகிய சில நாட்களுக்குள்ளேயே மனமொத்த சிநேகிதி களாகிவிட்டார்கள்.
குருநாத முதலியாருக்குப் பத்மா ஒரே பெண். அத்துடன் தாய் இல்லாதவள். அதனால் முதலியார் அவளை வீட்டில் அதிகம் படிக்க விடுவதில்லை. ராத்திரி வேளைகளில் எட்டு மணிக்குமேல் படித்தால் உடம்பு கெட்டுவிடும் என்பார். இந்த மாதிரியாக முதலியாரின் அன்பு மிகுதியினால் பத்மாவின் வகுப்பில் முதலாவதாக நிற்கும் அளவுக்குப் படிக்க முடியவில்லை. பங்கஜம் தான் வகுப்பில் முதல் மார்க்கு வாங்குவாள். பத்மாவக்குக் கணக்கில் மாத்திரம்தான் கொஞ்சம் பயம். மற்றப் பாடங்களில் நல்ல கெட்டிக்காரியாக இருந்தாள்.
அடுத்த வருஷம் அவர்கள் இருவருக்கும் எஸ்.எஸ்.எல். சி, பரீக்ஷை வந்தது. வேறு பள்ளிக் கூடங்களிலிருந்து வந்த உபாத்தியாயர்கள் பரீக்ஷை ஹாலைப் பார்வையிடும் ‘ஸுபரின்டண்டு’களாக இருந்தார்கள்.
பத்மாவும் பங்கஜமும் ஒவ்வொரு பரீஷையிலும் நன்றாகவே எழுதி வந்தார்கள். கடைசி நாள் கணக்குப் பரீஷை அன்று பள்ளிக்கூடத்திற்கு வந்து கொண்டிருந்த போது பத்மா பங்கஜத்தினிடம் சொன்னான்: “நிச்சயமாக ‘பாஸ் மார்க்’ வாங்குவதற்கு எனக்கு ஒரு சிரமமும் இருக்காது, பங்கஜம். ஒன்றே ஒன்று: முதல் கணக்கைப் போடும் போதே தப்பாகி விட்டதோ பாக்கியுள்ள அவ்வளவு கணக்குகளும் தப்பாகப் போய்விடும். முதல் கணக்கைச் சரியாகப் போட்டு விட்டேன் என்ற திருப்தி ஏற்பட்டுவிட்டால் அப்புறம் எல்லாக் கணக்குகளையும் தைரியத்துடன் போட்டுவிடுவேன். அதனால் பரீஷைக் கேள்வித் தாளில் ஐந்தாவது கணக்கை தான் முதலில் போடுகிறேன்.நீயும் முதலில் அதையே போட வேண்டும். அது முடிந்தவுடன் அந்தக் கணக்கின் விடையை நீ எனக்குக் காண்பிக்க வேண்டும். என்ன? அந்தக் கணக்குச் சரி தான் என்று ஆகி விட்டால், அப்புறம் எனக்குக் கவலையே இல்லை. மனம் தானாகவே தைரியம் அடைந்துவிடும். நூற்றுக்கு எண்பது ‘மார்க்’வாங்கிவிடுவேன். ஆனால் அது நீ எனக்கு முதலில் தைரிய மூட்டுவதில் இருக்கிறது. ஐந்தாவது கணக்கின் விடையை எனக்கு முதலில் காண்பிக்கிறாயா? என்ன?” என்றாள். பங்கஜமும் சம்மதித்தாள். அநேகமாகக் கணக்குப் பரீக்ஷைகளின் போதெல்லாம் அவர்கள் இப்படிச் செய்வது வழக்கம்தான்.
பரீஷை ஹாலில் கேள்வித் தாள்களை எல்லோரிடமும் கொடுத்துவிட்டு ‘ஸூபெரின்டண்டுகள்’ தங்கள் கழுகுக் கண்களால் ஹாலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பத்மாவும் பங்கஜமும் எடுத்தவுடன் ஐந்தாவது கணக்கைப் போட ஆரம்பித்தார்கள். பத்மாவுக்கு அந்தக் கணக்கின் விடை 65 என்று வந்தது. தலையை நிமிர்த்தி முன் பெஞ்சியில் உட்கார்த்திருந்த பங்கஜத்தைப் பார்த்தாள். விடை எழுதிக்கொண்டு வரும் காகிதத்தைச் சற்றுத் தூக்கிப் பிடித்தாள் பங்கஜம். அதில் 65 என்று கொட்டை எழுத்துக்களில் இருந்த விடையைப் பார்த்தவுடன் பத்மா ஆனந்தத்துடன் அடுத்த கணக்கைப் படிக்கலானாள்.
பங்கஜம், தான் காட்டியதைப் பத்மா பார்த்துவிட்டாள் என்று தெரிந்ததும் அடுத்த கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவளுடைய மேஜைக்கருகில் ‘சறுக் சறுக்’ என்று ‘பூட்ஸ்’ சத்தம் கேட்டது. அவள் தலை நிமிர்ந்து பார்த்தாள். ஹால் ‘ஸூபெரின்டண்டு’ ஒருவர் அவள் எதிரில் நின்று கொண்டிருந்தார்.
அவர் “உன் பேப்பரை இப்படிக் கொடு” என்று பங்கஜத்தை நோக்கிக் கேட்டதும் அவள் உள்ளமும் உடலும் ஒருமுறை நடுங்கின. பிறகு பர்மாவின் விடைத்தாளை வாங்கிப் பார்த்தார். அதை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டுப் பங்கஜத்தின் விடைத்தாளுடன் ஹாலின் கோடிக்குப்போய், அங்கே உயர்ந்த மேடையில் உட்கார்ந்து கொண்டிருந்த தலைமை ஸூபரிண்டன்டிடம் பங்கஜத்தின் விடைத்தாளைக் காட்டி, ஏதோ சொன்னார்.
பங்கஜத்தின் தலையைச் சுற்றியது; கண்களில் நீர் நிறைந்தது.
அவள் கண்களை ஒருமுறை கசக்கி விட்டுக் கொண்டபோது, தலைமை ‘ஸூபரின்டண்டு’ அவள் அருகில் வந்தார். “நீ வெளியில் போகலாம், அம்மா!” என்று மெல்லிய குரலில் சொன்னார்.
தான் பத்மாவுக்குக் கணக்கின் விடையைக் காண்பித்ததைக் காப்பி அடித்ததாக நினைத்துக் கொண்டு தன்னைப் பரீஷை ஹாலை விட்டே வெளியேற்றுகிறார்கள் என்று தெரிந்தவுடன் வெட்கத்தினாலும், அவமானத்தினாலும் துக்கத்தினாலும் அவள் உடல் முழுவதும் குன்றியது. நேராக வீட்டுக்குப் போய்க் கதவைத் தாளிட்டுக் கொண்டு விம்மி விம்மி அழுதாள்.
மத்தியானம் அவளுடைய தகப்பனார் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும், அவருடைய முகத்தைப் பார்க்க நடுங்கிய பங்கஜம் கதவைத் திறக்காமல் விம்மிக் கொண்டிருந்தாள். அவளுடைய தாயும் தந்தையும் கதவைத் திறக்கும்படி எவ்வளவோ சொல்லியும் அவள் திறக்கவில்லை. சாயங்காலம் பத்மா வந்த பிறகு தான் பங்கஜம் கதவைத் திறந்தாள். சிறிது நேரமாக ஓய்ந்திருந்த அவள், பத்மாவைப் பார்த்தவுடன் மறுபடியும் அழ ஆரம்பித்துவிட்டாள்.
பிறகு நடந்ததை யெல்லாம் பங்கஜத்தின் தகப்பனாரிடம் பத்மாவே சொன்னாள்.
சில நாட்களுக்கு முன்புதான் பங்கஜத்திற்குக் கல்யாணம் நிச்சயம் ஆகியிருந்தது. பொருளாதார நிலையில் மிகவும் கீழே இருந்த அவளுடைய தகப்பனரால் தன்னைப் போல ஒரு பள்ளிக்கூட உபாத்தியாயரைத் தான் பங்கஜத்திற்குப் பார்க்க முடிந்தது. அவரும் முப்பது வயதானவர், முதல் தாரம் தான். அந்த இடம் கூடிய வரையில் எல்லோருக்கும் திருப்தியாகத்தான் இருந்தது. பங்கஜத்தின் பரீஷைகள் முடித்தவுடன் கல்யாணத்தை வைத்துக் கொள்வதாக தீர்மானித்திருந்தார்கள்.
ஆனால்!
பள்ளிக்கூடத்திலிருந்து இந்த மாதிரி ஒரு நல்ல பெயருடன் வரும் பெண்ணைச் கல்யாணம் செய்து கொள்ள அந்தப் பள்ளிக் கூட உபாத்தியாயர் சம்மதிக்கவில்லை. கல்யாணம் நின்றது.
அந்த வருஷக் கடைசியில் பங்கஜத்தின் தந்தை ஓய்வு பெற்றார். அதற்குப் பிறகு சென்னையிலேயே தனி நபர் நடத்தும் ஒரு பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயர் வேலை கிடைத்தது. தன் மனைவியையும் பங்கஜத்தையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். திருச்சியை விட்டுக் கிளம்பும்போது பத்மா, பங்கஜத்தின் வாழ்வைக் குலைத்ததற்காக அவள் காலடியில் விழுந்து கதறினாள். “பைத்தியமே, என் தலைவிதி இப்படி இருக்கும் போது! என்னடி செய்வாய்?’ என்று பத்மாவைச் சமாதானப் படுத்திவிட்டுச் சென்னைக்குச் சென்றாள் பங்கஜம்.
சென்னைக்கு வந்ததும் பங்கஜத்தின் தகப்பனார் அவளுக்கு வரனுக்காக அலைந்தார். அதுவரையில் வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் பங்கஜம் ‘டைப்’ அடிக்கக் கற்றுக் கொண்டாள்.
சில நாட்களில் பங்கஜத்திற்குத் தாம்ஸன் மோட்டார் கம்பெனியில் டைப்பிஸ்டு வேலை கிடைத்தது. தம்முடைய பெண்ணை உத்தியோகத்திற்கு அனுப்பக்கூடிய மன உறுதி பங்கஜத்தின் தகப்பனாருக்கு இல்லை. ஆயினும் பொருளாதார நெருக்கடியும், நேரில் சந்தித்து விட்டு வந்த தாம்ஸன் கம்பெனி மானேஜர் வரதராஜனின் நல்ல குணமும் அவரைச் சம்மதிக்கச் செய்தன.
ஆபீஸ் முழுவதும் பரபரப்படைந்த மானேஜர் வாதராஜனின் கல்யாண விஷயம் பங்கஜத்தின் காதிலும் விழுந்தது, சில வருஷங்கள் மிகவும் செருங்கிப் பழகிய தோழியை இனி மறுபடியும் வாழ்க்கையில் எங்கே சந்திக்கப்போகிறோம் என்று நினைத்திருந்த பங்கஜம், கடைசியில் பத்மா தன் ஆபீஸ் மானேஜரின் மனைவியாக வரப் போகிறாள் என்று அறிந்ததும் சந்தோஷமே அடைந்தாள். நல்ல குணமும் அன்பும் உடைய வரதராஜன் தன் தோழிக்குக் கிடைத்ததில் பெருமை யடைந்தாள். கல்யாணத்திற்குச் சில நாட்கள் இருக்கும்போது, கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடு செய்ய குருநாத முதலியார் பத்மாவை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தார்.
ஒரு நாள் மத்தியானம், தனக்கு வரப் போகும் மனைவிக்குத் தன் ஆபீஸைக் காண்பிக்க, பத்மாவை அழைத்துக் கொண்டு ஆபீஸுக்கு வந்தான் வரதராஜன். ஆபிஸின் கட்டிடத்தைச் சுற்றி வந்தவன், பங்கஜத்தின் அருகில் வந்தவுடன் ”இவள் தான் ஆபீஸ் ‘டைப்பிஸ்டு’ பங்கஜம். அடக்கமும், பணிவும் கொண்ட இவள் உணக்குச் சிநேகிதமானால் ஆச்சரியமே இல்லை” என்று அறிமுகப் படுத்தினான். அப்போது கீழே விழுந்து விடாமல் இருக்க மேஜையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நின்றாள் பத்மா. இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பங்கஜம், பரபரப்படையாமல் தன் இடத்தில் எழுந்து நின்றபடியே பத்மாவை நோக்கிக் கை குவித்தாள். ஆபீஸில் மற்றக் குமாஸ்தாக்களின் நடுவில் ‘நாடகம்’ நடத்த விரும்பாத பத்மா மேலே நடந்தாள்.
அன்று சாயங்காலம் பத்மா தகப்பனாரிடம் தன் உத்தேசத்தை வெளியிட்டாள். தனக்கு ஒரே பெண்ணான பத்மா எல்லா உத்தியோகமும் லக்ஷணமும் உடைய வரதராஜனைக் கல்யாணம் செய்து கொள்ளாமல் டாக்டராகப் போகிறேன் என்று வாதாடுவதை அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவருடைய அன்பு மனம் பத்மாலின் இஷ்டத்திற்கு விரோதமாகவும் அவரை நடக்கச்செய்ய விடவில்லை.
இருவரும் வரதராஜனைச் சந்தித்தார்கள். பத்மா கண்களில் நீர் தளும்பப் பங்கஜத்தின் கதையைப் பற்றிச் சொல்லிவிட்டு, “அடக்கமும் அறிவும் நிறைந்த இவள் உனக்குச் சிநேகிதியானால் நான் ஆச்சரியப்படவே மாட்டேன் என்றீர்களே, உங்களுக்கு அவள் மீது இவ்வளவு நல்ல அபிப்பிராயம் இருக்கும் போது, என் பொருட்டு தன் வாழ்க்கையையே இழந்த அவள் விஷயத்தில் கொஞ்சம் மனத்தைத் தளர்த்தி என் ஸ்தானத்தில் அவளை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என் வாழ்க்கையின் லக்ஷ்யமும் டாக்டராக ஆக வேண்டும் என்பது. ஆனால் அப்பாவின் பிடிவாதமும், தங்களைப் பற்றி நான் கேள்விப் பட்டதும் நான் என்னை இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதிக்கச் செய்தது. நீங்களும் லக்ஷ்யம் என்று சொல்வதை வாய் வார்த்தையுடன் நிறுத்துக் கொள்ளாமல் செய்கையிலும் காட்ட வேண்டும் என்றால், பங்கஜத்தைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்” என்றாள் பத்மா.
தன் சிநேகிதிக்காகத் வாழ்க்கையையே நிர்மூலமாக்கிக் கொண்ட பங்கஜத்தின் நிலைமையை வாதராஜன் புரிந்து கொண்டான். அவனுக்கு அவள் மீது இருந்த அன்பு இரட்டித்தது.
அவன் பங்கஜத்தைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான்.
“நான் டாக்டராக வேண்டும் என்றால் – என் கனவு நனவாக வேண்டும் என்றால் – நீ இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதிக்க வேண்டும்; பங்கஜம் இல்லை என்றால் நானும் அவரைக் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன். உனக்கு என்னை அறியாமல் செய்த துரோகத்திற்காக வாழ்நாள் முழுவதும் என் நெஞ்சு துடித்துக் கொண்டிருக்கும். இறந்த பிறகும் ஏன் செஞ்சு வேகாது?” என்றாள் பத்மா.
”ஓ! அந்த மாதிரி எல்லாம் சொல்லாதே. பத்மா! இதனால் அவருக்கு மனவருத்தம் இல்லை என்றால்..”
“மனவருத்தமா? அந்த ஆபீஸில் நீ சேர்ந்தவுடனேயேதான் அவரை மயக்கி விட்டாயே……! அவருக்குப் பூரண சம்மதம்” என்றாள் பத்மா.
மறுநாள் பத்திரிகையில் ஆரம்பத்தில் கூறப்பட்ட விளம்பரத்தைப் பிரசுரிக்கப் பத்மா ஏற்பாடு செய்தாள். சில நாட்களுக்குப் பிறகு ஒரு ஆடம்பரமுமில்லாமல் திருநீர்மலைக் கடவுளின் சந்நிதியில் வரதராஜன் பங்கஜத்தின் கழுத்தில் மாலையிட்டான்.
– 1951-05-27