டிபன் சாப்பிட்டுக் கை கழுவி, காபி-யும் குடித்து முடித்து, சர்வர் பில் கொண்டுவரச் சென்றபோதுதான் தூக்கிவாரிப் போட்டது பாஸ்கருக்கு. பேன்ட் பாக்கெட்டில், சட்டைப் பையில் எங்கும் பர்ஸ் இல்லை.
“வித்யா! பர்ஸ் கொண்டு வர மறந்துட்டேன். நீ உடனே ஒரு ஆட்டோ பிடிச்சுக்க. நேரே வீட்டுக்குப் போ. பணம் எடுத்துக்கோ. போன ஆட்டோவிலேயே திரும்பிடு. போக வர முப்பது ரூபாதான் ஆகும். நான் இங்கேயே வெயிட் பண்றேன்” என்றான் தன் மனைவியிடம்.
“ஏங்க, அதுக்கு நீங்க பைக்கிலேயே போயிட்டு வந்துடலாமே?” என்றவளை, “சொன்னதைச் செய்” என்று கடுப்பாகச் சொல்லி விரட்டினான்.
கல்லாவில் உட்கார்ந்திருந்த முதலாளியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, ஓரமாக இருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்துகொண்டான்.
அரை மணியில் வித்யா பணத்துடன் திரும்பினாள். ஓட்டல் பில்லை செட்டில் பண்ணிவிட்டுக் கிளம்பினார்கள்.
பைக்கில் போகும்போது, “போக வர ஆட்டோவுக்குத் தண்டச் செலவு. எனக்கும் அலைச்சல். நீங்களே பைக்ல போயிட்டு வந்திருந்தா பத்து நிமிஷத்துல வேலை முடிஞ்சிருக்கும். சொன்னா கேட்டாதானே?” என்று சிணுங்கினாள் வித்யா.
சிரித்தான் பாஸ்கர். “மேடத்துக்கு என் மேல ரொம்பக் கோபம் போலிருக்கு?” என்றவன், “யோசிச்சுப் பாரு வித்யா! பத்து நிமிஷமே ஆனாலும், முள்ளுமேல உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்காதா உனக்கு? அதோட, கொஞ்ச நேரத்துக்கு தான்னாலும் என் அருமைப் பெண்டாட்டியை அடமானம் வெச்சுட்டுப் போக என் மனசு ஒப்புமா, சொல்லு?” என்றான்.
காதலோடு வித்யா இறுக்கிய இறுக்கலில் பாஸ்கரின் விலா எலும்பு நொந்தது.
– 24th அக்டோபர் 2007