கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 9,666 
 
 

சிறுமிகள் முதல் குமரிகள் வரை ரெட்டை ஜடை போடுவது தொன்னூறு வரை தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கமாகவே இருந்தது. தலை முடியில் பின்னிய ஜடைகளில் குஞ்சம் வைக்காத குமரிகளே இல்லை என்று சொல்லலாம். நெற்றியில் சாந்துப்பொட்டு, ஜடைகளில் குஞ்சம், காதுகளில் லோலாக்கு, கைகளில் கண்ணாடி வளையல்கள், கால்களில் வெள்ளிக் கொலுசு அணிந்த பெண்களை வீட்டு விசேசங்களிலும், ஊர் விழாக்களிலும் வாலிபர்கள் வலிய வந்து கண்கள் எனும் கேமராக்களில் படமெடுத்து மனமெனும் மெம்மரி கார்டில் பதிவு செய்து திரும்பத்திரும்ப மனத்திரையில் போட்டு பார்த்துப்பார்த்து ரசிப்பர்.

மலர்கொடியோ மற்ற பெண்களிலேயே தான் கூட்டத்தில் தனித்து தெரிய வேண்டும் என்கிற விருப்பத்தில் இரண்டு ஜடைகளுக்கு பதிலாக ஒற்றை ஜடையைப்போட்டாள். வயதான பெண் போல் தெரிவதாக சிநேகிதிகள் கேவலமாகப்பேசினர். இரவில் தூங்காமல் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவளாக பத்து ஜடைகளைப்போட்டுக்கொண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவுக்குப்போனபோது சாமி கும்பிட வந்தவர்கள் சாமியை விட மலர்கொடியையே வெகு நேரம் அதிசயமாகப்பார்த்தனர். அன்று திருவிழாவின் கதாநாயகியாகி பல வாலிபர்களின் உறக்கம் கெடக்காரணமானவளாகி விட்டாள்.

“டீ… நம்ம மலரப்பார்த்தியா? பத்துச்சட போட்டு வந்து பசங்கள மயக்கிப்போட்டா…. ரங்கசாமி, காளிச்சாமி, ராமசாமி, பழனிச்சாமி, முருகசாமி, ஓதிச்சாமி, ரத்தினசாமின்னு ஒருத்தனுங்கூட நம்ம பக்கம் வராம அவ பின்னாடியே சுத்தித்திரிஞ்சானுக பார்த்தியா…?” தன் ஆதங்கத்தை சிநேகிதி பூங்கொடியிடம் கொட்டித்தீர்த்தாள் அல்லிக்கொடி.

“நீ அத மட்டும் தான் பாத்திருக்கே. அதுக்கு மேல பெருசா ஒரு விசயம் நடந்தது தெரியாம இருக்கறே…” என சூதகமாக சுத்தி வளைத்துப்பேசினாள் பூங்கொடி.

“அப்படியா…? என்னது…?”

“மேக்குத்தோட்டத்து பண்ணையார் பையன் காளிச்சாமி….”

“யாரு…? அந்த தாடிக்காரனா…?”

” ஆமா. அவனே தான். அவன் போன வாரம் கோயம்புத்தூர்ல போயி புதுசா ஒரு சைக்கிள் வாங்கீட்டு வந்ததும் வந்தா அவன ஈ மொய்க்கற மாதர பொண்ணுக மொய்க்கறாளுக. ஆனா அவனுக்கு கிட்டவே வராத எட்டாக்கனியா இருக்கற மலர் மேல ஒரு கண்ணு. நேத்து திருவிழாவுல பத்துச்சட போட்டதப்பாத்து பரவசப்பட்டு அவளையே வண்டு மாதர சுத்திச்சுத்தி வந்தான். அவ கெட்ட நேரமோ என்னமோ தெரியல. செருப்பு போடாம சுத்தினதால கல்லா முள்ளு கால்ல ஏறி நடக்க முடியாம குந்தி குந்தி நடந்து ஊட்டுக்குப்போனவளப்பார்த்து காளிச்சாமி கச்சிதமா காய நகுத்திப்போட்டான்.”

“அப்புடியா…?! எப்படி…?”

“ஆமா. அவ பின்னாலயே போனவன் சைக்கிள்ல உட்காரச்சொன்னதும் கால் வலியால நடக்க முடியாததுனால, வேற வழியே இல்லாததுனால யோசிக்காம டக்னு ஏறி முன்னாடி உக்காந்துட்டா. அவனுங்கோழி அமுக்குன மாதிரி ஒரே அமுக்கா அமுக்கி இது தான் சமயம்னு  அவள‌ வெச்சு சனமே பூராம்பாக்கற மாதர ஊரையே ஒரு சுத்து சுத்திப்போட்டான். மலரும் சைக்கிள்ல உக்கார புடிச்சுப்போனதுனால மந்தவங்க என்ன நெனைப்பாங்கங்கன்னு யோசிக்காம சந்தோசமா இருந்துட்டா. இப்ப ஊரே அவங்களப்பத்தித்தான் பேசறாங்க. அவ அழகுக்கு மன்மதனே மாப்பிள்ளையா வருவான். தெரியாம வெள்ளந்தியா சைக்கிள்ல ஏறுனது ஊருக்கே தெரிஞ்சு போனதுனால அவள ஒன்னி ஆரும் பொண்ணுக்கேட்டு வர மாட்டாங்கன்னு எங்கம்மா சொல்லிச்சு” என்றாள் அல்லிக்கொடியிடம் பூங்கொடி.

“அந்த செரங்கு புடிச்ச கொரங்கு மூஞ்சிக்காரனுக்கு கிளி மாதர பொண்ணு நேசமாயிருச்சுன்னா அவ வாழ்க்க நாசமாப்போச்சுன்னுதான் அர்த்தம். அவனுக்கு சொத்து நெறையா கெடக்கிறதுனால சொந்தத்துக்கு ஒன்னு, சொகத்துக்கு ஒன்னுன்னு வாழ நெனைக்கறவனோட  எப்புடி மலர் கண்ணாலம் பண்ணி வாழப்போறான்னு தெரியல?  அவளுக்கு வார புருசன் ராமனாட்ட ஒரே பொண்டாட்டியோட ஒழுக்கமானவனா இருக்கோணும்னு அடிக்கொருக்கா சொல்லுவா…. இப்ப அவ பேரே அடிபட்டுக்கெடக்குது…. ம்… ஆரு எப்படிப்போனா நம்கென்ன? அவ தலையெழுத்து அப்படி…” சலித்தபடி சொன்னவள் தன் வீடு செல்லும் பாதை வந்ததும் ஆற்றிலிருந்து எடுத்து வந்த தண்ணீர் குடத்தை, சிறிது உடைந்து ஓட்டையான மண் குடத்துக்கு துணியைக்கிழித்து அடைத்தும் தண்ணீர் கசிந்து தலை நனைந்ததால் தலையிலிருந்து இடுப்புக்கு இறக்கி வைத்து நடந்தாள் அல்லிக்கொடி.

பல பேர் பல விதமாகப்பேசியதும், சிநேகிதிகள்  தன்னை கெட்டவளாக, கெட்டுப்போனவளாக நினைத்துத்தேடி வராததும் மலர்கொடியின் மனதை வேதனைக்குள்ளாக்கியது. 

ஒரு வாலிபனுடன் சைக்கிளில் தனியாக ஏறிச்சென்றாலே ஒரு பெண்ணைக்கெட்டுப்போனவளாக நினைப்பதும், அவனையே அப்பெண் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென ஊரும், உறவுகளும் பேசுவதும் மலர்க்கொடிக்கு புரியவில்லை, புடிக்கவுமில்லை, நியாயமாத்தோன்றவுமில்லை. 

மாறாக பண்ணையார் மகன் காளிச்சாமியோ இரண்டு பேரும் சுள்ளிக்காட்டுப்பக்கம் போய் வந்ததாக பொய்யாக புரளியைக்கிளப்ப, அத்தனை பேரும் உண்மை என நம்பியவர்களாய் , தன்னைத்தப்பானவளாய் நினைத்து பேசியதால் அவள் மனம் புண்ணானது.

“ஏலே…. அவன் தான் ஆம்பளப்பையன். என்ன பண்ணுனாலும் அவனுக்கு ஊருலகத்துல பொண்ணு கெடைக்கும். அவங்கூப்புட்டான்னா அவஞ்சைக்கிள்ல நீ ஏறுலாமா…? பொண்டாட்டி புருசன் போற மாதர முன்னால கம்பில ஒரு பக்கமா அவம்மேல சாஞ்சமாதர உட்காந்து, அவங்கையப்போட்டு கட்டிப்புடிச்ச மாதர ஒரசீட்டு ஊரையே சுத்தீட்டு வந்திருக்கறே…. பின்னால கேரியல்லையோ, என்ன கருமத்துலயோ அவம்மேல முட்டாம உக்காந்து தொலைச்சிருந்தாக்கூட ஊர் வாய மூடியிருக்கலாம்” என அங்கலாய்த்து கண்ணீர் வடித்தாள் மலர் கொடியின் தான் சரசு.

“எதுக்கு இப்ப அழுது பொலம்பறீங்க ஆத்தாளும் மகளும்…? ஓரியாடுன பண்ணையம் தூரியாடீட்டு போயிடும்பாங்க. எப்பப்பாத்தாலும் அதுல சொத்த இதுல சொத்தைன்னு சொல்லிட்டு இருந்தீங்கன்னா இந்த சென்மத்துல நம்ம மலருக்கு கண்ணாலம் பண்ண முடியாது. அம்பதனப்பு பண்ணையம், அரண்மனை மாதர ஊடு, ஒரே பையன். பணங்காசு கெடந்தா ஆம்பளப்பசங்க கொஞ்சம் அப்புடி, இப்புடி இருக்கத்தாஞ்செய்வானுக. சவாரி வண்டி இருக்குது. புது சைக்கிள் வாங்கீட்டான். மோட்டார் சைக்கிளும் வாங்கறானாமா… நம்ம பொண்ணு மேல ஆச வெச்சுட்டான். அதுலயும் நம்ம சாதி சனந்தான புள்ள….? என்ன பையங்கொஞ்சங்கருப்பு. நெறஞ்சோறு போட்றுமாக்கும்…? சும்மா பொலம்பீட்டு கெடக்காம பொடக்காளிப்பக்கம் இருக்கற தேக்கு மரத்த வெட்டி வித்துப்போடு. கண்ணாலச்செலவுக்காகுட்டு. பவுனு ஒரு கும்முனி எடையுங்கூட வேண்டா, புள்ளையே தங்கமாட்டா இருக்கறான்னு பையனோட ஆத்தாக்காரி சொன்னான்னு நம்ம பங்காளி சோழிங்கம்பொண்டாட்டி வந்து சொல்லிப்போட்டுப்போறா. குடுக்கற சாமி கூரையப்பிச்சுட்டுக்குடுக்கும்னு சொல்லற மாதர ஒரு அனப்புங்கூட இல்லாம பொறம்போக்குல குடிசைல இருக்கற நம்முளுக்கு அம்பதனப்பு மாப்ள கெடைச்சிருக்குதுன்னா அதிஷ்டமில்லாம அப்பறமென்னவாமா?” என மகிழ்ச்சியின் உச்சத்தில், இரவு போதையின் மிச்சத்தில் காலையில் தந்தை மருதன் பேசியதை மலர்கொடி ரசிக்கவில்லை.

திருவிழாவிற்குச்சென்ற போது முள் ஏறியதில் நடக்க முடியாத நிலையால் அவனது சைக்கிளில் ஏறிக்கொண்டாளே தவிர காளிச்சாமி மீது மனதளவில் எள்ளளவும் விருப்பம் இல்லை மலர்கொடிக்கு. 

பாதையில் நடந்து சென்றவளை சைக்கிளில் வேகமாக பெல் அடித்தவாறு வந்து உரசியவாறு டக்கென பிரேக்போட்டு, டயர் சர்ரென உராய்வு சந்தம் கேட்கும் படி நிறுத்தினான் காளிச்சாமி.

“என்ன மலரு…. பத்துச்சடை நீ போட்ட மாதிரியே எனக்கு பத்துப்புள்ள பெத்துத்தருவியா…?” ஆணவமாகக்கேட்டவன் கன்னத்தில் மலர்கொடி கோபத்தில் ஓங்கி அறைந்ததை அங்கிருந்த பலர் பார்த்து வாயடைத்து நின்றனர்.

“ஒரு பெரிய எடத்து ஆம்பளைய மருதம் புள்ள கை நீட்டி அடிச்சுப்போட்டா டோய்….பாதையில் சென்ற ஒருவன்  கத்தினான். உடனே கூட்டம் கூடி விட்டது.

மலர்கொடி இப்படிச்செய்வாள் என நினைத்துப்பார்த்திராத காளிச்சாமி சைக்கிளை எடுத்துக்கொண்டு கோபத்துடன் வேகமாக வந்த வழி நோக்கிச்சென்றான்.

“கஷ்டத்துக்கு ஒதவுனா அவனோட இஷ்டத்துக்கு ஒத்துக்க முடியுமா…? ஊர்க்காரங்க எல்லாரும் கேட்டுக்கங்க. நெருப்பில்லாம புகை வருமான்னு நெனைக்காதீங்க. பனி மூட்டமுங்கூட புகை மாதர தான் தெரியும். அதுக்கு நெருப்பு தேவையில்லை.

இதே உங்க பொண்ணுக்கு இப்படி கெட்ட பேரு வந்திருந்தா உங்க மனசு என்ன பாடு படும்…? பண்ணாத தப்ப பண்ணியிருப்பான்னு எப்படி முடிவு பண்ணுவீங்க…? ஒரு பையனோட ஒரு பொண்ணு பேசறதே தப்புன்னா, தப்பு நடந்துரும்னா வாழவே முடியாது. உங்க ஊட்டுப்பொம்பளைங்க கூட ஊட்டுக்கு வெளியவே வர முடியாது. நாஞ்சுத்தமானவ தான். என்ற மேல எனக்கு நம்பிக்கை இருக்குது. நீங்க நெனைக்கிற மாதர பண்ணையார் பையங்கூட எனக்கு ஒன்னும் நடக்கலே… என்னக்கட்டிக்கோணும்னு அந்தப்பாவி போட்ட நாடகத்துல நா மாட்டீட்டேன். நரி சிங்கம் வேசம்போட்டு வந்தா  அசிங்கப்பட்டுத்தாம்போகோணும். இதுக்கெல்லாம் நாம் பயப்பட மாட்டேன். கருப்பு செவப்புன்னு பாக்கலே. பண்ணையார் பையன் காளிச்சாமிய என்ற மனசுக்கு புடிக்கலே. என்ற மாமம் பையன் பொன்ராசுவப்புடிச்சிருக்கு.

காலங்காலமா ஆம்பளைங்களுக்கு புடிச்ச பொம்பளைங்களப்பத்தி தப்பா பொய் சொல்லி நம்ப வெச்சு கல்யாணம் பண்ணினதுனால பல பேரு புடிக்காத புருசனோடதான் இன்னைக்கும் வாழறீங்க. ஆம்பளைங்களுக்கு மாதரியே பொம்பளைகளுக்கும் மனசும் இருக்கு, ஆசையும் இருக்குன்னு தெரிஞ்சிருந்தா இப்படி பண்ணியிருக்க மாட்டீங்க” என மலர்கொடி பேசியதைக்கேட்ட அவளது சிநேகிதிகள் உண்மை நிலையை அறிந்து, அவளை தவறாகப்புரிந்து கொண்டு பல நாட்களாக ஒதுக்கி வைத்ததற்கு அவளிடம் மன்னிப்புக்கேட்டனர்.

Print Friendly, PDF & Email
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *