திவ்யா..நீ இன்னுமா ரெடியாகுற?மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட போறாங்க..என்றபடியே மாடிக்கு சென்றாள் வசந்தி.
அம்மா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை.ஏம்மா எவ்வளவு சொல்லியும் புரிஞ்சுக்க மாட்டேங்குற. நான் இன்னும் மேல படிக்கணும்மா.
என்னடி திவ்யா சொல்ற..பொம்பளை பிள்ளையா பொறந்தா இன்னொருத்தங்க வீட்டுக்கு போய் தான்ம்மா ஆகணும்.
இல்லம்மா எனக்கு அக்காவோட வாழ்க்கையில் உள்ள பிரச்சனையைப் பார்த்து பார்த்து பயம் தான் அதிகரிக்குது.
இவ்வளவு தானா? நான் கூட பயந்து போயிட்டேன். உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சா தான் இந்தக் கல்யாணத்துக்கே ஏற்பாடு பண்ணுவோம். புரிஞ்சுதா திவ்யா.சீக்கிரம் போய் குளிச்சிட்டு இந்த புடவையைக் கட்டிக்கிட்டு வா.எனக்கு தலைக்கு மேல் வேலை இருக்கு என்றபடியே சமையலறைக்குச் சென்றாள் வசந்தி.
எப்படியாவது மாப்பிள்ளையை உனக்கு பிடிச்சிருக்கான்னு கேட்பாங்கல்ல அப்ப பிடிக்கலன்னு சொல்லிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தாள்.
மாப்பிள்ளை வீட்டில எல்லாரும் வந்துட்டாங்கன்னு திவ்யாவிடம் தோழி ஒருத்தி சொல்ல அவளுக்கு பயம் இன்னும் அதிகரித்து விட்டது.உலகத்தில் இருக்கிற கடவுள் அனைத்தையும் வேண்டிக் கொண்டாள்.
மாப்பிள்ளைக்கிட்ட காபி கொண்டு போய் கொடும்மா என்று சொல்ல மனசுல ஏதோ ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காபியை எடுத்துக்கிட்டு அனைவருக்கும் கொடுத்து விட்டுச் சென்றாள்.
இங்கப்பாருங்கம்மா எனக்கு சுத்தி வளைச்சு எல்லாம் பேச தெரியாது. எங்க பையன் ரவிக்கு உங்க பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு என்று மாப்பிள்ளையின் அம்மா சொன்னவுடன் வசந்தியின் முகத்தில் சந்தோஷம் குடிகொண்டது. அந்த சந்தோஷம் கொஞ்ச நேரம் கூட இருக்கல.
அப்புறம் நீங்க பெண்ணுக்கு 50 பவுன் நகை மாப்பிள்ளைக்கு இது அது என்று கேட்டுக் கொண்டே போனாள் மாப்பிள்ளையின் அம்மா.
வசந்திக்கு தலையே சுற்றியது.அம்மா நீங்க நினைக்கிற அளவுக்கு எங்களால போட முடியாது. எங்களால 15 பவுன் நகை மட்டும் தான் போட முடியும் என்றாள்.
மாப்பிள்ளையின் அம்மா முகம் மாறியது. எங்களுக்கு 100 பவுன் நகை போட்டு கல்யாணம் பண்ணி தர ஆள் இருக்காங்க.எங்க பையன் ரவிக்கு உங்க பெண்ணை ரொம்ப பிடிச்சு போச்சு.அதனால தான் இவ்வளவு தூரம் உங்கக்கிட்ட பேசிகிட்டு இருக்கேன்.
திவ்யா யோசித்து யோசித்து பார்த்தாள்.பெண்ணை பிடிச்சிருக்குங்குற பேர்ல இப்படி வரதட்சனை கேட்குறது கொஞ்சம் கூட சரியில்ல.இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும் என நினைத்தாள்.
முதலில் தயங்கிய திவ்யா நான் மாப்பிள்ளைக்கிட்டயும் அவங்க அம்மாகிட்டயும் கொஞ்சம் பேசணும் என்றாள்.
வசந்திக்கு ஒரே ஆச்சர்யம்.எதற்கெடுத்தாலும் பயந்தவள் தனியாக பேசணும் என்கிறாளே என்று.
ரவியும் அவருடைய அம்மாவும் திவ்யாவுடன் தனியாக பேச சென்றார்கள்.
இங்கப்பாருங்க ஆச.ரவி உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?
இதை கேட்க தான் தனியா பேசணும்னு சொன்னீங்களா திவ்யா? இதை எல்லோருக்கும் முன்னாடி கேட்டிருக்கலாமே?
பிடிச்சிருக்கா? பிடிக்கலையா? இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க ரவி.
பிடிச்சிருக்குனுங்கறதுனால தான எல்லாம் பெரியவங்க பேசிகிட்டு இருக்கோம் என்றாள் ரவியின் அம்மா.
அம்மா கொஞ்சம் பொறுங்க.நான் உங்க பையன்கிட்ட தான் கேட்டேன் என்றவுடன் ரவியின் அம்மா வாயை மூடிக்கொண்டாள்
பிடிச்சிருக்கு.ஏன் திவ்யா கேட்குறீங்க? என்றான்.
எனக்கு உங்களை பிடிக்கலை என்று திவ்யா சொன்னவுடன் ரவியின் முகமும் அவருடைய அம்மாவின் முகமும் மாறியது.
தப்பா நினைச்சுக்காதீங்க ஆச. ரவி நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னா நீங்க 100 பவுன் எனக்கு போட தயாரா இருந்தா சொல்லுங்க அப்புறம் எனக்கு ஒரு Scooty ஏன்னா நீங்க வேலைக்கு போயிட்டீங்கன்னா எதற்கெடுத்தாலும் உங்களை நம்பிக்கிட்டிருக்க தேவையில்லை. இதுக்கெல்லாம் ன்னா சொல்லுங்க ரவி. நான் உங்களை கல்யாணம் பண்ணிக்குறேன். என்ன ரவி சொல்றீங்க.
ரவி ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றான்.அவருடைய அம்மாவோ கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள்.என்னம்மா நீ உன் வாய்க்கு வந்தபடி கேட்டுக்கிட்டே இருக்க.. நீ படிச்சப் பொண்ணுன்னு நினைச்சா இவ்வளவு ஆ நடந்துக்கிற.
படிக்காத நீங்களே இவ்வளவு கீழ்த்தனமா நடந்துக்கறப்ப படிச்ச நான் கீழ்த்தனமா நடந்துக்கறது தப்பில்லைன்னுதாம்மா தோணுது. நீங்களும் ஒரு பெண் தன் கணவர் இல்லாமல் பிள்ளைகளை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்கு தெரியாதாம்மா.வாழப்பேரறது உங்கப் பையனோட தானே! நகைகளோடு இல்லையேம்மா? மருமகளாய் வரும் பெண்ணை தங்களுடைய மகளாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர தங்கத்தோடு வருகின்ற மகளாய் பார்க்க கூடாதும்மா.உங்க மனசை கஷ்டப்படுத்திருந்தா என்னை மன்னிச்சுடுங்கம்மா.உங்களோட தவறை சுட்டிக் காட்டணும்னு தான் இப்படியெல்லாம் பேசினேன் என்று திவ்யா சென்று விட்டாள்.
திவ்யா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ரவியையும் அவருடைய அம்மாவையும் யோசிக்க வைத்தது.
சரிம்மா. நாங்க கிளம்புறோம் என்று அமைதியாக சென்று விட்டார்கள்.
திவ்யா நீ இவ்வளவு நேரம் என்னடி பேசின என்றாள்.
அம்மா நான் ஒன்னும் தப்பா எதுவும் பேசல. புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சுடுச்சு என்றாள் திவ்யா.
பெண் பார்க்க சென்றவர்கள் இன்னும் ஒரு போன் கூட பண்ணவே இல்லையே என்று கவலையோடு உட்கார்ந்திருந்தாள். போன் பெல் அடித்தது.
ஹலோ யாருங்க என்றாள் வசந்தி.
நான் ரவியோட அம்மா பேசறேன்.வீட்டில் வந்து பெண் பார்த்துட்டு போனோமேம்மா. மறந்துட்டீங்களா? உங்க பெண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.பணம் தான் பெருசுனு நினைச்ச என்னை பாசம் தான் முக்கியம்னு உணர வச்சிட்டா.இப்படிப்பட்ட பெண் தான் எங்க குடும்பத்துக்கு மருமகளாய் வரணும்னு ஆசைப்படறேன்ம்மா என்றாள்.
இதை கேட்ட வசந்திக்கு ஆனந்த கண்ணீர் தான் வந்தது.