பணத்தின் ரிஷி மூலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2018
பார்வையிட்டோர்: 7,217 
 

அப்பாவின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டதால் உடனே புறப்பட்டு வரவும்.

இந்தியாவில் இருக்கும் தன் தங்கைக்கு கைபேசி மூலம் தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார் லண்டனிலிருந்து மருத்துவர் சங்கர்.

பக்கத்தில் எலும்பும் தோலுமாக அப்பா படுக்கையில். தீனமான குரலில் அழைக்கும் தந்தையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. மருத்துவராக இருந்தும் இவரின் இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்த முடியவில்லையே என்ற துக்கம் வேறு.

தம்பி நான் சாவறதுக்கு முன்ன எப்படியாவது என்ன நம்ம ஊருக்கு கூட்டிட்டு போயிடு. நான் சேத்த சொத்தெல்லாம் சாமி கோயிலுக்கு உயில் எழுதி வைக்கணும். இதை அவர் அம்மாவின் மறைவிற்குப் பிறகே சொல்ல ஆரம்பித்ததால் ஒவ்வொரு முறையும் இப்ப என்ன அவசரம். இந்தியாவுக்குப் போகும் போது பாத்துக்கலாம் என விட்டுவிடுவதுதான்.

ஆனால் இம்முறை ஏனோ இது அவரின் கடைசி ஆசை எனத் தோன்றிற்று. ஆனால் அவரை இந்நிலையில் அழைத்துப் போவது சாத்தியமில்லை. அவரின் ஆறுதலுக்காக நோட்டையும் பேனாவையும் எடுத்து வந்து

இப்போ சொல்லுங்க . எந்தெந்த சொத்த எந்தெந்த கோயிலுக்கு எழுதி வைக்கணும்னு.

மாந்தோப்புக்கு பக்கத்துல இருக்க வயக்காடு உங்க பாட்டன் சொத்து. அது மட்டும் இருக்கட்டும். ரெயில்வே தண்டவாளத்துக்கு அந்த புறம் நான் வாங்கின ஆறு வயலையும், தெருவுல இருக்க ஆறு வீட்டையும் சரி சமமா நம்ம ஊரு தேவ சபைக்கும், மசூதிக்கும், ஊரக்காத்த மாரியம்மங் கோவிலுக்கும் கொடுக்கணும். நான் எப்படியும் சாகப் போறேன். அதுக்கு முன்ன உனக்கு ஒரு உண்மை தெரியணும்.

பாட்டன் சொத்துல விவசாயம் பாத்துக்கிட்டிருந்த நான் குறுக்கு வழில பணம் சம்பாதிக்க நெனச்சு கள்ளச் சாராயம் காச்ச ஆரம்பிச்சேன். மொதல்ல மனசு ஒப்பல தான். நான் படிக்காத தற்குறி தானே. நாய் வித்த காசு குரைக்கவா போகுது னு தொடர்ந்து நம்ம ஊரு எம் எல் ஏ உதவியோட சுலபமா பணம் சம்பாதிச்சி ஏகப்பட்ட சொத்த வாங்கினேன். விதி யார உட்டிச்சி.

எங்க ஆத்தா சொல்லும். பாவப் பட்ட பணத்துல சோறு தின்னா புளுத்து போயிடுவாங்க. தானம் வாங்கினாலும் ரிஷி மூலம் பாத்து வாங்குன் னு.

எம் பேராசையால நா இப்ப புளுத்து தான்சாவப் போறேன். என் வாரிசு நீங்க நல்லா இருக்கணும்ல அதனால பாவச் சொத்து பூரா சாமிக்கே கொடுத்திருங்க.

அப்பாவின் பேச்சைக் கேட்டவுடன் தன் தங்கையின் கணவனும் உற்ற நண்பனுமான நாகுவின் ஞாபகம் வந்தது. நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

###

ஹாஸ்டல் வாழ்க்கை ஞாபகத்திற்கு வந்தது .

உனக்கென்னப்பா உங்கப்பா கேக்கும் போதெல்லாம் பணம் அனுப்பறாறு.

நண்பனின் குரல் சங்கடத்தைக் கொடுத்தது. இந்த முறை போகும்போது கேட்டுவிட வேண்டியதுதான் தீர்மானித்தான் சங்கர்.

நம்ம ரெண்டாம் கிளாஸ் படிக்கும்போது இங்க வந்து சேந்தோம். அப்பல்லாம் ரெண்டு குடும்பமும் ஒண்ணாதான் நம்மள பாக்க வருவாங்க.

இப்போ ரெண்டு வருசமா தான் இப்படி. யார் கண்ணு பட்டுச்சோ தெரியல சலித்துக்கொண்டான் நண்பன் நாகு.

உண்மைதான் இப்போ கொஞ்ச வருசமா வீட்டுக்குப் போகவே பிடிக்கல. போனவுடனே அறிவுரைகள் ஆரம்பிச்சிடும்.

நாகு வீட்டுக்குப் போகக் கூடாது. வெளி வாசல்ல பாத்தா பேசிக்குங்க போதும். நமக்குன்னு ஒரு கவுரவம் இருக்குல்ல.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை உறவினர்கள் போலவே பழகி வந்தோம். கடந்த மூன்றாண்டுகளில் நிறைய மாற்றம். நாகு வீடு அப்படியே இருந்தது. வாசலில் தூண்களுடன் திண்ணை. அதற்குப் பின் நடை எனப்படும் சிறிய வாசல் அறை. அதனை அடுத்து ஒரு ஹால், சமயல் கட்டு, ஸ்டோர் ரூம் என நீளமான பழைய வீடு.

எங்கள் தெருவிலிருந்த பழைய வீடுகளெல்லாம் அப்படித்தான் இருந்தன. மூன்றாண்டுகளுக்கு முன் வரை அப்படி இருந்த வீட்டைத்தான் அப்பா இடித்து அபார்ட்மெண்ட் வீடு போல் கார் பார்கிங் வசதியுடன் புதிதாகக் கட்டியுள்ளார். காம்பவுண்ட் சுவர் கட்டப் பட்டதால் அடுத்த வீடான நாகுவின் வீட்டு வாசலைப் பார்க்க வேண்டுமானால் கேட்டைத் தாண்டி தெருவுக்கு தான் வர வேண்டும்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு முன் நானும் நாகுவும் ஊருக்கு வந்துள்ளோம். சிறிது தொலைவிலுள்ள டியூஷன் சென்டரில் கிராஷ் கோர்ஸ் சேர வேண்டும் என் விருப்பத்தைத் தெரிவித்தவுடன் அம்மா ஆரம்பித்தாள்.

செல்லய்யா அண்ணாச்சி கார் ஓட்டுவாங்க. பத்திரமா போயிட்டு வா. இப்போதெல்லாம் எங்கள் குடும்பம் எங்கு செல்ல வேண்டுமானாலும் காரில் தான். தங்கையும் அம்மாவும் பஸ் சையும் , ரயிலையும் முன்னால் பார்த்தது கூட கிடையாது என்ற அளவு அலட்டிக் கொண்டார்கள்.

எனக்கு நாகுவின் குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. விடிகாலை நேரத்தில் அவன் அம்மாவிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற ஆசையில் மெதுவாக கேட்டைத் திறந்து கொண்டு வெளியில் அவர்கள் வீட்டை எட்டிப் பார்த்தது தான் தாமதம்

வாசல் தெளித்து விட்டு கோலம் போடுவதற்காக கோலப் பொடி எடுத்துக் கொண்டு வந்த நாகுவின் அம்மா

கழுத்தை நெட்டி முறித்துக் கொண்டு

எங்க வந்தீறு. எங்களுக்கும் கொஞ்சம் மானம் மறுவாதி உண்டு தம்பி. உங்க ஆத்தா பாத்துச்சு. அம்புட்டுத்தான். வகுந்து போட்டுரும் .

நாயங்கெட்ட மனுசன் வீட்டு வாரிசு. எம் மவன்கிட்டேருந்து கொஞ்சம் தள்ளியே இருங்க சாமி. நாங்கல்லாம் சாமிக்கு பயந்து வாழறவங்க .

தின்ன சோறு நல்லபடியா செமிக்கணும்னா உங்கப்பா வழி போகாதீங்க. ஏதோ அறிஞ்ச பாவத்துக்கு நல்ல புத்தி சொன்னேன்.

யாரோ போல் அவசரமாகக் கோலம் போட்டுவிட்டு வீட்டிற்குள் போனவளை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டு நின்றான் சங்கர்.

என்னவாகி விட்டது இவர்களுக்கு. நேற்று கூட சிலர் தெருவுல பாதி வீட்ட வளைச்சுப் போட்டுட்டாங்க. நாலு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடற அளவு சொத்து சேத்தாச்சு. இவருக்கென்ன. எனப் பேசிக் கொண்டது ஞாபகம் வந்தது.

அப்பா உழைத்துச் சம்பாதித்த வருமானத்தில் இவர்களுக்கு என்ன பிரச்சினை. அப்பா போனில் பேசுவது ஞாபகம் வந்தது.

தம்பி உன்ன உழச்சி வெளியூருல படிக்க வைக்கறோம். நல்லாப் படிக்கணும்.

வாழத் தார தோளுல தூக்கி சம்பாதிச்ச காசு. நினைப்புல வச்சி படி. நாங்கல்லாம் அரிசி மூட்டைல உக்காந்து பழகின மனுசங்க. நீ நல்லாப் படிச்சி நாற்காலில உக்காரணும். இது தான் என்னோட ஒரே ஆசை.

ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் வீடு மாறியதைப் போல் அப்பாவும் மாறியிருந்தார். அப்பா பேசுவதே இல்லை. எவ்வளவு பணம் வேண்டும் என்பதற்கான கேள்வி மட்டும் தான். அம்மா தான் பேசினாள். ஊரிலும் அப்பாவுடன் நான்கைந்து வெள்ளை வேட்டிச் சட்டை மனிதர்கள் கூடவே நடந்து கொண்டே இருந்தனர். யார் இவர்கள்? என்ன செய்கிறார்கள் ஒன்றும் புரியவில்லை.

அம்மாவிடம் கேட்டால் உங்கப்பாரு பெரிய மனுசன் ஆயிட்டாரு. நாலு காசுசேத்துட்டோம்ல ஊரு நாலு விதமா பேசும். எதையும் காதுல போட்டுக்கிடாத. என்பாள்.

நானும் நாகுவும் எங்களின் வெகு நாள் கனவான வெளி நாடு சென்று மருத்துவம் படிக்க வேண்டும் என்பதைப் பின் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தோம்.

###

நாகுவின் அப்பா திடீரென்று இறந்து விடவே அவனின் கனவு நிராசையாகி விட்டது. உள்ளூர்க் கல்லூரியிலேயே படித்து பேராசிரியராகப் பணி புரிகிறான்.

இப்போதுதான் ஒவ்வொன்றாகப் புரிகிறது. தன்னுடைய அம்மாவின் திடீர் மரணத்தின் போதுதான் பல வருடங்களுக்குப் பிறகு அனைவரையும் பார்க்க முடிந்தது. அம்மாவின் பதிமூன்றாம் நாள் காரியத்தன்று நாகுவின் அம்மா தானாகவே வந்து

எம் மவனுக்கு உங்க மகள கட்டி வைக்கணும்னு எனக்கு ஆச. இவ ஆத்தாகிட்டயே கேக்கணும் னு ரொம்ப நாளா நெனப்பு. மகராசி போய்ச் சேந்திட்டா.

விருப்பம்னா பொண்ண கட்டின சேலையோட அவ ஆத்தாளோட நக மட்டும் போட்டு கூட்டிட்டுபோய் மாரியம்மங் கோவில்ல தாலி கட்டிரலாம்.

ஊர்ச் சனத்த நீங்க அழைச்சா கூட வராதுங்க.

உண்மைதான் அம்மாவின் சாவிற்குக் கூட யாரும் வரவில்லை.

நினைவிலிருந்து மீண்டவனாக முதலில் நாகுவை கைபேசியில் அழைத்து என்ன செய்யலாம் என்ற முடிவு எடுக்க வேண்டும். தீர்மானித்தான் சங்கர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *