பட்ட மரம் துளிர் விடுமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 7,241 
 

சண்முகத்திற்கு வசதிக்கு குறைவு இல்லை. அவனுக்கு சாதியினர் பலம், உடல் பலம், பணபலம் எல்லாம் இருந்ததால் தெனாவெட்டு அதிகம்!

அந்தக் காலனியில் யாரையும் மதிக்க மாட்டான். எந்தப் பிரச்னை வந்தாலும் அடாவடியாகத் தான் பேசுவான். அதனால் எல்லோரும் ஒதுங்கிப் போவார்கள். அவனைக் கண்டு எல்லோரும் பயந்து கொள்வதாக நினைத்து சண்முகம் பெருமை பட்டுக் கொள்வான்

உண்மையில் சேற்றில் புரண்டு விட்டு சகதியோடு எதிரில் ஒரு பன்றி வந்தால், தங்கள் மேலே சகதி பட்டு விடக் கூடதென்று ஒதுங்கிப் போவது போல் தான் நல்ல மக்கள் ஒதுங்கிப் போவார்கள்!.

அவனுடைய வசதி வாய்ப்பைப் பார்த்து, ஓரளவு படிப்பு அறிவு, அழகு உள்ள பாக்கியத்தை ஒரு வசதியல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவனுக்கு கட்டிக் கொடுத்தார்கள்.

சண்முகம் பாக்யத்திற்கு மனைவிக்குரிய எந்த மரியாதையும் தர மாட்டான். வாஷிங் மிஷன், எல்சிடி டி.வி., பிரிட்ஜ் போன்ற தினசரி பயன் படுத்தும் பொருள் போல் தான் பாக்கியம் அந்த வீட்டில் இருந்தாள்.

சண்முகத்திற்கு தலை நாளில் ஒரு ஆண் மகன் பிறந்தான். அக்குழந்தைக்குப் பன்னீர் செல்வன் என்று பெயர் வைத்து, மடி மீதும், மார் மேலும் போட்டு வளர்த்தான். குழந்தை வளர வளர அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுத்தான்.

பாக்யம் ஒரு முறை, “குழந்தைக்கு அதிகம் செல்லம் கொடுக்காதீர்கள்! ….. கெட்டுப் போய் விடுவான்!” என்று சொல்லி விட்டாள்.

அதற்கு ஓங்கி அறைந்து விட்டு “நீ எனக்குச் சொல்லித் தர வேண்டாம்!….” என்று சத்தம் போட்டான்.

“எனக்குத் தேவையான வசதி இருக்கிறது….நம்ம சாதி செல்வாக்கும் இருக்கிறது…அவனுக்கு நிறைய செலவு செய்து படிக்க வைத்து கலெக்டர் ஆக்கப் போகிறேன்!..” என்று சொல்லி விட்டு குழந்தையைக் கொஞ்சுவான்.

பன்னீர் செல்வத்திற்கு நாலு வயசு இருக்கும். செல்ல மகனைப் பக்கதில் உட்கார வைத்துக் கொண்டு, சிகரெட் பிடித்து சுருள் சுருளாக விட்டு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தான் சண்முகம்.

அங்கு வந்த பாக்யம் “ ஏனுங்க!…குழந்தைக்கு வேறு விளையாட்டு காட்டக் கூடாதா?..” என்று கேட்டு விட்டாள்.

“ ஏண்டி!…நாலு எழுத்து படிச்சிருக்கிற திமிரை எங்கிட்டையா நீ காட்டறே?…என்று சண்முகம் கோபத்தில் எட்டி உதைத்தான்.

பன்னீர் செல்வம் வளர வளர அவன் ஆசைப் பட்டதெல்லாம் கிடைத்தது. அப்பா தான் அவனுடைய ரோல் மாடல்!

பள்ளியில் உரிய காலத்தில் சேர்க்கப் பட்டான். அவனுக்கு பத்து வயசு இருக்கும்!

காலையில் பக்கத்து வீட்டு கோமதியம்மாள் சண்முகத்தை தேடி வந்தார்கள்.

“ அப்பா!….சண்முகம்!….உங்க வீட்டுக்கு பின்னால் இருக்கும் செப்டிங் டேங் நிரம்பி விட்டது! கொஞ்சம் சுத்தம் பண்ண ஏற்பாடு பண்ணப்பா!…எங்க வீடு பக்கத்தில் இருப்பதால் ஒரே நாற்றமா இருக்கு!…”

பன்னீர் செல்வம் அப்பா பக்கத்தில் உட்கார்திருந்தான்

“ ஏம்மா உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?…செப்டிங் டேங் நாற்றம் வந்தா நீயாக எங்க வீட்டு செப்டிங் டேங் என்று எப்படி முடிவு செய்யலாம்?….அக்கம் பக்கம் எத்தனை வீடு இருக்கு?…அங்கெயெல்லாம் போய் சொல்ல வேண்டியது தானே?…” என்று கூச்சல் போட்டான். அவன் சத்தம் போடப் போட அந்தக் காலை நேரத்திலும் அவனிடமிருந்து சாராய வாடை ‘குப் குப்’ என்று அடித்தது.

அந்தம்மா மறு பேச்சு பேசாமல் போய் விட்டார்கள். அந்தம்மா போன பிறகு பாக்கியம், “ என்னங்க!… நம்ம செப்டிங் டேங் தான் நிரம்பி வழிகிறது!…லெட்ரினில் தண்ணீர் விட்டா சரியா போக மாட்டேன்கிறது….நீங்க பின்னால் போய் பாருங்க!…”

என்று சொன்னாள்.

“ நீ வாயை மூடிட்டு உள்ளே போடி!….விட்டா நீயே கூட்டிக் கொண்டு போய் காட்டுவாய் போலிருக்கு!…எனக்குத் தெரியாதா?…அக்கம் பக்கத்து ஜனங்களிடம் இப்படிப் பேசினாத்தான் அவங்களுக்குப் பயம் இருக்கும்!…..நாம கொஞ்சம் இடம் கொடுத்தா தைரியமா வந்து நிறைய குறை சொல்லுவாங்க!..இப்படி பேசினாத் தான் எவனும் கிட்ட வரமாட்டான்!…

டேய்!…பன்னீரு……. நீயும் பார்த்துக்கோ!. நம்மைப் பார்த்தா அக்கம் பக்கம் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் ஒருபயம் இருக்க வேண்டும்! அப்படியிருந்தாத்

தான் நம்ம பேரிலே தப்பு இருந்தாலும் கிட்ட வந்து எவனும் பேச மாட்டான்!..” என்று சண்முகம் தன் அனுபவங்களை தன் மகனுக்குச் சொல்லிக் கொடுத்தான்.

தெருவில் விளையாடும் பொழுது, எந்தப் பையனிடம் பிரச்னை வந்தாலும் அந்தப் பசங்க அவங்க அப்பா, அம்மாவிடம் புகார் சொல்லுவாங்க!…. ஆனா பன்னீர் வீட்டை எந்த பையனுடைய அப்பா, அம்மாவும் தேடி வரமாட்டாங்க!….அதற்குப் பதிலாக அவங்க பசங்களைத் தான் நல்லா மிரட்டி வைப்பாங்க!…..இதையெல்லாம் பார்த்துப் பார்த்து பன்னீர் செல்வத்திற்கும் ஓரளவு புரிந்தது!

அப்பாவைப் பார்த்து அவனும் தன் நண்பர்கள் அவனிடம் ஒரு அச்சத்துடன் பழகும்படி பார்த்துக் கொண்டான்.

பன்னீர் செல்வம் பத்தாவது வகுப்பு அரையாண்டுத் தேர்வில் நிறையப் பாடங்களில் மிகக் குறைச்சலான மதிப்பெண்களே வாங்கியிருந்தான்

அவனுடைய வகுப்பாசிரியர் மற்ற மாணவர்களிடம் சொல்வது போல் பன்னீர் செல்வத்திடம் நாளை வரும் பொழுது உங்கப்பாவை கூட்டிக் கொண்டு வர வேண்டும் என்று சொல்லி விட்டார்..

மறு நாள். பள்ளிக் கூடத்திற்கு தன் தந்தையைக் கூட்டிக் கொண்டு போனான் பன்னீர் செல்வம்.

“ நீங்க தான் பண்ணீர் செல்வத்தோட அப்பாவா?…”

“ ஆமாம்!… எதற்காக என்னை வரச் சொன்னீங்க?….”

“உங்க பையன் எல்லாப் பாடங்களிலும் பெயில் மார்க் வாங்கியிருக்கான்…ஒழுங்கா ஸ்கூலுக்கு வருவதில்லே!…ஸ்கூலுக்கு கட் அடிச்சிட்டு மத்த பையன்களையும் கூட்டிக் கொண்டு சினிமாவுக்குப் போறான்!..”

“ இவன் கூப்பிட்டா மற்ற பசங்களுக்கு புத்தி எங்கே போச்சு?….நீங்க வாங்கற சம்பளத்திற்கு ஒழுங்கா வேலை செய்தா அவனும் நல்லாப் படிப்பான்!…”

“ நீங்க பேசறது சரியில்லே!…இப்படி பொறுப்பில்லாம பேசினா நிர்வாகத்திடம் சொல்லி கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும்!..”

“ ஓய்!….நீ தான் பொறுப்பில்லாம பேசறே!….யாரிடம் என்ன பேசறதுனு யோசித்துப் பேச வேண்டாமா?…..நான் யாருனு தெரியுமா?…யாருக்குப் பொறுப்பு இல்லே?…நீ முத்து நகரிலே தானே குடியிருக்கிறே?…உனக்கு வயசுக்கு வந்த மூணு பொண்ணுக இருக்கிறாங்க…அதாவது தெரியுமா?…ஜாக்கிரதை!..” என்று சொல்லி விட்டு சண்முகம் போய் விட்டான்.

பாவம்!…அந்த ஆசிரியர் ஒரு அப்பாவி…..நடுங்கிப் போய் விட்டார்….அவருக்கு ஏற்கனவே பல பிரச்னை…வயசு பொண்ணு.. அது இது என்று சொன்னவுடனேயே அவருக்கு சப்த நாடியும் அடங்கிப் போய் விட்டது….

அதன் பின் அவர் ஒழுங்காகி விட்டார். வகுப்பில் பன்னீர் செல்வத்திற்கு தனி மரியாதை!

பன்னீர் செல்வத்திற்கு அவங்க அப்பா தான் பெரிய ஹீரோ!..அவனுக்கு அப்பா மேல் மரியாதை கூடியது.

பன்னீர் செல்வம் பத்தாவது வகுப்பில் அவன் எதிர்பார்த்தபடி தவறி விட்டான். உடனே அப்பாவிடம் சொல்லி நகரத்தில் மத்தியில் இருக்கும் ஒரு டுட்டோரியல் காலேஜில் சேர்ந்து கொண்டான். அங்கும் அவனுக்கு ஜாலியாகப் பொழுது போனது. அவனைப் போன்ற ‘குணம் மணம்’ நிறைந்த நண்பர்கள் நிறையக் கிடைத்தார்கள்.

அது மட்டுமல்ல, டுட்டோரியல் காலேஜூக்கு நிறைய பெண்கள் வந்தார்கள்.

அங்கு படிக்க வரும் பெண்களிடமும், பக்கத்துக் காலேஜூக்கு அந்த வழியாகப் போகும் பெண்களிடமும் வம்பளக்கவே பன்னீர் செல்வத்திற்கும், அவன் நண்பர்களுக்கும் நேரம் சரியாக இருந்தது!

நண்பர்கள் அடிக்கடி பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு வருவார்கள். அதனால் சகல வசதிகளுடன் பன்னீர் செல்வத்திற்கு ரூம் தந்திருந்தார்கள்.

பெண்கள் எல்லாம் காலேஜூக்குப் போய் அடையும் வரை பன்னீர் நண்பர்களோடு தெருவில் தான் இருப்பான். அப்புறம் நண்பர்களோடு வீட்டிற்கு வந்து இண்டர்நெட் வசதியுள்ள கம்பியூட்டரில் ‘நல்ல நல்ல’ படங்கள் பார்ப்பான்.அவர்கள் பார்பதற்கென்றே பல இணைய தளங்கள் இருக்கின்றன.

காலேஜூ விடும் நேரத்தில் பெண்களை வழியனுப்பும் பணிக்காகப் போய் விடுவார்கள்!பெண்ணை வெறும் போகப் பொருளாக நினைத்திருக்கும் எந்த வீடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை! பாவம்! பாக்கியம் அந்த வீட்டில் வெறும் உயிருள்ள பொம்மை! அவ்வளவு தான்!

அரபு நாட்டில் தான் பெண் அடிமைகள் இருப்பதாகப் படித்திருப்பீர்கள். தமிழ் நாட்டில்கூட பணக்கார வீடுகளில் ஏழை வீட்டில் பெண் எடுத்திருந்தால், கிட்டத்தட்ட அப்படித் தான்!

பாக்கியம் ஏழையாகப் பிறந்து விட்டாலும் சிந்திக்கும் ஆற்றல் உள்ளவள்! குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்று அவளுக்குத் தெரியும்!

அகந்தையும், அதிகாரமும் உள்ள கணவன் செல்லம் கொடுத்து தேவையான பணமும் கொடுத்து மகனைக் கெடுப்பதை அவளால் தடுக்க முடியவில்லை!

வளர வளர அந்த வீட்டில் தன் அம்மாவால் எதையும் செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்ட பன்னீர் செல்வம், தந்தையிடமே தன் பாசத்தைக் காட்டி தன் காரியங்களை சாதித்துக் கொண்டான்.

பதினாறு வயசிலேயே தேவையில்லாத எல்லாவற்றையும் தெரிந்து கொண்டான். படிப்பை தன் வயசு சினேகிதர்களைச் சேர்த்துக் கொண்டு பொழுது போக்கும் ஒரு கருவியாக நினைத்துக் கொண்டான். கொஞ்ச கொஞ்சமாக அப்பாவின் பேச்சுக்கு மறு பேச்சு பேசப் பழகிக் கொண்டான்.

அதன்பின் தான் சண்முகத்திற்குப் பயம் பிடித்துக் கொண்டது. ஒரு முறை வீண் செலவைக் கண்டித்தான்.

“ அப்பா!….உங்களுக்கு ஒண்ணும் தெரியாது!..பேசாம போங்க!..” என்று அலட்சியமாகச் சொல்லி விட்டுப் போய் விட்டான்.

சண்முகம் வெறும் சவடால் பேர்வழி. மற்றவர்களிடம் எந்தப் பிரச்னை வந்தாலும் சத்தமாகவும், மோசமான வார்த்தைகளைப் பயன் படுத்தியும் பேசுவான். அதிலேயே பாதிப் பேர் பயந்து போய் விடுவார்கள். இன்னும் சிலர் சட்டையைப் பிடித்து அடிக்க கையை ஓங்கினால் போதும். பயந்து நடுங்கி விடுவார்கள். அதுவரைதான் அவனுக்குத் தெரியும். எதிரி ஓங்கிய கையைப் பிடித்து முறுக்கி ஓங்கி ஒரு அறை விட்டால், “ ஐயோ!…அண்ணா என்ன இப்படிப் பண்ணி விட்டீங்க?..” என்று அவன் காலைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவான். அவன் அதிர்ஸ்டம் அதுவரை யாரும் போவதில்லை!

சத்தமாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஏதோ வேலையாக ஒரு போலீஸ்காரர் அந்த வழியாகப் போனால் போதும்! பாத்ரூம் போவது போல் உள்ள போய் விடுவான். இந்த ரகசியம் தெரியாமல் இருப்பதால் தான், அவனைக் கண்டு பலர் பயப் பட்டார்கள்!

அன்று காலை பதினொரு மணியிருக்கும்.பன்னீர் செல்வம் தன் நண்பர்களோடு ரூமில் உட்கார்ந்து சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

“ கொஞ்சம் லட்சணமா இருந்தா அவளுக்கு அவ்வளவு திமிரா?…நானும் பத்து நாளா அவ பின்னாடி போய் சைட் அடிக்கிறேன்!…திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன்கிறா….”

“ஆமாண்டா!….நான் கூட பக்கத்தில் போய் லேசாக் கண்ணடிச்சுப் பார்த்தேன்!…ரொம்ப மொறைக்கிறாடா!…..”

“ அவளுக்கு அங்கே கொழுப்பு ரொம்ப ஏறிப் போச்சு!….நாம நாலு பேரும் அவளைத் தூக்கிட்டுப் போய் ரேப் செய்தா தான் அவளுக்கெல்லாம் புத்தி வரும்!”

பதினைந்து, பதினாறு வயசு பசங்க பேசற பேச்சா இது?

ஹாலில் சோபாவில் உட்கார்ந்திருந்த இருந்த சண்முகத்தின் காதில் அவர்கள் பேச்சு தெளிவாக விழுந்தது!

சண்முகத்திற்கு சப்த நாடியும் ஒடுங்கியது.

கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் பற்றி தினசரி பத்திரிகைகளில் அவன் படித்திருக்கிறான். அரசு, காவல் துறை, நீதித் துறை எல்லாமே இந்த விஷயத்தில் கடுமையான மன நிலையில் தான் இருக்கின்றன.

பன்னீர் படித்து உயர் பதவிக்கு வரா விட்டாலும் பரவாயில்லை!..ரோட்டில் கை விலங்கு போட்டு காவல் துறை இழுத்துப் போகாமல் இருந்தால் அது போதும் என்றிருந்தது சண்முகத்திற்கு.

தனக்கு எந்த செல்வாக்கும் இல்லை. தான் வெறும் ‘வெற்று வேட்டு’ என்பது அவனுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்! அருமை மகனால் என்ன என்ன பிரச்னைகளை எதிர் காலத்தில் வருமோ என்று நினைக்கவே பயமாக இருந்தது!

திடீரென்று யாரோ தொட்டார்கள். பகீர் என்றது! திரும்பிப் பார்த்தான். அருகில் பாக்கியம் நின்று கொண்டிருந்தாள்!

“ஏண்டி உன் மகன் பேசறதைக் கேட்டாயா?…”

“நானும் கேட்டுக் கொண்டுதான் வந்தேன்!…இப்ப போய் அவனை என் மகன் என்று சொல்றீங்களே!…இவ்வளவு நாளா செல்லம் கொடுத்து, வேண்டாத செலவுக் கெல்லாம் பணம் கொடுத்து அவனை ‘தத்தாரி’யாக்கிட்டு இப்ப என் மகன் என்று சொல்றீங்களே!…நான் சொன்னதை இதுவரை நீங்க எதையாவது கேட்டிருக்கிறீங்களா?….அவனுக்கு தினசரி பாக்கெட் மணி இருநூறு ரூபா தேவை இல்லை என்று சொன்னேன்..டுட்டோரியல் காலேஜூக்குப் போக 11|2 லட்சத்திற்கு பைக் தேவையில்லை என்று சொன்னேன்…நீங்க என் பேச்சுக்கு என்றாவது மதிப்பு கொடுத்திருக்கிறீர்களா?..”

“ சரி!…இப்ப அதைப் பேசி என்னடி செய்யறது? நல்லாப் படிப்பான் என்று தான் அவனுக்கு சகல வசதியும் செய்து கொடுத்தேன்!..”

“நான் படிச்சுப் படிச்சுச் சொன்னேன்…..கேட்டீங்களா?…..என்னை நீங்க ஒரு மனுஷியாவே மதிக்கலே!….நல்லா வளர விட்டு விட்டு….இப்ப வந்து என்ன செய்யறதுனு கேட்கிறீங்க!…வெறும் பணம் வசதி மட்டும் இருந்தா படிப்பு வராதுங்க!….படிப்பு அவசியம் என்கிற எண்ணம் ஆரம்பத்திலிருந்தே குழந்தைகள் மனசிலே நாம பதிய வச்சிருக்க வேண்டுங்க!….அது மட்டுமல்ல!…ஒழுக்கத்தோட கூடிய படிப்பா அது இருக்க வேண்டுங்க! இல்லா விட்டா படிச்சதினாலே கிடைச்ச புத்திக் கூர்மையை தப்பான வழிக்குத் தான் அவங்க தங்க எதிர் காலத்தில் பயன் படுத்துவாங்க!… நம்ம நாடு வேகமா முன்னேறாதற்கு படிக்காதவங்க காரணம் இல்லே!..இந்த ஒழுக்கம் இல்லாத படிப்பு படிச்சவங்க நிறைய இருப்பது தான் காரணம்!….”

“ நீ என்னடி சொல்லறே?..”..

“ நான் அவனுக்காக எவ்வளவு செய்திருக்கேன் தெரியுமா?….”“என்ன செய்திருக்கிறீங்க?….நிறைய செலவு செய்து உடம்பை வளர்த்திருக்கிறீங்க!

.அவனுக்கு நல்ல பழக்க வழக்கமும் ஒழுக்கம் சார்ந்த அறிவும் வளர ஐந்து பைசா செலவு செய்திருப்பீங்களா? பெற்றவங்க குழந்தைகள் உடம்பு வளர்ச்சியை மட்டும் பார்த்தா போதாதுங்க!…வயசுக்குத் தகுந்த அறிவு வளர்வதையும் கவனிச்சு வளர்க்க வேண்டுங்க!..”

“நீ சொல்லறதெல்லாம் எனக்கு சுத்தமா புரியலையடி!….”

“குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்தால் போதாதுங்க!… குழந்தைகளுக்காக நாம நிறைய நேரம் ஒதுக்கி… அதை அவங்களோட செலவழிக்க வேண்டுங்க!…..பெற்றோரிடம் மனம் விட்டு கலந்து பேசி வளரும் எந்தக் குழந்தையும் கெட்டுப் போகாதுங்க!..நீங்க அவன் கேட்ட பணத்தைக் கொடுத்திட்டு,….அதோட உங்க வேலை முடிந்து விட்டது என்று போயிட்டீங்கீங்க!…அதன் விளைவு தானுங்க இது!…”

“ சரிடி!….இப்ப என்ன பண்ணறது?…”

“ இப்பவாவது கொஞ்சம் பொறுமையா கேளுங்க!…குழந்தைகளின் மிக முக்கிய குணமே ‘மாடலிங் பிஹேவியர்’ தானுங்க!……குழந்தைகள் தங்களுக்குப் பிடிச்சவங்களை பெரிய ஹீரோவா நினைச்சு அவங்க மாதிரி சின்ன வயசிலிருந்தே நடக்கப் பழகிக்கும்!…குழந்தைகள் முதலில் பார்த்துப் பழகுவது அவங்க அப்பா அம்மாவுடைய பழக்க வழக்கங்களைப் பார்த்து தான்!….அதனலே பெற்றவங்க தான் முதலில் குறைந்த பட்சம் குழந்தைகள் முன்னால் ஒழுங்கா நடந்து கொள்ள வேண்டும்!…அவன் முன்னாடி தான் நீங்க பெரிய தாதா மாதிரியும், கெட்ட வார்த்தை பேசி, யாரை வேண்டுமானாலும் அடிக்கப் போனா ஊரே பயந்து கொள்ளும் என்கிற மாதிரி நடந்து கொண்டீங்க!….அதையே தான் இப்ப உங்க பையனும் கடைப் பிடிக்கிறான்!…”

“ என்னடி!…திரும்பத் திரும்ப பழைய கதையையே பேசறே!….சரியடி!..நான் தான் தப்பு பண்ணிட்டேன்!…எப்படியாவது நம்ம பையன் ஏதாவது பெரிய வம்பில் சிக்காம காப்பாற்ற வேண்டும்!…..அதற்கு என்னடி செய்யலாம்?…”

“ இப்ப வியாதி கொஞ்சம் முத்தித்தான் போச்சு!…இப்ப மருந்து மாத்திரைக்கு குணமாகாது!…… ஆபரேசன் செய்து தான் ஆக வேண்டும்!..நிசமாவே நீங்க ஒரு முரட்டு ஆளா மாறி அவன் சிநேகிதங்க இனி நம்ம வூட்டுப் பக்கம் வராம தடித்திடுங்க!…பன்னீரை டுட்டோரியல் காலேஜிலிருந்து நிறுத்திடுங்க!….வெளியே சுத்த விடாதீங்க!…ஒரு வாரத்திற்கு பைக்கை வேறு இடத்தில் கொண்டு போய் வச்சிடுங்க!…படிப்பெல்லாம் வேண்டாம் என்று சொல்லிடுங்க!…உங்க தொழிலுக்கு கூடவே உதவியா வைத்துக்கொள்ளுங்க!…இருபத்தி நாலு மணி நேரமும் உங்க பார்வையிலேயே அவன் இருக்கட்டுங்க!…அவனுக்கு பதினாறு வயசுதானே ஆகிறது …முழுசா கெட்டிருக்க மாட்டான்…வயசு கோளாறு..தவறான சேர்க்கை… சூழ்நிலை மாறினா திருந்திடுவான் என்று நினைக்கிறேன்!….கொஞ்சம் கொஞ்சமா அன்பைக் காட்டுங்க!…தவறான வழியில் போனா வாழ்க்கையே நாசமா போயிடும் என்பதை விளக்கிச் சொல்லுங்க!…நிஜமாவே படிக்க ஆசை வந்தாப் படிக்கலாமென்று சொல்லுங்க!…சில நாட்கள் கழிச்சு அவன் நல்லா இருக்கனும் என்று தான் அப்படி கடுமையா நடந்திட்டேன் என்று சொல்லி விடுங்க!…எல்லாம் நீங்க அவனிடம் நடக்கிறதைப் பொறுத்து இருக்கு!…”

“ அது சரி நான் திருந்திடறேன்….என் மகன் திருந்திடுவானா?….”

“ மரம் பட்டுத்தான் போச்சு!……ஆனா வேர் இன்னும் கெட்டிருக்காது!… மருந்தடித்து, நல்ல உரமிட்டு தண்ணீர் பாச்சுவோம்!…..நிச்சயம் கோடை மழையில் துளிர் விட்டு விடும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது!…பார்ப்போம்!…”

பட்ட மரம் துளிர் விடுமா?..பன்னீர் திருந்தி நல்ல வழிக்கு வந்து விடுவானா? .பாக்கியம் ஆசை நிறைவேறுமா?…காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *