பக்கத்து விட்டு பார்வதியைப் பாருங்க. பட்டுப் புடவையில் வந்ததாலே எல்லோரும் விழுந்து விழுந்து கவனிக்கிறாங்க. நீங்களுந்தான் இருக்கிறீங்களே!” கணவனிடம் சலித்துக் கொண்டாள் கமலா.
‘என்னாச்சு கமலா உனக்கு? ஏன் இப்படிப் பேசறே?
‘பின்ன என்னங்க. எவ்வளவு நாளா நான் உங்ககிட்டே புதுசா ஒரு பட்டுப் புடவை எடுத்துத் தாங்கன்னு கேட்கிறேன். இப்பப் பாருங்க, சாதா புடவையில வந்ததால என்னை யாராவது கண்டுக்கறாங்களா?”
”எல்லோரும் உன்னைப் பார்த்து சிரிச்சுட்டுத்தானே போறாங்க. மதிப்பும் மரியாதையும் நாம நினைக்குறதுலதான் இருக்கு” என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே புடவை வியாபாரி பழனிச்சாமி கமலாவைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றான்
”பார்த்தீங்களா…பார்த்தீங்களா…புடவைக்காரன் என்கிட்ட பேசாம அவகிட்ட பேசறதுக்கு ஓடுறானே” என்றவள் பார்வதியை பொறாமையுடன் பார்த்தாள்.
‘ஏம்மா பட்டுப்புடவை தவணையில எடுத்து எத்தனை வருஷமாச்சு? என்னைக்குத்தான் தரப் போறீங்க?”
பார்தியைப் பார்த்து கேவலமாகக் கேட்டான் பழனிச்சாமி.
– செல்வராஜா (ஏப்ரல் 2013)