வெள்ளவத்தை கதிரேசன் கோயிலுக்குக் போய்விட்டு, லொறிஸ் விதியில் உள்ள தன் அறைக்குத் தனியாக நடந்து வந்த தெய்வ சிகாமணி கையில் கொண்டு வந்த செம்பரத்தம் பூக்களை, சுவரில் அவனே தொங்கவிட்டிருக்கும் சிவபெருமான் படத்தில் கொழுவிவிட்டான். கோயிலில் இருந்து புறப்படும் போது வாங்கி வாயில் போட்ட வெற்றிலை பாக்கைக் குதப்பியவாறு, சாறத்தைக் கட்டிக் கொண்டு, உடுத்திக் கொண்டு போன வெள்ளை வேட்டியை மடித்து பவித்திரமாக தன் சூட்கேசுக்குள் வைத்தான். இனி அடுத்த வெள்ளிக்கிழமை கதிரேசன் கோயிலுக்குப் போகும் போது தான் அதை எடுப்பான். குந்தி இருந்து சூட்கேசை தன்கட்டிலுக்குக் கீழ் தள்ளிவிட்டு எழுந்த அவன், சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியின் முன் போய் நின்றான். கண்ணாடிச் சட்டத்தில் வைத்த சீப்பை எடுத்து, நெற்றியில் சரிந்து கிடந்த மயிரை தலைமுடியோடு சேர்த்துச் சீவியபடி, முகத்தைக் கண்ணாடிக்குக் கொஞ்சம் கிட்ட இழுத்து, அதை ஆர்வத்தோடு பார்த்தான். திருநீறு பூசி, சந்தனப்பொட்டுடன் செந்தழிப்பாகவிருக்கும் தன் முகத்தைப் பார்ப்பதில் அவனுக்கு ஒரு ஆத்மதிருப்தி. வெற்றிலை சப்பிச் சிவந்திருந்த, கீழ்ச் சொண்டை மேற்பற்களால் அழுத்தி இழுத்து, நாக்கினால் நனைத்தான். வெள்ளிக்கிழமைகளில் அவன் வழமையை விட சந்தோசமாகவேயிருப்பான். கை மணிக்கட்டில் நேரத்தைப் பார்த்தான். ஆறரை தான்.
எட்டு மணிக்குத்தான் சைவக்கடைக்கு நாலு இடியப்பம் சாப்பிடப் போக வேண்டும். அதுவரை என்னசெய்வது? கட்டிலின் சட்டத்தோடு தலையணையை நிமிர்த்திப் போட்டு கைகள் இரண்டையும் பிடரிப்பக்கம் சேர்த்துவைத்து கால்களைக் கட்டிலில் நீட்டியவாறு நிமிர்ந்து கிடந்தான். அவன் அறையில் இருக்கும் போது அதிகமான நேரத்தை அவ்வாறு தான் போக்குவான். அந்த அறையில் அவனோடு தங்கும் பாலசிங்கமும், விக்னேசுவரனும் இன்று சம்பளமாதலால் நிச்சயமாக படத்துக்கோ, குடிப்பதற்காக பாருக்கோ போயிருப்பார்கள். அவர்கள் கந்தோரில் இருந்து வந்து கழட்டிப் போட்ட “பெல்பொட்டங்களும், சேட்டுக்களும், கட்டில்களில் தூக்கியெறிந்தபடி கிடக்கின்றன. சம்பள நாளில் அவர்கள் இருவரும் அப்படித்தான். “வாழ்க்கையில் என்னத்தைக்கண்டது. இளம் வயசிலை அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க வேண்டியதுதான்” என்று அவர்கள் அடிக்கடி கூறுவதை அவன் கேட்டுச் சும்மா சிரித்துப் போட்டிருப்பான். அவர்களுக்கும் அவனுக்கும் இந்த விடயங்களில் ஒத்துப் போவதில்லை. சம்பளம் எடுத்ததும் தெய்வசிகாமணியின் முதல் வேலை மணிஓடரில் வீட்டுக்குப் பணம் அனுப்புவதுதான். மிகுதிப் பணத்தில் அனாவசியச் செலவு எதுவும் செய்ய மாட்டான். அவன் கிளறிக்கலில் எடுபட்டு கொழும்புக்கு வந்த இந்த ஐந்து வருட காலத்திலும் ஒரு ஏழெட்டுத் தமிழ்ப்படங்களே பார்த்திருப்பான். ஆரம்பத்தில் கடைகளில் தேனீர் குடித்தான். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு ரூபாவுக்குக்கிட்டச் செலவு என்று நிற்பாட்டி இப்போது தேனீரே குடிப்பதில்லை. நண்பர்களுடன் படத்துக்கு, கோல்பேசுக்கென்று சுற்றுவதாலும் செலவு அதிகமென்று, இப்ப எங்கும் தனியாகத்தான் போவான், வருவான். கந்தோருக்குப் போவது வருவது தவிர, மற்ற வேளைகளில் எங்கு போறதென்றாலும் அதிகமாக நடந்தே போவான். அதனால் அவனுக்கு எவ்வளவோ காசு மிச்சம். பின்னேரங்களில் இரண்டு மூன்று ரியூசன் கொடுத்து வருகிறான். அந்தப் பணம் யாருக்கும் தெரியாமல் மூன்றாவது தங்கச்சி வினிதா பெயரில் தபாற்கந்தோர்ச் சேமிப்புப் புத்தகத்தில் போட்டு வருகிறான். தான் திருமணம் செய்து போகும்போது, அதை அவளிடம் கொடுத்துவிட்டுப் போக வேணும் என்பது அவனது திட்டம். இதனால் அவனுடைய நண்பர்கள் அவன் ஒரு “கஞ்சப்பயல்” என்று கூறுவார்கள். நேரிலும் நக்கலடிப்பார்கள். அவன் அதையிட்டுக் கவலைப்படுவதேயில்லை. அதை நண்பர்கள் இருவரும் சில நேரம் குடித்துவிட்டு இரவு நேரங்களித்து வந்து, “டேய் சைவாத்துமா கதவைத்திறவடா” என்று கத்துவார்கள். அவன் எழும்பி வந்து கதவைத்திறந்து விட்டு, ஒரு புன் சிரிப்போடு படுத்து விடுவான்.
“டேய் சிகாமணி,! நித்திரையா கொள்றாய்! நீ ஒறுத்தொறுத்துச் சீவிச்சு என்ன பிரயோசனமடா? இப்படி ஒறுத்துச் சீவிச்சு, உன்னை எதிர்நோக்கிற பிரச்சினைகளைத் தீர்த்துப் போட்டு சந்தோசமா வாழலாம் எண்டு நினைக்கிறியா? உன்னை நினைக்கப் பரிதாபமாயிருக்கடா! அது முடியாதடா, தனி மனிதனாலை இந்தக் கேடு கெட்ட சமுதாயம் ஏழையள் மேல் சுமத்திற சுமைகளை இறக்க முடியாது. முடியுமா? முடியவே முடியாதுடா. ஒரு சுமையிறக்க, ஒன்பது சுமை தலையிலை வந்து குந்திக் கொள்ளும். அது வாழ்க்கை முழுக்க நசித்து நசித்து மனுஷனைச் சாகடிக்கும் தலைதூக்கவிடாதடா, டேய், சைவாத்துமா, பாவம், நீ நித்திரை கொள்; பாலசிங்கம் வெறியில் அறைக்கு நேரஞ்செல்ல வந்தால், அவனுக்கு முன்னால் நின்று இப்படிப் புலம்புவான். அவனோ ஒன்றும் பேசாது குப்புறக்கிடந்து தூங்குவான்.
அவன் இப்போது கட்டிலில் கிடந்தவாறு யோசிப்பதெல்லாம் தன் வீட்டு நிலைமை பற்றியும், தன் எதிர்கால வாழ்வைப் பற்றியும் தான். அவன் யோசிக்கும் போது அவன் மனதில் வேறெதுவும் தோன்றுவதில்லை. அவனுக்கு இலக்கியம், அரசியல், புத்தகவாசிப்பு, பொழுதுபோக்கு எதிலும் பிடிப்பேயில்லை.
ஜன்னலுக்கூடாக தெருவிளக்கு பல்ப்பை மொய்க்கும் பூச்சிகளைக் கவனித்தபடி, இன்று தான் தகப்பனுக்கு எழுதிய கடிதத்தையிட்டுச் சிந்திக்கலானான்.
தகப்பன், மூன்று நாட்களுக்கு முன்பு, அவனுடைய கலியாண விஷயம் பற்றி எழுதிய கடிதத்திற்கு அவன் இன்று காலை, காசு அனுப்பிய போது தன் முடிவை எழுதியிருந்தான். அதில் அவனுக்கு ஏதோ திருப்தியில்லாத மாதிரி. “மகனே நீ ஒண்டுக்கும் யோசிக்காதை. நீயும் கலியாணம் செய்து சந்தோசமா வாழ வேணும். உன்ரை அக்காவையும் கெதியில் கரை சேர்க்க வேணும். நீ, பின்னாலையிருக்கிற ரஞ்சி, இந்து இரண்டு பேற்ரை கலியாணங்கள் பற்றிக் கவலைப்படாதே. அதுகளை கரை சேர்க்கிறதுக்கு நானிருக்கிறன். அதுக்கு இன்னும் ஐஞ்சாறு வருஷமிருக்கு. நான் உழைச்சுப் பணஞ் சேர்த்துப் போடுவன். உன்ரை அக்காடை கலியாணந்தான் இப்ப முக்கியம். உனக்கும், உன்ரை அக்காவுக்கும் நல்ல இடத்திலை மாத்துச் சடங்குக்கு எல்லாம் பொருத்தமாயிருக்கு. சாதகமும் பொருந்தியிருக்கு. உன்ரை முடிவை எழுது. அக்காவுக்கும் வயது போகுதில்லையா? என்று தகப்பன் எழுதிய வரிகளை இரண்டு மூன்று தரம் வாசித்து விட்டுத்தான் பதில் எழுதினான். அவனுக்கு மாத்துச் சடங்குக்கு விருப்பமில்லை. அது குடும்பத்தில் பெருங்கரைச்சல்களை ஏற்படுத்தும். அதனால் தனக்கு வேறு இடத்திலும், அக்காவுக்கு வேறு இடத்திலும் பேசும்படியும், தனக்கு இப்போது கலியாணம் அவசரமில்லை. அடுத்தவருஷம் யாழ்ப்பாணத்துக்கு மாற்றம்பெற்று வந்தபின் தனக்கு சம்பந்தம் பேசும் படியும் பதில் எழுதினான். அந்தப்பதிலில் ஏதோ திருப்தியில்லாத மாதிரி உள் மனம் சங்கடப்படுகிறது. கொடுப்புக்குள் வெற்றிலைச் சக்கையை அதக்கிக் கொண்டு அதையிட்டு யோசித்தான். அக்காவைப்பற்றி யோசிக்காமல் எழுதிவிட்டதாக உள்ளம் உறுத்திற்று. அக்காவுக்கு இப்போது இருபத்தொன்பது வயசாகிறது. எனக்கு உடனே சம்பந்தம் பேசி முற்றாக்கினாற் தான், சீதனக்காசை வாங்கி அவவுக்கு சீதனம் கொடுக்கலாம். அந்தப் பதிலைப் படித்துவிட்டு அப்பு சரியாக் கவலைப்படும். அப்பு பாவம். அது வாழ்க்கை முழுக்க சுமை சுமக்கிறதுதான் வேலை. அது குடும்பத்தில் மூத்தவனாகப் பிறந்து, நான்கு தங்கச்சிமாரைக் கரை சேர்த்துவிட்டது. எங்களுடன் இருந்த அச்சா மாமிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் அது கலியாணம் கட்டிவைத்து, எங்களைப் படிப்பிக்க எவ்வளவு கஷ்டப்பட்டுது? பாவம் அது கவலைப்படக்கூடாது.
அந்த நினைவுகளோடு கொஞ்ச நேரம் கண்களை மூடிக்கொண்டு கிடந்தான். அக்காவின் திருமணத்தை முடிப்பதற்காக, தனக்கு எவ்வளவு விரைவில் சம்பந்தம் முற்றாக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் பேசி முடிக்கும் படி எழுதவேண்டுமென்று முடிவெடுத்த அவன் கண்விழித்து இப்பவே எழுதிவிடவேண்டும் எனக் கட்டிலை விட்டு எழுந்து சுவரில் தொங்கும் சேட்டுப் பையில் இருந்து பேனாவை எடுத்தான். வாயுள் கிடக்கும் வெற்றிச் சக்கையைத் துப்பி விடுவதற்காக, தெருவோடு அண்டிய அறை வாசலுக்கு வந்து நிலத்தில் இறங்கி, ஓரமாக வெற்றிலை சக்கையைத் துப்பிவிட்டு, வாயைப் புறங்கையால் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தான். அப்போது ஒரு “போஸ்ட்மன்” தெருக்கரையில் சைக்கிளை நிறுத்தி “தெய்வசிகாமணி” என்றான். தந்தியென்று அறிந்து அவசரமாகச் சென்று அதை வாங்கிக் கொண்ட போதும் அவன் பதட்டமடையவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதான் வீட்டிலிருந்து யாபேரும் சுகம் என்று கடிதம் வந்திருந்தது. அவன் அறைக்குள் வந்து மின்சார வெளிச்சத்தில் தந்தியை விரித்தான். “அப்புக்குக் கடுமை, உடனே வரவும்” என்றிருந்தது. இருதயம் அதிர்ச்சிகொண்டு கனத்துக் கொள்ள கண்களை மூடி முருகா என முணுமுணுத்தவன், கைமணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்தான். ஆறு அம்பது. ஏழு பதினைந்துக்கு காங்கேசன் துறை மெயில். உடனே சாறத்தைக் கழட்டி எறிந்து விட்டு ட்றவுசரை மாட்டிக் கொண்டு, சேட்டை எடுத்து பொக் கட்டில் பணத்தைப் பார்த்துக் கொண்டு சேட்டை ஒரு கையில் மாட்டியவாறே வீட்டுக்காரனிடம் ஓடி விடயத்தைக் கூறிவிட்டுத் தெருவுக்குப் பாய்ந்தோடி, கோட்டை நோக்கி வந்த பஸ்ஸொன்றில் தாவிக் கொண்டான். கோட்டைப் புகையிரத நிலையத்துக்கு வந்து, டிக்கட் எடுத்துக் கொண்டு பிளாட்பாரத்துக்கு வரும் போது புகையிரதம் புறப்பட்டு நகர்ந்து கொண்டிருந்தது. பிசாசு போல் பாய்ந்து ஓடித்தாவி ஏறிக் கொண்டான். வாசற் கம்பியை ஒரு கையால் பிடித்தபடி மறுகையால் இடுப்பைப் பற்றிக் கொண்டு நின்று இனைத்தான். முகத்தில் வியர்வை வழிந்தது. முதுகுச் சேட்டு வியர்வையில் நனைந்து தோய்ந்தது. நெஞ்ச அடிப்பை அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. கீழ்ச் சொண்டைப் பற்களால் கடித்துக் கொண்டு இடுப்பில் வைத்தகையை எடுத்து, நெஞ்சுப்பகுதிச் சேட்டுப் பொத்தான் களைக் கழற்றி,, நெஞ்சை விரல்களால் அழுத்தித் தடவிக் கொண்டிருந்தான். அவன் கொழும்பில் சாப்பாட்டை ஒறுத்துக் கொண்டதால், உடலின் பெலயீனம் ஏற்பட்டதை அப்போது தான் அவனால் உணரமுடிந்தது. வாசலில் வெளி நோக்கி நிற்கும் அவனுக்கு கழிந்து செல்லும் வெளிச்சங்கள் தெரியவில்லை. எங்கும் இருள் மயமாகவேயிருந்தது. வாசல் திறந்து உள்ளே ஓரமாகச் சாத்தியுள்ள “கொம்பாட்மெண்ட்” கதவில் தலையைச் சரித்து முட்டியவாறு, நட்சத்திரங்களற்ற வானத்தை வெறித்தபடி நின்றான்.
நெஞ்சு பதறித் துடிக்கிறது.
“அப்பவக்கு என்ன நடந்திருக்கும்”
“நானறிய அவர் நோயெண்டு கிடந்ததில்லையே. ஐம்பத்தைந்து வயசாகுது. என்ன நடந்ததோ? திடீரென மாரடைப்பு ….. முருகா எதுவும் நடக்கக்கூடாது. இராப்பகலா தோட்டத்துக்குளை தான் நிற்பார்”
“ஏதாவது அப்புக்கு நடந்து விட்டால், வீட்டின் கதி?
திடீரெனக் கூட்டுக்குள் அடைபட்ட மானைப்போல், அவனது உள்ளம், வெருண்டு, திக்குத்திசை தெரியாது. நொந்து நொந்து அந்தரித்துக் கொண்டேயிருந்தது.
புகையிரதமும் அவன் ஆசைப்படும் வேகத்தில் போகுதில்லை.
கோண்டாவில் ஸ்டேசனில், விடியற்காலை வெளுறிய இருளில் இறங்கிய தெய்வசிகாமணி, நெஞ்சக் கூட்டில் தூக்கியடிக்கும் இதயத்தின் பதைப்புடன், காரொன்றைப் பிடித்துக் கொண்டு வீட்டுப் படலையில் சென்று இறங்கினான்.
வாழை மரங்கள் வாசலில் நடப்பட்டிருந்தன.
“அப்பு நீ செத்துப் போனியா!”
இதயத்தின் அடித்தளத்தில் இருந்து உருகிய பாறைக்குளம்பு போல் துன்பவுணர்வுகள், இதயத்தை உடைத்துக் கொண்டு உள்ளே உருகி வழிந்து கொண்டிருந்தது. இரு கைகளாலும் நெஞ்சை இறுக அணைத்தவாறு, கண்ணீர் கண்களைப் பிழிந்து ஒழுக, விறைத்து நின்றான். இருகரங்கள் அவனுடைய இரு பக்கத் தோள்களையும் அணைத்துக் கொண்டு மெதுவாக வீட்டை நோக்கி நகர்த்தின.
“ராசா அப்பு எங்களைத் தவிக்க விட்டுப் போயிட்டாரடா!
அவனுடைய தாய் தலையில் கைகளை அடித்துக் கொண்டு ஓடிவந்து அவன் முன்னால் விழுந்து, அவனுடைய இரு பாதங்களையும் கட்டிக் கொண்டு புலம்புகின்றாள்.
தாயைத் தொடர்ந்து அவனுடைய மூன்று சகோதரிகளும் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்து அவனைக்கட்டி அணைக்கின்றனர்.
“அண்ணா ! நாங்கள் இனி என்ன செய்யப் போகிறம்!”
“தம்பி அப்பு எங்களை அந்தரிக்க விட்டுப் போயிட்டாரே!
“அண்ணா அப்பு எங்களை விட்டுட்டுப் போயிட்டாரே!”
“மகனே! நான் என்ன செய்யப் போறனோ? அவருக்கு இந்த மாரடைப்பு எங்கையிருந்து வந்துதோ?”
தெய்வசிகாமணியின் இறுகிய நரம்புகளில் உற்பவித்து, உணர்வுகளை வருத்தி நெஞ்சைக் குதறிக்குலுக்கி, வந்த அழுகை ஓ!வென மடையுடைக்கின்றது.
“என்ரை அப்பு!”
அவனுக்கு எவராலும் ஆறுதல் கூற முடியவில்லை.
எவ்வளவு நேரந்தான் அழ விடுவது?.
இருவர் அவனைக் கைத்தாங்கலில் உள்ளே அழைத்துப் போகிறார்கள்.
தாயும் தங்கைமாரும் அவன்பின்னே அழுதபடி.
சாவீட்டுக்கு வந்திருக்கும் உற்றாரும், உறவினரும் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
“இனி இந்தக் குடும்பத்திடை பொறுப்பெல்லாம் இந்தப் புள்ளையிடை தலையிலை தான்!”
“அந்தப் பொடியன்தானே பொறுப்பேற்க வேணும் வேறையார்?”. அங்கு நின்ற இருவர், அவனை அனுதாபத்தோடு நோக்கியவாறு பேசிக் கொண்டனர். அது அவன் காதில் உரசிச் செல்கிறது.
தெய்வசிகாமணி கீழுதட்டைப் பற்களால் கடித்து அழுகையை அடக்கி அனுங்கியவாறு இவ்வளவு காலமும் அந்தக் குடும்பத்தின் சுமை சுமை சுமந்த தன் தகப்பனின் பூதவுடலை நோக்கி நடுங்கி நடுங்கிக் காலடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
– சிந்தாமணி 1982 – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995