கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2024
பார்வையிட்டோர்: 7,370 
 
 

“ஷாமியானாவுக்கு பணம் தந்தாச்சா?” கேட்டாள், மீனாட்சி.

“ஆச்சு, சந்தியாவின் தம்பி தான் எல்லாத்தையும் பார்த்துக்கறானே,” என்றார், கணேசன்.

“ப்ளாஸ்டிக் சேர் வந்து இறங்கினதை, பார்த்து எடுத்து வச்சாங்களா… போன முறை வந்தப்போ மூணு சேரைக் காணோம்ன்னு அதுக்கும் தண்டம் அழ வேண்டியிருந்தது.”

“எல்லாம் அவங்களே பார்த்துக்குவாங்க; நமக்கு இது வேலையில்லை.”

“ஜெயா என்ன பண்றா, கீழே எதுவும் சின்ன பொருள் இருந்தா, எடுத்து மேலே வைக்கச் சொல்லுங்க. வர்றவங்க சின்னப் பிள்ளைங்களை அழைச்சிட்டு வந்தா, அதுங்க சும்மா இருக்காதுங்க, எதையும் தொடாதேன்னும் சொல்ல முடியாது.”

வாசலுக்கும் வீட்டிற்குள்ளும் நுாறு முறை நடந்து தேய்ந்திருப்பார், கணேசன்.

உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்டே அத்தனை பேரையும் ஏவல் செய்து கொண்டிருந்த, மீனாட்சி, அடிக்கொரு தரம் அடுத்த அறையை எட்டி எட்டி, பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹாலில் பொருட்கள் எல்லாம் வந்திருந்தது. ரோஜாப்பூ மாலையை அருணின் புகைப்படத்திற்கு மாட்டினர்.

ஒருகணம் நின்று, அந்தப் புகைப்படத்தை பார்த்தாள், சந்தியா. புகையைப் போல உணர்வு அடைத்து நிரப்பியிருந்த உடலை விட்டு வெளியேறியது போல், ஒரு ஆசுவாசம். அடுத்தவர்களால் அளவிட முடியாத ஆசுவாசம்.

“அம்மா, பசிக்குது…” ஆறு வயதே ஆன மகன் தீபக், பக்கத்தில் வந்து கேட்டான்.

மெல்ல அவனைத் துாக்கி தோளில் போட்டு, விளையாடி அழுக்கு படிந்திருந்த குழந்தையின் முகத்தை, புடவைத் தலைப்பால் துடைத்து விட்டாள்.

“தீபக், இன்னைக்கு, அப்பாவுக்கு சாமி கும்பிடறோம்ல்ல, அவர் வந்து சாப்பிட்டு போன பிறகு தான், நாம சாப்பிடணும்,”

என்ற போது, குழந்தையின் முகத்தில் அத்தனை மிரட்சி.

“அப்பா, திரும்ப வந்துடுவாராம்மா?” கேட்ட அந்தக் குரலில் இருந்த பயமும், தவிப்பும் அவளுக்கு மட்டுமே தெரியும்.

குழந்தையை தன்னோடு சேர்த்தணைத்து, அவன் அடுத்த கேள்வியைக் கேட்பதற்குள் வேகமாய் வாயை அடைத்து, தலை அசைத்து, வேண்டாம் என்று, சைகை செய்தாள்.

“இந்த சின்ன வயசுல, உன் வாழ்க்கை இப்படி ஆகி இருக்க வேண்டாம். அவனையே தான் கட்டிக்குவேன்னு அத்தனை ஆர்ப்பாட்டம் செய்து கட்டிகிட்டே. 12 வருஷம், குறிஞ்சிப் பூ மாதிரி ஒரு வாழ்க்கை,” அருணின் பெரியம்மா உறவு பெண் வந்து, தோளில் தட்டி, ஆறுதல் சொல்ல, அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உன் தம்பி எங்கே, சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டானா… புரோகிதருக்கு சொல்லியாச்சுல்ல, அவர் வந்ததும், ஆரம்பிச்சிடுவாரு. அப்புறம், பூ வாங்கல, தேங்காய் வாங்கலைன்னு சொல்லி ஓடக் கூடாது,” என்று சொல்லி, வந்திருந்தவர்களை நோக்கி நகர்ந்தாள், மீனாட்சி.

கடை இதழில் கசப்பாய்ச் சிரித்தாள், சந்தியா.

‘இன்னும் எதற்கு இந்த ஓட்டை அதிகாரம்?’ என, மனதிற்குள் நினைத்தபடி, அறைக்குள் சென்று அமர்ந்தாள்.

நிறைய பேர் வரத் துவங்கி இருந்தனர்.

வெளியில் கலகலப்பும், பேச்சுக் குரலும் மிதந்து மிதந்து அறைக்குள் வந்து கொண்டிருந்தது. 10 நாட்களுக்கு முன் வந்திருந்தபோது, போட்டிருந்த துக்க வேஷம் யாரிடமும் இல்லை. நன்றாக உடை உடுத்தி, சிரிப்பும், பேச்சுமாய் இருந்தது, வீடு.

வந்திருந்தவர்களை ஓடி ஓடி கவனித்துக் கொண்டிருந்தாள், மீனாட்சி. அவ்வப்போது, புதிதாய் வந்த மனிதர்களிடம், இரண்டு சொட்டு கண்ணீர் துளியை பரிமாறி, கடந்தாள்.

‘எல்லாம் அவள் வந்த நேரம்…’ என்று சன்னக் குரலில், யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள், மீனாட்சி.

சந்தியாவிற்கு சிரிப்பு தான் வந்தது. அவன் நினைவு வரவே இல்லை. அவனால் இழந்த அத்தனையும் நினைவில் வந்தது.

கடைநிலை ஊழியராய் இருந்த அப்பா, படாத பாடுபட்டு வாங்கித் தந்த பொறியியல் படிப்பில் சேர்ந்ததும், அவரின் கஷ்டமெல்லாம் மறந்து போனது; அருண் வடிவத்தில், காதல் மட்டும் கையாட்டிக் கொண்டு வந்தது.

பொறியாளர் ஆகி வீடு கட்டுவதற்குள், காதல் கூடு கட்டி விட்டதால், படிப்பை பறக்க விட்டுவிட்டு, பலத்த எதிர்ப்பிற்கு நடுவில், காதல் கல்யாணம். காதலென்றாலும், சந்தியாவின் அப்பாவை பிழிந்து காசு கறந்திருந்தாள், மீனாட்சி.

ஒரு ஆண்டு படிப்போடு, இவள் முடித்துக் கொள்ள, அவன் முழுக்க படித்து, அரசு தேர்வில் தேர்வாகி, உத்தியோகத்தில் அமர்ந்திருந்தான். படிப்பில் மட்டுமல்ல, நடிப்பிலும் வெகு கெட்டிக்காரன். அரசு வேலையும், கை நிறைய வருமானமும், அவனுக்கு நிறைய சுதந்திரத்தையும், அகங்காரத்தையும் வாரி வழங்கி இருந்தது.

அடுத்தடுத்து, தீபக்கும், திவ்யாவும் பிறந்தனர்.

‘படிச்சிருக்கிற படிப்புக்கும், பார்க்கிற உத்யோகத்திற்கும் பொறுத்திருந்தா, எப்படிப்பட்ட இடத்துல கல்யாணம் பண்ணி இருக்கலாம். இப்படி வக்கத்தவன் வீட்டுல பொண்ணு எடுத்திருக்க வேண்டாம்…’ என, இந்த நிமிஷம் வரைக்கும், சொல்லிக் கொண்டே தான் இருக்கிறாள், மீனாட்சி.

இதுதான் அவனென்று, எந்த குப்பிக்குள்ளும் அடைத்து விட முடியாத, புகை போன்ற கயமை கொண்டவன். மூச்சுக்கு ஆதாரமான காற்றுக்குள் கயமையாய் புகுந்து, அந்த மூச்சுக் காற்றையே திணற வைப்பவன்.

வேலை செய்த இடம் முதல், வீட்டுத் தெரு முனை வரைக்கும், அவனுக்கு என்று எடுப்பும் தொடுப்புமாய் ஏகப்பட்ட பெண்கள். சந்தியாவின் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

அப்பா வீட்டிற்கு சென்று நின்றவளை, இயலாமை தான் வரவேற்றது. படித்து முடித்து இவள் பாரம் தாங்கி இருக்க வேண்டிய குடும்பம். புரியாத வயதில் இருந்த தம்பி தான், குறுகுறுவென பார்த்தான். திரும்பி நரகத்திற்கே வந்து விட்டாள்.

வழியற்று திரும்பி வந்தவள் மீது, இன்னும் அலட்சியம் படிய படிய, காற்று தீண்ட தீண்ட, துருப்பிடித்துப் போன இரும்பாகி போனாள், சந்தியா. குழந்தைகள் கண் முன்னேயே குடியும், அடியும், உதையும்.
‘எங்கயாச்சும் போயிடலாமாம்மா…’ என, காலைக் கட்டியபடி குழந்தைகள் அழும்போது தான், கல்லுாரி படிப்பைக் கூட முடிக்காத, தன் காதல் முட்டாள்தனம் புரிந்தது. வேறு வழியின்றி, வலியோடு வாழத் தொடங்கி இருந்தாள்.

பத்து நாட்களுக்கு முன், அரசு வேலையாக சைட்டுக்கு சென்றவன், அங்கிருந்த கலவை இயந்திரத்தில் விழுந்து, இறந்து போனான். கடைசியாய் கிளம்பும்போது கூட, உப்பு பெறாத விஷயத்துக்கு, அவள் கன்னத்தில் தப்புத் தாளம் வாசித்து விட்டு போயிருந்தான்.

கூட்டம் நிறையவே வந்திருந்தது. அத்தனை பேருக்கும் சாப்பாடு, இத்யாதி எல்லாம், சந்தியாவின் தம்பி தான் ஏற்பாடு செய்திருந்தான்.

“செய்யட்டும் செய்யட்டும்… அவன் இருந்தப்ப தான், பைசாக்கு லாயக்கு இல்ல. இப்போ அவனுக்கு காரியமாவது செய்யட்டும்…” சொல்லிக் கொண்டிருந்தாள், மீனாட்சி.

பணியில் இருக்கும்போது, விபத்தானதால், கருணை அடிப்படையில், அதே அலுவலகத்தில், சந்தியாவிற்கு வேலை கிடைத்திருந்தது.

“செத்தும் கொடுத்துட்டு போயிருக்கான் என் புள்ளை. இவளை மாதிரி அதிர்ஷ்டக்காரி உலகத்தில எங்கேயும் இல்ல,” என, புலம்பித் தீர்த்தாள், மீனாட்சி.

“இனி, என்னக்கா உனக்கு தலையெழுத்து… 12 வருஷமா இந்த அலட்சியத்தை சுமந்துட்ட… இந்த ஓட்டை அதிகாரத்துக்கு, இனியும் காது குடுத்துட்டு இருக்காதே. நம் வீட்டுக்கு வான்னு நான் கூப்பிடல… உன் சொந்தக் கால்ல நிற்கப் போற, அப்புறம் எதுக்கு இங்கே இருக்கிற?” ரோஷமாய் கேட்ட தம்பியை, கூர்ந்து பார்த்தாள்.

“செல்வா, அருண் இவங்களுக்கு ஒரே பையன். அவரை நம்பித்தான் இவங்க கடைசி காலம். அவர் இல்லாம போனதால, இவங்களுக்கு தேவை இல்லாம போயிடுமா?”

“அவங்க நல்லவங்க இல்ல, சந்தியா… திமிர் பிடிச்ச, அடக்குமுறை செய்யிற, பேராசை கொண்ட மாமியார்.”

“இதெல்லாம் அவங்க குணம். இதைக் கடந்து பார்த்தா, அவங்க ஒரு மனுஷி. வயசான காலத்துல, மகனை இழந்துட்ட, மனுஷி. எல்லாருடைய குணமும், எல்லாருக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை, செல்வா. கோபம் வந்தா எதிர்க்கலாம்; அதுக்காக, விட்டுட்டு எல்லாம் போகக் கூடாது,” என, சந்தியா சொன்னபோது, செல்வாவிற்கு ஏனோ அழுகை பீறிட்டது.

“எல்லாம் முடிச்சாச்சு… எள்ளும், தண்ணியும் இரைச்சுட்டு, காக்காய்க்கு வச்சுட்டு வந்துடுங்க.”

அருணுக்கு பிடித்த, சாதம், கீரை, கிழங்கு, வாழைக்காயோடு சேர்த்து அத்தனை பதார்த்தங்களும் ஒரு இலையில் இருந்தது.

சின்னத் தட்டில் வைத்து ஏந்தி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு, வெயில் காயும் மொட்டை மாடிக்கு வந்தாள்.

அவள் பின்னாலேயே செல்வமும் வந்து நின்றான்.

வானத்தில் கூட்டம் கூட்டமாய் காக்கைகள் வட்டமடித்தது.

“அம்மா, பசிக்குதும்மா…”

“திவி… இப்போ, காக்கா மாதிரி வந்து சாப்பிடுவாரு, அப்பா. அப்புறம் தான் நாம சாப்பிடணும்,” பெரிய மனிதன் போல் சொன்ன மகனை, புன்னகையாய் பார்த்தாள்.

“அம்மா… காக்காயில பாய், கேர்ள் எப்படிம்மா கண்டுபிடிக்கிறது,” என்று கேட்ட, மகளை துாக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.

“அளவில் பெருசா, நீள மூக்கும், அடர்ந்த கருப்புமா இருக்கிறது, ஆண் காக்கா. நிறம் குறைஞ்சு, அளவில சின்னதாய் இருந்தா, அது பெண் காகம். வித்தியாசம் கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம், திவிம்மா. பெண் காக்கையோட குரல், கம்பீரமா இருக்காதாம்,” எனக் கூறினாள், சந்தியா. இதைக் கேட்டு குழந்தைகள் இரண்டுக்கும் அத்தனை சந்தோஷம்.

வெயிலுக்கு பார்வையைக் குறுக்கி, அண்ணாந்து பார்த்தபடியே, குழந்தைகள் சத்தமிட ஆரம்பித்திருந்தன.

‘ஹே… அது, ஆண் காக்கா. திவி, அங்கே பாரு பெண் காக்கா…’ என, அவர்கள் முகங்களில் அளவில்லா குதுாகலம். ஒருநாள் கூட அன்பு செய்து, அணைத்து, உச்சி முகர்ந்து இருக்காத தந்தையின் இழப்பு ஏனோ, அவர்களை தாக்கவே இல்லை. அருணை நினைத்ததும், அவன் குடியும், அடியும் தான் அவர்கள் அடிமனதில் தேங்கிக் கிடந்தது.

“அம்மா, அங்கே பாரேன் அப்பா…” என, கறுத்து, அளவில் பெருத்திருந்த காகத்தை காட்டினான், தீபக். அந்த காகத்தையே வெறித்துப் பார்த்தாள். இவர்கள் வைத்திருந்த இலையை கூட்டமாய் வட்டமடித்துக் கொண்டிருந்தன, காகங்கள்.

சுற்றிய காகங்களை காட்டி, “அவங்க எல்லாம் யாரும்மா?” திவ்யா கேட்க, இவளுக்கு முந்திக்கொண்டு, “திவி, அது அப்பாவோட ப்ரெண்ட்ஸ்… உமா ஆன்ட்டி, நீலா ஆன்ட்டி, ஷீலா ஆன்ட்டியா இருக்கும். அவங்களால தான், அம்மாவை எப்பவும் அடிப்பாரு,” என்றான், தீபக்.

சுரீரென நிமிர்ந்து பார்த்தாள். கறுத்த பெருத்த காகத்தைச் சுற்றி, ஏராளமான சிறிய காக்கைகள். வெறித்துக் கொண்டே நின்றாள். 12 வருட அங்கலாய்ப்பு, குழந்தைகள் கூட அவனின் தவறுகளை இனம் காண முடியுமளவிற்கு அவன் ஆடிய ஆட்டம், நெஞ்சில் வந்து மோதியது.

கொத்த அமர்ந்த காகங்களை வெறித்துப் பார்த்தாள். உள்ளுக்குள் பொங்கிய ஆற்றாமையை அடக்க இயலாமல், சிறு கல்லை எடுத்து, ஆங்காரமாய் காக்கையின் மீது குறி பார்த்து அடிக்க, அவைகள் எதையும் உண்ண முடியாமல் பதறி, சிதறி, பறந்தது.

வைத்திருந்த உணவுகளை சுருட்டி, தெருவில் இருந்த குப்பை தொட்டியில் விசிறி எறிந்தாள். குப்பைக்கு போகும் உணவை எந்த உயிரினமாவது உண்டு கொள்ளட்டும். படையல் வைத்து மரியாதை செய்யுமளவிற்கு அவன் அருகதை இல்லாதவன்.

திரும்பிப் பார்க்காமல் நடந்தவளை, அரும்பிய புன்னகையுடன், பார்த்துக் கொண்டே நின்றான், செல்வம்.

– ஜூலை 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *