ராதா, புவனா, பிருந்தா மூன்று சகோதரிகளும் அவர்களுடைய சித்தப்பா மகள் கல்யாணத்தில் சந்தித்து கொண்டனர்.
அண்ணன் வீட்டிலிருக்கும் வயசான அம்மாவை பார்க்க கோவை போகும் பொழுதெல்லாம் ராதாவும், புவனாவும் அம்மாவின் கை செலவுக்க நூறு, இருநூறு கொடுத்து விட்டு வருவார்கள்,
கடைசி பெண் பிருந்தா மட்டும் அம்மா கையில் பணம் கொடுப்பதில்லை. இதை பற்றி ராதா அக்கா கேட்டாள். அக்கா, அம்மா செலவுக்கு நீங்கள் பணம் கொடுத்தா அம்மா என்ன செய்வாள்.
அண்ணன் குடும்பத்தில் ஏதாவது அவசர செலவு வரும். அம்மா, அண்ணியை கூப்பிட்டு அந்த பணத்தை கொடுத்திடுவா..
குடும்ப சூழ்நிலையில் யார் பேரிலும் தப்பு சொல்ல முடியாது… எனவே அண்ணா, அண்ணிக்கு உதவுகிற மாதிரி நாசூக்காக அம்மாவுக்கு செய்து விட்டு வந்து
விடுவேன்.
ஒரு முறை போயிருந்த பொழுது அம்மா இருக்கும் ரூமில் பேன் வாங்கி மாட்டியிருக்கேன். மற்றொரு முறை போகும் பொழுது கம்பளி சொட்டர் வாங்கி கொடுத்திருக்கேன். நான் அம்மாவை பார்க்க கோவை போனா, அம்மாவை டாக்டரிடம் காட்டி, மாத்திரைகளை வாங்கி கொடுத்து விட்டு தான் வருவேன்.
மூத்த சகோதரிகள் இருவரும் மூக்கின் மேல் விரலை வைத்து கொண்டார்கள்.
கடைக்குட்டி படு சுட்டித்தான்.
– சுமதி ரகுநாதன் (ஜூன் 2012)