கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 8,407 
 

இனிப் படுக்கலாம் என நினைத்து, வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடினான். கட்டிலில் தலையணையை நிமிர்த்தி வைத்து சாய்ந்து படுத்தவாறே வாசித்துக்கொண்டிருந்தவன் நேரம் கடந்துவிட்டபடியாற்றான் நித்திரை கொள்ளலாம் என நினைத்தான். பத்தரைமணி ஒரு பெரிய நேரமில்லைத்தான். ஆனால் இப்படியான குளிர்கால இரவுகளில் நித்திரை சரியாக வருமுன்னரே போர்த்து மூடிக்கொண்டு மெத்தைச் சூட்டில் கிடப்பது நல்ல சுகமாக இருக்கும். மேஜையில் எட்டி புத்தகத்தை வைத்தான். பின்னர் தலையணையைச் சரிசெய்துகொண்டு கையை நீட்டி ரேபிள் லாம்பை அணைத்தான். படுத்திருந்து வாசிப்பதற்கு விசேடமாக ஒரு மேஜைவிளக்கையும் வேண்டி வைத்திருந்தான். அறை முழுவதற்கும் பொதுவாகவும் ஒரு விளக்கு உள்ளது. மேஜைவிளக்கை ஓன் பண்ணிய பின் பொதுவான விளக்கை அணைத்துவிட்டு வாசிக்கலாம். பிறகு நித்திரை வரும்பொழுது கையை மெதுவாக உயர்த்தி அதையும் அணைத்துவிடலாம். எழுந்துகிழுந்து அசையத்தேவையில்லை. போர்வைக்குள்ளே போய்விட்டால் சுகம், சொகுசு…!

தும்புமெத்தை.. அதற்குமேல் இரண்டு விரிப்புகள்! இதமான சூடு. கதவில்லா யன்னலூடு குபு குபுவென்று வீசுகிற குளிருக்குத் தாக்குப்பிடிக்கும் கணகணப்பு. மாதாமாதம் வாடகையை ஒழுங்காக வேண்டிக்கொள்ளும் போடிங்காரனுக்கு யன்னலுக்குக் கதவுபோடும் கரிசனையில்லை.

அது ஒரு வசதிபோலவும் தோன்றியபடியால் கதவு போட்டுத்தருமாறு இவனும் வற்புறுத்தவில்லை. நிலவுக் காலங்களில் கட்டிலிற் படுத்திருந்தவாறே.. நடுஇரவில் வெளியே சந்திரனைப் பார்க்கும்பொழுது நல்ல சுதியாக இருக்கும்!

படுக்கையில் கிடந்தவாறே அந்த நிலாவைத் தேடியபொழுது மனது எதற்காகவோ தவிப்பதையும் உணரமுடிந்தது. என்ன குறை?

முதலில் வாசித்துக் கொண்டிருந்தபொழுதே ஒருவித சஞ்சலம் இருக்கத்தான் செய்தது. நீரில் மிதக்கிற ஏதோ ஒரு பொருள் அலைகளோடு கொஞ்சம் கொஞ்சமாகத் தலையைக் காட்டி மறைவதுபோல நெஞ்சினுள் அமிழ்ந்துகொண்டிருந்து முழுமையாக வெளிப்பட மறுத்தது. வாசிப்பதைக்கூட இடையிடையே நிறுத்திவிட்டு யோசித்துப் பார்த்தான். பிடிபடவில்லை. போய்த்தொலைகிறது என விட்டிருந்தான்.

ஆனால் இப்பொழுது போர்வையுள் நுழைந்துவிட்ட இந்த அமைதியான இருளில் அந்தக் கவலை விசுவரூபம் எடுத்துக்கொண்டு வந்து என்னவென்று புரியாத பூதமாக நிற்கிறது. புரண்டு புரண்டு படுத்தான். என்ன? என்ன?

சில இரவுகளில் இப்படி மனது காரணம் புரியாத கவலையில் வருந்துவதுண்டு. வீட்டில் க~;ட ந~;டங்கள்.. குடும்ப பாரத்தைச் சுமக்க முடியாத அப்பா.. நினைக்கிற அளவிற்குத் தன்னால் உதவ முடியவில்லையே என்ற ஆற்றாமை.. படிப்புச் செலவுகளுக்காக அவசரமாகக் காசு தேவை என்று தம்பி எழுதியிருப்பான் – உடனடியாகப் பிரட்ட முடியாத சங்கடம்.. இப்படி ஏதும் கூட இன்றைக்கு இல்லை.

மற்றவர்களிடமிருந்து தான் தனிமைப்பட்டு இருப்பதுதான் மனதை அரிக்கிறதோ என நினைத்துப் பார்த்தான்.

தனியாருக்குச் சொந்தமான இந்த போடிங்கில் எட்டு அறைகள் இருக்கின்றன. பத்தொன்பது பேர் குடியிருக்கிறார்கள். இளைஞர்கள்.. குடும்பங்களை ஊரில் விட்டு வந்திருக்கும் நடுவயதினர்… எல்லோருமே உத்தியோக நிமித்தம் நகருக்கு வந்தவர்கள். மற்ற அறைகளில் இருவர் மூவராகத்தான் குடியிருக்கிறார்கள். அவன் மாத்திரம் தனியான அறை எடுத்திருக்கிறான். காசைச் செலுத்த விரும்பாத சிலருக்கு அது நக்கலான வி~யம். என்ன மனிதர்களை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு வந்திருக்கிறேனா என நினைத்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பலவீனங்கள்… கூத்து கும்மாளங்கள்.. அகத்தில் பகையும் முகத்தில் நகையும் கொண்ட வஞ்சக உள்ளங்கள்.. தனக்கொரு நீதி பிறர்க்கொரு நியாயம் பேசுகிற சுயநலமிகள்… மனசுக்கு ஒத்துவரவில்லை. அதனால் சற்று ஒதுங்கி இருக்கிறான். இல்லாவிட்டால் எல்லோருக்குமே பாவமன்னிப்பு அளிக்கிற தேவபிதாவாக அவனால் எப்படி மாற முடியும்?

காரணம் அதுதான். இரவு ஏழு மணியைப்போல அறைக்கு வந்தபொழுது பொது விறாந்தையில் சாராயம் அடித்துக்கொண்டிருந்த சக அறைவாசிகள் இவனையும் அழைத்தார்கள். இவன் மறுத்துவிட்டு வந்தது அவர்களுக்குப் பெரிய கேலியாக இருந்தது. இவர் பெரிய மகாத்மா… என – அரைகுறையாகக் காதில் விழுந்தது. பிறகு நாலு அறைகளுக்குக் கேட்கக்கூடியதாகச் சிரித்தார்கள். இவனுக்கு நெஞ்சுக்குள் ஏதோ எரிந்தது. தங்களைப்போல விட்டில் பூச்சியாக வந்து நெருப்பில் விழச் சொல்லுகிறார்களா?

அதற்காகக் கவலைப்படவேண்டிய அவசியமேயில்லையென இப்பொழுது தோன்றியது. சஞ்சலத்தை விட்டு நிம்மதியாகப் படுக்கலாம் என மீண்டும் போர்வைக்குள் நுழைந்தான். இல்லை இது வேறு ஏதோ ஒன்று.. என அந்தப் பூதம் மீண்டும் விசுவரூபமெடுத்துக்கொண்டு வந்தது. இது என்னடா தொல்லையாகப் போய்விட்டது… கதை சொல்லுகிற வேதாளம் மாதிரி…. மனதைக் கலைத்துக்கொண்டு.. என சலிப்படைந்தவாறே மீண்டும் புரண்டான். எழுந்து யன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நின்று யோசிக்கலாமா என எண்ணினான். போர்வையை கால்களினால் உதறிவிட்டான். குளிர் வந்து உரசியது. திரும்பவும் போர்வையை இழுத்து மூடினான்.

எல்லாவற்றையும் சொகுசாக.. விளக்கு ஸ்விச்சைக்கூடக் கையுக்குள்ளே கொண்டுவந்து வைத்திருக்கிற தனது சோம்பலுக்குச் சரியான தண்டனைதான் கிடைத்திருக்கிறது என எண்ணினான். படுக்கையை விட்டு எழுந்து சுவர்வரை போனால் இடுப்பு முறிந்துவிடுமென்றா மேஜைவிளக்கு வேண்டி தலைமாட்டில் வைத்திருக்கிறேன் எனச் சினமும் ஏற்பட்டது. நாளைக்கு இந்த மேஜைவிளக்கிற்கு ஒரு பிரியாவிடை கொடுக்கவேண்டும். அதோடு சோம்பலுக்கும் சேர்த்து….

சீ..! என்ன இருந்தாலும் நித்திரை வருகிறபொழுது சட்டென இருட்டிற்குள் நுழைகிற சுகத்தை அனுபவிக்க முடியாது. வேண்டாம் இந்த சிறிய சலுகையை மன்னித்துவிடலாம்.

ஓ! அதுதான் சஞ்சலத்திற்குக் கதரணமோ ? எல்லோரையும் போல குடித்து வெறித்து.. ஆடிப்பாடி அட்டகாசமாகத் திரியாமல் இப்படி இரவு வந்ததும் கதிரைக்கோ அல்லது கட்டிலிற்கோ சுமையாகிப்போகிற சோம்பலா? நோ! பகல் முழுதும் உழைத்து அலுத்துப்போகிற உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆறுதலாக இரவைப் பயன்படுத்துவது தவறான வி~யமில்லையே! ஆனபடியால் அந்தக் காரணமும் இல்லை. அப்போ?

அவனுக்குத் தனது மனதைப் பார்க்கப் பெரிய பரிதாபமாக இருந்தது. தலையணையில் நெஞ்சைப் பதித்து அதையே அணைத்தவாறு குப்புறப் படுத்துக்கொண்டு கண்களை இறுக்க மூடினான். சரியான காரணத்தைக் கண்டுபிடிக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் தூக்கமே வரப்போவதில்லை. காலைமுதல் இரவு படுக்கைக்கு வரும்வரை சென்றுவந்த இடங்கள்.. சந்தித்த மனிதர்கள்.. எல்லாவற்றையும் எல்லோரையும் நினைத்துப் பார்க்கத் தொடங்கினான். டிக்… டிக்… டிக்… என மேiஐ மணிக்கூடு எண்ணிக்கொண்டு வந்தது…

தலையினுள்ளே அழுத்திக்கொண்டிருந்த ஏதோ ஒன்று படாரென உடைந்து வெளிப்பட்டதைப் போன்ற சுகம்.

மாலையில் காண நேர்ந்த அந்தக் காட்சிதான்… அவனுடைய அந்தப் பார்வைதான்.

மாலை வாசிகசாலைக்குப் போய்விட்டு திரும்பி வந்துகொண்டிருந்த பொழுது இருளப்போகின்ற அந்த மைம்மல் பொழுதில் அதைக் கண்டான். பஸ் நிலையத்திற்கும் அப்பால் பின் வீதியில்.. ஒதுக்குப்புறமான ஒரு பெரிய பூவரசு மரத்தின் கீழ் அந்தக் குடும்பம் குடியிருக்கிற கோலம்!

தாய் தந்தையரையும் இரண்டு குழந்தைகளையும் கொண்ட அளவான குடும்பம்தான். ஆனாலும் ஆனந்தம் அதிகமில்லாத குடும்பம்! நெடுநாட்களாக அவர்கள் அங்கு வாழ்கிற தடையங்கள் தென்படுகின்றன. ஒரு பக்கத்தில் அவர்களது உடைமைகள் பழைய துணிகளில் சிறுசிறு பொதிகளாகக் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. பழைய குடைகள்.. குடைக் கம்பிகள்.. அறுந்த செருப்புகள்… கல்லிலே அடுப்பு – அடுப்பில் சிறிய பானையில் ஏதோ அவிகிறது. சமையல் நடக்கிறது. எரிகிற அடுப்பைக் காற்று குழப்பிவிடாமல் மறைப்பாக ஒரு தகரத் தடுப்பை வைத்திருக்கிறார்கள். பாத்திரங்களாகப் பயன்படும் தகரப்பேணிகள் பக்கத்தில் பரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் இரண்டும் பசியிற்போலும் சிணுங்கிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. தாய் பகல் முழுதும் உழைத்த அசதியில் ஒரு பொலித்தீன் தாளின் மேல் தலைக்கு அணைவாகக் கையைக் கொடுத்துப் படுத்திருக்கிறாள். அவன் அடுப்பை எரித்து சமைத்துக்கொண்டிருக்கிறான்.

அவர்களது மரநிழல் வீட்டிற்குள் சென்ற குட்டிநாயொன்று செம்மையாக வேண்டிக் குளறிக்கொண்டு வருகிறது. இன்னொரு நாய் அண்மிக்கிற துணிவு இல்லாமல் எச்சரிக்கையாய் தூர நின்றாலும் ஏக்கத்தோடு அவர்களையே பார்த்தவாறு நிற்கிறது. அதற்கும் பசி.. அவனது அழைப்பை ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கும் பணிவான பார்வை. அவன் அழைத்ததுமே வாலை ஆட்டிக்கொண்டு ஓடிப்போய் தூக்கி எறிவதை சாப்பிடுவதற்குத் தயாரான மரியாதை.

அவர்கள் எப்பொழுது இங்கு வந்து குடியேறினார்களோ தெரியாது. அந்த வீதிப்பக்கம் செல்லவேண்டிய அவசியமே இவனுக்கு இருந்ததில்லை. இன்றைக்கு சும்மா ஒரு நடைக்காகத்தான் போனான்.

இப்படி உழைப்பிற்காகப் போகிற நகரங்களிலெல்லாம் எங்காவது ஓர் ஒதுக்குப்புறத்தில் சீவித்து மாள்கிற அவர்களது பரிதாபம்; அவனது நெஞ்சை நெருடியது. இங்கிருந்து சற்றுத் தொலைவில்தான் பொது மலசலக்கூடம் அமைந்திருக்கிறது. அந்த நாற்றம்.. அருவருப்பைகூடக் கருதாமல் அவர்கள் எப்படியாவது வாழ்ந்துவிட்டுப் போகிறார்களா?

அவர்களையே பார்த்துக்கொண்டு இவன் நிற்பதை அந்தக் குடும்பத்தலைவன் கண்டான். அவனது பார்வையிலும் கணப்பொழுதில் ஆவல் கலந்தது – இந்த ஐயா கூப்பிட்டு ஏதாவது தருவாரோ.. புண்ணியவான்?

அவன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது இவனுக்குக் கூச்சமாக இருந்தது. அவனோடு கதைத்து ஏதாவது உதவி செய்யவேண்டுமென்றுதான் மனது சொல்லியது. ஆனால்.. அந்தப் பள்ளத்தில் இறங்கி அவனோடு கதைத்துக்கொண்டு நின்றால் பார்க்கிற சனம் என்ன சொல்லும்? இவன் யோசித்துக்கொண்டே நின்றான். இன்னும் கொஞ்சநேரம் நின்றால் அவனே வந்து விடுவான் போலிருந்தது. அதனால் மெதுவாக நடந்து விலகினான். விட்டு வருகிற போதிலும் திரும்பத் திரும்பப் பார்த்தான். அவனும் இவனையே ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு நின்றான். இன்னொருமுறை திரும்பிப் பார்த்தபோது அவன் கையேந்தி இரப்பதுபோலத் தெரிந்தது. அல்லது அது தனது பிரமையோ? அறைக்கு வந்து வயிறு நிறையச் சாப்பிட்டு படுக்கைக்குப் போனபொழுதுதான் அந்தப் பார்வையின் தாக்கம் நெஞ்சிலே சுருக்கிடுவதை உணர முடிந்தது. அவனுக்கு ஒரு உதவியுமே செய்யாமல் வந்து விட்டமை பெரிய தவிப்பாக மனதை அலைக்கிறது. இந்த மனச் சாந்திக்காகவேனும் (சுயநலம்!) அவனுக்கு இரண்டு ரூபாயை விட்டெறிந்துவிட்டு வந்திருக்கலாம்தான்.

பிரச்சினை என்ன என்பதை அறிந்துவிட்டால் மனசு அமைதியடையும் என்றுதான் நம்பியிருந்தான். ஆனால் அதற்கு ஒரு தீர்வு இன்றி உறங்கமுடியாதென்பதை இப்பொழுது உணர்ந்தான்.

சரிதான் போகிறது. உலகத்தில் இப்படி எத்தனைபேர்கள் இருப்பார்கள். தானொருவன் நினைத்துவிட்டால் அவர்களுடைய பட்டினிக்கும் பிரச்சினைக்கும் தீர்வு காணமுடியாது என மனதுக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டு உறங்க நினைத்தான்.

போர்வையை இழுத்து சரி செய்தவாறு மறுபக்கம் புரண்டான். யன்னலூடு குபுகுபுவென வீசிய பனி கட்டிலைக் குளிராக்கியிருப்பதை உணர்த்தியது – சுருக்- திரும்பவும் திரும்பவும் வேதாளம் விசுவரூபமெடுத்துக்கொண்டு வந்து மனதைக் கலைத்தது. இங்கேயே இப்படிக் குளிர்கிறதே… அவர்கள் அங்கேஇப்பொழுது எப்படிப் படுத்திருப்பார்கள்..’ என மனது கேட்டது.

பஸ் நிலையத்தில் வேடிக்கை விளையாட்டுக் காட்டுகிற அந்தப் பிள்ளைகளை நினைக்கப் பரிதாபமாக இருந்தது. பால்குடி மாறுமுன்னரே தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக தாங்களே உழைக்கிற அந்தக் குழந்தைகளுக்குப் படுப்பதற்குக்கூட ஒரு வசதியான இடம் இல்லை. வீதி ஓரத்தில்.. வெறும் நிலத்தில்.. கடும் குளிரில்.. பழந்துணிகளால் உடலைச் சுற்றிக்கொண்டு படுத்திருப்பார்களோ? பாவம்.. படுப்பதற்குத்கூட ஒரு இடம் இல்லாவிட்டால் என்ன சீவியமப்பா?

தான் அவர்களது படுக்கையைப் பற்றி யோசிக்கிறேன்.. அவர்கள் தங்கள் வயிற்றைப் பற்றி யோசித்துக்கொண்டு கிடப்பார்களோ எனவும் வயிற்றெரிச்சலாயிருந்தது.

இரவு சும்மா அமைதியாகக் கிடப்பதுபோல நடிக்கிறது. இந்த இரவிலேயே எத்தனையோ மனிதர்கள் உறங்குவதற்குக்கூட ஓர் இடமில்லாமல் தவிர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு நல்ல பிள்ளைக்கு நடிக்கிறது இரவு. பொல்லாத இரவு.. இவ்வளவு ஓரவஞ்சனையாக நடக்கலாமா?

இந்த விசித்திரத்தில் எனக்கொரு போர்வை! எனப் போர்வையைக் கால்களால் உதைத்து விட்டான். குபு குபுவென்று வருகிற பனிக்குளிர் நன்றாக உடலை வாட்டிக்கொண்டு போகட்டும். படுக்கை அருவருப்பைத் தருகிற வி~யமாகத் தோன்றியதும் எழுந்து யன்னற் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நின்றான்.

போடிங் சொந்தக்காரரின் மாளிகை (அந்தப் பெரிய வீட்டை வேறு எப்படிச் சொல்வது?) முன்னே விரிந்து கிடக்கும் பரந்த பூமியில் நிமிர்ந்து நிற்கிறது. அந்த மாளிகைக்கு ஆடம்பரப் பூச்சுக்கள்.. பூச்செடிகள்.. நிழல் மரங்கள். இரண்டொரு மனிதர் சீவிப்பதற்கு ஏன்தானோ இந்தப் பெரிய வீடு? வீதி ஓரங்களையே தஞ்சமென்றிருப்பவர்களுக்கு இவை ஒரு பொருட்டாகவே தெரியவில்லையா? அன்றாடம் காண்கிற மனிதப் பிரபுக்களும்.. அவர்களது ஆடம்பர வாழ்க்கையும்.. கப்பல் வாகனங்களும் இவர்களது மனதிலே எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதேயில்லையா?

எத்தனையோ சொந்தப் பிரச்சினைகள் தலைக்குமேல் இருக்கின்றன. இதற்குப் போய் என்ன சவத்துக்குக் கவலைப்படவேண்டுமென எண்ணியவாறு திரும்பவும் படுக்கைக்குச் சென்றான்.

சும்மா.. படுக்கவேண்டும் என நினைத்துவிட்டால் போதுமா? பூதம் விட வேண்டுமே..! அங்கே அவர்கள் கடும் குளிரிற் கிடந்து விறைக்க நீ மெத்தை தேடிக்கொண்டிருக்கிறாயா.. என்ன மனித சென்மம் நீ.. என்று கேட்டது!

இவன் நடுநடுங்கிப் போனான். எழுபத்தைந்து ரூபாய்க்கு ஒரு அறையை வாடைகைக்கு எடுத்துக்கொண்டு அதில் தான் மட்டும் குடியிருப்பது அநியாயமா? வரு~க்கணக்காக உழைத்தும் மிகவும் குறைந்தபட்ச தேவைகளைத்தானே தேடியிருக்கிறேன் என நினைத்தான். ஒரு மேiஐ.. ஒரு கதிரை.. ஒரு கட்டில் – மெத்தை! தும்புமெத்தைதான். சியெஸ்ரா ஒன்று வேண்ட வேண்டுமென்ற எண்ணம் முன்பு இருந்தது. பின்னர் அந்த எண்ணத்தையும் கைவிட்டான். ஆனால் இப்பொழுது உள்ளதே அதிகம் எனத் தோன்றியது.

அதை நினைத்துக்கொண்டு சிரித்தான். தன் மனதை நினைத்தும் சிரித்தான். இப்ப இந்த மண்டையைப் போட்டு உடைக்காமல் படுத்துத் தூங்கு!

இல்லை.. இந்த நேரத்தில் அவர்கள் எப்படித் தூங்குகிறார்கள் என்றாவது பார்த்துவிட்டு வரவேண்டும். இல்லாவிட்டால் மனசு தூக்கம் கொள்ளாது.

மாலையில் அவனைக் கண்டபொழுதே கதை கொடுத்திருந்தால் சகலத்தையும் அறிந்திருக்கலாம். இரவுகளில்.. மழை பனி நாட்களில் எங்கே உறங்குவார்கள் என்பதையாவது கேட்டிருக்கலாம். பேசாமல் வந்தது மடத்தனம்.

நேரத்தைப் பார்த்துகொண்டு அறையைவிட்டு வெளியேறி நடந்தான்.

சில்லிடுகிற குளிர் கடமையே என விழித்துக்கொண்டு தூங்கி வழிகிற வீதி விளக்குகள். அமைதியான ஒன்றேகால் மணித்தெரு. ஊரைக் கூப்பிடும் சாமக்கோழிகள். எங்கேயோ தூரத்தில் சில நாய்களின் அழுகை – யாரை நினைத்ததோ?

பஸ் நிலையத்தையும் தாண்டிச் செல்கிறபொழுது யாரோ தூரத்தில் வருவது தெரிகிறது. யாராக இருக்கும்?

அவர்கள் அண்மித்துகொண்டு வர… இவன் குறிப்பாகப் பார்த்தான். அவர்களே முதலில் இவனை அடையாளம் கண்டு சைக்கிளிலிருந்து குதித்தனர்.

‘ஹலோ… மச்சான்” – சக அறைவாசிகளில் இருவர்.

‘இந்த நேரத்தில்… எங்கை போட்டு வாறியள்?” இவன் வியப்போடு கேட்டான்.

அவர்களிடமிருந்து கள்ளச் சிரிப்பு வெளிப்பட்டது. ‘வேறை எங்கை…? நீ போற இடத்துக்குத்தான்… கள்ளா.. எங்களுக்குப் புத்தி சொல்லிச் சொல்லி இப்ப நீ எங்கை போறாய்?” – சாராய நெடி குப்பென முகத்திலடித்தது.

அட அனியாயமே! என இவன் விறைத்துப்போய் நின்றான்.

‘சரி…சரி… நாங்கள் ஒருத்தருக்கும் சொல்லமாட்டம்… நீ போட்டு வா!” அவர்கள் மீண்டும் சைக்கிளை உளக்கத் தொடங்கினர்.

பெருமூச்செறிந்தவாறு மேற்கொண்டு நடந்தான்.

ஒரு கடை வாசலில் சாக்குக் குவியலின் மேல் ஒரு நாய் படுத்திருந்தது. இவனது காலடி ஓசையில் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டது. சில கட்டாக்காலி மாடுகள் தார் ரோட்டின் சூட்டிற்கு வந்து படுத்திருந்தன…

இவன்.. அவர்களை நினைத்துக்கொண்டு கால்களை விரைவுபடுத்தினான்.

(வீரகேசரி பத்திரிகையிற் பிரசுரமானது – 1980)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *