படுக்கை அழுத்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 6,434 
 
 

சந்தானம் விரக தாபத்தில் கட்டிலின் மீது புரண்டு கொண்டிருந்தான். அழகான மனைவி இருக்கும்போதே விரகதாபமா? கஷ்டம்டா சாமி !

மனைவி தேவகி தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

கடந்த மூன்று மாதங்களாகவே தேவகி தரையில்தான் படுத்துத் தூங்குகிறாள். இரவு நேரங்களில் சந்தானம் தன் மனைவியைப் பார்த்து பார்த்து ஏங்கினான். தூக்கம் வராது படுக்கையில் புரண்டான். நீண்ட பல இரவுகளுக்குப் பிறகுதான் இழப்பின் கனம் அவனுக்குப் புரியத் தொடங்கியது. என்ன இருந்தாலும் தேவகி அவனை இப்படித் தவிக்க விட்டிருக்கக் கூடாதுதான்.

தினசரி இரவுகளில் பாலுறவுத் தேவை அவனுள் புரண்டு புரண்டு சுழியிட்டது. கடந்த ஒருவருடமாக தேவகியிடம் பகிர்ந்துகொண்ட படுக்கை அறைக் கேளிக்கைகள் அடிக்கடி ஞாபகத்தில் வந்து அவனைத் துன்புறுத்தின. அவளின் இளமை பொதிந்த உடல் தோற்றங்கள் அவனை அலைக்கழித்தன.

இச்சையுடன் தேவகியின் மேல் கவிந்துகொள்ள அவனுடைய உடம்பின் ஒவ்வோர் அணுவும் விம்மிப் பொங்கின. உடம்பு மனைவியின் அன்பான அணைப்பிற்காக துடித்தது.

தாபத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் படுக்கையில் புரண்டபடி இருந்தான். ஒரே வீட்டில் மனைவியின் அருகாமை இருந்தும் அவளுடன் கலவியில் ஈடுபட முடியாத கொடுமைதான் வாழ்க்கையின் மிக மோசமான தருணங்கள் என்று நினைத்துக் கொண்டான்.

அப்படி என்னதான் ஆயிற்று?

அவர்களுக்குத் திருமணமாகி ஒருவருடம்தான் ஆகிறது.

எனினும் திருமணத்தின் மூலம் தேவகிக்கு நிம்மதி கிடைக்கவில்லை.

தேவகிக்கு வயது இருபத்தியிரண்டு. சந்தானத்திற்கு இருபத்தியேழு. குற்றாலம் பராசக்தி கல்லூரியில் படித்துப்பட்டம் பெற்ற தேவகி தன்னுடைய கல்லூரி நாட்களில் பெண்களின் சுதந்திரம் பற்றி; நிறைய பேச்சுப் போட்டிகளிலும்; கட்டுரைப் போட்டிகளிலும் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகள் பெற்றிருக்கிறாள்.

பட்டப் படிப்பு முடிந்ததும், தேவகி மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்டாலும் அவளின் பெற்றோர்கள், “ஒரு பெண்ணுக்கு திருமணம்தான் கவசம்; அது சீக்கிரம் நடந்தால் ரொம்பச் சிறப்பு” என்று சொல்லி அவளுக்கு உடனே கல்யாணம் செய்துவைத்தனர். தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் தேவகிக்கு எல்லாம் வேகமாக நடந்தேறின. ஒரே பெண் என்பதால் திருமணத்தை தடபுடலாக நடத்தினர்.

புகுந்த வீட்டில் செட்டில் ஆகும்போதுதான் தேவகிக்கு பிரச்சினைகள் முளைத்தன.

தனிமையில் இருக்கும்போது சந்தானம் அவளிடம் வாஞ்சையுடன் இருந்தாலும், பல விஷயங்களில் அவனுடைய வீட்டினருடைய படுத்தல்கள் தாங்கவில்லை.

அதை சந்தானத்திடம் எடுத்துச் சொன்னாலும் அதைப் புரிந்துகொள்ள அவன் மறுக்கிறான்.

புகுந்த வீட்டில் கணவரைத் தவிர அவருடைய கல்யாணமாகாத தங்கை; மாமியார்; மற்றும் மாமனார் என மொத்தம் ஐந்து பேர்.

இத்தனைக்கும் சீர்வரிசைகளுடன் முறைப்படி நடந்த கல்யாணம். கணவர் சந்தானம் நல்லவர்தான். அழகானவர்தான். கை நிறையச் சம்பளம்தான். இருப்பினும் தேன்நிலவு சென்று வந்தபிறகு அவள் ஆசைகள் நிராசையாயின.

தேவகிக்கு புகுந்த வீட்டில் சுதந்திரம் என்பதே கிடையாது. அவளுடைய மாமனார் சொல்படிதான் அந்த வீட்டில் எல்லாமே நடக்கும். அவருக்கு வயது 65. காலை ஐந்து மணிக்கே எழுந்திருந்து குளித்துவிட்டு பட்டை பட்டையாக வீபூதி இட்டுக்கொண்டு ஒரு அரை மணிநேரம் குரலை உயர்த்தி ஸ்லோகங்கள் சொல்ல ஆரம்பித்துவிடுவார்.

அதன்பிறகு தானே சுடச்சுட காபி போட்டுக்கொண்டு குடிப்பார். வீட்டிலுள்ள அனைவரும் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும். இல்லையென்றால் அவரே அருகில் வந்து துணி உலர்த்தும் குச்சியால் தட்டி எழுப்புவார்…. மடியாக எழுப்புகிறாராம்.

அதன்பிறகு மற்றவர்களால் அந்த வீட்டில் தூங்க முடியாது. சனி ஞாயிறுகளில், கொஞ்சநேரம் அதிகமாகக் கூடத் தூங்கமுடியாது.

மாமியார் படு கஞ்சம்.

அரை லிட்டர் பால் வாங்கி அதை தண்ணீர் விட்டு இரண்டு லிட்டர்களாக்கி விடுவாள். சாப்பாட்டுக்கு நெய் என்று நூறு கிராம் வாங்கிவிட்டு அதை ஒரு மாதம் வைத்திருந்து சிக்கனமாகப் பரிமாறுவாள். காய்கறிகளும் அப்படித்தான்.

அந்த வீட்டில் காலையில் ப்ரேக்பாஸ்ட் என்று எதுவும் கிடையாது. சந்தானத்தை ஆபீஸ் அனுப்பிவிட்டு தேவகி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும்போது, மாமியார் அவசர அவசரமாக செகண்ட் டோஸ் காபியைக் கலந்து மகளுக்கும், கணவருக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்து விடுவாள்.

தேவகியை ஒரு வாய் காபி குடிக்கிறாயா என்று கேட்கக்கூட மாட்டாள்.

இது தேவகிக்கு மிகுந்த வருத்தமாக இருக்கும். குளித்துவிட்டு வந்தவுடன் ஏராளமாகப் பசிக்கும். ஆனால் மாமனார் பதினோரு மணிக்கு சாப்பிட்டவுடன்தான், வீட்டின் மற்ற பெண்கள் சாப்பிட வேண்டும். அதுவரை கொலை பட்டினிதான்.

புதிதாகத் திருமணமாகி வரும் பெண்கள் பட்டினியால் அவதிப் படுவதைப் போன்ற ஒரு கொடுமை இந்த உலகத்தில் வேறு எதுவுமே கிடையாது என்று நினைத்து நினைத்து தேவகி வேதனைப் படாத நாட்களே கிடையாது.

இவை எல்லாக் கொடுமைகளையும் தாண்டி தேவகி பொங்கி எழுந்தது, அவள் தன் கணவருடன் நினைத்த போதெல்லாம் ஏகாந்தமாக இருக்க முடியவில்லை என்பதால்தான். .

வீடு சொந்த வீடு. அதில் இரண்டே இரண்டு பெட்ரூம்களும் ஒரு ஹாலும். மாமானார் மாமியாருக்கு பெரிய பெட்ரூம். அதில் மட்டும்தான் அட்டாச்டு பாத்ரூம் இருக்கிறது.

வீட்டுக்கு வந்த புதிதில் தேவகிக்கு இது பெரிய பிரச்சினையாக இருந்தது. கணவருடன் கலவியில் ஈடுபட்டு முடிந்தவுடன் கழுவிக்கொள்ள வீட்டின் ஹாலைத் கடந்து சென்றுதான் காமன் பாத்ரூமுக்கு அவள் செல்ல வேண்டும். ஹாலில் அவருடைய தங்கை படுத்துக்கொண்டு இருப்பாள்.

தினமும் ராத்திரி அவளைத் தாண்டிக்கொண்டு பாத்ரூம் செல்ல தேவகிக்கு கேவலமாக இருந்தது. அதனால் சந்தானத்திடம், பாத்ரூம் உள்ள மாமனாரின் பெட்ரூமுக்கு மாற்றிக்கொண்டு செல்ல அடம்பிடித்தாள்.

“சிறுநீர் கழிக்க வயதான அப்பா இரவில் எழுந்து காமன் பாத்ரூம் செல்ல முடியாது” என்று அவன் மறுத்து விட்டான். அது மட்டுமல்லாமல் கொஞ்சம்கூட விவஸ்தை இல்லாமல் கலவி முடிந்தவுடன் பாத்ரூம் போகாது துணியால் துடைத்து விட்டுக்கொள்ளச் சொன்னான்.

தேவகி பயங்கரக் கடுப்பாகி விட்டாள்.

நிறைய யோசித்து அவனுக்கு ‘ரெட் கார்ட்’ போட்டுவிடுவது என்று முடிவுசெய்தாள்.

அவனுக்கு ‘bed pressure’ அதாவது படுக்கை அழுத்தம் கொடுத்தால் தன்னால வழிக்கு வருவான் என்று கணக்குப் போட்டாள்.

சந்தானத்திடம் “நம் வீட்டிற்கு பக்கத்திலயே சின்னதாக வேறு ஒருவீடு பாருங்கள்… அங்கு நாம் சுதந்திரமாக இருக்கலாம். தேவையானால் நீங்கள் தினமும் பெற்றோர்களுடன் இருந்துவிட்டு படுத்துக்கொள்ள மட்டும் நம் வீட்டுக்கு வாருங்கள்… அதுவரை நான் தரையில்தான் தூங்குவேன். உங்களுக்கு எதுவும் கிடையாது…” என்று சொல்லி அவனை கடந்த மூன்று மாதங்களாக லங்கணம் போட்டுவிட்டாள்.

இதுதான் நடந்த கதை.

இப்போது அவள் போட்ட கணக்கு நன்றாக வேலைசெய்தது…

சந்தானம் வேறு வழியில்லாமல் அலைந்து அலைந்து வீட்டுக்கு பின்புறத் தெருவின் மாடியில் சிங்கிள் பெட்ரூம் கிச்சனுடன் பத்தாயிரம் ரூபாய் வாடகையில் ஒருவீடு பார்த்து உடனே அட்வான்ஸ் கொடுத்தான்.

அந்த வீட்டிற்கு பால் காய்ச்சிய அன்று இரவுதான் தேவகி தன்னையே சந்தானத்திற்குப் படையல் செய்தாள்.

தற்போது சந்தானம் தினமும் ஆபீஸ் விட்டுத் திரும்பும்போது சில மணி நேரங்கள் தன் பெற்றோருடன் இருந்துவிட்டு பிறகுதான் தன் வீட்டிற்கு வருகிறான்.

இப்போது தேவகி நிம்மதியாக குடித்தனம் நடத்துகிறாள்.

பல சமயங்களில் படுக்கை அழுத்தம் நன்றாக வேலை செய்கிறது என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

Print Friendly, PDF & Email
என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *