(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவர்கள் சாங்கி விமான நிலையத்திற்குள நுழைவதற்கும் “குவன்டஸ்” வந்து இறங்குவதற்கும் சரியாக இருந்தது. பிரயாணிகள் ஒவ்வொருவராக இறங்கி வந்து கொண்டிருந்தனர். இந்த விமானத்தில் தான் ஆஸ்திரிரேலியாவில் தன் மேல் படிப்பை முடித்த கலாவின் அத்தை மகன் அரவிந்தன் வருகிறான். அவன் போன வாரம் தன் மாமாவுக்குப் போட்ட கடிதத்தில் தான் வரும் நாளையும் நேரத்தையும் குறிப்பிட்டிருந்தான். அவனை வரவேற்கவே கலாவும் அவள் தந்தை தாமோதரனும் அங்குக் காத்துக் கொண்டிருந்தனர்.
மூன்றாண்டுகள் படிப்பை முடித்துத் தாயகம் திரும்பும் தன் வருங்காலக் கணவரைக் காணும் ஆவல் கலாவின் முகத்தில் பிரதிபலிக்கத்தான் செய்தது. அதே வேளையில் படிக்கச் சென்றவர் அங்கேயே ஒரு வெள்ளைக்காரக் குட்டியை மணந்து வந்து நின்றால்… “அதற்கு மேல் அவளால் எதையும் எண்ணிப் பார்க்க முடியவில்லை. கலவரமும் கலக்கமும் அவள் முகத்தைக் கருகச் செய்தன. அதே வேளையில் தன் அத்தான் தனக்குத் துரோகம் செய்யமாட்டார் என்ற நம்பிக்கையும் அவளுக்கு இருந்தது. அதற்கு ஒத்து ஊதுவதுபோல தாமோதரனும் “கலா என் தங்கச்சிப் பையன் அரவிந்தனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்மா. அவன் அப்படிப்பட்டவன் இல்லை. அவனைப் பெத்தவங்க ஒரு கார் விபத்துல இறந்தப்போ நான்தான் அவனுக்கு ஆதரவா இருந்தேன். அதனால என் பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டான். அவன் வரட்டும். முதல் வேலையா அவனுக்கும் உனக்கும் ஒரு கால்கட்டைப் போட்டுடுறேன். அப்பதான் இந்தக் கட்டை வேகும்” என நாயணம் வாசித்தார்.
ஆயிரம் தான் தாமோதரனுடைய சொல் நம்பிக்கையூட்டும் வார்த்தையாக இருந்தாலும் கூடச் சந்தேகம் அவள் கண்ணை மறைக்கத் தொடங்கியது. முன்பு போல் அசட்டையாக இருந்து விடாமல் அத்தானின் மனத்தைக் கவரும் வகையில் தான் நடந்து கொள்ள வேண்டும் என முடிவெடித்தாள். வெளிநாட்டில் படித்துவிட்டு வரும் அத்தானுக்கு நாகரிக மோகம் அதிகமிருக்கும். அதற்காக இந்த மூன்றாண்டுக் காலம் அவள் தன் நடை, உடை, பாவனையில் எவ்வளவோ மாற்றங்களைச் செய்து கொண்டாள்.
“கலா அங்கே பாரும்மா அங்கே வரது அரவிந்தன் தானே” எனத் தந்தையின் குரல் கேட்டுத் தந்தை காட்டிய திக்கை நோக்கினாள். அங்கே நீல நிற பாண்டும், அதற்குப் பொருத்தமான கோட்டும், கறுப்புடையும் அணிந்த ஒரு வாலிபன் அவர்கள் எதிரே வந்து கொண்டிருந்தான். வந்தவன் நேரே தாமோதரனின் காலில் விழுந்து “என்னை ஆசீர்வதியுங்கள் மாமா…” என வணங்கினான். “எழுந்திப்பா அரவிந்தா. என் ஆசி உனக்கு எப்போதும் உண்டு” எனக் குரல் தழுதழுக்கக் கூறிய தாமோதரன் அவனைக்கட்டி அணைத்துக் கொண்டார். பின் கலாவைச் சுட்டிக்காட்டி, “அரவிந்தா! யாருனு தெரியுதா?” எனக் கேட்டார். அரவிந்தன் கலாவைக் கூர்ந்து பார்த்தான். அவன் பார்வையைத் தாங்காதவளாய் கலா தலையைக் குனிந்து கொண்டாள். “இது…இது…கலாவா?” என உலக அதிசயத்தைக் கண்டுவிட்ட பூரிப்பில் வியப்பு கொட்டினான்.
அந்தக் குரலில் ஒலித்த ஆச்சரியம்… அவன் அவளைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது போல் இருந்ததா? அல்லது அவள் உருவத்தில் ஏற்பட்ட மாற்றத்தை எண்ணி மகிழ்ந்து அப்படிக் குரல் எழுப்பினானா? என அவளால் கண்டுபிடிக்க
முடியவில்லை. எப்படியோ அவன் தனியாக வந்ததில் அவளுக்குப் பரம திருப்தி. ஒரு பெரிய சுமை தலையிலிருந்து இறங்கியது போன்றதோர் உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. எல்லோரும் காரை நோக்கிச் சென்றனர். கார் மின்னல் வேகத்தில் புறப்பட்டது.
காரில் அரவிந்தன் தன்னுடைய மேல்நாட்டுப் பயணத்தைப் பற்றியும் அங்குள்ளவர்களின் ஆடம்பர வாழ்க்கையைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேச்சில் மேல்நாட்டு மண்வாசனை நிரம்பி வழிந்தது. தன் பேச்சினூடே அவன் கலாவை அடிக்கடிப் பார்க்கத் தவறுவதில்லை. இதை உணராமலும் இல்லை. இருப்பினும் அதைக் காட்டிக் கொள்ளாமல் மனத்திற்குள் சிரித்துக் கொண்டாள். அந்தச் சிரிப்பில் பெருமிதம் தாண்டவமாடியது.
வீட்டை அடைந்ததும் கலா முதல் வேலையாகத் தன் உருவத்தைக் கண்ணாடி முன் பார்த்தாள், இயற்கை அழகுடன் செயற்கை அழகும் சேர்ந்து அவள் எழிலைப் பன்மடங்காக்கியது. “நானா இவ்வளவு தூரம் மாறிட்டேன்?” என அவள் தன்னையே ஒரு தரம் கேட்டுக் கொண்டாள். புதுமுக வகுப்பில் தான் படித்தபோது அவள் தோழிகள் அவளுக்கிட்ட பட்டப் பெயர்கள் எல்லாம் இப்பொழுது அவள் நினைவுக்கு வந்தது. “பட்டிக்காடு…ஊர்க்குடுமி…” எனஅவர்கள் கேலி செய்த போதெல்லாம் அவளால் அழ முடிந்ததே தவிர தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. முடியவில்லை என்று சொல்வதைக் காட்டிலும் முயற்சிக்கவில்லை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
தன் மனக்குறையைத் தன் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தேவியிடம் கூறுவாள் கலா. அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் தேவியின் வார்த்தைதான். “அவர்கள் கிடக்கிறார்கள். உண்மையான நாகரித்தைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? முடியைக் கிராப்பாக வெட்டிக் கொள்வதும், முழங்காலுக்கு மேலே மினி அணிவதும், முகத்திற்குப் பவுடரும், உதட்டுக்கு லிட்ஸ்டிக்கும் பூசுவதும் தான் நாகரிகம் என்றால் அந்த நாகரிகமே நமக்குத் தேவை இல்லை. நாம் இப்படிப் பட்டிக்காடாவே இருந்திடலாம்…” என வீராவேசத்துடன் கூறுவாள்.
தேவியின் ஆலோசனையைக் கேட்டும் தன் பிடிவாத நோக்காலும் பட்டிக்காடு போல் வாழ்ந்த கலா, அரவிந்தன் மேல் படிப்பிற்காக வெளிநாடு சென்றபோதுதான் தன் போக்கை மாற்றினாள். மஞ்சள் பூசிய முகத்துடன் நெற்றியில் திலகமிட்ட, நீண்ட கூந்தலை ஒற்றைச் சடையாகப் பின்னித் தலை நிறைய கனகாம்பரத்தைச் சூட்டிப் பட்டுப்புடவையுடன் கலா வந்தால் அந்த மகாலெட்சுமியே வருவது போல் காட்சியளிப்பாள். தாமோதரனே பல முறை தன் மகளின் தோற்றத்தைக் கண்டு பூரித்திருக்கிறார். அப்படி அம்சமாகத் தோன்றிய கலா தன் அத்தானுக்காகத் தன் உருவத்தை மாற்றி இருக்கிறாள். அவள் மாறக் காரணமாய் அமைந்த அந்தச் சம்பவம் திரைப்படம்போல் அவள் முன் காட்சியளித்தது.
அன்று வழக்கத்திற்கு மாறாகத் தன் தந்தையுடன் ஒரு கலை நிகழ்ச்சியைக் காணச் சென்றாள் கலா. அரங்கம் நிரம்பக் கூட்டம் வழிந்தது. நிகழ்ச்சி சரியாக எட்டு மணிக்குத் தொடங்கியது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்களை அறிமுகப்படுத்தினார். “பாடும் பறவைகள் ராஜ்- ராஜி தம்பதிகள்” என அவர் அறிவித்ததுதான் தாமதம் அவர்களுக்குக் கிடைத்த கைதட்டல் அரங்கத்தையே அதிரச் செய்தது. ராஜியைப் பார்த்த கலா ஆச்சரியம் மேலிடக் கண்களை அகல விரித்தாள். ராஜி வேறு யாருமல்ல. அவளோடு உயர்நிலைப் பள்ளியில் படித்த ராஜேஸ்வரிதான் தன் பெயரை ராஜி எனக் சுருக்கிக் கொண்டது அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ராஜ்-ராஜி தம்பதிகள் பாடிய பாடல்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தின. நிகழ்ச்சி முடிந்ததும் ராஜியைக் காண ஒப்பனை அறைக்குள் சென்றாள் கலா.
அவள் வருகையைச் சற்றும் எதிர்பார்க்காத ராஜி அவளை இன்முகத்துடன் வரவேற்றாள். “ராஜி நீயா இப்படி மாறளிட்டே? வகுப்பில் பேசவே கூச்சப்படும் நீயா இவ்வளவு பேருக்கு மத்தியில் பாடத் துணிஞ்சே?” என ஆச்சரியத்துடன் கேட்டாள். “கலா நான் மனதார காதலித்தவரே, பாடுவதில் மிக்கவர், தனக்கு வரக்கூடிய மனைவி தன்னைப் போல ஒரு சிறந்த பாடகியாக இருக்க வேண்டும் என விரும்பினார். என் காதலை நான் அவரிடம் சொன்னபோது அவர் போட்ட ஒரே நிபந்தனை என்னைப் பாடகியாக உருவாக்கியது. அவரை அடைய என் கூச்சத்தை விட்டால் ஒழிய வேறு வழியில்லை என முடிவெடுத்தேன். என் கூச்சத்தைத் துறந்தேன். மேடைப் பாடகி எனப் பெயர் எடுத்தேன்” எனத் தன் கதையைக் கூறி முடித்தாள்.
பள்ளியில் படித்தபோது யாருடனும் அதிகம் பேசாத குறிப்பாக ஆண்களைக் கண்டால் ஒதுங்கி ஓடும் ராஜேஸ்வரி ஒருவனைக் காதலித்திருக்கிறாள் என்றால் அது நம்ப முடியாத விஷயம் அவன் காதலைப் பெறத் தன்னை முற்றிலும் மாற்றி இருக்கிறாள் என்றால். அது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
காதல் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அது கூச்சப்படுபவர்கள் என்றும் அச்சப்படுபவர்கள் என்றும் பாகுபாடு பார்ப்பதில்லை. அது கூச்சப்பட்ட ராஜேஸ்வரியையும் விட்டு வைக்கவில்லை. பட்டிக்காட்டான கலாவையும் விடவில்லை. “கலா யாரையும் நாம் காதலிக்கக் கூடாது? அப்படியே காதலித்து விட்டால் காதலித்தவனையே மணக்க வேண்டும். அதற்கு நாம் எதையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். அவர் மனம் கவர என்னென்ன வழி இருக்கிறதோ
அதைச் செய்வதில் தப்பே இல்லை…” எனக் கூறிய ராஜியின் வார்த்தையில் அர்த்தம் இருப்பதை உணர்ந்தாள் கலா.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு கலாவின் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அவள் தன்னை மாற்றிக் கொள்ள முயன்றாள். வெளிநாட்டில் படித்துபோது அரவிந்தன் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்திலிருந்து மேல்நாட்டைப் பற்றி அவன் உயர்வாக மதித்தது அவளுக்குத் தெரிந்தது. அவன் மனம் கவர மேல்நாட்டுப் பெண்களைப் போல உடை தொடங்கினாள். ஜீன்ஸ், பெல்பாட்டம் என அவள் நாளும் ஓர் உடையில் காட்சி அளித்தாள். மொத்தத்தில் மேல்நாட்டு மோகத்திற்கு அவள் அதிகம் அடிமையானாள். தான் கொண்ட மாற்றம், அரவிந்தனை வியப்பில் ஆழ்த்தியதை எண்ணிப் பூரித்தாள் கலா. அன்றைய பொழுது அவளுடைய இன்ப நினைவுகளுடன் கழிந்தது.
பொழுது புலர்ந்தது. அரவிந்தனுக்கு நம் நாட்டைச் சுற்றிக் காட்டும் பணியை அவளிடம் ஒப்படைத்தார் தாமோதரன். அப்படி வெளியே சென்ற இடத்தில் அரவிந்தன் “கலா நீ பழைய கலாவாவே இல்லை. என் கண்களையே என்னால் நம்ப முடியலை. இந்த மாற்றம் எதனால் என்று என்னால் புரிஞ்சிக்க முடியலை…” என மெல்லக் கூறினான். அவன் சுட்டிக் காட்டிய அந்த மாற்றத்தை அவன் வரவேற்கிறானா அல்லது வெறுக்கிறானா என்பதைக் கலாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் அரவிந்தன் அதை விரும்புகிறான் என்றே அவள் உள் மனத்திற்குப் பட்டது.
காலம் யாருக்கும் காத்திராமல் தன் பணியைச் செவ்வனே ஆற்றியது. அரவிந்தன் வந்து ஆறு மாதத்திற்கு மேலாகியது. தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியலாளர் பணியைப் புரிந்தான் அரவிந்தன். இனியும் காலத்தைத் தாமதிக்காது அரவிந்தன் கலா திருமணத்தை முடிப்பதென முடிவு செய்தார் தாமோதரன். எனவே இது விஷயமாக அரவிந்தனுடன் பேசினார். “அரவிந்தா இவ்வளவு நாளும் படிப்புனு சொல்லி உன் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டாய். இப்போது படிப்பும் முடிஞ்சது. அந்தப் படிப்புக்கு ஏற்ற வேலையும் கிடைச்சிட்டு. இனிக் கல்யாணத்தைப் பண்ணிட வேண்டியதுதானே…?” எனப் பேச்சை ஆரம்பித்தார். “கல்யாணத்திற்கு இப்போ என்ன அவசரம் மாமா?” என எல்லா மணமாகாத வாலிபர்கள் பாடும் பல்லவியைத் தான் அரவிந்தனும் பாடினான்.
கல்யாணப் பேச்சு என்றதும் அறையில் இருந்த கலா தன் செவிகளை மேலும் கூர்மையாக்கினாள். அவள் நெஞ்சம் படபடத்தது. அவர்கள் என்ன பேசப் போகிறார்கள் என்ற ஆவலில் அறைக் கதவுக்குப் பின்னால் மறைந்து கேட்டுக் கொண்டிருந்தாள். “எனக்கு வயசாகுதுல. என் கண் மூடுறதுக்குள்ள கலாவை உன் கையில் ஒப்படைச்சிடலாம்னு இருக்கேன்” எனத் தந்தை ஸ்தானத்தில் இருந்த தாமோதரன் தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டார். “மாமா இது விஷயமா நானே உங்கிட்ட பேசணும்னு இருந்தேன். மாமா நான் மேல்நாட்டுக்குப் போய் படிச்சிருக்கலாம். அவங்க கலையையும் கலாசாரத்தையும் மதிச்சவனா இருக்கலாம். அதுக்காக எனக்கு வாய்க்கிற மனைவியும் மேல்நாட்டு மோகம் கொண்டவளா இருக்கணும்னு அர்த்தம் இல்லை. நான் நம்ப பண்பாட்டை மதிக்கிற பெண்ணையே மணக்க விரும்புகிறேன். அது வேற யாருமில்லை. நம்ம பக்கத்து வீட்டுல குடியிருக்கிற தேவி தான் அந்தப் பொண்ணு…” என அமைதியுடன் கூறி முடித்தான்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத தாமோதரன் தடுமாறினார். பேச முடியாமல் திணறினார். அப்போது அரவிந்தன் தொடர்ந்து “பத்துக்காசு மஞ்சள்ல இருக்கிற மகிமை பவுடர்ல இல்லை. ஆறு முழம் சேலையில இருக்கிற பவித்திரம் ஜீன்ஸ்ல இல்லை. பெண்களைப் பார்க்கிறபோ அவங்களைக் கை கூப்பி வணங்கத் தோனணுமே தவிர வெறுத்து ஒதுக்கத் தோணக்கூடாது. நான் மேல்நாட்டுல படிச்சவனா இருக்கலாம். ஆனா என் உடலும் உள்ளமும் தமிழ் மண்ணுக்குத்தான் சொந்தம்” என்றான்.
யானை தன் மீதே மண்வாரி இறைத்ததுபோலத் தமிழ் மணம் கமழ நின்ற கலா தன் அறியாமையால் செய்துவிட்ட பிழையை எண்ணி நொந்தாள். “ஓ! சலனத்துக்கு அடிமையாகும் நெஞ்சே! உன் பெயர் தான் பெண் என்பதோ? உண்மை அழகினைப் புரிந்து கொள்ளாது போலியில் மூழ்கிட்ட தன் ஏமாற்ற நிலையை எண்ணி வருந்தினாள் கலா. அந்த ஏமாற்றம் அவளுக்கு ஒரு படிப்பினையாக அமைந்தது.
– தேடிய சொர்க்கம், முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.