படித்துறை விளக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 6,568 
 
 

(இதற்கு முந்தைய ‘மனைவியும் காதலியும்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)

இருவரும் படித்துறையை அடைந்து அமர்ந்தார்கள்.

“என்ன கேட்டே சுகுணா?”

“இப்ப உங்ககிட்ட பேசிட்டுப் போன பிள்ளை யாருன்னு கேட்டேன்.”

“இங்கே தச்சுவேலை பாக்குறாரே மாடசாமி ஆசாரின்னு, அவரோட மகள். கொஞ்ச நாள் முன்னாடி அவளை ஆத்துல இருந்து நான் காப்பாத்தினேன். அதனால இவளுக்கு நான் பக்திக்கு உரிய ஒரு காட்பாதர்.”

“ஆங்… ஆமா அப்பா சொன்னார். உங்க பைக் தீப்பிடிச்சி எரிஞ்சு போனதுக்கும் இவளை நீங்க காப்பாதினதுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்குன்னு…”

“ஏன் அதை அவர் ஊர் கூட்டத்தில் சொல்லலையாம்?”

“அதை விடுங்க. இதில் உங்க அபிப்பிராயம் என்ன?”

“என்ன சம்பந்தம்னு உன்னோட அப்பாவை சொல்லச் சொல். அப்போ அதுக்கு நான் பதில் சொல்றேன்.”

“எனக்கு இப்ப பதில் சொல்லுங்க.”

“இன்னும் வேற ஏதாவது அபிப்பிராயம் சொன்னாரா?”

“ஆமாம். ஹைதராபாத்ல இருக்கிற உங்களோட எதிரிதான் யாரோ இங்கே வந்து தீ வச்சிட்டுப் போயிருக்கலாமாம்…”

சுப்பையா பெரிதாகச் சிரித்தான். “வெரிகுட்! வேற வழியில் தப்பிச்சி ஓடப் பார்க்கிறார் பாவம். உண்மையை ஒப்புக்கிட்டா அவருக்குத்தான் நல்லது. உண்மைகளை ஒப்புக்கப் போறவரும் அவர்தான். ஆனா அந்த உண்மையின் வெடிப்பு அவருக்கே ஒரு நாசமா இருக்கும் சுகுணா. சிம்பிளா உனக்கு இப்பச் சொல்றேன். என் பைக் தீ வைக்கப்பட்ட சம்பவத்தை டோட்டலாகவே உனக்கு மிஸ்லீட் பண்ணப் பார்க்கிறார் உன்னோட அப்பா. அவர் சொன்ன ரெண்டு அபிப்பிராயமுமே வடிகட்டின பொய். இப்படிப் பொய் சொல்லி ஏன் உன்னை மிஸ்லீட் பண்றார்னு தெரியுதா சுகுணா உனக்கு?”

“உங்களை ஏனோ அவருக்குப் பிடிக்கலை/”

“அதுவும் ஒரு காரணம். இன்னொரு காரணம் என்னோட பைக்குக்கு தீ வைத்ததே உன் அப்பாதான் சுகுணா.”

சுகுணா அதிர்ந்து போனாள். அவளால் நம்பவே முடியவில்லை. அப்பா ஏதோவொரு மனக்குழப்பத்தில் இருப்பதை ஊரிலிருந்து வந்தவுடனே உணர்ந்து கொண்டாள். ஆனால் அந்தக் குழப்பத்திற்குள் இப்படி ஒரு நீசத்தனமான குற்றம் ஒளிந்திருக்கிறது என்பது அவளுக்கு நம்ப முடியாததாகவே இருந்தது. அவள் அறிய அப்பா ஆணாதிக்க மனோபாவத்தில் சற்று இறுகிப்போன கறார் பேர்வழியே தவிர விரோத குற்றம் எதிலும் ஈடுபட்டவர் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு அப்பா இன்று ஒரு பயங்கர குற்றம் செய்திருக்கிறார் என்றால்…?

“அப்பாதான் பைக்குக்கு தீ வைச்சார்னு எப்படிச் சொல்றீங்க? நீங்களே அவர் தீ வைத்ததை பார்த்தீங்களா?”

“நான் பாக்கலை. ஊர்லேயும் வேற யாரும் பாக்கலை. அவர் தீ வைச்சதைப் பார்த்த ஒரே ஜீவன் ராஜலக்ஷ்மிதான். இதை ஏழெட்டு நாள் கழிச்சு அவங்க என்கிட்டே சொன்னபோதுதான் எனக்கே தெரியும்…”

“வேற யாருக்கும் தெரியாதா இது?”

“தெரியாது சுகுணா.”

“அது ஏன்?”

“வேற யார்கிட்டேயும் இதைச் சொல்றதுக்கு ராஜலக்ஷ்மிக்கு விருப்பமில்லை.”

“உண்மை தெரிஞ்சும் அதை வெளியே சொல்ல வேண்டாமா?”

“சபரிநாதன் என்கிற மனிதனை தண்டிக்க அவள் விரும்பவில்லை.”

“இது நம்பற மாதிரி இல்லை… ஆனா எங்கேயோ ஒரு ‘லாஜிக்கல் கேப்’ இருக்கிற மாதிரி தெரியுது. நடந்த விஷயங்கள் அத்தனையையும் என்கிட்ட மறைக்காம சொல்லிடுங்க ப்ளீஸ்.. அப்பா தீ வைச்சார் என்கிறதை உங்ககிட்ட மட்டும் வந்து ராஜலக்ஷ்மி சொல்லுற அளவுக்கு உங்களுக்கும் அவளுக்கும் அப்படியென்ன பெரிய ரிலேஷன்ஷிப்? அதுவும் இவ்வளவு குறைஞ்ச நாள்ல?”

“யெஸ் சுகுணா… இந்த வெரி ஷார்ட் பிரியட்ல எனக்கும் ராஜலக்ஷ்மிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் உறவு நிஜமாகவே ஒரு ரிமார்க்கபிள் ரிலேஷன்ஷிப்தான். ஆனா, எங்களோட இந்த உறவு பற்றி இங்கே யாருக்குமே தெரியாது சுகுணா…”

“இது ஹைதராபாத்தோ அல்லது பெங்களூரோ இல்லை நீங்க நெனச்சா உங்களுக்கு பிடித்தவர்களுடன் உறவு கொண்டாட. இது வில்லேஜ். இப்ப நான் சொல்றேன். அப்பாவுக்கு உங்கபேர்ல ஏதோவொரு சந்தேகம் இருக்கு. அந்த சந்தேகத்தில்தான் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்கிறதுக்காகத்தான் பைக்குக்கு அவர் தீ வைச்சிருக்கார்…”

“இல்லை சுகுணா. யு ஆர் ராங். அந்தமாதிரி சந்தேகம் அவருக்கு வந்திருந்தா, ராஜலக்ஷ்மியைத்தான் அவர் தீ வைத்துக் கொளுத்தியிருப்பார்.”

சுகுணா திகைத்துப்போய் சுப்பையாவைப் பார்த்தாள். அவனுடைய கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன.

“உன்னோட அப்பாவை உனக்கு முழுசா தெரியாது சுகுணா. ஏன்னா, தீ வைத்த உன்னோட அப்பா ராஜலக்ஷ்மியை கல்யாணம் பண்ணிண்டதுக்கு அப்புறமான சபரிநாதன்… உனக்குத் தெரிஞ்ச அப்பாவோ ராஜலக்ஷ்மியை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முற்பட்டவர். உனக்குத் தெரியாத அப்பாவைப் பத்தின ‘கம்ப்ளீட் பிக்சரை’ இப்ப நான் தரேன். இதுலேயே நீ புரிஞ்சுக்கலாம் எனக்கும் ராஜலக்ஷ்மிக்கும் ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத உறவின் காரணங்களை…”

“காரணத்ல உண்மை இருக்கலாம்… வேற வழி இல்லாததாகவும் இருக்கலாம். அதுக்காக மட்டும் உங்க காரணங்களை நான் அங்கீகரிப்பேன்னு மட்டும் நீங்க எதிர்பார்க்காதீங்க. எனக்குன்னு சில சோஷியல் வேல்யூஸ் உண்டுங்க. நம் சமூக மரபுகளுக்கு அப்பாற்பட்ட நடப்புகள் எதையும் என்னால் கண்டிப்பா ஏத்துக்க முடியாது…”

சுப்பையா ஒரு வறண்ட சிரிப்புடன், “என்ன சுகுணா, வழக்கை கேட்டுத் தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடியே உன்னோட தீர்ப்பை வாசிக்கிறயே, இது என்ன நியாயம்?”

“நான் என்னோட உணர்ச்சிகளை சொன்னேன். இனி நீங்க உங்க வழக்கைச் சொல்லலாம்…”

“சொல்றேன் சுகுணா, சொல்றேன். ஆனா என் வழக்கு மன நுட்பங்கள் என்ற யதார்த்தமான நிஜங்கள் பற்றியது. உன்னோட உணர்ச்சிகளோ கருத்து இயல் என்ற கற்பனை இழைகளில் தோற்றப்படுத்தப்படும் வெறும் உருவகம். ஆனால் என் உறவோ நிஜங்களோடுதானே தவிர கருத்தியல் உருவகங்களோடு கிடையாது. ஸோ, நான் பார்க்க நேரிட்ட மன நுட்பங்கள் அத்தனையையும் இப்போ உன் முன்னாடி வைக்கிறேன். அவைகளை எந்த அபிப்பிராய குறிக்கீடும் இல்லாமல் ஜஸ்ட் நீ உண்மையா பாரு சுகுணா.”

சுகுணா முரண்பாடான முக பாவனையோடு இறுக்கத்துடன் அமர்ந்திருக்க, சுப்பையாவும் கண்களை மூடி தியானத்தில் இருப்பதைப்போல சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான்… அப்போது படித்துறையில் லேசாக இருள் கவியத் தொடங்கி இருந்தது. குயிலோசைகள் அடங்கத் தொடங்கியிருந்தன. செறிவான ஒரு திரைக்கதைபோல அவனுள் உருவாகிப் போயிருந்த சபரினாதனைப் பற்றிய எல்லா உண்மைகளையும் சுப்பையா சுகுணாவுக்கு விவரிக்கத் தொடங்கினான்…

“ராஜலக்ஷ்மியை கல்யாணம் செய்துகொண்ட பிறகு சபரிநாதன் எப்படி இருந்தார் என்கிற விஷயத்தோடு, முதல் மனைவி இறந்து ராஜலக்ஷ்மியை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி அவர் எப்படி இருந்தார் என்கிறதையும் சேர்த்தே சொல்கிறேன் சுகுணா. அவரோட மனச்சிக்கல் முதல் மனைவியின் இறப்பில்தான் ஆரம்பம் ஆச்சு. ஒருவிதமான அதீத உள்மன இயக்கம் சபரிநாதனின் மன நிலையில் அப்போதான் இயங்க ஆரம்பித்தது. ரொம்பவும் வயசான காலம் வரைக்கும் துணையா இருந்து தன்னை நல்லவிதமா முதல் மனைவி கவனிச்சிப்பாங்கன்னு அசாத்திய நம்பிக்கையில் இருந்த அவருக்கு, திடீர்ன்னு அவரோட ஐம்பதாவது வயதில் மனைவி இறந்து போனதைத் தாங்கவே முடியவில்லை. மனசே உடைந்து போயிடுச்சு அவருக்கு. மனசு உடையறதுல சிக்கல் எதுவும் கிடையாது சுகுணா…

ஆனா சபரிநாதன், மனசு ரொம்ப உடைஞ்சு போன மாதிரி சதா காட்டிக்கவும் ஆசைப்பட்டார். அதேநேரம் காட்டிக்கப் பிடிக்காதவராகவும் இருந்தார்! சுய இரக்கம் ஏற்பட்டபோது மனம் உடைஞ்சதைக் காட்டிக் கொண்டார். அது பிடிக்காத நேரத்ல சுய தனிமையில் அவர் பாட்டுக்கு இருந்தார். சமையல்காரர்களை வைத்துக்கொண்டு திருப்தியா எப்போதும் போல சாப்பிடவும் செய்தார். சமையல்காரன் சாப்பாட்டை சாப்பிட நேர்ந்து விட்டதே என்று அதேநேரம் விசனப்பட்டுக் கொண்டும் இருந்தார். அந்த விசனம் வரும்போது இந்த நிலைக்கு அவரை ஆளாக்கிட்டுப் போய்விட்டாளே என்று இறந்துபோன மனைவியின் மேல் சபரிநாதன் ஆத்திரப்படவும் செய்தார்.

ஆனா எந்தத் தனிமையிலும் ஆத்திரத்திலும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம் என்ற நினைப்புமட்டும் வரலை அவருக்கு. சுய தனிமையில், சுய இரக்கத்தில் அவருக்கே தெரியாத அவல மனச்சுகம் ஒன்று அவருக்குள் இருந்தது சுகுணா… அதனால வயசான காலத்ல மனைவியை இழந்தவர் என்ற அனுபவத்தையும் சம்பவத்தையும் மாற்றி அமைக்க சபரிநாதன் விருப்பப்படவில்லை. இந்த நேரத்தில்தான் தேர்தல் வந்தது. பணவசதி உள்ளவர், பெயர் எதுவும் கெட்டுப்போகாதவர் என்ற ஹோதாவில் ஆளுங்கட்சி சார்பில் இந்தத் தொகுதியில் நிற்க வலிய ஒரு வாய்ப்பு வந்தது.

ஆனா அந்த வாய்ப்பை கன்வே பண்ண வந்தவங்க அவங்களை அறியாம ஒரு தப்பு பண்ணிட்டாங்க. தனியாவே கிடந்து பொழுதும் போகாம வீட்டுலேயே அடைஞ்சு கிடக்கறதுக்கு தேர்தல்ல நின்னு சுறுசுறுப்பா ஊருக்காவது நாலு நல்ல காரியம் சபரிநாதன் செய்யலாமேன்னு அவங்க சொல்லிட்டதுல ஹர்ட் ஆயிட்டார் சபரிநாதன். அவருக்கு சுயஇரக்கம் வேண்டியிருந்ததே தவிர மத்தவங்களோட இரக்கம் தேவைப்படலை. உடனே அவருக்கு கோபம் வந்திடும். அன்னிக்கும் அவருக்கு கோபம் வந்திடுத்து. அவரை தேர்தல்ல நிக்கச்சொன்ன எல்லாரையும் எதுவும் பேசாம கோபத்தில விரட்டியடிச்சுட்டார்.

அப்போதான் அவரோட ஒரு உறவுக்கார லேடி வந்து ஒரு ஆறுதலுக்காக சொன்ன வார்த்தைக்காக – அவங்களை அப்படியா விரட்டியடிக்கிரதுன்னு சமாதானம் பண்ற மாதிரி கேட்டாங்க. அப்போதான் சபரிநாதனின் வாயில் இருந்து அவருக்கே தெரியாமல் அந்த வார்த்தை வந்துவிட்டது… நிஜமாகவே ஆறுதல் சொல்பவர்களாக இருந்தால் இன்னொரு கல்யாணம் செய்துகொண்டு சபரிநாதன் நிம்மதியாக இருக்கலாமே என்று வந்தவர்கள் ஆறுதல் சொல்லியிருந்தால் அது நியாயமாம்!

சபரிநாதனின் வாழ்க்கை ஓட்டம் இந்த இடத்தில்தான் திடீரென்று இன்னொரு கல்யாணத்தை நோக்கித் திரும்பியது…” சுப்பையா சொல்லிக் கொண்டிருந்ததை சிறிது நிறுத்தினான். சுகுணா அவனையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.

“ஆற்றாமையான கோபதாபங்களில் வெடித்து, சில குற்ற உணர்வுகளிலும் ஆசாபாசங்களில் சிக்கியும் சபரிநாதன் இறுதியில் இன்னொரு கல்யாணத்தைப் பண்ணிக் கொள்ளலாம் என்ற தீர்மானத்திற்கு வந்து சேர்ந்தார். அம்மாதிரி தீர்மானத்திற்கு வருகிறவரை அவரின் மனதிற்குள் ஓடிய உள்மன எண்ண ஓட்டத்தை ஒரு ‘என்ட்லஸ் ஸ்ட்ரீம் ஆப் இன்ட்ரோவர்ஷன்’னு சொல்லலாம். ஒரு தினுசான சுழற்சிக்குள் அவருடைய ‘மனக்காலை’ விட்டுவிட்டார்!

தனக்கு ஒரு பெண் துணை வேண்டும் என்கிற ஆர்வத்தைவிட இளம்பெண் ஒருத்தி மனைவியாக வரணும் என்கிற சபலத்துக்கு தெரியாத்தனமா ஆளாயிட்டார். ஆனா இளம்மனைவி ரொம்ப அழகானவளா இருக்கணும்னு அவர் நெனைக்கலை எனினும் அழகான ராஜலக்ஷ்மி மனைவியாக கிடைச்சது சபரிநாதனுக்கு இனிய விபத்து. பின்னாடி அதுதான் மோசமான விபத்தாயிடுத்து!”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *