(2001 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அதிகாலையிலேயே தலையில் நீர் ஊற்றுவது ஒரு சுகம்தான். மனப் போராட்டங்களுக்கு மத்தியில் இரவு பூராகவும் கண்ணீர் சிந்தி கலங்கியதால் விடிவிழந்த முகத்தை எவருமறியாமல் கழுவியதுமாகுது….நேரகாலத்துடன் கடமைகளைத் தொடங்கியதுமாகுது.
இவருக்கு வாழ்க்கைப்பட்டு இன்றைய தினம் சரியாக இருபத்தைந்து வருடங்கள் பூர்த்தி. எனக்கும் நாற்பத்தியிரண்டு வயதாகிவிட்டது.
பிள்ளைகள் இரண்டும் எங்களுடன் ஒற்றுமையாக இருந்து பெற்றோரின் மணவாழ்க்கையின் வெள்ளி விழாவைக் கொண்டாடி எந்தையும் தாயும் தெய்வங்கள்’ என்று போற்றி எமது மனதைக் குளிரப்பண்ண வேண்டும்.
நான் அதிக செல்லம் கொடுத்து வளர்த்த எனது மகன் தான் குறுக்கால் இழுத்தான் என்றால் கலாச்சாரங்களையும் கல்வியறிவையும் ஊட்டி வளர்த்த எனது மகள் எங்களைத் தூக்கி எறிவாள் என்று நான் சிறிய அளவில் கூட நினைக்கவில்லை.
இன்று வெய்யிலும் கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும்போல் தெரிகின்றது…
காலையில் துயில் எழுந்தவர், வீட்டுக் கொல்லையில் உள்ள பயிர்களுக்கு நிலத்தைச் சொகுசு பண்ணிக் கொடுத்து, பயிற்றங் கன்றுகளுக்குப் படர் கம்பு நாட்டி நீர் பாய்ச்சும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.
பிள்ளைகளுக்கு நல்ல தொழில் வாய்ப்புக் கிடைக்கும் வரை ஏழெட்டு வருடங்களாயினும் அரச தொழிலைத் தொடர்வதென இருந்தவர், இப்போ…இரண்டு வருடத்தில் ஓய்வூதியம் எழுதிவிட்டு வந்துவிடுவேன் என முடிவாகச் சொல்லி விட்டார்.
கவலையாகத்தான் இருக்கின்றது…
“நேரம் ஏழு மணியாகுது. குளித்துவிட்டு வாங்கோவன், ஒரு சுடுதண்ணியை ஆவது குடிக்க”
நான் வேறெதனைச் சொல்வது?
எங்களுடைய பிள்ளைகள் எங்களுக்கு விட்டு வைத்துவிட்டுப்போன மனச் சந்தோசத்தில்..
‘இன்றைக்கு நாங்கள் வெள்ளிவிழா கொண்டாட வேண்டிய நாள். வாங்கோ கணவன் மனைவியாக கோயிலுக்குப்போய் விட்டு வருவோம்’ என்று கேட்பதா?
“தலை ஈரத்தை நன்றாகத் துவட்டி விட்டு இந்தக் கோப்பியை குடியுங்கோ. ‘கொலஸ்ரோல்’ அது இது என்று மற்றவையெல்லாம் விழுந்தடிக்கினம், நீங்களும் ஒரு தடவை போய் ‘செக்’ பண்ணுங்கோ என்றால், ‘என்னை வருத்தம் நெருங்குமா…….? எழுபது வயது தாண்டினாலும் சுகதேகியாக வாழ்ந்து காட்டுகிறேன் பார்’ என்று தட்டிக்கழிக்கிறியள்”
வேலைப்பராக்கிலும் கதைப்பராக்கிலும் கவனிக்கத் தவறிவிட்டேன். அப்போதுதான் கவனித்தேன்….. அவரது விழிகளில் நிறைந்த நீர் கன்னம் வழியே தாரை தாரையாக வழிந்தது.
“பிள்ளைகள் என்னை ஏமாற்றி முடிந்தது. இப்போ நீயும் என்னை ஏமாற்ற ஆயத்தமோ?’ அவரது சொற்கள் தழம்பின.
அதிகாலையில் நான் துயிலெழுந்து அவரது பாதங்களைத் தொட்டு வணங்கியதிலிருந்து, முழுகிப் பொட்டிட்டு இறை அஞ்சலி செலுத்தும் வரையிலும் என்னை அவர் கண்காணித்தமையைப் பின்புதான் நான் புரிந்து கொண்டேன்.
அவரது மடியில் விழுந்து ஓவென்று குரல் வைத்து அழவேண்டும் போல் இருந்தது. அந்த எண்ணத்தை எனக்குள்ளேயே அடக்கிக் கொண்டேன்.
நான் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த நாட்கள் நேற்றோ முந்திய தினமோ என்பது போல உள்ளது.
அதற்குள்ளாகவே…
எனக்கொரு விவாகம்…குடும்ப வாழ்க்கை..மழலைபேசக் குழந்தைகள்…
எல்லாம் ஒரு கனவு போல நடந்து முடிந்து விட்டன!
நான் விவாகமாகி அவரது வீடு புகுந்தபோது அங்கு சிலர் என்னை எச்சரித்தார்கள்.
“உன்னுடைய புருஷன் கோபக்காரன், கவனமாக நடந்து கொள்” அவரது பெரியதாய்.
“சொந்த மச்சாளை வைத்துக் கொண்டும் நாங்கள் ஏன் உவனுக்கு பெண் கொடுக்கவில்லை… பொல்லாத கோபக்காரன்” தனது மகளை மணம் முடிக்கவில்லை என்ற ஆதங்கத்தில் அவரது மாமியாரின் அண்டல்.
அவரது கோபம் எப்படிப்பட்டதென்பதை நான் புரிந்து கொள்ள நீண்ட நாட்கள் எடுக்கவில்லை.
அவரது சகோரத சகோதரிகளை சிறு விடயங்களுக்குக் கூட சத்தமிட்டு அவர் அதட்டுவதைக் காணநேர்ந்தபோதே நான் ஒன்றைக் கவனித்தேன். அவர் தன்மீது வைத்திருக்கும் அக்கறையையும் கவனத்தையும் விட பன்மடங்கு அன்பும் பரிவும் தன்னைச் சார்ந்தவர்கள் மேல் வைத்திருந்தார். அந்தப் பரிந்துணர்வு அவரிடம் மேம்பட்டு இருந்ததால் தான் மற்றவர்களை எப்பொழுதும் எச்சரித்துக் கொண்டிருந்தாரே அன்றி, கோபம் என்ற பலவீனம் அவரிடம் இருக்கவில்லை .
இந்த உண்மைய நாம் அன்புடன் தாலாட்டிச் சீராட்டி வளர்த்த எமது செல்வங்களே புரிந்து கொள்ள மாட்டாமல் போய் விட்டதுதான் பெரிய துன்பமாகப் போய்விட்டது.
அன்று எனது மகள் அப்படி எதிர் வார்த்தை பேசி சவால் விடுவாள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
“நீங்கள் அண்ணாவையும் என்னையும் வீட்டிற்குள் பூட்டி பூட்டி வைத்த இலட்சணம்தான் எங்களுக்குப் படிப்பில் நல்ல ‘ரிசல்ட்’ எடுக்க முடியாமல் போனது.
அது மட்டுமல்லாமல் இன்று நாங்கள் வெளியில் காரியமாற்றக்கூடிய திராணி இல்லாமல் இருக்கின்றோம்.”
முகத்தில் அரும்பிய வியர்வையை துவாயால் அழுத்தி ஒற்றியபடியே அவர் கூறினார்…
“பிள்ளை ….. உங்களை நாங்கள் எப்படி வளர்த்திருக்க வேண்டுமென்று நீ நினைக்கிறாய்?…. எங்களுடைய கலாச்சாரம் எங்களுடைய பண்பாடுதான் எங்களுக்கு முக்கியம். அதன் பிறகுதான் கல்வி அறிவோ தொழில்வாய்ப்போ எதுவும்.”
இப்போது மகள் முற்றத்தில் நின்று நீண்டதான தனது முடியை சீப்பினால் வாரிக்கொண்டே “அப்பாவுக்கு எங்களுடைய முன்னேற்றத்திலும் அக்கறையில்லை. இன்னாருடைய மகள் இன்னாருடைய மகனுடன் ஊர் சுற்றுகிறாள் என்று கதைவராமல் இருக்க வேண்டும். மற்றப்படி நாங்கள் எதிர்காலத்தில் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை.”
நான் அதட்டினேன். “பிள்ளை ….. அப்பாவோடு கதைக்கிற கதை மட்டு மரியாதையோடு இருக்கவேண்டும்.’
இப்போ தலையை வேகமாகச் சுழற்றி முன்னே இருந்த தனது நீளமான முடியைத் தோளுக்கு மேலால் பின் தள்ளிவிட்டு சீப்பில் சிக்குண்டிருந்த மயிர்களைப் பிடுங்கி எடுக்கத் தொடங்கினாள்.
அவருடைய முகம் அவமானத்தால் மிகவும் தொய்ந்து போயிருந்தது.
“நீ கைக்குழந்தையாக இருந்தபோது உனது கழிவுகளையும் அரியண்டங்களையும் மனம் கோணாமல் தாங்கிக் கொண்டது உனது அப்பாதான்.
உனக்கு நெஞ்சில் சளி அடைத்து மூச்சு விடத் திணறிய சந்தர்ப்பத்தில் உனது வாயில் வாய்பதித்து அந்தச் சளியை உறிஞ்சி எடுத்து அகற்றி சுவாசம் தந்ததும் இந்த அப்பாதான். இதையெல்லாம் நாங்கள் செய்தது உங்கள் மேல் கொண்ட அன்பின் நிமித்தம்தான் என்பதையும் நீங்கள் இன்று ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் தான்”.
அவருடைய குரல் கவலையில் தோய்ந்து தழம்பியது.
குற்ற உணர்வு அவளை உறுத்தியது. ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்தாள். குரல் மட்டும் தாழ்ந்து ஒலித்தது..
“நான் என்ன தனியாகவா வெளிநாடு போகிறேன்? என்னுடன் மேலும் நான்கு பெண்கள். நாங்கள் இடையில் தங்கும் இடங்களில் ‘சப் ஏஜன்சி இருக்கின்றான். உரிய இடத்துக்குப் போய்ச் சேரும் வரையும் ‘ஏஜன்சியோடு எங்களுக்குத் தொலைபேசித் தொடர்பு இருக்கும். வெளிநாட்டு ‘கோல்’ போட்டு அண்ணனோடும் கதைத்து விட்டேன்.
அண்ணன் ‘ஓகே’ பண்ணி விட்டார்.
அதன் பின்னர் அவர் பேசவில்லை . விதியென்று கூறிவிட்டு சில காரியங்களை மறந்து விடலாம். ஆனால் திட்டமிட்டு காரியங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது, பேசிப் பயன் கிட்டப்போவதில்லை.
யாரோ ஒரு கூத்துக்காரி ‘எப்பொன்சர்’ செய்கிறாள் என்று கூறி, எங்கள் விருப்பத்துக்கு மாறாக மகன் வெளிநாடு சென்று மூன்று வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. இன்றுவரை எந்தத் தொடர்பும் இல்லை. இப்போ அவனுடைய வழி நடாத்துதலில் இவள் சென்றால் என்ன ஆகும் என்பதனை ஊகிக்க முடியாத அளவிற்கு நாங்கள் விளக்கம் கெட்டிருக்கவில்லை.
கலாசாரங்களைக் கடைப்பிடிக்க வேண்டிய இளைய தலைமுறையினர் அவற்றைத் தூக்கி எறிந்து விடலாம். ஆனால் கலாசாரங்களைப் பாதுகாக்கவேண்டிய பெற்றோர்கள் தங்கள் பொறுப்பிலிருந்து விலக முடியாது.
ஒரு வருட எல்லாம் முடிந்து தான் இப்போ காலமுமாகிவிட்டதே!
நினைவுச் சுழியிலிருந்து மீண்டு சகஜ நிலைக்கு வந்தேன்.
கோப்பியைப் பருகிமுடிந்து சில்வர் பாத்திரத்தை நீட்டியபடியே கூறினார்.”சரி..சந்தோசமாக இருந்த காலங்கள் முடிந்து விட்டன. இன்னும் பதினைந்தோ, இருபது வருடங்களோ காலம் தள்ளவேண்டி ஏற்படலாம். எமது பிள்ளைகள் அந்திம காலத்தில் எங்களைப் பார்க்கும் என்ற நிலைதான் இல்லாமல் போனாலும் அப்படியொரு நம்பிக்கையோடு வாழக் கூட நாங்கள் கொடுத்து வைக்கவில்லை . அதுதான் எனக்குப் பெரிய கவலை.”
இப்படி மனம் வெதும்பி அவர் துயருற்ற சம்பவங்கள் எதுவும் எனக்கு நினைவு தெரிந்து இல்லை.
எனது இதயக் குமுறலும் வேதனையும் அவர்முன் பிரவாகித்து விடாதபடி அணைபோட்டபடியே…
“உதெல்லாம் விட்டு விட்டு வாங்கோ…., கோயிலுக்கும் போய் உங்களுடைய மூத்த அண்ணன் சுகயீனத்தில் இருக்கிறாராம் அவரையும் பார்த்துவிட்டு வருவோம்”.
அவருக்கு ஆறுதல் தரும் இடம் இவையிரண்டும் தான் என்பதைத் தெரிந்து கொண்டு கூறினேன்.
இவரது மூத்த தமையனுக்கு இப்போது அறுபத்தினான்கு வயது இருக்கும். மனைவிக்கும் அவருக்குமிடையே ஒரு ஏழு வயது வித்தியாசமிருக்கும். காலம் கடந்துதான் விவாகம் நடந்தது. பதினான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறானென்றால் பார்க்கவேண்டியது தான்.
எங்கள் வீட்டிலிருந்து கோயில் ஒரு நடைதூரம் என்றால் கோயிலிலிருந்து அவரது அண்ணர் வீடு மற்றொரு நடைதூரம்.
தம்பியாரைக் கண்டதில் தனது சுகயீனத்தையும் மறந்து உற்சாகமாகக் கதைக்கத் தொடங்கினார். அடிக்கடி இருமல் வந்து உதைத்தது. அப்போதெல்லாம் அவருடைய மகன் அவர் அருகிலிருந்து மார்பைத்தடவி விட்டதோடு அவருக்குச் சிகிச்சை செய்யும் வைத்தியர் யார், கொடுக்கப்படும் மருந்து வகைகள் என்ன, சாப்பிடவேண்டிய ஆகார வகை என்ன, இரவில் தூக்கம் வராவிட்டால் கொடுக்கவேண்டிய மருந்துவகை என்ன என்பவற்றையெல்லாம் துல்லியமாக பட்டியலிட்டு விபரித்தான்.
அவருடைய மனைவி மிகவும் பரிவுடன் என்னை உபசரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். எனது கவனமெல்லாம் தனது தந்தைமீது பாசத்தை சொரிந்து பணிவிடை புரியும் அந்தச் சிறுவனையே எடை போட்டது.
விவாகமுமில்லை பிள்ளை குட்டிகளும் இல்லை என்று இருந்த இந்த மனுசனுக்கு கடைசிக் காலத்தில் பணிவிடை செய்ய இறைவன் ஒரு அன்பான பிள்ளையைக் கொடுத்து விட்டான்.
இளம் வயதில் விவாகம் செய்த நானும் அவரும் கண்டதென்ன? அந்திம காலத்தில் நாங்கள் இருவரும் அநாதைகள்.
பிள்ளைகளுக்காக நாங்கள் பட்ட துன்ப துயரங்களுக்கெல்லாம் பலன் இல்லாமல் போய்விட்டது…
மனைவியைக் கண்டதும் பெற்றோரை மறந்து விட்ட ஆண்பிள்ளை…
இருபத்தி நான்கு மணி நேரமும் எனது பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் வளர்ந்துவிட்டு இப்போ விடிவு தேடிப் புறப்பட்ட பெண்பிள்ளை.
“தம்பி…நான் சொல்லுகிறேன் என்று தனியாக முடிவெடுக்க வேண்டாம். உன்னுடைய மனைவியையும் கலந்தாலோசித்துச் செய். எங்கள் இளைய தம்பிக்கு ஏற்கனவே ஐந்து பிள்ளைகள். இப்போ இரட்டைக்குழந்தை பிறந்ததில் அவன் அதிர்ந்து போயிருக்கின்றான். அவனுக்கும் ஆறுதலாக இருக்கும். உனக்கும் பின்னடிக்கு ஒரு துணையாக இருக்கும். ஒரு பிள்ளையைக் கேட்டுவாங்கி வளர்த்தெடு”
பேச்சுவாக்கிலும் அவரது அண்ணனுடைய அந்தக்கூற்றை எனது காது கிரகிக்கத் தவறவில்லை..!
இவர் கேட்டால் நான் மறுப்பதில்லை என முடிவெடுத்துக்கொண்டு மீண்டும் பேச்சில் கலந்து கொண்டேன்.
வெயிலின் தகிப்பு குறையத் தொடங்கிய போதுதான் பொழுது நன்கு போய்விட்டமையை உணர்ந்த அவர் தமையனிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
இப்போ மனம் தெளிவுற்ற நிலையில் எனக்கு ஆறுதல் கூறினார்…
*அண்ணை விவாகம் செய்த காலகட்டம் தான் சரி. பதினான்கு வயதுச் சிறுவனை இந்தச் சமூகம் கெடுப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதுதான் அவருக்கு ஆறுதல். தோளுக்கு மேல் அந்தப்பிள்ளை வளருவதற்கு முன்னராக அண்ணரது இறுதிக்காலம் முடிந்து விடும். அவர் தனது பிள்ளையின் அரவணைப்பில் இறுதி மூச்சை விடுவார்.”
எனது கணவனின் அங்கலாய்ப்பு என்னை உலுக்கியது. தன்னலம் கருதாத நன்னடத்தையின் சிகரமான..கண்ணியம் மிக்க ஒரு குடும்பத்தலைவனின் நியாயபூர்வமான அங்கலாய்ப்பு அது. அவர் மறந்தும் கூட தனது தம்பியின் பிள்ளையொன்றைத் தத்தெடுக்கும் யோசனையை என்னிடம் முன்வைக்கவில்லை.
‘எனக்காக குழந்தைகள் இருவரைச் சுமந்து பெற்றாள்…அவர்களுக்காக தூக்கத்தை மறந்தாள்..சுகங்களைத் துறந்தாள். உதிரத்தை ஈய்ந்தாள். இன்று போய் அவளிடம் மற்றொருத்தி பெற்ற குழந்தையைப் பாரம் எடு என்று எப்படிக் கேட்பது? இப்படித்தான் அவர் சிந்தித்திருப்பார்!
வாழ்க்கையில் சில தவறுகளை விட்டால் அவற்றைத் திருத்தவே வாய்ப்பில்லை!
வாழ்ந்து நொந்துபட்ட அனுபவங்களை ஆதாரமாக வைத்து மீண்டும் ஆரம்பதிலிருந்து வாழ முடிந்தால் நிச்சயம் அது வெற்றிகரமான மகிழ்ச்சியான வாழ்க்கையாகத்தான் இருக்கும்!
எனது அறையை தாழ்பாள் போட்டுக் கொண்டேன். எனது இருபத்தைந்து வருடகால விவாக வாழ்க்கையை என் மனக் கண்முன்னால் நிறுத்தினேன். பிள்ளைகளுக்காகப் பட்ட துன்ப துயரங்கள் தான் எத்தனை, எத்தனை, எத்தனை……! தந்தையின் பராமரிப்பும் தாயின் அரவணைப்பும் தேவைப்படும் வரைக்கும் தான் இது குடும்பம்: வீடு! அவர்களுக்கென உணர்வுகளும் அவசியங்களும் ஏற்படும் போது பெற்றோரில் பிழைகளைக் கண்டு பிடிப்பதுடன் அவர்களை உதாசீனம் செய்து… தமக்கென துணைகளைத் தேடிப் பறந்து விடுகிறார்கள். இதுதான் உண்மை! இதுதான் உலகம்!
இனம் புரியாத உத்வேகத்துடன் கட்டிலிலிருந்து பாய்ந்து எழுந்தேன். கன்னங்கள் வழியாகப் பெருக்கெடுத்த கண்ணீரை அழுத்தித் துடைத்துக் கொண்டேன்.
நாற்பத்தியிரண்டு வயது பெரிய வயதல்ல. இவருடைய அண்ணிக்கு விவாகமாகியதே இதே வயதில்தான்!
இந்தக் குடும்ப நன்மைக்காகவே உழைத்துச் சோர்ந்த எனது கணவனின் அருமைபெருமைகளை யெல்லாம் எனது பிள்ளைகள் புரிந்து கொள்ளாமல் போகலாம்.
ஆனால் எனக்கு வாழ்வு தந்த தெய்வம் அவர். நான் இல்லாத காலம் ஒன்று இருந்தால் அப்போது அவர் அந்தரிக்கக் கூடாது.
அலுமாரியின் காகித விரிப்பின் இடுக்கினுள் மிக பயன்படுத்திய அந்தக் கடதாசிப் பொட்டலத்தை கசக்கி வீசினேன்.
வாழ்ந்து நொந்துபட்ட அனுபவங்களை ஆதாரமாக வைத்து மீண்டும் ஆரம்பத்திலிருந்து வாழ்வேன்…
நிச்சயம் அது வெற்றிகரமான மகிழ்ச்சியான வாழ்க்கையாகத்தான் இருக்கும்.
– ஞானம் மார்ச் 2001, ஸ்திரீ இலட்சணம், முதற் பதிப்பு: அக்டோபர் 2002, ஈழத்து இலக்கியச் சோலை, திருக்கோணமலை.