பச்சைக்கல் கடுக்கன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,004 
 
 

முருகேசன் தபால்களை எடுத்துக கொண்டு போஸ்டாபீஸை விட்டு வெளியே வந்தபோது மழை தூற ஆரம்பித்தது. போச்சு, இன்றைய பிழைப்பு கோவிந்தா தான் என்று நினைத்துக கொண்டான்.

சாதரணமாய் ஒன்பது மணிக்கு இறங்கினால் கடிதங்களை டெலிவரி பண்ணிவிட்டு பன்னிரண்டிற்கெல்லாம் வீட்டிற்கு போய் விடலாம். மழைபெய்வதால் அது முடியாது. என்னதான் குடைபிடித்துக் கொண்டு சைக்கிள் மிதித்தாலும் ஒன்று அவன் நனைய வேண்டும். இல்லையென்றால் கடிதங்கள்!

மழை விடட்டும் என்று பக்கத்து பில்டிங்கில் ஒதுங்கின போது மனைவி காமாட்சி காது கடுக்கனுடன் பக்கத்து மளிகைக் கடையில் சாமான் வாங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அவளைவிட அந்தக் கடுக்கனே அவனுடைய கவனத்தை ஈர்த்தது. அதை பார்க்கப் பார்க்க அவனது மனது கனக்க ஆரம்பித்தது. அவள் ரொம்ப நாட்களாகவே அந்தப் பச்சைகல் பதித்த கடுக்கன் வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு போஸ்ட்மேனின் சம்பளத்தில் வீட்டு செலவை கவனிப்பதா, குழந்தைகளின் படிப்பா, துணிமணிகளா…? எந்தச் செலவை என்று கவனிப்பது, வீட்டு வாடகை வேறு. இவற்றுக்கிடையில் அவனால் பச்சை கல் கடுக்கனைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

அவளும் விடுவதாக இல்லை. அவள் நச்சரிப்பதற்கும் கூட காரணமிருந்தது. கல்யாணம் பண்ணி வந்த போது அவளக்குப் பிறந்த வீட்டில் அதுமாதிரி கடுக்கன் போட்டு அனுப்பியிருந்தார்கள்.

அந்தச் சயமத்தில் முருகேசனுக்குச் சீட்டாட்டப் பழக்கமிருந்தது. அவள் ஊருக்குப் போன தருணம் பார்த்து அவற்றை விற்று சீட்டாடித் தொலைத்து விட்டாள்.

அன்றைக்கு பிடித்தது சனி!

அதன்பிறகு அவன் சூதாட்டத்தையே மறந்துவிட்டாலும் கூட அவள் கடுக்கனை மறப்பதாக இல்லை. தினம் நான்கு முறையாவது கடுக்கனைச் சொல்லி காமாட்சி இடிப்பாள். அவளுடைய இடிதாங்காமல், என்ன செய்யலாம் என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த போதுதான் தபால் ஒன்றின் மூலம் வழி பிறந்தது. ஒருவாரம் முன்பு.

மழைநாள் ஒன்றில் வழக்கம்போல தபால்களை அடுக்கி வைத்த போது கவர் ஒன்று நனைந்து, அதற்குள் பணநோட்டு இருப்பது தெரிந்தது. பணத்தைப் பார்த்ததும் அவனது முகம் மலர்ந்தது. அவசரமாய் எடுத்து எண்ணி பார்த்தான். மூன்று ஐநூறு ரூபாய் நோட்டுக்கள்!

பணத்தை கவருக்குள் வைத்து அனுப்புவது சட்டப்படி குற்றம்! இப்படி அனுப்பும் பணத்திற்கு காரென்டியும் இல்லை. யாரும என் பணம் களவு போயிற்று என்று கம்ப்ளெயின்ட் பண்ணவும் முடியாது. பணம் சரியாய் போய் சேர்ந்தால் பிழைத்தார்கள். இல்லாவிட்டால் திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி பேசாமல் இருக்க வேண்டியதுதான்!

முருகேசனுக்கு அதை பார்க்கப் பார்க்க கடுட்கன் ஆசை எழுந்தது. பேசாமல் இதை எடுத்து கடுக்கன் வாங்கிக் கொடுத்து விட்டால் என்ன? பெண்டாட்டி எனும் ராட்சஷியின் நச்சரிப்பிலிருந்து தப்பிக்கலாமே!

கவரில் இருந்த விலாசத்தைப் பார்த்தான். ராஜம்மாள், குழிவளை, குமரி மாவட்டம் என்றிருந்தது. ஃப்ரம் அட்ரஸில் – “ராஜேந்திரன், பாம்பே”!

முருகேசனுக்கு அந்த ராஜம்மாளையும் தெரியும். ராஜேந்திரனையும் தெரியும். ஆனால் நெருக்கமேல்லாமில்லை. ஓகோ…. மணியார்டர் சார்ஜை எப்போப் பார்த்தாலும் “எனக்கு கவர் வந்திருக்காதம்பி…?” என்று கேட்கிறாளா…?

இன்று கவர் வந்திருக்கிறது. யாருக்கு தெரியப் போகிறது…? அமுக்கு! அப்படிச் செய்வது தவறு என்று உள் மனது எச்சரித்தாலும் கூட, பச்சைக் கல் கடுக்கன் அவனை உசுப்பிற்று.

பணத்தை எடுத்து வைத்துக கொண்டு, “அன்புள்ள அம்மாவிற்கு இத்துடன் நீ கேட்டப்படி பணம் அனுப்பியுள்ளேன். பெற்றுக் கொண்டு கடிதம் போடவும்” என்று எழுதப்பட்டிருந்த கையளவு பேப்பரைக் கிழித்து எறிந்தான்.

பிறகு அத்தோடு கொஞ்சம் பணம் புரட்டி கடுக்கன் வாங்கிப் போன போது காமாட்சி வாயிறென மலர்ந்தாள். பற்பசைக்குப் போஸ் கொடுத்தாள்.

“ஏதுங்க பணம்…?”

“அதை பற்றி உனக்கேன்! ஒரு வருஷமா சீட்டு கட்டினேன்” என்று கதை கட்டினேன்.

“நல்லாயிருக்கா.”

“பிராமாதங்க!” என்று அகமும் தடித்த புறமும் குளிர்ந்தாள். அப்பாடா… நச்சரிப்பு விட்டது என்று அவனும் சந்தோஷப்பட்டான். ஆனால் அந்த ராஜம்மாளைப் பார்க்கும் போதெல்லாம் உறுத்தல் எழும். நாலு வீடு தாண்டினால் எல்லாம் மறந்து போகும்.

இப்போதும் கூட அப்படிதான். காமாட்சி போனதும் கடுக்கன் நினைவுகளும் மறந்து போயின. அதற்கள் மழை விட்டிருக்க அவன் சைக்கிளில் ஏறி கிளம்பினான்.

மேலத்தெருவின் கோடிவீடு.

ராஜம்மாள் கொல்… கொல்லென இருமிக் கொண்டு. கர்ர்… கர்ரென இழுத்துக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்தாள். அவளுடைய உடலெல்லாம் தளர்ந்து போய், தோட்ல சுருங்கியிருந்தது. பார்வை மங்கிக் கொண்டு வந்தது.

அவளுக்கு அறுபது வயதிற்கு மேலாகிறது. வயதிற்கேற்ற முதிர்ச்சியும் தளர்ச்சியும் அவளைப் பலகீன படுத்தியிருந்தது. வீட்டில் கவனிக்க ஆளில்லை சரியான ஆகாரமும் இல்லை. போதும் போதாததிற்கு கொஞ்சநாட்களாய் ஆஸ்துமா தொந்திரவு வேறு.

இழுப்பும் இருமலும் ஆரும்பித்த சமயத்திலேயே டாக்டரிடம் போயிருந்தால் ஓரளவிற்கு கண்ட்ரோல் பண்ணியிருக்கலாம். இருமல் என்ன செய்துவிடும் என்று அவள் அலட்சியமாயிருந்து விட்டதில் நோய் முற்றிவிட்டது. அதன்பிறகு அக்கம்பக்கத்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் காட்டினர்.

நோய் முற்றிவிட்டது. தீவிர சிகிச்சையளிக்க வேண்டும் என் பெட்டில் இருக்க வேண்டும் என்றும் அதற்கக் குறைந்தது ஆயிரம் ரூபாய் ஆகும் என்றும் டவுனில் சொல்லிவிட்டார்கள்.

“அக்கம் பக்கத்தவர்கள் “நாங்கள் பணம் தருகிறோம். நீ போய் பெட்டில் சேர்ந்து விடு என்று சொன்னதைக் கூட அவள் கேட்கவில்லை. பிடிவாதம் பிடித்தாள்.

“ஆஸ்பத்திரியில் போய் யாரால் இருக்க முடியும்… என்னை விடுங்க!”

“கிழவி! நோயோட இங்கிருந்தால் உன்னை யார் கவனிச்சுக்குவா…? பேசாமல் சொல்றதைக் கேள்!”

அவள் கேட்பதாக இல்லை. “பெட்டில் அட்மிட்டாகணும்னா அதை நான் பார்த்துக கொள்கிறேன். என்னை கவனிக்கவும் எனக்குப் பணம் அனுப்பவும் என் மகன் இருக்கான்” என்று பிடிவாதமாய் மறுத்துவிட்டாள்.

அதன்பிறகு ஊர்க்காரர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவளுக்கு எதிரி அவளுடைய பிடிவாதம் தான். ஆரம்ப நாளிலிருந்தே அவள் அப்படித்தான். அடுத்தவர்கள் சொல்வதையே காதில் வாங்கிக் கொள்ளமாட்டாள். அவளுடைய நோக்கப்படித்தான் நடப்பாள். அவளுடைய குணமறிந்திருந்ததால் யாரும் அவளை எந்த காரியத்திற்காகவும் வற்புறுத்துவதில்லை.

அவளுடைய மகன் ராஜேந்திரன் கூட அப்படிதான்.

அவன் படித்து முடித்து இங்கே வேலை கிடைக்காமல் பாம்பேக்குப் போய் வேலை தேடிக் கொண்டதும் அவளைத் தன்னடன் வந்து விடும்படி அழைத்தான். ஆனால் அவள் மறுத்துவிட்டாள்.

“புரியாத ஊரிலும் புரியாத பாஷையிலும் என்னால் கர்லந்தள்ள முடியாது!”

“புரியாத பாஷைன்னா என்னம்மா… அதான் நானிருக்கேனே… ஊரில் ஒத்தாசைக்கு ஆளில்லாமல் நீ தனியாய் என்ன பண்ணுவாய்?”

“எனக்கெதுக்குடா ஒத்தாசை? என் தேவைகளைக் கவனிச்சுக்க துப்பில்லாத அளவுக்கு நான் என்ன இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துகிட்டா இருக்கேன்? உன் வேலையைப் பாரு…!”

“இருந்தாலும்மா… எனக்கு மனசு கேட்கலே. மத்தவங்க என்னை என்ன சொல்வாங்க… பெத்தத் தாயை விட்டுட்டு இவன் சொகுசா இருக்கான்னு புரளி பேசமாட்டாங்களா?”

“பேசினா பேசட்டும், பேசறவங்க நாக்கு அழிஞ்சுப் போகும்! நீ கிளம்பு! நான் இந்த வீட்டையும், ஊரையும் விட்டு எங்கும் வருவதாயில்லை. செத்தாலும் இந்த வீட்டில்தான் சாவேன்!”

அதற்கு மேல் ராஜேந்திரனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மனபாரத்துடன் பாம்பே போய்விட்டான். ராஜம்மா இன்னொரு விஷயத்திலும் கூட பிடிவாதம் பிடித்தாள். அது-

மணியார்டர். அவன் மணியார்டர் அனுப்ப, இரண்டு மறை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டாள். ஏம்மா இப்படி பண்றே என்று நேரில் வந்தபோது கேட்டான்.

“எதுக்கு மணியார்டர்? எனக்கு நீ சம்பாதிச்ச பணம்தான் வேணும்!”

“நான் சம்பாதிச்ச பணத்தை தாம்மா உனக்கு அனுப்பறேன்!”

“நீ சம்பாதிச்ச பணம்தான். ஆனா தபால்காரனில்லே கொண்டு வந்து கொடுக்கிறான். நான் என்ன அனாதையா இல்லை வக்கில்ல்தவளா…?

“நீ சம்பாதிச்சு கொண்டு வந்து என் கைல கொடுக்கணும்.”

“அது எப்படிம்மா முடியும்? மாசம் மாசம் இதுக்காக நான் ஊருக்குப் வந்துப போக முடியுமா.?”

“அப்போ வரும்போது கொடு!”

“இடையில் தேவைப்பட்டால் நீ என்ன பண்ணுவாய்? பேசாமல் உன் பெயரில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி நான் பேங்கிற்கே அனுப்பிடறேன். நீ வேண்டும் என்கிற போது போய் எடுத்துக் கொள்கிறாயா….?”

அவள் பிடிவாதமாய் மறுத்துவிட்டாள். “இல்லை, எனக்கு நீ வாங்கின சம்பளம், அதே பணம் – அதே நோட்டுக்கள்தான் வேண்டும். உன் சம்பளத்தை வாங்கும் போது எனக்கு அதுல ஒரு திருப்திடா. என்ன சொல்கிறாய் நீ. என் ஆசையை நிறைவேற்றுவாயா…?”

அவனால் அவளைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. பைத்தியக்காரத்தனம் என்று நினைத்தான். தாயின் மேல் அவனுக்குக் கோபம் வந்தது. பிடிவாதத்திற்கும் ஒரு அளவு வேண்டும். என் சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து கொடுத்துவிட்டால் அதில் என்ன இழவு திருப்தி வந்துவிடுமோ தெரியவில்லை!

“உனக்குத் திருப்தி வேணும்னா, நான் அங்கே வேலையை விட்டுட்டு ங்கே வரவேண்டியதுதான்!”

“வந்திரு. சம்பாதிக்காட்டியும் உன்துணை எனக்குக் கிடைக்குமே!”

கடைசியில் வேலையையும் விடமுடீயாமல் அவளையும் திருப்திபடுத்தியாக வேண்டிய நிர்பந்த்தில்தான் அவனுக்கு இந்த யோசனை உதித்தது. அம்ம்விற்கு நம் பணம், நம் சம்பள பணம் தானே வேண்டும். பேசாமல் அதே நோட்டுக்களை கவருக்குள் வைத்து அனுப்பிவிட்டால் என்ன…?

அப்படியே அனுப்ப ஆரம்பித்திருந்தாள். அவற்றை பெறும்போது ராஜாம்மாவிற்கு ஒரு சந்தோஷம். அப்பணத்தை மகன் நேரிலேயே வந்து தன்னிடம் தருவது போல பாவித்துக் கண்களில் ஒற்றிக் கொள்வாள்.

இரண்டு வாரங்கள் முன்பு ஆஸ்பத்திரி செலவிற்காக ஆயிரம் அனுப்பும்படி மகனிற்கு எழுதியிருந்தாள். அவன் – அனுப்பி விடுவான் எனத் தினம் வாசலில் வந்து காத்துக கொண்டிருக்கிறாள். பணம் இன்று வந்துவிடும், இதோ இன்று என தினம் எதிர்பார்ப்பு. ஆனால் எப்படி வரும்?

அதைத்தான் முருகேசன் அடித்துவிட்டானே! அவளும் சளைக்காமல் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

இன்றும் முருகேசன் சைக்கிளில் போக, “தபால் தம்பி! எனக்கு கவர் வந்ததா..?”

“இல்லை கிழவி” என்று சொல்லிவிட்டு அவன் அவளுடைய முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் – பார்க்கும் தைரியமில்லாமல் பறந்துப் போனான். இப்படிதான் தினம் தினம் ஓடி ஒளிகிறான்.

ஒருவாரத்திற்க பிறகு ஒரு நாள்.

வழக்கம் போல முருகேசன் தபால் பட்டுவாடாவிற்கு அந்தத் தெருவில் நுழைந்தபோது ராஜம்மாவின் வீட்டில் ஒரே கும்பல்! விசாரித்தபோது ஆஸ்துமா முற்றி அவள் இறந்துப்போனாள் என்றால்கள். அவனுக்குத் தூக்கிப் போட்டது.

அவனுக்கு மூச்சடைத்தது. துக்கம் நெஞ்சைப் பிசைந்தது. அவளுக்கு நோய் முற்றிவிட்டதா… அதனால்தான் இறந்து போனாளா…? எல்லாவற்றிற்கும் காரணம் நாம்தான். நம்முடைய திருட்டுத்தனம்தான்!

அவளுடைய மகன் ஆஸ்பத்திரிச் செலவிற்காக அனுப்பின பணத்தைத் தான் நாம் களவாடி விட்டோமோ…? அந்தப் பணத்தை மட்டும் நாம் எடுக்காமலிருந்தால் அவளுடைய உயிர் போயிருக்காதோ..? நாம் பாவி! மன்னிப்பே பெற முடியாத பாவி! என்ன காரியம் செய்துவிட்டோம்?

அவன் தனிமையில் போய் அழுதான். மனைவியின் பச்சைக்கல் கடுக்கனைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அவன் மேலேயே வெறுப்பு வரும். நாம் செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்தாக வேண்டும். எப்படி. எப்படி? அவன் மன நிம்மதியின்றி அலைந்தார்கள்.

கிழவியின் மரணச் செய்தி ராஜேந்திரனக்குப் போனில் தெரிவிக்கப்பட்டு, விமானம் பிடித்து அரக்கப் பரக்க அவன் வந்தபோது, கூடவே இன்னொரு சோக செய்தியையும் கொண்டு வந்தான். திருவனந்தபுரம் வந்ததும் அவனுடைய பெட்டி, அதில் வைக்கப்பட்டிருட்நத பணம், உடைகள் எல்லாமே பறிபோயிற்றாம். யாரோ அடித்துக் கொண்டு போய்விட்டார்களாம்.

திருவனந்தபுரத்திலிருந்து டாக்ஸி பிடித்து வந்த சார்ஜைக் வட கொடுக்க முடியாமல் அவன் சங்கடப்பட்டான். பணத்திற்காக என்ன பண்றது… என யோசித்த வேளையில், அம்மா போன துக்கமும். டாக்ஸிகாரனின் கெடுனிடியும் அவனை தளர வைத்தது. விபரம் அறிந்த முருகேசன் ஓடிப்போய் பீரோவில் இருந்த அந்தப் பச்சைக்கல் கடுக்கனை எடுத்து வந்தான்.

அடகுக் கடையில் விற்றதில் இரண்டாயிரம் தேறிற்று. அதை ராஜேந்திரனிடம் கொடுத்து, “இந்தாப்பா இதை வைத்துக் கொண்டு டாக்ஸியை அனுப்பு. அம்மாவின் காரியங்களையும் நல்லபடியாய நடத்து!” என்றான்.

அதை வாங்கும்போது ராஜேந்திரனின் கண்கள் நனைந்துப போயின. “உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே சார். நீங்க செஞ்ச உதவியை நான் ஆயுசுக்கும் மறக்க மாட்டேன். பாம்பே போன உடனே உங்க பணத்தை திருப்பி அனுப்பிடறேன் சார்” என்று உள்ளம் உருகினான்.

“வேண்டாம்ப்பா. நீ திருப்பி அனுப்ப வேண்டாம். இது என்னோட பணமில்லை. உன்னோடதுதான். நீ அனுப்பினதுதான். இது உனக்கு சொந்தமானதுதான். நீ அனுப்பத் தேவையில்லை. அப்படியே அனுப்பினாலும் கூட நான் வாங்கிக் கொள்ள மாட்டேன். திருப்பிவிடுவேன்!

முருகேசன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

அவனுடைய மனபாரமும உறுத்தலும கொஞ்சம் குறைந்த மாடிதரி இருந்தது. இருந்தாலும்… ராஜேந்திரன் அனுப்பின பணத்தை வட்டிபோட்டு அவனிடம் தந்துவிட்டோம். ஆனால் அவனுடைய தாயை…? அவன் உருகிப் போனான்.

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *