தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2015 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250 பெறும் சிறுகதை
கனகப்பிரியா திருமண மண்டபம் நிரஞ்சன் – அர்ச்சனா வரவேற்பு நிகழ்ச்சியின் மூலம் தன்னை அத்தனை சிறப்பாய் அலங்கரித்துக் கொண்டிருந்தது. மண்டப முகப்பில் இருபுறமும் குலை தள்ளிய வாழை மரம் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் பெரிதாய் இருந்தது. அந்தச் சாலை முழுதும் மணமக்களை வாழ்த்தும் விதவிதமான வாழ்த்து கணப்புத் திரைகள் (பேனர்கள்). திரை நட்சத்திரங்களுக்கே சவால்விடும் வித்தியாசக் கோணங்களில் மணமக்கள் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
வாயிலில் வரவேற்பு பொம்மைகள் பன்னீர் தூவும் தத்தம் பணிகளைச் செவ்வனே துவங்கிவிட்டிருந்தன. முகப்பிலிருந்தே சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு இரு பக்க நாற்காலிகளுக்கு இடையே வகிடுபோல் நீண்டு மணமக்கள் அறை வரை பரவியிருந்தது. சரவிளக்குகளின் ஒளி வெள்ளத்தில் ஜெகஜோதியாய் ஜொலித்தது மண்டபம்.
நிறுத்தியிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளில் தாம் படம் பிடிக்கும் காட்சிகளைக் கொண்டு சேர்ப்பதில் பழியாய்க் கிடந்தார்கள் புகைப்பட வல்லுநர்கள். மேடை அலங்காரம் நிறைவு பெற்று கண்களை வசீகரித்தது. வண்ண வண்ண மலர்கள் கொண்டு நவீனமாக்கப்பட்டிருந்தது மேடை.
பூக்களால் மணமக்களின் பெயர்கள் வடிவமைக்கப்பட்ட பதாகைகளைத் தாண்டி உள்ளே நுழைந்தது அந்தச் சிறிய சரக்குந்து (மினி லாரி).
மண்டப வாசலில் முதலாளி சந்திரபோஸ் இரண்டு தொழிலாளிகளுக்கு ஏகமாய் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். வண்டி மெல்ல ஊர்ந்து படிக்கட்டின் முன் நின்றது. கதவை விசிறியடித்தபடி இறங்கினான் அன்பரசன்.
“”எவ்வளவு நேரம்டா வந்து சேர்றதுக்கு?” அன்பரசனைப் பார்த்த மாத்திரத்தில் முதலாளி கோபமானார்.
“”ஐயா… மெய்யூர் கூட்டு ரோடாண்ட ஒரு விபத்து. எந்த வண்டியையும் விடல. ஒரு மணி நேரம் அங்கேயே வீணாப் போயிடுச்சுங்க”
“”சரி சரி… கல்யாண வீட்டுல எதுக்குடா இந்தப் பேச்சு. சீக்கிரம் மடமடன்னு வண்டியில இருக்குறத எல்லாம் இறக்கு”.
“”சரிங்க”
அன்பரசன் ஓட்டமும் நடையுமாக வண்டியிலிருந்த 600-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மண்டப நுழைவாயிலின் ஓரமாக அடுக்கி முடித்தான்.
“”டேய் அன்பு… சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா?”
“”ஆங்… இருக்குங்கய்யா”
“”இங்க பாரு. மணி இப்ப அஞ்சர ஆகுது. போய் முகம் கழுவினு சட்டைய மாத்தினு அஞ்சு நிமிஷத்துக்குள்ள வந்து நின்னுடு. இது கல்யாணம் முடிஞ்சு நடக்குற வரவேற்பு நிகழ்ச்சி. அதால எந்தச் சடங்கு சம்பிரதாயமும் இல்ல. சீக்கிரம் ஆரம்பிச்சு சீக்கிரம் முடிஞ்சிடும். ஆறு மணியிலருந்தே ஜனங்க வந்துடுவாங்க. ஒவ்வொருத்தரும் போகும்போது இதோ அங்க முனுசாமிகிட்ட தேங்காய் பை தாம்பூலம் வாங்கினு நேரா இப்படி வருவாங்க. நீ அவங்களுக்கு மரக்கன்னு வெச்ச பசுமை தாம்பூலத்த கொடுக்கணும். ஒருத்தருகூட தவறக்கூடாது. புரியுதா?”
“”சரிங்க முதலாளி”
“”அப்புறம் முக்கியமான விஷயம். இங்க வர்றவங்க எல்லாம் பெரிய பெரிய தலைங்க. காக்கிரி போக்கிரினு விட்டேத்தியா கைய பைய வீசக்கூடாது. அவங்களுக்கு எல்லாம் அடக்கமா பவ்யமா தாம்பூலத்த கொடுக்கணும். வர்ற பெரியவங்க மொத்த பேருக்கும் குடு. ஆனா சின்னப் பசங்களுக்கு குடுக்காத, என்ன?”
ஒரு மாதிரியாக தலையாட்டினான் அன்பு.
“”முதலாளி… வர்றவங்க குழந்தைக்கும் கொடுன்னு சொன்னா என்ன பண்ணட்டும்?”
“”பெரியவங்களுக்கு மட்டும்தான்னு நாசூக்கா சொல்லுடா. சீக்கிரம் வீட்டுக்கு போவோம்னு நீ பாட்டுக்கு ஆரம்பத்துலயே அடிச்சி விட்டுட்டுக் கிளம்பிடாத. எத்தன பெரியவங்க வந்தாங்கன்னு சாப்பாட்டு கூடத்துலயே எனக்கு கணக்குச் சொல்ல ஆள் இருக்கு. அப்புறம் நீதான் ஈடு கொடுக்கணும், பாத்துக்க.”
எவ்வளவு பெரிய பணக்காரனாய் இருந்தாலும் காசு விஷயத்தில் கறார் பேர்வழி அவன் முதலாளி.
இப்படிப்பட்ட வேலைகளை முதலாளி ஒப்படைக்கும்போது உள்ளுக்குள் கொஞ்சம் உதறல்தான் அன்புவுக்கு. இதுபோல்தான் சந்திரபோஸின் மூத்த மகன் வரவேற்பு நிகழ்ச்சியிலும் இவனுக்கு சமையலறை மேற்பார்வை பணி வழங்கப்பட்டது. இறுதியில் முந்திரி காணவில்லை, பாதாம் போதவில்லை என பாராட்டுப் பத்திரம் வாசித்தார்கள். “”மேற்பார்வை பார்க்காம எங்க திரிஞ்சிட்டு கிடந்த?” என கொள்ளை வசவுகளை வாங்க வேண்டி வந்தது.
இது இரண்டாவது மகனின் வரவேற்பு நிகழ்ச்சி. இருவருக்கும் திருப்பதியில் முக்கிய சொந்தங்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. வரவேற்பு மட்டும் மிக பிரம்மாண்டமாக ஊரையே வளைத்து பத்திரிகை வைத்திருந்தார்.
மரக்கன்றுகளை தனித்தனியே நெகிழிப்பையில் போட்டு முடித்து தனக்கெதிரே பெரிய மேஜையை இருத்தி தயாரானான் அன்பு. மணி 6.10 எனக் காட்டியது. உள்ளே இன்னிசைக் கச்சேரி தொடங்க இருப்பதற்கான ஆரவாரக் குரல்பரிசோதனைகள். தனக்கு இடப்புறம் இருந்த சிறுவனை அப்போதுதான் அன்பு கவனித்தான். மரக்கன்றுகளை தனது ஆசை பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தால் அலுவலுக்கு வந்தவன்போல் தெரியவில்லை. சுமாரான சட்டை. சுருங்கிப்போன நிஜார். உடுப்பு சுத்தமாக பொருந்தவில்லை. ஆனால் தெளிவான முகம், குறுகுறுக்கும் பார்வை, வசீகரச் சிரிப்பு.
“”என்னப்பா… என்ன ரொம்ப நேரமா இங்கயே பாத்துட்டிருக்குற?”
“”அண்ணே… இவ்ளோ செடிங்க வெச்சிருக்கீங்களே… எதுக்கு?”
வழக்கமாக அவன் வயதுப் பிள்ளைகள் பொதுவான ஆங்கில வார்த்தை சொல்லியே விளிப்பார்கள். இவன் அண்ணா என்று அன்புவை அழைத்ததும் ஏதோ ஒரு பாசம் ஒட்டிக் கொண்டுவிட்டது அவன் மேல்.
“”இதுவா… இதெல்லாம் இந்த அலுவலுக்கு வர்றவங்களுக்கு கொடுக்க வெச்சிருக்க பசுமை தாம்பூலம்”.
“”ஓ… இந்த நல்ல நாள அவங்க ஞாபகம் வெச்சிட்டபடி அவங்க வீட்ல இந்த மரக்கன்ன குழந்தையா வளக்க ஆரம்பிக்கணும். அது தான. ஆமாண்ணே… உங்க முதலாளி பெரிய பணக்காரரா?”
“”பின்னே… வருமான வரியே லட்ச லட்சமாக் கட்டுவாரு”.
“”அப்படியா… அப்படீன்னா அவர சந்தன மரம் வளக்கச் சொல்லுங்க. சந்தன மரத்து மூலமா கிடைக்குற காசுக்கு வருமான வரி, விற்பனை வரின்னு எதுவும் கிடையாது”.
“”அட… விஷயம் தெரிந்த வெங்கடாஜலபதியாத்தான் இருக்க”.
“”அண்ணே… உங்க முதலாளி சுற்றுச்
சூழல் மேல ரொம்ப அக்கறை கொண்டவர் போலருக்கே…”
…ம்க்கும், சுற்றுச்சூழலுக்கு செய்யுற சேவையா? அதுவா நம்ம முதலாளியோட எண்ணம்? பகட்டு, பந்தா, அலுவலுக்கு வருபவர்கள் தன்னைப்பற்றி பெருமையாகப் பேச வேண்டும். அதுக்குத் தான ஐயா இதையெல்லாம் இறக்கி இருக்காரு. மனஓட்டம் கலைந்து மெல்ல சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தான் அன்பு.
“”அது சரி, நீ யாரு… என்ன படிக்குற?”
“”என் பேரு கடம்பன். மஞ்சக்கடம்பு மரத்தடியில பொறந்ததால எனக்கு கடம்பானு பேர் வெச்சதா எங்க நைனா சொல்லுவாரு. நாங்க வனத்துலருந்து புதுசா இந்த ஊருக்கு வந்திருக்கோம். அங்க நாங்க மரத்துலருந்து கல்பாசம் சேகரிச்சு விப்போம். எங்க நைனா போன மேல எங்கம்மா இங்க கூட்டியாந்துடுச்சி”.
“”சரி… இங்க என்ன பண்ணிட்டிருக்க. எப்படி உள்ள வந்த?”
“”அதுவா… எங்கம்மா இங்க சமையல் வேல பாக்க வந்திருக்கு. உள்ளாற வேக்காடா இருக்கும். நீ வெளிய போய் விளையாடு ராசான்னு சொல்லுச்சு. அதான் என் வண்டிய இங்க ஓட்டிட்டு வந்தேன்”.
“”சரி சரி… இங்க எல்லாரும் வந்துட்டும் போயிட்டும் இருப்பாங்க. நீ கொஞ்சம் ஓரமா ஒதுங்கி நில்லு தம்பி”.
“”அண்ணே… இங்க பூங்கன்னு, பழங்கன்னு எல்லாங் கலந்திருக்குல்லண்ணே…”
“”அப்படியா… எனக்கென்னா தெரியும். ஐயா சொன்ன இடத்துக்கு போனேன். அங்க கொடுத்தாங்க. அள்ளிப் போட்டுனு வந்துட்டேன். அதுல என்னென்ன இருக்குனு தெரியலியே. அதெல்லாம் உனக்கு தெரியுமாடா?”
“”ஏன் தெரியாது? இதோ இது மகிழம், இது மந்தாரை, அது செண்பகம். இங்க இருக்கறது ஈட்டி, ஆலம், அரசு, வேங்கை. அதோ அது பக்கத்துல குமிழ், புங்கன், அங்க சுவத்து பக்கம் சாஞ்சிருக்குறதெல்லாம் சிசு இருவடி, காட்டுவாகை, பூவரசு.
இந்த கரும்பச்ச நிற பையில கிடக்குறதெல்லாம் நாவல், எலுமிச்ச, மாதுளை, நெல்லி, கொய்யா, சப்போட்டா. கொஞ்சம் தென்னம்பிள்ளயும் கிடக்கு. இதுல சேத்திக்காம ஒன்னு ரெண்டு இருக்கு. அது பேரு எனக்கு நெனப்பில்ல”.
ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் கடம்பன்.
“”அடேயப்பா… உனக்கென்ன வயசாகுது. இத்தனையும் தெரிஞ்சு வச்சிருக்க…”
“”இதென்ன பெரிய விஷயம்… இறுகிப் போன மண்ணை களைய எங்க நைனாவ கூட்டினு போக எங்க குடிசை தேடி வருவாங்க. எங்க நைனா தொழுவுரம், மண்புழு உரம், காளான் கழிவுனு தொடர்ச்சியா கொட்டி, கொத்தி பதம் பண்ணித் தருவாரு. எங்கம்மா தொங்கும் தோட்டம் அமைச்சு தருவாங்க”.
“”அப்படீன்னா…”
“”அதான்ணே, இந்த தென்ன மட்டைங்கள இட்டு, நார் கழிவு, மக்குற இலை குப்ப, மண்புழு உரம் போட்டு பெரிய பெரிய வீட்ட எல்லாம் பூத்தொட்டி தொங்க விடுறது”.
“”பெரிய ஆளுதான்டா நீ”
அந்த சிறுவனிடம் பேசிக் கொண்டிருப்பதையே கோக்கு மாக்காக பார்த்துக் கொண்டிருந்தார்கள் சக பணியாட்கள். பின் ஏதாவது காணவில்லை என்றால் தன்னையும் அதனுடன் சேர்த்து கோத்துவிட்டு போகத் தயாராய் இருப்பார்கள். உள்ளுக்குள் விழிப்புணர்வு எச்சரிக்கை மணி அடிக்க அவனை அவ்விடத்திலிருந்து அனுப்புவதிலேயே குறியாய் இருந்தான். சிறுவன் அங்கிருந்து நகர்வதாய் இல்லை.
“”கடம்பா… ரொம்ப நேரம் ஆயிடுச்சு பாரு. உங்கம்மா தேடப் போறாங்க. நீ போயிட்டு வா”
“”அதெல்லாம் ஒண்ணும் தேட மாட்டாங்க. அண்ணே எனக்கு ரகத்துல ஒவ்வொரு செடி தர்றீங்களா?”
எது நிகழக்கூடாது என அவனை விரட்ட முயற்சித்தானோ அது நடந்துவிட்டது.
“”தம்பி… நீ எத்தன வகைய அடுக்குன. அத்தன வகையில ஒன்ன குடுத்தாலும் இந்த இடமே விரிச்சோன்னாயிடும். இதெல்லாம் இங்க அலுவலுக்கு வந்து போற ஜனங்களுக்கு கொடுக்கறதுக்கு. ஆளுக்கு ஒன்னுதான். அதுவும் பெரியவங்களுக்கு மட்டும்தான். உன்ன மாதிரி இருக்குற சின்னப் பசங்களுக்கெல்லாம் கிடையாது. அதோ அங்க வராரு பாரு பெரிய கர பட்டு வேட்டி கட்டிக்கினு… அவரு என்னை ஒழுங்கா கொடுக்கச் சொல்லி விட்டுட்டு போயிருக்காரு. உனக்கு நான் அத்தனையையும் கொடுத்தேன்னு வச்சுக்க… என்னை வேலைய விட்டே தூக்கிடுவாரு. உங்கூட பேசிட்டிருக்கறத பாத்தாரு… அவ்வளவுதான். சரியா வேலை செய்யலன்னு என்னை கண்ட மேனிக்கு திட்டுவாரு. நீ கிளம்புடா தம்பி.”
“”அண்ணே… நாங்களும் இந்தக் கல்யாணத்துக்குத்தானே வந்திருக்கோம். எனக்கில்லாட்டியும் எங்கம்மாவோட கணக்கா எனக்கு குடுங்கண்ணே”.
ஒரே ஒரு மரக்கன்றுக்கு தற்போது இறங்கி வந்தான். அதற்கு மேலும் அவனைப் பேசித் தட்டிக் கழிக்க அன்பரசனால் முடியவில்லை.
“”உனக்குக் கண்டிப்பா ஒரு தாம்பூலம் தரேன். இப்ப நீ கிளம்பு. எங்க முதலாளி வர்றாரு”.
கடம்பன் அந்த இடத்தை விட்டு நகரவும் சந்திரபோஸ் அவ்விடம் வரவும் சரியாய் இருந்தது.
“”என்ன அன்பு தயாராயிட்டியா? ஜனங்க வர ஆரம்பிச்சுட்டாங்க. நான் கொஞ்ச நேரம் வாசல்ல இருந்துட்டு உள்ள போயிடுவேன். ஒழுங்கா எல்லாரையும் கவனிச்சு அனுப்பு. சரி தான…”
“சரி’ என்பதுபோல் தலையாட்டினான் அன்பு. தேங்காய் பை தாம்பூலம் கொடுக்கும் முனுசாமியிடமும் சென்று சில உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு நகர்ந்தார் முதலாளி.
வண்ண வண்ணப் பட்டுப்புடவைகளில் பெண்கள் தேவதைகளாய் உள்ளே நுழைந்தார்கள். அரை மணி நேரத்திலெல்லாம் மண்டபம் தன் முழு கொள்ளளவை எட்டியது. எங்கு திரும்பினும் பேச்சு சத்தம், சிரிப்பொலி, சேம லாப விசாரிப்பு என களை கட்டியிருந்தது. கச்சேரி எழுப்பிய பேரொலியை மீறி சிலர் தொண்டை கிழியக்கிழியக் கத்திக் கொண்டிருந்தனர்.
முதல் பந்தி முடிந்து கூட்டம் வரத் தொடங்கியது. வியர்த்து விறுவிறுக்க சொன்ன வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தான். இப்போதும் அதே இடப்புறம் வந்து சேர்ந்திருந்தான் கடம்பன்.
“”டேய் தம்பி… உனக்குத்தான் நான் கொடுக்குறேன்னு சொன்னேன்ல. திரும்பத் திரும்ப ஏன்டா வர்ற? இப்பத்தான் ஒரு பந்தி ஆளுங்களே போறாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வாடா. உங்கையில இந்தத் தாம்பூலம் இருக்கறத பாத்தா என்னை ஏதாவது பேசுவாருடா எங்க முதலாளி”.
“”அண்ணே… நான் நல்லா வளப்பேன்ணே. மரம்னா நான் சோறு தண்ணி கூட வேணாம்னு கிடப்பேன். நம்பி கொடுங்கண்ணே”.
அவனை விரட்ட வேண்டியதாக இருந்தது. அன்புவுக்கு அவனைப் பார்க்கப் பாவமாகவும் இருந்தது. திரும்பிப் பார்த்தபடியே ஓடிப் போனான். ஆனாலும் பத்து நிமிட இடைவெளியில் தன்னையும் இந்த மரக்கன்றுகளையும் பார்வையால் உள்வாங்கியபடியே இந்தப் பக்கம் வந்து போய்க்கொண்டு இருக்கிறான் என்பதையும் அன்பு கவனிக்கத் தவறவில்லை.
பசுமைத் தாம்பூலம் வேக வேகமாக தீர்ந்து கொண்டிருந்தது. மண்டப ஜனத்திரளும் 9.30 மணிவாக்கில் வடியத் தொடங்கியிருந்தது. ஓர் ஐம்பது கன்றுகளே மீதம் இருந்த நிலை.
மற்றுமொருமுறை கடம்பன் அங்கு வந்து சேர்ந்தான். இம்முறை அவன் எதுவும் வினவவில்லை. அமைதியாகவே அன்புவைப் பார்த்தான்.
“”உனக்கு எதுடா வேணும். பாருடா தம்பி” என்றான் அன்பு இம்முறை.
கடம்பன் கொள்ளை மகிழ்ச்சியுடன் “”எனக்கு தென்னம்பிள்ளை வேணும்ணே. எடுத்துக்கவா” என உத்தரவு கேட்டான்.
“”எடுத்துக்கடா தம்பி” என்றான் அன்பு.
“”அண்ணே… இதுக்கு நிறைய கோழி எரு போடணும். பாத்துட்டே இருங்க. இன்னும் ஆறு வருஷத்துல காய்ச்சிடும். என் கையால கட்டிப்பிடிக்க முடியாதபடி பெருமனா ஆயிடும்” நம்பிக்கையாய் பேசினான் கடம்பன். “”அண்ணே… இன்னும் பத்து வருஷத்துல பாருங்க, வறட்சிய தாங்குற தென்னை ரகம் விளைச்சலுக்கு வந்துரும். பத்துல ஒரு நா தண்ணி பாய்ச்சுனா போதும். செழுமையா இருக்கும்”.
செடி கொடிகளைப் பற்றிப் பேசும்போது அவன் முகத்தில் அத்தனை பரவசம். அவன் மனிதப் பிறவியா மரப்பிறவியா என்னுமளவு தாவரங்களைப் பற்றிய தகவல்களைத் தந்து கொண்டே இருந்தான்.
யாருக்கோ தாம்பூலம் கொடுக்க வேண்டி முதலாளியின் மூத்த மகன் அங்கு விஜயம் செய்திருந்தான்.
“”டேய் அன்பு, என்னடா சின்ன புள்ளைங்கள எல்லாம் உள்ள விட்டுட்டு… யாரவன் …. வெளிய அனுப்பு”.
அன்பு திட்டு வாங்கி மண்டை காய்வதைப் பார்த்ததும் தானே அவ்விடத்தை விட்டு விலகி நடக்கத் தொடங்கினான் சிறுவன்.
வெறுமையாக அவன் வெளியேறுவதைப் பார்த்ததும் அன்புவுக்குத் துக்கம் திரண்டு மார்பை அடைத்தது.
மூத்த மகன் அகன்றதும் கடம்பனுக்கென்று ஒரு தாம்பூலப் பையை யார் கண்ணுக்கும் புலப்படாதவாறு தன் வலப்புற கால் பக்கவாட்டில் தனியே மேஜை மறைவில் இருத்தினான். இறுதி பத்து தாம்பூலங்களும் கொடுக்கப்பட்டு இடம் காலியாயிற்று. கடம்பனுக்காக எடுத்து வைத்த கன்றைத் தாமே நேரில் போய் கொடுத்துவிடலாம் என கைகளில் எடுக்க யத்தனித்த வேளை… வந்து சேர்ந்தார் முதலாளி.
சட்டமன்ற உறுப்பினர் மணிவாசகத்தின் மனைவியை வழியனுப்ப வந்திருந்தார்.
“”மன்னிக்கணும்… ரொம்ப தாமதமாயிடுச்சு. அவரால வர முடியலன்னு சொல்லிட சொன்னாரு. வரேங்க…” என நகர்ந்தாள் அந்த அம்மாள்.
“”சரிங்கம்மா… நீங்க வந்ததே அவரும் வந்த மாதிரிதான்”.
தேங்காய்ப்பை தாம்பூலம் கொடுக்கப்பட்டு அன்புவின் முன்பு வந்தார்.
“”டேய்… தாம்பூலம் இல்ல?”
“”காலியாயிடுச்சு முதலாளி”
“”நல்லா பாரு. ஏதாவது இருக்கான்னு”. சொன்னதோடல்லாமல் அவரே இந்தப் பக்கம் மேஜையைத் தாண்டி பார்வையை வீசினார். மறைவில் கிடத்தப்பட்டிருந்த கடைசி மரக்கன்றை அவரே எட்டி எடுத்து அப்பெண்மணியிடம் சேர்ப்பித்தார். “உன்னைக் கவனிச்சுக்குறேன் இரு’ என்பதாய் அன்புவிடம் பலமான ஒரு முறைப்பு வேறு.
மொத்தமும் தீர்ந்து போன மேல், எதிர்திசை சந்திலிருந்து பிரவேசித்தான் கடம்பன். அவன் பார்வையை எதிர்கொள்ளும் திராணி துளியும் இல்லை அன்புவிடம். பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை. தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொண்டது. நெருங்காமல் பத்து அடி தொலைவிலேயே நின்று விட்டான் சிறுவன் யூகித்து. அங்கே நிலவிய அடர் மௌனத்தின் வலிமை அன்புவை மென்று தின்றது. தனக்கு ஏதும் இல்லை என்ற நிதர்சனம் உறுதிப்பட சிறுவனின் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது. மிடறு விழுங்கி பொருமலை அடக்கினான்.
எத்தனையோ முறை தன் பிள்ளை அழுது அடம்பிடித்தும் கேட்ட பொருளை வாங்கிக் கொடுக்காமல் இருந்திருக்கிறான் அன்பு. ஆனால் இந்தச் சிறுவனின் ஒரு துளி கண்ணீர் அவனை நிலைகுலையச் செய்தது. தன் கையாலாகாத்தனத்தை சூழ்நிலை கைதி எனச் சொல்லித் தப்பித்துக் கொள்ள மனம் கூசியது அவனுக்கு.
கடம்பன் மௌனமாக மண்டபத்தை விட்டு வெளியேறினான். மூன்று மணி நேரமாகக் கிடைக்கும் என எதிர்பார்த்து எதிர்பார்த்து ஓடி வந்த அந்தச் சிறுவன் இந்த ஏமாற்றத்தை எப்படி எதிர்கொள்வானோ என்ற பிம்பம் கரையானாகி மனதை அரித்தது அன்புவுக்கு. சொகுசு மகிழுந்தின் முன் இருக்கையில் கிடத்தப்பட்டிருந்த தாம்பூலப் பையைப் பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கே போயிருந்தாள் மணிவாசகத்தின் மனைவி.
“”டேய் சந்தானம், என்னடா நான் ஒக்கார்ற இடத்துல கொண்டாந்து இந்த தென்னம்பிள்ளைய வெச்சிருக்க? அது சரிஞ்சு போய் மண்ணெல்லாம் கொட்டினு கிடக்கு. இந்த வண்டி என்ன வெலன்னு தெரியுமா? அம்பது லட்சம். நானே தூசு படக்கூடாதுன்னு பத்துமுறை கால உதறினு ஏறுவேன். இந்தச் செடிக்கு என்ன கேடு என் இடத்துல வெச்சிருக்க. தூக்கிக் கடாசு அந்தப் பக்கம்”. ஆக்ரோஷமாக சீறினாள் அவள்.
அந்த ஓட்டுநர் வேகமாக வந்து தென்னம்பிள்ளை அடங்கிய அந்த தாம்பூலப் பையை எடுத்துப் பக்கத்தில் விசிறி அடித்தான். பின் வண்டி பறந்தது.
இரவு 11.30 மணி. மண்டபம் முழுக்க காலியாகி இருந்தது. பணியாளர்களை விரட்டி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தார் முதலாளி. முகப்பு வாசல் பக்கம் கோணிப்பைகளை அடுக்கப் போனான் அன்பு. அங்கு மணிவாசகத்தின் மனைவியால் தூக்கி அடிக்கப்பட்ட கடைசி பசுமைத் தாம்பூலம் கீழே இறைந்து கிடந்தது.
மண் ஒருபுறமாய், பதியமிட்ட செடி மறுபுறமாய் சிதறுகாயாகியிருந்த கன்றைப் பார்த்ததும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தை நினைவு வந்தது.
“”நான் நல்லா வளப்பேன் அண்ணே. மரம்னா நான் சோறு தண்ணிகூட வேணாம்னு கிடப்பேன்” என்று சொன்ன கடம்பனின் நினைவு வர கண்ணீர் கசிய விசும்பத் தொடங்கினான் அன்பரசன்.
– ஆகஸ்ட் 2015