பசுபதியின் கனவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 3, 2024
பார்வையிட்டோர்: 66 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

1

பசுபதியின் ஹ்ருதயம் வேகமாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

பசுபதியைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லாமல், ஆரம்பிக்கும்போதே அவன் ஹ்ருதயத்தைப் பற்றிக் கூறத் தொடங்கினதற்காக வாசகர்கள் கோபிக்கவேண்டாம். ஏனென்றால் சந்தர்ப்பம் அப்படிப்பட்டது. அந்தச் சமயத்தில் பசுபதியே தன்னை முற்றிலும் மறந்துபோய்விட்டானென்றால், நாம் அவனை மறப்பதில் பிசகு என்ன?

அந்த ஆற்றங்கரையில், அந்திப் பொழுதில், வெண் மணலின் இடையே ஒரு பாறையின் மேல் பசுபதி உட்கார்ந்திருந்தான். எதிர்க் கரையில் சவுக்கு மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. குளு குளு என்று காற்றடித்தபோது, அந்தச் சவுக்குத் தோப்பிலிருந்து “உய்ய்!” என்று ஓர் இனிமையான சப்தம் வரும். அந்தச் சப்தத்திலேயே அது வரையில் லயித்துப் போயிருந்தான் பசுபதி.

இப்படி அவன் தன்னந் தனியாய் உட்கார்ந் திருந்தபோதுதான், அவன் ஹ்ருதய ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தின சம்பவம் திடீரென்று நடந்தது. அவனுக்குப் பின்னால் சற்றுத் தூரத்தில் யாரோ சிரிக்கும் சப்தம் கேட்டதும் பசுபதி திடுக் கிட்டான். அது என்ன ? வீணையின் இசையா, வேய்ங்குழலின் நாதமா,கிண்கிணியின் ஓசையா?

அவன் திரும்பிப் பார்த்தபோது, பின்னால் இருப தடி தூரத்தில் ஒரு கிழவரும் ஓர் இளம் பெண்ணும் பேசிக்கொண்டு வருவதைப் பார்த்தான். கிழவர் தலையில் ‘மப்ளர்’ கட்டிக்கொண்டு, கையில் ஒரு தடிக் கம்புடன் மெல்ல நடந்து வந்தார். அவர் பக் கத்திலிருந்த பெண்ணின்மேல் பார்வையைத் திருப் பின பிறகு சுமார் இரண்டு நிமிஷநேரம் வரையில் பசுபதியின் இமைகள் மூடவில்லை. அவன் ஹ்ருதயம் பக்பக் என்று அடித்துக்கொண்டது. ‘ரதி என்றும், ஊர்வசி, மேனகை, திலோத்தமை என்றும் தேவ கன்னிகைகளின் பெயர்கள் நம் கதைகளில் வருகின் றனவே! அவர்கள் ஒவ்வொருவரும் இப்படித்தான் இருப்பார்களோ?’ என்று அவன் மனம் நினைத்தது.

கிழவரும் அந்தப் பெண்ணும், பேச்சு ஸ்வாரஸ்யத்தில் அங்கே பசுபதி உட்கார்ந்திருந்ததைக் கவனிக்காமல் அருகே வந்துவிட்டார்கள். பிறகு சட்டென்று திரும்பிச் சற்று விலகிப் போய் உட்கார்ந்துகொண்டார்கள்.

பசுபதி, எதிரே ஆற்றைப் பார்ப்பதும், இடையே அவர்கள் உட்கார்ந்திருந்த பக்கம் திரும்பிப் பார்ப்பதுமாய் இருந்தான். ‘அடடா! இந்தக் கிழவர் என்ன அதிருஷ்டசாலியா யிருக்கவேண்டும் இப்படிப் பட்ட பெண்ணைப் பெறுவதற்கு!’ என்று இடை விடாமல் அவன் மனம் எண்ணமிட்டது. ‘பெண்ணுக்குப் பதினெட்டு வயசு இருக்கும்போல் இருக்கிறதே! ஒரு வேளை கல்யாணம் ஆகியிருக்குமோ’ என்று நினைத்தபோது அவன் நெஞ்சு திக் என்றது.

இருட்டும் சமயத்தில் கிழவரும் அந்தப் பெண்ணும் எழுந்து ஊரை நோக்கி நடந்தார்கள். பசுபதியும் எழுந்திருந்து, அவர்கள் எந்த வீட்டுக்குப் போகிறார்கள் என்று பார்ப்பதற்காக அவர்கள் பின்னாலேயே நடந்தான்.

2

இங்கே பசுபதியின் பூர்விக வரலாற்றைப் பற்றிக் கொஞ்சம் சொல்லவேண்டும். பசுபதிக்குத் தன் தாயைப் பற்றிய ஞாபகமே இல்லை. அவனுக்குத் தன் நினைவு தெரிவதற்கு முன்பே அந்தப் புண்ணியவதி இந்த உலகை விட்டுப் போய்விட்டாள். மனைவி இறந்த பின், பசுபதியின் தகப்பனார் சங்கர தீக்ஷிதர் தாம் இறக்குமுன் தம் ஒரே பிள்ளைக்கு ஒரு கல்யாணம் கார்த்திகை என்று பண்ணிப் பார்த்து விடவேண்டும் என்று தீர்மானித்து, பசுபதி மெட்றி குலேஷன் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போதே நல்ல இடத்தில் பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் செய்து வைத்தார். பாவம்! அந்தப் பெண், அவர் மேல் பழி தீர்த்துக் கொள்வதற்காகத்தானோ என்னவோ, கல்யாணம் ஆன மறுவருஷம் இறந்து போய்விட்டாள். பசுபதி அப்போது பதினாறு வயசுப் பையன் தான். இருந்தாலும், தன் குழந்தை மனைவியிடம் அவன் அதிக ஆசைகொண்டிருந்தான். அவள் இறந்த செய்தி வந்ததும் அவள் போட்டோவை எடுத்து வைத்துக்கொண்டு விசித்து விசித்து அழுதான்.

இது நடந்து ஒரு வருஷத்துக்கெல்லாம் அவன் தந்தை மறுபடியும் அவனுக்குக் கல்யாணம் செய்ய முயன்றார். ஆனால் பசுபதியோ தனக்குக் கல்யாணமே வேண்டாம் என்றும், தகப்பனார் பலவந்தம் செய்தால் தான் வீட்டை விட்டு ஓடிப்போய் விடுவதாகவும் கண்டிப்பாய்த் தெரிவித்துவிட்டான்.

தீக்ஷிதர் தம் வீட்டுக்கு வருகிறவர் போகிறவர் களிடமெல்லாம் அதைச் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டார்; “எனக்கு இருந்து இருந்து ஒரு குழந்தை. அவனும் என் பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறான். அவனுக்கு வகையாய்ப் பெண்டாட்டி வாய்த்து, அவன் குடியும் குடித்தனமுமாய் இருப்பதை நான் பார்க்கமாட்டேன், இந்த ஜன்மத்தில்” என்பார். இப்படி, “செத்துப் போயிடுவேன், செத்துப் போயிடுவேன்” என்று வெறுமனே பய முறுத்திக்கொண்டிருந்தாரே ஒழிய, அப்புறம் ஐந்து வருஷத்துக்கு அவர் தாம் சொன்னபடி செய்து காண்பிக்கவில்லை.

இதற்குள் பசுபதி மேற்படிப்புக்காகச் சென்னைக்கு வந்துவிட்டான். ஐந்தாவது வருஷக் கடைசியில் அவன் தகப்பனாரும் உண்மையிலேயே வியாதியாய்ப் படுத்துக்கொண்டார். பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் தெரிவிக்கவே, பரீக்ஷைக்குப் படித்துக்கொண்டிருந்த பசுபதிக்குக் கடிதத்தின் மேல் கடிதமாக வந்தது. ஒவ்வொன்றிலும் அவன் கல்யாண விஷயந்தான். “கிருஷ்ணசாமி பெண்ணைக் கொடுக்கிறேன் என்கிறான். கையில் குறைந்தது ஐயாயிரம் தருவான். அதற்குமேல் சீர் சிறப்புகள் செய்வான். இரண்டாந்தாரத்துக்கு இதற்குமேல் யார் செய்வார்கள் இந்தக் காலத்தில்?” என்று ஒரு கடிதத்தில் இருக்கும். “வாசு பெண்ணுக்குப் பதினைந்து வயசு நிரம்பப் போகிறது. இந்த வருஷம் கண்டிப்பாய்க் கல்யாணம் பண்ணி ஆகணும். வாசு, வரன் எங்கே அகப்படும் என்று பறக்கிறான். நீ கல்யாணத்துக்குச் சம்மதித்துவிட்டாய் என்று நான் ஒரு வார்த்தை சொன்னால் போதும்; எவ்வளவு கேட் டாலும் அவனுக்கு லக்ஷ்யமில்லை” என்று இன்னொன்று. இப்படிப் பல கடிதங்கள் வந்தன. எல்லாவற்றையும் படித்துக் கிழித்துப் போட்டான் பசுபதி. “என்ன அப்பா, நமக்கு இருக்கிற பணம் போதாதா? ஏன் இன்னும் பணத்தாசை பிடித்து அலைகிறாய்?” என்று கோபமாகத் தகப்பனாருக்குப் பதில் எழுதி விட்டான். இதற்குப் பிறகு அவர் எழுதின இரண்டு கடிதங்களும் முற்றும் வேறுவிதமாக இருந்தன;

“ராஜம்பேட்டையில் ஒரு பெண் இருக்கிறது. தாய் தகப்பனார் பரம ஏழைகள். கையில் தம்படி தர மாட்டார்கள். பெண்ணுக்குப் பதினேழு வயசு. கண்ணுக்குக் கிளி மாதிரி இருக்கிறது. பண்ணிக்கிறாயா?” என்று ஒரு கடிதத்தில் கேட்டார். பசுபதி, அந்த வருஷம் கல்யாணம் செய்து கொள்வதாய்த் தனக்கு உத்தேசம் இல்லை என்று எழுதினான். அடுத்த கடிதத்தில் தீக்ஷிதர், “நீ பெண்ணை வந்து பார். பார்த்தால் விடமாட்டாய்” என்று ஆசை காட்டினார். இதற்குப் பசுபதி பதிலே போடவில்லை.

இரண்டு மாசங்களுக்குப் பிறகு பசுபதி தன் சொந்த ஊரை நோக்கிப் பிரயாணப் படவேண்டிய அவசியம் நேரிட்டது. அவன் தகப்பனார் காலமாகி விட்டார்.

3

இதெல்லாம் பழங் கதை; ஒன்றரை வருஷத் துக்கு முன்பு நடந்தவை. பசுபதி வெகு பிரயாசைப் பட்டு இதையெல்லாம் அடியோடு மறந்து போயிருந் தான். அதற்காகவே அவன் அது வரையில் ஓர் இடத்திலும் நிரந்தரமாகத் தங்காமல் ஊர் ஊராய்ச் சுற்றிக் கொண்டிருந்தான். மறுபடியும் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்ற ஆசையே அவனுக்கு இல்லை. தகப்பனார் இறந்த புதிதில், அந்த ராஜம் பேட்டைப் பெண்ணைப்பற்றி அவர் கொடுத்திருந்த வர்ணனை களின் ஞாபகம் எப்போதாவது வரும்போது, அவனுக்குச் சபலம் தட்டும்; “அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டுத்தான் வரலாமா?” என்று நினைப் பான். உடனே, ‘சட், அப்பா அவ்வளவு கேட்டுக் கொண்டும் கல்யாணம் வேண்டாமென்று உறுதியாய் இருந்துவிட்டு, இப்போது இந்தச் சபலத்துக்கு இடங் கொடுக்கலாமா?’ என்று மனசைக் கடினப்படுத்திக் கொள்வான். கடைசியில், “இந்த ஊரில் இருந்தால் இந்த ஞாபகமாய்த்தான் இருப்போம். கொஞ்ச நாள நாலு இடங்களுக்குப் போய்ச் சுற்றிவிட்டு வரலாம்” என்று தீர்மானித்துக்கொண்டு புறப்பட்டான்.

அவன் ஆசை நிறைவேறியது. பழைய ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் மனசிலிருந்து மறைந்து போயின. இந்தச் சமயத்தில்தான், அன்று ஆற்றங் கரையில் அவன் கண்ட காட்சி அவன் மன அமைதியை மறுபடியும் குலைத்துவிட்டது.

அந்தக் கிழவரும் அவருடன் வந்த பெண்ணும் எழுந்து சென்றபோது அவர்கள் பின்னாலேயே போய், அவர்கள் எந்த வீட்டுக்குள் போகிறார்கள் என்று பார்த்துக்கொண்டு, தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பசுபதி போனான். அங்கே ஹோட் டல்கார ஐயரிடம் பேச்சுக் கொடுத்து நடுவில், “அங்கே ஒரு பங்களா இருக்கே, சுப்பராம ஐயர்னு பேர் போட்டது. அதிலே இருக்கிறது யார்?” என்று கேட்டான்.

“சுப்பராமையர்னு பேர் போட்டிருக்கிற பங்களாவில் சுப்பராமையர்தான் இருக்கார்” என்றார் ஹோட்டல்காரர் சிரித்துக்கொண்டே.

”அதற்கில்லை ; அவர் யார், என்ன சமாசாரம்னு கேட்டேன்.”

“அப்படின்னா உட்காருங்கோ சொல்றேன்” என்று அந்தப் பிராமணர் ஆரம்பித்து, மேலே தொடர்ந்து கூறினார்: “அந்தச் சுப்பராமையர் பெரிய உத்தியோகம் பார்த்துவிட்டு இப்போதான் ஆறு மாசத்துக்கு முந்தி ரிடயர் ஆகி அந்த வீட்டையும் வாங்கினார். அவருக்கு ஒரு பெண் இருக்கிறாள். ஆமாம் ஸார். இருக்கிறாள்! என்ன சிரிக்கிறேள்? சரி தான்; அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டுத்தான் சமாசாரம் விசாரிக்கிறேள் போலிருக்கு. சரி, கேளுங்கோ. அவருக்கு ஒரு பெண் இருக்கிறாள். ஒரே பெண்! வயசு பதினெட்டு இருக்கும். ட்ரெயினிங் ஸ்கூலிலே படிச்சுண்டு இருந்தாள். லீவுக்கு இங்கே வந்திருக்காப்போல் இருக்கு. இந்த வருஷம் கல்யாணம் பண்ணிவிடணும்னுதான் யோசனையாம். உங்களுக்கு ஈடுதான்னா!”

இவ்வளவையும் ஆவலோடு கேட்டு விட்டுப் பசுபதி, “சே சே, அதெல்லாம் ஒன்றுமில்லை. வெறுமனே, வர போது வீட்டைப் பார்த்தேன். அதிலே யார் இருக்கான்னு தெரிஞ்சுக்கணும்னு கேட்டேன். அவ்வளவுதான்” என்று சொல்லிச் சமாளித்துக் கொண்டான்.

மறுநாள் பொழுது விடிந்ததும் விடியாததுமாய் இருக்கையில் பசுபதி எழுந்திருந்து, தன்னை நாஸூக்காய் அலங்கரித்துக்கொண்டு, சுப்பராமையர் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினான்.

கிழவரே வந்து கதவைத் திறந்து, அவனை உட்காரச்செய்து, யார், என்ன சமாசாரம் என்று விசாரித்தார். பசுபதி, முதல்நாள் இரவே தொடங்கி யோசனை செய்து முடிவுக்கு வந்திருந்த பிரகாரம், சுற்றி வளைத்துப் பேசாமல் தான் யார் என்று சொல்லி அவர் பெண்ணைத் தமக்குக் கொடுக்க முடியுமா என்றும் கேட்டான்.

கிழவர் அவனை ஏற இறங்கப் பார்த்தார். சற்று நேரம் யோசனை செய்தார். பிறகு அவர் முகத்தில் புன்னகை தோன்றிற்று.

“சரிதான்! எங்கள் ருக்குவுக்குத் தகுந்த வரன் தான் நீர்! அவளும் உங்களைப் போல்தான் சங்கோஜம் இல்லாத பிராணி. உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. அதிருக்கட்டும்; நீங்கள் பெண்ணைப் பார்க்காமலே இவ்வளவு தூரம் தீர்மானம் செய்துவிட்டீரே?” என்று கேட்டார்.

பசுபதி, பெண்ணைத் தான் ஏற்கனவே பார்த்தாய் விட்டதென்று தெரிவித்தான்.

“அப்படியா! அதுதானே பார்த்தேன். என்னடா முன் பின் தெரியாத மனுஷன் இப்படி வந்து பளிச்சுன்னு பெண்ணைக் கொடுன்னு கேட்கிறானேன்னு பார்த்தேன். அவளைப் பார்த்துட்டுத்தான் ஓடி வந்திருக்கிறீரா?” என்று கிழவர் சிரித்தார். பிறகு, “சரி, உங்களுக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. அவளுக்கு உங்களைப் பிடிக்கிறதான்னு கேட்கணுமோ இல்லையோ? இருங்கோ, கேட்கிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

பசுபதி, தான் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பின்னாலிருந்த ஜன்னல் பக்கத்திலிருந்து பேச்சின் சப்தமும், கை வளைகள் குலுங்கும் சப்தமும் வந்து கொண்டிருந்ததைக் கவனித்தான். இப்போது கிழவரும் அந்த இடத்துக்கே போய்ப் பேசிவிட்டு மறுபடியும் அவனிடம் வந்து, “பேஷாய்ப் போச்சு ! ருக்மிணிக்கும் உங்களைப் பிடிக்கிறதாம். நீங்கள் ஊருக்குப் போய் உங்கள் ஜாதகத்தை அனுப்புங்கோ. நான் ருக்குவின் ஜாதகமும் எழுதித் தரேன்” என்றார்.

அப்புறம் சிறிது நேரம் பல விஷயங்களைப் பற்றிப் பேச்சு நடந்தது. கடைசியில் பசுபதி அங்கிருந்து புறப்பட்டபோது கிழவர் மஞ்சள் தடவின காகிதத்தில் பெண்ணின் ஜாதகத்தை எழுதி அவனிடம் கொடுத்தார்.

பூமியின்மேல்தான் நடக்கிறோமா அல்லது ஆகாசத்தில் பறக்கிறோமா என்ற சந்தேகத்தோடு பசுபதி ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான்.

4

அன்றிரவு ஏழரை மணிக்கு அந்த அந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனில் பாஸஞ்சர் வண்டி வந்து நின்றது. பசுபதி, கையில் தோல் பெட்டியுடன் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டு, ஜன்னல் வழியாய்த் தலையை வெளியே நீட்டி, வண்டியில் ஏறினவர்களையும் இறங்கினவர்களையும் பார்த்தான். அவன் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து இருபது அடி தூரத்தில் ப்ளாட்பாரத்தில் நின்றவர்களைப் பார்த்ததும் அவன் மனம் திக் என்றது. “ருக்கு!” என்று அவன் வாய் முணுமுணுத்தது.

சுப்பராமையர், ருக்குவையும் இன்னொரு வயசான அம்மாளையும் இரண்டாவது வகுப்பு வண்டியில் ஏற்றிவிட்டுக் கதவை மூடினார்.

வண்டியும் கிளம்பியது.

“சே, என்ன துரதிருஷ்டம்! நாமும் ஓர் இரண்டாவது வகுப்பு டிக்கெட் வாங்கிக்கொண்டு அங்கே ஏறி இருக்கப்படாதா?” என்று தன்னை நொந்த வாறே பசுபதி நரக வேதனை அநுபவித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

அடுத்த ஜங்ஷனில் வண்டி நின்றதும் பசுபதி பெட்டியுடன் கீழே குதித்து, புக்கிங் ஆபீஸுக்கு ஓடி, ஓர் இரண்டாவது வகுப்பு டிக்கெட் வாங்கிக் கொண்டு மறுபடியும் ரயிலில் ஏறினான்.

கதவைச் சாத்திக்கொண்டு அவன் உள்ளே வந்ததைப் பார்த்ததும் ருக்மிணி பரபரப்போடு எழுந்து நின்று, அவன் உட்கார்ந்த பிறகுதான் உட்கார்ந்துகொண்டாள்.

ரயில் புறப்பட்டுக் கொஞ்ச நேரம் ஆனபின், “இதே வண்டியில் நீங்களும் வந்தது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது! எங்கே போகிறீர்கள்? இந்த அம்மாள் யார்?” என்று பசுபதி கேட்டான்.

“இந்த அம்மாள் என் அத்தை. நான் ராஜம் பேட்டைக்குப் போகிறேன்” என்று அவள் கூச்சத்துடன் பதில் சொன்னாள்.

“ராஜம் பேட்டையில் என்ன விசேஷம்?” என்றான்.

“எங்க அப்பாவுக்கு அங்கேதான் வேலை.”

“ரிடயர் ஆயிட்டார்னு கேள்விப்பட்டேனே?”

“இல்லையே! யார் சொன்னா?”

“அந்த ஹோட்டல்காரன் சொன்னான்” என்றான். அப்புறம் இரண்டு நிமிஷம் நிச்சப்தம். பிறகு பசுபதி, “ராஜம்பேட்டைக்குச் சுப்பராமையர் எப்போ போவார்?” என்று கேட்டான்.

“அவரும் கூட வரணும்னுதான் பார்த்தார். ஆனால் ருக்கு வர மாட்டேன்னுட்டாள், அதனாலே நான் மட்டும் தனியாய்ப் போறேன்” என்றாள்.

பசுபதிக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘ருக்கு வரமாட்டேன் என்றாளா? என்ன இது ஆச்சரியம் ! அப்படி யென்றால் யென்றால் இதோ நம் எதிரில் உட்கார்ந்திருப்பது யார் ? ஒரு வேளை இவர்கள் இரட்டைக் குழந்தைகளா, என்ன?’ என்று இப்படி நினைத்துக் கொண்டு அவன், கண்ணில் தூசி விழுந்த பாவனையாகக் கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தான். சந்தேகமில்லை; அன்று அவன் ஆற்றங்கரையில் பார்த்த அந்தப் பெண்ணேதான் இவள்!

‘ஒரு வேளை, கிழவர் சொன்னது வாஸ்தவமாக இருக்குமோ? இவள் பெரிய கிண்டல்காரி போலே இருக்கிறது. நம்மைப் பரிகாசம் பண்ணி இவள் விளையாடுகிறாளோ?’ என்று தோன்றவே, “இப்போது ருக்கு எங்கே இருக்காள்?” என்று கேட்டான்.

“ஆத்திலேதான் இருக்காள். இன்னும் ஒரு மாசம் அவளுக்கு லீவு இருக்கு. அடுத்த மாசந்தான் பள்ளிக்கூடம் திறக்கறா” என்றாள்.

பசுபதியின் குழப்பம் அதிகரித்தது. “நீங்கள் ருக்குவுக்கு எனன ஆக வேண்டும் ?” என்று கேட்டான்.

“இளைய தாயார்” என்று, தலையைக் குனிந்து கொண்டே அவள் பதில் சொன்னாள்.

பசுபதிக்கு மூச்சை அடைத்தது; தேகம் பதறிற்று. அவள் சொன்னதை நம்ப முடியாமல் அவளை விழித்துப் பார்த்தான். அவளும் தலையை நிமிர்ந்து அவன் பார்வையைக் கவனித்துவிட்டு, அவன் மனசில் தோன்றிய எண்ணத்தை அறிந்து கொண்டாள்.

“ஆமாம், நிஜந்தான், நான் சொல்லுகிறது. அவருக்கு நான் மூன்றாவது தாரம். என் அப்பாவுக்குச் சின்ன வேலை. முப்பது ரூபாய் சம்பளம். வரதக்ஷிணை கொடுத்து என்னை வகையாய்க் கல்யாணம் பண்ணிக் கொடுக்க அவரால் முடியவில்லை. அதற்காக இவருக்கு கொடுத்துட்டார். அவர் மேலே தப்பில்லை. நீங்களே சொல்லுங்கோ; வரதக்ஷிணை இல்லாமே யார்தான் ஒரு பெண்ணைப் பண்ணிப்பா? அதனாலேதான் போன வருஷம் வரையில் என்னைக் கல்யாணம் பண்ணாமலே இருந்தார். கடைசியில் சங்கர தீக்ஷிதர்னு ஒருத்தர்; அவர் பிள்ளைக்கு என்னைப் பண்ணிக்கிறேன் சொல்லிவிட்டுக் கடைசியிலே பிள்ளை இஷ்டப் படவில்லைன்னுட்டார். அவர் ஒருத்தர் தானா?…..” என்று ஆத்திரத்தோடு மேலே பேசிக் கொண்டே போனாள்.

அதற்கு மேல் அவள் சொன்னது ஒன்றும் பசுபதியின் காதில் விழவில்லை. “எந்தச் சஙகர தீக்ஷிதர்? ஆனந்தபுரம் சங்கர தீக்ஷிதரா?” என்று கம்மிய குரலில் கேட்டான்.

“எல்லாம் அந்த மிராசுதார்தான்!”

பசுபதிக்குத் தலை கிறுகிறு என்று சுற்றியது. இடத்தை விட்டு எழுந்து, சரியாக நிற்க முடியாமல் மறுபடியும் மெத்தையில் பொத்தென்று சாய்ந்தான்,

ரயில் வண்டி “டங் டங், டங் டங் ….” என்று சப்தம் செய்துகொண்டே ஓடியது. பசுபதி ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிக் கொண்டான். காற்று, சிலு சிலு என்று பிய்த்துக்கொண்டு போயிற்று.

அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றதும், பசுபதி பெட்டியை எடுத்துக்கொண்டு எழுந்ததைப் பார்த்து அவள், “என்ன, இங்கே இறங்குகிறீர்கள்?” என்றாள்.

“இல்லை, இந்த ஊர் ஸ்டேஷன் மாஸ்டர் என்னோடு படித்த நண்பர். அவரைப் பார்த்து விட்டு அடுத்த ரயிலில் போவேன்” என்று சொல்லி விட்டுப் பசுபதி இறங்கினான்.

அவன் ‘நண்ப’ராகிய அந்த ஸ்டேஷன் மாஸ்டர் அவனை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை.

பத்து நாட்களுக்குப் பிறகு, பசுபதி தன் ஊர் போய்ச் சேர்ந்து சுப்பராமையருக்கு ஒரு கடிதம் போட்டான். “ஜாதகப் பொருத்தம் சரியாயில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்” என்றுதான் அதில் எழுதியிருந்தான்.

– காளியின் கண்கள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

து.ராமமூர்த்தி தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் செப்டம்பர் 11, 1916-ல் துரைசாமி, ராஜம் இணையருக்குப் பிறந்தார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்திய தலைமைக் கணக்கு அலுவலர் அலுவலகத்தில் தணிக்கை அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். 'அசோகா' என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். கல்கி இதழின் துணையாசிரியராக பல காலம் இருந்தார். ராமமூர்த்தியின் 'கழைக்கூத்தன்' சிறுகதை 'சக்தி' இதழில் 1943-ல் வெளிவந்தது. கணையாழி, கல்கி போன்ற இதழ்களில் எழுதினார். விகடனில் முத்திரைக்கதைகள் எழுதினார். 'கதம்பச்சரம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *