வயிறார சாப்பிட்டு இன்றோடு மூன்று நாட்களாகி விட்டது.
பசி மயக்கத்தில் உறங்கிய குழந்தைகளையும், காயம் பட்டு படுத்திருந்த கணவன் மாரியையும் இயலாமையோடு பார்த்தாள் அஞ்சலை.
தொழிலுக்குப் போய் ஒரு வாரமாகி விட்டது. கையில் சல்லிக்காசு இல்லை. குழந்தைகள் பட்டினியில் வாடி அவதிப்பட, இப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை என்ற முடிவுடன் எழுந்தாள்.
அடுக்களையில் இருந்த எலி மருந்துடன் வந்து நின்றவளை வெறித்துப் பார்த்தான் மாரி.
அவள் நோக்கம் புரிந்து. அவள் கையிலிருந்த மருந்தை பிடுங்கித் தூக்கிப் போட்டுவிட்டு, தட்டுத் தடுமாறி கயிற்றைத் தேடி எடுத்தான்.
தன் பலம் தாங்குமா என கயிற்றை பரிசோதித்தான். ‘வேண்டாம் எனக் கண்ணீரோடு நெருங்கி கையைப் பிடித்து தடுத்த
அஞ்சலையை விலக்கி விட்டு, கயிற்றைத் தோளில் போட்டுக் கொண்டு எழுந்தான். அஞ்சலையும் பரபரப்புடன் பின் தொடர்ந்தாள்.
சாலையோர மரம் ஒன்றைத் தேர்ந்தெடுத்த மாரி, சற்று நேரத்தில் அங்கு ஜன சந்தடி அதிகமாகி விடும் என்ற யோசனையுடன் உடனே வேலையில் இறங்கினான். இறுக்கிக் கட்டிய கயிற்றை இழுத்து சோதித்தபடி அஞ்சலையைப் பார்த்தான்.
வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி,தரையில் துணியை விரித்தவள், கையிலிருந்த மேளத்தை எடுத்து அடிக்க…தடுமாற்றத்துடன் மாரி கயிற்றின் மேல் ஏறி நடந்தான். கூட்டம் சேர ஆரம்பித்தது.
– பா.வெங்கடேஷ் (ஏப்ரல் 2014)