சர்வாணி தொலைத்தொடர்புச் சேவை” அந்தப் பெயர்ப்பலகை திடமாக மின்னொளியில் பிரகாசித்துக் கொண்டிருந் தது. ஆனால் உள்ளே பரபரத்த மனத்துடன் இருந்த கல்பனாவை பிளாஸ்ரிக் கதிரை தாங்கியிருந்தது. கணவனின் செய்திக்காக அவள் காத்திருந்தாள். காலை 5.30 மணிக்கு முதல் விமானத்தில் பிரயாணத்திற்காக புறப்பட்டுப்போன கணவனின் செய்தி இன்னும் கிடைக்காமற் போகவே நிலவின் ஒளியில் வீடு திரும்பினாள்.
“என்னம்மா ரெலிபோன் வந்ததா?’
“இன்னும் எடுக்கேல்ல.”
“ஏன்?”
“தெரியேல்லை….மாமி! பகல் 11.00 மணிக்கெல்லாம் பிளேன் போயிருக்கும்.”
“அப்ப ஏன் எடுக்கேல்ல!! லைன் கிடைக்கேல்லையோ?’
“தெரியேல்ல..!!”
இருவரும் ஒருவருக்கொருவர் தம் பதட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல் கதைத்துக் கொண்டனர். கல்பனா சுவாமியறை சென்று மங்கியிருந்த விளக்கின் திரியைத் தூண்டிவிட்டு விளக்கிற்கு நெய்யூற்றினாள். விளக்கின் சுடர் எதிரேயிருந்த ஐயப்பன் படத்தில் பட்டுப் பிரகாசித்தது. நிம்மதியுடன் படுக்கைக்குப் போனாள். ஆனாலும், அவளுக்கு நித்திரை வரவில்லை.
விமலன், கல்பனாவின் கணவன் பிரபல வியாபாரி. “விமலன் ஸ்ரோர்ஸ்” அவனது சொத்து. அதேபோல் கவினேசும் விமல் கல்பனாவின் உயிருள்ள சொத்துத்தான். விமலன் தந்தை இறந்தபின் வியாபாரத்தைக் கவனித்து வருகின்ற ஒரு கலைப் பட்டதாரியானாலும் வியாபார நுட்பம் தெரிந்திருந்ததால் வாழ்வில் நன்கு முன்னேறி சமூகத்தில் பிரபல்யமாகி விட்டான். என்னதான் வாழ்வில் சகல வசதிகள் இருந்தாலும் அவ்வப்போது ஏற்படுகின்ற சிறுகஷ்டங்களை மறக்கவும், இந்த இயந்திர வாழ்விலிருந்து சிறிது ஓய்வு எடுக்கவும், ஆன்மீக நாட்டமும், கலாரசனையும் ஒருவனுக்கு அவசியம் வேண்டும். அதற்கு விமலன் விதிவிலக்கல்ல.
“ஐந்தாம் திருப்படி சாமி பொன் ஐயப்பா! ஐயனே பொன் ஐயப்பா!”
விமலனின் ஐம்புலன்களும் அந்தப் பாடலில் லயித்து விட்டன. அப்படியே ஓர் ஐயப்ப பக்தனாக மாலை போட்டு, விரதமிருந்து இப்போ மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை போகவேண்டி கொழும்புக்குப் பயணப்பட்டிருக்கிறான்.
“ஹலோ…நான் கல்பனா கதைக்கிறன்!”
“ஆ…கல்பனா!…நான் சுகமாவந்திட்டன்!”
“என்…னப்…பா..எங்கட…கடை…களவுபோட்…!!”
“….”
“நேற்றிரவு…நீங்களும்..போட்டியள்..”
“…”
“எ…ன்னப்…பா….எல்லாம்….போட்…டுது!!”!
விமலால் ஒன்றுமே பேசமுடியவில்லை . அவன் உடலால் உணர்வால் மிகவும் பாதிக்கப்பட்டான். அவனுக்கு அடிக்குமேல் அடி. பிளேனால் வந்திறங்கி ஓட்டோ எடுத்து நண்பனின் வீடு விசாரிக்கும்போது ஓட்டோவுடன் பாக், பணம் எல்லாம் பறிபோனது கல்பனாவுக்குத் தெரியாது. எப்படியோ நண்பனின் வீடடைந்து வியாபார நண்பர்களின் உதவியுடன் சபரிமலை போய் ஆண்டவன் சோதனையோ? யார் படைத்த வேதனையோ? என எண்ணி மகரஜோதியில் மனங்கலந்து வழிபட்டான்.
ஆனால், விடயமறிந்த கல்பனா விசரிபோல் ஆனாள். ஐயப்பா உன்னைத் தொழுதோம். எமக்கு இந்த நிலையா? இனி உன்னை வழிபடேன் என்று கூறி படத்தை எடுத்து ஒரு ஓரத்தில் போட்டாள்.
அன்று முதல் சுவாமியறையுடன் அவர்கள் குடும்பமும் இருண்டது. தாயின் நிலைகண்டு கவினேஸ் பள்ளி செல்லாது படுக்கையுடன் ஒட்டிக் கொண்டான். மாமியார் நோய் கண்டு ஆஸ்பத்திரிக்கும் வீட்டிற்குமாக அலைந்து திரிந்தாள். இது போதாதென்று அடிக்கடி பொலீஸ் விசாரணை வேறு. உற்றார் உறவினர் எவ்வளவோ ஆறுதல் கூறினர், தந்திகளும் கடிதங்களும் வந்து குவிந்தன, தொலைபேசியிலும் பலர் துக்கம் விசாரித்தனர். இருந்தும் என்ன பயன்!
தரிசனம் முடிந்ததும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க எண்ணியிருந்த விமலன் அருளை மட்டும் வேண்டி பொருளொன்றும் வேண்டாது வெறுங்கையுடன் வீடு வரவேண்டி இருந்தது.
விமலன் கல்பனா இருவரும் சந்தித்துக் கதைத்துக் கொண்ட சோக சம்பவங்கள் அவர்கள் வாழ்வில் இனிச் சரித்திரங்கள் தான். “இப்படியொரு கஷ்டம் இனி யாருக்கும் வரக்கூடாது ஐயப்பா!” என மனதிலே வேண்டிக் கொண்டான்.
“கல்லறை வரை வேண்டும் சில்லறை” என்று ஒரு புத்தகத்தில் என்றோ படித்த ஞாபகம். இப்போது அவனின் முதல் அல்லவா முழுதும் போய்விட்டது. மனக்கஷ்டம் தீர பஐனை செய்யலாம் என எண்ணி சுவாமி அறைக்குப் போனான். அறை இருண்டு கிடந்தது. ஐயப்பன் படத்தையும் காணவில்லை . அதனால் கணவன் மனைவிக்குள் விரிசல்…!
“சாமி! சாமி! என்றீர்களே இப்போ நாம் தெருவெல்லாம் சரணம் போட வேண்டிய நிலை….”
“கல்பனா!…சாமி எம்மைக் கைவிடார்….”
“எம் வாழ்க்கையை வாரிவிட்டாரேயப்பா…”
“கல்பனா! அவர் மீது இன்னும் எனக்கு நம்பிக்கை, அவர்தாம் எமக்கு ஆறுதல்….”
“எனக்கு ஆறுதல் தந்தது இந்தக் கடிதங்களும், தந்திகளும் தான்” எனக்கூறி விமலனின் முகத்தில் அவற்றை வீசியெறிந்தாள்.
கோபம் கண்ணை மறைக்கினும் கும்பிட்ட தெய்வம் குறுக்கே நின்றது. நிதானமாக அவற்றைப் பொறுக்கி எடுத்தான் விமலன். துக்கத்தில் துவண்ட கல்பனாவின் கண்ணில் படாது பிரிக்கப்படாமலே பல கடிதங்கள் அதில் வங்கி முத்திரையுடன் ஓர் கடிதம் பிரிக்கப்படாமல் இருந்தது. கடையை பெருப்பிக்க எடுத்த ‘லோனைக் கட்டச் சொல்லித்தான் வந்த வங்கிக் கட்டளையோ? பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்’ என்று பழமொழி சொல்வார்களே அப்படித்தான் எம் நிலையோ? என மனக் குழப்பத்துடன் அதைப் பிரித்துப் படித்தான்.
நீங்கள் கொள்முதல் செய்த ரிதிரேகா சேமிப்பு சான்றிதழ் gp [p|140271 இலக்கத்திற்கு இம் முறை குலுக்கலில் முதல் பரிசான ரூபா 4,800,000. (ரூபா நாற்பத்தெட்டு இலட்சம்) கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கான காசோலையை ஆறுமாத காலத்துக்குள்…
விமலன் கண்ணில் இருந்து வந்த கண்ணீரைக் கண்ட கல்பனா மனம் இரங்கி மன்னிப்புக் கேட்டாள். விடயம் தெரிந்த அவள் விழிகள் ஆச்சரியத்தால் விரிந்து கொண்டன. விரிசல் கண்ட உள்ளங்கள் இரண்டும் இணைந்து இன்பங் கண்டன.
“அடியாரைக் காக்க அன்புடன் வருக….”
“வருக வருக வாசவன் மைந்தா…”
“வருக வருக மணிகண்ட…”
ஐயப்ப கவசத்தின் அந்த வரிகள் அவர்கள் வாழ்வின் வசந்த வாசலில் காற்றில் சங்கமித்தன.
– என் மாதாந்திர ஓய்வூதியம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2012, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.