பக்குவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2024
பார்வையிட்டோர்: 1,733 
 
 

மதிய நேரம். வரிசையாக இருந்த ஒண்டுக் குடித்தன வீடுகளில் முதல் வீடாக இருக்கும் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தான் ரவி பாபு என்னும் கட்டிளங்காளை இளைஞன். அவனுடைய மனைவி ஒடிசலான இளம்பெண் பூங்கொடி எதிரில் வந்தாள்.

“என்னங்க சின்ன அத்தை வந்திருக்காங்க” என்றாள் அவள். சமையலறையிலிருந்து அவனுடைய சித்தியான கனமான தேகம் கொண்ட நடுத்தர வயது மங்கை கையில் தேநீர் டம்ளருடன் வெளிப்பட்டார்.

“வா சித்தி வழக்கம் போல உனக்கு நீயே டீ போட்டுகிட்டியா” கேட்டான் ரவி பாபு.

“ஆமான்டா” என்று சொல்லிக் கொண்டே அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து தேநீரைப் பருகினார். ரவிபாபுவும் அவன் மனைவியும் நின்று கொண்டிருந்தனர்.

தேநீரைப் பருகி டம்ளரைத் தரையில் வைத்து விட்டு அவனுடைய சித்தி பேசினார் :

“என்னடா பாபு… டீக்கடை எப்படி போவுது? என்ன திடீர்னு இதுல இறங்கிட்ட….”

“முதல் நாள் கடைக்கு பூஜை போடும் போது அம்மா தான் இல்லையேன்னு உன்னைக் கூப்பிட்டேன். .. நீ வரலை.”

“அன்னிக்கு கேட்டரிங் காரங்க கூப்பிட்டாங்க போக வேண்டியதா இருந்துச்சு. நான் வரலைன்னாலும் என் ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு. நான் ஒண்ணு கேட்டா ஒன் புருசன் என்ன சொல்றான் பாரும்மா ” என்ற சித்தி பூங்கொடியைப் பார்த்தார்.

“சரி உன் கேள்விக்கு பதில் சொல்றேன். பேக்ட்டரில ஆள் குறைப்பு பண்ணிட்டாங்க. வேற வேலை தேடிகிட்டு இருக்கும் போது என் ப்ரண்ட் ஜெகன் நடத்திகிட்டு இருந்த இந்த டீக்கடையை அவனால தொடர்ந்து நடத்த முடியாம அவன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை தங்கச்சிக்கும் உடம்பு முடியாம தங்கச்சி புருசன் அவளை இவன் வீட்ல விட்டுட்டு போய்ட்டான்…. நீ நடத்துயான்னு சொன்னான். ஒரு ஏற்பாட்டில் வேற வேலை கிடைக்கும் வரை இதை நடத்துவோம் நடத்திகிட்டு இருக்கேன்…. ” ரவி பாபு சொல்லி முடித்தான். சிற்றன்னை பேசினார் :

” அப்படியா நல்லா நடத்து… நீ டீக்கடை நடத்தற ஏரியாலேந்து புதுசா ஒரு பொண்ணு எங்க சுய உதவிக் குழுவுக்கு வருது. எங்க புள்ள நடத்தற சென்னை டீக்கடையை தெரியுமான்னு கேட்டேன். நான் தினமும் அந்த வழியாக போறேன். ஒங்க புள்ளைக்கு டீ மாஸ்டராக வேற ஆள் கிடைக்கலையா எப்பவும் சிடுசிடுப்போட இருக்கற ஆள வெச்சிருக்காருன்னு சொல்லிச்சு… வேற ஆள பார்த்துகிட்டு இவரை கழட்டி விடு “

சித்தி, சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார்….” டேய் மணி ஒண்ணரை ஆயிடுச்சா… நான் வரேன்… ரெண்டு மணிக்கு சுய உதவிக் குழு கூட்டம்… வரேன் மருமகளே… ” என்று கூறிய சித்தி வாசலை நோக்கி விரைந்தார். ” நான் வண்டில விடறேன் சித்தி ” என்று கூறி ரவி பாபு அவர் பின்னால் சென்றான்.

“பக்கத்துல தான் நான் நடந்து போய் விடுவேன். நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு ” என்று குரல் கொடுத்து விட்டு அந்த காம்பவுண்ட் வாசலை நோக்கிச் சென்றார் அவனுடைய சித்தி.

உள்ளே வந்த ரவி பாபு நாற்காலியில் அமர்ந்து சட்டையைக் கழற்றினான். அதனை வாங்கிய அவனுடைய மனைவி நைலான் கயிறு கொடியில் போட்டாள். அவனருகில் இருந்த மற்றொரு சிறிய நாற்காலியில் அமர்ந்தாள்.

பூங்கொடி கேட்டாள்: ” யாருங்க அந்த டீ மாஸ்டர்?”

ரவி பாபு புன்னகை பூத்து விட்டு பேசினான் :

“ஜெகன் தொடர்ந்து கடையை நடத்தலேன்னு அவன் கிட்ட இருந்த ஆளுங்க போய்ட்டாங்க… இவரு டீ மாஸ்டர் ஆக வேலை செய்ய வரேன்னாரு… அவரா முன் வந்தாரு.. சேர்த்துகிட்டேன். அகிலா சித்தி சொன்ன, வடிவேலு ஒரு படத்தில் சொல்றா மாதிரி அந்த சிடுமூஞ்சி சித்தப்பா வேற யாரும் இல்ல எங்க சித்தப்பாவே தான்…. “

“அப்படின்னா…. “

“புரியலையா…. இப்ப வந்தாங்களே அகிலா சித்தி அவங்களோட வீட்டுக்காரரு…. ரெண்டு பேரும் பிணக்குகளால பிரிஞ்சு இருக்காங்க… நான் அவர் கிட்ட நல்ல சந்தர்ப்பம் பார்த்து பேசி புரிய வைக்க முடியுமான்னு பார்க்கலாம் ன்னு தான் அவருக்கு வேலை கொடுத்தேன். சித்தி கிட்ட பேசறா போல அவர் கிட்ட உரிமையோட பேசி பழகினதில்ல… அப்படி அவர் கிட்ட பர்சனல் விஷயம் பேச எனக்கு தைரியம் வரலேன்னா கூட…எங்க அம்மாவும் சித்தியும் அச்சு அசலாக ஒரே மாதிரியான உருவம் உள்ளவங்க.. நான் எங்க அம்மா ஜாடை.. அதனால் தான் மீசை இல்லாமல் க்ளீன் ஷேவ் முகத்தோட கடைக்கு போறேன்…என் முகத்தை பார்க்க பார்க்க மனைவி நினைவு வந்து வீண் வீம்பு ஜம்பத்தை விட்டு விட்டு சித்தியோட சேர்ந்தாலும் சேரலாம்… ன்னு எனக்குள்ள ஒரு நினைப்பு….” என்று முடித்த ரவி பாபு எழுந்து நின்றான். அவன் மனைவியும் எழுந்து நின்றாள். அவனருகில் வந்து ” இப்படி ஒரு பக்குவமான புருசனை தெய்வம் எனக்கு கொடுத்திருக்கு “.

என்று கூறி அவனை இறுக கட்டிக் கொண்டாள். “என்ன இது என் மேல வேர்வை… விடு…வாசல் கதவு வேற திறந்து இருக்கு” என்று கூறிய ரவி பாபு அவளுடைய பிடியிலிருந்து விடுபட முயன்றான். அவள் விடுவதாக இல்லை.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *