பக்கத்து வீடு

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 6,867 
 
 

(இதற்கு முந்தைய ‘அரண்மனைக் கிளி’ கதையை படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது)

ராஜலக்ஷ்மியே மொபைலில் ‘ஹலோ’ சொன்னதும் சுப்பையா திகைத்துப் போனான். தேனில் தடவிய மாதிரி அவள் குரல் அழகாக இருந்தது.

“நான் ஹைதராபாத்திலிருந்து சுப்பையா பேசறேன்… மாமா இல்லியா?”

“அவரு வயலுக்குப் போயிருக்காரு. நீங்க சவுக்கியமா? சுகுணா அக்கா நல்லா இருக்காங்களா?”

“எல்லாரும் சவுக்கியம். சுகுணா குளிச்சிட்டு இருக்கா. அவ வர்றதுக்கு அரைமணி நேரம் ஆவும்.”

“………………….”

“கல்யாண வாழ்க்கை எப்படியிருக்கு?”

“ஒங்க மாமனாரைப் பத்திதான் என்னைவிட ஒங்களுக்கு நல்லாத் தெரியுமே! ஏதோ இருக்கு…”

“ஒங்களுக்குன்னு தனியா மொபைல் கிடையாதா?”

“ஆமா, அது ஒண்ணுதான் கொறைச்சல்.”

“என்ன இப்படி அலுத்துக்கிறீங்க? உங்க மனசுல ஏதோ ஒரு ஆதங்கம் இழையோடுது… என்னை நம்பி நீங்க எதையும் சொல்லலாம். எனக்கு உங்க மேல ரொம்ப மரியாதையும், பிரமிப்பும் உண்டுங்க…”

“அது என்ன பிரமிப்பு?”

ராஜலக்ஷ்மி இப்படி சகஜமாக பேசத் தொடங்கியது சுப்பையாவுக்கு மிகுந்த உற்சாகமளித்தது.

“சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?”

“கண்டிப்பா மாட்டேன். சொல்லுங்க…”

“நீங்க பிரமிக்க வைக்கிற அழகு. ஆராதிக்க வேண்டிய அழகு.”

“………………………..”

“பாத்தீங்களா, நீங்க கோவிச்சுக்கிட்டீங்க.”

“இல்ல இல்ல” அவசரமாக மறுத்தாள்.

“அப்புறம் ஏன் பதிலே பேசல?”

“ஆராதிக்க வேண்டிய அழகுன்னு சொன்னீங்களே, அதத்தான் யோசிச்சேன்.”

“நான் உண்மையைத்தான் சொன்னேங்க… முதல் நாளே உங்க அழகுல நான் சொக்கிப் போயிட்டேன். உண்மையை ஒத்துக்கறதுல எனக்கு வெட்கம் இல்லீங்க.”

“இவ்வளவு ஓப்பனா பேசறீங்க… சுகுணா அக்கா உங்கள தப்பா நெனச்சிக்கப் போறாங்க.”

“அவகிட்ட நான் இதப்பத்தி எதுவும் பேசமாட்டேன். நான் இப்ப உங்ககிட்ட பேசறதைக்கூட அவகிட்ட சொல்லமாட்டேன்.”

“பாத்துங்க… என்னால எதுவும் உங்களுக்குள்ள பிரச்சினை வந்துரக்கூடாது.”

“சரி… சரி நான் போனை வைக்கிறேன் அவ குளிச்சிட்டு வெளில வரா.”

சுப்பையா அவசரமாக போனை துண்டித்தான்.

அவன் மனசுக்குள் உற்சாகம் பீறிட்டது. விதை போட்டாயிற்று. இனிமேல் அதைப் பாத்திகட்டி பத்திரமாக வளர்க்க வேண்டும். என்ன ஆனாலும் சரி தன் மனதை அவளிடம் திறந்து கொட்டிவிட வேண்டும். அவளை முழுவதுமாக ஆக்கிரமிக்க வேண்டும். மாமனாராவது மண்ணாங்கட்டியாவது?

செவப்பா கஷ்க் முஷ்க்ன்னு வளப்பமான அழகில் ஜொலிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கு முன்னால் மற்றதெல்லாம் தூசுதான். அதனால்தான் பெரிய பெரிய அரசர்கள் கூட அழகுப் பெண்கள் முன் மண்டியிட்டு தங்கள் ராஜாங்கத்தையே இழந்தார்கள். அந்தக் கால கிளியோபாட்ராவும் இந்தக் கால லண்டனைக் கலக்கிய பமீலா போடஸும், அமெரிக்காவின் மோனிகா லிவின்ஸ்கியும் சிறந்த உதாரணங்கள்… beauty provoketh thieves sooner than gold என்று ஆங்கிலத்தில் சும்மாவா சொன்னார்கள்!

சுகுணா குளித்துவிட்டு மைசூர் சாண்டல் சோப்பின் வாசனையுடன் உள்ளே வந்தாள். அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கட்டிய துண்டை அவிழ்த்து எறிந்துவிட்டு பீரோவில் இருந்த மாக்சியை எடுத்து அணிந்து கொண்டாள்.

“மாமாவோட கல்யாண ஆல்பம் வந்திச்சா?”

“ஆமாங்க நேத்துதான் கொரியர்ல வந்திச்சி.”

“எங்க குடு பாப்பம்… இன்னிக்கி சண்டேதானே ரிலாக்ஸ்டா ஆல்பம் பாக்கலாம்”

“ஆமா, நானும் இன்னும் பாக்கல. ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டதும் ரெண்டு பேரும் சேர்ந்து பாக்கலாம்.”

கிச்சனுக்குள் சென்று ப்ரெட் ஆம்லேட் செய்து எடுத்துக்கொண்டு வந்தாள். வாட்ரோபைத் திறந்து ஆல்பத்தை வெளியே எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு தானும் அவனருகில் அமர்ந்துகொண்டாள்.

ஆல்பத்தின் எல்லா போட்டோக்களிலும் சுப்பையாவின் பார்வை ராஜலக்ஷ்மியைத்தான் உற்றுப் பார்த்தது. சுகுணா அப்பாவியாக, “சின்னம்மா ரொம்ப அழகு இல்ல?” என்றாள்.

“ஆமாம். ஒங்கப்பாவுக்கு பயங்கர யோகம்தான்”

சுகுணா பகலில் தூங்கிக் கொண்டிருந்தபோது சுப்பையா மறுபடியும் ஆல்பத்தை எடுத்து ராஜலக்ஷ்மியின் முகத்தை ஏக்கத்துடன் வருடினான்.

அடுத்த சில தினங்களில் அவன் அடிக்கடி ராஜலக்ஷ்மியுடன் தொடர்பில் இருந்தான். அவர்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது. சபரிநாதன் வீட்டில் இல்லாத நேரங்களில் அவள் சுப்பையாவுக்கு மிஸ்டு கால் கொடுத்தபின், அவன் உடனே அவளை திருப்பி அழைத்து பேசும் அளவிற்கு அவர்களிடம் கள்ளநட்பு உண்டானது.

சுப்பையாவிடம் பேசி முடிந்தவுடன் உடனே அவள் மொபைலில் அவனுடைய இலக்கத்தை எரேஸ் செய்துவிடுவாள். தவிர, சபரிநாதன் ஏர்டெல்லின் 399 ரூபாய் ஸ்கீமில் இருந்தபடியால் அவருக்கு கால் டீடெய்ல்ஸ் என்று எதுவும் கிடையாது. அவ்வப்போது ரீசார்ஜ் மட்டும் செய்துகொள்வார். ராஜலக்ஷ்மிக்கு அது இன்னமும் வசதியாகப் போயிற்று.

நாளடைவில் அவள் மீது சுப்பையா உன்மத்தம் பிடித்து அலைந்தான்.

சுப்பையா ஹைதராபாத்தில் அம்புஜா சிமென்ட் கம்பெனியில் க்வாலிட்டி இஞ்சினியராக இருக்கிறான். ஆனால் சமீப காலமாக அவன் மனசில் தான் தாழையூத்து சங்கர் சிமென்ட் கம்பெனியில் வேலைக்கு அப்ளை பண்ணினால் என்ன என்று தோன்றியது. அங்கு வேலை கிடைத்தால் தினசரி ராஜலக்ஷ்மியைப் நேரில் பார்க்கலாமே என்கிற திருட்டு ஆசை துளிர்விட்டது.

மறுநாளே அதை செயல்படுத்தி தன்னுடைய பயோடேட்டாவை சங்கர் சிமெண்டுக்கு அனுப்பி வைத்தான்.

அடுத்த வாரத்திலேயே அவனை நேர்முகத் தேர்விற்கு தாழையூத்துக்கு அழைத்தார்கள். அவன் உடனே மாமனாரின் வீட்டிற்கு கிளம்பிவிட்டான். அங்கு இரண்டு நாட்கள் தங்கி நேர்முகத் தேர்விற்கு சென்று வந்தான். சுப்பையா பி.ஈ படித்திருக்கிறான். பார்ப்பதற்கும் சிவந்த நிறத்தில் ரொம்ப ஸ்டைலாக வேறு இருந்தான். மாப்பிளையாக இருந்தாலும் அவன் வீட்டில் இருந்த சமயங்களில் மாமனார் சபரிநாதன் அவனுடன் அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டார். அதனால் ராஜலக்ஷ்மியுடன் சுப்பையா சகஜமாக எதுவும் பேச முடியவில்லை. ஆனால் கண்களால் மட்டும் அவர்கள் ஆசையை பரிமாறிக் கொண்டார்கள்.

தெருவில் ஒருமுறை சுப்பையா நடந்து சென்றபோது தன் வீட்டுத் திண்ணையில் நின்று கொண்டிருந்த காந்திமதியின் அப்பா கோட்டைசாமி “சொகமா இருக்கீயளா?” என்று அவனை அன்புடன் அழைத்து விசாரித்தார். அவர்தான் சுகுணா-சுப்பையாவின் கல்யாணத்திற்கு வந்திருந்தாரே! அவரிடம் சுப்பையா நின்று பேசிக் கொண்டிருந்தபோது காந்திமதி வீட்டுத் திண்ணைக்கு ஓடிவந்தாள். அவள் சுப்பையாவை முழுங்கி விடுவதைப்போல ஆசையுடன் பார்த்தாள். இதை சபரிநாதனும் பொருமலுடன் பார்க்க நேரிட்டது.

சுப்பையா காந்திமதிக்குப் பிடித்த ஒரு சினிமா நடிகன் போல் அப்படியே இருந்தான். அந்த நடிகனை அவள் மானசீகமாக பல நேரங்களில் கட்டியணைத்து முத்தம் கொடுத்ததுண்டு. கிட்டத்தட்ட அதே மானசீக பார்வையைத்தான் அவள் சுப்பையாவை நோக்கிப் பார்த்தாள்! சபரிநாதனுக்கு காதில் புகை மூண்டது.

ஹைதராபாத் திரும்பிய அடுத்த நான்கு நாட்களில் தாழையூத்து சங்கர் சிமெண்டில் சீனியர் க்வாலிட்டி இஞ்சினியர் வேலைக்கான உத்திரவு ஈ-மெயில் மூலமாக அவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏகப்பட்ட சம்பளம். சுப்பையா சந்தோஷத்தில் துள்ளினான். சுகுணாவும் சொந்த ஊர் போய் அப்பாவிற்கு அருகில் குடியிருக்கப் போகிறோம் என்று நினைத்து சந்தோஷமடைந்தாள்.

சுகுணாவும் சுப்பையாவும் புது வேலை குறித்து விவாதித்தனர். புது வேலையை ஒப்புக்கொண்டு, முதலில் சுப்பையா மட்டும் செல்வதென்றும், அதன்பிறகு நல்ல வீடு, மகனுக்கு நல்ல பள்ளி முடிவானதும் குடும்பத்துடன் திருநெல்வேலி வந்து செட்டிலாகி விடுவது என்றும் முடிவு செய்தனர்.

சுகுணா அன்றே அப்பாவைத் தொடர்பு கொண்டாள்.

“அப்பா, அவருக்கு சங்கர் சிமெண்டில் வேலை கிடைச்சிடுச்சு. நல்ல சம்பளம். அவரு இன்னும் ரெண்டு வாரத்துல நம்ம வீட்டுக்கு வருவாரு. வேற வீடு, ஸ்கூல் கிடைக்கிற வரைக்கும் நம்ம வீட்லதான் இருப்பாருப்பா. அவரோட மோட்டார் பைக்கையும் கூடவே ட்ரெயின்ல புக் பண்ணி எடுத்துட்டு வந்துருவாரு… தினமும் திருவண்ணாதபுரம் வழியா தாமிரபரணி ப்ரிட்ஜ் மேல ஏறி, அரவங்குளத்தைத் தாண்டி தாழையூத்து போயிடுவாருப்பா. அது ரொம்பக் கிட்டக்க.”

“அப்ப மாப்ளையை நம்ம வீட்லையே எப்படிம்மா தங்க வைக்கிறது? ராஜி புதுசா கல்யாணமாகி வந்தவ… அவளுக்கு ப்ரைவசி வேண்டாமா?”

“அப்படின்னா வேற ஒண்ணு பண்ணுங்கப்பா… நம்ம பக்கத்து வீடு சும்மாத்தான இருக்கு?”

“சும்மா இல்லையே, நெல்லு மூட்டை அது இதுன்னு போட்டு வச்சிருக்கேன். வேண்டாத ஓட்டை ஒடசல் சாமான் பூராவும் பக்கத்து வீட்லதான் கெடக்கு.”

“உடனே அதை கிளீன் பண்ண ஏற்பட்டு செய்ங்கப்பா. அவரு பாட்டுக்கு அந்த வீட்ல தனியா இருந்துப்பாரு.”

சபரிநாதன் எரிச்சல் பட்டார். ஆத்திரப்பட்டார். மனசுக்குள் சுகுணாவைப் போட்டு வறுத்து எடுத்தார். எரிச்சலை மகளிடம் காட்டவும் முடியவில்லை. யோசிப்பது போல பாசாங்கு செய்தார்!

“என்னப்பா யோசிக்கிறீங்க?”

“பக்கத்து வீடு ரொம்ப பழசான வீடு, அதுல மாப்ளையால இருக்க முடியுமான்னு யோசிக்கிறேன்!”

“கிளீன் பண்ணிக் குடுங்கப்பா… இருந்துப்பாரு.”

“சரி. ஆனா மாப்ளையோட சாப்பாட்டுக்கு நான் பொறுப்பேத்துக்க முடியாது. அது மட்டும் தோதுப்படவே படாது.” சபரிநாதன் கடுப்புடன் சொன்னார்.

“சாப்பாடு ஒரு பெரிய விஷயமே இல்லப்பா. அவருக்கு கேன்டீன்லேயே எல்லாம் கிடைச்சுடும். சமாளிச்சுப்பாரு.”

“அப்ப சரிம்மா.”

பக்கத்து வீடும் கிடையாது, எதிர்த்த வீடும் கிடையாது என்று சொல்ல ரொம்ப நேரமாகாது சபரிநாதனுக்கு! ஆனாலும் என்னவோ, விதி செய்த சதி, அவரால் அப்படிச் சொல்ல முடியவில்லை. சில நேரங்களில் இப்படி அனுசரித்துப் போய்த் தொலைய வேண்டியிருக்கிறது. ஒரேயடியாகவும் சொந்தங்களுடன் முறுக்கிக்கொள்ள முடிவதில்லை.

இதுகாறும் எந்த இளைஞனின் பார்வையிலும் படாமல் ராஜலக்ஷ்மியை கட்டிக் காப்பாற்றி வருகிறார். அது பிடிக்கவில்லை போலும் கேசவ பெருமாளுக்கு! மாப்பிள்ளையாயினும் சின்ன வயசு சுப்பையாவுக்கு! துடிப்பானவன் வேறு. ‘பெருமாளே நீதான் காப்பாத்தணும்’ என்று சபரிநாதன் பிரார்த்தனை செய்தார். அவர் பிரார்த்தனை பலிக்கவில்லை என்பது வேறு விஷயம்….

Print Friendly, PDF & Email

2 thoughts on “பக்கத்து வீடு

  1. பிரமாதமான கதை. விறுவிறுப்பு அதிகம். மருமகன் மாமியாரை காதலிப்பது புதிது. லக்ஷ்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *