தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 11,532 
 

“அல்ஹம்துலில்லாஹ்… அல்லாஹ்ட காவலா, பத்திரமா வந்து சேருங்கம்மா” மனமகிழ்வுடன் கூறியவாறே காதிலிருந்த டெலிபோன் றிசீவரைக் கீழே வைக்கிறார் அன்சார் ஹாஜியார்.

அவரின் மூத்த மகள் ஹம்தாவும், அவளின் கணவனும் பிள்ளைகளும், சுமார் ஆறு வருடங்களின் பின்பு இன்று அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வருகிறார்கள். “புள்ளைங்க எயார்போட் வந்துட்டாங்களாங்க?” ஆவலாய்க் கேட்டாள் அவரின் அன்பு மனைவி ஸரீனா.

“வந்துட்டாங்க ஸரீனா… சரி… நம்ம மகன் அப்ரார்தானே… எயார்போட் போன… புதுக்காரத்தானே கொண்டுபோயிருக்காரு?” மனைவியைப் பார்த்துக்கேட்டார் அன்ஸார் ஹாஜியார்.

“சுபஹூ தொழுதுட்டு, வந்தவொடனேயே… அவன் தங்கச்சியும் மச்சான், புள்ளைகளையும்… கூட்டிக்கொண்டுவர… எயார்போட் போயிட்டான்… நம்மளவிட, அவன் ரொம்பவும் ஆவலா இருக்கான், அவங்களப் பாக்கணும்னு” ஸரீனா மகிழ்வுடன் கூறி முடித்தாள்.

“ஆறு வருஷம் அமெரிக்காவிலயே போயிடுச்சி… மூணு வருஷத்துக்கு முன்னாடி, நாங்க அமெரிக்காபோயி… ஒரு மாசம் அங்க நிண்ணு பாத்துட்டு வந்தது.. இண்ணிக்கிமாதிரி இரிக்கி ஸரீனா” அன்சார் ஹாஜியார் மகிழ்வோடு சொன்னார்.

“என்னங்க செய்யலாம்…இந்தக் காலம் அப்படியாப் போச்சே… பெத்தவங்க ஒரு மூலைல… புள்ளைங்க, எங்கோ ஒரு மூலைல… ம்… மத்தவங்கதான், எல்லாருக்குமே ஒதவுற காலமாப்போச்சி!…செத்தாலும் கூட, சொத்தான சொந்தக்காரங்க… அகத்தி காய்ச்ச ஆயிரம் காயப்போலதான் ஆகிட்டாங்க” ஏக்கப் பெருமூச்சொன்றை வெளியே இழுத்துகிட்டவாறே கூறி முடித்தாள். ஸரீனாட, கணவரும் அதை அமோதித்தவராக உண்மதான் ஸரீனா… காலம் இப்படியாயிருச்சே… பறவைகள் மாதிரி… பறந்து பறந்து, வாழ்க்க தேடுற பொளப்பாப் போச்சி… ம்” அவரும் ஏக்கப் பெருமூக்சொன்றுடன் பேச்சை நிறுத்தினார்.

“நம்ம அடுத்த தெருவுல… சல்ஹாம்மா மௌத்தானப்போ… அவட புள்ளைகளெல்லாம் வெளிநாட்டுல… எவ்வளவு சொத்து பணமிருந்தும்… அவட மய்யித்துக்கு, பெத்த புள்ளைகள் பத்துப் புள்ளைகளிருந்தும்… ஒரு புள்ளகூட பக்கத்துல இருக்கல்லியே… அவட, மத்தச் சொந்தக்காரங்களும்… அக்கம் பக்கத்தவங்களும் தானே… மய்யித்தே அடக்கினாங்க” ஸரீனா ஏக்கத்தோடு சொல்லியபோது “ஆமாமா… சொத்துச் சொகம் தேடியும் வேலையில்ல… அவங்க பத்துப் புள்ளைகளக் கஷ்டப்பட்டுப் பெத்தும், எந்தவொரு சொகமுமில்ல… ஸரீனா அவங்க வாழ்க்க, நமக்கெல்லாம் நல்ல பாடம்” அன்சார் சொன்னார்.

“ஆமாம்மா… நான் அம்தாவ, இனி அமெரிக்காவுக்கு அனுப்பப் போறதில்ல… அவவும் புள்ளைகளும், மருமகனும் இனி இங்கயே இருக்கட்டும்… அவன் அப்ராரும் இனிமே அமெரிக்காவுக்குப் போகத்தேவல்ல… பெத்த புள்ளைங்க கண்ணுக்கு நேர இருந்தா… அதுவே போதும்… காசு பணத்த காலடியிலயே தேடிக்க ஏலும்” ஸரீனாவும் தன் கடனுக்கு தனது உள்ளத்து உணர்வுகளை, அளந்து கொட்டினாள்.

எதிரே இருந்த சோபாவுக்குள்ளிலிருந்து, கோழி ஒன்று திடீரெனக் கொக்கரித்தது “பக்கத்துவீட்டு பாத்திமாட இந்தக் கோழி ஒவ்வொருநாளும்… இங்க வந்து முட்ட போட்டுக்கிட்டே இருக்கு… எவ்வளவுதான் அடிச்சிவெருட்டிப் பாத்தாலும், அது இங்கதான முட்டவுட வருவுது” ஸரீனா கூறியபடியே கோழியைத் தூர வெருட்டிவிட்டு, முட்டையக் கையிலெடுத்தவாறே பக்கத்து வீட்டை நோக்கி நடக்க முனைந்தபோது, எதிரே பாத்திமாவே வந்து கொண்டிருந்தாள். வந்தவளிடம் முட்டையை ஒப்படைத்தவாறே “பாத்திமா… ஒங்கட கோழி எப்படி வெருட்டினாலும், இங்கதானே வந்து ஒவ்வொரு நாளுமே முட்ட போடுது… நான் என்னதான் பண்ற” ஸரீனா சிரித்தபடியே கேட்டாள்.

“ஓம்… நானும் ஒரு நல்ல முடிவோடதான் வந்திருக்கன்… ஸரீனா அந்தக் கோழிய நீங்களே எடுத்துக்கோங்க…” பாத்திமாவும் சிரித்தவாறே சொன்னாள். “சரியாப்போச்சி… கோழியே வளக்காத ஏன்ட தலையில, ஓன்ட கோழியக்கட்டப்போற… எனக்குக் கோழியெல்லாம் தேவல்லம்மா… ஒன்ட கோழிய நீயே வச்சிக்க” ஸரீனா சிரித்தவாறே கூறி முடித்தாள்.

பாத்திமாவோ “ஸரீனாம்மா… நான் ஒங்கட நல்லதுக்காகத்தான் சொல்ரன்… ஒவ்வொருநாளும் இந்தக்கோழி, ஒங்க சோபாவுல படுக்கிறதும், முட்ட விடுறதும்… ஒங்க மனசுக்கெல்லாம் சங்கடம்தானே ஸரீனாம்மா… அதால, நீங்களே அந்தக்கோழிய ஒங்க கோழியா வச்சிக்கோங்க… வீட்டுல கொட்டுப்படுற சாப்பாடுகளகச் சாப்பிட்டே அது வளந்துடும்… அதுக்குண்ணு வேறயா ஒண்ணும் பண்ணத் தேவல்லம்மா…” கூறினாள். பாத்திமா சொன்னதும் ஸரீனாவுக்கும் சரிதானெனப் பட்டது.

“சரி பாத்திமா ஒன்னோட கோழிக்கு என்னவெல?” கேட்டாள் “இதுக்கெல்லாம் காசாம்மா?… எங்கவீட்டுல… நாங்க சாப்பிடுறதே… நெறைய ஒங்கவீட்டுச் சாப்பாடுதான்… ஏழையான நாங்க… ஒங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிறதே… நாங்க செஞ்ச பெரும் பாக்கியம் ஸரீனாம்மா…” பாத்திமா கூறிவிட்டு நன்றிப் பெருக்கோடு ஸரீனாவின் களங்கமற்ற முகத்தை நோக்கினாள். “சரிபாத்திமா… இதுக்கு மேலால நீ சொன்னாக் கேக்கவா போறாய்.. கோழி இங்கேயே இருக்கட்டும்” ஸரீனா சொல்ல, பாத்திமா மகிழ்ந்து போனாள்.

அந்த நேரம் பார்த்து அங்கே காரின் சப்தம் கேட்கிறது. ஸரீனா சந்தோசத்தோடு வெளியே வந்து பார்க்கிறாள். அங்கே அவளுடைய பேரப்பிள்ளைகளோடு, மகள், மகளின் கணவர் ஆகியோர் காரில் வந்திறங்குகின்றனர்.

ஓடிச்சென்ற ஸரீனா – மகள், பேரப்பிள்ளைகளை அப்படியே பாசத்தோடு வாரியணைத்துக் கொண்டாள். அவளின் விழிகளிரண்டும் பாசத்தால் பொலபொலவெனக் கண்ணீரைச் சொரிந்தன. இந்த மனதை உருக்கும் பாசக்காட்சியைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த பாத்திமாவின் மனசையும் அப்படியே, ஆடவைத்து விட, ,அவளின் விழிகளும், துளிகள்விட மறுக்கவில்லை. கண்ணீரைத் துடைத்து விட்டபடியே “மாஷாஅல்லாஹ்” என்றாள் சந்தோச மிகுதியால்.

நாட்கள் விரைந்தோடி மறைந்தன. பத்து நாட்கள் பஞ்சாகப் பறந்து விட்டபோது, ஸரீனா ஆச்சரியப்பட்டுப் போனாள். “மாஷா அல்லாஹ்… பத்துநாள் போனதே தெரியல்ல.. புள்ளைகள் நேத்தைக்கி வந்தமாதிரி இரிக்கி” அவளுக்குள் அவளே கூறி மகிழ்ந்து கொண்டாள்.

அமெரிக்காவிலிருந்து வந்தவர்களுக்கு, வாய்க்கு ருசியாய் விதவிதமாய் சமைத்துப் போட்டாள் ஸரீனா! பிள்ளைகளும், மருமகனும் அவற்றைச் சுவைத்து, உண்ணுவதைப் பார்க்கும் போதெல்லாம், அவள் அப்படியே உள்ளத்தால் பூரித்துப்போவாள். இந்தச் சமையல் வேலைகளுக்கெல்லாம், பக்கத்து வீட்டுப் பாத்திமாவும், அவளின் மகள் சீமாவும், ஸரீனாவுக்குப் பக்க பலமான உதவியாளர்களாகச் செயலாற்றினார்கள்.

வீடே ஒரு திருமண வீடுபோல, கலகலவெனக் களைகட்டியிருந்தது. அனைவரது முகங்களிலும் ஆனந்தம் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. அன்சார் ஹாஜியார் வீட்டினுள் வந்தவாறே” ஸரீனா… ஸரீனா முன்ஹோளுக்கு எல்லாரும் வாரீங்களா?” என்று அனைவரையும் அழைத்தார்.

அழைப்பைக் கேட்டு அனைவருமே முன்ஹோலில் வந்து சேர்ந்தனர். “சந்தோசமான சேதிதான்… எல்லாருமே உக்காருங்க” அனைவரும் அன்சார் ஹாஜியாரின் முகத்தைப் பார்த்தவாறே, என்ன நல்லதேதி? சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு, சோபாக்களில் அமர்ந்தனர்.

“மகன் அப்ராருக்கு ஒருநல்ல எடம் வந்திருக்கு… நாம எல்லாரும் நாளைக்கே பொண்ணுபாக்க, நுவரெலியா போறம்” அவர் சொன்னதைக் கேட்ட எல்லாருடைய முகங்களிலும், மகிழ்ச்சியின் ரேகைகள் படர்கின்றன. அப்ரார் வெட்கப்பட்டவனாக “இப்ப என்னதான் அப்படி அவசரம்வாப்பா?” மகனின் வார்த்தைகளைக் கேட்ட ஸரீனா “நீ இன்னும் சின்னப்புள்ளைங்கிற எண்ணமாப்பா… வயசும் இருபத்தேழாகுது… இனியும் தள்ளிப்போட்டா நல்லாயிருக்காதுப்பா…” உம்மா சந்தோஷசமாகச் சொன்னாள்.

அடுத்த நாள் பொழுது மகிழ்ச்சியாகப் புலர மணப் பெண்ணைப் பார்க்கவென்று எல்லோரும் மகிழ்ச்சியுடன் நுவரெலியா பயணமாகினர். பாத்திமா வீட்டாரும் உடன் சென்றனர்.

போன இடத்தில் எல்லோருக்கும் எல்லாமே பிடித்துப் போய் விட்டன. மணப்பெண் தேவதைபோல அழகாய் இருந்தாள். வீட்டவர்களும் தங்கமானவர்களாயிருந்தார்கள். இவர்களுடைய எல்லாக் கோரிக்கை, வேண்டுகோள் அனைத்திற்குமே சகல, இணக்கங்களையும் தெரிவித்தனர்.

முடிவாகத் திருமணத் தேதியைக் கூட நிச்சயித்தும் வந்து விட்டனர். இன்னும் பத்தே நாட்களில் திருமணம். ஸரீனா ஆனந்தத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். இருந்த போதிலும் அவளின் உள்மனதில் ஒரு மாபெரும் ஏக்கமும் தங்கிக்கொண்டுதான் இருந்தது.

திருமணமும் முடிந்து பத்துநாட்களில் மீண்டும் எல்லோருமே அமெரிக்கா போய் விடுவார்கள். புதுத் தம்பதியர்கூட அமெரிக்கா போய் விடுவார்கள். ஸரீனாவுக்கு அதை எண்ணிப் பார்க்கும்போது, வேதனை நெஞ்சை முட்டியது, எல்லாமே வெறும் பொய்களாக அவளுக்குத் தோன்றியது. ஒருபக்கம் சந்தோசம், மறுபக்கம் மனவேதனை, இரண்டையுமே சுமந்தவளாக, இரு தலைக் கொள்ளி எறும்பாக நடமாடிக் கொண்டிருந்தாள்.

மணநாள் வந்தது. ஹோளில் திருமணம்! எல்லோரும் ஹோளுக்குப் போய்ச் சேர்ந்து விட்டனர். மணமகன் மேடையில், மணமகளின் வருகைக்காகக் காத்திருந்தான். எல்லோருமே வாயில்பக்கம் வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருந்தனர். நேரம் கடந்தது, பெண்வீட்டார் யாருமே வரவில்லை.

பக்கத்து வீட்டுப் பாத்திமாவும் மகளும், ஸரீனாவுக்கு ஆறுதல் சொன்னார்கள். கவலப்படாதீங்க… இப்ப வந்துடுவாங்க” ஸரீனாவுக்குச் சந்தேகமாகயிருந்தது. தொலைபேசியில் பேசிப்பார்க்க முனைந்தும், அவர்களின் தொலைபேசிகளின் இயக்கங்கள், முற்றாக நிறுத்தப்பட்டுக் கிடந்தன். செய்வதறியாது எல்லாருமே மனதுக்குள் திண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

சற்று நேரத்தில் அங்கே பெண்வீட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து சேர்ந்தார். அன்சார் ஹாஜியாரைத் தனியாக, ஓர் அறைக்கு அழைத்துச் சென்றவர் இரகசியமாக, அவரின் காதுகளில் எதையோ பேசிவிட்டு, வேகமாக அறையினை விட்டும் வெளியேறிச் சென்றார். அன்சார் ஹாஜியார் அப்படியே அறைக்குள்ளிருந்த கதிரையில் அதிர்ச்சியாய் அமர்ந்து விட்டார்.

பேசிவைத்திருந்த பெண் ஏற்கனவே தன்னுடன், பல்கலைக்கழகத்தில் படித்த ஒருவனைக் காதலித்திருந்ததாகவும், பெற்றோர் அவனைக் கல்யாணம் கட்டச் சம்மதம் தெரிவிக்க மறுத்து, இந்தக் கல்யாணத்துக்கு வற்புறுத்தியதால், அந்தப் பெண் தனது காதலனுடன் ஓடிச்சென்று, பதிவுத்திருமணம் செய்துவிட்டதாகவும் அன்சார் ஹாஜியார் தனது மாப்பிள்ளை இவை எதுவுமே தெரியாமல் அமர்ந்திருக்க உம்மா ஸரீனா ஒரு முடிவுக்கு வந்தார்.

அடுத்த வீட்டு பாத்திமாவிடம் கெஞ்சியவாறு ஏதோ பேசினாள். மறுகணம் பாத்திமாவின்மகள் சீமா, மணப்பெண்ணாக அவசர அவசரமாக அலங்கரிக்கப்பட்டு, மணமகனின் பக்கத்தில் அமரவைக்கப்பட்டாள். திருமணம் அமர்க்களமாக, அழகாக நடந்து முடிந்தது. வர இருந்த அவமானமும், பக்கத்து வீட்டினால் பாதுகாக்கப்பட்டது.

நிம்மதிப் பெருமூச்சொன்றை வெளியேற்றியவாறே அடுத்தவீட்டுல ரோசாவ வச்சிக்கிட்டு… நான் அக்கரையில் இருக்கிற ராசாத்திக்கி ஆசப்பட்டது எவ்வளவு கண்மூடித்தனமாப்போச்சி” ஸரீனா தனக்குள் சொல்லிக்கொண்டாள். அவளின் முகத்தைப் பார்த்து, அவள் என்ன நினைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவர்போல, அன்சார் ஹாஜியார் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்! ஸரீனாவின் முகம் ஆனந்தத்தில் பளிச்சிட்டது.

– எம்.ஐ. உஸனார் ஸலீம், நிந்தவூர் (பெப்ரவரி 2016)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *