ஓதிச்சாமி ஓர் ஏழை விவசாயி மகன். பத்து வயது இருக்கும் போதே தாயை எமனிடம் பறிகொடுத்தவன். தனக்கு பத்து வயது மூத்த இருபது வயது சகோதரியை மனைவியை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்த உறவினர் ஒருவருக்கு வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க வைக்கமுடியாத நிலையில் இரண்டாவது தாரமாக கட்டிக்கொடுத்த தந்தையின் செயல் பிடிக்கவில்லை என்றாலும் சூழ்நிலையை ஆழ்நிலையில் சிந்தித்ததால் ஏற்றுக்கொண்டான்.
காலங்காலமாக கிராமப்பறங்களில் பெண் குழந்தைகளை சுமையாக கருதுவதும், வயதுக்கு வந்து விட்டாலே ‘வயிற்றில் நெருப்பக்கட்டீட்டு இருப்பது போல்’ என்பதும், ‘ஒருத்தங்கைல புடிச்சுக்கொடுத்துட்டா புள்ளைக்கு அவங்கஞ்சி ஊத்திக் காப்பாத்திக்குவான். அப்பத்தான் நிம்மதி’ என்பதுமான வசனங்கள் அனைத்து பெண்களைப் பெற்ற வீடுகளிலும் கேட்க முடியும்.
அக்காவுக்கு திருமணமாகி விட்டாலும் தனக்கு அடுத்து பிறந்த பெண்ணான செல்வியை நன்றாக கல்லூரி வரை படிக்க வைத்துவிட வேண்டுமென எண்ணிய ஓதிச்சாமிக்கு தன் படிப்பை விட நேர்ந்தது.
தாய் இறந்த பின்பு தாயின் அடுப்படி வேலைகளையும் தந்தையே செய்ய வேண்டியிருந்தது. வேலைக்கு ஆள் வைத்து கூலி கொடுக்கும் அளவிற்கு விவசாயத்தில் வெள்ளாமை விளைந்து கை கொடுக்கவில்லை. கிணத்து மோட்டார் ஓடுவதற்கு பகலில் முழு மின்சாரம் இருப்பதில்லை. இரவில் தான் மூன்று பீஸ் மின்சாரம் வந்து மோட்டார் ஓடும் நிலையில் விவசாய நிலங்களில் ஒவ்வொரு பாத்தியாக வாய்க்கால் மடையை மம்பட்டியால் மண்ணை வெட்டித்திருப்பி தண்ணீர் கட்ட வேண்டும். பகலில் என்றால் சூரிய வெளிச்சத்தில் தனி ஒருவராக மடை திருப்பி விடலாம். இரவு நேரத்தில் இன்னொருவர் அரிக்கென் லைட் பிடிக்கவேண்டுமென்பதாலும், லைட் பிடிக்க தன்னையே தந்தை கூட்டிச்செல்வதாலும், இரவு உறக்கம் கெடுவதாலும், பகலில் பள்ளியில் பாடத்தைக்கவனிக்காமல் தூங்கும் நிலையாலும் வகுப்பு ஆசிரியரிடம் பிரம்படி வாங்குவதும், வெயிலில் மணல் தரையில் கால்முட்டி புண்ணாகுமளவு மண்டியிடும் நிலை அடிக்கடி வந்ததால் பள்ளிக்கு மொத்தமாக முழுக்குப்போட்டு விட்டு வீட்டு வேலையிலும், விவசாய வேலையிலும் முழுமையாக கவனம் செலுத்தத்தொடங்கினான் ஓதிச்சாமி.
தங்கை செல்வியை மேற்படிப்பு படிக்க வைக்க கல்லூரி விடுதியில் சேர்த்து விட, தன் குடும்பத்து முதல் பட்டதாரியாக தங்கை ஆனதோடு, படிப்பு முடிந்தவுடன் நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைத்ததால் குடும்பமே மகிழ்ச்சியடைந்தாலும் தங்கை கூறிய ஒரு செய்தி இதயத்தில் இடியாய் இறங்கியது.
தான் கல்லூரியில் படிக்கும் போது உடன் படித்த மாணவனை விரும்பியதாகவும், அவனுக்கும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும், இருவரும் திருமணம் செய்து கொண்டு வெளி நாடு செல்ல உள்ளதாகவும் கூறியது தான் அந்த செய்தி.
தங்கச்சி பேசும் போதே தந்தை மயங்கி சரிந்தார். சற்று நேரத்தில் சுய நினைவு வந்ததும் தான் செத்துப்போவதாக மகளை மிரட்டிப்பார்த்தார். உறவுகளை அழைத்துப்பேசினார். யாருடைய யோசனைகளுக்கும் செல்வி செவி மடுக்காமல் காதலித்த பையனையே கரம் பிடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தாள். ‘அவனை வேண்டாம் என்றால் இந்த ஜென்மத்தில் தனக்கு திருமணமே வேண்டாம்….’ என பெரிய குண்டைத்தூக்கிப்போட, தந்தை வேறு வழியில்லாமல் திருமணத்துக்குச் சம்மதித்தார்.
சாதி மாறி திருமணம் செய்ததால் உறவுகளை அழைக்காமல் திருமணத்தை பதிவு செய்வதற்க்காக வெளியூரிலுள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. தந்தை மன நிலையும், உடல் நிலையும் சரியில்லாததால் வரவில்லை. ஓதிச்சாமியும், மூத்த சகோதரி குடும்பத்தினரும் மட்டும் சென்று திருமணத்தில் கலந்து கொண்டு வந்து விட்டனர்.
மாப்பிள்ளையும் பொண்ணும், மாப்பிள்ளையின் உறவுகளும் ஹோட்டலில் உள்ள தங்கும் அறைகளில் தங்கி விட்டு, உணவையும் அங்கேயே சாப்பிட்டு விட்டு மறுநாள் மாப்பிள்ளை வீட்டிற்குச்சென்று விட்டனர். அதன் பின் சகோதரியுடன் போனில் பேசுவதை கூட விரும்பவில்லை ஓதிச்சாமியும், அவனது தந்தையும், மூத்த சகோதரியும்.
இப்படியிருக்க ஒரு நாள் பக்கத்து தோட்டத்தில் இருந்த தன் பெரியப்பா மகன் வடிவேலுவின் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்த செல்வியும், அவளது கணவனும் ஒரு நாள் காலையில் வந்து தனக்கு சேர வேண்டிய சொத்துக்களைப்பிரித்து தருமாறு சண்டை போட்டனர். வடிவேலுவும் அவர்களுக்கு ஆதரவாகப்பேசினான்.
அவனது பங்காளியான வடிவேலுவுக்கு சிறுவயதிலிருந்தே ஓதிச்சாமியைப்பிடிக்காது. அவனுடைய துடிப்பான செயல் பாடுகள், புத்திசாலித்தனம், ஒழுக்க குணம் அவனை வாழ்வில் படிப்படியாக முன்னேறச்செய்ததைக்கண்டு வடிவேலுவை பொறாமை கொள்ள வைத்தது.
உறவுகளிடம் ஓதிச்சாமியைப்பற்றி மோசமாகவே பேசுவான் வடிவேலு. ஆனால் ஓதிச்சாமியோ வடிவேலுவை பங்காளியாக நினைத்தானே தவிர பகையாளியாக ஒரு போதும் கருதவில்லை.
தன் சகோதரியைப்பயன்படுத்தி தன்னை பலவீனப்படுத்த முயலும் வடிவேலுவை எண்ணி முதன்முதலாக வருந்தினான்.
‘இரண்டு பேருக்கும் தாத்தா ஒன்று தானே? இருவரும் ஒரே ரத்தம் தானே? பெரியப்பா மகன் எனக்கு அண்ணன் தானே?’ என அவனை யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் பேசுவான். ஆனால் இன்று ‘குடும்பத்தை, சொத்துக்களைப்பிரித்து விட தங்கைக்கு சொல்லிக்கொடுத்து ஆட்டம் பழக்குகிறானே?’ என நினைத்து வேதனை கொண்டான்.
ஊர் பெரியவர்களையும், உறவுகளையும் அழைத்து இருக்கும் சொத்துக்களை நான்காகப்பிரித்தனர். ஓதிச்சாமிக்கு ஒருபங்கு, தந்தை காளிச்சாமிக்கு ஒரு பங்கு, மூத்த சகோதரி ராணிக்கு ஒரு பங்கு, தங்கை செல்விக்கு ஒரு பங்கு என பிரித்து அதற்க்கான தடம் விட்டு கிரையம் செய்தனர்.
மூத்த சகோதரிக்கு கொடுத்த பங்கில் விவசாயம் செய்ய வராமல் தம்பி ஓதிச்சாமியிடமே விட்டு விட, தங்கை மட்டும் தன் பங்கை பெரியப்பா மகன் வடிவேலுவை விவசாயம் செய்ய ஒப்படைத்தது தந்தைக்கும் மகனுக்கும் செல்வி மீதும், வடிவேலு மீதும் வருத்தமும், ஆத்திரமும் ஏற்பட்டது.
திருமண வயது வந்ததாலும், சொத்து பிரித்து விட்டதாலும் உறவுகளில் பலர் பெண்கொடுக்க முன்வர, ஓதிச்சாமியும் ஒத்துக்கொள்ள, உறவுப்பெண் சாந்தியை திருமணம் செய்து கொண்டான். தனது திருமணத்துக்கு தங்கையை அழைக்கவில்லை.
ஓதிச்சாமியின் கடின உழைப்பிற்கும், ஒழுக்க குணத்திற்க்கும் பல பெற்றோர் பெண் கொடுக்க முன் வந்தும், தலை சொட்டையாக இருப்பதைக்காரணம் காட்டி சில பெண்கள் மறுத்து விட, வறுமை நிலையிலிருந்த சாந்தி வசதியை முன்னிட்டு சம்மதித்ததால் திருமணம் நடந்தது.
சாந்தி பங்காளி வடிவேலுவின் சகோதரியின் மகள். சாந்தியின் தாய் தம்பி வடிவேலுவிடம் சொத்தில் பங்கு கேட்டதால் உறவு பகையாகி விட வடிவேலுவால் சாந்தியை திருமணம் செய்து கொள்ள இயலாமல் போனது.
‘தான் திருமணம் செய்ய வேண்டிய பெண்ணை பங்காளி தம்பி ஓதிச்சாமி திருமணம் செய்து விட்டானே…?’ என மனக்குமுறலில் இருந்த வடிவேலு ஓதிச்சாமிக்கு அளவில்லாத தொந்தரவுகளைக்கொடுத்தான்.
தன் வீட்டு வாசல் மண்ணாக இருப்பதால் அடிக்கடி புள் முளைத்து விடுகிறது என எண்ணிய ஓதிச்சாமி சிமெண்ட், ஜல்லி, மணல் சேர்த்து தளம் போட்டதை பொறுத்துக்கொள்ளாத வடிவேலு தனது எருமை மாடுகளை இரவில் அவிழ்த்து விட்டு தளத்தை உடைத்து விட்டான். காலையில் எழுந்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்து கண்ணீர்விட்டு அழுது விட்டு, வடிவேலுவை அழைத்துக்கேட்ட போது ‘கயிறு தானாக அவிழ்ந்ததால் மாடுகள் வந்து மிதித்து விட்டன’ என பொய்யாகக்கூறி தப்பித்துக்கொண்டான்.
தனது தோட்டத்திலிருந்த தென்னை மரங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் வாடியதைக்கண்டு கண்ணீர் வடித்தான் வடிவேலு. போர் போடுமளவுக்கு தனக்கு வசதியில்லாத நிலையில் ஓதிச்சாமி இன்று போர் போட போர் போடும் வாகனத்தை வரச்சொல்லியிருப்பதாகக்கேள்விப்பட்டு பொறாமை கொண்டான்.
அவன் போர் போட்டு அவனது வயலில் நெல் விளைந்தால் உறவுகள் அவனைப்பாராட்டுவார்கள். பக்கத்து பங்காளியான தன்னைக்கேவலமாக நினைப்பார்கள். தான் கெட்டால் பிறரும் கெட வேண்டுமென எண்ணியவனாய், வஞ்சகத்தை மனதில் வளர்த்தவனாய் ஓதிச்சாமியின் காட்டிற்கு பொது தடத்தில் வரவிருக்கும் போர் போடும் வாகனத்தை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என சூழ்ச்சி செய்தான்.
வாகனம் வந்த போது மாடுகளை வழித்தடத்தில் கட்டி வைத்து, கற்களை எடுத்துப்போட்டுத்தடுத்தான். “ஏன் தடுக்கிறாய்?” என ஓதிச்சாமி கேட்டதற்கு ‘மாட்டு வண்டி ஓட்டவும், ஆடு, மாடு, பிடித்துச்செல்லவும் , நடந்து செல்லவும் தான் கிரைய பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. லாரி ஓட்டலாம் என எழுதாததால் ஓட்டக்கூடாது” என்றான்.
ஊரில் சிலரைக்கூட்டி வந்து அந்தக்காலத்தில் மாட்டு வண்டி என்றால் இன்று லாரி என புரிந்து கொள்ள வேண்டும் என ஊர் பெரியவர்கள் எடுத்துச்சொல்லியும் வடிவேலு கேட்காததால், காவல் துறையில் புகார் கொடுக்க காவலர் வந்து சொன்ன பின்பே போர் போடும் வாகனத்தை ஓதிச்சாமியின் காட்டிற்குள் செல்ல அனுமதித்தான் வடிவேலு.
போர் போட்டதில் எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் கிடைக்க தன் தோட்டத்தில் வயல் அமைத்தான் ஓதிச்சாமி. அந்த வயலில் தேங்கி நின்ற தண்ணீரின் ஓதம், பத்தடி தள்ளியிருந்த வடிவேலு தோட்டத்தில் வரப்பருகில் இருந்த, வறட்சியால் வாடி காய்க்காமல் இருந்த பல தென்னை மரங்களை செழிப்படையச்செய்தது. அதன் பின் அந்த தென்னை மரங்கள்அதிகளவில் தேங்காய்கள் காய்த்தன.
சொல்லப்போனால் கடன் பட்டு போர் போட்டதால் கிடைத்த தண்ணீரால் நெல் வயல் கட்டிய ஓதிச்சாமிக்கு விளைந்த நெல்லில் கிடைத்த வருமானத்தை விட, அதிக அளவு வருமானம் போர் போடுவதைத்தடுக்க முயன்ற வடிவேலுவுக்கு கிடைத்திருந்தது. வடிவேலுக்கு நன்மை ஏற்பட்டதைக்கண்டு ஓதிச்சாமி பெருமைப்பட்டானே தவிர வடி வேலுவைப்போல் பொறாமைப்படவில்லை!