பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 4,984 
 

“சௌந்தரம்! சீக்கிரமா ஒரு டம்ளர் தண்ணியோ , மோரோ கொண்டு வாம்மா!”

“என்னாச்சு! ஏன் மூச்சு வாங்கறது?! பழனிக்கு பாத யாத்திரை போன மாதிரி மூஞ்சியெல்லாம் வேர்த்து கொட்டி ……”

“பழனிக்கே போய்ட்டு வந்திருக்கலாம்!! புண்ணியமாவது மிஞ்சியிருக்கும்”

நடராஜனுக்கு நிஜமாகவே மூச்சு வாங்கியது! போன வருஷம் தான் பைபாஸ் அறுவை சிகிச்சை பண்ணிக் கொண்டார்!

“கார்ல போனா அரைமணிநேரம் , பஸ்ல முக்கா மணிதான்னு சொன்னானே புண்ணிய கோடி!!”

“கூப்பிடு தூரம்! கூப்பிடு தூரம்னு சொல்லி சொல்லி காஞ்சீபுரம் வந்துடும் போல ஆய்ட்டுது!”

பட படவென்று கன்னத்தில் போட்டுக் கொண்டாள் சௌந்தரி!

முக்தி ஸ்தலங்கள் பேரைக் கேட்டாலே கன்னத்தில் போட்டுக் கொள்ளும் சுபாவம்!!

நடராஜனுக்கோ பளார் பளாரென்று அந்த புண்ணிய கோடி கன்னத்தில் அறைய வேண்டும் போல் ஆத்திரம்!

“ம்! அப்புறம்! “

ஸ்ரீ பெரும்புதூரையும் தாண்டி கூடுவாஞ்சேரி! அங்கேந்து அஞ்சாறு கிலோமீட்டர்ல்ல நந்திபுரமாம்! அங்கே நந்தி காலனி! இருபது கிரவுண்டில் ஒரு கிரவுண்டு மேனிக்கு பிளாட் போட்டு வச்சிருக்கான்!

சுத்துவட்டாரத்தில் ஆள் ஆரவமே கிடையாது! வயக்காடு மாதிரி ஒரே தண்ணி!

“மணப்பாறை மாடுகட்டின்னு “பாடலாம்போலத்தான் தோணித்தே தவிர வீடு கட்டி வாழணும்னு சத்தியமா தோணல!”

‘வெய்யில் காலம் வரட்டும் பாருங்க ஸார்! பொட்டு தண்ணி இருக்காது! எல்லாம் உறிஞ்சிடும்! தண்ணி கஷ்டமே வராது!

ஒரு கிரவுண்டு ஒரு லட்சத்துக்கு , இந்த மாதிரி இடத்தை வாங்க முடியுமா யோசியுங்க ‘ன்னு என்ன ப்ரெயின் வாஷ் பண்ணப்பாக்கறான்!

சுத்த ஃபிராட்!!!

“நிறுத்துங்கோ! ஸ்டாப்…ஸ்டாப்…!

என்னசொன்னேள்! நந்திபுரமா ? நந்திகேஸ்வரர் கோவில் ரொம்ப பிரசித்தமாச்சே! எனக்கு சௌந்தரின்னு பேரு ஏன் வச்சா தெரியுமா ??”

‘Who wants to be a millionaire ‘அமிதாப் பச்சன் ஸ்டைலில் பார்த்தாள் .!!!

“எனக்கென்ன தெரியும்! சொன்னாத்தானே!!”

“பத்து வருஷம் கழிச்சுதான் நான் பொறந்தேனாக்கும்!

அப்பா தாம்பரத்தில ஸ்டேஷன் மாஸ்டரா இருக்கும் போது நந்திகேஸ்வரர் கோவிலுக்கு வேண்டிண்டுதான் நா பொறந்தேன்! அம்மன் பேருதான் எனக்கு! ”

இந்த தடவை கொஞ்சம் பலமாகவே கன்னத்தில் போட்டுக் கொண்டாள்!

“ஸ்தல புராணம் தான் சொல்லப்போறேன்னு பாத்தா சௌந்தரி புராணம் சொல்லியாறது! ”

“இருங்கோ! ஸ்தல புராணமும் இருக்கு! ஒரு மாடு தினமும் புத்துல போய் பால் சுரந்ததாம்! பார்த்தா அங்கு ஒரு சிவலிங்கம் இருந்துதாம்! அந்த ஊர் ராஜா சிவனுக்கு கட்டின கோவில்தான் நந்திகேஸ்வர கோவில்! பேசாம நான் சொல்றதை கேளுங்கோ!”

“இத்தன வருஷம் அதானே பண்ணிண்டு இருந்தேன்! இனிமே பண்ணமாட்டேனா ?’

“அந்த புண்ணிய கோடிக்கு, கோடி புண்ணியம்! பேசாம கண்ணமூடிண்டு இரண்டு கிரவுண்டு உடனே புக் பண்ணிடுங்கோ! “

“பேசவும் கூடாது! கண்ணையும் மூடிண்டுட்டா! அவ்வளவுதான்! அவனுக்கு சுலபமாக போய்டுமே ஏமாத்தறத்துக்கு!

இரண்டு மாசத்துக்குள் ரிஜிஸ்ட்ரேஷன் எல்லாமே முடிந்துவிட்டது! ஆச்சு! ஒரு வருஷத்துக்குள் அதைப் பத்தி நடராஜனுக்கு சுத்தமா மறந்தும் போச்சு!

முதலில் மூணு மாசத்துக்கு ஒரு தடவை இரண்டு பேரும் போய் பார்த்தார்கள்!!

எப்போதும் ஏழெட்டு மாடு மேய்ந்து கொண்டிருக்கும்!

“நந்தி, நந்தி” என்று சௌந்தரம்தான் கன்னத்தில் போட்டுக் கொள்வாள்

கொஞ்சம் கொஞ்சமா அவள் வருவதை நிறுத்தி விட்டாள்!

நடராஜனை மட்டும் துரத்திக் கொண்டிருந்தாள்! அப்புறம் அதுவும் நின்று விட்டது!

மூணு வருஷத்தில் அங்கே ஒரு இடம் வாங்கிப்போட்டதையே சுத்தமாய் மறந்துவிட்டார்!

நடராஜன் இருப்பது மாம்பலத்தில்! எலி வளையானாலும் தனி வளை!

ஆனால் பேரன் பேத்திகள் என்று பெரிய குடும்பமானதும் கொஞ்சம் பெரிய வீடாய் பார்த்தாலென்ன என்று தோண ஆரம்பித்தது!

கையில் P.F. , சேமிப்பு ,எல்லாம் திரட்டி போட்டாலும் நங்கநல்லூரில் வீடு வாங்க பத்து லட்சம் இடித்தது!

இந்த மாதிரி சமயங்களில் சௌந்தரத்தின் மூளை அபாரமாய் வேலை செய்ய ஆரம்பித்து விடும்!!!!

“ஏங்க! கூடுவாஞ்சேரி நிலத்தை வித்தா என்ன ? “

“உனக்கு நந்தீஸ்வரர் கிட்ட இருக்கணும்னு சொன்னியே ”

“நீங்க வேணா ஒரு நடை போய் பாத்துட்டு வாங்கோ! வீடு கட்டலாமா , வித்துடலாம்மான்னு அப்புறம் முடிவு பண்ணலாம்! “

“போறதுக்கு முன்ன புண்ணிய கோடிக்கு ஒரு போனப்போட்டு நிலம் என்ன வெலைக்கு போறதுன்னு கேளுங்கோ!!”

எங்கயோ கார்ப்பரேட் ஆஃபீஸில் ஃபைனான்ஸ் மேனேஜராய் இருக்கவேண்டியவ!

உடனே புண்ணிய கோடிக்கு போனை போட்டேன்!

“ஸார்!! நானே உங்கள கூப்பிட இருந்தேன்! கூடுவாஞ்சேரி நில விஷயம் தானே!! ”

“ஆமாம்பா! இப்போ நிலவரம் என்ன …..”

“ஸார்! நீங்க ரொம்ப லக்கி… இப்போ ரேட் தெரியுமா ?? கிரவுண்டு பத்து லட்சம் ஸார்!! “

“டெவலப் ஆயிருக்கா? ”

“தெரியல! நா போய்ப் பார்க்கல ஸார்! ஆனா பத்து லட்சத்துக்கு வாங்க பார்ட்டி ரெடியா இருக்கு! நீங்க போய் பாத்துட்டு வந்து சொல்லுங்க ஸார்! உடனே முடிச்சுடலாம்! பூரா ஒயிட் ஸார்! “

சௌந்தரம் நல்ல நாள் குறிச்சுக் கொடுத்தாள்!

ராத்திரியெல்லாம் தூக்கமேயில்லை! என்னென்னவோ கனவு!

பெரிய வீடு நிறைய மாடுகள் கூட்டம்! நடுவில் ‘சிவ! சிவா!’ என்ற கோஷம்! மணியடிக்கும் சத்தம்! காலையிலேயே முழிப்பு தட்டியது!

ஒரு ஒன்பது மணிக்கு நாலு இட்லியை முழுங்கிவிட்டு , காப்பியைக் குடித்துவிட்டு நேரே மாம்பலம் ஸ்டேஷனுக்கு நடையைக் கட்டினார்!

பத்து நிமிஷத்தில் கூடுவாஞ்சேரி ரயில் வந்துவிட்டது! சரியாக ஒருமணி நேரத்தில் நந்தி காலனி வந்தாச்சு!

முன்ன பாத்த மாதிரிதான் இருந்தது! ஆனால் ஏழெட்டு வீடுகள்!

“நந்தி பால் பண்ணை “”Nandhi Dairy Farm ‘”என்ற பெரிய பலகை மட்டும் தூரத்திலிருந்தே பளிச்சென்று தெரிந்தது! அதுவும் அவருடைய பிளாட்டை ஒட்டி!

நடராஜனுக்கு ஏக குஷி! இது போதுமே! சுலபமா அஞ்சு லட்சம் ஏத்திடலாம்!

பக்கத்தில் போய் பார்த்தார்!!

லேசாய் ஒரு சந்தேகம்! பையிலிருந்து பட்டாவை எடுத்து சர்வே நம்பரைப் பார்த்தார்! பொறி கலங்கியது!

கண்ணாடியை எடுத்து நன்றாக துடைத்து போட்டுக் கொண்டு மறுபடியும் பார்த்தார்!

சந்தேகமேயில்லை! நந்தி பால்பண்ணை இருந்தது அவருடைய பிளாட்டில்….

தலை சுற்றுவது மாதிரி இருந்தது! சமாளித்துக் கொண்டு கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனார்!

சத்தம் கேட்டு உள்ளேயிருந்து ‘பெரிய ஸ்டிக்கர் பொட்டுடன்’ ஒரு தாட்டியான அம்மா பிரத்யஷமானார்!

“வாங்க!” ஒற்றை வார்த்தையில் நிறுத்திக் கொண்டாள்!

எப்படி ஆரம்பிப்பது என்று சுத்தமாய் புரியவில்லை! ஏதாவது சொல்லப் போய்……!

உள்ளே நுழைந்ததும் ஒரு ரூமைக்காட்டி உட்காரச் சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள்!

ஆஃபீஸ் ரூம் போலிருந்தது! நிறைய ஃபைல்கள்… நோட்டுப் புத்தகங்கள்…! இரண்டு போன்கள்! சுவர் முழுதும் கறவை மாடுகளின் போட்டோக்கள்! கலர் கலராய்!

ஒரு போட்டாவில் பெரிய மீசையுடன் சிரித்துக் கொண்டு யாரோ M.L.A. பக்கத்தில் ஒருவர்!!

பக்கத்தில் தடுப்பு! நிறைய பால் கேன்கள்…!!

வியாபாரம் சக்கைபோடு போலிருக்கு!

வாசலில் பல்சர் 500 சத்தம்!

மீசைக்காரன்தான்!!

“ஸார் யாரு! உக்காருங்க!”

உள்ளே திரும்பி ‘ குமாரி! இரண்டு மோரு கொண்டு வா ‘ என்றவர் ,

‘ஸாரைப் பார்த்ததில்லை! என் பேரு ஆறுமுகம்! இந்த மோரைக் குடிச்சுட்டு சொல்லுங்க! நம்ம மாட்டுப் பாலிலிருந்து எடுத்தது! எல்லாமே சீமைப் பசு ஸார்….! ஒரு நாளைக்கு முப்பது லிட்டருக்கு குறையாது! சில சமயம் அம்பது கூட கறக்கும்!!! டென்மாக்கிலேர்ந்து இறக்குமதி செஞ்சதுங்க..!! யான விலை சார்…இன்னும்வட்டியே அடைக்கலை! அடுத்த வருஷத்துக்குள் வட்டியும் முதலும் சேர்த்து செட்டில் பண்ணி விடுவேன்!!…

குமாரி இரண்டு டம்ளர் மோருடன் வந்தாள்!

“எங்களுக்கு நந்திகேஸ்வரருடைய பரிபூரண அருள் கிடச்சிருக்கு ஸார், தினமும் முதல்ல கறக்கிற ஒரு லிட்டர் பாலை அப்படியே அபிஷேகத்துக்கு அனுப்பிட்டுத்தான் அடுப்பையே பத்த வைப்பேன்! நந்திகேஸ்வரரே இந்த இடத்தைக் காட்டி குடுத்திருக்கிறார்னுதான் தோணுது!”

என்ன நந்திகேஸ்வரரே காட்டிக் கொடுத்தாரா? அவர் குமாரி பக்கம் சாஞ்சுட்டாரா? தினமும் ஒரு லிட்டர் ‌பால்!! அதுவும் சீமைப் பசும்பால்!!!

சௌந்தரி தலை தலையா அடிச்சுண்டாளே! ஒரு லிட்டர் பாலபிஷேகம் பண்ணியிருக்க மாட்டேனோ? எனக்கு நல்லா வேணும்!

வந்த காரியத்தை சுத்தமாய் மறந்தே போனார் நடராஜன்!

“ஸார்! இந்த பிளாட்..,..???”

இரண்டு வருஷம் முன்னால் முப்பது லட்சத்துக்கு வாங்கிப் போட்டேன்!

பால்பண்ணை வைக்கணும்னு ரொம்ப நாள் கனவு! ஆறு மாசம் முன்னாடி தான் லோன் சாங்ஷன் ஆச்சு! எல்லாம் அவன் செயல்!!

சுத்துவட்டாரம் எல்லாம் நம்ம பால்தான்! தொழில் சுத்தம் ஸார்…!!…..

“ஸார்! உங்களையும் என்னையும் யாரோ ஏமாத்திட்டாங்க! இது என்னோட பிளாட் ஆறுமுகம்!!”

“என்ன ஸார் சொல்றீங்க! ஆறுமுகம் எழுந்து நின்று விட்டார்! சுளையா முப்பது லட்சம் குடுத்திருக்கேன் ஸார்! “

“எம் பேரு நடராஜன்! உங்களுக்கு வித்தவன் யாரு ? இரண்டு பேரும் சேர்ந்து அவனை ஒரு பிடி பிடிக்கலாம்!”

“நீங்க கன்ஃப்யூஸ் ஆய்ட்டிங்கன்னு நினைக்கிறேன்! பட்டா இருக்கா ? சர்வே நம்பர செக் பண்ணுங்க நடராஜன்!!!

பையிலிருந்து எல்லா பத்திரத்தையும் எடுத்து மேசை மேல் வைத்தார் நடராஜன்!

ஒண்ணு விடாமல் எல்லாத்தையும் கண்ணில் எண்ணை விட்டுக்கொண்டு பார்த்தார் ஆறுமுகம்!

“நீங்கள் சொல்றது சரிதான்! ஆனால் இது ஒரிஜினல்தானா? சந்தேகமாக இருக்கே!”

‘ஒரு நிமிஷம்’ என்று உள்ளே போனார்! ஒரு பெரிய கட்டுப் பேப்பருடன் வந்தார்!

“பாருங்க ஸார்! எல்லாமே ஒரிஜினல் டாக்குமெண்ட்தான்! அச்சு அசல் என்னோட டாக்குமெண்ட் காப்பி! இப்பவே கிளம்புங்க ஆறுமுகம்! அவனை ஒரு கை பாத்துடலாம்!”

“அவன் போன மாசம் தான் ஒரு ஸ்கூட்டர் விபத்துல போய்ட்டான் நடராஜன்!!”

நடராஜன் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார்!

“நடராஜன்! இரண்டு பேருமே ஏமாந்து போயிருக்கோம்! நீங்க முதல்லே வீட்டுக்கு போங்க! அடுத்த வாரம் ஒரு நாள் சப்ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸ் போய் இது எப்படி சாத்தியம்ன்னு பாத்துடலாம்! நா மனசறிஞ்சு உங்களுக்கு துரோகம் பண்ணல! என்ன நம்புங்க!”

சௌந்தரி முகத்தில முழிக்கவே பயந்தார்!

ஆனால் சௌந்தரி ஆர்ப்பாட்டம் எதுவுமே பண்ணவில்லை!

“நாம் குடுத்தது இரண்டு லட்சம்! ஆனா அந்த மனுஷன் முப்பது லட்சம் குடுத்து ஏமாந்துட்டாரே!”

“சப்ரிஜிஸ்ட்ரார் எல்லாம் வேலைக்கு ஆகாது! என்னோட ஒண்ணு விட்ட சித்தப்பா சுந்தரேசனோட மருமான் ஹரிஹரன் பெரிய வக்கீல்னு கேள்விப்பட்டிருக்கேன்! நாளைக்கே அவரைப் போய் பாருங்கோ! ”

மனைவி அமைவதெல்லாம் …….

இதோ இன்னியோட நாலு வருஷமாச்சு! ஹரிஹரன் ஆபீஸ் மந்தவெளியில்!

நடையாய் நடந்து மூணு ஜோடி செருப்பு தேய்ந்ததுதான் மிச்சம்!

ஃபீஸ் வாங்கவே மாட்டேன்னு சொன்னாரே ஒழிய, குமாஸ்த்தாவுக்கு பேப்பர் செலவு, ஃபைல் பண்ண அப்ளிகேஷன் ஃபீஸ்னு முப்பதாயிரம் போல செலவு , பஸ் சார்ஜ் வேற!

இதோ! இப்போ கூட ஹரிஹரன் ஆபீஸில் தான் நுழைகிறார்!

வீட்டிலேயே சைடில் தான் ஆபீஸ்! தாத்தா கணபதி ஹைகோர்ட் ஜட்ஜாக இருந்து ரிடையர் ஆனவர்!

அப்பா சிவஞானமும் லேசுபட்டவர் இல்லை! ஒரே பையன்!

பாட்டன் சொத்து! தேக்கு மரத்தால் இழைத்து பண்ணின அலமாரிகள்! பூரா பூரா கேஸ் கட்டுகள்!

அநேகமாய் தாத்தாவோடதாய் இருக்கும்! ஷோவுக்காக வச்ச மாதிரி தோணும்!

இவருக்கு கேஸ் வந்து நடராஜன் பார்த்ததேயில்லை! ஆனாலும் எப்போ ஃபோன் பண்ணினாலும் நம்பர் பிஸி!

நடராஜனைப் பார்த்ததும் தெரியாத மாதிரி , கண்ணாடியைத் தூக்கி விட்டுக்கொண்டு “யாரு ? “என்றார்!

அடுத்து அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நடராஜனுக்கு நல்லா மனப்பாடம்!

நாலு வருஷமாய் கேட்டுக் கொண்டிருக்கிறாரே!!

“நடராஜனா! இப்போதான் உங்க ஃபைலை எடுத்து வச்சிண்டு உக்காந்தேன்! ஒண்ணுமே கவலைப்பட வேண்டாம்! நம்ம பக்கம் ரொம்ப ஸ்ட்ராங்…! சுப்ரீம் கோர்ட் போனா கூட அவங்க ஒரு நாளும் ஜெயிக்கவே முடியாது! நீங்க தான் ஸார் முதல்ல ரெஜிஸ்டர் பண்ணியிக்கேள்! அந்த ரெஜிஸ்ட்ரார் கிட்டேயிருந்து ப்ரூஃப் கிடச்சா உலுக்கிட மாட்டேனா ?

ஆனால் அந்த ரெஜிஸ்ட்ரார் ரிடையர்மென்ட் வாங்கிக் கொண்டு போனவர் போனவர்தான்!!!!! எப்படியும் ப்ரூஃப் கிடைச்சிடும்!

“போன வாரம் மறுபடியும் வாய்தா கேட்டிருக்காங்க ஸார்! பயப்படறாங்க! இனிமே வாய்தா கிடையாதுன்னு ஜட்ஜ் கண்டிப்பா சொல்லிட்டார்! நேத்து வரவேண்டியது! ஜட்ஜ் லீவு சார்! அடுத்த வாரம் அநேகமாக இரண்டில ஒண்ணு தெரிஞ்சுடும்!”

நாலு வருஷமாய் அவருக்கும் அலுக்கவில்லை! நடராஜனுக்கும் அலுக்கவில்லை!

கோர்ட் லீவு…. வாய்தா! ஜட்ஜ் லீவு ….! வாய்தா! என்று இழுத்துக் கொண்டு போச்சு!

இதற்குள் சில சந்தோஷமான சம்பவங்களும் நடந்தன!!!!

நடராஜன் வக்கீலைப் பார்க்க நடையாய் நடக்கும் போது சௌந்தரி சும்மா இருப்பாளா ???

எல்லா பிரதோஷத்துக்கும் நந்திகேஸ்வரரிடம் அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டு விட்டாள்!

கேஸ் ஜெயிக்கணுமே!

குமாரிக்கும் அவர்தானே இடத்தைக் காண்பித்தார்!

அவளுக்கும் அப்பாயின்ட்மென்ட்.

இரண்டு பேரும் அடிக்கடி பார்த்துக் கொண்டதில் ஒருத்தருக்கொருத்தர் பிடித்து போய் விட்டது!

கொஞ்ச நேரம் கோவிலில் உட்கார்ந்து அவர்கள் ஏமாந்து போன கதையைப் பேசியிருப்பார்கள் போலிருக்கிறது!

நடராஜனும் ஒரு தடவை கூடப் போனார்!

வீட்டிற்கு வந்தேயாகவேண்டும் என்று குமாரி கூட்டிக் கொண்டு போனாள்!

ஆறுமுகம் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்தார்!

“வாங்க நடராஜன்! நம்ப குழந்தைகளைப் பார்த்ததில்லையே!!”

பின் பக்கம் கூட்டிக்கொண்டு போனார்!

நீட்டாக …வரிசையாய் மாட்டுத் தொழுவம்.

பதினைந்து கொழு கொழு சீமைப்பசுக்கள்! வெள்ளையில் பழுப்பும் , கறுப்பும் கலந்து வண்ணக்கலவையாய்!!

சௌந்தரிக்கு பசு மாடு என்றால் உயிர்! பக்கத்தில் போய் தடவிக் கொடுத்தாள்! புல்லைப் பிய்த்து போட்டாள்!

“குமாரி! அம்மாவுக்கு இரண்டு பாட்டில் நெய் எடுத்து வை! அப்படியே கோவாவும் , பால் கோவாவும் எடுத்து வை!

“ஆறுமுகம்! எதுக்கு இதெல்லாம்! ”

“நடராஜன்! தெரிஞ்சோ தெரியாமலோ உங்களுக்கு பெரிய துரோகம் பண்ணிட்டோம்! இப்போ வேற இடத்துக்குக் போறதை நினச்சு கூடப் பாக்க முடியாது! இந்த இடத்தை அடமானம் வச்சுத்தான் லோன் எடுத்திருக்கேன்! கையில் கடன் பத்திரங்கள் தவிர வேறு ஒண்ணுமே இல்லை! குமாரிக்கு இந்த மாடுகள்தான் குழந்தைகள்! கோர்ட் என்ன சொன்னாலும் ஏத்துக்கறேன்! என்னால இப்போ வேறெதுவும் சொல்லமுடியல! “

நடராஜன் வாயே திறக்கவில்லை!!

“நாங்க கிளம்பறோம்!!”

சௌந்தரி மாடுகளிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டாள்!!

அடுத்த தடவை பிரதோஷத்துக்கு போகும் போது ஒரு பெரிய டிபன் பாக்ஸில் மைசூர்பாகும், அல்வாவும் பண்ணி எடுத்துக் கொண்டாள்! சுத்த நெய் வாசனை மூக்கை துளைத்தது!

கோர்ட் கேஸ் ஒண்ணும் முடியறமாதிரி தெரியவில்லை!

ஒழிந்த நேரம் ‘நந்தி டைரி ஃபார்ம்ஸில்’ போய் உட்கார்ந்து கணக்கு வழக்கைப் பார்த்துக் கொள்கிறார் நடராஜன்!

சௌந்தரி பாதி நேரம் குமாரியுடன் சேர்ந்து மாடுகளுடனே நேரம் கழிக்கிறாள்!!!

தீர்ப்பு எப்படி இருந்தால் என்ன! இரண்டு குடும்பமும் அந்த நந்திகேஸ்வரர் அருளால் நிம்மதியாய் பொழுதைக் கழித்துத் கொண்டிருக்கிறார்கள்!!

வேறென்ன வேண்டும்???

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *