(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த வருடம் கோடை மிகவும் கடினமாக இருந்தது. விடுமுறை நாட்களைக் கழிக்கத் தகுந்த இடம் எது என்று எனக்குப் புலப்படவில்லை. எத்தனை நாளைக்கு இந்தப் பட்டணத்து ரோட்டில் தார் உருகும் காட்சியைக் கண்டு அனுபவிப்பது?
அனல் காற்று வீசிக்கொண்டிருந்தது. “போஸ்ட்” என்ற சத்தம் கேட்டுத் தெருக்கதவைத் திறந்தேன். நெற்றியில் வேர்வை சொட்ட, பால்காரன் கடித்ததை நீட்டினான். அவன் என்னை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. அவன் நாலைந்து வீடுகள் தாண்டிப் போயிருப்பான். அப்புறந்தான் என் சுய உணர்வை அடைந்தேன்.
உள்ளே சென்று கடிதத்தை உடைத்துப் படிக்க ஆரம்பித்தேன். பூமாடத்திலிருந்த என் அத்தை என்னை வரும்படி எழுதியிருந்தாள். பூமாடத்தைப்பற்றி நான் முன்னமேயே கேள்விப்பட்டதுண்டு. அழகிய கிராமம். தோப்பும் துரவுமாக இருக்கும். பொதுவாகப் பட்டணம் மாதிரி வெயில் கொளுத்தாது.
மறுநாள் பகல்வண்டிக்குப் புறப்பட்டேன்; பூமாடத்திற்குப் போக.குன்னேரி என்ற ரெயில்ஸ்டேஷனில் இறங்கி, இரண்டு மைல் போகவேண்டும். தயாராக மாட்டுவண்டியை ரெயிலடிக்கு அனுப்பியிருந்தாள் அத்தை. வண்டிக்காரன் தெம்மாங்கு பாடிக்கொண்டு வண்டியை ஓட்டினான். ஜல், ஜல்லென்று சலங்கை ஒலிக்க, வண்டி கட கடவென்று ஓடியது.
மாலை 6-மணிக்குக் கிராமத்து எல்லையை வண்டி அடைந்தது. சூரியன் தக தகவென்று தங்கம்போல் பிரகாசித்துக்கொண்டிருந்தான். அந்தத் தங்க மயமான ஒளியில் பூமாடமே அமிழ்ந்திருந்தது. பெரிய மனிதர் யாரையோ எதிர்பார்ப்பவர்கள்போல் அந்தத் தெருவிலிருந்த அத்தனை பேரும் என் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
வண்டியை விட்டு இறங்கியதும், அத்தை பெண் காமு ஓடிவந்து என் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். எதிர் வீட்டுத் திண்ணையிலிருந்த சிறுமியின் கண்கள் சுழலமிட்டு என்னை நோக்கியவண்ணம் இருந்தன. என்ன குறுகுறுப் பான கண்கள்! களை சொட்டும் முகம். ஒரு நிமிஷத்தில் அவள் என் இருதயத்தின் ஒரு சிறு பகுதியில் இடம் பெற்றுவிட்டாள். அந்த ஊரில் அவள் தான் காமுவின் அந்தரங்க சிநேகிதி என்று பிறகு தெரிந்தது.
அத்தையும் நானும் கூடத்து விசுப்பலகையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
“காமு!” என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். எதிர்வீட்டுப் பெண் நின்றுகொண்டிருந்தாள்.
“காமு! உன் சினேகிதி கூப்பிடுகிறாள்” என்றேன்.
“சினேகிதியுமாச்சு ! சனியனுமாச்சு! வேலை கீலை இல்லையா ? என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கு?” என்ற கடூரப் பழிமொழிகள் அத்தை வாயினின்றும் உதிர்ந்தன. சிறுமியின் முகம் சுண்டிவிட்டது. அவள் பேசாமல் போய்விட்டாள்.
***
பூமாடத்து ஸ்திரீ ரத்தினங்களுக்கு என்னைக் கண்டால் அதிசயம்! அந்தக் கிராமத்து எழிலை அவர்கள் அனுபவிக்கக் கொடுத்துவைக்கவில்லை. அதனால் அவர்களை மூடர்களென்று சொல்லமுடியாது. பட்டணவாச நாகரிகத்தைப் பாராதவர்களுக்கு என்னைக் கண்டால் ஆச்சரியமாக இருந்தது அதிசயமில்லை.
நான் பூமாடம் போன ஒருவாரம் கழித்து நானும் காமுவும் அருகிலிருந்த மலை அருவிக்குப் போகப் புறப்பட்டோம். தெருக்கோடியைக் கடந்ததும், எதிர்வீட்டுப் பெண் எங்கள் எதிரில் வந்தாள். அவள் வதனத்தில் புன்னகை அரும்பியது. “மாமி! நானும் வரட்டுமா? நீங்களும் காமு அம்மாவாட்டம் கோவிச்சுக்கமாட்டயளே ?”
“இவ்வளவு சமத்தான பெண்ணை அத்தை ஏன் கடிந்துகொள்கிறாள்?” என்று நான் நினைத்தேன்.
“வாயேன், தாராளமாய் வரலாம்” என்றேன்.
“என் பேர் தெரியுமா,மாமி?”
“தெரியாதே”.
“கமலா! ரொம்ப நல்ல பேராக்கும். எங்கம்மா கமலா என்பாள். அப்பா கமுலு என்பார். உங்களுக்கு எது இஷ்டமோ அப்படிக் கூப்பிடலாம்.”
மூவருமாய் மலை அருவிக்கு வந்துவிட்டோம். அவளுக்கு அங்கே பார்த்த ஒவ்வொரு பொருளும் ஆச்சரியமளித்தது. மாலைச் சூரியன் மேற்குத் திசையில் மறைந்தான். சரத் சந்திரன் உதய திசையில் தோன்றினான். அதற்குமேல் நாங்கள் அங்கே இருக்கக் கூடாதென்று, சுழன்று சுழன்று காற்று அடித்தது.
மறு தினத்திலிருந்து கமுலுவும் நானும் இணைபிரியாத் தோழிகள் ஆகிவிட்டோம். அத்தைமாத்திரம் வெடு வெடு என்பாள். அதை நான் பொருட்படுத்தவில்லை. கமுலுவிடம் அவள் அதிகத் துவேஷம் காட்டினாள் என்று சொல்வதற்கில்லை. அந்தக் காலத்து மனுஷர்களுக்கே கலகலப்பாய் இருந்தால் பிடிக்காது. கமுலுவின் குழந்தை உள்ளமும் கபடமற்ற தன்மையும் அத்தைக்குப் பிடிக்கவில்லை. அது சிலரின் இயற்கைக் குணம்.
இந்தக் கிராமத்திற்கு வந்து தங்கிய ஒரு மாதம் ஒரு நாளைப்போல் கழிந்துவிட்டது. அத்தையின் பிள்ளை கோபு காலேஜ் ‘லீவ் ‘விட்டதும் அங்கே வரவில்லை. நந்தி மலைக்குச் சிநேகிதர்களுடன் சென்றுவிட்டானாம். அந்த வருடம் கமுலுவால்தான் எனக்குப் பொழுதுபோயிற்று என்று சொல்லவேண்டும்.
பட்டணத்துத் தார் ரோட் மனமுருகி என்னை மறுபடியும் அழைத்தது. நானும், அதன் வேண்டுகோளுக்கு இணங்கி ஊருக்குக் கிளம்பினேன். கமுலு கண்ணீர் உகுத்தாள். “மாமி, என்னை மறந்துடாதிங்கோ ” என்று விக்கிக்கொண்டே சொன்னாள்.
கடக் கடக் என்று வண்டி தெருவைத் தாண்டிப் போயவிட்டது. கமுலுவின் கண்ணீர்வதனமும் மறைந்தது.
***
அத்தையின் ஊரைவிட்டு வந்து நான்கு வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. கமுலுவைப்பற்றி இடையில் காமுவால் அறிந்துகொண்டேன்.
அன்று மப்பும் மந்தாரமுமாக இருந்தது. “போஸ்ட்” ன்ற சத்தம் கேட்டது. தபால்காரன் புன்னகையுடன், “அம்மாவுக்குக் கல்யாணக் கடுதாசி வந்திருக்கு” என்று கடிதத்தை நீட்டினான். அது பூமாடத்திலிருந்து வந்த கடிதம்.
“சிரஞ்ஜீவி கோபுவுக்குச் சௌபாக்கியவதி கமலாவைப் பாணிக்கிரகணம் செய்து கொடுப்பதாய்” என்று வாசித்துக்கொண்டே போனேன். “பாணிக்கிரணம் பெரியவர்கள் நிச்சயம் பண்ணியிருக்க மாட்டார்கள் : கடவுளாவது அல்லது தம்பதிகளாவதுதான் நிச்சயம் பண்ணியிருக்க வேண்டும்! இல்லாவிட்டால் அத்தைக்கு முன்பு இருந்த துவேஷம் எங்கே, இப்பொழுது இருக்கிற சமரசம் எங்கே?” என்று தீர்மானித்தேன்.
பூமாடத்துப் பழைய தெரு வழியாக என் வண்டி ஓடிற்று. வண்டிக்காரன் தெம்மாங்கு பாடவில்லை. கல்யாணச் சாப்பாட்டைப்பற்றி அவனுக்கு நினைவு. கமுலுவுக்கு அத்தை தலைவாரிப் பின்னிக்கொண்டிருந்தாள்.
“என்ன அத்தை, கமுலுவை உனக்குப் பிடிக்கிறதா?” என்றேன்.
“பிடிக்காமல் என்ன? அந்தப் பிள்ளை ஒரே அடியாக, ‘அவளைத்தான் பண்ணிக்குவேன்’ என்றால், நான் என்ன செய்யமுடியும்? எப்படியாவது அவா நன்னா இருந்தாப் போதும். எல்லாம். பகவான் செயல்!” என்றாள்.
கமுலுவை நான் வாரி அணைத்து ஆசீர்வதித்தேன்.
– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.