பகட்டு பணியாரக்காரி

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 4, 2023
பார்வையிட்டோர்: 3,934 
 
 

சேவல் கூவும் சப்தத்திற்குப் பிறகு, ஆடுமாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் சப்தம்தான், அந்த கிராமத்தின் பிரதான சூழலாக இருந்த்து. யார் கண்பட்டதோ தெரியவில்லை. லாட்டரி வியாபாரி மூர்த்தி வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது. சிறிது நேரத்தில், அங்கு வந்து நின்ற வாகனத்திலிருந்து, போர்த்தப்பட்ட உடல், வீட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டது..

ஈளை கட்டிய கண்களோடு, வீட்டு வாசலுக்கு வந்த மங்கம்மா ஜான்ஸி, தொப்பையுடன், வீட்டுத்தரையுடன் மல்லுக்கு நிற்பதுபோல், உடம்பைக் கிடத்தியிருந்த கணவனை எழுப்பினாள். ‘ ‘ஏங்க விடிஞ்சிருச்சு எந்திரீங்க, மூர்த்தி பாடி வந்திருச்சு போல’ என்றாள். எழுந்தவுடன் முகத்தில் தண்ணீரை வாரி இறைத்து விட்டு, மூர்த்தி வீட்டுக்கு முன் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான் ஜான்ஸி கணவன்.

உறவினர்களிடம் கவலையை பகிர்ந்து கொண்டானோ இல்லையோ, கையிலிருந்த செல்போனிலேயே கண்களை வைத்திருந்தான். பக்கத்தில் இருந்த, வேலுச்சாமியை பார்த்துச் சிரித்ததோடு சரி, ஏதோ முக்கிய அரசாணை ஒன்றை தயார் செய்வது போல, செல்போனில் டைப் செய்தான்.

சிறிதுநேரத்தில், திருவிழாவுக்குச் செல்வது போல, இரட்டைவடம்தங்கச் சங்கிலி மின்ன, கருத்துக் கிடந்த தன் உடம்பை அசைத்தவாறு அங்கு வந்தாள் மங்கம்மா ஜான்ஸி. உள்ளே போய், தூணுக்கு சவால் விடுவதுபோல, அதன் அடியில் திருவிழா ஒலிபரப்புக்கு வைக்கட்ட ஸ்பீக்கரைப் போல, உட்கார்ந்தாள்.

இதற்காகவே சேகரித்து வைக்கட்டது போல, ஓவென்று எழுப்பிய ஓலம் ஊராரின் கவனத்தை திருப்பியது. மார்பிலும், வயிற்றிலும் குய்யோ, முறையோ என்று அடித்துக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்த, பெண்களின் கண்களில் கண்ணீர் இல்லை. மேல் உதட்டுக்கு மேலேயும், கனனங்களின் இருபுறமும், சின்னஞ்சிறுசுகள் கிழிக்கும் கோடு போல, சளியின் வடுக்கள்தான் தென்பட்டன. அந்த அளவுக்கு முற்றிப்போய் இருந்த ஜலதோசத்தால், மூர்த்தி வீட்டை நாசம்தான் செய்து வைத்தார்கள்.

தூணுக்கு அடியிலேயே உட்கார்ந்திருந்த ஜான்ஸியின், தங்க ஆபரணங்கள் கண்ணைப் பறிப்பதாய் இருந்தன. நகை ஆசையில் உமிழ்நீரை உள்ளே இறக்கி இறக்கி, நாசமாய்ப் போன சில அனாமத்துகள், உறவினர் என்ற பெயரில் அவள் அருகே அமர்ந்து கதைத்தார்கள். கதைப்புகளும் கட்டுக் கதைகளும் முடிவுக்கு வர ‘ சரி வரட்டுமா’ என்று புறப்பட்டாள் மங்கம்மாள் ஜான்ஸி.

அருகே இருந்த தெய்வ சுந்தரி, நாறவாயி முண்டை, எளவு வீட்டுக்கு வந்திட்டு வரவான்னு போறா பாரு’ என்றாள்.

பிற்பகல் நான்கு மணி வாக்கில் இறுதிச் சடங்கு முடிந்தது. நெருங்கிய உறவினர்கள், மங்கம்மாள் ஜான்ஸியை சந்திப்பதறகாக ,அவள் வீட்டுக்குச் சென்றனர். வழக்கம்போல பணியாரக்கடையைத் திறந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள் அவள். இரண்டு வேளைப் பட்டினியால், வாடிப் போன வயிறோடு வந்த குலசேகரன், நண்ப்களுக்கு பணியாரமும், டீயும் ஆர்டர் செய்தான். சாப்பிட்டு விட்டு, எதுவும் கொடுக்காமல் திரும்பினர். அப்போது அவர்களை அழைத்தாள் ஜான்ஸி.

‘சாப்டதுக்கு எதுவும் கொடுக்காம்ப் போறீங்க, மாமியா வீடா இது, இங்கெ கடன் இல்லை தெரியுமா?’

“கொடுக்க கூடாதுன்னு கிடையாது, பிரியா பணியாரக்கடைன்னு போட்ருந்தது. அதனால் காசு வாங்க மாட்டிங்களோன்னு நெனச்சு, சும்மா வந்து சும்மா பொறப்புட்டோம்”

‘மருமக பேரை கடைக்கு வச்சிருக்கோம். மத்தபடி ஓசியிலெ யாபாரம் பாக்கலை’ என்று சாப்பிட்டதற்கான பண்த்தை வாங்கினாள் ஜான்ஸி.

அப்போது, அருகே இருந்த உறவினரைப் பார்த்த ஜான்ஸி, சரியான கூதரையளா இருக்காங்கே பாத்தியாளா’ என்றாள். அதற்கு அந்த உறவினர், ‘ மருமகளை நீ ஓஸியிலெ கொண்டு வந்தது, தெரிஞ்சிருக்குமோ என்னமோ..’ நீ பெரிய கில்லாடிங்கிறதை தெரியாம வந்துட்டாங்கே போல’ என்றாள்.

திரும்பும்போது, அழைத்துப் பணம் கேட்டதை அவமானமாக கருதிய குலசேகரன், நண்பர்களிடம் இது பற்றிப் பேசினான்.

‘இவ புருசனுக்கே சோறு போட மாட்டா, எப்டி ரெட்டை வடம் போட்ருக்கா பாத்தியா..?

‘அடப்போடா.்இவ பணியாரம் விக்கிறவ இல்லைடா, பணியாரம் வாங்குறவ. பக்கத்து ஊர்ல ஒரு பணியாரத்தை வாங்கி, அவளோட மூத்த புள்ளைக்கிட்ட கொடுத்திருக்காடா’

எதிரே வந்து கொண்டிருந்த சுப்பையா, ‘ என்ன கோபமா பேசிட்டுப் போறிங்க, எளவு வீட்லெ ஏதும் பிரச்சினையா” என்றான்.

‘இல்லைடா, பிரியா பணியாரக்கடைன்னு போட்ருந்துச்சு, சரி சும்மா சாப்டு வர்லாமேன்னு போனோம், கூப்பிட்டு காசு கேக்குறாடா கடங்காரங்கெ மாதிரி’

‘அவ மூஞ்சப்பாத்தா, பிரியாக் கொடுக்கிறமாதிரியா இருக்கு, உங்களுக்குப் புத்தி வேணாமா. இல்லேனா பக்கத்து வீட்லே, அவளோட தங்கச்சி கடைக்குப் போக வேண்டியதுதானே’

‘அந்தக்கடைல பிரியாவா கெடைக்கிது.. ?

‘ஏண்டா எங்கே போனாலும் பிரியாத்தான் சாப்டுவியா, அங்கு பணியாரம் கொஞ்சம் பெருசா இருக்கும், அது புடிக்கலையா, பாசந்தி கூட சாப்டு வரலாம், நல்ல டேsடா இருக்கிறதா பேசிக்கிட்டாங்க’

“எங்களுக்கு இந்த ஊரு புதுசுங்கிறதால தெரியலடா.. ஆனா பக்கத்துலெ சூரம்புளிங்கிற ஊர்லெ, கர்ணன்னு, ஒருத்தரு கடை வெச்சிருக்காரு, அவரு நல்ல மனுசனுங்கூட, அவருக்கு உள்ள பணியாரத்தையே, நமக்கு கொடுத்து சாப்புடச் சொல்லுவாரு, அதேமாதிரி அவரோட வீட்டுக்காரம்மாவும், தூக்கி கொடுத்திட்டு, போதுமா, வேணுமான்னு கேப்பாங்கடா’

“அந்த ஆளு செத்துப் போய்ட்டாருடா, இப்ப அவங்க ஒய்ஃப்தா வச்சிருக்காங்க, நமக்கிட்டெ பணம் இல்லாட்டிக்கூட, சாப்ட தந்திருவாங்கடா்..’ சரிடா நாங்க வர்றோம் என்று, எதிர் எதிர் திசையில் நடந்தார்கள்.

‘லாட்டரி விற்ற மூர்த்தி இறந்தது, யாருக்கு வருத்தமோ, இல்லையோ, உறவினர் வீட்டில் விழுந்த எளவால், மங்கம்மா ஜான்ஸி உள்ளூர் சந்தோசப்பட்டாள். ஒருவருக்கு துக்கம் என்றாள், இன்னொருக்கு சந்தோசம். இதுதான் உலகம். இயற்கையின் இந்த பாரபட்சத்தை, ஒரு அரசோ, நீதிமன்றமோ முடிவுக்கு கொண்டு வர முடியாது. ஒருவேளை படைப்புத்தொழிலை பிரம்மா, நிறுத்திக் கொண்டால் அது சாத்தியமாகலாம்..! இங்குள்ள அரசியல் கட்சிகளைப் போல, அங்கும் போட்டியிருந்தால் சந்தேகம்தான்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “பகட்டு பணியாரக்காரி

  1. இது மாதிரியான குடும்பத்தை கேள்விப்பட்டுள்ளேன். நான் ஜூனியராக இருக்கும் வக்கீல் சொன்னார். இதுபோன்ற வழக்கு தேவகோட்டையில் நடைபெறுகிறது.

    கிருஷ்ணவேணி
    வழக்கறிஞர்

  2. நான் தேவகோட்டை என்ற ஊரில் வசித்து வருகிறேன். எங்கள் வீட்டுக்கு அருகேயும் இதேபோன்ற சம்பவம் நடந்தி்ருக்கிறது. அந்தப் பெண் வியாபாரி அல்ல. ஆனால் அன் டயத்தில் அங்கு வந்து செலபவர்களால் பிரச்சினை ஏற்பட்டது. இப்போது அவர் இங்கு இல்லாததால், பிரச்சினை இல்லை. இந்த கதையை வெளிட்டதற்கு நன்றி

    விஸ்வேந்திரன்.G

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *