கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 10,181 
 

இந்தச் சம்பவம் எனக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன் நேர்ந்தது.

ரயிலில், ஒருவரும் இல்லாத தனி வண்டியாகப் பார்த்து, சௌகரியமாகப் படுக்கையை விரித்துவிட்டு, தொந்தரவில்லாமல் பிரயாணம் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டே உட்காருமுன், மறுபடியும் வண்டியின் கதவு திறக்கப்பட்டது.

“ஜாக்கிரதையாக ஏறுங்கள்; தரையிலிருந்து படி வெகு உயரமாக இருக்கிறது” என்றது ஒரு குரல்.

“அதற்கென்ன, நான் கெட்டியாகத்தான் பிடித்துக் கொண்டிருக்கிறேன்” என்றது மற்றொரு குரல்.

கதர்குல்லாய் அணிந்த தலை, பிறகு இரும்புக் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இரு கைகள். மெதுவாகத் தடித்த சரீரத்தை அப்படியே உயர இழுக்கும்பொழுது, மரக்கட்டைகள் ரயில் வண்டியின் படிகளில் இடிபடும் சப்தம் கேட்டது.

மனிதனின் உடம்பு மேலே வந்ததும், தொள தொளவென்று பஞ்சகச்சம் வைத்துக்கட்டிய வேஷ்டிக்கிடையில் இரண்டு மரக்கால்கள் தெரிந்தன.

“சரிதானே ஸார்” என்று வெளியே யிருந்த குரல் கேட்டது.

“ஆமாம் அப்பா” என்றார் வந்தவர்.

“இதோ இருக்கிறது. உங்கள் கைத்தடியும் மூட்டைகளும்.”

வேலைக்காரன் உள்ளே வந்து கையிலிருந்த மூட்டைகளை மேற்பலகையில் ஒவ்வொன்றாக வைத்தான்.

“ஐந்து மூட்டைகள், பட்சணங்கள், விளையாட்டுப் பொம்மைகள், கொட்டு, விளையாட்டுத் துப்பாக்கி, புதிதாக வாங்கிய துணிகள்.”

“சரி! சரி!”

“சௌகரியமாய்ப் போய்விட்டு வரணும்” என்று கும்பிட்டான்.

“உன் உடம்பையும் பார்த்துக் கொள்” என்று ஒரு ரூபாயை அவன் கையில் கொடுத்து விட்டுச் சிரித்தார்.

அவனும் கதவைச் சாத்திக் கொண்டு போய்விட்டான்.

வந்தவருக்கு வயது முப்பது அல்லது முப்பத்தைந்திற்கு மேல் இராது; தலை பூராவும் நரைத்துவிட்டது. கதர் உடைதான். நல்ல கறுத்து அடர்ந்த மீசை. திடீரென்று வந்த ஊனத்தினால், உழைப்பு நின்றுவிட அதனால் ஏற்பட்ட உடல் பருமன்.

வந்தவர் முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு, “பீடி குடித்தால் உங்களுக்குத் தொந்தரவாக இருக்காதே?” என்றார்.

“தாராளமாகக் குடியுங்கள்.”

அந்தப் பார்வை, அந்தக் குரல் எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறது. எப்பொழுது? அதுதான் ஞாபகம் வரவில்லை.

அவரும் என்னையே கவனித்துக் கொண்டு இருந்தார். அவருக்கும் பிடிபடவில்லைபோல் இருக்கிறது.

இப்படி மரியாதைக் குறைவாக வெருகுபோல் விழிப்பதில் கூச்சமாயிருந்ததால் முகத்தைக் கொஞ்சம் வேறு பக்கம் திருப்பினேன். ஆனால் இந்த மனம் இருக்கிறதே! மறுபடியும் கண்கள் அந்த திசையே நோக்கின.

“தங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே. எனக்குப் பிடிபடவில்லை” என்றேன்.

“அப்படித்தான் எனக்கும் இருக்கிறது” என்றார்.

“என் பெயர் ஹரிஹரய்யர். ரெவினியு இன்ஸ்பெக்டர்” என்றேன்.

அவரும் கொஞ்சம் யோசித்தார். “ஆமாம் ஸார், நாம் சென்னையில் நான்கு வருஷங்களுக்கு முன் சந்தித்ததாக ஞாபகம்” என்றார்.

“ஆமாம்! ஆமாம்! தாங்கள்தான் தொண்டர் ராமகிருஷ்ணனோ?”

“ஆமாம்! இந்தக் கால்கள் தடியடியில் போகும்வரை தொண்டனாக இருந்தேன்.”

நினைவு வந்து விட்டது. நான்கு வருடங்களுக்கு முன் என்ன அழகு? என்ன வாலிபம்! மெலிந்ததாயினும் நல்ல கட்டுள்ள உடல். அவரைப் பற்றி நினைவிருக்க வேண்டிய காரணங்கள் உண்டு. ஆமாம், அவரைப் பற்றிய ஒரு காதல் விஷயம் நன்றாக நினைவிற்கு வருகிறது. அந்தப் பெண் மணோன்மணி. மறியலுக்காக வந்த ஸ்திரீ தொண்டர்களில் ஒருத்தி. திருமணத்தை எதிர்நோக்கிக்கொண்டு இருந்தார்கள். என்ன காதல், என்ன குதூகலம்! அப்பொழுதுதான் அவர்களைச் சந்தித்தேன்.

எனது கண்கள் மேலே பலகையில் இருந்த விளையாட்டுச் சாமான்களில் சென்றன. ரயில் வண்டி தண்டவாளங்களில் சற்றுக் குதித்துச் செல்லும்பொழுது, அந்த வேலைக்காரனது வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.

“ஐந்து மூட்டைகள், பக்ஷணங்கள், விளையாட்டுப் பொம்மைகள், கொட்டு, விளையாட்டுத் துப்பாக்கி, புதிதாக வாங்கிய துணி.”

உடனே பளிச்சென்று எனது மனம், முடிவுபெறாத காதல் கதையின் கதைகளைத் தானே கட்டிக்கொண்டு போக ஆரம்பித்தது. உலகத்தில் எந்தப் பாகத்திலும் எழுதப்படும் காதல் கதைகளைப் போலத்தான். தேச விடுதலைக்காகக் காலிழந்த காதலன். தனக்காகக் காத்திருந்த கன்னியை மணந்து கொள்வது.

நினைக்க நினைக்க அதன் அழகு, அதன் பொலிவு, அதன் தியாகம் எல்லாம் புஸ்தகத்தில் இருக்கிற மாதிரி வெகு எளிதாக நிறைவேறிவிட்டன. இந்த மாதிரிச் சம்பவங்களைப் படிப்பதில் எவ்வளவு ஆனந்தம்! அப்படியே தன்னை மறந்து விடுகிறோம். அந்த உயர்ந்த லட்சியத்தில் – உலகத்தில் அப்படியிருக்கிறதா? ஏமாற்றந்தான்.

இதைவிட வேறு மாதிரி என் மனது கதை திரிக்க ஆரம்பித்தது. ஒரு வேளை அவன் கால்களை இழக்குமுன் திருமணமாகியிருக்கலாம். காலிழந்த கணவனின் பத்தினிப் பெண். அவனது சுகத்திற்காகவே தன்னைத் தியாகம் செய்து கொள்ளும் ஒரு பத்தினிப் பெண்ணின் உருவம் எனது மனக் கண்ணின் முன் தோன்றலாயிற்று.

அவனுக்கு வாழ்க்கை, சுகமா அல்லது இன்னலா, அதை அறியும்படி ஒரு சிறிய அவா வரவரப் பெரிய ஆசையாகிவிட்டது.

நான் பேசிக் கொண்டுதான் இருந்தேன். மனது அதிவேகமாக வேறு பக்கம் ஓடிக்கொண்டிருந்தது.

“அவனுக்கு மூன்று குழந்தைகள் இருக்கலாம். இரண்டு ஆண்கள், ஒரு பெண். பொம்மைகள் பெண்ணுக்கு; மற்றவை ஆண்களுக்கு; புதிய துணி மனைவிக்கு.”

திடீரென்று “உங்களுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?” என்றேன்.
“இல்லை” என்றார்.

மரியாதைக் குறைவாக நடந்துகொண்ட மாதிரி என் மனதில் ஒரு குழப்பம் ஏற்பட்டது.

“மன்னிக்க வேண்டும், சாமான்களைக் கண்டவுடன் கேட்டேன். காதில் விழுவதைக் கேட்காமலிருக்கலாம். கண்டதைக் கேட்காமலிருக்கலாம். கண்டதை வைத்துக் கொண்டு அனுமானிக்கலாம்” என்றேன்.

புன்சிரிப்புடன், “இன்னும் எனக்குக் கலியாணங்கூட ஆகவில்லை.” என்றார்.
திடீரென்று ஞாபகப்படுத்திக் கொண்டவன் போல், “மன்னிக்க வேண்டும், மனோன்மணியம்மாள்…?”

“தங்களுக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது” என்றார்.

“மனோன்மணியம்மாள் யாரையோ கலியாணம் செய்து கொண்டதாகவும் ஒரு வதந்தி…”

“மிஸ்டர் பார்வதி நாதனை…”

“தங்கள் காயங்கள்தான் அதற்குக் காரணம் என்றும்…” முகத்தை நன்றாகக் கவனித்தேன். முகம் வெட்கத்தால் சிவந்தது.

தோற்றுப்போன கட்சியை தோற்றுவிட்டது என்று தெரிந்த பிறகும் வாதிப்பவர் போல், ஒரு பரபரப்புடன் பேசிக்கொண்டே போனார்.

“மிஸ்டர் பார்வதிநாதனுடைய பெயருடன் என்னையும் முடிச்சு போடுவது வெறும் அபத்தம். நான் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறியதும், அவள் என்னைக் கலியாணம் செய்துகொள்ள நான் அனுமதிக்கவேயில்லை. அனுமதிப்பேனா? எதற்கு ஒருவனைக் கலியாணம் செய்து கொள்வது? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன், ஒவ்வொரு வினாடியும் கூடி வாழவே ஒருவனைக் கலியாணம் செய்து கொள்வது. அவனுக்கு என்னைப்போல் கால் இல்லாமலிருந்தால் மரணம் வரை துன்பந்தான். தியாகத்தைப் போற்றுகிறேன். ஆனால் எனக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையையே தியாகமாக்க நான் சம்மதிக்க மாட்டேன். நான் நடக்கும் பொழுது எல்லாம் இந்த மரக் கால் ‘லொட்டு லொட்டு!’ என்று இடியாக முழங்குகிறது. அவளை முத்தமிட நெருங்குமுன் இந்த சப்தந்தானே காதைத் துளைக்கும்? அதை அவள் சகித்துக் கொண்டு இருக்கும்படி செய்வேனோ? அவள் வேண்டுவது புருஷன்; நான் வேண்டுவது அடிமை, பணியாள், அல்லது தாய், இது ஒத்து வருமா?”

பிறகு மௌனமாக இருந்தார். அவர் சொல்வது சரி என்று பட்டது. அவளைக் குற்றம் சொல்ல முடியுமா? ஆனால் எனக்கு என்னவோ சுவாரஸ்யமான கதையின் இறுதியைப் பிய்த்துவிட்ட மாதிரிப் பட்டது. எனது கதை உணர்ச்சி சாந்தியடையவில்லை. என்னவோ ஏமாற்றப்பட்ட மாதிரிதான் இருந்தது.

“மனோன்மணியம்மாளுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?” என்று திடீரென்று கேட்டேன்.

“ஒரு பெண்ணும் இரண்டு ஆணும்; இவைகள் எல்லாம் அவர்களுக்குத்தான். அவள் புருஷன் என்மேல் அதிகப் பிரியமாக இருக்கிறார்!”

அதற்குள் அந்தச் சிறு டன்னல் வழியாக ரயில் சென்று பிளாட்பாரத்தில் நின்றது.

அவருக்கு உதவி செய்யும்படி நான் எழுந்தேன். அதற்குள் ஒரு மனிதனின் இரண்டு கரங்கள், திறந்த கதவின் வழியாக நீட்டப்பட்டன.

அந்த மனிதனுக்குப் பின், அவனுடைய மனைவி குழந்தைகளுடன் நின்றாள் – அதரத்தில் புன்சிரிப்பு.

குழந்தைகள், வெளியில் வைத்த சாமான்களைத் தூக்கிக்கொண்டன. இந்த நொண்டி பிளாட்பாரத்தில் இறங்கியதும் குழந்தைகள் அவரைச் சுற்றிக் கொண்டன.

எல்லோரும் வெளியே புறப்பட்டார்கள். அந்தப் பெண் குழந்தை, அவர் அக்குளில் கொடுத்து ஊன்றி நடந்த தடிகளைத் தனது சிறிய விரல்களால் பிடித்துக்கொண்டே நடந்தது.

– 1934

Print Friendly, PDF & Email

ஒட்டாத உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

பணம் பிழைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *