நொடிக்கொரு திருப்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2024
பார்வையிட்டோர்: 228 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலையில் செட்டியார் வரச்சொல்லியிருந்தார். இரவு வேலை முடித்துவிட்டு வீடு சேர பதினொரு மணியாகிவிட்டது. சரசு நிரம்பவும் கவலைப்பட்டதாகச் சொன்னாள். ஆனால் அவளது தூக்கக் கண்களும், கலைந்த தலையும் அதைப் பொய் என்று பறை சாற்றியது.

“பாசு“ சரசா அவனை எப்பவும் அவனை அப்படித்தான் கூப்பிடுவாள். சினமாக இருந்தாலும் சந்தோசமாக இருந்தாலும் இது மாறுவதே இல்லை. என்ன உணர்ச்சிக்கு ஏற்றவாறு குரல் கூடும் குறையும். அவ்வளவுதான்.

“பாசு.. ஒன்னத்தான்“ குரல் கொஞ்சம் உயர்ந்தது. அவள் கோபம் தலைக்கேற ஆரம்பித்திருக்கிறது என்று அர்த்தம்.

“அதென்ன பாசு.. எத்தினி தடவ சொல்லியிருக்கேன். பார்த்தசாரதின்னு பேரு.. அழகா பார்த்தின்னு கூப்பிடு.. எங்கம்மா அப்படித்தான் கூப்பிடுவாங்க.. இல்லே சாரதின்னு கூப்பிடு. என் சிநேகிதக்காரங்க அப்படி கூப்பிடுவாங்க.. அதென்ன அதுவுமில்லாம இதுவுமில்லாம ரெண்டாங்கெட்டத்தனமா பாசு.. “ எதுனா சொன்னா இப்பிடி சுள்ளுன்னு கோவம் வருதுல்ல.. அதான் பாசு.. நா சொல்றதக் கேளு.. இப்பத்தான் வேலை முடிஞ்சி வந்து படுத்திருக்கே.. நாலு அவுர்கூட ஆவல.. சரியா தூக்கம் இல்ல.. அசதிலேயும் பெரண்டு மேல படுக்கற.. அது அடங்கி, இன்னா தூங்கியிருக்கப் போற.. அதான் இன்னிக்கு வேலைக்கு போவாத.. ரெஷ்டு எடுன்னு சொல்றேன்..

“ரெஷ்டு எடுத்தா எவன் துட்டு தருவான்.. கோதை நாச்சியாருக்கு அடுத்த வாரம் பள்ளிக்கூடத்தில பணம் கட்டணும்.. தெரியுமில்ல”

“ஒரு நா வேலைக்கு போவலன்னா ஓட்டாண்டியா ஆயிருவே “

“ஆவ மாட்டேன் தான். ஆனா தெம்பு இருக்கறதுக்குள்ள சம்பாரிக்க தாவல”

“நூத்துக் கெழவன் மாதிரி பேசற.. ஒனக்கு இன்னா வயசாவுது முப்பத்தி எட்டு.. இன்னும் எவ்வளவோ காலம் இருக்குது. கோதை ஒம்பதாங்கிளாஸ் படிக்குது. அது இன்னும் ஆறு வருசமாவது படிக்கும். அப்புறம் தான் கல்யாணம். அதுக்குள்ள சேத்துற மாட்டேன்“

சரசாவின் சிரிப்பு அவனைக் கட்டிப்போட்டது.

“இரு செட்டியாரண்ட ஒடம்பு சொகமில்லன்னு சொல்லிட்டு வரேன்”

“ஆங்! ஒடம்பு, சொகம் கேக்குதுன்னு சொல்லிட்டு வா” என்று சொல்லி மறுபடியும் சிரித்தாள் சரசா.

பாசு என்றழைக்கப்பட்ட பார்த்தசாரதிக்கு பேருக்கேத்தவாறு சாரதி வேலை. வாடகை மகிழுந்துகளை ஓட்டுவதுதான் அவனுக்கு வேலை. பெரிய நிறுவனத்தில் அவனும் வேலையில் இருந்தவன்தான். அப்பொழுதெல்லாம் அவன் ஒரு சினிமா நட்சத்திரம் போலவே இருப்பான். மடிப்பு கலையாத உடைகள் அவனது உடலை அலங்கரிக்கும். அது நிறுவனம் கொடுக்கும் சீருடை என்றாலும் அதை சாயம் போகமல் துவைத்து, இஸ்திரி செய்து போட்டுக் கொள்வதில், அவன் மிகவும் கவனம் எடுத்துக் கொள்வான்.

பதினைந்து வயதில் ஆரம்பித்து இருபது சொச்ச வருடங்கள் உழைப்பு அவனுக்கு நிறுவனத்தில் ஒரு மேலாளர் அதிகாரத்தைக் கொடுத்திருந்தது. உரிமையாளரின் பத்துக்கும் மேற்பட்ட வண்டிகளுக்கு, அவனே பொறுப்பு. அலுவலக வண்டிகளை நிற்காமல் ஓடச்செய்ய வேண்டிய பொறுப்பும் அவனுடையதாக இருந்தது.

அவனிடம் வேலை செய்த ஓட்டுனர்களிலேயே வயதானவரும், நிதானமானவரும் கந்தசாமிதான். அறுபது வயதான முதியவர். அவன் வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவனுக்கு எல்லாமுமாக இருந்து எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவர் அவர். முதலாளி பிள்ளைகளுக்கு மதிய உணவு எடுத்துச் செல்லும்போது அவர்கள் படிக்கும் கான்வெண்ட் பள்ளிக்கு எதிரில் இருந்த மாநகராட்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவரது பேத்தி சரசாவிற்கு மதிய உணவை, இவனைக் கொடுத்து வரச் சொல்வார் கந்தசாமி. சரசா, கந்தசாமியின் பெண் வயிற்று பேத்தி. காந்திமதி அவருக்கு ஒரே பெண். வட மாநிலத்தில் வேலைக்கு போன அவள் புருசன், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். தனித்து விடப்பட்ட அவள், தகப்பனே கதியென்று சரசாவுடன் வந்து சேர்ந்து விட்டாள்.

இருபத்தி எட்டு வயதில் கணவனை இழந்து, ஆறு வயது மகளுடன் எத்தனை நாட்கள் வாழ முடியும் ஒரு பெண்ணால். அதுவும் வசதியில்லாத சூழலில்! மனதைக் குழப்பும் மாயங்கள் நிறைந்த பூமி இது.

சுப்பிரமணியன், அந்த நிறுவனத்தில் ஒரு தேர்ந்த ஓட்டுனர். பத்து வருட உழைப்பு அவனுக்கு வாழ்க்கையில் ஒரு தன்னம்பிக்கையைக் கொடுத்திருந்தது. சொந்தமாக வண்டி ஒன்று வாங்கி, வாடகைக்கு ஓட்டலாம் என்று முடிவு செய்தான். திருச்சி, மதுரை என்று போனால் சீக்கிரம் முன்னுக்கு வந்து விடலாம் என்று அவன் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தான். ஒரே வருடத்தில், ஒரு வண்டியை மூன்று வண்டிகளாக்கி விட்டிருந்தான் அவன். சென்னைக்கு வந்த குடும்பம் ஒன்றினை, உறவினர் வீட்டில் இறக்கி விட்டு விட்டு, அனுமதி வாங்கிக் கொண்டு, அவர்களைப் பார்க்க வந்திருந்தான். கந்தசாமி வீட்டில் இல்லை. அவரது பெண் காந்திமதி அவனை அடையாளம் தெரியாமல் முழித்தாள். “சுப்பிரமணிங்க.. அய்யா இல்லீங்களா.. நீங்க அவரு பொண்ணு காந்திமதிதானே? நார்த்லே இருந்தீங்களே?”

அவள் கதையைச் சுருக்கமாக அப்புறம் அவனுக்கு கந்தசாமி சொன்னார். அவன் மனது பிசைந்து வலித்தது. ‘நல்லவர்களுக்கே சோதனை வருகிறதே?’

அதற்கப்புறம் சென்னை வரும்போதெல்லாம் காந்திமதியைச் சந்திக்கத் தவறுவதே இல்லை சுப்பிரமணி.

“சின்னதா ஒரு மனை வாங்கி, ஒரு ஓட்டு வீடு கட்டியிருக்கேன். எனக்கு சொந்த உபயோகத்துக்கு ஒரு பழைய வண்டி.. நா மொத மொதல்ல வாங்கினனே அதே வண்டி, அத வச்சிருக்கன். இப்ப வேலைக்குத் தனியா ஆளுங்க போட்டுட்டேன். நான் வண்டி ஓட்டறதில்ல. மதுரை மீனாட்சி கோயில்லுக்கு பக்கத்துல, ஆறுக்கு ஆறுன்னு ஒரு கடைய வளைச்சு போட்டு, ஆபீஸ் போட்டுட்டேன். எந்நேரமும் அங்கதான் இருப்பேன். எனக்கு பொண்டாட்டியா புள்ளையா”

“ஏன் கட்டிக்கறதுதானே.. ஆரு வாணாங்கறாங்க.. “ கந்தசாமி மகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார். காந்திமதியிடம் இப்போது பழைய சிரிப்பு மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டிருந்தது. இந்த முடிச்சு புதுசாகவும் இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது.

“அய்யா ஊன்னு சொல்லட்டும். ஒன்னையே கட்டிக்கத் தயார். “சுப்பிரமணி போட்டு உடைத்தான். வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்த சரசா நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகத்தில் கலவரமா? சந்தோசமா?

‘நீ என்ன சொல்ற?’ என்பதுபோல் காந்திமதி சரசாவைப் பார்த்தாள். கந்தசாமியும் கோடி ரூபாய் கேள்விக்கான பதிலை எதிர்பார்ப்பது போல அவளைப் பார்த்தார்.

“நீ மாமாவை கட்டிக்கிட்டு மதுரை போ.. நா தாத்தாவோட இங்கேயே இருக்கேன்“ அது குழந்தையின் பிடிவாதமா? தெளிவான தீர்வா?

சுப்பிரமணி சரசாவை அப்படியே அள்ளித் தூக்கிக் கொண்டான்.

காந்திமதி கல்யாணம் முடிந்து ஆறுவருடம் ஆகிவிட்டது. சரசா பட்டப்படிப்பு முடித்து வேலைக்கு போகப்போகிறாள். கந்தசாமியும் ஓய்வு பெறும் நிலைக்கு வந்து விட்டார். காந்திமதி மதுரையே கதி என்று கிடக்கிறாள். அவளுக்கு இன்னும் இரண்டு பிள்ளைகளாகி விட்டது. நிறுவன உரிமையாளர் மகன், சரசாவிற்கு வேலை போட்டு தருவதாக அழைத்து, அவளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால், அதைத் தட்டிக் கேட்கப்போன பார்த்தசாரதி மீது வீண் பழி சுமத்தப்பட்டு, வேலை நீக்கம் செய்யப்பட்டது, எதிர்பாராத திருப்பம்.

படிக்காதவன் என்றாலும் பலசாலி, பண்பாளன் என்பதால், அவனை மணம் செய்து கொள்ள சரசா முடிவு செய்தது கந்தசாமிக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது. ‘பின்னால கொழப்பம் வராதுல்ல ‘என்று பலமுறை கேட்டுக்கொண்டே, அவர் திருமணத்திற்கு சம்மதித்தார். சாரதிக்கு கொஞ்சம்போல உறுத்தல் இருந்தது. இப்போது நிரந்தர வேலை இல்லை. எப்படி?

மதுரைக்கு வந்துடுங்க தம்பி.. எங்க வீட்டிலேயே தங்கிக்கிடுங்க. இப்ப எங்கிட்ட இருபது வண்டி இருக்குது. எதையாவது ஓட்டுங்க.. சம்பளம் கொடுத்துடறேன் “ சுப்பிரமணி ஆசையாக கூப்பிட்டான். ஒருவகையில் மாமனார் வீட்டு வேலை. ஒத்து வருமா?

சரசா கண்டிப்பாக சொல்லிவிட்டாள். “வேலைக்கு போங்க.. ஆனா தங்கறதெல்லாம் வேணாம். தாய் பிள்ளைன்னாலும் வாழ்க்கை வேறதான்.. “ இப்படி பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டன. சரசா தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். கோதை நாச்சியார் ஒரே மகள். இன்னமும் அவர்களிடையே காதல் குறையவில்லை.

“அய்யா! பார்த்தசாரதி! என்னா யோசனை?”

“எவன் அவன் பார்த்தசாரதி? எம்பேரு பாசு” என்று சிரித்தான் சாரதி.

– ஏப்ரல் 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *