நேற்று – இன்று – நாளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2023
பார்வையிட்டோர்: 2,898 
 
 

மதியம் மகள் வீட்டிலிருந்து வந்ததிலிருந்தே கோபாவேசமாய் இருந்தார் மூர்த்தி. கூண்டில் அடைபட்ட புலியாய் தன் அறையிலேயே அடைந்து கிடந்தார். அவ்வப்போது உறுமலாக வரும் சம்மந்தி வீட்டாரைப் பற்றி கமெண்ட்கள். இது எதையும் காதில் வாங்காதவளாக தன் போக்கில் தினசரி அலுவல்களைக் கவனிக்கும் வசுமதி. முப்பது வருட தாம்பத்தியத்தில் கணவரின் போக்கை நன்றாகவே அறிந்து அதற்கான நீக்குப் போக்கில் வாழப் பழகியவள் அவள்.

விஷயம் இதுதான். உள்ளூர் கோவில் கும்பாபிஷேகம். மகளைப் பார்த்து அழைத்து வர நேற்று மாயவரம் சென்றவர். சம்பந்தி தன்னை சரியாக வரவேற்க வில்லை. மருமகன் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. தன்னோடு மகளை அனுப்ப வில்லை. ‘முடிந்தால் கும்பாபிஷேகத்திற்கு வருகிறோம்; அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. தனியே விட்டு வரமுடியாது’ என்று தட்டிக் கழிக்கும் மாப்பிள்ளை என்று பொங்கிப் பொங்கி மாயும் மூர்த்தி. இரண்டே பெண்கள். முதல் மகள் வீட்டில்தான் இந்தக் கூத்து. இரண்டாவது பெண் திருச்சியில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள்.

வளைகாப்பு, சீமந்தம், பிரசவம் என்று ஆறுமாதம் சீராடிச் சென்றவள் தான் மகள் ராதா. மூன்று மாதம் ஓடிவிட்டது. வரவில்லை. கும்பாபிஷேகம் சாக்கில் மகளையும் பேத்தியையும் சீராட்டலாம் என்ற ஆசைக்குத் தடா.

மாப்பிள்ளை மோகன் நல்ல வேலையில் கை நிறைய சம்பளம் – மாமனாருக்கு பென்ஷனே ஐந்து இலக்கத்தில். சொந்தவீடு வண்டி வாகனம் என்று நல்ல வசதி – வீட்டோடு வேலைக்காரி – பண்டிகை – பிறந்தநாள் என்றால் பவுனும், பட்டுமாக அசத்தும் மாமியார் என ராணி மாதிரி இருக்கிறாள். ஆனால் என்ன பிறந்த வீட்டுக்கோ அவர்கள் சம்மந்தமான விசேஷங்களுக்கு வருவதோ, ராதாவை அனுப்புவதோ வேப்பங்காயாய் கசக்கும் அவர்களுக்கு.

எனவே இவர்களாலும் அவர்களுடன் ஒன்ற முடியாத நிலை. தாமரை இலைத் தண்ணீராய் ஒரு வேளைத் தங்கலுடன் முடியும் பயணம். ‘வரட்டும் அந்தப் பயலை என்ன செய்கிறேன் பார்’ என்று உறுமும் கணவரைப் பார்க்க வேடிக்கையாகவே இருந்தது வசுமதிக்கு. மருமகனை என்ன செய்யப் போகிறாராம். மகளைக் கொடுமைப்படுத்தினால் வரதட்சணை ஒழிப்புச் சட்டத்தில் கேஸ் போடலாம், அப்புறம் மகளை வாழாவெட்டியாக வீட்டோடு வைத்துக் கொள்ளலாம். என்ன ஆயிற்று இவருக்கு. ஆசையாக இருந்தால் அடிக்கடிப் போய் பார்த்து வருவதுதானே? மதியமும் சாப்பிடலை, விட்டத்தை வெறித்த படியே சாய்வு நாற்காலியில் தஞ்சம்.

மல்லிகைப்பூ இட்லியும், மணக்க மணக்கத் தக்காளிக் கொத்சுவும் வைத்து சாப்பிட அழைத்தாள். ‘ஏய், உனக்கு ஏதாவது அறிவு இருக்கா?’ வேணும்னா நீயேக் கொட்டிக்க’ – இடியாய் வந்து விழுந்த வார்த்தைகள்.

‘மதியமும் சாப்பிடல, இப்பவும் சாப்பிடலைன்னா பிரஷர் எகிறும்.’ ‘எகிறுனா எகிறட்டும்; செத்துத் தொலைக்கிறேன் அப்பவாவது பொண்ணை அந்தப் பய அனுப்புவானா? மாட்டானா?’ சட்டென உடைந்தார். மௌனமாக இட்லியை வைத்து கொத்சுவை விட்டு அதன்மீது சிறிது நல்லெண்ணெய் விட்டு நீட்டினாள், கூடவே பொடியும். விருட்டென எழுந்து ஜன்னல் அருகே நின்றார்.

மௌனமாகத் தட்டை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தாள் வசுமதி. ரெளத்திரமானார் மூர்த்தி. ‘ஏண்டி நான் சொல்றது உன் மண்டையில ஏறலையா? நான் ஒருத்தன் இங்க புலம்பிகிட்டே இருக்கேன், நீ பாட்டுல முழுங்கற. சொல்லிகிட்டு இருக்குற நான் என்னக் கேணப்பயலா?’ உறுமினார்.

மௌனமாக மூன்றாவது இட்லிக்கு முன்னேறினாள் வசுமதி. ‘சம்மந்தி வீட்டார்னா, மாப்பிள்ளைன்னா அப்படித்தான் இருப்பாங்க. பெண்ணைக் கட்டிக் குடுத்ததோட நம்மக் கடமை முடிஞ்சிட்டு; அவ பேர்ல நமக்கு எந்த உரிமையும் இல்ல இல்லியா?’ சவுக்கடி விழுந்தது போலத் துடித்துத் திரும்பினார். ‘ஏய்… ஏய் நீ என்ன சொல்ல வர்ற…’

‘முப்பது வருஷத்துக்கு முன்னாடி நீங்க சொன்னதைத்தான் சொல்றேன். நமக்காவது ரெண்டு பெண். நான் ஒரே பெண். என்னைப் பிறந்த வீட்டுக்கு நிம்மதியா போகவிட்டு இருக்கீங்களா? பிரசவத்திற்குக் கூட அனுப்பமாட்டீங்க. ஆனா செலவு பூரா அவங்களே செய்யணும். நாள் கிழமைக்கு ஒரு துணிமணி உண்டா? அதுவும் பொறந்த வீட்லதான். அதோட அந்த நகை, இந்தப் பாத்திரம், பட்டுப் புடவைன்னு லிஸ்ட் நீளும். ஐநூறு ரூபாய் சம்பளம், தனியார்ன்னு பொய் சொல்லி இருநூறு ரூபாய் சம்பாத்தியம் வாங்கினிங்க. உங்க அப்பாவும் ஜவுளிக்கடையில் கணக்குப் பிள்ளை. சொந்த வீடு கூட கிடையாது. வாடகை வீடு. என் நகை நட்டை வைச்சு உங்க இரண்டு தங்கச்சியையும் கட்டிக் கொடுத்து ரெண்டு தம்பிகளையும் படிக்க வைச்சீங்க. அவுங்க கை உசந்ததும் உங்களைக் கை கழுவி விட்டு ஒதுங்கிட்டாங்க.’

‘ஏதோ எனக்குத் தெரிஞ்ச தையல் தொழிலை விஸ்தாரமாச் செய்ததால் இத்தனையும் சாத்தியம் ஆச்சு. அதுக்கும் எங்க அப்பாதான் ஏற்பாடு செய்தார். நாலு மிஷின் வாங்கிக் கொடுத்து தனது பிரண் ரெடிமேட் கடையில் ஆர்டர் பிடிச்சுக் கொடுத்து என்ன பாடுபட்டு இருக்கார். இப்ப நாலு ஆள் போட்டு தைக்கிறேன். வீடு வாசல் வண்டின்னு ஆச்சு நீங்களும் தத்திகுத்தி ஏதோ அரசு வேலைக்குப் போய் ரிடையரும் ஆயாச்சு. இவ்வளவு செஞ்ச என் பிறந்த வீட்டாரை என்னைக்காவது மதிச்சு ஒரு வாய் சோறு நிம்மதியாய் போட்டு இருக்கிங்களா? வருஷந்தோறும் சண்டை வம்பு. இன்னைக்குப் பொண்ணை கும்பாபிஷேகத்திற்கு அனுப்ப வில்லைன்னு இந்தக் குதி குதிக்கிறீங்களே. என் ஒரே தம்பி கல்யாணத்துக்கு என்னை சந்தோஷமாய்ப் போக விட்டீங்களா? அரசில்வாதி மாதிரி ‘ஹார்ட் அட்டாக் என்று நாடகமாடி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி அந்த நேரத்துக்கு மூணாவது மனுஷன் மாதிரி தலையக் காண்பிச்சு சீரை மட்டும் வாங்கிக் கிட்டு உடனே வந்துட்டோம். காரணம் உங்க அண்ணன் மகளைக் கட்டிக்கலைன்னு கோபம்.’

‘நானும் தெரியாமத்தான் கேக்கறேன். வாய்க்கு வாய் எங்கப் பிறந்த வீட்டைக் குத்தம் சொல்ற நீங்க உங்க வீட்டுப் பொண்ணை மட்டும் காட்டணும்னு எதிர் பார்க்குறது என்ன நியாயம். என்னாலக் கவலைப்பட்டு அவமானப்பட்டு எங்க அம்மா ஹார்ட் அட்டாக்ல பொசுக்குன்னு போயிட்டாங்க. தம்பியும் சிங்கப்பூர்ல செட்டில் ஆயிட்டான். அதெல்லாம் கிடக்கட்டும். அப்பாவுக்கு சீரியஸ்ன்னு தந்தி வந்தபோது என்ன செஞ்சீங்க. மறுநாள் ஆடி அமாவாசை சமைச்சு வச்சுட்டுப் போன்னீங்க. நான் போய் சேர்வதற்குள் அப்பா போய் சேர்ந்து விட்டார். இப்ப என்னவோ என் சாவுக்குப் பொண்ணு வருமான்னு புலம்புறீங்க’ என்றபடி நான்காவது இட்லிக்கு முன்னேறினாள்.

‘ஏய் என்ன வாய் நீளுது. எப்பவோ நடந்ததை எல்லாம் இப்போ இழுக்கற. அப்ப ஏதோ குடும்ப சூழல் அப்படி ஆச்சு. அதே குடும்ப சூழல்தான் இப்ப சம்மந்தி வீட்டுக்கும்’. ‘என்ன சம்மந்தி வீட்டுக்கு வக்காலத்தா, இல்லை பொண்ணைப் பெத்தவங்களுக்கு வக்காலத்து’ என்றபடி ஐந்தாவது இட்லிக்கு முன்னேறினாள். ‘எப்படி உனக்கு சாப்பாடு இறங்குது. நீ பொண்ணைப் பெத்தவளான்னு சந்தேகமா இருக்கு.’ ‘வேணும்னா புள்ளய மாத்திட்டாங்கன்னு என் பொறந்த ஊட்ல சண்டை போட்டுப் பாருங்களேன். இப்ப குத்தம் குறை சொல்ல யாரும் இல்லை. அதனாலதான் சம்மந்தி வீட்ல பாயுறீங்க. மத்தவங்களைக் குறை சொல்லும்போது உங்களப் பத்தியும் யோசிங்க’ என்றபடியே இட்லி மீது பொடியைத் தூவி எண்ணெயில் முழுக்காட்டி தோய்த்து விழுங்க ஆரம்பித்தாள்.

கடன்காரி, பொடி வைத்துப் பேசுவதில் மட்டுமில்ல. இட்லிப் பொடி செய்வதிலும் கெட்டிக்காரி. எள் சேர்த்த பொடி. பொட்டுக்கடலை பொடி, தேங்காய் சேர்த்த பொடின்னு விதவிதமா செய்வதில் கில்லாடி. இப்ப தேங்காய் சேர்த்தப் பொடி வாசனை அள்ளுது. இன்னொரு முறை சாப்பிடச் சொன்னால் சாப்பிடலாம். மெல்ல இறங்கி சுதியுடன் ‘அப்ப என்ன என்னதான் செய்யச் சொல்ற?’

‘இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்? நீங்க என்னைப் பெத்தவங்கள ஆட்டி வச்சீங்க. இப்ப உங்களை உங்க மருமவன் ஆட்டி வைக்கிறார். நாளை அவர் மருமகன் ஆட்டி வைப்பார்! இது தொடர்கதை.’

‘யாராவது திருந்தினாத்தான் இது சிறுகதை ஆகும். இல்லைன்னா இது மெகா தொடர் தான்’ என்றபடி உணவோடுதன் உணர்வுகளையும் சேர்த்து விழுங்கும் வசுமதியைப் பார்த்து முதன்முறையாகத் தலை குனிந்தார் மூர்த்தி. ‘என்ன ஒண்ணு நீங்க இன்று உங்க பெண்ணுக்கு அழறீங்க. நேற்று நான் எனக்காக அழுதேன். இன்று மகளுக்காக அழுகிறேன். நாளை பேத்திக்காகவும் அழுவேன்’ என்றவளை ஏறிடத் திராணியின்றி தானே இட்லியை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தார் கண்கள் கசிய.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *