நேர்த்திக்கடன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 8,198 
 
 

ராஜாத்தி வரும்போதே மண்டையை உடைக்கும் தலைவலியோடுதான் வந்தாள். அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை, இவள் வருவதற்கு முன்பே இன்னொரு தலைவலி நூற்றைம்பது கி.மீ. தூரம் பேருந்தில் பயணித்துவந்து வீட்டுக்குள் காத்திருக்கிறது என்பது.

இன்றைக்கென்று பார்த்து காப்பிப்பொடி தீர்ந்துவிட்டதென்று டீயைக் கொண்டுவந்து நீட்டினாள் பாக்கியம். ராஜாத்திக்கு எப்பவும் காப்பி என்றால்தான் குடித்தமாதிரி இருக்கும். வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஜெயாவை அழைத்து காப்பிப்பொடி வாங்கிவரச் சொல்லலாமா என்று நினைத்தவள் வயிற்றைத் தள்ளிக்கொண்டு கொல்லைப்பக்கமிருந்து வந்த சின்னகுட்டியைப் பார்த்தமாத்திரத்தில் அந்த யோசனையைக் கைவிட்டாள்.

“எப்போ வந்தே?”

இவள் சுவாரசியமில்லாமல் வரவேற்றதைப் பற்றி அவள் ஒன்றும் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை.

“மத்தியானம் வந்தேன்க்கா… நீ எப்புடி இருக்க?”

பதிலை எதிர்நோக்காத சம்பிரதாயமான கேள்விகள். ராஜாத்திக்கு சிரிப்பு வந்தது. கூடவே எரிச்சலும் வந்தது. சின்னக்குட்டி வந்த காரணத்தை அவள் தெரிந்துகொள்ளவிரும்பவில்லை. காரணம் என்ன பெரிய காரணம்? இவளுக்கோ, இவள் புருஷனுக்கோ கை அரித்தால் உடனே கிளம்பி வந்துடவேண்டியதுதான் பணங்காய்ச்சிமரமான அக்கா வீட்டுக்கு.

‘என்னடா, அக்கா பகல் முழுக்க கார்மெண்ட்ஸிலும் அந்தியில அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்தும் மாடா உழைக்கிறாளே… அம்மாவுக்கு வைத்திய செலவு இருக்கு, ஒரு பொம்பளப்புள்ளய வச்சிருக்கா… அதப் படிக்கவக்கணும், பிற்காலத்துக்கு ஏதாவது சேத்துவக்கணும், அவளைப் போய் இப்படி அடிக்கடி காசு கேட்டுத் தொல்லை பண்றோமே, இது நல்லாயிருக்கான்னு அவளே அவ மனசாட்சியைக் கேக்கணும். இவ கல்யாணத்துக்கு வாங்கின கடனையே இன்னும் அடைக்கலை, அதுக்குள்ள வரிசையா மூணு, இப்ப வயித்தில நாலாவது. இன்னும் மூணு நாலு மாசத்துல அடுத்த செலவு. பிள்ளை பெத்துக்க மட்டும் ஆத்தாவீட்டுக்கு அனுப்பத்தெரிஞ்ச மவராசனுக்கு அதைக் கட்டுப்படுத்துற வித்தை மட்டும் தெரியாதாம். இதையெல்லாமா இன்னொருத்தர் சொல்லித்தரணும்?’

எரிச்சலுடன் எழுந்துபோய் முகம் கழுவிக்கொண்டு வந்து வராந்தாவில் காத்திருந்த பள்ளிப்பிள்ளைகளுடன் ஐக்கியமாகிவிட்டாள். எட்டுமணிவரை வீட்டுக்குள் எட்டியும் பார்க்கவில்லை. ஆனால் என்றுமில்லாமல் இவள் கடுகடுத்ததில் எல்லாம் விளங்கியது அம்மாவுக்கு.

சின்னக்குட்டி உள்ளே அம்மாவிடம் வாக்குவாதம் புரிந்துகொண்டிருந்தது அரைகுறையாய்க் காதில் விழ, இன்னுங்கொஞ்சம் கத்தினாள் பிள்ளைகளிடம். வகுப்பு முடிந்ததும் விட்டால் போதுமென்று அத்தனைப் பிள்ளைகளும் புத்தகப்பையைத் தூக்கிக்கொண்டு ஓடின.

ஜெயா சாப்பிட்டுப் படுத்துவிட்டிருந்தாள். அம்மா இருப்பதால் ஜெயாவைப் பற்றிய கவலைகள் இல்லாமல் மாலை நேரத்திலும் கூடுதல் வருமானத்துக்கு ஏதாவது வழிசெய்ய முடிகிறது. படித்தது பத்தாம் வகுப்புதான் என்றாலும் ஐந்தாவது வரையிலான பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதில் ஒன்றும் அத்தனை சிரமம் இருக்கவில்லை.

சின்னக்குட்டி சுவரைப் பார்த்தபடி வெறுங்கையை தலைக்கிட்டு ஒருக்களித்துப் படுத்திருந்தாள்.

“ஏம்மா, அவ சாப்பிட்டாளா?”

“நீ வந்ததில இருந்து எப்புடி இருக்கே, புள்ளைங்க எப்படியிருக்கு ஏன் வந்தேன்னு எதுவும் கேக்கலையாம், ஒரே மோளாசை.”

“என்ன கேக்கவேண்டியிருக்கு? அதான் தெரியுதே… மூஞ்சியெல்லாம் அதச்சுப் போயி… ரத்தசோவை வந்துகெடக்குன்னு. வாங்கிட்டுப் போற காசெல்லாம் என்னதான் பண்றா? அவனுக்கு நல்லா வக்கணையா ஆக்கிப்போட்டுட்டு இதுவும் புள்ளங்களும் பட்டினி கெடக்குதுங்க. நியே பாரு… அது மூஞ்சில எங்கயாவது களை இருக்கான்னு, வெளுத்துப் போயி பொணம் மாதிரி இருக்கா…”

“அக்கா…. நீ என்ன வேணாலும் சொல்லு. ஆனா இப்ப அவரு ரொம்ப முடியாம இருக்காரு. கைச்செலவுக்கு கொஞ்சம் பணம் குடு. உடம்பு சரியாப்போனதும் வேலைக்குப் போய் திருப்பித் தருவாரு” மெல்லக் கைகளை ஊன்றி எழுந்து அமர்ந்தாள்.

“கிழிச்சாரு! ஏண்டி உனக்கு வெக்கமே கெடையாதா? அந்தாளு என்னைக்கிடி சம்பாரிச்சான், வாங்குனதை திருப்பிக் குடுத்தான்? சின்னகுட்டி, இன்னைக்கு சொல்றேன், நீ அந்தாளோட குடும்பம் நடத்திக் கிழிச்சது போதும், மூணு புள்ளைங்களயும் அழைச்சிகிட்டு இங்கேயே வந்துடு. உன்ன ஒரு நல்ல வழிக்கு கொண்டுவரேன். உம்புள்ளங்கள படிக்கவக்கிறேன். அதை விட்டுட்டு சும்மா பணம், காசுன்னு வந்து எம்முன்னாடி நிக்காத.”

“ஆமாம், நீங்க கட்டிக்குடுத்த எடம் அப்புடி, அதுக்கு என்னை குத்தம் சொன்னா சரியாப்போச்சா…?” முந்தானையின் முனையை ஒற்றைவிரலில் முறுக்கிக்கொண்டே சின்னக்குட்டி முணகினாள்.

“கட்டிக்குடுக்கும்போது கண்டோமா, இப்படிக் கையாலாகாத பயலா இருப்பான்னு? உன்ன யாருடி குத்தம் சொல்றது? நீ கெளம்பி வான்னுதானே சொல்றேன். அவன் எக்கேடோ கெட்டுத் தொலையட்டும்”

“அக்கா, அவரு முன்ன மாதிரி இல்ல, வேலைக்குப் போய்ட்டு வந்துகிட்டுதான் இருந்தாரு, என்னமோ இந்தப் பாழாப்போன வயித்துவலிதான் அவர ஒரு ஜோலி பாக்க விடுதில்ல… எப்புடிக் கெடந்து துடிக்கிறாரு தெரியுமா?”

“பாவம்டி, வந்ததில இருந்து ஒரே பொலம்பல்தான். ஏதாவது பண்ணுமா…”

பாக்கியம் சந்தடிசாக்கில் சின்னமகளுக்கான தன் நிலைப்பாட்டைத் தெரிவித்தாள்.

“நீ எதுக்கு அடிபோடுறேன்னு எனக்குத் தெரியும், கொஞ்சநேரம் சும்மா இரும்மா. கம்பெனியில நான் கடன் வாங்காத ஆளில்ல, தெரியுமா? எல்லாரும் என்னயக் கண்டாலே ஒதுங்கி ஒதுங்கிப் போவும்போது அப்படியே அவமானத்துல உடம்பெல்லாம் கூசுது.”

“அதுக்கென்ன பண்ணுறது, நாம வாங்கி வந்த வரம் அப்படி. இல்லைனா எம்புருஷனும் உம்புருஷனும் எதுக்கு இப்புடி நம்மள அநாதையா வுட்டுட்டு அல்பாயுசுல போய்ச்சேரணும்? சரி, இவளாவது நல்லா இருக்கட்டும்னு பாத்தா… அவனும் குடிகாரப்பயலாப் போய்ட்டான். என்ன இருந்தாலும் இந்தப் பாவிமக இப்புடி வந்து மூக்க சிந்திகிட்டு நிக்கும்போது மனசு கேக்குதா, சொல்லு? வெறுங்கையா அனுப்பாம ஏதோ கையில கெடச்சதை குடுத்து அனுப்புமா…அப்புறம் அவன் பொழச்சு வந்தா திருப்பிக் குடுக்கமாட்டானா என்னா?”

“அம்மா, உனக்கும் அந்தாளைப் பத்தி நல்லாவே தெரியும், சும்மா நடிக்காதம்மா. குடியும் கூத்தியுமா இருந்தா இல்லாத நோவெல்லாம் வரத்தான் செய்யும். கட்டின பொண்டாட்டி புள்ளங்களை காப்பாத்தத் துப்பில்லாத மனுஷனுக்கெல்லாம் நீ வக்காலத்து வாங்காத. அவன் செத்தாலும் சரி, சல்லிக்காசு கொடுக்கமாட்டேன், இங்க என்ன கொட்டியா கெடக்கு? அவன மாதிரி ஆளெல்லாம் இருந்து உயிர வாங்குறத விடவும் செத்துத்தொலையலாம்.”

ராஜாத்தி இப்படி முகத்திலடித்தாற்போல் சொல்வாள் என்று பாக்கியமும் நினைத்திருக்கவில்லை. என்னதான் இருந்தாலும் வாயும் வயிறுமாய் இருப்பவளிடம் கொஞ்சம்கூட கருணையில்லாமல் இப்படியா பேசுவது?

“ராஜாத்தி, என்ன பேசுறே, நீ? புள்ளதாச்சிய இப்படிப் பேசி நோவடிக்காத. எதா இருந்தாலும் நிதானமா பேசு.”

“என்னம்மா நீயும்? எவ்வளவுதான் ஒரு மனுஷி பொறுமையா இருக்கிறது? கண்ணு தெரியல, கண்ணு தெரியலன்னு கஷ்டப்பட்டியே… கண் ஆபரேஷனுக்குன்னு ரெண்டாயிர ரூவா தேத்தி வச்சிருந்தேன். சனியன் புடிச்ச கொல்லச் செவுரு நேரம் பார்த்து புட்டுகிச்சு. சாஞ்சது நம்மபக்கம் சாஞ்சிருக்கக்கூடாது? அந்தப் பக்கம் விழுந்து, அந்தாளு வந்து என் கோழி போச்சி, கூடு போச்சின்னு கத்திட்டுப்போறான். இப்ப அதுவேற திடீர் செலவு.. ”

“ஆமா… ஒரு மனுஷன் சாவக்கெடக்குறாருன்னு சொல்றேன். நீ கொல்லப் பக்க செவுரு வக்கிறதப் பத்திப் பேசுற? எல்லாருக்கும் அவங்கவங்க காரியம்தான் பெரிசு. அம்மா… நான் இனிமே இங்க நிக்கிறதில அர்த்தம் இல்ல. ஊரப்பாக்கப் போறேன். புள்ளங்கள எங்கவூட்டுக் கெழவிகிட்ட வுட்டுட்டுவந்திருக்கேன். அது பாட்டுக்கு டிவி முன்னாடி உக்காந்தா சேலைய அவுத்துட்டுப் போனாக்கூடத் தெரியாதமேனிக்கு வாயப் பொளந்துகிட்டு உக்காந்திருக்கும். நான் போறேன். ஆனா… எம் புருஷனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சி, நல்லதங்கா மாதிரி புள்ளங்கள கெணத்தில தள்ளிட்டு நானும் பாஞ்சிடுவேன், சொல்லிட்டேன்.”

“ம், மெரட்டுறா, பாத்தியாம்மா? புருஷனை அடக்கிவக்கத் துப்பில்ல, நம்மகிட்ட எகிறுறா…”

“போவுதுடி, அந்த ரெண்டாயிரத்தை எடுத்துக் குடுத்துடு. ஏதாவது வைத்தியம் பாத்துப் பொழச்சிகட்டும். என் ராஜாத்தியில்ல….” பாக்கியம் மூத்தவளின் தாடையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சத்தொடங்கினாள்.

“கொஞ்சம் பாவம் பாத்தா… தலையிலே மொளகா அரைக்காம விடமாட்டாங்க போலயிருக்கே புருஷனும் பொண்டாட்டியும். ஏ…சின்னகுட்டி, போனமாசம் அம்மாவோட தோட்ட அடமானம் வச்சி ஆயிரம் ரூவா பொரட்டித் தந்தேனே… அத என்னதான்டி பண்ணுனே?”

“அதான், மாரியம்மன் கோவிலுக்குப் பாடைக்காவடி எடுத்தேன்னு சொன்னேன்ல…. அதுக்கு ஏது காசு? நீ குடுத்ததுதான்”

“ஏண்டி, சாப்பாட்டுக்கே கஷ்டம்னுதான வந்து நின்னே? பாடையில போறவனுக்கு பாடைக்காவடி கேக்குதா? நீ திருந்தவே மாட்டியா?”

“அவருக்கு நேரமே சரியில்லயாம், யாரோ செய்வின செஞ்சுட்டாங்கன்னு எங்க சின்னமாமியாரு சொன்னிச்சு. இல்லைனா…நல்லா இருந்த மனுஷனுக்கு திடீர்னு எப்படி வயித்துவலி வரும்? குலதெய்வத்துக்கு நேர்ந்துகிட்டு கெடாவெட்டுனா சரியாப்போயிடும்னு பெரிய கொழுந்தன் சொன்னிச்சு. போனமாசம் கூட எங்க பங்காளி யாரோ செய்வின செஞ்சி வச்ச தகட்டை ஒரு மந்திரவாதி வந்து எடுத்தானே… ”

“அதான் எடுத்திட்டான்ல… அப்புறம் என்னா இன்னுமா சரியாப்போவல அந்தாளுக்கு?”

“எடுத்தது ஒண்ணுதான? இன்னும் எத்தனை புதஞ்சிருக்கோ? அதுக்கே அந்த ஆளை நெருங்கவுடல… என்னென்னமோ சாங்கியமெல்லாம் பண்ணிதான் எடுக்கமுடிஞ்சது”

“பாத்தியாம்மா…. இங்க நான் சிந்துற வேர்வையெல்லாம் எப்படி எப்படி பாழாப்போவுதுன்னு?”

ராஜாத்திக்கு பதில் சொல்லமுடியாமல் பாக்கியம் தலைகவிழ்ந்தாள்.

“சின்னகுட்டி, அந்தக் குடும்பத்தில வாக்கப்பட்டு நீயும் லூஸு மாதிரி ஆயிட்டடி…இங்க பாரு, உம்புருஷனுக்கு செய்வின வக்கணும்னா வேற யாரும் தேவையில்ல, அதை அவனே வச்சிப்பான். குடிய மொதல்ல நிறுத்த சொல்லு, அப்புறம் எல்லா நேரமும் நல்ல நேரம்தான்.”

“அவரக் குடிக்கவக்கிறதே அதுதான்க்கா… சாமிக்கு ஏதாவது நேர்ந்துகிட்டு செய்யலன்னா கூட இப்புடி ஆட்டிவைக்குமாம். நம்ம ராணியக்கா ரெண்டுமாசம் முன்னாடி நடக்கமுடியாமக் கெடந்துதே…அப்போ அடிக்கடி அதுங்கனவுல ஒரு பொண்ணு வந்து கருப்புப் பொடவ எடுத்துக்குடுன்னு கேட்டுகிட்டே இருந்திச்சாம். காளிக்கு எடுத்து சாத்துனதும் காலு கொணமாகி நடக்க ஆரம்பிச்சிடுச்சே…”

“இப்ப என்னன்னு சொல்றே? நீயும் காளிக்கு கருப்புப் பொடவ எடுத்து சாத்தணுமா? அதுக்குப் பதிலா உம்புருஷனை நாலு சாத்து சாத்தி குடிக்காம வேலைவெட்டிக்குப் போய் குடும்பத்தைக் காப்பாத்தச் சொல்லு”

“என்னய பாத்தா உனக்கு எளக்காரமா இருக்கு, நான் கண்ணீரும் கம்பலையுமா தெருவுல நிக்கிறதப் பாக்கணும்னுதான் நீ ஆசப்படுறியாக்கா?”

முந்தானையில் மூக்கைச் சிந்தியவாறே தேம்பித் தேம்பி அழலானாள். சின்னக்குட்டியின் கடைசி ஆயுதம் இதுதான். அக்காவின் முன்னிலையில் அழுதால் போதும் இளகிவிடுவாள். இப்போதும் அதுதான் நடந்தது. தங்கையின் கண்ணீரைக் கண்டதும் ராஜாத்தியின் நெஞ்சம் இளகியது.

பாவம், எத்தனை அழகாய் அம்சமாய் இருந்தாள். இன்றைக்கு என்னவோ இவளுக்கு அக்கா மாதிரி மூப்பெய்திக் காட்சியளிக்கிறாள். பார்க்கவே பஞ்சப்பராரி போல் இருக்கும் அவளிடம் துளியும் இரக்கமில்லாமல் நடந்துகொள்வது எத்தனை மடத்தனம் என்று உணர்ந்தவளாய் சின்னக்குட்டியை நெருங்கி அமர்ந்து வாஞ்சையுடன் அவள் தலையைக் கோதிவிட்டாள்.

“சீ, கழுத, உன்னய அப்படி நினைப்பேனாடி? சரி, அழுவாத… வா… வந்து சாப்புடு.”

“எனக்கு வேணாம்” சின்னக்குட்டி விசும்பிக்கொண்டே சொன்னாள்.

“ஆமா… ரோஷத்துக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல… காலையில சாப்புட்டுட்டு புள்ளைங்களுக்கும் ஏதாவது எடுத்திட்டுப்போ….”

“நான் கேட்டது…?”

“காரியத்திலயே குறியா இரு…. அம்மா தரும். பத்திரமா எடுத்துட்டுப் போய் ஆகவேண்டியதப் பாரு”

“சரிக்கா”

மறுநாள் மாலை வரும்போது சின்னக்குட்டி போய்விட்டிருந்தாள்.

“அம்மா… சின்னக்குட்டியைப் பத்திரமா பஸ்ஸேத்திவிட்டியா?”

“ம்”

“போய்ட்டு போன் பண்ணினாளா?”

“ம்”

“ஏம்மா… ஒரு மாதிரியா இருக்கே?”

“ஒண்ணுமில்லம்மா…. லேசா தலவலி”

“தலவலியும் நம்ம வீட்டுல ஷிப்ட் போட்டுகிட்டு வருதுபோல”

சிரித்தாள் ராஜாத்தி. பாக்கியம் சிரிக்கவில்லை.

கிளம்பும்போது சின்னகுட்டி சொன்னதையே நினைத்து நினைத்து தலைவலி வந்துவிட்டதை ராஜாத்தியிடம் சொல்லவில்லை.

“அம்மா…. வைத்தியச் செலவுக்குன்னு நினைச்சிதான் அக்கா பணங்குடுத்திருக்கு. அதுகிட்ட சொல்லாத…. குலதெய்வத்துக்கு கெடாவெட்டுக்கு நேர்ந்திருக்கு. அதுக்குதான் காசு வாங்கிட்டுப் போனேன்னு தெரியவேணாம். அடுத்த புதன்கெழமை முடிஞ்சா நீ மட்டும் ஒரு எட்டு வந்துட்டுப் போ…”

இரவு நெடுநேரம் தூக்கம் வராமல் தவித்து பின் கண்ணயர்ந்த பாக்கியத்தின் கனவில் கெடாவுக்குப் பதில் ராஜாத்தி தலைவெட்டுப்பட்டுக் கிடந்தாள்.

– மார்ச் 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *