வியர்க்க விறுவிறுக்க பள்ளியிலிருந்து திரும்பி வீட்டினுள் நுழைந்தவன், உள் அறையிலிருந்து மிதந்து வந்த ‘ஒலி’ யின் அரவம் கேட்டுத் திகைத்து ஒரு கணம் நின்றேன். உள் மனமோ, ‘ம்,..போச்சு, போச்சுடா கார்த்திகேசா, உன் திட்டம் எல்லாம் பாழ்”, என்று அலறியது.
‘ஒலி’ யின் பரம விசிறி அப்பா. அவரது திடீர் வரவு எனக்கு எரிச்சலைத் தந்தது. மற்ற நாட்கள் என்றால் கதையே வேறு. இருவரும் நீச்சல் குளத்திற்குப் போவோமா என்றோ தொலைக்காட்சியில் காற்பந்தாட்டம் பார்க்கலாமா என்றோ அப்பா அழைக்கா விட்டாலும் நானே அவரைக் கிளப்புவேன். ஆனால், இன்று?!
“என்ன, பள்ளிக் கூடம் சீக்கிரமே முடிஞ்சிடிச்சா?
“நான் எப்பயும் இதே நேரத்துக்கு தாம்பா வருவேன். நீங்க தான் இன்னிக்கி சீக்கிரமே வந்துட்டீங்க.”
“உனக்குத் தெரியாதில்ல. ஊருலேயிருந்து எங்க மாமா வராரில்ல. தானே டேக்ஸி பிடிச்சி வரேன்னிட்டாரு. ஏர் போர்ட்டுக்கு நான் வரேன்னு எவ்வளவோ சொன்னேன், கேக்கல்ல. எனக்கு தான் வரத் தெரியுமேன்றாரு. நானும் சரின்னிட்டேன். ஆனா, அவர் வரும் போது வீட்டுல யாருமே இல்லாம இருந்தா நல்லா இருக்காதே. அம்மாவுக்கும் லீவே இல்ல. அதான் நானே லீவெடுத்துகிட்டு வந்துட்டேன்.”
அப்பாவின் மாமாவிற்கு ஊரிலிருந்து வர வேறு நாளே கிடைக்க வில்லையா, ‘சே’ என்று ஒரே சலிப்பாக இருந்தது. சாப்பாட்டு மேசையில் ஒழுங்கு முறையுடன் நிறைய பாத்திரங்களில் அலங்காரமாக உணவு இருந்து, வயிற்றில் பசியும் இருந்து சாப்பிட மட்டும் தோன்றாமல் என் அறையை நோக்கி விரைந்தேன்.
“ஏம்பா நீ சாப்புடல. சாப்புடல. வரும் போதே வாங்கிட்டு வந்துட்டேன். ‘முத்தூஸ்’ சாப்பாடுப்பா. உனக்கு ரொம்பப் பிடிக்குமே. நீ சாப்புடு. மாமா வந்ததும் அவரோட நான் சாப்பிட்டுக்கறேன்.”
“நானும் உங்களோடயே சாப்பிட்டுக்கறேன்பா,” கூறிக் கொண்டே என் அறையினுள் நுழைந்தவன் படுக்கையில் விழுந்தேன்.
‘பாலா வேற இப்ப போன் போட்டுடுவான். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி கழுத்தறுப்பான். வர முடியாதுடா, அப்பா ஏசுவாருன்னு சொன்னாலும் அவனுக்குப் புரியாது’, குழப்பத்தில் மனம் தவித்தது.
பாலாவின் மாமா பையன் பாலாவை விட இரண்டு வயது மூத்தவன். ‘ஒ’ லெவல் தேர்வில் மோசமாய் செய்ததால் மறுபடியும் உயர்நிலை நான்கிலேயே படிக்கிறானாம். எங்கள் பள்ளியிலிருந்து போன வருடமே வேறு பள்ளிக்குப் போய் விட்டான். அவனுடன் தான் நாங்களிருவரும் வெளியே செல்லவிருந்தோம். அப்பாவிடம் உண்மையைக் கூறி உத்தரவு கேட்டால் நிச்சயம் நடக்காது. வேறு காரணம் சொல்லிக் கேட்டாலோ, ஆயிரம் கேள்விகள் கிளம்பும். பதில் சொல்லிச் சமாளிக்க வேண்டும். பொய் சொல்லவும் ஒரு திறமை வேண்டுமே. நான் என்றுமே பொய் சொன்ன பிறகு, மாட்டிக் கொள்ளாமல் தப்பியதில்லை. ‘என்ன செய்யலாம்’ என்று மனம், கூட்டிக் கழித்துச் சோர்ந்தது.
‘டிரிங், டிரிங்’ ஒலியைத் தொடர்ந்து, “பாலாவா, கொஞ்சம் இரு. கார்த்தியக் கூப்புடறேன்”, என்று அப்பா கூறுவதை கேட்டதுமே நிலைமையைச் சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் தவித்தேன். ‘இல்லடா, வர முடியாதுடா, சொன்னாப் புரிஞ்சுக் கோடா’, என்று சிறு பதில்களாக சன்னமான குரலில் கூறிவிட்டு தொலைபேசியை வைத்தேன்.
“ஏம்பா, வரமுடியாது வரமுடியாதுன்னே சொன்ன. ஏதும் ப்ரோஜெக்ட்டா. அவனை வேணா இங்க வரச் சொல்லேன்.”
“இல்லப்பா, ஒரே தலைவலி, அதனால வரல்லன்னிட்டேன். உங்க மாமா வேற வராரு. கொஞ்சம் தூங்கி எழுந்திருக்கப் போறேன்பா.” மறுபடியும் படுக்கையில் தஞ்சம். பேசாமல் ப்ரொஜெக்ட் என்ற காரணம் காட்டி போயிருக்கலாமோ. தோன்றாமல் போனதே. ஆனால் பாலாவுடன் நான் ப்ரோஜெக்ட் செய்யப் போகவில்லை என்று தெரிந்தால் நான் தொலைந்தேன். பாலா வீட்டுக்கு ஒரு போன் போட்டு அப்பா பேச நேர்ந்தாலே குட்டு வெளியாகி விடுமே. அப்புறம் நடப்பதெல்லாம் நல்லதாய் இருக்காது.
பாலாவும் அவன் மாமா பையனும் உற்சாகமாய் என்னையும் கூப்பிட்டிருந்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் மட்டும் மகிழ்ச்சியாகப் போய் வருவார்கள்.
மனமெல்லாம், அவர்கள் போகவிருக்கும் கடைகள் வீதிகளிலேயே லயித்தது. ஏதேதோ சாமான் கடைகள். அவற்றின் முகப்போ முகவரியோ அறியாத எனக்கு ஆவலாய்த் தான் இருந்தது. எதுவும் வாங்க வில்லை என்றால் தான் என்ன, கண்ணால் பார்க்கவாவது பார்த்திருக்கலாம். அதுவும் வாய்க்கவில்லை.
ஏதோ ஒரு வகை கீ செயின் வந்திருக்கிறதாம். பாலாவுக்கு அதைப் பார்த்ததிலிருந்து ஒரே ஆசை. மாமா பையனின் உதவியுடன் எப்படியாவது வாங்கலாம் என்றிருக்கிறான். அது ஆர்ச்சட் ரோட்டில் ஒரே ஒரு கடையில் தான் இருக்கிறதாம். அந்தக் கடையோ அவனுக்கு மட்டும் தான் தெரியும். அதனாலேயே அவன் உதவியை நாடியிருந்தான் பாலா. அதில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்த்து விடத் துடித்த என் மனம் ஏமாற்றத்தில் தவித்தது. பாலா வாங்கி விட்டானானால் நாளை நிச்சயம் பள்ளிக்குக் கொண்டு வருவான். பார்க்கலாம்.
இருந்தாலும் நண்பர்களுடன் சந்தோஷமாக போய் வருவது ஒரு தனி சுகமாயிற்றே. அதை அனுபவிக்க முடியாமல் கெடுத்த அப்பாவின் மாமாவை மனம் சபித்தது. வேறு நாளா கிடைக்கவில்லை, அவருக்கு சிங்கப்பூர் வர?!
வட்டு வாசல் மணியோசை கேட்டு, அதைத் தொடர்ந்து கதவு திறக்கப்படும் சத்தம், “வாங்க மாமா, வாங்க, கொண்டாங்க பெட்டி பையெல்லாம் நான் எடுத்து வைக்கிறேன். நீங்க உள்ள வாங்க”, உற்சாக வெள்ளத்தில் அப்பா தன் தாய் மாமனை வரவேற்றுக் கொண்டிருந்தார்.
யாருக்குத் தான் என் நிலை புரியும்? எனக்கு என் ஏமாற்றம், என் கோபம் மட்டுமே முக்கியமாய் இருந்தது. நேரம் தான் எனக்குச் சரியில்லையோ!
“பார்த்து ரெண்டு வருஷமாகப் போகுதுல்ல. நாள் தான் எப்படி ஓடுது. பிள்ளைங்க, கமலம் எல்லோரும் நல்லா இருக்காங்களா?”
“எல்லாரும் நல்லா இருக்கோம். கார்த்தி கூட நீங்க வரீங்க தெரிஞ்சதும் ப்ரொஜெக்ட் வொர்க்கெல்லாம் இருந்தும் கூடத் தன்னோட பிரெண்டு வீட்டுக்குப் போகாம உங்களுக்காகக் காத்திக்கான். ஊருல எல்லாரும் எப்பிடி மாமா இருக்காங்க?”
எப்படியிருக்கிறது கதை, என் நிலைமை தெரியாமல் அவருடைய மாமாவிற்காக நான் வீட்டிலிருப்பது போல அப்பா தானாக கற்பனை செய்து கொண்டு ஏதேதோ பேசுவதைக் கேட்டுச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. அவருடைய மாமாவும், நான் ஏதோ அவர் மேல் ஒரே பாசம் வைத்திருப்பதாய் எண்ணி என்னை ‘போர்’ அடிக்கவா? என் ஆத்திரம் அப்பாவின் மேல் திரும்பியது. எல்லாம் என் நேரம்!
“கார்த்தி, எப்படியிருக்கப்பா. நல்லா வளர்ந்துட்டான்”, அறையினுள் நுழைகிறார் மாமா. “நல்லா இருக்கேன் தாத்தா. நீங்க எப்படி இருக்கீங்க?”, நானும் பதிலுக்கு விசாரித்தேன்.
“ஏய் ஏய் கார்த்தி, தாத்தா கீத்தான்னே பொல்லாத கோபம் வந்துடும், ஆமா. என்ன மறந்துட்டியா? சும்மா உங்கப்பன மாதிரியே மாமான்னு கூப்பிடு. எனக்கென்ன அப்பிடி வயசாயிடுச்சா?….”
“மறந்துட்டேன் மாமா. இனிமே தாத்தான்னு கூப்பிடல்ல. ம், வரீங்களா சாப்பிடலாம்.”
அப்படியாவது அவர் வாய்க்கு வேறு வேலை கொடுக்கலாம் என்று தான் நான் நினைத்தேன். வந்ததிலிருந்து அப்பாவிடம் போதாதென்று என்னிடம் வேறு, சம்பந்தமே இல்லாத கேள்வி, சம்பதமே இல்லாத பதில் என்று கொடுமைப் படுத்த ஆரம்பித்து விட்டார். நானிருந்த மனநிலையில் எதையுமே சகிக்க முடியாமல் தவித்தேன். எனக்கே கூட பசி வயிற்றைக் கிள்ளியது. ஒரு உத்தியாக சாப்பிட அழைத்தேன். அதை கரிசனம் என்று அவர்கள் எண்ணினால் அதற்கு நானா பொறுப்பு!
நினைத்தபடியே, “ரொம்ப மரியாதை தெரிஞ்ச பிள்ளையாத் தான் வளர்த்திருக்க கார்த்திய”, மாமா கூற அப்பா பெருமிதத்தோடும், புன்னகையோடும் தன் மாமாவின் நற்சான்றிதழை வாங்கிக் கொண்டார்.
“உன் பொண்ணு ஸ்கூல் விட்டு எப்ப வரும்,” வாயில் கவளம் சோற்றை வைத்துக் கொண்டே பேசிய அவரைப் பார்த்ததும் என் முயற்சியில் நான் அடைந்த தோல்வியை என்னால் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. மெள்ள என்னுள் இருந்த இறுக்கம், கோபம் மற்றும் எரிச்சல் மறைவதை உணர்கிறேன். நேரம் போவதே தெரியாமல் சாப்பிடவும் பேசவும் இவரால் எப்படி முடிகிறதோ!
சாப்பிட்டுக் கை கழுவிய நான் படிக்கச் செல்வதாய் கூறிவிட்டு புத்தகத்தை எடுத்தேன். இப்பவே இத்தனை பாடங்கள் படித்து முடிக்க. அடுத்த வருடம் ‘ஓ’ லெவலில் இன்னும் பள்ளியில் கெடுபடி கூடுமாம். செய்ய நேரம் தான் இருக்காது. நேரத்தை மட்டும் தானே மனிதனால் விலை கொடுத்துப் பெற முடியவதில்லை. இரவல் கொடுத்தும் வாங்கவும் கூட முடியாததாயிற்றே. எல்லோருக்கும் அதே இருபத்தி நான்கு மணி நேரம். இவ்விஷயத்தில் மட்டும் இயற்கையின் பாரபட்ஷமில்லாத் தன்மை துல்லியமாய்த் தெரிகிறது. காற்றுக்கு அடுத்து உலகத்திலேயே ஏற்றத் தாழ்வில்லாமல் அனைவருக்கும் பொதுவாய் உள்ளது நேரம் மட்டும் தான் போலிருக்கிறது.
மாலையில் அம்மா வந்து, மாமாவின் விசாரிப்புகள் முடிந்ததும், மறு முறை மழை பெய்ந்து ஓய்ந்த மாதிரி இருந்தது. நான் மெள்ள அம்மாவின் அறையினுள் சென்று, “அம்மா, இந்த மாமா எத்தனை நாள் இருப்பாரும்மா?”, என்று கேட்க, அம்மா என் முகத்தை நோக்கிய வண்ணமே, “தெரியல. ஏன் கேக்கற?”, என்று பதிலுக்குக் கேள்வி கேட்டார்.
“இல்லம்மா, சும்மா தான். அவரு அடிக்கற ‘போரை’ எத்தனை நாள் நாம சகிக்கணும்னு தெரிஞ்சுக்க தான்”, என் வார்த்தைகளில் பதிந்திருந்த நகையுணர்வை அம்மா சிறிது உணராமல், ஒரு முறைப்புடன்,
“சீ, சீ, அப்படியெல்லாம் பேசக் கூடாது. மரியாதையில்லை. வயசுக்காவது மதிப்பு கொடுக்கணும் கார்த்தி. நீ பாட்டுக்கு படிப்பிருக்குன்னு ரூமுக்கு போயிடேன்”, என்கிறார்.
இப்படிப் பேசாவிட்டால், தான் ஒரு அம்மாவே இல்லையென்றாகி விடும் என்று நினைக்கிறார்களோ. இல்லை, நகைச்சுவையுணர்வு அம்மாவிற்கு முற்றிலும் அற்று விட்டதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய மனமிருந்தும், வேறொரு சமயத்திற்கு என்று ஒதுக்கி விட்டு, “அம்மா உங்களுக்கு இந்த சனிக்கிழமை வேலையிருக்கா.”
“சனிக்கிழமை வேலை இருக்கா, இல்லை இனிமே எப்பயுமே வேலை இருக்கா இல்லையான்னு, நாளைக்கி தெரிஞ்சுடும் கார்த்தி,”
“என்னம்மா சொல்றீங்க?”
“ஆள் குறைப்பு தான். வேற என்ன. வேலை போயிடும்னு நினைக்கிறேன். இருக்கற நிலையில வேற வேலை கிடைக்குமோ கிடைக்காதோ. ஏதோ நேரமே சரில்லப்பா.”
“அப்ப நீங்க இனிமே வீட்டுலயே இருப்பீங்க இல்லம்மா. டைமும் இருக்கும். அம்மா நீங்க செய்வீங்களே கந்தரப்பம். எவ்ளோ நாளாச்சி. இந்த ‘வீக் எண்ட்’ செய்யுங்கம்மா”
“விட்டா நீயே என்னை வேலைய விட்டு நிறுத்திடுவ போல இருக்கே. ம், அப்பத்துக்கென்ன செஞ்சா போச்சி.”
“ஏய் கவிதா, அம்மா இனிமே வீட்டுலயே இருப்பாங்க”, என்று தூங்கி வழிந்த என் தங்கையிடம் கரைபுரண்டோடும் என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள எண்ணிக் கூறினால், தூக்கத்தில் காட்டிய ஆர்வத்தில் அவளுக்கு என் செய்தி ஒரு பொருட்டாய்த் தெரியவில்லை.
அறையை அடைந்த நான், அம்மா வீட்டிலேயே இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணித் திளைக்கிறேன். வீட்டுக்கு வரும் போது அம்மாவே கதவைத் திறந்து விட்டுவிடுவாங்க. யூனிஃபாம் கூட இனிமே நானே ‘அயர்ன்’ செய்ய வேண்டியதில்லை. அம்மாவே சமைப்பங்க. இப்பன்னா வாரத்துல ஒரு நாள் தான் அம்மா சமையல் சாப்புட முடியிது. நிறைய நேரம் இருக்கறதால பள்ளிப் பாடம் ப்ரோஜெக்ட் எல்லாத்துலயும் கூட ஹெல்ப் பண்ணுவாங்க.
தொடக்கப்பள்ளியில் இருந்த போது ஒரு சில நண்பர்கள் அம்மாவைப் போல தன் அம்மாவும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஏங்கித் தவித்ததுண்டு. இப்போது தான் அம்மா வீட்டில் இருக்கும் சூழ்நிலை தானாய் உறுவாகியுள்ளது. அதிருஷ்டக் காற்று இப்போது தான் என் பக்கம் வீச நினைத்தது போலும்.
ஆனால், ஏன் ஒரு உறுத்தல்? சிறு உறுத்தல். பாலா கூப்பிடும் போது போக முடியாமல் போய்விடும். அப்படியெல்லாம் ஊர் சுற்றப் போனால் அம்மாவுக்குப் பிடிக்காது. அப்பாவுக்குக் கோபம் கண் மண் தெரியாமல் வந்து விடும். பாலாவே கொஞ்ச நாளாய்த் தான் என்னைத் தன்னோடு கூட்டிக் கொண்டு போகிறான். சில கெட்ட பழக்கங்கள் அவனிடம் இருந்தாலும் நன்றாகப் பழகுவதால், பாலாவை எனக்குப் பிடிக்கிறது.
வீட்டிலிருந்து பணம் திருடுவானாம். அவனே என்னிடம் கூறியிருக்கிறான். சிகரெட் பிடிப்பானாம், ரகசியமாக. அவன் முதலில் சொன்ன போது பொய் சொல்வதாய் நான் நினைத்து பிறகு எல்லாமே உண்மை என்றும் அறிந்து கொண்டேன். அவனைத் தவிர்க்க ஆரம்பித்த போது அவன் விடாமல் பின்னாடியே வந்தான். தான் அதையெல்லாம்விட்டு விடு விட முடிவெடுத்து விட்டதாயும் கூறி மறுபடியும் பழக ஆரம்பித்தான். எனக்கு சில விவகாரங்கள் பிடிப்பதில்லை என்று அறிந்திருந்ததால் பாலா என்னிடம் பழகும் போது மட்டும் கவனமாய்ப் பழகியதாய்த் தோன்றும் எனக்கு. எப்படியோ அம்மா வீட்டில் இருந்தால் கிடைக்கும் சுகமே தனி தான். சிந்தனை ஓட்டங்கள் அலையலையாக மோதி என்னைத் தூங்க வைத்து விட்டன.
காலையில் அவசர அவசரமாய்ப் பள்ளிச் சீருடை அணிந்து கொண்டிருந்தவனுக்கு, எதிர் பாராமல் கோபம், ஆத்திரம், கண்டிப்பு எல்லாம் கலந்து குழைத்தாற் போன்ற குரல் உச்ச ஸ்தாயியில், “கார்த்திகேசா, டேய் கார்த்திகேசா வாடா இங்க”, என்று அப்பா கத்தியதும் ஆச்சரியம், நடுக்கம். காலை வேளைகளில் அதிர்ந்தும் பேசக் கூடாது, தன் முழு நாளும் கெட்டு விடும் என்று நம்புபவர் கத்தினால் நிச்சயம் காரணம் இருக்கும். என் முழுப் பெயரையும் கேட்டதில் எனக்கு வெல வெலத்து விட்டது.
ஓடிச் சென்று, “என்னப்பா?”, என்று கேட்டபடி அருகில் நின்றேன். “இதைப் படிச்சுப் பாரு”, என்றார், அன்றைய செய்தித் தாளைக் காட்டி. அதில் பாலா, சற்று கலக்கமான முகத்துடன், சற்று உயரமான தன் மாமா பையனுடன் நிற்கிறான். செய்தியைப் படித்தவுடன், அப்பாவின் கோபத்திற்கான காரணம் புரிந்தது. முன் தினம் நான் எக்காரணமாக பாலாவைச் சந்திக்க இருந்தேன் என்பது அவருக்குப் புரிந்து விட்டது என்று எனக்குப் புரிந்தது.
பயத்துடன் அப்பாவின் முகத்தை ஏறிட்டு நோக்கி விட்டு செய்தியின் விரிவாக்கத்தில் ஆழ்ந்தேன். கோபத்தின் காரணம் உள்ளங்கை நெல்லிக் கனியாய் என் முன். பக்கத்து அறையில் அப்பாவின் மாமா இருந்ததால் எனக்கு அடி விழவில்லை. முதல் முறையாக அக்கிழவருக்கு என் மனம் நன்றி தெரிவித்தது.
செய்தியைப் படித்த என் வயிற்றில் பெரிய ரசாயன பிரளையமே நிகழ்ந்தது. அத்தகைய உணர்வை நான் வாழ்நாளில் அனுபவித்ததில்லை. விரோதிக்கும் வரக் கூடாத உணர்வு.
இருவரையும் கைது செய்திருக்கின்றனராம் காவலர்கள். பாலாவும் மற்றவனும் விலையுயர்ந்த பொருளை ‘பிராண்டட் சாதனம்’ திருட முயன்றிருக்கின்றனர். மற்றவனுக்குப் பல முறை எச்சரிக்கை கொடுத்து விட்டதாயும் வேறு வழியில்லாமல் இம்முறை கைது செய்ததாயும் தகவல் தந்திருந்தனர். பாலாவுக்கு எச்சரிக்கை கொடுத்து விட்டு விடும் எண்ணமாம். ஆனால், உடன் இருந்தவனின் வழக்கில் உதவ நீதிமன்றம் போக வேண்டி வருமாம்.
திருட முயன்றது பாலா அல்ல. அவனுடைய மாமா பையன் தான். உடன் இருந்த காரணத்தாலேயே இவனும் பிடி பட்டிருக்கிறான். செய்தித் தாளில் படமும் வந்திருக்கிறது. பாவம் பாலா, அதை விட அவன் பெற்றோர்! எத்தனை மன உளைச்சல். எத்தனை அவமானம் ! ஐயோ! நானும் நினைத்த படி அவர்களுடன் சென்றிருந்தால், நினைக்கவே குலை நடுக்கமாய் இருக்கிறது. நான் போகாமல் தடுத்ததே மாமாவின் வருகை. அவர் வந்திரா விட்டால் அப்பா வந்திருக்க மாட்டார். நானும் அவர்களுடன் போயிருப்பேன். கெட்ட நேரமாய்த் தோன்றிய நேற்றைய ‘நேரம்’ எனக்கு நல்ல நேரமாய்த் தான் இருந்திருக்கிறது. பாலாவுக்கு மகிழ்ச்சியாய் அமைந்து கேடு விளைவித்திருக்கிறது.
எப்படித் தான் பசியாறி எப்படித் தான் கிளம்பினேனோ, இன்று என் நினைவில் இல்லை. அப்பாவின் எண்ண ஓட்டம் அவர் முகத்தில் ஏற்படுத்திய கவலை ரேகைகள், என் மனதின் நடுக்கமும் மட்டுமே தெள்ளத் தெளிவாய் இன்றும் நினைவில் இருக்கிறது. என் அவையங்கள் தன்னிச்சையாகவே செயல் பட்டிருக்கின்றன.
“கமல், ம், வேலைய நீயாவே விட்டுடும்மா”, அப்பா அம்மாவிடம் சொல்வது கிணற்றினுள்ளிருந்து பேசுவது போல எனக்குக் கேட்டது. அம்மா விவரம் புரியாமல் விழித்தார். கூடத்தில் சுவற்றில் அப்பாவிற்குப் பிடித்தமான வாசகங்கள் என் கண்ணில் பட்டன. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க விருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்! நான் கூடத்தைக் கடந்து வாசலை நோக்கி நடந்தவன், மாமா எதிர் பட, “ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ் மாமா,” என்று என்னையறியாமலேயே சட்டென்று கூறியதும், “எதுக்குப்பா, மாமி செஞ்சு கொடுத்தனுப்பிய அதிரசத்துக்கா,…”
“ம்……அதிரசத்துக்கும் தான். மாமி செஞ்சது ரொம்ப நல்லா இருந்திச்சு. எனக்கு நேரமாச்சு நான் வரேன்”
“ம், இந்தக் காலத்துப் பசங்களப் புரிஞ்சிக்கவே முடியறதில்லப்பா. மனசிருந்தா இப்படி, ம், இல்லாட்டினா பேசறதேயில்ல, அதிரசத்துக்கு கூடவா தேங்க்ஸ், நேரம்டா,..” வெகுளித் தனமான அவர் பேச்சு வழக்கத்திற்கு மாறாக அன்று எனக்குச் சுவைத்தது.
– சிங்கைச் சுடர் ஜூன் 03, திண்ணை.காம் 23-10-03